Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மாயக் குதிரை’ Category

தமிழ்நதியின் ‘மாயக் குதிரை’

அண்மைய திருவிழாவின் போது ஆலயத்தில் அலை மோதிய தன் பக்தர்களுக்கு, நல்லூர் கந்தன் தங்குதடையின்றி அருள்பாலித்தார். கோயிலுக்குள் கால் வைக்காது வீதியோடு நின்றுவிட்ட எனக்கும் அந்த அருள்பாலிப்பின் மிச்சமீதி எச்சங்கள் சிந்தவே செய்தன. பல நூல்களை வாசித்துய்யும் படி கடைக்கண் அனுக்கிரகம் செய்தார்.

மாயக்குதிரையில் பயணம் செய்யும் சுவார்ஸமான அனுபவம் அதன் பயனாகக் கிட்டியது. பயணம் செய்தது என்று பட்டும் படாமலும் சொல்லிவிட முடியாது. மாயக்குதிரையின் காற்றளையும் சிறகுகளால் வாரி அள்ளப்பட்டு, கணகணப்பான அதன் அணைப்பில் இருநாட்காளகப் பயணித்தமை முன்னெப்போதும் சித்திக்காத சுகானுபவமாகும்.

பத்தே பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புத்தான் தமிழ்நதியின் மாயக்குதிரை. சுமார் 170 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு. தமிழ்நாடு டிஸ்கவரி புக்பலஸ் வெளியீடு.

ஓவ்வொரு சிறுகதையும் வாழ்வின் சுழல் நீரில் சிக்கித் தவிக்கும் நிஜ மாந்தரின் உள்ளங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை ஆழ்ந்து அனுபவித்துபோல சித்தரித்து எம் அனுபவங்களாகவும் நீட்சி கொள்ள வைக்கின்றன. அடர்த்தி நிறைந்ததும் சந்றே அம்மலுமான கருமுகில்கள் மாறுபட்ட சித்திரங்களாக உருக்கொள்வது போல துயர் செறிந்த பிரச்சனைகளில் மூச்சடங்கத் திணறும் மாந்தர்களின் வாழ்வின் கோலங்களை அள்ளித் தெளிக்கின்றன. ஒவ்வொரு கதையும் எங்களை வித்தியாசமான அனுபவங்களுக்குள் மூழ்க வைக்கின்றன.

தமிழ்நதி திருகோணமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று நினைக்கிறேன். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். பொதுவாக புலம்பெயர் எழுத்தாளர்கள் என்றாலே நினைவிடை தோய்தலில் திளைப்பவர்கள் என்ற எண்ணமே பெரும்பாலான தாயக வாசகர்களின் எண்ணம். தாம் மகிழ்ந்து வாழ்ந்ததும், போரின் அகோரத்தினால் ஏற்பட்ட பாதிப்பும், யதார்தத்திற்கு அப்பாலான அரசியல் சிந்தனைகளுமே மேலோங்கி நிற்கும். தப்பியோடியவர்களின் ஒப்பாரிகள் என சில விமர்சகர்களின் எள்ளலுக்கு ஆளாவதுமுண்டு. ஆனால் சமகாலத்தின் மிக அற்புதமான படைப்பாளிகள் புலம்பெயர்ந்தவர்களாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

20180929_1141211

தமிழ்நதியின் கதைகளிலும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளும் போரின் அவலங்களும் இடப்பெயர்வும், புலம் பெயர் வாழ்வின் போலி முகங்களும் பேசப்பட்ட போதும் அவை படைப்புகளில் முனைப்புப் படாமைக்கு காரணம் அவரது எழத்தின் வசீகரமாகும். பிரச்சாரத்தன்மை இடையூறு செய்யாத சொல்லாடலும் கவித்துவமான நடையும் ஏனைய பல புலம் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக நின்று சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஒவ்வொரு படைப்புமே பேசப்பட வேண்டியவையே. ஆனால் அவ்வாறு செய்வது சிறிய அறிமுகக் கட்டுரையில் முடியாததாகும்.

தாழம்பூவின் காதல் ஒரு வித்தியாசமான படைப்பு. இதுவே இத்தொகுப்பின் முதற்கதையும் கூட. நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணை, நவயுகப் பெண் ஒருத்தி எதிர்பாரத கணத்தில் முகங்கொண்ட யுகசந்திப்பில் விலகும் திரையின் பின்னே காட்சிகளாக விரிகிறது. இருவருமே காதலில் வீழ்ந்த பெண்கள் என்பதைக் காண்கிறோம். திகிலும் மர்மங்களும் ஆச்சரியமூட்டும் கணங்களுமான மாய உலகிற்குள் சஞ்சரிக்க வைக்கும் உணர்வைக் கொடுக்கிறது.

மேலோட்ட வாசிப்பில் அந்தப் படைப்பானது அமானுசத்தன்மையும் புதிர் சூழ்ந்ததாகவும் தென்பட்டாலும் அது பேசாமல் பேசும் கருத்தானது பேசப்பட வேண்டியது. பெண்கள் மீது ஆண்வர்க்கம் கொண்டிருக்கும் மேலாதிக்க உணர்வையும் காதலின் பெயரால் பெண்கள் ஏமாற்றி வஞ்சிக்கப்படுவதையும் உணரும்போது எமது சமூகக் கட்டமைப்பின் போலிமுகங்கள் கிழிந்து சிதிலமடைந்து அம்பலமாகின்றன.

இச்சிறுகதையை படித்த பின்னர் யதேட்சையாகப் ‘பியர் பிரேம் காதல்’ திரைப்படத்தில் இதன் கரு மற்றொரு முகமாக வெளிப்படுவது கண்டு ஆச்சரியப்பட்டேன். உண்மைதான் காதல் கற்பு கலாசாரம் போன்ற பெயர்களால் பெண்களை மட்டும் கட்டிவைக்கும் கைங்கரியத்தை எமது சமூகம் நரித்தனமாக இறுகத்துடன் கட்டியமைத்திருப்பதை அப்படம் தெரியாத்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நதியின் கதையில் அது தீர்க்கமாக ஆனால் குறியீட்டு ரீதியாக சொல்லப்படுகிறது.

போதை என்பது மதுவும் போதைப் பொருட்களுமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அரசியல் வாதிகளுக்கு அதிகாரம் ஒரு போதை, ரசிகனுக்கு திரைப்படம் ஒரு போதை, பல பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் ஒரு போதை. நித்திலாவுக்கும் ஒரு போதை உண்டு. உங்களுக்கும் எனக்கும் கூட சற்றே இருக்கலாம் என்ற அபாயச் சங்காகவும் ஒலித்தது நித்திலாவின் புத்தகங்கள் என்ற சிறுகதை.

நித்திலாவின் புத்தகங்களில் ஆழ்ந்திருந்த போது ‘கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்த’ நித்திலாவின் அறையில் நானும் கூடவே இருந்து புத்தகங்களின் ஸ்பரிசத்தில் சுயம் இழந்திருந்தேன்.

‘மழைகாலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களப் பொதிந்து வைத்திருப்பதைப் போல புத்கங்களைச் சேகரித்தாள்’

மிக அற்புதமான கதை. அதை வாசிக்கும் போது ஆங்காங்கே என்னையும் இனங்கண்டேன். சில தருணங்களில் எட்டி நிற்கும் பார்வையாளனாகவும்; உணர்ந்தேன். நூல்களிலும் வாசிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் தப்பாமல் படிக்க வேண்டிய படைப்பு அது. அதில் நாம் வாசித்து கண்டுணரும் போதனைக்கு அப்பால் அழகாக வார்க்கப்பட்ட சித்திரமாக மனதை நிறைக்கிறது.

மாயக்குதிரை யும் அதே போல மற்றொரு போதையைப் பேசும் சிறுகதை. தொகுப்பின் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று. படிக்கும் போது தமிழ்நதியின் படைப்புகளில் போதை அடைந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படும் துயர் ஆற்றமுடியாதது. காத்திருப்பு கதையில் பாடசாலையால் வந்த பையனை விசாரணைக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்கிறார்கள். தனது மகனுக்காக 32 ஆண்டுகளாக காத்திருக்கிறாள். ஞானம்மாவின் காலத்தால் வற்றாத காத்திருப்பின் தாய்பாசம் அவளுக்கானது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான தாய்மாரின் துயர்ச் சாகரமாக அலை வீசுகிறது. தன் மகன் தன்னைக் கட்டாயம் வந்து தன்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையோடு காலதேவனை உதைத்துத்தள்ளிக் காத்திருக்கிறாள். எனது மகன் எங்கே என்ற அட்டையுடன் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறாள். முடிவு ஆச்சரியமளிக்கிறது. அவன் வீரமரணம் அடைந்தான் என்ற பழைய செய்தித்தாள் கைக்கெட்டுகிறது.

அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய படைப்பு இது. அரசின் பொய்பிரசாரத்திற்கு துணை நிற்கிறது என இனப்பற்றாளர்கள் கூக்குரல் இடவும் கூடும். ஆயினும் காணமல் போனவர்கள் பற்றிய பிரச்சனையில் எம்மத்தியில் அதிகம் பேசப்பாத ஒரு உண்மையை வெளிப்படுத்திய துணிவிற்காக படைப்பாளியைப் பாராட்டலாம். அது சொன்ன விடயத்திற்கு அப்பால் தாயின் காத்திருப்பை அற்புதமாகப் பேசும் கதை. மிக அழகாகப் பின்னப்பட்டது.

மலைகள் இடம் பெயர்வதில்லை கதையின் சிதம்பரம் ஆச்சி மறக்க முடியாத பாத்திரம். சிங்கள மக்கள் சுற்றி வாழும் பன்குளம் பகுதி மக்கள் இனக் கலவரத்தில் பட்ட துன்பம் சொல்ல முடியாதது. ஓவ்வொரு இரவும் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் காட்டிற்குள் ஒளிந்து மறைந்து கொள்ளும் அந்த மக்களின் அனுபவங்கள் யாழ்மக்களாகிய நாம் கனவிலும் அனுபவிக்காதவை.

‘வெட்டுறதெண்டா வெட்டட்டும். அவங்களுக்குபு; பயந்து என்ரை வீடான வீட்டை விட்டிட்டு காடு கரம்பையில் போய்ச் சாகோணுமோ’ இது சிதம்பரம் ஆச்சியின் குரல். நுணுக்கமான களச் சித்தரிப்புடன் அழகாகச் சொல்லப்பட்ட படைப்பு.

தோற்றப்பிழை என்ற சிறுகதை ஆரம்பத்தில் சொல்லப்பட்ட தாளம்பூ வைப் போலவே பெண்களுக்கு எதிரான அநீதிகளை சரித்திர பின்னணியுடன் நிகழ் வாழ்வைக் கலந்து புனையப்பட்ட படைப்பு. அதன் ஆயி மறக்க முடியாத பாத்திரம்.

இவருடைய படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. போரும் அகதி வாழ்வும் புலம்பெயர் அந்நிய கோலங்களுமாக சமகால வரலாற்றின் கதைகளாக அல்லாமல் வர்ண ஓவியங்களாக மனதை நிறைத்து நிற்கின்றன. தர்க்க ரீதியான சில முரண்களை ஓரிரு கதைகளில் காண முடிகிறது. படைப்பாளுமை அவற்றை மூடி நிரவிவிடுகிறது.

கவிதை கட்டுரை சிறுகதை என பலதளங்களில் இவர் இயங்குவதை அறிய முடிகிறது. நூல்களாகவும் வந்துள்ளன. ஆனால் அவற்றோடு உறவாட இன்னமும் வாய்ப்பு கனியவில்லை.

இவருடைய ஒரிரு படைப்புகளை ஏற்கனவே உதிரியாகப் படித்திருக்கிறேன். ஆயினும் இந்தப் பத்துக் கதைகளையும் ஒன்று சேர்த்து படிக்கும் போதுதான் தமிழ்நதியின் மனதை ஒன்ற வைக்கும் பாத்திரப் படைப்புகளும் களச் சித்தரிப்புகளும் கவித்துவ நடையும் என்னை ஈர்த்துக் கொண்டன. தேடிப் படிக்க வேண்டிய படைப்பாளி என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »