Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தடுப்பு முறை’ Category

கேள்வி:- நான் கணனியில்  அதிக நேரம் வேலை செய்வதால் கண்ணில் கருவளையம் வருகிறது.

அதற்கான தீர்வு என்ன  ?

எஸ்நிவேதா கிளிநொச்சி

 பதில்:- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கணனியில் அதிக நேரம் வேலை செய்வதால் வருகிறது என்கிறீர்கள். எனவே வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதே தீர்வு எனலாம். கணனியில் வேலை செய்வதால் மட்டுமல்ல எந்தவிதமான அதீத வேலையும் மனஅழுத்தமும் கண்ணின் கருவளையங்கள் ஏற்படுவதைத் தீவிரமாக்கும்.

மாறாக போதிய ஓய்வும் பொதுவான நல்ஆரோக்கியமும் அது ஏற்படுதைக் குறைக்கும் என்பது முக்கிய உண்மையாகும்.

உங்களுக்கு மாத்திரமல்ல பலருக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதை நாம் காண முடிகிறது. உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. இள வயது முதல் முதுமை வரை பலருக்கு இருக்கிறது

உண்மையைச் சொல்லப் போனால் கண்ணருகே தோன்றும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய முற்று முடிவான விஞ்ஞானபூர்வ முடிவுகள் கிடையாது. ஆயினும் இது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது.

பரம்பரை அம்சம் ஒரு முக்கிய காரணமாகும். ஒரே கும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இது ஏற்படுவதைக் காண முடிகிறது.

அத்தகையவர்களுக்கு இளவயதிலேயே இது தோன்றக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிப்பதுண்டு.
ஒவ்வாமைகள் மற்றும் எக்ஸிமா நோய்களின் தொடர்ச்சியாகவும் இது வருவதுண்டு.
கண்களைச் சுற்றி ஏதாவது காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் அதைத் தொடரந்து கருமை ஏற்படலாம். கண்டல், சிறுநீரக நோய், ஒவ்வாமை வீக்கம் போன்றவற்றை கூறிப்பிடலாம்.
வயதாகும் போது சருமம் தனது நெகிழ்ச்சிதன்மையை இழந்து சுருங்குவதாலும் கருவளையும் போலத் தோற்றமளிக்கும்.
புருவங்களுக்கு கீழே மூக்கு அருகே இருக்கும் கண்ணீர் பை வயதின் காரணமாக சுருங்கும் போதும் கண்ணருகே கருமை தோன்றுவதுண்டு.
இவ்வாறு கண்ணைச் சுற்றிய கருமை ஏற்படுவற்கு பல காரணங்கள் இருப்பதால் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்வதே பொருத்தமானது.
குளுக்கோமா (கண் பிரசர்) நோய்க்கு பயன்படுத்தும் சில துளிமருந்துகளும் அவ்வாறு கருமை படர்வதற்கு காரணமாகும். அத்தகைய கண் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்து சுமார் 2-3 மாதங்களுக்கு பின்னரே கருமை படர ஆரம்பிக்கும். ஆனால் அதை உபயோகிப்பதை நிறுத்தினால் ஒரு சில மாதங்களுக்குள் சருமம் இழல்பான நிறத்திற்கு வந்துவிடும்.
கருமை படர்ந்த சருமத்தின் நிறத்தை குறைப்பதற்கு பல வகையான களிம்பு மருந்துகள் உள்ளன.  Hydroquinone, Azelaic acid  போன்றவை இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றை பூசும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவரின் கண்காணிப்பின் கீழேயே உபயோகிக்க வேண்டும்.
அல்ரா லைட் பாதுகாப்புள்ள கண்ணாடிகளை உபயோகிப்பது உதவும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

“சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே”. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.

“தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.” என்றார் மற்றொருவர்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது. அப்படியானால் தடுப்பது எப்படி?

  • போஸாக்குள்ள உணவாக உட்கொள்ளல். ஆனால் இது சீனியைத் தவிர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
  • தினசரி உடற்பயிற்சி செய்தல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல்.
  • உடல் எடையை சரியான அளவில் பேணுதல்.

diabetes_prevention_email1

 

எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.

போசாக்கு உணவு

போசாக்குள்ள உணவு என்பது என்ன? இனிப்பு, எண்ணெய், நொறுக்குத் தீனி போன்றவற்றை மிகக் குறைவாக உண்ணல். மாப்பொருள் உணவை அளவோடு உண்ணல், புரத உணவுகளை தேவையான அளவில் உண்ணல், காய்கறி மற்றும் பழவகைகளை அதிகம் உண்ணல் எனச் சொல்லலாம்.

c2145cc1470dee71884889094b26a6e7

 

தினமும் ஒவ்வொரு பங்கும் 80 கிராம் நிறையுள்ளதாக 5 பங்கு அளவில் காய்கறிகளையும் பழவகைகளையும் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தாகும்.

எத்தகைய காய்கறி உணவுகள் நீரிழிவு வராமல் தடுக்க உதவும் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.

மாப்பொருள் குறைந்த அளவுள்ள காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகளில் மாப்பொருள் உள்ளதாயினும் அவற்றில் நார்பொருளும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அளவோடு உண்பதில் தவறில்லை. ஏனைய காய்களிகளில் மாப்பொருள் குறைவாகவும், நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளதால் நல்லது.

இலைவகைகள் மேலும் சிறந்தவை என்கிறார்கள்.

நீரிழிவைத் தடுக்கும்

பச்சை நிறமான இலைவகைகள் அதிகளவு உட்கொள்ளும் உணவு முறையானது நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என University of Leicester  யைச் சார்ந்த Patrice Carter தலைமையிலான ஒரு ஆய்வு கூறியது. ஆறு ஆய்வுகளின் முடிவுகளை மீள்பரிசோதனை செய்த போது இது தெரிய வந்ததாம்.

ஏனைய காய்கறிகள் உண்பவர்களை விட அதிகளவு பச்சை நிறமான இலைவகைகளை உண்பவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 14 சதவிகிதம் குறைவு அது கூறியது. இது 13 வருடங்களாக 223,000 பேரிடையே செய்த அவதானிப்பின் முடிவு.

ஆனால் ஏனைய வகை காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உண்பவர்களிடேயே இந்தச் நீரிழிவுக்கு எதிரான சாதகமான பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.

green-leafy-vegetables

இதன் அர்த்தம் ஏனைய வகை காய்கறிகள் பழங்கள் பயனற்றவை என்பது அல்ல. ஏனைய பல ஆராச்சி முடிவுகள் எல்லாப் பழவகைகளும், காய்கறிகளும் நீரிழிவைத் தடுப்பதில் பங்களிப்பதுடன், இருதயநோய்களுக்கான சாத்தியத்தையும் குறைப்பதாகக் கூறுகின்றன. ஆயினும் இலைவகை உணவுகளின் பங்களிப்பு அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.

இலைவகை உணவுகளின் நற்பயனுக்குக் காரணம் என்ன?

ஒட்சிசனெதிரிகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விட்டமின் சீ போன்ற ஒட்சிசனெதிரிகள் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் தாராளமாக இருப்பதே காரணம் எனலாம்.

பசிய இலை வகை உணவுகளின் போசாக்கு

DSC05663-001

  • இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கினறன.
  • இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.
  • விட்டமின் D வகைகளுடன், விட்டமின்கள் K, C, E  ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விட்டமின்கள் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.
  • பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin)  போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients)     இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.
  • கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.

விற்றமின் கே யின் நன்மைகள்

பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம் என்றோம். அதன் பலாபலனகள்; என்ன?

  • குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும். மருத்தவ ரீதியாக இதைத் தடுப்பதற்கே குறைந்த அளவு அஸ்பிரின் (75-100mg) மற்றும் குளபிடோகிரில் போன்ற மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொடுக்கிறார்கள். தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
  • விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும்  பாதுகாப்பு கிடைக்கும்.
  • நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
  • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
  • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.

எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

அடுத்த நோயாளியைக் காணவில்லை. சரியான வேலை நேரம். எல்லோருக்குமே நேரம் முக்கியம் என்பதால் ஒருவர் பரிசோதனை அறையை விட்டு வெளியேறியதும் அடுத்தவர் நுழைந்து விடுவார். காலத்தை வீணாக்க மாட்டார்கள். இப்ப ஏன் தாமதமாகிறது?

‘மொபைலில் பேசுவதால் காலதாமதம் ஆகிறதோ. அல்லது நடை தளர்ந்த முதிர்ந்த நோயாளியோ’ எனச் சிந்திக்கும்போதே வாசலில் அரவம் கேட்டது. வந்தவர் இளம் நோயாளி. நடக்க முடியாத முதுமை அல்ல. பார்த்த உடனேயே அவரது பிரச்சனை புரிய ‘என்ன நடந்தது’ எனக் கேட்டேன்.

‘காலமை வெள்ளனக் குளிகும்போது காலுக்கு சோப் போடக் குனிஞ்சனான். நிமிரவே பாடாப் போச்சு. பிடிச்சுப் போட்டுது’ என்றார். ஆம் இடுப்பு வலி. நாரிப்பிடிப்பு என்றும் சொல்லுவார்கள். குளிர் நேரம் குனிந்தபோது இசகுபிசகாகப் பிடித்து விட்டது

7b4057be83baea6f1e707bd6c9ea7fda

இடுப்பு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முண்நாண் எலும்பு தேய்ந்ததால் இருக்கலாம், முண்நாண் எலும்புகளுக்கிடையே நரம்புகள் அழுத்தப்படுவதால் இருக்கலாம். அல்லது தசைப் பிடிப்பாகவும் இருக்கலாம். இங்கு நான் காரணங்களை அலசப் போவதில்லை.

இதைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

வாழ்க்கை நடைமுறைகள்

தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்குங்கள். அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள்.

மனித வாழ்வானது நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதற்கானது அல்ல. இன்றைய தொழில்கள் பலவும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டவை. விமானம் கார் பஸ் போன்றவற்றில் பிரயாணம் செய்யும் போதும் நீண்ட நேரம் உட்கார நேர்கிறது. இவற்றால் இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம்.

எனவே வேலை தொழில்கள் செய்யும் போதும் பிரயாணம் பண்ணும் போதும்  மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம்.

உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசு உட்காரல் வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 பாகையில் வைத்தும் உட்காருவதும் கூடாது.

தற்கால நல்ல நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. 15 பாகை பிற்புறமாகச் சரிந்திருப்பதை படத்தில் காணலாம். அதில் முதுகுப் புறமும் குண்டிப் பகுதியிம் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள்

இருக்கையின் உயரமும் முக்கியமானது.

உயரம் குறைந்து கதிரைகள் ஆகாது. உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள கதிரைகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்

உட்காரும் போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு கழுத்து இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம்.

நிற்கும் போதும் இது முக்கியமானது. உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி மாற்றி நிற்பது அவசியம்.

தச்சு வேலை, அச்சக வேலை, உடுப்பு அயன் பண்ணுவது, சமையல் செய்வது போன்ற நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் பாதகத்தை ஏற்படுத்தும்.

படங்களில் காட்டிய முறைகளைப் பாருங்கள்.

அவ்வாறன தருணங்களில் ஒரு காலை 6 அங்குலம் முதல் ஒரு அடி வரையான உயரமுள்ள ஒரு சிறிய ஸ்டுல் அல்லது பலகை மேல் உயர்த்தி வைப்பது அவசியம். இது முள்ளந் தண்டின் வளைவை இயல்பாக்கி, அதன் வேலைப் பளுவைக் குறைத்து இடுப்பு வலி ஏற்படாது தடுக்கும்.

முன்புறம் வளைந்து நின்று செய்யும் வேலைகளும் வலியை ஏற்படுத்தலாம். எனவே அதைத் தவிர்த்து முதுகை சற்றே நிமிர்த்தி நின்று செய்யவும்.

பல தருணங்களில் நாம் எமது முதுகை வளைத்து குனிய வேண்டிய அவசியம் நேர்கிறது. ஆரம்பித்தில் சொன்னவர் குளிககும்;போது காலுக்கு சோப் போட முயன்றபோது பிடித்தது. அதே போல குழந்தையைத் தூக்கும்போது, கீழே விழுந்த பென்னசில் பேனை கத்தி போன்ற பொருட்களை எடுக்க முயலும்போதும் பிடிப்பு ஏற்படலாம். இவ்வாறான பல தருணங்கள் நாளாந்தம் ஏற்படவே செய்யும்.

அதே போல பாரமான பொருட்களைத் தூக்க முயலும் போது இடுப்பு பிடிப்பது மிக மிக அதிகம்.

இவ்வாறான வேலைகளின் போது கால்களை சற்று அகட்டி வையுங்கள். முதுகை வளைக்காது, முழங்கால்களை மடித்து கீழே இருப்பதுபோல உங்கள் உடலைப் பதித்து ஆறுதலாகவும் மெதுவாகவும் படத்தில் காட்டியவாறு பொருட்களைத் தூக்கினால் வலி ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.

முடியுமானால் இரண்டு பேர் சேர்ந்து பாரமான பொருட்களைத் தூக்குவது மேலும் உசிதமானது.

தூக்கும்போது பொருளை உங்கள் உடலுக்கு அருகாக வைத்துத் தூக்க வேண்டும். கைகளை நீட்டியபடி உங்கள் உடலுக்கு தூரத்தில் அப் பொருள் இருந்தால் முதுகு எலும்பிற்கு பாதிப்பு ஏற்படும். தூக்கும் பொருளின் அழுத்தம் முதுகு எலும்பில் தாங்காது உங்கள் வயிற்றறைத் தசைநார்களில் பொறுக்குமாறு தூக்குவதும் நல்லது.

அலமாரி, சோபா, போன்ற பாரமான பொருட்களை அசைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை இழுப்பதற்குப் பதிலாகத் தள்ளுவது நல்லது

பயிற்சிகள்

உங்கள் உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். நீந்துவது நடப்பது ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையும் ஆக்கும்.

படங்களில் காட்டியுள்ள பயிற்சிகள் இதற்கு உதவும். 

முதலாவது பயிற்சி படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். 

பத்துத் தடவைகள் செய்யலாம்.

முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். முகங் குப்புறப் படுங்கள். கைகளை  படத்தில் காட்டியபடி வைத்து உந்தி உங்கள் முதுகுப் புறத்தை பிற்புறமாக வளையுங்கள். 5-10 தடவைகள் செய்யுங்கள்.

கால்களைச் சற்று அகட்டி வையுங்கள்.

படத்தில் காட்டியபடி தோள்பட்டையை வலது புறமாகச் சரியுங்கள். மீண்டும் அதே மாதரி இடது புறம் சரியுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள்.

வேறு ஆலோசனைகள்

இவற்றதை; தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம். உளநெருக்கீடு, மனச் சஞசலம், பதகளிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகள் தனைகளை இறுகச் செய்யும் ஆதலால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பவராயின் அதைத் தவிருங்கள். புகைத்தல் குருதி ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். புகைப்பவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வருவதற்குக் காரணம் அதுதான். அதேபோல தசை நார்களுக்கான குருதி ஓட்டத்தையும் குறைக்கும் என்பதால் அவற்றிலும் பாதிப்பு ஏற்படும்.

படுக்கை கட்டில் மெத்தை போன்றவை வளைந்து தொய்யாததாக இருப்பது அவசியம். தொய்ந்த  ஸ்பிரிங் கட்டில்கள் கூடாது. நிமிர்ந்து படுப்பராயின் முழங்கால்களுக்கு கீழ் தலையணை ஒன்றை வைப்பது உதவலாம். சரிந்து படுப்பராயின் முழங்கால்களுக்கு இடையில் வைக்கலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (21.04.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மூட்டு வலிகளால் தொல்லையா

வலிகள் என்றுமே துயர் தருவன. விரல்கள், முழங்கால், கழுத்து, இடும்பு, தோள் மூட்டு என எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளனவோ அங்கெல்லாம் வலி வரலாம். சிலர் ஓரிரு மூட்டு வலிகளுடன் தப்பிவிடுவர்.

எவ்வாறாயினும் நீங்கள் அவற்றில் அக்கறை எடுத்து பராமரித்து வருவதன் மூலம்

  • உங்கள் வேதனைகளைத் தணிக்க முடியும்.
  • அவற்றின் செயலாற்றும் திறன் குன்றாமல் தடுக்கவும் முடியும்.
  • அத்துடன் உங்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். செலவைக் குறைப்பது என்பது நீங்களாக மருந்தை நிறுத்துவது என அர்த்தம் அல்ல. மருத்துவ ஆலோசனையுடன் சில மருந்துகளின் அளவைக் குறைக்கவோ மாற்றவோ முடியும் என்பதேயாகும்.

தினமும் ஏதாவது உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சி செய்வதன் மூலம் மூட்டுகளின் செயற்பாட்டை குறையவிடாமல் தடுங்கள். தினமும் 30 நிமிடங்கள் செய்வது நல்லது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் இயலாததாயின் 10 நிமிடங்கள் செய்யுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள்.

உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்றதாக அளவாக வைத்திருங்கள். உடலுக்கு ஏற்ற எடையை, உடற் திணிவுக் குறியீடு (Body mass Index – BMI)  என்பதாக கணக்கிடுவர். இது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரையோ இணையத்தையோ நாடுங்கள்.

அதீத உடை மற்றும் உடற் திணிவுக் குறியீடு பற்றி மேலும் வாசிக்க  பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

எடை அதிகமாக இருந்தால் அது மூட்டுகளுக்கான வேலைப் பழுவை அதிகரித்து அவற்றை மேலும் சேதமாக்கும். எடைக் குறைப்பிற்கு ஏற்றதாக கொழுப்பு இனிப்பு மாப்பொருள் குறைந்த போசாக்கான உணவு முறையைக் கடைப்பிடியு;கள். உடற் பயிற்சி மூலமும் குறைக்க நடவடிக்கை எடுங்கள்.

உங்களது தொழில் அல்லது நீங்கள் செய்யும் உடற் பயிற்சியானது ஓரு சில மூட்டுகளுக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக இருந்தால் அதற்கு ஊறு ஏற்படலாம்.அவ்வாறின்றி மாற்றி மாற்றி வேலை அல்லது பயிற்சி கொடுப்பது உதவும்.

பெரும்பாலன மூட்டு நோய்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை தேவை. அது மாதம் ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஓரு தடவையோ என நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். மருத்துவர் சொல்லும் காலக்கெடுவில் அவரை தவறாது சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.

இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

  • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.
  • அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.
  • பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.
  • மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
  • இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

  • இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
  • இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
  • இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும்.

நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.

அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.

  •  சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
  • காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
  • ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • இருதய நோயுள்ளவர்கள்
  • தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.
எத்தகைய பரிசோதனைகள்


1.    இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2.    சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.

ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.

  • இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
  • இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
  • உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
  • தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
  • சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.

ஆயினும் அவளது சிறுநீரகம்  இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?

எனது ஹாய் நலமா புளக்கில் இவ்வருடம் 2013 ஏப்பிரலில் பதிவிட்ட கட்டுரை நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

‘எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்’ என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

cholesterol

ஆனால் இப்பொழுதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கொலஸ்டரோல் பிரச்சனை என்கிறார்கள். கோயில் ஐயர் முதல் கசாப்புக் கடைக்காரன் வரை எல்லோரையும் பீடிக்கவே செய்கிறது. சொகுசு வாழ்க்கையும் தவறான உணவு முறைகளுமே முக்கிய காரணம் என்றபோதும் பரம்பரைக் காரணிகளும் இல்லாமலில்லை.

அது சரி! கொலஸ்டரோல் அதிகரித்தால் நோய், சரியான பிரச்சனையாகும், உணவுகட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் நாளாந்தம் அவசியமாகும்.

அதேபோல கொலஸ்டரோல் குறையும் பிரச்சனையும் இருக்கிறதா? அது நோயா? மருந்துகள் தேவைப்படுமா?

மருந்துகளால் கொலஸ்டரோல் அளவு குறைதல்

‘என்ரை கொலஸ்டரோல் குறைஞ்சு போச்சு மருந்தை நிப்பாட்டிப் போட்டன்’ எனக் கையில் ரிப்போட்டும் முகத்தில் ஆனந்த தாண்டவமுமாக பலர் வருவார்கள். கொலஸ்டரோலுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகள் அவர்கள். ஆனால் அவ்வாறு நிறுத்துவது தவறு.

lower-cholesterol

கொலஸ்டரோலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மருந்து தருகிறார்கள். குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைவதுதான் இருதய மற்றும் குருதிக் குழாய் நோய்களைத் தடுப்பதற்கான வழியாகும்.

மருந்து சாப்பிடுவதால் கொலஸ்டரோல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ மருத்துவரின் வேலை. எனவே கொலஸ்டரோல் அளவு குருதியில் குறைஞ்சாலும் நீங்களாக நிறுத்த வேண்டாம். மருத்துவரின் எண்ணப்படி நடவுங்கள்.

மருந்து இல்லாமலும் கொலஸ்டரோல் குறைதல்

மருந்து இல்லாமலும் குருதியில் கொலஸ்டரோல் அளவு குறையுமா?

குறையலாம்!.

குருதியில் கொலஸ்டரோல் அளவு மிகவும் குறைவதை Hypolipidemia என்பார்கள். சாதாரண பாசையில் லோ கொலஸ்டரோல்(Low Cholesterol) என்பார்கள்.

Medicines

ஆனால் அடிக்கடி காணப்படும் பிரச்சனை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டு வகைகள்

மருந்துகள் இல்லாமலே குருதியில் கொலஸ்டரோல் குறைவது இரண்டு விதங்களிலாகும்.

  1. சிலருக்கு இயல்பாகவே குருதியில் கொலஸ்டரோல் குறைவாக இருக்கும். வேறு நோய்களோ அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. அதற்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடையே அது பொதுவாக இருப்பதாகும். பரம்பரையில் அவ்வாறிருந்தால் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
  2. வேறு பல நோய்கள் காரணமாகவும் சிலரது கொலஸ்டரோல் அளவு குறைவதுண்டு.

காரணங்கள் எவை?

தைரொயிட் சுரப்பி அதீதமாக வேலை செய்தால் (hyperthyroidism) தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்திருக்கும். இது கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும். இதற்கு மாறாக தைரொக்சின் அளவு குருதியில் குறைந்திருந்தால் (hypothyroidism) கொலஸ்டரோல் அளவு அதிகரிக்கும்.

Hypolipideamia Causes-001

அதேபோல சில ஈரல் நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும்.

குருதியில் தாதுப்பொருளான மக்னீசியத்தின் அளவு குறைவதாலும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.
பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கும்போது பசி குறைவதுண்டு.

அந்நிலையில்; அவரால் போதியளவு போசாக்கான உணவுகளை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாகவும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

உதாரணமாகப் புற்றுநோய்கள் அதிலும் முக்கியமாக உணவுக் கால்வாயோடு தொடர்புடைய புற்றுநோய்கள் பசியைக் கடுமையாகக் குறைக்கும். அதேபோல சுவாசப் பையோடு தொடர்புடைய நோய்களும் ஹெப்பரைரிஸ் போன்ற நோய்களும் பசியைக் குறைக்கும்.

பலவிதமான தொற்று நோய்கள் பசியைக் குறைக்குமானாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கொலஸ்டரோலைக் குறைக்கும் என எதிர்பாரக்க முடியாது. T.B எனப்படும் சயரோக நோயும் பசியை அதிகம் குறைக்கின்ற மற்றொரு நோயாகும்.

பசி குறைவு என்றவுடன் ‘எனக்கும் பசி குறைவுதான்’ என்கிறீர்களா. சாதாரண பசிக் குறைவைச் சொல்லவில்லை. அதீதமான பசிகுறைவு. வழமைபோல உணவு உட்கொள்ள முடியாது எடை குறைந்து உடல் நலியும் நிலையில் அவ்வாறு கொலஸ்டரோல் குறையும்.

இவற்றைத் தவிர மனவிரக்தி, பதகளிப்பு நோய், பக்கவாதம், பிறவி அங்கயீனக் குறைபாடுகள் உள்ளோருக்கும் போசாக்குக் குறைபாட்டால் கொலஸ்டரோல் குறைவதுண்டு.

மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களும் பொதுவாக உணவில் நாட்டமின்மையைக் கொண்டுவரும். புகைத்தலும் அவ்வாறே செய்கிறது.

அறிகுறிகள்

எந்த அறிகுறிகளையும் வைத்து இவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறதா என ஐயமுற முடியாது. தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. வழமையான இரத்தப் பரிசோதனைகள் செய்யும்போதே தெரியவரும். அதாவது கொலஸ்டரோல் இருக்கிறதா எனப் பரிசோதனை (Lipid Profile) செய்யும்போது கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

குறைந்த கொலஸ்டரோலை அதிகரிப்பதற்கென தனியான மருந்து மாத்திரைகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. அது ஏன் ஏற்பட்டது என அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதே சிகிச்சை முறையாகும்.

இருக்க வேண்டிய அளவு

cholesterol-8

நீங்கள் கொலஸ்டரோலுக்கு மருந்து சாப்பிடுபவராயின் உங்களது கொலஸ்டரோல் அளவுகள் எந்தளவில் இருக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்

  • முழுமையான கொலஸ்டரோல்    200 ற்கு குறைவாக
  •  LDLகொலஸ்டரோல்    130 ற்கு குறைவாக, நீரிழிவு மற்றும் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு        100 ற்கு குறைவாக
  • HDL கொலஸ்டரோல்   ஆண்களில் 40 பெண்களில் 50 ற்கு மேல்
  • ரைகிளிசரைட் 150 ற்கு குறைவாக
DR.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

0.00.0.00.0

Read Full Post »

இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள்.

உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது.

  • ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது.
  • சுலபமாகச் செய்யக் கூடியது.
  • செலவில்லாதது.
  • இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது.

அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது.

வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மாறுபடலாம்.

நடைப் பயிற்சி என்பது கடையைப் பார்த்து தெருவைப் பார்த்து ஆற அமர பொம்மை போல அரங்கி நடப்பதல்ல. கை கால்களை ஆட்டி விசுக்கி வேகமாக நடப்பதாகும்

எப்படி எவ்வாறு ஆரம்பிப்பது

நடைப் பயிற்சியை ஆரம்பிக்கும்போது அவதானிக்க வேண்டியவை.

  • எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல் வாரம் 5 நிமிடங்கள் மட்டும் நடவுங்கள். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
  • பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த வாரத்திலிருந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
  • படிப்படியாக உங்கள் தேவைக்கு ஏற்ப நடைப் பயிற்சியின் நேரத்தை அதிகரியுங்கள்.
  • படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் உங்களது இருதயம், சுவாசப் பை மற்றும் கால்களுக்கு திடீரென எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை தங்களைத் தாங்களே பழக்கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்குத் தயாரகிவிடும்.
  • நடைப் பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். இறுக்கமான, அடி தேய்ந்த வார் அறுந்த காலணிகள் வேண்டாம். நடைப் பயிற்சி உங்களுக்கு நலத்தைக் கொண்டு வரும். ஆனால் காலணிகள் விரைவில் நைந்து சேதமாகும். காலணிகள் பழுதுபடும்போது அவற்றைக் கழித்துவிட்டு மீண்டும் புதிதாக வாங்க வேண்டியது அவசியம்.
  • நடைப்பயிற்சி சுவார்ஸமானதாக மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக அக்கறையின்றிச் செய்ய வேண்டாம். துணைவர் அல்லது நண்பருடன் பேசிக்கொண்டு நடக்கலாம். பூந்தோட்டம், கடல், ஏரி, கடைகள் என எதையாவது ரசித்துக் கொண்டு நடக்கலாம். ஆனால் பேசுவதிலும் ரசிப்பதிலும் பார்ப்பதிலும் உங்கள் அடிப்படை நோக்கத்தை மறக்கக் கூடாது. நடையின் வேகம் தடைப்படாது இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • தெருநாய்கள் நிறைந்த வீதியில் நடந்து அவற்றால் கடிபட்டு ரேபீஸ் தடுப்பு ஊசிபோட நேர்ந்தால், அல்லது வாகனத்தால் மோதுப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாதுகாப்பான இடமாகப் பார்த்து நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சி, உடற் பயிற்சி பற்றி இந்தப் பதிவுகளிலும்.

எவ்வளவு உடற் பயிற்சி
வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சி
கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

Read Full Post »

இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

elderly-falling

அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.

விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும்  காரணமாகிறன.

18026_4736_5

இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான்.  இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.

முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.

ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

falls_elderly_prevention

முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?

  • பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
  • முதுமையின் பார்வைக் குறைபாடு,
  • அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்

ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.

fallcouple

கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.

எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.

  • இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
  • இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
  • நடக்க முடியாது போகும்
  • இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
  • ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.

உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.

மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.

சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.

Falls_Prevention_Infographic (1)

விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

வயதானவர்களின் விழுகை!

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

0.0.0.0.0.0

Read Full Post »

‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

Heart attack in Younger people

மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.

ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.

மாரடைப்பு எவ்வாறு?

மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

  • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்),
  • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம்.

காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.

Atherosclerosis

அத்திவாரம் இளவயதிலேயே

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.

அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.

  • நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • புகைத்தல் பழக்கம்
  • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
  • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

காரணம் என்ன?

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

  • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
  • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

visceral Fat

இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.

  • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
  • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

abd circumferance

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.

  • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
  • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?

‘எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்’ என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.

How-to-lose-belly-fat-for-kids

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.

0204running

ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Heart and Stroke Foundation of Canada, news release, Oct. 25, 2011

ஹாய்நலமா புளக்கில்  ஜனவரி 2012. ல் வெளியானது

0.0.0.0.0.0.0.0.0

Read Full Post »

அந்த மூதாட்டியைப் பார்த்ததும் மனம் கனத்தது. வாழ்க்கைச் சக்கரத்தின ஆரம்கட்டமான கருப்பையில் இருந்ததுபோல அவளது உடல் சுருண்டு கிடந்தது. முதுகு கூனிக் குறுகியிருந்தது.

old-age-2

கால்கள் குந்தியிருக்கும்போது மடிந்திருப்பதுபோல மடிந்திருந்தன. அவற்றை நீட்ட முடியவில்லை. அவளால் செய்ய முடியாதது மட்டுமல்ல நான் முயன்றும் முடியவில்லை. முழங்கால் மூட்டுக்கள் இறுகிக் கிடந்தன. அவளால் நடக்க முடியாது. பம்போரிஸ் கட்டித்தான் அவளது மலம் கழிவதைச் சமாளிக்கிறார்கள்.

100_1818-1

ஆனால் அவளால் சாப்பிட முடிகிறது. நீராகாரம் அருந்த முடிகிறது. மாறாட்டம் சற்று இருந்தாலும் நினைவு நல்ல நிலையில் இருந்தது. அவளது வயது 91 மட்டுமே.

‘வயசாகிபோய் உடம்பு தளர்ந்து போச்சு’ என்றாள் தட்டுத் தடுமாறி வந்தவள். 70 வயதுகளை அண்டிக் கொண்டிருக்கும் அவளது மகள் இவள்.

வயதானவர்களின் துன்பங்கள் பற்றிய ஒரு அனுபவப் பதிவு ‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

மூப்படைதல்

முதுமையாவதின் பிரச்சனைகளை எமது நாட்டிலும் இப்பொழுது பரவலாகக் காணக் கிடைக்கிறது. மிகவும் முதுமையடைந்த பெற்றோர்களை பராமரிக்க முடியாது முதுமையின் ஆரம்பப் படியிலிருக்கும் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மேல்நாடுகளைப் போல இங்கும் அரச ரீதியான ஆதரவும் பராமரப்பும் தேவையென்பதை உணர முடிகிறது.

மூப்படைவது உடலைத் தளரச் செய்கிறது என்கிறார்கள். எலும்புகள் மூட்டுகள், தசைகள் எனப் பலவும் வயது அதிகரிப்பின்போது பாதிப்படையவே செய்கின்றன. மூட்டு எலும்புகளின் தேய்வு (Osteoarthritis),தேய்வடையும் எலும்புகள் (Osteoporosis) , ரூமட்ரோயிட் மூட்டுவாதம் போன்ற பல நோய்களும் வயதானவர்களைப் பாதிப்பது அதிகமானாலும் மேற்கூறிய எலும்புகள் மூட்டுகள், தசைகள் ஆகியவற்றின் பாதிப்பிற்கு அவை மட்டுமே காரணமல்ல.

arthritis-hand

வயதாகும் போது சருமம் சுருங்குவதுபோல, தலைமுடி நரைப்பதுபோல, தசைகள் வலுவிழக்கும், எலும்புகள் கோதாகும் மூட்டுக்கள் பாதிப்புற்று மடங்க முனையும். இவை தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகிறார்கள். அவ்வாறே நீண்டகாலம் மருத்துவர்களும் எண்ணினார்கள்.  வயது காரணமல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியானால் காரணம் என்ன? செயற்பாட்டின்மை என்கிறார்கள். மூப்படையும்போது இயலாமை ஆட்கொள்கிறது. நாளாந்த செயற்பாடுகள் குறைகின்றன. நடமாட்டமும் குறைகிறது. இதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது எனக் கருதுகிறார்கள்.

தசைகளில் ஏற்படும் மாற்றஙகள்

வயதாகும்போது உருண்டு திரண்டு வலுவுடன் இருந்த தசைகள் தளர்ந்து சுருங்குகின்றன. இதனால் இலகுவில் களைப்படைகின்றன. வழமைபோல இயங்க முடியாது சோர்வுற வைக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

  • முக்கியமானது தசை நார்களின் எண்ணிக்கையும் திண்ம அளவும் குறைகிறது.
  • அவ்வாறு குறையும் இடத்தை அவற்றின் இடத்தை நிரப்புபவைfibrous tissueஆகும். இவை tough,கடினமானவை, நெகிழ்சி குறைந்தவை. அதனால் சுரங்கி விரிந்து செயற்படுவது சிரமம்.
  • நரம்பு மண்ணடலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமான அவற்றின்tone குறையும். இதனால் சுருங்கும் (contract) ஆற்றல் குறையும்.

எலும்புகளில் ஏற்படும் மாற்றஙகள்

எலும்புகள் கல்லுகள் போலத் தோன்றினாலும் அவையும் உயிருள்ள இழையங்களே. வயதாகும் போது அவற்றின் கட்டமைப்பில் (Structure of bone) மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் திண்மம் குறைகிறது. வலுவிழக்கின்றன. எலும்புகள் சிறிய தாக்கத்தினாலும் உடைகின்றன.

17285

இவற்றிற்கான காரணங்கள் என்ன?

  • செயலூக்கமற்ற வாழ்க்கை முறை.
  • ஹோர்மோன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுதல் – முக்கியமாகப் பெண்களில் மாதவிடாய் முற்றாக நின்ற பின்னர் எலும்புகளின் அடர்த்தி நலிவடையத் தொடங்கி ஒஸ்டியோபொரொசிஸ் நோயைக் கொண்டு வருகிகறது. அதேபோல ஆண்களில் இம் மாற்றம் படிப்படியாக ஏற்படுகிறது.
  • எலும்புகளிலுள்ள கல்சியம் ஏனைய தாதுப் பொருட்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆதனால் அவை நலிவடைகின்றன.

மூட்டுகளில் ஏற்படும் மாற்றஙகள்

எமது உடலில் முழங்கால் மணிக்கட்டு, இடுப்பு, தோள் மூட்டு எனப் பல்வேறு மூட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று முட்டி உரசுவதில்லை. குருத்தெலும்புகள் (cartilage) அவற்றை மூடி மூட்டுக்குரிய சவ்வுகள் (synovial membranes)> அவை உராசிதிருக்க மூட்டுக்குரிய திரவம் (synovial fluid) என வழுவழுப்புடன் உராய்வின்றி, நழுவி இயங்குமாறு பொறியலாளருக்கான நிபுணத்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

வயதாகும்போது மூட்டுக்குரிய திரவம் குறைவடைகிறது, குருத்தெலும்புகள் தேய்கின்றன. இதனால்தான் அவை இறுகி அதன் அசைவுகளில் நெகிழ்சித்தன்மை குறைகிறது. மூட்டுகளை இணைக்கும் சவ்வுகள் குறுகுகின்றன. ஆவற்றால்தான் வயதானவர்கள் தமது மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கிறது.

ஆனால் இவற்றில் பெரும்பாலனவற்றிற்கு வயது மட்டும் காரணமல்ல. போதிய பயிற்சி இல்லாமை காரணமாகும். இயங்கிக் கொண்டிருக்கும்போது மூட்டுக்குரிய திரவம் சுரந்து பரவிக் கொண்டிருக்கும். செயலற்றிருக்கும்போது திரம் சுரப்பது குறைந்து குருத்தெலும்புகள் தேய்ந்து மூட்டு இறுகிவிடுகிறது.

தடுக்கும் வழி என்ன?

ஒரே வழி தொடர்ந்து இயங்குவதும் மூட்டுகளுக்கு பயிற்சிகள் கொடுப்பதும் மட்டுமே. இதை பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுதியுமுள்ளன.

OldCoupleWalking

  • பயிற்சிகள் எலுத்புகளை வலுவுடையதாக்கும். எலும்புத் தேய்வு ஏற்படுவது குறைவடையும்.
  • தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை வயதாகும்போது தொடர்ந்து செய்வது அவசியம்.
  • உடலின் சமநிலையைப் பேணுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குமான பயிற்சிகளும் அவசிமாகும்.
  • முடியுமானவர்கள் நீந்துவதும் நல்லது. இது அவர்களது தசைகள் தேயாதிருக்க உதவும்.
  • தசைகளை நீட்டி மடக்கும் பயிற்சிகளும் மூட்டுகள் இயங்குவதற்கு உதவும்.
  • ஓய்ந்து சோம்பிப் படுத்துக் கிடக்காது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எலும்புகள் தேய்வுற்று ஒஸ்டியோபொரோசிஸ் ஏற்பாது தடுக்க உதவும்.

எனவே முதியவர்களே நீங்கள் எதிர்காலத்தில் அடங்கி முடங்கிப் படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் இயங்குங்கள், இயங்குங்கள், இயங்கிக் கொண்டேயிருங்கள்.

விட்டிலுள்ள ஏனையவர்களே உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அவர்கள் படுக்கையில் வீழ்ந்துவிடாதிருக்க வேண்டுமாயின் உங்கள் ஒத்தாசையும் ஊக்குவிப்பும் அவசியம்.அவர்களை விட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள். நடக்கவும் பயிற்சிகள் செய்யவும் உதவுங்கள். இல்லையேல் படுக்கையில் வைத்துப் பராமரித்து அல்லாடப் போவது நீங்கள்தான்.

மற்றொரு வயோதிபரின் பரிதாபமான பாடுகள் வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ….

A young hand touches and holds an old wrinkled hand

அதுமட்டுமல்ல நீங்களும் ஒருநாள் முதுமையிடைவீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்களுக்கு உதவுவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் நீங்கள் துன்புறாதிருக்க உற்சாகமாக இருங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள். பயிற்சிகளை இப்பொழுதிருந்தே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். 

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

0.0.0.0.0.0.0

Read Full Post »

Older Posts »