>நுவரெலியா நகருக்கு சென்ற போது மொபைல் போன் கமராவில் எடுத்த சில படங்கள் இவை.
மஞ்சு மூடி மலைகள் ஒழிந்து கொண்ட நேரமல்ல.
சூரிய ஒளியில் பிரகாசிக்கிறது மலை அடிவாரம்.
தேயிலைச் செடிகள் நிரை நிரையாக..
![]() |
பாதை ஓரத் தேயிலைத் தோட்டம் |
டிவோன் நீர் வீழ்ச்சிக்கு அருகில்
சென்ட் கிளயர் தேயிலைத் தோட்ட வாயில்.
அதன் வாயிலில் வாய் ஒடுங்கிய பெரிய பொயிலர்.
முன்னைய நாள் தேயிலை பக்டரிகளில்
பயன்படுத்தியதாம்.
![]() |
பழைய காலங்களில் தேயிலையைப் பதப்படுத்த… |
நேர் எதிரே ஒரு பாலம்.
அங்கிருந்து மறுபக்கம் பார்த்தால்
பாய்நதோடும் நீரும் சலசலப்பு ஓசையும்.
சென்ட் கிளயர் நீர் வீழ்ச்சி.
![]() |
டிவோன் நீர் வீழ்ச்சி |
மேகம் மூடிய மலைகள்.
மலையோரம் வளைந்தோடும் பாதைகள்.
கிடு கிடு பள்ளத்தாக்கில் துள்ளிக் குதித்து
சரிந்தோடி சாகசம் காட்டும் நீர்வீழ்ச்சி.
எத்தனை இன்பம் வைத்தாய் என்நாட்டில்.
![]() |
சென்ட் கிளயர் நீர் வீழச்சி. |
பாய்ந்து குதிக்கவில்லை.
பரந்து அகலக் கால் பரப்பி
பவ்வியமாய் தலை குனிந்து
பரவசமாய் சாய்ந்து இறங்குகிறாள்
சென்ட் கிளயர் நீர் வீழச்சி.
![]() |
காதலர் சறுக்கு வீழ்ச்சி |
நெடுந்தொலை தூரத்தில் அப்பாவியாக
வான் முட்டக் கை நீட்டி நிற்குமிவள்
செய்த கொடும் செயல் அறிவீரோ?
கைகோத்து கனிமொழி பேசி மலையேகி
இவளருகில் வந்தபோது
கன்னியவள் கால் சறுக்கித் தடுமாற
தன்மடியில் வீழ்த்தி தலைசிதறடித்தாள்.
கண்ணே உன்னோடு இணைவன் நானும் என
தானே தன் கால் சறுக வைத்து வீழ்ந்தானாம்.
வீழ்ந்தவள் கை பிடித்தானோ?
மறு உலகில் மணம் முடித்தனரோ?
மலையேறப் படிகளில்லை
குறும்பாறை வழி செல்லக்
கால்களு்க்கு வலுவில்லை.
காதலர் கதை கேட்டு மனம்சோர
எதுவுமே முடியவில்லை…
சறுக்கி விழுந்தனரோ
கை கோத்துப் பாய்ந்தனரோ
இல்லையேல் Lover’s Leap பெயரெதற்கு
என்றெல்லாம் இடக்காகக்
கேள்வி எழுப்பினால்
விடையளிக்க நான் ஆளில்லை.
இனியொரு இனிய காட்சி.
நுவரெலியா நகரினை
பறவையின் பார்வையாக
சாந்திபுர குன்றின் உச்சியிலிருந்து
காணும் காட்சி.
![]() |
பறவையின் பார்வையில் நுவரெலியா |
எம்.கே.முருகானந்தன்.