Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘டொக்டரின் டயறி’ Category

>

“உள்ளை வாங்கோ டாக்டர்”

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.

கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!

பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!

மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

“கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

“ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 

Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
“ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்”.
இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த ‘டொக்டரின் டயறி’ என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

>”ஐயாவுக்கு வாயிக்கை ஒரு புண். ஒரு மாதமா நாட்டு வைத்தியம் செய்விச்சனாங்கள். ‘மாத்தித்தாறன்’ எண்டு அவர் சொன்னவர். மாறயில்லை. வரவரப் பெருக்குது… உங்களிட்டைக் காட்டிப் பார்க்கலாம் என்று கூட்டிக் கொண்ட வந்தனான்”

வயோதிபரோடு வந்த, அவரது நடுத்தர வயது மகன் கூறினார்.

“வாயை திறவுங்கோ பாப்பம்”

“வாயுக்குள்ளை வெத்திலை. கொப்புளிச்சுப் போட்டு வர்றன்”

டாக்டரிடம் வாயைக் காட்ட வரும்போது கூட வெற்றிலை போட்ட வாயைக் கழுவாது வருமளவிற்கு வெற்றிலை அவரை அடிமையாக்கி இருக்கிறது!

வெற்றிலை போடுபவராக இருப்பதால், அந்தப் புண் புற்று நோயாக இருக்குமோ எனச் சந்தேகம் வந்தது.

வாயைப் பரிசோதித்துப் பார்த்தபோது, அது புற்று நோய் தான் என்பது நிச்சயமாயிற்று.

வெற்றிலை புகையிலை சப்புபவர்கள் புகை பிடிப்பவர்கள், ஆகியோரே பெரும்பாலும் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

“கனகாலமாக சொக்கின்ரை உள்பக்கத்திலை பால் ஆடை படர்ந்த மாதிரி வெள்ளையாகக் கிடந்தது. பிறகுதான் புண்ணாகினது…நோ வலி ஒண்டும் இருக்காத படியால் கவனியாமல் விட்டிட்டின். பெருகத் தொடங்கத்தான் நாட்டு வைத்தியரட்டைக் காட்டினம்.”

உட்தோல் வெண்மையாக மாறியதும், நோ அற்ற புண் என்பதும் புற்று நோயைக் குறிக்கும் அறிகுறிகள் என்பதை அறியாதது அவர்கள் குற்றம் என்று சொல்ல முடியாது.

ஆனால் இதை அறிந்திருக்க வேண்டிய அந்த வைத்தியர், நோயாளிக்கு நோயின் தன்மை பற்றிக்கூறாது ஒரு மாதத்தைக் கடத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என என் மனம் கொதித்தது.

ஆயினும் காலங்கடந்து விடவில்லை. ‘கரண்ட் பிடிக்கிறது’ என்று பொதுவாகச் சொல்லப்படும் ‘ரேடியம் திரப்பி’ (Raditherapy)செய்தால் நோயைக் குணமாக்கலாம்.

நோயைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்தி சிகிச்சையின், அதுவும் உடனடிச் சிகிச்சையின் அவசியம் பற்றி அவர்களுக்குப் புரிய வைத்தேன். அறிமுகக் கடிதங்களையும், வைத்திய அறிக்கைகளையும் கொடுத்து மஹரகம புற்றுநோய் வைத்திய நிபுணரிடம் செல்ல வேண்டிய ஒழுங்குகளையும் செய்து கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன்.

ஒரு சில மாதங்களின் பின்

உப்பி ஊதி ஒரு பக்கம் அழுகிய பூசணிக்காய் போன்ற முகத்துடன் வந்த அவரை அடையாளங் காண எனக்கு வெகு நேரம் பிடித்தது.

“ஐயா, சரியான வேதினை, தாங்க முடியவில்லை. புண் பெருத்துச் சொக்கு ஓட்டையாய் போச்சு… சாப்பிட முடியல்ல.. சாப்பிட்டால் தண்ணீர் குடிச்சால் புண்ணுக்காலை வெளியிலை வருகுது…” அனுக்கத்துடன் கூறினார்.

பசித்தும் சாப்பிட விடாத புண்ணாலும், நோயின் உடல் உருக்கும் தன்மையினாலும் ஒட்டி உலர்ந்து எலும்புந் தோலுமாக மாறிவிட்டார்.

அருகில் சென்று புண்ணைக் கூர்ந்து பார்த்தேன்.

ஏதோ நெளிவது போலிருந்தது.

புழுக்கள்!!!

புண்ணைக் கவனியாது விட்டபடியால் ஈக்கள் மொய்த்துப் புழுப்பிடித்து விட்டது.

பாம்பு போல நெளிந்து நெளிந்து புண்ணைக் குடைந்து கொண்டிருந்தன.

வயோதிபர் வேதனையில் துடித்தார் என்மனம் கொதித்தது.

“ஐயாவை மஹரகமைக்கு கொண்டுபோய் வைத்தியம் செய்ய இல்லையே? நான் கடிதம் தந்தனான்தானே.”

“இப்பத்தைய நிலைமையிலை மஹரகமைக்கு எப்படிப் போறது….”

உண்மைதான்!

இச்சம்பவம் நடந்த 90 களில் போர் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்தது. கொழும்புப் பிரயாணம் உயிராபத்தான காலம். கிளாலிக் கடலை படகுகள் மூலம்தான் கடக்க வேண்டும். கடற்படையினரின் தாக்குதல் எப்பொழுது உயிரைக் குடிக்கும் என்று சொல்ல முடியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் பண்ண வேண்டும்.

அத்துடன் இனத் துவேசம் மோசமாக இருந்தது.

எனவே அவர் சொல்வதில் சற்று யதார்த்தமான உண்மை இருந்தது. இருந்தபோதும் மருத்துவத் தேவைகளுக்காவும் சொந்தத் தேவைகளுக்காவும் தென்பகுதி சென்று வருவதும் நடந்து கொண்டிருந்தது.

தொடர்ந்த அவரது பேச்சுத்தான் எனது கோபத்தைக் கிளறியது.

”  … இளம் ஆள் எண்டாலும் பரவாயில்லை. வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைப் பெரிசாகக் காணப் போறம் எண்டு பேசாமல் விட்டிட்டம்…”

“வயது போனால், கஷ்டப்பட்டு, வேதினைப்பட்டு சாகவிட்டிடுறதே..”

பொறுக்க முடியாமல் கோபத்தில் வெடித்தேன்.

வயது போனவர்தானே என்ற காரணத்தால், பெற்ற தந்தையின் நோய்க்கு வேண்டிய வைத்தியம் செய்ய முயற்சிக்காமல் நோயினால் துடித்து, வருந்தி, அணு அணுவாகச் சாகவிடும் இவர்கள் காசியப்பனுக்கு எந்தவிதத்தில் சளைத்தவர்கள்.

Read Full Post »

>முதுமையிலும் இளமை என்று சொன்னால் அவரைச் சொல்லலாம். வயது 85 ஆகிறது. மனைவியும் உயிரோடு இருக்கிறா. ஆனால் அவ வருத்தக்காறி. பிள்ளை குட்டியள் பேரக்குழந்தைகள் எனப் பெரிய குடும்பம்.

தனது ஆரோக்கியத்தில் வலு கவனம். சின்ன வருத்தம் என்றாலும் உடனடியாக மருந்து எடுக்க வந்துவிடுவார்.

“எந்த வருத்தத்தையும் வச்சுக் கொண்டிருக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே கிளைஞ்சு போட வேணும்” என்பார்.

தடிமன், காய்ச்சல், தலையிடி, முழங்கால் நோ, உழைவு குத்து இப்படி சில்லறை வருத்தங்கள்தான். டயபிடிஸ், பிரஷர், இருதய நோய் போன்ற ஆரோக்கியக் கேடுகள் எவையும் அவரை அண்டியது கிடையாது. இனி அண்டவும் வாய்ப்பிலை. வயசானதால் விரைவில் இனி அவை வர வாய்ப்பில்லை.

அதற்கிடையில் மறு உலகமடைந்து விடுவார் என்பதாலும் அல்ல. உண்மையிலேயே உடல் உள நலங்கள் நல்ல நிலையில் இருக்கிறது.
மருந்திற்கு வரும்போது இந்த வயதிலும் எவரது துணையுமின்றித் தனியாகவே வருவார்.

பசையுள்ள மனிதன். காரில் வருவார். தான் ஓட்டுவதில்லை. இவருக்கென டிரைவர் இருக்கிறான். ஆனால் என்னைச் சந்திக்க உள்ளே வரும்போது தனியாகவே வருவார்.

வலு பம்பல்க் காரன். பகடிகளுக்கும் குறைவில்லை. இடையிடையே என்னோடு கதைச்சுக் கொண்டிருப்பதில் வலு புளுகம். அதுவே அவருக்கு டொனிக் மாதிரி.

ஆனால் ஒரு பிரச்சனை. பேரைக் கேட்டால் வயசைச் சொல்லுவார். வருத்தம் என்ன எண்டு கேட்டால் காலையில் ‘காரில் வோக்கிங்’ போன கதையைச் சோடிச்சுச் சோடிச்சுச் சொல்லுவார்.

காது மந்தம்.!!

ஆனால் காது கேட்கும் கருவி போடுவதிலும் விருப்பமில்லை.
“உந்தச் செவிட்டு மிஷின் எனக்குத் தோதுப்படாது”
என அடியோடு நிராகரித்துவிடுவார்.

ஒருவாறு கடைசியில் எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். நவீன விலையுயர்ந்த Hearing aidனை ஒன்றை காதுநோய் நிபுணர் ஊடாக பெற்றுக் கொண்டார்.

மிக அதிசயமாக நன்றாகப் பொருந்தியது. தெளிவாகக் கேட்டது. சந்தோசப்பட்டார்.

அடுத்த முறை சந்தித்தபோது எவ்வாறு இருக்கிறது என்று கேட்டேன்.

“நல்லா இருக்கு. முந்தியே போட்டிருக்கலாம். தப்ப விட்டுட்டன்”
சிறிய ஏக்கம் இழையோடினாலும் மகிழ்ச்சி மேலோங்கி நின்றது.

“எப்படி வீட்டை மனிசி பிள்ளையளுக்கு உங்களுக்கு காது கேட்பதில் சந்தோசமோ” எனக் கேட்டேன்

“அவையளுக்கு எப்படியோ ! ஆனால் என்ரை லோயருக்கு நல்ல சந்தோசம்.”

“லோயருகுக்கோ ….”

காது கேட்பதற்கும் லோயருக்கும் என்ன சம்பந்தம். குடும்பத்தினரை மீறிய சந்தோசம் லோயருக்கு எப்படி வரும்.

“ஓம்!  நாலுதரம் உறுதியை மாத்தி மாத்தி எழுதினால் அவருக்கு நல்ல வரும்படிதானே”

சுருங்கிய தோல்களுக்கிடையே கண்கள் சிமிட்டின.

“எனக்கு காது கேக்கும் என்ற விசயத்தை வீட்டை ஒருவருக்கும் சொல்லயில்லை. ஒண்டும் விளங்காதவன் போலை இருந்த கொண்டு அவையடை கதையளைக் கேட்டுக் கொண்டிருந்தன். ..”

…அதாலைதான் உயிலை மாத்தி எழுத வேண்டி வந்தது.”

வழமைக்கு மாறாக இன்று ஏக்கப் பெருமூச்சு அவரிலிருந்து பிறந்தது.
 பிறந்த வந்த ஏக்கமா?

0.0.0.0.0

Read Full Post »

>

“”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ”   எனக் கேட்டார் ஒரு முதியவர். 
ஏன் என நினைகிறீர்கள்? 
பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது.

“””””  வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்”


“உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது”

“வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்”   

வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.

பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவிட்டது..

வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுக்காது  வயதானவர்களை அவமதிப்பமதுடன், உதாசீனப்படுத்தவும் செய்கிறார்கள்.

இதனை நீங்களும் பல் வேறு சந்தர்ப்பங்களில்ம் கண்டிருக்கக் கூடும்.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்றும்,
‘தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’

என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்று அதே மரியாதையை மூத்தோர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதா?

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல நடந்து கொள்கிறார்கள். குருத்தோலைகள் காவோலைகளாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சில வேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடூர மனோபாவத்துடன் நடப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

“வயது போனால் செத்துத் துலையிறதுக்கு ஏன் இன்னும் இருந்து கழுத்தறுக்கிறியள்..”

என்று தமது பெற்றோரைப் பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.

வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!

அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வுகளும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் சோகம் தோய்ந்த முகத்துடன் இருந்தார்.

“தலைச்சுத்து, எழும்பி நடக்க முடியாமல் விழுத்தப் பாக்குது, கை, கால் உழைவு, நடந்தால்  இளைப்புக் களைப்பு…”

வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக்கொண்டிருந்தார்.

திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி,

“பிள்ளை பேர்சை பையோடை வெளியிலை விட்டிட்டின், ஒருக்கால் போய்ப் பார் மேனை” 
என்றார்.

அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனிமையில் பேசும் ஆதங்கம்.

மருத்துவனால் செய்ய முடியாததைதக் கோரினார்.

மகள் வெளியேறிய மறுகணமே, – 

“எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ” 

என்று பரிதாபமாகக் கேட்டார். கேட்கவே மனது துடிக்கிறது.
உள்ளத்தில் துயரம்  மூடியிருந்தால் மட்டுமே இத்தகைய வாரத்தைகள் எழுந்திருக்கும்.

“ஏன் அப்பு ?”

“என்னாலை ஒரு வேலையும் செய்ய முடியுதில்லை. 
எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு, 
கிணத்திலை அள்ள ஏலாது… 
மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா. 
அவவுக்கும் சரியான வேலை…
… நான் குளிச்சுப் பத்து நாளாய்ப் போச்சுதெண்டால் பாருங்களேன்… 
செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை, 
மற்றவையளுக்கும் கரைச்சல் இல்லை”
என்றார்.

தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளுக்கு அவசியமான, அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?
மகளில் குற்றம் சாட்டாது, அவளது வேலைப் பொறுப்புகளையும் உணர்ந்த அதே நேரம் தன் பிரச்சனையையும் முன் வைத்தார்.

இருந்தபோதும்  இன்னும் பல விடயங்கள் அவர் மனத்தை அழுத்தியிருக்கும். இல்லையேல் இத்தகைய வார்த்தைகள் வந்திராது.
வெளியாரான எனக்குச் சொல்வதில் உள்ள தயக்கம் வாயைக் கட்டிப் போட்டிருக்கும்.

மனதிற்குள் அழுது கொண்டேன்.

வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும்.
தூக்கம் வரும்.
குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!

எமக்குத் ‘தலைநிறைய வேலை’ இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?

முடியாவிட்டால் வயோதிபர் இல்லத்தில் விட்டுவிடுங்கள் எனச் சொல்லலாம்.
ஆனால் அப்படி விட்டால் ஊர் என்ன சொல்லும் என்ற போலிக் கௌரவம் பலருக்கு.

எவ்வாறு உரைப்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய இந்தச் சமூகத்தின் பெருமையை?

0.0.0.0.0.

Read Full Post »

>இரவு நேரம் 7.45 இருக்கும். டெலிபோன் மணி கணீரிட்டது.

“டொக்டர் உங்களை அவசரமாகக் காண வேண்டும், இப்ப வந்தால் காணலாம் தானே?”

“இப்ப வந்தால் காணலாம், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஏலாது. 8 மணிக்குப் பூட்டிப் போடுவோம்.”

“உடனே வாறன்”

‘எப்படி வருவார்?’

அவர் இருப்பது மூன்று மைல் தொலைவில், பத்து நிமிடத்தில் வர முடியுமா? விசாரித்தேன்.

“எப்படியும் வந்து விடுவேன். ஒரு ஐந்து பத்து நிமிடம் பிந்தினால் பூட்டிப் போடாதீர்கள். ப்ளீஸ் மிகவும் அவசரம்….” கடிவாளம் போட்டார்.

காரில் வந்து விடுவாராக்கும் என எண்ணிக் கொண்டேன்.

இத்தகைய டெலிபோன் அழைப்புக்கள் எனக்கு வழமையானதுதான்.

தினமும் 7.15 ல் இருந்து 7.30 மணிக்குள் இத்தகைய அழைப்புக்கள் ஒன்று இரண்டு நிச்சயம் வரும்.

கடைசி நிமிடத்தில் டொக்டரை இழுத்துப் பிடிக்கும் பிஸியானவர்களிடமிருந்துதான்.

“சரி வாங்கோ” என்றேன்.

நோயாளிகள் மேலும் பலர் காத்திருந்ததால் நேரம் போனது தெரிய வில்லை. மீண்டும் டெலிபோன் கிணுகிணுத்தது. நேரத்தைப் பார்த்தேன். 8.20 ஆகிவிட்டது. ரிசீவரைத் தூக்கினேன். மணி நின்றிடக் குரல் ஒலித்தது.

“டொக்டர் கொஞ்சம் பிந்தி விட்டது. வாகனம் பஞ்சர். இப்ப சரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. உடனே வந்திடுவன்”

எஞ்சியிருந்த ஓரிரு நோயாளர்களையும் பார்த்து முடிக்க நேரம் 8.30 ஆகிவிட்டது. போன் பண்ணியவரை அப்போதும் காணவில்லை.

நேர்ஸ்களுக்கும் வீடு போகும் அவசரம்.
எனக்கும் அப்பிடித்தான்.
ஆயினும் என்ன அவசரத்திற்காக தேடி வருகிறாரோ என்று அனுதாபம் மேவியது.

இன்னமும் சிறிது நேரம் பொறுத்துப் பார்க்க தீர்மானித்தேன். மேலும் 10 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தேன். காணவில்லை. பொறுமை கடந்து விட்டது.

டிஸ்பென்சரியைப் பூட்டி, வெளி கேற்றையும் பூட்டிக் கொண்டு வீதியில் இறங்கினோம். நர்ஸ்களும் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அப்பொழுது ஓட்டமும் நடையுமாக பூனையாக குறுக்கே வந்தார்.

“பூட்டிப்போட்டியளோ? நான் தான் போன் பண்ணியது”

“நீங்கள் போன் பண்ணியபடியால்தான் எட்டு மணிக்குப் பூட்ட வேண்டிய நான் இதுவரை காத்திருந்தேன்”

“சொறி டொக்டர் வந்த மினிபஸ் பஞ்சராகி நின்றதால் வேறு பஸ் பிடித்துவர நேரமாகிவிட்டது.”

ஓகோ! ஆடிப்பாடி பஸ்சில்தான் வந்திருக்கிறார்.

இவரது வீட்டிலிருந்து பஸ் ஸ்டான்டுக்கு வரவே பத்து நிமிடங்கள் வேண்டும். பிறகு காத்திருந்து பஸ் பிடித்து இங்கு வந்து சேர எப்படியும் குறைந்தது ஒரு மணித்தியால மாவது வேண்டும்.

அப்படி இருக்க பத்து நிமிடங்களில் வந்து சேர்வேன் என என்னை முழுமடையனாக்கி விட்டார்.

“பிளீஸ் டொக்டர்” காரியக்காரன் அழுவது போலக் கெஞ்சினார்.

“என்ன வருத்தமோ!” குமுறிய என் நெஞ்சு இளகியது.

“சரி வாங்கோ” எனத் திரும்பி நடந்தேன். பின் தொடர்ந்தார்.

பூட்டிய கதவுகளைத் திறந்து டிஸ்பென்சரிக்குள் நுழைந்து எனது கதிரையில் அமர்ந்து கொண்டேன். உள்ளே வந்த அவர் சர்வ சாதாரணமாக ஆறஅமரக் கதிரையில் சாய்ந்து கொண்டார்.

தான் வரப் பிந்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினார்.
தினசரி கடுமையான ஒபிஸ் வேலை, வேலையால் வர தாமதமாவது.
அடுத்த நாளைக்கான உடைகளைத் துவைத்தல்,
சமையலுக்கு மரக்கறி வாங்கப் போக வேண்டியமை,
இப்படிப் பல சோலிகள்.

“அதுதான் லேட். உங்கட குணம் எனக்குத் தெரியும் தானே டொக்டர். நோயாளிகளின் துன்பம் தெரிந்தவர். பாவம் பார்க்கிறவர். எப்படியும் காத்திருப்பியள் என்று தெரியும்”

ஐஸ் அடிப்பதுடன்
ஏமாந்த சோணாகிரிப் பட்டத்தையும்  சூட்டுகிறார்….

லேசாக கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

“டொக்டருக்கு நேரம் போட்டுதோ? இந்த நேரத்திலை வந்தால்தான் உங்களோடை ஆறுதலாகக் கதைக்கலாம். இல்லாவிட்டால் சனம் விடுமே? மற்ற நேரம் என்றால் சனமாயிருக்கும்.
எப்படிக் கதைக்கிறது?
உங்களுக்கும் எங்களைப் போலை சிலரோடை கதைச்சால் தானே மனம் ஆறும். எந்த நேரமும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்”
மகாவலி கங்கை போல கருணை ஆறு பரவி வந்தது!

 கரிசனையான மனிதன்!

இந்த அரைச் சாமத்திலை வந்து கழுத்தறுக்கிறார். விட்டால் நடுச்சாமம் வரை இருப்பார். கேள்வியைப் போட்டு கதையை மாத்தினேன்.

“இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்”

“எனக்கோ வருத்தமோ? ஒன்றும் கிடையாது.”

“அப்ப ஏன் இந்த நேரத்திலை?”

“இரண்டு நாட்களாக வேலைக்குப் போகவில்லை. வீட்டிலை வேலை இருந்தது. நாளைக்குப் போக வேணும். அதுதான் ஒரு மெடிக்கல்
சேர் ட்டிபிக்கற் வாங்க வந்தனான்.”

எதையும் வாயடிச்சுச் சாதிக்கலாம் என நினைக்கும் கபடக்காரர்.

இன்றைய உலகில் டெலிபோன் என்பது மிகவும் அத்தியாவசிய மான சாதனம் ஆகிவிட்டது.

அது நடந்து பல வருடங்களாகிவிட்டன.

ஆனால் இன்றும் தொல்லைகள் தீரவில்லை. பண்டா போக சிறிமா வந்தார். அவர் போக ஜெயவர்த்தன, சந்தரிகா, மஹிந்த அந்தப் பக்கம்.
செல்வா, அமிர்தலிங்கம் பிரபா என மற்றொரு பக்கம்.

தீராத வியாதி.

இலங்கைத் தமிழர் பிரச்சனை போல என்றுமே தீராத தொடர் பிரச்சனைதான்.

ஒரு சின்னஞ்சிறு செய்தியைத் தெரிவிப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து 21 மைல் பிரயாணம் செய்து யாழ் செல்ல வேண்டிய காலம் 10-15 வருடங்களுக்கு முன் வரை இருந்ததை மறக்க முடியாது.

இன்று பருத்தித்துறையில் இருந்து கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எல்லாம் கணப்பொழுதில் சாத்தியமாகிறது.

முகத்தோடு முகம் பார்த்துப் பேசுவது வசமாகிவிட்டது.

ஆனால் அதே நேரம் நவீன வசதிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களும் ஏராளம் என்பதையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
அன்று வந்த திடீர் தொலைபேசி அழைப்பு இது.

“டொக்டர் நான் டின்னர் ஒன்றிற்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
இவன் எனது மகன் திடீரென தனக்கு வயிற்றோட்டம் என்கிறான்.
இப்ப உங்களிட்டை வந்து காத்துக் கொண்டிருக்க எனக்கேலாது.
நேரமுமில்லை.
ஏதாவது மருந்து சொல்லுங்கோ.
மருந்தைப் போட்டிட்டுப் பேசாமல் படுத்துக் கிடக்கட்டும்.
நாளைக்கு நாளையின்றைக்கு கொண்டு வந்து காட்டிறன்”

அவ நாளைக்கும் வரமாட்டா,
நாளையின்றைக்கும் வரமாட்டா.
மகனுக்குக் குணமான பின் டாக்டரிடம் போக வேண்டிய அவ சியம் என்ன?

அம்மாவிற்கு டின்னருக்குப் பிந்தாமல் போவதற்கு நேரம் முக்கியம்.
மகனின் வருத்தம் இரண்டாம் பட்சம்.

டொக்டர் போனில் பேசும்போது,
ஏற்கனவே டாக்டருக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி நோயாளியின் நேரம் மூன்றாம் பட்சம்!

டொக்டரின் நேரம் கணக்கிலேயே சேராது!

ஒரு டெலிபோன் பண்ணும் செலவில் அம்மாவின் கொன்ஸ்சல்டேசன் முடிந்து விட்டது.

மிக அவசரத்திற்கு மருத்துவர்களை டெலிபோனில் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் வேலையில் மருத்துவர்கள் மும்மரமாக இருக்கும்போது சிறு காரணங்களுக்காக தொல்லைப்படுத்துவது சரியாகாது.

இன்று ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  மூன்று அழையா விருந்தாளி அழைப்புகள்.

‘மருந்தைச் சாப்பிடுவது எப்படி’ என ஒன்று.

நோரடியாகவே மூன்று தடவைகள் விளங்கப்படுத்தும் போது ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டவர்தான் அழைந்திருந்தார்.
மற்றக் காதுக்கு பஞ்சு அடைத்துவிட்டுப் பேசுங்கள் என்று சொல்லத்தான் மனம் வந்தது.

‘இப்ப வந்தால் காணலாமா’ என மற்றொன்று.

ரிசப்சன் பெண்ணிடம் கேட்டும் சந்தேகம் அடங்காத பெண்ணிடமிருந்து.

‘தலைவலிக்குப் பனடோல் போடலாமா’ என மற்றொருவர்.

ஏற்கவே அருகிருந்த நோயாளி டெலிபோன் அழைப்புகளால் சலித்து, எழுந்து  ஓடாதது நான் செய்த புண்ணியம்.

மீண்டும் கிணுகிணுத்தது. இது பொக்கறிலிருந்த செல்போன்!

“ஹலோ..” எனது குரலில்  உயிரில்லை என்பது எனக்கே புரிந்தது.

“மச்சாங் கோமத……” புரியாத குரல்,

தெளிவாக விளங்காத பாசை.

ரோங் கோல்…

தொல்லை அழைப்புகள் தொடரும்…..

நான் எழுதி முன்பு ‘மல்லிகை’ சஞசிகையில் வெளிவந்து  ‘டொக்டரின் டயறி’ நூலிலும் இடம் பெற்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. 
பல மாற்றங்களுடன்

Read Full Post »

>‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.

ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.

இரண்டாயிரம் என்ன,
ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி
மேலும் சுமை ஏற்றத்
தயங்காதவர்கள் நாம்.

எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.

இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளவையார் காலத்திலேயே


‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’

நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.

ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?

அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?

தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.

‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?

அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!

 புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.

கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.

லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.


கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப்
பக்தி யோடு அள்ளியெடுக்கக்
கையை நீட்டினால்
அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.

லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.

சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.

அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.

சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.

வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.

மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி
ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.


பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.

அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.

கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.

புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.

மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.

கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.

ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.

அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.

பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.

தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.

படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.

பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.

முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.

பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.

இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.

உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி  6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள் 

பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக

  • தசைஇறுக்கம்
  • சினப்பு
  • தாய்ப்பாலை உறிஞ்ச முடியாமை
  • விழுங்கவும்  முடியாமை
  • தொட்டவுடன் தசைகள் இறுகி வலிப்பு போல ஏற்படல் எனப் பலவாகும்.

ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.

வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.

பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.

சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.


மனித மலத்தைக் கண்டாலே
மூக்கைப் பொத்தி
மறுபக்கம் திரும்பும் நாம்
மாட்டின் மலத்தைப் புனிதமாக,
பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத
‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.

கைப்புண்ணோடு
சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?

இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?

ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது
கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?

எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.

பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.

செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ
அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.

எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.

அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.

டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.
அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.
குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்

என்பது பலரின் அங்கலாய்ப்பு.

நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும்,
அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும்
கைகழுவியே
எமது கைகள் சுருங்கிவிட்டதும்
ஒருவர் கண்களிலும்படுவதில்லை.

  
மல்லிகை சஞ்சிகையில் நான் பல வருடங்களுக்கு முன் எழுதி 
டொக்டரின் டயறி நூலிலும் வெளியான கட்டுரை 
சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது.

Read Full Post »

> பார்த்து முடித்த நோயாளி வெளியேறுவதற்கிடையில், இடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள், இழுக்காத குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்.

“இருங்கோ” நான்.

அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில்,
“இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்” என்றாள் அந்தப் பெண்.

எனக்குக் கோபம் ஜிவ் வென்று மூக்கு நுனியில் ஏறியது.
நான் இன்னமும் நோயாளியோடு பேசவில்லை.
நோயாளியைப் பரிசோதிக்க வில்லை.
நோயை நிர்ணயிக்கவும் இல்லை.
அதற்கிடையில் என்ன வைத்தியம் செய்வது என்று இவள் எனக்குக் கட்டளையிடுகிறாள் என்ற தொழில் ரீதியான கோபம்.

ஆனால் முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. பதிலும் கூறவில்லை. நோயாளியை நிதானமாகக் கூர்ந்து அவதானித்தேன்.

வயது அறுபது இருக்கும். கறுத்து மெலிந்த தேகம். களைத்துச் சோர்ந்த உடல். சாதாரண நூற் சேலைதான். அதையுங்கூட ஒழுங்காகக் கட்டவேண்டும் என்று அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. தலைமுடியையும் ஏதோ இழுத்துக் அவசர கோலத்தில் முடித்துக் கொண்டது மாதிரி இருந்தது.

முகத்தைப் பார்த்தேன்.
பொட்டில்லை.
குழி விழுந்த கண்களில் ஆழ்ந்த சோகம்.
சுருக்கம் விழுந்த நெற்றி.
தனக்கும் தான் இங்கு வந்ததற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற விடுபட்ட போக்கு.

கூட்டிக்கொண்டு வந்த பெண் ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. அவளை முந்திக்கொண்டு அம்மாவுடன் கதைக்க ஆரம்பித்தேன்.

 பெயர், வயது போன்ற மாமூலான கேள்விகளுக்கு மெல்லிய தொனியில் பதில் சொன்னாள் அம்மா.

“அம்மா உங்களுக்கு என்ன சுகமில்லை?” என மிகுந்த பரிவோடு கேட்டேன்.

“எனக்கு ஒண்டுமில்லை”
நறுக்காக வெட்டியது போல வந்தது பதில்.

“உவ இப்பிடித்தான் சொல்லுவா.
சரியான பெலயீனப்பட்டுப் போய்க் கிடக்கிறா.
ஒழுங்கா சாப்பிடுறதுமில்லை.
சத்தாகக் குடிக்கிறதுமில்லை.
இப்பிடிக் கிடந்தால் இவவை நான் எப்படி வாற கிழமை லண்டனுக்குக் கூட்டிக்கொண்டு போறது?
அதுதான் ஒரு குளுக்கோஸ் ஏத்திவிட்டால், நான் ஒரு மாதிரிச் சமாளிச்சு இவவைக் கூட்டிக்கொண்டு போடுவன்.”

உண்மையில் அம்மா பெலவீனப்பட்டுத்தான் கிடந்தாள்.

அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, கட்டிலில் கிடத்தி, தாதிமார் உதவியுடன் குளுக்கோஸ் செலுத்த ஆரம்பித்தேன்.

மகளின் முகத்தில் திருப்தி.

“நான் ஓருக்கால் கடைக்குப் போக வேணும்.
குளுக்கோஸ் முடியிறத்துக்கிடையில வந்திடுவன்.
அவ்வளவுக்கும் பார்த்துக் கொள்ளுங்கோ”
அவள் வெளியேறினாள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் அம்மாவுடன் வெளிப்படையாகப் பேசவேண்டும்.
இனி அம்மாவை மனந்திறந்து பேசவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அவ பேசினால்தானே என்னால் நோயை நிர்ணயிக்க முடியும்.

“ஏனம்மா ஒழுங்காகச் சாப்பிடுறியள் இல்லை? உங்களுக்கு என்ன கஷ்டம்?” ஆதரவாகத் தோள்மூட்டில் தட்டியபடி கேட்டேன்.

“எனக்கு ஒண்டுமே பிடிக்குதில்லை”

“மகள் வந்து நிக்கிறா. உங்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு போகப் போகிறா. பிறகென்ன கவலை?”

அம்மாவின் கண்களில் நீர் முத்துக்கள். “எனக்கு லண்டனுக்குப் போக விருப்பமில்லை”

“ஏனம்மா?”

“நான் ஊருக்குப் போகவேணும். மகளிட்ட சொல்லுங்கோ ஐயா”
கண்ணீர் ஓடக்
கையெடுத்துக் கும்பிட முனைந்தாள்.

கையை ஆதரவோடு பற்றிக் கட்டிலில் மீண்டும் வைத்தேன். குளுக்கோஸ் ஏறுகிறது, கையை ஆட்டினால் ஊசி திரும்பிக் குத்தி கை வீங்கிவிடும்.

அம்மா இவ்வளவு காலமும் ஊரிலதான் இருந்தவவாம். கணவன் செத்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. ஆறு பிள்ளைகள். மூத்த மகள் மனிசனிட்ட கனடாவுக்குப் போறதற்காக ஒரு வருஷமா கொழும்பில நிக்கிறா.

 மிச்சம் ஐந்தும் கண்டத்துக்கு ஒண்டொண்டாய்ப் பரந்து கிடக்குதுகள். நடுத்தியாள் ஐந்து வருடங்களாக லண்டனிலை இருந்தாள்.
அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொழும்புக்கு வர இருந்ததால் அம்மாவையும் கொழும்புக்கு வரச் சொல்லி எழுதினாள்.

(இக் கட்டுரை எழுதிய 1996-2004 களில் யாழ் கொழும்பிற்கு நேரடிப் போக்கு வரத்துக் கிடையாது. இராணுவத்திடம் அனுமதி வாங்கி கப்பலில்தான் வர வேண்டும்.)

அவளை எதிர்பார்த்து அம்மா நாலு மாசமாகக் கொழும்பில மூத்தவளோட தவம் கிடக்கிறாள்.

அவளுக்கு கொழும்பே பிடிக்கவில்லை. லண்டன் வேண்டவே வேண்டாமாம்.

ஊரில எண்டால் எவ்வளவு நிம்மதி. பக்கத்தில மருதடிப் பிள்ளையார் கோயில். ஒவ்வொரு நாளும் காலையில போய்க் கும்பிட்டுட்டு வந்தால் தான் அம்மாவுக்கு நிம்மதியாயிருக்கும்.
காலாற நடக்கலாம்.
கடை தெருவுக்குத் தனியப் போகலாம்.
அக்கம் பக்கத்தில் சகோதரர்களும், இனசனங்களும் இருக்கினை.
மனமாறக் கதைக்கலாம்.
இஞ்சை என்ன கிடக்கு?

“அதோட சொந்த வீட்டில இருக்கிறது போல வருமே. நான் சாகிற தெண்டாலும் சொந்த வீட்டிலதான் சாக வேணும். இதுகள் லண்டனுக்கு வா வா எண்டு அழுங்குப் பிடியாய்ப் பிடிக்குதுகள். எனக்குப் போகக் கொஞ்சமும் விருப்பமில்லை. மகளுக்குக் கொஞ்சம் சொல்லுங்கோ ஐயா” என்றாள்.

மகளுக்கு எப்படி அம்மாவின் நிலையைப் புரிய வைப்பது? நாசூக் காக ஆரம்பித்தேன்.

“உங்கட அம்மாவுக்கு மனம் சோர்ந்துபோய்க் கிடக்கு.
அதாலதான் இப்படி வெறுத்துப் போய்க் கிடக்கிறா.
மருந்துகள் தாறன்.
ஒவ்வொரு நாளும் பொழுதுபட ஆறு மணிபோல ஒன்று கொடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிடுவா.
ஒரு கிழமையால திரும்ப கொண்டு வந்து காட்டுங்கோ”என்றேன்.

“அதுக்கிடையில் போடுவம் போல இருக்கு” என்றாள்.

“அங்கைதானே பிரச்சனை. அம்மாவுக்கு வெளிநாடு போறதில கொஞ்சம் கூட விருப்பமில்லைப் போல இருக்கு. அவவைக் கட்டாயம் கூட்டிக் கொண்டுதான் போக வேணுமோ?” என நான் மெதுவாகக் கேட்டேன்.

“என்ன டொக்டர் இப்பிடிச் சொல்லுறியள்!
எல்லாப் பிள்ளையளும் வெளிநாட்டில.
அக்காவோடைதான் இஞ்சை இருந்தவ.
அக்காவுக்கும் பிள்ளையளுக்கும் கனடாவுக்கு விசா கிடைச்சிடுத்து. அவையளும் பத்துப் பதினைஞ்சு நாளைக்குள்ள போயிடுவின.
பிறகு ஆர் இவவைப் பாக்கிறது?”

“அம்மாவுக்கு கொழும்பு வாழ்க்கையும் பிடிக்கவில்லையாம்.
தான் ஊருக்குத்தான் போகவேணும் எண்டு சொல்லுறா.
சில வயதானவை யளுக்கு புதிய சூழ்நிலைகளுக்கு அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்தானே.
அவவின்ர விருப்பப்படியே விடுங்கோவன்.
ஊரிர எண்டால் சகோதரம் இனசனம் எல்லாம் இருக்காம்.
தான் சந்தோஷமாக இருப்பாவாம். அதுகளும் இவவை அன்பாப் பாப்பினமாம்”என்றேன்.

அவள் முகம் சிவந்தது.
அவமானப்பட்டது போல வெகுண்டாள்.

“நல்ல கதை கதைக்கிறியள்.
இவவை ஊரில விட்டிட்டுப் போனால் ஊர் என்ன சொல்லும்.
எல்லாரும் வெளிநாட்டில சொகுசா இருந்து கொண்டு தாயைக் கைவிட்டிட்டினம் எண்டுதானே சொல்லுவினம்…
எங்களுக்குத்தானே வெக்கக்கேடு..”

“அப்பிடி ஏன் நினைக்கிறியள். அம்மாவின்ர சந்தோஷம் தானே பிள்ளையளுக்கு முக்கியம்”

“அம்மாவுக்கு இனி என்ன?
வயது போனவதானே.
என்னோட வந்து லண்டனில சொகுசாகப் பொம்மைபோல இருக்க வேண்டியதுதானே. ராணி மாதிரி இருக்கலாம்…”

‘ஆம் அரண்மனைக்குள் சிறைப்பட்ட ராணிதான்’ நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.

“..எங்களுக்கு எங்கட மானமும் மரியாதையும்தான் முக்கியம்.
அவ என்ன நினைச்சாலும் பரவாயில்லை”

கோபத்துடன் தாயை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அடுத்த வாரம் மருந்திற்கு அவர்கள் வரவில்லை. லண்டனுக்குப் போய்விட்டதாக எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.

மகளின் லண்டன் அப்பார்ட்மெண்ட் வரவேற்பறையில் சோகம் கவிழ்ந்த முகத்துடன் வயதான அலங்காரப் பொம்மை ஒன்று வீற்றிருக்கும்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான ‘டொக்டரின் டயறியிலிருந்து’ நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி  
 
நன்றி:-  மல்லிகை

Read Full Post »

>வெள்ளவத்தைக்குப் புதிதாக வந்த நாட்கள்.

ஒருநாள் மாலை காலி வீதியால் வந்து முடக்கில் திரும்புகிறேன்.

பேவ் மென்டால் இறங்கி வீதியில் வைத்த கால் தன்னையறியாமல் தயங்கிப் பின்வாங்குகிறது.


திட்டு திட்டாக இரத்தம்.

ஒரு கணம் பயந்து திடுக்கிட்டு விட்டேன்.

ஒரு கணம்தான்.

சாதாரண மனிதனின் பயம் அடங்க, வைத்திய மூளையும் கைகளும் துருதுருக்கின்றன.

இரத்தத்திற்குக் காரணமானவர் யார்?

எப்படிச் சிந்தியது?
முதலுதவி தேவைப்படுமா?
போன்ற கேள்விகள் சிந்தனையில் எழக் கண்கள் அலைபாய்கின்றன.

திடீரென இன்னும் சில இரத்தத் துளிகள் பீச்சியடித்துக் கொண்டு சற்றுத் தள்ளி விழுகின்றன.

ஆச்சரியம் அடங்குவதற்கிடையில் ஓரமாக நின்ற ஓட்டோவின் சாரதி வெளியே தலையை நீட்டி

“மாத்தயா டாக்ஸி ஓனத?” என்கிறார்.

சொதப்பிக் கொண்டிருந்த அவரின் கடைவாயிலிருந்து ‘இரத்தம்’ வழிகிறது. வாயெல்லாம் கூட ‘இரத்தம்’.

இலங்காபுரியின் இன ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து, வெளிப் படுத்துகிற ஒரே சாதனமாக இன்னும் திகழ்வது வெற்றிலை போடுதல்தான்.

சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என எல்லோரையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.

இன ஒற்றுமைக்காகக் கலப்புத் திருமணங்களை ஒரு காலத்தில் வற்புறுத்தியவர்களின் காதில் இது விழுந்துவிட்டால் நாடு முழுவதும் ‘இரத்தக்கறை’ தான் சிந்தப் போகிறது.

துப்புவதில்தான் எத்தனை வகைகள்.

அதிலும் வீதியில் துப்புவது என்பது அதி விசேடமான கலையாகும்.

அதனைத்தான் எத்தனைவகை களாக நாங்கள் பயிற்சிக்கின்றோம்.

கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதை காறியெடுத்து நுனி நாக்கிற்குக் கொண்டுவந்து ஆரவாரமாகத் துப்புவது ஒரு வகை.

துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொரு வகை.

அசிங்கத்தைப் பார்த்தும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டும் முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேட ரகம்.

ரஜனியின் சிகரட் ஸ்டைல் போல ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக்குள்ளால் நசுக் கிடாமல் துப்புவது மன்மத ரகம்.

பட்டப்படிப்பிற்கான ஒரு அலகாக எமது பல்கலைக்கழகத்தில் வைக்க ஏற்றது துப்பல்கலை என்று துணிந்து சொல்லலாம்.

பட்ட மேற்படிப்பிற்கான ஆய்விற்காக
‘தமிழர் வாழ்வில் துப்பல் சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஆய்வின் முதற் படி’
எனப் பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டலில்
இளம் பட்டதாரி பதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

நான் வழமையாகப் பிரயாணம் செய்யும் ஓட்டோவின் சாரதி துப்பும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.

வாகனம் நேர் பாதையில் ஓடும்போது
முதுகை வளைத்து
வாகனத்தின் இடது பக்கமாகத்
தலையை வெளியே நீட்டி,
வாயைக் குவித்து,
தான் துப்புவது காற்றில் சிதறி
பின்னே இருப்பவருக்குத் தெறித்துவிடாமல்
துப்பும் அழகே அழகு.

குனிந்து துப்பினாலும் வாகனம் கயிறு கட்டியது போல் நேர் பாதையில் சென்றுகொண்டே இருக்கும்.

இந்த அழகைக் கண்டுதான் அவரது மனைவி அவரைக் காதலித்தது, கலியாணம் செய்தது, பிள்ளை பெத்தது எல்லாம்.

எமது தேசம் புண்ணிய தேசம்.

அதனால் இந்தப் புண்ணிய பூமியில் நாங்கள் அகலக்கால் வைத்து அலட்சியமாக நடக்க முடியாது.

அச்சம், மடம், நாணம் நிறைந்த பெண்கள் போல நிலம் பார்த்துத்தான் நடக்க வேண்டியுள்ளது.

இன்று பெண்கள் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக நடக்க என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் குனிந்த தலையும் நிலம் பார்த்த பார்வையும் தலைவிதியாகிவிட்டது.

‘டொக்டருக்குக் கழுத்து உழுக்கிப் போட்டுது போல’.

‘நிமிர்ந்து பார்த்தால் வீதியில் வைத்தே இலவச கொன்சல்டேசன் கேட்டுவிடுவார்களோ என்ற கஞ்சத்தனம்’

‘அவருக்கு முகங்களிலை நாட்டம் இல்லை எதிரே வருகிற பெட்டைகளின் தொடைகளில்தான் நோட்டம்’

‘வயது போட்டுதில்லெ அக்கம் பக்கத்திலை நடக்கிற ஒன்றும் அந்தாளின்ரை மூளையிலை விழுகிறதில்லை’

இப்படி எத்தனை கொடுக்குக் கேள்விகளும் விமர்சனங்களும் என்ரை காதில் பட்டும் படாமலும் வீசப்படுகின்றன.

ஆனால் என்ரை கவலை எனக்கு! வீதிகளெங்கும் துப்பல்கள் விதைத்திருக்க நிலம் பார்க்காமல் கால் வைக்க முடியுதே?

ஏன் சப்பாத்துப் போடுறதில்லையோ என நீங்கள் அடிக்கிற நக்கலும் காதில் விழுகிறது.

சப்பாத்தைக் கழுவிப்போட்டே வீட்டுக்குள்ளையும் டிஸ்பென்சரிக்குள்ளையும் கால் வைக்க முடியும்.

ஊரிலை உள்ளவன்ரை எச்சில் எல்லாம்,
துவண்டு திரிகிற பிள்ளைகளின்ரை கையிலை பட்டும்,
மற்றவர்களை முட்டியும்
கண்ட கண்ட நோயெல்லாம் தொற்றி விடுமே என்ற
மருத்துவனின் ஆதங்கம் எனக்கு.

ஒருநாள் வைத்தியசாலைக்குப் பொடிநடையில் போய்க் கொண்டிருக்கிறேன். உயர்ந்து நிற்கும் ஹோட்டலுக்கு முன்னே கட்டெறும்பு போல நகர்ந்து கொண்டிருக்கும் எனது தலைiயில் ‘டொச்’ என எதுவோ விழுகிறது.

மழைத்துளியாக இருக்குமா என நிமிர்ந்து பார்த்தேன்.

மொட்டைமாடியில் நின்ற தலையொன்று பக்கென உள்ளிழுத்தது.
வீதியில் உமிழும் அவருக்கு அன்று
எனது தலை கிடைத்த சந்தோஷத்தை அடக்க முடிய வில்லை.
என்ன செய்வது?

நல்லவேளை மொட்டைத்தலை என்பதால் தப்பித்தேன்.

பிரச்சனையின்றி தலையை
ஈரத் துணியால் ‘மொப்’ பண்ணிவிட்டு
வேலையைத் தொடரலாம்.

தலை நிறைய முடியெனில் வீடு திரும்பி முழுகிவிட்டல்லவா வேலைக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

‘வீதியெங்கும் துப்பல் செய்யும்’ எம் பாரம்பரியம் வாழ்க!

எம்.கே.முருகானந்தன்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான ‘டொக்டரின் டயறியிலிருந்து’ நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »

>உங்களுக்குத் தெரியாததல்ல. டாக்டர்கள் பல வகைப்பட்டவர்கள்!

வள்!என்று கடிக்காத குறையாக நாய் போல பாயுற டாக்குத்தர்.


சுள்! என்று மூக்கு நுனியில் கோபத்தைத் தூக்கித் திரியிற டாக்குத்தர்.

பயந்தாங்கொள்ளி டாக்குத்தர் – தானும் பயந்து நோயாளியையும் வெருட்டி விடுகிறவர்.

தெளிவான முடிவிற்கு வராதாது தானும் குழம்பி நோயாளிகளையும் குழப்பியடிக்கும் மருத்துவர்.

காசைக் காட்டினால் காரியத்தை முடிக்கிற ‘கைலஞ்ச டாக்குத்தர்’

கறைபடாத கைகொண்ட ‘சுத்தமான டாக்குத்தர்’

கைபட்டாலே நோய் மாறுகிற ‘கைராசிக்காரர் டாக்குத்தர்’.
“உனக்கு ஒண்டும் தெரியாது நான் சொல்லிறதுதான் சரி” என அடம் பிடிக்கும் டாக்குத்தர்.

‘தலைக்கனம் பிடிச்ச டாக்குத்தர்’

ஆறுதலாய்க் கதைச்சு மருந்துதாற ‘குணமான டாக்குத்தர்’

இவ்வாறு மக்களே டாக்டர்களைப் பல வகைகளாகக் கணித்துப், பகுத்து வைத்திருக்கிறார்கள்.


ஆயினும் ஒரு உதாரண குணமுள்ள டாக்டர் என்பவர் இப்பிடித்தான் இருப்பார் என்றோ, அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ, ஒரு கற்பனை உருவகம் அவர்கள் மனதில் பதிந்து இருக்கும்.

நரைத்த தலையும், எடுப்பான மூக்குக் கண்ணாடியும், புஸ்டியான உடம்பும், தூய வெண்மையான மடிப்புக் கலையாத மேல்நாட்டு உடை யும், கழுத்தில் ஸ்ரெதஸ் கோப்பும், அமைதியும் கருணையும் சாந்தமும் நிரம்பிய முகமும், மெதுமையான குரலும், பண்பாக உரையாடும்


தன் மையுமாக நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாழ்ந்து காட்டியது போன்ற ஒரு உருவமே பெரும்பான்மையான மக்களின் கற்பனை டாக்டர் உருவமாக இருக்கிறது.

ஆனால் திரைப்படங்களிலும். பழையகால நாவல்களிலும் வரும் இலட்சிய கதாநாயகர்கள்போல் அவர்கள் இருக்க முடியாது.

நல்லதும் கெட்டதும் கலந்த சாதாரண மனிதர்களாகத்தான் அவர்கள் இருக்க முடியும்.

ஆயினும் நோயாலும், பிணியாலும் வேதனையாலும் துடித்துக் கொண்டு, அதைத் தீர்த்து வைப்பவர் என்ற நம்பிக்கையில் ஓடிவரும் நோயாளிகளுடன் பிழங்குவதால் அவர்களது மனங்கோணாதவாறு அமைதியாக ஆத்திரப்படாமல் அவர்களது நோயைப்பற்றிக் கேட்டறிந்து கருணையுடன் அவர்களது பிரச்சனையை அணுகி வைத்தியம் செய்வது அவசியம்.


என்றாலும் எடுத்ததற்கெல்லாம் ஆத்திரப்படாமல் அமைதியாக இருப்பது எல்லோருக்குமே இயற்கையில் அமையக்கூடிய குணாம்சம் அல்ல.

என்னுடைய இனிய நண்பன் ஒருவன் இருந்தான். பாடசாலைப் பருவம் முதல் மருத்துவக் கல்லூரிவரை என்னுடன் கூடப் படித்தவன். சிறுவயதிலேயே பெரிய முன்கோபி, சிறு சிறு விஷயங்களுக்குக் கூட தேவையில்லாமல் ஆத்திரப்பட்டுப் பெரிய குரலில் சத்தமிட்டுச் சண்டை பிடிப்பான்.

“கொதி தண்ணிக்குள்ளை காலை வைச்சவன்போலை துள்ளி விழுவான்”
என்று அவனது தாயே அவனைப்பற்றி அடிக்கடி குறை கூறுவாள்.

அண்மையில் அவனைச் சந்தித்தபோது அதிசயித்தேன்!

மிக அமைதியாக, ஆறுதலாகப் பொறுமையுடன் நோயாளிகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.


“போனமுறை, உங்களிட்டைக் காட்டி மருந்துதெடுத்தும் காய்ச்சல் விடயில்லை: பிறகு Dr… காட்டித்தான் சுகம் வந்தது.
இந்த முறை யெண்டாலும் வடிவாகச் சோதித்துப் பார்த்து மருந்து தாருங்கோ. என்னை அலைக்கழிய விடக்கூடாது”

என்று நோயாளி எரிச்சலடைந்த குரலில் முகத்தில் ஓங்கி அடிப்பது போல குற்றம் சாட்டினார்.

அவன் கோபப்படவில்லை! தனது தொழிற் திறமையைத் தன் எதிரிலேயே, எள்ளிநகையாடுவது போல் குறையாகப் பேசிய போதும் எரிச்சலடையாமல் அமைதியாக நோயாளியைப் பரிசோதிப்பதையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருந்தது.

“அப்பிடியே, கவலைப்படாதையுங்கோ, இப்ப நான் கவனமாகப் பார்த்து நல்ல மருந்தாகத்தாறன். ரண்டு நாளிலை நல்ல சுகமாகிப் போடும்”

என்று தைரியம் ஊட்டி, புன்னகையுடன் பதிலளித்தான்.

பிறகு ஒரு நாள் அவனது வீட்டுக்குப் போயிருந்தேன்.

அவனது மனைவியின் ஓங்கி ஒலித்து குற்றக் கூட்டினுள் நிறுத்தியது அவனை.

“இவருக்கு விடிஞ்சால் பொழுது பட்டால் டிஸ்பென்சரியும்,
நோயாளிகளும் தான் சிந்தனை.
அங்கை சிரிச்சுக் கதைச்சுக் கொண்டி ருப்பார்.
இஞ்சை எங்கடை அலுவல் ஒண்டும் கவனிக்கிறதில்லை.
நான் கேட்டாலும் எரிச்சலம் கோபமும் தான் அவருக்கு வரும்.
கொஞ்சம் அவருக்குப் புத்தி சொல்லுங்கோ” என்று பரிதாபமாகக் கேட்டாள்.

அவள் பரவாயில்லை.

டைவோர்ஸ் கேட்கவில்லை. பிரிந்தவர்கள் ஏராளம்.

நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

டாக்டர் தொழிலுக்காக, தனது தொழிலின் மேன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக, தனது இயல்பான குணஇயல்புகளைக் கூட முயற்சியாலும், பயிற்சியாலும் மாற்றியிருந்த அவனுக்கு, தான் அடக்கி வைத்திருந்த உணர்வுகளைச் சுதந்திரமாக வெளியிட்டு உணர்வு அமுக்கத்திலிருந்து தப்பிக்க ஒரு இடம் வேண்டியிருந்தது.

குடும்பம் வெந்து வேகியது.

பரிதாபத்துக்கு உரிய ஒரு குடும்பம்!

அவர் ஒரு சரியான மருத்துவர்தானா?


எந்தச் சூழலிலும் நிலை குலையாது தெளிவான சிந்தனையுள்ளவன்தான் நல்ல மருத்துவனாக முடியும்.

ஆனால் இன்றைய சூழலில் அப்படி ஒருவர் இருப்பது சாத்தியம்தானா?

Read Full Post »

>எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த
இன்னுமொரு அரிய பழக்கத்தையும்
இங்கு ஞாபகப்படுத்தலாம்.
அது இளகிய மனம் பற்றியதும்கூட.

நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல.

விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை.

அதுவும் எமது வீட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் வீதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?

கதியால்கள் நீரின்றி வாடியும்
போஷாக்கின்றி வெளிறியும்
கிடப்பதைக் கண்டால்
எம் மனது தாங்கவே தாங்காது.


உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம்.
இதற்காக நாலு பேர் பார்க்கும் வீதியில் நின்று
கோவணத்தைக் கழற்றக்கூட
நாங்கள் தயங்குவதில்லை.

இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய்களும்தான்.

லைட் போஸ்டைக் கண்டதும் அவை மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாயிருந்தாலும் எங்களை நவீன காலத் திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.

கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள்.


இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்.

இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு.

சிலவேளை அவர்களும் எங்களோடு சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.

மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த வீட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.


தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அதன் அம்மம்மா தூக்கிக் கொண்டு வந்திருந்தா.

கூட குழந்தையின் அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றில் குழந்தையின் பொருட்கள் நிறைத்திருந்தன. அவசரத் தேவைக்கானதாம்.

பாவம்! தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.

நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!

குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.

நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.

திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது” என மனம் நிறைந்து முறுவலித்தாள்.


நல்லகாலம் ‘சந்தனமும்’ சேர்த்துத் தரவில்லை.

தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.

இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.

கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆணா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.

நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற்பாடு.

குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.

தீர்த்தம் வந்தால் கூட கொண்டு வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!

பல ஆண்டுகளுக்கு முன் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »

Older Posts »