இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள்.
உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது.
- ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது.
- சுலபமாகச் செய்யக் கூடியது.
- செலவில்லாதது.
- இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது.
அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது.
வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மாறுபடலாம்.
நடைப் பயிற்சி என்பது கடையைப் பார்த்து தெருவைப் பார்த்து ஆற அமர பொம்மை போல அரங்கி நடப்பதல்ல. கை கால்களை ஆட்டி விசுக்கி வேகமாக நடப்பதாகும்
எப்படி எவ்வாறு ஆரம்பிப்பது
நடைப் பயிற்சியை ஆரம்பிக்கும்போது அவதானிக்க வேண்டியவை.
- எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல் வாரம் 5 நிமிடங்கள் மட்டும் நடவுங்கள். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
- பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த வாரத்திலிருந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
- படிப்படியாக உங்கள் தேவைக்கு ஏற்ப நடைப் பயிற்சியின் நேரத்தை அதிகரியுங்கள்.
- படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் உங்களது இருதயம், சுவாசப் பை மற்றும் கால்களுக்கு திடீரென எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை தங்களைத் தாங்களே பழக்கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்குத் தயாரகிவிடும்.
- நடைப் பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். இறுக்கமான, அடி தேய்ந்த வார் அறுந்த காலணிகள் வேண்டாம். நடைப் பயிற்சி உங்களுக்கு நலத்தைக் கொண்டு வரும். ஆனால் காலணிகள் விரைவில் நைந்து சேதமாகும். காலணிகள் பழுதுபடும்போது அவற்றைக் கழித்துவிட்டு மீண்டும் புதிதாக வாங்க வேண்டியது அவசியம்.
- நடைப்பயிற்சி சுவார்ஸமானதாக மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக அக்கறையின்றிச் செய்ய வேண்டாம். துணைவர் அல்லது நண்பருடன் பேசிக்கொண்டு நடக்கலாம். பூந்தோட்டம், கடல், ஏரி, கடைகள் என எதையாவது ரசித்துக் கொண்டு நடக்கலாம். ஆனால் பேசுவதிலும் ரசிப்பதிலும் பார்ப்பதிலும் உங்கள் அடிப்படை நோக்கத்தை மறக்கக் கூடாது. நடையின் வேகம் தடைப்படாது இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- தெருநாய்கள் நிறைந்த வீதியில் நடந்து அவற்றால் கடிபட்டு ரேபீஸ் தடுப்பு ஊசிபோட நேர்ந்தால், அல்லது வாகனத்தால் மோதுப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாதுகாப்பான இடமாகப் பார்த்து நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி, உடற் பயிற்சி பற்றி இந்தப் பதிவுகளிலும்.
எவ்வளவு உடற் பயிற்சி
வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சி
கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?
தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரை
எம்.கே.முருகானந்தன்
0.00.0.00.0