மழையின் பின் மீண்டும் டெங்கு
தேவதைகளின் வழமையான இயல்புக்கு மாறாக சீறிச் சினந்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது இந்தத் தேவதை. படுக்கச் சொன்னபோது மாட்டன் என்றாள். காய்ச்சல் பார்க்க வாயைத் திற என்றபோது உதடுகளை இறுக மூடிக் கொண்டாள். தொட்டபோதுதான் காரணம் புரிந்தது. அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.
காய்ச்சல் இரண்டு நாட்களாக. சாப்பிடுகிறாள் இல்லை. சினந்து கொண்டிருக்கிறாள். ஓங்காளம் இருக்கிறது. இரவு முழவதும் நல்ல தூக்கம் இல்லை. டெங்குக் காய்சலாக இருக்குமோ என்ற பயத்தில் வந்திருந்தார்கள்.
இரத்தப் பரிசோதனை செய்தோம். வைரஸ் காய்ச்சல்தான் என்பது உறுதியாயிற்று. மொத்த வெண்கல எண்ணிக்கை(Full blood count- FBC) குறைவாக இருந்தது. பிளேட்லெட் (Platelet வெண்குருதி சிறுதுணிக்கை) எண்ணிக்கை சரியாக இருந்தாலும் சாதாரண அளவின் கீழ் மட்டத்தில் இருந்தது. இது எல்லா வைரஸ் காய்ச்சலுகளுக்கும் பொதுவானதுதான்.
ஆயினும் அவளது கடுமையான காய்ச்சலும், உடல் மற்றும் கண் வலிகளும் இது டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகத்தையே எழுப்பியது. எனவே உறுதி செய்வதற்காக இரத்தப் பரிசோதனை செய்வதற்கு மறுநாளும் வரச்சொன்னோம்.
இரண்டாம் நாள் பார்த்தபோது காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. உடல் வலிகளும் குறைந்து குழந்தை அமைதியாக இருந்தாள். ஆயினும் இரத்தப் பரிசோதனையில் பிளேட்லெட் (Platelet) எண்ணிக்கை மேலும் குறைந்திருந்தது. ஆயினும் ஆபத்தான எண்ணிக்கை எல்லையை எட்டவில்லை.
இருந்தபோதும் ஆபத்து எல்லையை அவள் இன்னமும் தாண்டவில்லை.
மூன்றாம் நாளும் அந்தச் சின்ன அழகிக்கு இரத்தம் குத்தி எடுத்துப் பரிசோதனை செய்து வேதனைப்படுத்த மனம் விரும்பாத போதும் வேறு தேர்வு இருக்கவில்லை. மூன்றாம் நாள் அவள் வரும்போது அவளுக்கு காய்ச்சல் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. மான்குட்டி போல துள்ளிக் குதித்து வந்தாள். ‘காலையில் வழமைபோலச் சாப்பிட்டாள். விளையாடுகிறாள்’ என்று தகப்பன் கூறினார்.
சாதாரண டெங்கு காய்ச்சல்
இருந்தபோதும் அவள் உள்ளங் கைகளைக் கசக்கிக் கொண்டிருந்தது என் கண்களில் பட்டது. ஒரு சிலரில் டெங்கு குணமாகி வரும்போது இத்தகைய உள்ளங்கை நமைச்சல் எடுப்பது பற்றி அண்மைய மருத்துவ சஞ்சிகைகளில் தகவல் வந்திருந்தமை நினைவில் வந்து மனதை அல்லற்படுத்தியது. மீண்டும் இரத்தப் பரிசோதனையை தவிர்க்க முடியாது செய்தோம். இம்முறை மூன்று பரிசோதனைகள். முன்பு இருதடவைகள் செய்த அதே முழு இரத்த எண்ணிக்கையுடன், ஈரல் செயற்பாட்டிற்கான பரிசோதனைகள் (SGPT,SGOT), மற்றும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட்(Dengue Antibody) ஆகியவையும் செய்தோம்.
முதல் இரண்டு பரிசோதனைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அவள் ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டின. ஆயினும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட் பொஸிடிவ் ஆக இருந்தது. அதாவது அவளுக்கு வந்தது டெங்குக் காய்ச்சல்தான் என்பது உறுதியாகிறது. ஆயினும் இது சாதாரண டெங்கு காய்ச்சல்
முடிவைக் கூறியதும் தந்தை பரபரத்தார். விளக்கம் அளித்தேன்.
சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது. மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். இந்தப் பிள்ளைக்கும் அவ்வாறே குணமாகிவிட்டது.
டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்
மற்றொருவர் இளம்தாரி. நான்கு நாட்களாக காய்ச்சல். வேறு மருத்துவம் செய்தும் குணமாகாததால் என்னிடம் வந்திருந்தார். தலைச் சுற்று, நிலை குலைவு ஏதும் இல்லை என்றார். ‘எனக்கு ஒன்றும் இல்லை இவர்கள் நட்டுப் பிடித்து கொண்டு வந்தார்கள்’ என்றார். பரிசோதித்ததில் சூடு 100 அளவில் காய்ந்தது. ஈரல் வீங்கியிருக்கவில்லை. இரத்த அழுத்தம் நாடித் துடிப்பு எல்லாம் நன்றாக இருந்தது. பொதுவாக உடல்நிலை நன்றாக இருந்தது. ஆயினும் சரும நிறம் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. உடனடியாக இரத்தப் பரிசோதனைகள் செய்தபோதும் திடமான முடிவுகளைக் கொடுக்கவில்லை.
மறுநாள் மீண்டும் பரிசோதித்தபோது குருதியில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கால் சற்று இரத்தம் வந்ததாகவும் சொன்னார். ‘டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்’ என்பது நிரூபணமானது. உடனடியாக அனுமதித்தோம்.
அடுத்த வாரம் வேறு ஒருவரை இதே நபர் கூட்டி வந்திருந்தார். ‘சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போனதால் எனக்குப் பிரச்சனை ஏற்படவில்லை’ என்றார் தப்பிவிட்ட மகிழ்ச்சியில்.
கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள். ஒரு சிலர் மட்டும் அடுத்த நிலைக்குப் போகக் கூடும்.
டெங்கு அதிர்ச்சி நிலை
மிக ஆபத்தானது ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஆகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இது வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துமனைகளிலேயே முடியும்.
டெங்கு அதிர்ச்சி நிலைகான நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.
இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.
கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.
மேலே கூறிய உதாரணங்களைக் கொண்டு டெங்கு காய்ச்சலின் மூன்று பிரிவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.
பீதிக் காய்ச்சல்
‘கைகால் உளையுது மேல் நோகுது. துலையிடிக்குது தும்முது’ என மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு வந்தார் மூன்றாமவர் மனைவியுடன். ‘ நான் வேலை செய்யிற இடத்திலை இரண்டு பேருக்கு டெங்கு வந்தது. எனக்கும் டெங்குவோ’ எனப் பயந்தார். கடுமையான காய்ச்சல் இல்லை. உடல் மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் சரியாக இருந்தது. ‘இரண்டு நாள் பொறுத்து மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்வோம்’ என்றேன்.
‘இல்லை பயமாக்கிடக்கு. நான் வாட்டிலை நிக்கப் போறன்’ என்று கூறிச் சென்றார். மறுநாள் காலை மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரியிலை நிப்பாட்ட மாட்டன் என்றிட்டாங்கள். வாட்டிலை சரியான சனமாhம்.’
அடுத்து இரண்டு நாட்கள் பரிசோதித்துப் பார்த்தும் அவருக்கு எதுவும் இல்லை. இவருக்கு டெங்கு வரவேயில்லை. வெறும் பீதிக் காய்ச்சல்.
நீங்கள் செய்யக் கூடியவை எவை?
சாதாரண காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி, சலக்கடுப்பு, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வரும். வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. ஓரிரு நாட்கள் பரசிற்றமோலை அளவுடன் கொடுத்துப் பாரக்கலாம்.
ஆனால் டெங்கு காய்ச்;சலானது ஆரம்பத்திலேயே மிகக் கடுமையாக இருக்கும். 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும். வயிற்று வலி வாந்தி பின்னர் வரக் கூடும். மேற் கூறிய கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காணுங்கள்.
காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.
பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் னுநபெரந யவெபைநn பரிசோதனை செய்வது உதவக் கூடும். ஆனால் இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும் என்பதால் பெரும்பாலும் உதவுவதில்லை.
புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.
ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.
போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.
சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.
டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஏற்படுகிறது.
சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அதாவது இந்த ஜீன் வரை சுமார் 14152 பேர் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 59 சதவிகிதமானவர்கள் சனநெருக்கடி மிக்க மேல் மாகாணத்திலேயே இனங் காண்பட்டுள்ளனர்.
எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதால்தான் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்க முடியும். இதில் ஒவ்வொரு குடிமகனதும் பங்களிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டாம். அதில் நீங்களும் நானும் ஒவ்வொருவரும் அடங்குகிறோம்.
அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.
இக் கட்டுரையை ஒக்டோபரில் பிரசுரிக்கிறேன்.
அண்மையில் நவராத்திரியை ஒட்டிப் பெய்த மழையின் பின்னர் மீண்டும் டெங்கு காய்சலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் காண முடிகிறது
அவதானமாக இருங்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0