Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சும்மா இருத்தல்’ Category

>“சும்மா இருக்கச் சுகம் வரும்” என்றார்கள் ஞானிகள்.

“சும்மா இருந்தால் மரணம் விரைந்து வரும்” என்கிறார்கள் இன்றைய ஞானிகளான விஞ்ஞானிகள்.

எது சரி?

அதீத எடையும் கொழுத்த உடலும் இன்று கொள்ளை நோயாக மனித குலத்தை ஆட்டுவிக்கிறது. அதீத எடைக்கு முக்கிய காரணம் போதிய உடலுழைப்பு இல்லாமையாகும்.

சும்மா உட்கார்ந்திருப்பது என்பது உடலுழைப்பற்ற செயலாகும். எனவே அதிக நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது உடல் உழைப்பின் நேரத்தைக் குறைக்கிறது.

மாறாக குறைந்த நேரம் உட்கார்ந்திருப்பதானது கொழுத்த உடலினால் ஏற்படும் உடற் செயற்பாட்டியல் பாதிப்புகளைக் (metabolic consequences) குறைக்கும் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

எடை குறைப்பது பற்றிய எனது முன்னைய கட்டுரை படிக்க
எடை குறைப்பு – மருந்துகள் உதவுமா?

இது அமெரிக்க புற்று நோய் சங்கத்தினால் செய்யப்பட்ட ஆய்வாகும். நோயற்ற ஆரோக்கியமான 53இ440   ஆண்களையும்  69776 பெண்களையும் உள்ளடக்கிய பாரிய ஆய்வு இது. 14 வருடங்கள் தொடரப்பட்டது.

இதன் படி தினமும் 3 மணிநேரத்திற்கு குறைவாக சும்மா இருப்பவர்களை விட தினமும் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பவர்களுக்கு மரணத்திற்கான சாத்தியம் அதிகரிக்கிறதாம். அது ஆண்களில் 1.17 சதவிகிதமும், பெண்கனில் 1.34 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.

அதே நேரம் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பதுடன் மிகுதி நேரங்களில் உடலுழைப்புக் குறைந்திருப்பர்களுக்கு, குறைந்த நேரம் சும்மா இருப்பதுடன் அதிக உடலுழைப்பு செய்பவர்களுடன் ஒப்பிடும்போது மரணத்திற்கான சாத்தியம் ஆண்களில் 1.48 சதவிகிதமும், பெண்களில் 1.94 சதவிகிதமும் அதிகரிக்கிறது.

சும்மா இருப்பவர்களின் மரணத்திற்கான அதிகரிப்பானது அதீத எடை, புகைத்தல் போன்ற மரணத்திற்கான ஏனைய காரணங்களைக் கணக்கில் கொண்டபோதும் அதிகமாகவே இருந்தது.

அத்துடன் ஓரளவு உடலுழைப்பு இருந்தபோதும் சும்மா இருக்கும் நேரம் அதிகமாக இருந்தாலும் ஏனையவர்களை விட மரணம் நெருங்கி வரும்.

அவர்களில் மரணத்திற்கு, பொதுவாக மாரடைப்பு, மூளையில் இரத்த குழாய் வெடிப்புப் போன்றவையே காரணமாக இருந்திருக்கின்றன.

எனவே இந்த ஆய்வு கொடுக்கும் முடிவானது என்ன? குறைந்தளவு நேரமே சும்மா உட்காரந்திருங்கள். கூடியளவு நேரம் உற்சாகமான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் என்பதுதானே.

அப்படியானால் ஞானிகள் சொன்னது தவறா?

இல்லை!

ஞானிகளின் இலக்கு விரைவில் வீடு பேறடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதாகும். எனவே சும்மா இருப்பது அவர்கள் தங்கள் இலக்கை விரைவில் அடைய அது உதவும். அதாவது மரணித்து இறைவனை அடைய.

ஆயினும் இவ்வுலகில் நீண்டு வாழ்வதில் விருப்பமும், மகிழ்ச்சியும் அடையும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஏற்றது

  • குறைந்த நேரம் சும்மா இருத்தலும் 
  • கூடிய நேரம் உடலுழைப்பில் ஈடுபடுவதும்தானே.

சும்மாயிருத்தல் பற்றிய தாயுமானவர் பாடல்

 ”சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

“இடக்குப் பேச்சுப் பேசாதே, ஞானிகள் உடற் சுகத்தைப் பற்றிப் பேசவில்லை. உள்ளத்தை அமைதியாக சுகமாக தேவையற்ற வீண் சிந்தனையின்றி வைத்திருப்பதைப் பற்றியே சொன்னார்கள்”

என நீங்கள் சொன்னால் அதை மறுதலிக்கும் இலக்கிய ஆன்மிக ஆற்றல் என்னிடம் இல்லை.

அதீத எடை பற்றிச் சற்றுச் சிரிப்போடு சிந்திக்க எனது
“steth இன் குரல்” மற்றும்
“மறந்து போகாத சில..”
பதிவுகளைப் பார்க்கவும். 

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 28.10.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

பிகு

சும்மா இருக்காதே எனச்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Read Full Post »