>
பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பெரு நிலப்பரப்பு. அதன் இக்கரையில் ஒரு பெரும்பாதை. அதிலிருந்து கிளைத்தெழுந்த இன்னுமொரு பாதை பசுமையை ஊடறுத்து நேரே செல்கிறது.
பச்சைக் கம்பளத்திற்கு செம்மஞ்சள் போர்டர் இட்டாற் போல பாதைகள் எல்லாமே கிராமப் புறத்திற்கேயுரிய செம் மண் ரோடுகள்.
பாதைகள் சந்திக்கும் முச்சந்தியின் நட்ட நடுவே ஒரு சிறு மரம். மெல்லுடல் கன்னியொருத்தி தன் இளம் பச்சை நிற முந்தானையை காற்றில் சிறகடிக்க விட்டதுபோல் உற்சாகமாக கிளை விரித்து அசைந்தாடுகிறது.
நகரச் சந்தடிகளைக் கனவிலும் காண்டறியாத, சன நடமாட்டம் ஒறுத்துப்போன தொலைதூரக் கிராமம். மெல்லென வீசும் காற்று இசைக்கும் கீதம். அது தவிர்ந்த வேறு எந்த செயற்கைச் சப்தங்களும் காதைக் குடையாத, மனதைக் குழப்பாத பேரமைதி.
திடீரென அந்த அமைதியைக் குலைப்பது போன்றதொரு சிறு இரைச்சல், கேட்டும் கேட்காததுபோல!
காது கொடுத்துக் கேட்கிறோம்.
வாகன இரைச்சலா?
வாகன இரைச்சல் தான் எனத் தெளிவாகும் தருணத்தில் தெருவின் இடப்பக்கமாக ஒரு வாகனம் வருவது தொலைதூரக் காட்சியாக தெரிகிறது. வானா, பஸ்சா, லொரியா? தெளிவாகத் தெரியாதளவிற்கு எடுக்கப்பட்ட தூரக்காட்சி.
வாகனம் முச்சந்தியில் நின்று புறப்படுகிறது.
வாகனத்திலிருந்து இறங்கிய இருவர் பசுமையை ஊடறுத்து நீண்டு செல்லும் பாதையில் நடந்து செல்ல ஆரம்பிக்கின்றனர் ஒருவர் காவிநிற அங்கிக்காரர். மற்றவர் சாதாரண உடை அணிந்தவர். ஒருவர் பின் மற்றவராக நடக்கின்றனர் பேச்சில்லை கதை காரியம் இல்லை. ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் போல அமைதியாக நடக்கின்றனர்.
ஒளியுருபதி கருவி (Video Camera) அண்மைக் காட்சியாக குறுக பசுமையைக் கொடுக்கும் கரும்புத் தோட்டத்தை பாதை ஊடறுத்துச் செல்வது புரிகிறது. தொடர்ந்து நடக்கிறார்கள் சீரான இடைவெளிவிட்டு ஒருவர்பின் மற்றவராக. மனிதனதும் அவனது நிழலினதும் யாத்திரையா?
மனதை அங்குமிங்கும் அலையவிடாது தன்னுள் மூழ்கடிக்கும் இனிய கவிதையாக அந்தக் காட்சியும் அங்கு இசைக்கும் மௌனத்தின் பேரொலியும் எம்மை புதியதோர் உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.
பிரஸன்ன ஜெயக்கொடியின் புதிய திரைப்படமான ‘சங்காரா’ வின் ஆரம்பமே எம்மை இவ்வாறு அசர வைக்கிறது.

சவோய் சினிமாவில் 2006 நவம்பர் 3ம் திகதி முதல் 7ம் திகதிவரை நடந்த திரைப்பட விழாவின் கடைசி நாளன்று தற்செயலாகக் காணக்கிடைத்தது. எனக்குக் கிடைத்தது அரிய, அற்புத அனுபவந்தான் அது.
‘சங்காரா’ திரைப்படத்தின் பிரதான பாத்திரம் ஒரு இளம் பௌத்த துறவி பிக்கு ஆவார். ஆனந்த தேர வங்கீசா என்பது அவர் பெயர். களனி பல்கலைக்கழக பட்டதாரி. பௌத்த ஜாதகக் கதைகளை சுவரோவியங்களாகக் கொண்ட ஒரு புராதன விகாரைக்கு ஆனந்த தேரர் வருவதுடன் கதை ஆரம்பமாகிறது.
சற்று மேடான பாறைக் குன்றில் அப் பழைய பௌத்த ஆலயம் அமைந்துள்ளது வாயிலில் கோயில் மணி. அருகிலேயே பிக்குகளின் விடுதி. பாதையிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக 20 – 30 படிகளைக் கொண்ட குறுகலான படிக்கட்டு. எதிர்ப்புறத்தில் கண்பார்வைக்குள் விழக்கூடிய தூரத்தில் கிராமத்தவர் ஒருவரின் வீடு. அழகிய மரம். அருகிலேயே சலசலத்தோடும் சிற்றாறு. மனதிற்கு இதமான ரம்மியமான சூழல்.
வயதான மூத்த பிக்கு ஒருவரே அக் கோயிலுக்கு எல்லாமாக இருக்கிறார். வாயிலில் ஒரு அகண்ட பெரிய நீர்ப்பாத்திரம். துறவி மற்றும் கோயில் தேவைகளுக்காக அப் பாத்திரத்துக்கு நீர் கொண்டு நிரப்புவது அயலில் உள்ள பெண்கள்தான்.
கிராமத்தவர் வேறு, கோயில் வேறல்ல இது அவர்களது கோயில்.
அவர்களது சுகதுக்கங்களில் கோயிலுக்குப் பங்குண்டு.
அதே போல கோயிலின் தேவைகளை பூர்த்திசெய்வதும் அவர்கள்தான.
அதுதான் பணத்திற்கும் நேரத்திற்கும் பின் ஓட்டப்பந்தயம் பிடிக்காத கிராமியத்தின் உயர் பண்பு ஆகும். கால ஓட்டத்தினால் அச் சுவரோவியங்கள் பல உடைந்தும், சிதைந்தும், நிறம் மங்கியும் உருக்குலைந்து வருகின்றன.
அவற்றைச் செப்பனிட்டு, திருத்தி, நிறம் ஊட்டி புனருத்தாரணம் செய்வதே இவ் இளம் பிக்குவின் பணியாகும். அமைதியாக, நிதானமாக ஒரு பிக்குவிற்கு ஏற்ப, தன் சிந்தனை முழுவதையும் ஒருமைப்படுத்தி தனிமையில் பணியைத் தொடங்குகின்றார். சாந்தும், சாந்தகப்பையும், வர்ணக் குழைவுகளும் தூரிகைகளும் தனியொருவனாகப் பணியாற்றும் அவர் கைகளில் கலை நுணுக்கத்துடன் இயங்கி அவ் ஓவியங்களுக்கு புத்துயிர் கொடுக்க ஆரம்பிக்கின்றன.
சுவரொவியத்திலுள்ள பெண்ணொருத்தியின் ஒரு பக்க மார்புப் பகுதி உடைந்து சிதிலமடைந்திருக்கிறது ஆனந்த தேரர் சேதமடைந்துள்ள அப்பெண்ணின் மார்புப் பகுதியில் கைவைத்து திருத்த வேலை செய்துகொண்டிருக்கும் போது சிரிப்புச் சத்தம் பின்புறத்திலிருந்து கலகலக்கின்றது திரும்பிப் பார்க்கிறார் இரு யுவதிகள் பெண் (சிலை) ணின் மார்பில் தேரர் கைவைத்திருப்பது அவர்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது இவர் பார்வை திரும்பவும், யன்னலை விட்டு அகல்கிறார்கள் அவர்களில் ஒருத்தி எதிர்ப்புற வீட்டுக்காரரின் மகள் உபமாலி.
தற்செலாக கீழே விழுந்த அவளது ஹெயர் பின்னை கண்டெடுக்கிறார். அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு எடுக்கும் முயற்சியின் போது அவரது ஆழ்மனத்தில் புதைந்துள்ள அதன் கெட்ட எண்ணெம் கொண்ட கரிய மறுபக்கம் தெரிய வருகிறது.
அமைதியான நிர்மலமான நீரில் கல்விழுந்தது போல சலனம் அலைஅலையாக எழுகிறது. பல சம்பவங்கள் தொடர்கின்றன. மற்றவர்கள் பார்வையிலும் சமூகத்தின் நோக்கிலும் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பது ஒருவர் பற்றிய பூரணமான தரிசனம் என்று கொள்ள முடியாது.
வாழ்க்கை பூராவும் ஒருவனின் மன ஆழத்தில் ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை தனக்குத்தானே தோண்டியெடுத்துப் பார்ப்பது தான் உள்ளொளி பெருக்குவதாகும். இது மற்றெல்லோரையும் விட துறவிகளுக்குக் கூடுதலாகப் பொருந்தும். இதனை இத்திரைப்படம் உணர்த்துகிறது.
‘மனித மனத்தில் கொழுந்து விட்டெரியும் ஆசையும், உறவுகளால் ஏற்படும் பிணைப்பும், அவனை எல்லையில்லாத துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இப்படத்தின் உட்கருத்து’ என பிரசன்ன ஜெயக்கொடி ஓரு செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
‘மேலும் மனிதனானவன் தனது உடல், உள்ளம், இதயம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டு இயங்குவதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகளையும், பலாபலன்களையும் இத் திரைப்படத்தில் ஆழமாக ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன்’ என்கிறார்.
அவரது கருத்துப்படி கணந்தோரும் மாற்றமுறும் மனிதமனம் பற்றிய சித்தரிப்பே இப்படமாகும்.
இருந்த போதும் இப்படம் தத்துவவிசாரம் செய்து பார்வையாளனைப் பயமுறுத்தவும் இல்லை. ஓட்டமின்றித் தேங்கி நகராது போரடிக்கவும் இல்லை. மாறாக புதுமைப் பித்தனை, ஜெயகாந்தனை, சு.ராவை, ராமகிருஸ்ணனை, ஜெயமோகனைப் படிக்கும் போது கிட்டும் உயர் இலக்கிய அனுபவம் போன்ற நிறையுணர்வை இத் திரைப்படத்தில் பெறுகிறோம்.
ஒரு காட்சி. ஆனந்த தேரர் தன் பணியிடையே யன்னலூடாகப் வெளியே பார்க்கிறார். தூரத்தே தனது வீட்டில் உபமாலி நாயோடு விளையாடிக்கொண்டிருப்பது தெரிகிறது. தற்செயலாக அவள் தடக்கி விழப் பார்க்கிறாள.
தேரர் தன்னையறியாது திடுக்கிட்டெழுந்ததில் அருகில் இருந்த வண்ணக்கலவைகள் கொண்ட தட்டுக்கள் தட்டுப்பட்டு விழுந்து உடைகின்றன.
சத்தங் கேட்டு உள்ளே வந்த பக்தர்கள் என்ன நடந்ததென வினவ, கண்ணுக்குள் வண்ணத் துளி தவறி விழுந்து விட்டதெனக் கூறுகிறார். அவர்களில் ஒருவர் தேரரின் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ‘பயப்படவேண்டியதில்லை முலைப்பால் விட்டால் சரியாகிவிடும்’ என்கிறார்.
அங்கிருந்த தாயொருத்தி தேரருக்கு உதவுவதற்காக முலைப்பால் எடுக்க மறைவிடம் நோக்கிச் செல்கிறாள். மனிதனுள் மறைந்திருக்கும் துர்மனமானது, ஆபத்திற்கு உதவ வந்த அவளைப் பின் தொடர்ந்து அவள் செய்வதைக் கள்ளமாகப் பார்க்க முயல்கிறது.

மனித மனம்தான் எத்தனை வித்தியாசமானது. சாதாரண மனிதனாயினும், துறவியாயினும், தனது கேடு கெட்ட எண்ணங்களை மூடி மறைத்து ஆசாரசீல வேடத்தில் தன்னை வெளிப்படுத்தி காப்பாற்ற முயல்கிறது. முலைப்பால் விட்டதும் சற்றுச் சுகமானதுபோல் வெளிக்காட்டிய தேரர் தன்னை ஆசுவாசப் படுத்துகிறார்.
தாயிடமிருந்த கள்ளங்கபடமற்ற குழந்தை கலகலத்துச் சிரிக்கிறது!
இவை யாவும் வசனங்களை கொண்டிராத காட்சிப் பிம்பங்கள். வார்த்தைகளுக்கு அகப்படாத உணர்வுகளை கிளறிச் சிந்திக்க வைக்கும் நெறியாளரின் கலையுணர்வின் வெளிப்பாடுகள்.
தமிழ், ஹிந்திப் படங்களில் எமக்குப் பரிச்சயமான பாட்டு, டான்ஸ், சண்டை எதுவுமில்லை அதீத உணர்வுகளைக் கொட்டிக் கண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளோ, கோமாளித்தனமான நகைச்சுவைக் காட்சிகளோ கிடையாது,
உரையாடல்கள் கூட மிகச் செற்பமே 1 ½ மணிநேரம் வரை ஓடும் இத்திரைப்படத்தின் மொத்த உரையாடல்களும் 15 நிமிடத்தைத் தாண்டுமோ என்பது சந்தேகமே. உரையாடல்களில் தங்கியிராமல் ஒழுங்காகவும் திறமையாகவும் ஆழ்ந்த கலையுணர்வுடன் அமைக்கப்பட்ட காட்சிப் படிமங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி ஒலிகளாலும் திரைப்படத்தை நகர்த்துகிறார் நெறியாளர்.
காற்றின் அசைவும், மழைநீரின் தெறிப்பும், ஆற்றுநீரின் சலசலப்பும், உதிர்ந்த இலைகள் நிலத்தில் அராத்தும் சரசரப்பும், கதவு மூடும் சத்தமும், காலடி ஓசையும் கூடப் பேசுகின்றன.
ஒரு காட்சி நடக்கும் போது அங்கு இயல்பாக எழும் சத்தங்கள் கூட பின்னணியில் கவிதையாக வந்து விழுகின்றன.
இசையாகப் பிரமிக்கவைக்கின்றன.
இசையின் மொழியால் திரைப்படத்தை எம்மோடு பேச வைத்த இசையமைப்பாளர் நட்டிகா குருகே பாராட்டுக்குரியவராகிறார். ஆயினும் சில இயல்பான சத்தங்கள் (உதா – காலடி ஓசை) இயற்கையாக எழும் சப்தத்ங்களைவிட கூடிய தொனியில் ஒலிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
இத்திரைப்படத்தின் வெற்றிக்கு கலை இயக்குனர் சுனில் விஜயரட்ணவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
பழைய பௌத்த கோயில், கம்பீரமான புத்தர் சிலை, அவரைக் குனிந்து தொழும் நிர்வாணப் பொண்ணின் சிலை, சுவரோவியங்கள், பிக்குகள் விடுதி, விகாரையின் கூரை ஓரத்தில் அமைந்திருக்கும் பழைய ஆனால் வேலைப்பாடு நிறைந்த பீடிங் என பழமையும், புனிதமும் நிரம்பிய சூழலுக்குள் எம்மை அழைத்துப் பரவசப்படுத்துகிறார்.
தனது ஒளியுருபதி கருவியை முனைப்படுத்தாமல் இயக்குனரின் உள்ளம் அறிந்து அழுத்தமாகப் படமாக்கியுள்ளார் பாலித பெரேரா. கரும்புத் தோட்டம், சிற்றாறு, பாதைகள் போன்ற வெளிப்புறக் காட்சிகளிலும் சரி, விகாரையின் உட்புறக்காட்சிகளிலும் சரி அவரது திறமை பளிச்சிடுகிறது.
முழுப்படமும் தனமன்விலாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் 35 நாட்களில் படமாக்கப்பட்டதாம.; படப்பிடிப்பிற்குப் பின்னான தொழில்நுட்ப வேலைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுளது.

டைரக்டர் பிரசன்ன ஜெயக்கொடியின் முதல் திரைப்படம் இதுவென்ற போதும் சின்னத்திரையில் ஏற்கனவே அபாரதிறமை காட்டியுள்ளார். ( Sanda Amawakai, Nisala Wila, Iam Diyaman Kada, Hand Wila) ஆகியவை அவரது விருது பெற்ற டெலி டிராமாக்கள் ஆகும். இவற்றை நான் பார்க்கவில்லை. கேள்வி ஞானம்தான்.
புதுமுக இளம் நடிகர் துமின்து டொடென்தனா (Thumindhu Dodantenne) ஆனந்த தேரர் ஆக வருகிறார். ஏனைய முக்கிய பாத்திரங்களில் வரும் சச்சினி அயேன்ரா (Sachini Ayendra Stanley), நிலுபா ஹின்கென்த ஆராச்சி ஆகியோரும் திரைக்குப் புதியவர்களே. ஆயினும் இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.
முதிய துறவியாக K.A. Milton Perera பண்பட்ட நடிப்பைத் தருகிறார்.
கெய்ரோ உலகத் திரைப்பட விழாவில் பங்கு பற்றி இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள சங்காரா பலத்த பாராட்டைப் பெற்றதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. சிறந்த நெறியாள்கைக்கான பரிசையும் தட்டிக் கொண்டதாக ஞாபகம்.
கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு முன் (1978) வெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் Ahasin Polowata என்ற திரைப்படம் இதே திரைப்பட விழாவில் பங்குபற்றி அவ்வாண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது ஞாபகம் இருக்கலாம்.
அதற்குப்பின் இப் படத்திற்கே அதன் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைக்குரிய நெறியாளர் பிரசன்ன ஜெயக்கொடிக்கு வயது 37 மட்டுமே.
ஒரு புத்த பிக்குவின் மனத்தின் மறுபக்கத்தை திரைப்படமாக எடுத்த பிரசன்ன ஜயக்கொடியின் துணிவு பாராட்டுக்குரியது. ஆயினும் பிக்குவின் மறுபக்கத்தை காட்டுவதற்குஅதே நடிகரைப் பயன்படுத்தாது வேறு ஒருவரை பயன்படுத்தியமை கவனிக்க வேண்டிய விடயமாகும். இறுக்கமான பெளத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையுள்ள சமூகத்தில் வெளிப்படையாக பெளத்த துறவியை விமர்சனம் செய்வது சிக்கலாக இருக்கக் கூடும் என எண்ணத் தூண்டுகிறது.
எனது சிங்கள மொழி அறிவு மிகவும் குறுகியது. ஆங்கில உபதலைப்புக்கள் போடப்படவில்லை. எனவே புரிதலிலும், கருத்துக்களிலும் மயக்கங்கள் இருக்கலாம் என்பது உண்மையே ஆயினும் மொழியானது பட ஓட்டத்தை புரிவதிலும் ரசனையுடன் நுகர்வதற்கும் தடையாக இருக்கவில்லை என்பதை உறுதியுடன் கூறுவேன்.
படத்தின் இறுதிக் காட்சி. அமைதியா ஓடும் நீர். அதற்குள் ஒரு மரக்குற்றி. அதன் மேல் ஒரு நீர்த்துளி விழுகிறது. மரக்குத்தி அசையாமல் இருக்கிறது. நீரில் அலையெழுந்து பரந்து பரவி நிதானமாக ஓய்கிறது. மீண்டும் நீர்த்துளி விழுகிறது. மரம் அசையாமல் இருக்க நீரில் மீண்டும் அலையெழுந்து ஓய்கிறது. மீண்டும்……… மீண்டும்….
திரையரங்கில் ஒளிபரவ இருக்கையை விட்டு எழுகிறோம். வீடு திரும்பியும் சிந்தனை ஓயவில்லை. திரையில் பார்த்த காட்சிகளுக்கு அப்ப புதிய புதிய காட்சிகளும் வௌ;வேறு சாத்தியங்களும் எம்முள் உயிர்த்தெழுந்தன. நுகர்வோரின் சிந்தனையை முடக்காமல் சுய சிந்தனைக்கு இடம் அளிப்பதுதான் எந்தவொரு உயர் கலைப்படைப்பின் பண்பாகும் சங்காராவும் அத்தகைய ஒரு கலைப் படைப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- வீரகேசரி (ஞாயிறு), காலம் (கனடா சஞ்சிகை)
Read Full Post »