Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தடுப்பு மருந்துகள்.’ Category

>
தொலைக்காட்சியில் விவாத அரங்கு நடந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதில் ஒருவர் கூறிய கருத்தைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது.

அவர் கூறியதன் சாராம்சம் இதுதான். ‘தடுப்பு ஊசிகள், மருந்துகள் போடக் கூடாது. அவை ஆபத்தானவை. போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிள்ளை நோய்க்கு ஆளாகியிருக்கிறது’.

எத்தகைய அபத்தமான. மூடத்தனமான தவறாக வழிநடத்தும் கருத்து அது!

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லி அடங்க முடியாதது.

போலியோ எத்தகைய ஆபத்தான நோய் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரியாதிருக்கலாம். ஏனெனில் இன்று இலங்கையில் போலியோ காணவும் கிடைக்காத நோய். நான் மருத்துவத் தொழிலை ஆரம்பித்த காலத்தில் எத்தனை குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் வழங்காது போனதைப் பார்த்திருக்கிறேன்.


உலகளாவிய ரீதியில் போலியோ நோயை ஒழிக்கும் சொட்டு மருந்து கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1988 களிலிருந்து இன்றுவரை குறைந்தது ஐந்து மில்லியன் பேர் அங்கச் செயலிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா, ஆப்கனிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகள் தவிர பல நாடுகளிலிருந்து இந்நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து போலியோ நோய் பரவும் கூடும் என்பதாலேயே தொடர்ந்தும் இலங்கையில் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

தடுப்பு மருந்து கொடுத்தல் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதால் மிகவிரைவில் உலகிலிருந்தே போலியோ ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இன்று (10.01.2010) இந்தியா எங்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் தினமாகும். இலட்சக் கணக்கான பிள்ளைகள் எதிர்காலத்தில் ஊனமின்றி சுகதேகிகளாக வாழ வகிக்க இது உதவும். இத்தகைய திட்டங்கள் எதிர்கால மனித சமுதாயத்தையே ஆரோக்கியமான திசையில் பயணிக்க வழிவகுக்கும் என நம்பலாம். அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும்.

மற்றொரு உதாரணம் பெரியம்மை ஆகும். நோயுற்றவர்களில் குறைந்தது நாலுபேருக்கு ஒருவரை கொன்றொழித்த மிக ஆபத்தான நோயாகும் அது. ஆனால் உலகிலிருந்தே முற்றாக ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களாகப் போகிறது. காரணம் தடுப்பூசிதான்.


சின்னமுத்து நோயினால் குழந்தைகள் மிகுந்த துன்பமுறுவதையும் மரணிப்தையும் நாங்கள் இப்பொழுது காண்பதேயில்லை. உலகளாவிய ரீதியில் சின்னமுத்து நோயினால் குழந்தைகள் இறப்பது 40 சதவிகிதத்தினால் குறைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இலங்கையில் குழந்தைகளுக்கு பல தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதை அறிவீர்கள்.


கசம், ஏற்பு, தொண்டைக்கரப்பன், குக்கல், போலியோ, சின்னமுத்து, ஜேர்மன் சின்னமுத்து, கூகைக்கட்டு(Munmps), ஹெப்பரைரிஸ் பீ ஆகியவற்றிற்கான தடுப்பு மருந்துகள் இலவசமாக அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.


கொப்பளிப்பான், ஜப்பானிய மூளைக்காச்சல், ஹீமோபிலஸ் மூளைக்காச்சல், றொட்ரோ வைரஸ்(பாலகர்களின் வயிற்றோட்ட நோய்), றேபீஸ் (நீர் வெறுப்புநோய்)போன்றவையும் கிடைக்கின்றன.

மக்கள் நோயுற்ற பின் சிகிச்சை செய்வதைவிட நோயுறுவதைத் தடுப்பது மேல் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.


தடுப்பு மருந்துகள் காரணமாக அந் நோய்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உடலில் பெருகுகிறது. இதனால் நோயுறுவதால் ஏற்படும் உபாதைகள், அங்கச் செயலிழப்பு, மரணங்கள் தடுக்கப்படுகிறது. இது மிகப் பெரிய நன்மை அல்லவா?

இவற்றை உணராது தடுப்பு மருந்துகள் வேணுமா வேண்டாமா என விவாதம் நடத்திக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானது? இது பலரையும் தவறான வழியில் இட்டுச் செல்லக் கூடும்.

இருந்தபோதும் இவை முற்றிலும் பாதுகாப்பானவைதானா என சிலர் கேள்வி எழுப்பக் கூடும்.
நிச்சயமாக இல்லை.

எந்தத் தடுப்பு மருந்தும் நூற்றுக்கு நூறு பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அவை முழுமையான பலன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குறுகிய கால இடைவெளியில் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவைகள் மேலதிகமாக (Booster doses) கொடுக்கப்படுகின்றன.


பக்கவிளைவுகள் இருக்காதா என்பது மற்றொரு கேள்வியாக இருக்கும். பக்கவிளைவுகள் இருக்காது.
இருந்தாலும் பெரும்பாலும் பாரதூரமானவையாக இருக்காது.
ஊசி போட்ட இடத்தில் வலி, மெல்லிய காச்சல், பசியின்மை போன்ற பக்கவிளைவுகளே ஏற்படுவதுண்டு.

நோயின் பாராதூரமான தன்மையோடு ஒப்பிடுகையில் இவை கவனத்தில் எடுக்க வேண்டியவை அல்ல.

கடுமையான பக்கவிளைவுகள் மிகமிக அரிதாகவே ஏற்படுவதுண்டு.

உதாரணமாக ஒரு இலட்சம் பேருக்கு சின்னமுத்து தடுப்பூசி போட்டால் அதில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

ஒரு மில்லியன் பேருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் அதில் இருவருக்கு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே வீண் விவாதங்களில் ஈடுபட்டு எம்மையும், குழந்தைகளையும் நோயின் வாய்க்குள் இட்டுச் செல்ல அனுமதிக்காது தடுப்பு மருந்துகளை உரிய வேளைகளில் ஒழுங்காகப் போட வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »