Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சுயமருத்துவம்’ Category

அந்தப் பெண் என்னை  ஒரு கணம் மலைக்க வைத்தாள். மலைக்க வைத்தது அவளது உருவம் அல்ல. அவள் செய்திருந்த வேலைதான் அவ்வாறு செய்தது.

அவள் கட்டிப் போடும் மருத்துவம் செய்திருந்தாள். இது கட்டிப் பிடி மருத்துவமல்ல. கட்டிப் போட்ட வைத்தியம்.இதைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரிடையாக இப்பொழுது பார்க்க முடிந்தது.அவளது முகத்தில் ஒரு கருமையான முளை. கழலை என்றும் சொல்வார்கள்.

கருப்புத் திட்டி போல அவளது முகத்தின் வலது பக்க கன்னத்தில் இருந்தது. Mole என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். சருமத்தில் இவ்வாறான பல்வேறு சிறிய சிறிய வளர்த்திகள் வருவதுண்டு. moles, freckles, skin tags, benign lentigines, and seborrheic keratoses என இவற்றில் பல வகைகள் உள்ளன. பொதுவாக கறுப்பாக அல்லது தவி்ட்டு நிறத்தில் இருக்கும்.
வேறு வேறு தோற் கழலைகள்

இவை பெரும்பாலும் ஆபத்து அற்றவை. அரிதாக சருமப் புற்றுநோயாக இருப்பதுண்டு.

இந்த முளைக்குத்தான் அவள் கட்டிப்போடு மருத்துவம் செய்திருந்தாள். தனது தலை முடியால் அதன் அடிப்பாகத்தில் இறுக்கிக் கட்டியிருந்தாள். அவ்வாறு கட்டினால் அதற்கு தேவையான குருதி கிடைக்காது. அது இறந்து கருகி விழும். இது முற்காலத்தில் வீட்டு மருத்துவமாகச் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் மருத்துவ வசதிகள் மிகச் சிறப்பாக  இருப்பதால் இப்பொழுது ஒருவரும் அதை நாடுவதை நான் நீண்ட காலமாகக் காணவில்லை.

ஏதோ ஒரு உந்துதலில் அவ்வாறு தலை முடியினால் கட்டிப் போட்டுவிட்டாள். அடுத்த அடுத்த நாட்களில் பயம் பிடித்தது. ஏதாவது ஆகுமா. முகத்தில் புண் ஏற்பட்டுவிடுமா, சீழ் பிடிக்குமா எனப் பலபல சந்தேகங்கள்.

இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பது என தலையில் விழுந்தது.

பிரச்சனைகள் ஏற்படாமல் தீர்க்க அதை நீக்குவோம் என்றேன். ஏற்றுக் கொண்டாள்.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்யும் மருந்தைப் போட்டு அகற்ற முடிவு செய்தோம்.

அவ்வாறே செய்தோம்.

சிறிய காயம் என்பதால் மூடித் தையல் போட வேண்டி நேரவில்லை. வெறுமனே மருந்திட்டு பிளாஸ்டர் போட்டு அனுப்பி வைத்தேன்.

ஐந்து நாளில் மீண்டும் வருவார். காயம் ஆறியிருக்கும். சில நாட்களில் அழகு வதனம் முன் போல ஆகிவிடும்.

இவ்வாறு சுய வைத்தியம் செய்யலாமா எனக் கேட்காதீர்கள். கிருமி தொற்றிவிடலாம். அல்லது ஆபத்தான புற்று நோய் போன்ற கட்டியில் தானே சிகிச்சை செய்ய முனைந்து பிரச்சனையை மோசமாக்கலாம்.

மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது கட்டிப் போட்ட வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் அல்ல

Read Full Post »

>
ஒரு நண்பர் கூறிய கதை ஞாபகத்திற்கு வருகிறது.

சுய வைத்தியம் செய்வதில் பெருமை கொள்ளும், அதைப்பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் விஞ்ஞானப்பட்டதாரி அவர்.

அவரது பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு.

‘சைனசயிட்டில்’ வருத்தமாக இருக்கலாம் என்றெண்ணி பல வீரியமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் கடுமையான வலி நிவாரணிகளையும் கொடுத்துப் பார்த்தார்.

எதுவித சுகமுமில்லை. தலையிடி அடிக்கடி வரத்தொடங்கியது.

பயந்து போன அவர், நரம்புத்துறை வைத்திய நிபுணரிடம் சென்றிருக்கிறார்.

கண்ட கண்ட மருந்துகளைப் பாவிப்பதற்காக அவரைக் கடிந்த வைத்திய நிபுணர், தலையிடிக்கான காரணம் கண்பார்வைக் கோளாறுதான் என்று கூறி கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்தார்.

கண் வைத்திய நிபுணர் சிபார்சு செய்து மூக்குக்கண்ணாடியை அணியத் தொடங்கியதும், எந்த வித மருந்துகளுமின்றியே அவரின் பிள்ளையின் தலையிடி மறைந்து விட்டது!

நோயை மாற்றாது நோயாளியை மாய்க்கும் சுயவைத்தியம் அல்ல பிள்ளைக்குத் தகப்பன் செய்த மோட்டு வைத்தியம்.


வைத்திய அறிவை, கேள்வி ஞானத்தால் பெற்று விட முடியாது!

கடுமையான ஐந்து வருடப் படிப்பும், பயிற்சியும் பின் ஒரு வருட காலம் ஓய்வேயற்ற தீவிர ‘ஹவுஸ் ஒபீசர்’ நேரடி ஆஸ்பத்திரிப் பயிற்சியும் பெற்றுங்கூட,
இன்றைய டாக்டர்களால் படுவேகமாக முன்னேறி வரும் நவீன மருத்துவத் துறையைப் பூரணமாக அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதிருக்கிறது.

ஆராய்ச்சிகளின் பலனாகத் தினசரி புதுப்புது மருந்துகள் பாவனைக்கு வருகின்றன.
அதே ஆராய்ச்சிகளின் பயனாக பல மருந்துகள் பாவனைக்கு ஏற்றதல்ல என அடிக்கடி ஒதுக்கப்படுகின்றன.
புதுப்புது சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நமது நேரடி அனுபவங்களாலும்,
மருத்துவக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலும்,
மருத்துவர் சஞ்சிகைகளைத் தொடர்ந்து படித்துவருவதினாலும்
தமது மருத்துவ அறிவைக்
கறள்கட்டி விடாமல்,
பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்
இன்றைய டாக்டர்கள்.

எனவே எந்தவித வைத்தியமும் கற்காது கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு சுய வைத்தியம் செய்ய முற்படுவது முறையற்றது மாத்திரமன்றி
உயிருக்கே ஆபத்தாக முடியலாம்|.

வைத்தியம் என்பது நோயைச் சரியாகக் கணிப்பது மாத்திரமல்ல.

நோய்க்கான மருந்தென்ன?
அதை எந்த அளவில் பாவிக்க வேண்டும்?
எவ்வளவு காலம் பாவிக்க வேண்டும்.
அந்த மருந்துகளால் எதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?
அப்படி ஏற்படுமாயின் அதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி?

இது போன்ற விடயங்களை சுயவைத்தியம் செய்ய முனையும் சாதாரண மனிதர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

பாமர மக்கள் பொதுவாக இப்படியான சுயவைத்தியப் பரிசோதனைகளில் ஈடுபடுவதில்லை.
காய்ச்சல் வந்தால் ‘பனடோல்’ குளிசை பாவிக்கக் கூடப் பயன்படுபவர்கள் அவர்கள்.

மருந்து பாவிப்பதற்கு மாத்திரமன்றி சாப்பிடுவது, குளிப்பது, முழுகுவது எல்லாமே டாக்டரின் புத்திமதிப்படியே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

சிலவேளைகளில் முகம் கழுவுவது சுடுதண்ணீரிலா என்று கேட்பதற்கு நாலு ஐந்து மைல் பிரயாணம் செய்து டாக்டரிடம் வரும் வெகுளித்தனமான பாமர மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அசாதாரண துணிச்சலுடன் மூடத் தனமாகச் சுய வைத்தியத்தில் ஈடுபடுவது பொதுவாக ஓரளவு படித்தவர்களே.

மருத்துவர்கள்
மருந்துக் கடைக்காரர்,
ஆசிரியர்கள்,
ஆஸ்பத்திரி ஊழியர்கள்,
டாக்டர்களின் உறவினர் ஆகியோரும் சுயவைத்தியத்திற்குப் பெயர் போனவர்கள்.

சுயவைத்தியம் என்பது சாதாரண மக்களுக்குத் தான் ஆபத்தானது என்பதில்லை.


டாக்டர்களும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

ஒதுக்குப் புறமான காட்டுப் பிரதேசத்தில் தனியே வேலை செய்து வந்த டாக்டர் ஒருவருக்கு திடீரென ஓருநாள் சலப்பையில் கல் அடைசல் (Renal Colic) என்று சொல்லப்படும் ‘ரீனல் கொலிக்’ வயிறுவலி வந்து விட்டது.

வலியால் மிகவும் கஷ்டப்பட்ட அவர், வேறு எந்த டாக்டரையும் கலந்தாலோசிக்க முடியாத சூழ்நிலையில் தனக்குத்தானே ‘பெத்திடீன்’ என்ற ஊசி மருந்தை ஏற்றும்படியாயிற்று.

சுகம் வந்தது.


இதன் பின் அவருக்கு அடிக்கடி அந்த நோய் ஏற்படத் தொடங்கியது. அடிக்கடி தனக்குத் தானே ஊசி ஏற்றிக் கொண்டார்.

உண்மையில் அடிக்கடி வலி ஏற்பட்டதா, அல்லது வலி ஏற்பட்டதாகப் பாவனை செய்தாரா தெரியாது.

ஏனெனில் ‘பெத்திடீன்’ என்ற அந்த மருந்து சிறந்த வலி நிவாரணி மாத்திரமன்றி ஓரளவு போதையையும் கொடுக்கக் கூடியது.

ஆஸ்பத்திரியில் இருந்த ‘பெத்திடீன்’ ஊசிக்குப்பிகள் மாயமாக மறையத் தொடங்கின. அவரால் கணக்குக் காட்ட முடியவில்லை!

பிறகு ஆஸ்பத்திரியில் பணமும் காரணமின்றிக் கரையத் தொடங்கியது. ஊசி மருந்து வெளியே வாங்குவதற்காக!

விசாரணையின் பின் வேலையை இழந்தார்.

போதை ஊசிக்கு அடிமையான அவரால் இன்றும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

தன்னை அறியாத புது டாக்டர்களைக் கண்டு விட்டால் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி ஒரு ‘பெத்திடீன்’ ஊசி ஏற்றுவித்துக் கொள்வார்.

தன்னைப் பற்றி அறிந்த டாக்டர்களைக் கண்டால் ஏதாவது பொய்சாட்டுக் சொல்லிச் சிறிது பணம் கறந்து கொண்டு ஊசி மருந்து வாங்குவதற்காக மருந்துக் கடைக்கு ஓடுவார்.


அவரை அறிந்த டாக்டர்களும் மற்றவர்களும் அவரின் தலையைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு இழி நிலைக்கு வந்து விட்டார்.

மக்கள் மத்தியில் பெருமையுடனும், புகழுடனும் வாழவேண்டிய டாக்டர் இன்று பிச்சைக்காரனைப் போல் போதை ஊசிக்காக இரந்து திரிய வேண்டி வந்ததற்கு காரணம் இந்தச் சுயவைத்தியம் தானே!

தனக்குத்தானே மருந்து போடுவது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேண்டாத ஆலோசனை சொல்லி அவர்களையும் தவறான மருந்து சாப்பிட வைப்பதும் இதில் அடங்கும் அல்லவா?


சுய வைத்தியம் ஜீவநாசினி.

சிரித்திரன் சஞ்சிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

Read Full Post »