Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சாய்’ Category

>நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் பிரயாணம் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது.

எனது ஊர் வியாபாரிமூலை என்ற ஒரு சிறு கிராமமாகும். இது இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாண தீபகற்பத்தின் வட கிழக்கு மூலையில், பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருக்கிறது.

இலங்கையின் பல பகுதிகளிலும், சிலர் மலேசியா போன்று கடல் கடந்தும் வியாபாரம் செய்வதை தொழிலாக, முற்காலத்தில் கொண்டதால் இப் பெயர் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.

பல அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.

அதிலொன்று இன்று காரமாக விமர்சிக்கப்படுகின்ற சுவாமிகள் தொடர்புடையது. ஆனால் இது நித்தியானந்தர் பற்றியது அல்ல.

சத்ய சாயிபாபாவை முன்நிறுத்தி நடாத்தப்படுகின்ற சாயிகுடில் பற்றியது.

ஊர் மத்தியில் நாச்சிமார் கோவில் சுற்றாடலில் அழகான சிறு ஆலயமாக அமைந்துள்ளது. சூழ்ந்து நிற்கும் பெரு மரங்களின் ரம்யமான தோற்றமும், குளிர்ச்சியான சீதோசன நிலையும் பக்தர்களுக்கு வரப்பிரதாசமாக அமைந்துள்ளது.

இந்த நிலையத்தின் வாயிற் கதவு மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு புராதன வாயிற் கதவாகும்.

கைவிடப்பட்டுக் கிடந்த அந்தக் கதவைக் கொண்டு வந்து இந் நிலையத்தில் இணைத்த கலை உள்ளம் நயக்கத்தக்கது.

ஆன்மீகப் பணி

வாராந்திரம் வியாழக் கிழமை தோறும் பஜனையும் பூசையும் நடைபெறுகிறது. அதில் பலர் கலந்து கொள்கிறார்கள் என அறிகிறேன். ஆனால் அதற்கு மேலாக பகல் முழுவதும் திறந்திருக்கும் அங்கு பலர் தமக்கு வசதியான நேரங்களில் மௌன வழிபாடு செய்து வருவதை அறியும் போது, அந்த நிலையம் பலருக்கு மனச் சாந்தியை அளிப்பதை உணர முடிந்தது.

பசியாற்றும் பணி

ஞாயிறு தோறும் மதியம் குறுகிய நேர ஆன்மீக சாதனையுடன் வயிறு நிறைய மதிய போசனம் அளிக்கப்படுகிறது.

நாராயண சேவை என்ற பெயரில் நடை பெறும் இதில், வறுமை காரணமாக நல்ல ஆகாரம் பெற்றுக் கொள்ள முடியாத பலர் வயிறு நிறைவது மட்டுமின்றி,  நல்ல ஆகாரம் உண்ட மகிழ்ச்சியுடன் மனமகிழ்ச்சியுடன் செல்வதைக் காணக் கூடியதாக இருந்தது.

சுமார் 60-70 அவ்வாறு வாராவாரம் பயன் பெறுகிறார்கள். 3-4 மைல் தூரத்திலிருந்து கூட ஒரு சில மாணவர்கள் வந்து வயிறாறுவதைக் காணும் போது இந்தப் பணியின் மகத்துவம் புரிந்தது.

வயது முதிர்ச்சி காரணமாகத் தாமே சமைக்க முடியாத சில வயோதிபர்களுக்கு சமைத்த உணவை வீட்டிற்கே அனுப்பி வைத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்கள்.

இதற்கு வாராந்திரம் ரூபா 3000 முதல் 4000 வரை செலவாகிறது. உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் வாழும் பலரும் மறைந்த தமது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் ஞாபகமாக கொடுத்து உதவுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் புதியவர்களும் இணைந்து பங்களிப்பது வரவேற்கத்தக்கது.

1992 தை மாதம் முதலாம் திகதி வியாபாரிமூலையில் சத்யசாயி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இதற்கென 18.11.2007 புதிதாகக் கட்டடம் அமைத்துத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆலயத்திற்கான காணியை டொக்டர் கனகசபாபதியின் புத்திரர்களான இரத்தினவடிவேல், சண்முகநாதன், சற்குருநான் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கியதாக அறிவிப்பு வாசலில் தெளிவாகத் தெரிகிறது.

நிர்வாக அலுவல்கள் அனைத்தையும் கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளையின் மகனான ஆசிரியர் சிவநேசன் கவனித்துக் கொள்ள, பூசை, பஜனை போன்ற பணிகளை தணிகாசலம் பாலசுப்பிரமணியம் முன்னின்று செய்கிறார்.

சமையல் போன்ற பணிகளில் பல தொண்டர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள.

உணவு உண்ண வந்த ஒரு பெரியார் நிலையச் சுற்றாடலில் வீழ்ந்து கிடக்கும் இலை குழைகளை குத்தூசியால் குத்தி எடுத்து அகற்றுவதை கண்ட போது மெபைல் போனில் கிளிக் செய்து கொண்டேன்.

படத்தில் காணுங்கள்

எவரது கோரிக்கையும் இன்றி தாமாகவே முன்வந்து இவ்வாறு சமையல், கூட்டித் துப்பரவு செய்தல் போன்ற சமூகப் பணியாற்றும் மனோநிலையை ஆன்மீக நிலையங்கள் ஏற்படுத்த முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

ஏனைய சமூகப் பணிகள்

  • பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் வகுப்பிற்கு வரும்போது,  உதவும் முகமாக அவர்கள் பெயரில் சிறுதொகையை வைப்பு நிதியாக கொடுத்தல். நண்பர் து.குலசிங்கம் மறைந்த தனது மனைவியின் நினைவாக ரூபா 10000 சென்ற ஆண்டு அளித்தார். இது 5 மாணவர்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருடாந்தம் செய்வதாக உத்தேசித்துள்ளார்.
  • சில வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 100 படிப்புச் செலவாக அளிக்கப்படுகிறது. இதற்கான நிதியை கி.சிவநேசன் அவர்களே அளித்து வருகின்றனர்.
  • மனித மேம்பாட்டுக் கல்வி. மனித விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக வாராந்தம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பாலவிகாஸ் என்ற பெயரில் இது நடைபெறுகிறது.
  • நன்னீர் வழங்கல். 

இந்த நிலையத்தின் குழாயக் கிணறு சவரத்தன்மையற்ற நல்ல நீராகும். நீர்த்தாங்கி கட்டி அதிலிருந்து எந்நேரமும் வேண்டியவர்கள் நீர் எடுத்துச் செல்ல வசதி அளிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிமூலையில் உள்ள பெரும்பாலானது கிணற்று நீர் சவர்த்தன்மை உடையது என்பதால் பலரும் இங்கு வந்து நீர் எடுத்துப் பயன் பெறுகின்றனர்.இன்னும் பலர் இச் சமூகப் பணிகளில் கை கொடுக்க முன் வந்தால் மேலும் பலர் பயன் பெறுவது நிச்சயம்.

தொடர்புகளுக்கு

கி.சிவநேசன்
சாயிகுடில்
நாச்சிமார் கோவிலடி
வியாபாரமூலை
பருத்தித்துறை
சிறிலங்கா

செல்பேசி :- 0778849508.

Read Full Post »