Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தடுப்பு முறை’ Category

இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

elderly-falling

அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.

விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும்  காரணமாகிறன.

18026_4736_5

இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான்.  இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.

முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.

ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

falls_elderly_prevention

முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?

 • பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
 • முதுமையின் பார்வைக் குறைபாடு,
 • அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்

ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.

fallcouple

கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.

எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.

 • இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
 • இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
 • நடக்க முடியாது போகும்
 • இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
 • ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.

உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.

மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.

சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.

Falls_Prevention_Infographic (1)

விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

வயதானவர்களின் விழுகை!

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

0.0.0.0.0.0

Read Full Post »

‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

Heart attack in Younger people

மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.

ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.

மாரடைப்பு எவ்வாறு?

மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

 • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்),
 • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம்.

காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.

Atherosclerosis

அத்திவாரம் இளவயதிலேயே

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.

அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.

 • நீரிழிவு
 • உயர் இரத்த அழுத்தம்
 • புகைத்தல் பழக்கம்
 • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
 • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

காரணம் என்ன?

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

 • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
 • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

visceral Fat

இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.

 • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
 • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

abd circumferance

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.

 • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
 • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?

‘எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்’ என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.

How-to-lose-belly-fat-for-kids

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.

0204running

ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Heart and Stroke Foundation of Canada, news release, Oct. 25, 2011

ஹாய்நலமா புளக்கில்  ஜனவரி 2012. ல் வெளியானது

0.0.0.0.0.0.0.0.0

Read Full Post »

அந்த மூதாட்டியைப் பார்த்ததும் மனம் கனத்தது. வாழ்க்கைச் சக்கரத்தின ஆரம்கட்டமான கருப்பையில் இருந்ததுபோல அவளது உடல் சுருண்டு கிடந்தது. முதுகு கூனிக் குறுகியிருந்தது.

old-age-2

கால்கள் குந்தியிருக்கும்போது மடிந்திருப்பதுபோல மடிந்திருந்தன. அவற்றை நீட்ட முடியவில்லை. அவளால் செய்ய முடியாதது மட்டுமல்ல நான் முயன்றும் முடியவில்லை. முழங்கால் மூட்டுக்கள் இறுகிக் கிடந்தன. அவளால் நடக்க முடியாது. பம்போரிஸ் கட்டித்தான் அவளது மலம் கழிவதைச் சமாளிக்கிறார்கள்.

100_1818-1

ஆனால் அவளால் சாப்பிட முடிகிறது. நீராகாரம் அருந்த முடிகிறது. மாறாட்டம் சற்று இருந்தாலும் நினைவு நல்ல நிலையில் இருந்தது. அவளது வயது 91 மட்டுமே.

‘வயசாகிபோய் உடம்பு தளர்ந்து போச்சு’ என்றாள் தட்டுத் தடுமாறி வந்தவள். 70 வயதுகளை அண்டிக் கொண்டிருக்கும் அவளது மகள் இவள்.

வயதானவர்களின் துன்பங்கள் பற்றிய ஒரு அனுபவப் பதிவு ‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

மூப்படைதல்

முதுமையாவதின் பிரச்சனைகளை எமது நாட்டிலும் இப்பொழுது பரவலாகக் காணக் கிடைக்கிறது. மிகவும் முதுமையடைந்த பெற்றோர்களை பராமரிக்க முடியாது முதுமையின் ஆரம்பப் படியிலிருக்கும் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மேல்நாடுகளைப் போல இங்கும் அரச ரீதியான ஆதரவும் பராமரப்பும் தேவையென்பதை உணர முடிகிறது.

மூப்படைவது உடலைத் தளரச் செய்கிறது என்கிறார்கள். எலும்புகள் மூட்டுகள், தசைகள் எனப் பலவும் வயது அதிகரிப்பின்போது பாதிப்படையவே செய்கின்றன. மூட்டு எலும்புகளின் தேய்வு (Osteoarthritis),தேய்வடையும் எலும்புகள் (Osteoporosis) , ரூமட்ரோயிட் மூட்டுவாதம் போன்ற பல நோய்களும் வயதானவர்களைப் பாதிப்பது அதிகமானாலும் மேற்கூறிய எலும்புகள் மூட்டுகள், தசைகள் ஆகியவற்றின் பாதிப்பிற்கு அவை மட்டுமே காரணமல்ல.

arthritis-hand

வயதாகும் போது சருமம் சுருங்குவதுபோல, தலைமுடி நரைப்பதுபோல, தசைகள் வலுவிழக்கும், எலும்புகள் கோதாகும் மூட்டுக்கள் பாதிப்புற்று மடங்க முனையும். இவை தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகிறார்கள். அவ்வாறே நீண்டகாலம் மருத்துவர்களும் எண்ணினார்கள்.  வயது காரணமல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியானால் காரணம் என்ன? செயற்பாட்டின்மை என்கிறார்கள். மூப்படையும்போது இயலாமை ஆட்கொள்கிறது. நாளாந்த செயற்பாடுகள் குறைகின்றன. நடமாட்டமும் குறைகிறது. இதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது எனக் கருதுகிறார்கள்.

தசைகளில் ஏற்படும் மாற்றஙகள்

வயதாகும்போது உருண்டு திரண்டு வலுவுடன் இருந்த தசைகள் தளர்ந்து சுருங்குகின்றன. இதனால் இலகுவில் களைப்படைகின்றன. வழமைபோல இயங்க முடியாது சோர்வுற வைக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

 • முக்கியமானது தசை நார்களின் எண்ணிக்கையும் திண்ம அளவும் குறைகிறது.
 • அவ்வாறு குறையும் இடத்தை அவற்றின் இடத்தை நிரப்புபவைfibrous tissueஆகும். இவை tough,கடினமானவை, நெகிழ்சி குறைந்தவை. அதனால் சுரங்கி விரிந்து செயற்படுவது சிரமம்.
 • நரம்பு மண்ணடலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமான அவற்றின்tone குறையும். இதனால் சுருங்கும் (contract) ஆற்றல் குறையும்.

எலும்புகளில் ஏற்படும் மாற்றஙகள்

எலும்புகள் கல்லுகள் போலத் தோன்றினாலும் அவையும் உயிருள்ள இழையங்களே. வயதாகும் போது அவற்றின் கட்டமைப்பில் (Structure of bone) மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் திண்மம் குறைகிறது. வலுவிழக்கின்றன. எலும்புகள் சிறிய தாக்கத்தினாலும் உடைகின்றன.

17285

இவற்றிற்கான காரணங்கள் என்ன?

 • செயலூக்கமற்ற வாழ்க்கை முறை.
 • ஹோர்மோன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுதல் – முக்கியமாகப் பெண்களில் மாதவிடாய் முற்றாக நின்ற பின்னர் எலும்புகளின் அடர்த்தி நலிவடையத் தொடங்கி ஒஸ்டியோபொரொசிஸ் நோயைக் கொண்டு வருகிகறது. அதேபோல ஆண்களில் இம் மாற்றம் படிப்படியாக ஏற்படுகிறது.
 • எலும்புகளிலுள்ள கல்சியம் ஏனைய தாதுப் பொருட்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆதனால் அவை நலிவடைகின்றன.

மூட்டுகளில் ஏற்படும் மாற்றஙகள்

எமது உடலில் முழங்கால் மணிக்கட்டு, இடுப்பு, தோள் மூட்டு எனப் பல்வேறு மூட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று முட்டி உரசுவதில்லை. குருத்தெலும்புகள் (cartilage) அவற்றை மூடி மூட்டுக்குரிய சவ்வுகள் (synovial membranes)> அவை உராசிதிருக்க மூட்டுக்குரிய திரவம் (synovial fluid) என வழுவழுப்புடன் உராய்வின்றி, நழுவி இயங்குமாறு பொறியலாளருக்கான நிபுணத்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

வயதாகும்போது மூட்டுக்குரிய திரவம் குறைவடைகிறது, குருத்தெலும்புகள் தேய்கின்றன. இதனால்தான் அவை இறுகி அதன் அசைவுகளில் நெகிழ்சித்தன்மை குறைகிறது. மூட்டுகளை இணைக்கும் சவ்வுகள் குறுகுகின்றன. ஆவற்றால்தான் வயதானவர்கள் தமது மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கிறது.

ஆனால் இவற்றில் பெரும்பாலனவற்றிற்கு வயது மட்டும் காரணமல்ல. போதிய பயிற்சி இல்லாமை காரணமாகும். இயங்கிக் கொண்டிருக்கும்போது மூட்டுக்குரிய திரவம் சுரந்து பரவிக் கொண்டிருக்கும். செயலற்றிருக்கும்போது திரம் சுரப்பது குறைந்து குருத்தெலும்புகள் தேய்ந்து மூட்டு இறுகிவிடுகிறது.

தடுக்கும் வழி என்ன?

ஒரே வழி தொடர்ந்து இயங்குவதும் மூட்டுகளுக்கு பயிற்சிகள் கொடுப்பதும் மட்டுமே. இதை பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுதியுமுள்ளன.

OldCoupleWalking

 • பயிற்சிகள் எலுத்புகளை வலுவுடையதாக்கும். எலும்புத் தேய்வு ஏற்படுவது குறைவடையும்.
 • தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை வயதாகும்போது தொடர்ந்து செய்வது அவசியம்.
 • உடலின் சமநிலையைப் பேணுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குமான பயிற்சிகளும் அவசிமாகும்.
 • முடியுமானவர்கள் நீந்துவதும் நல்லது. இது அவர்களது தசைகள் தேயாதிருக்க உதவும்.
 • தசைகளை நீட்டி மடக்கும் பயிற்சிகளும் மூட்டுகள் இயங்குவதற்கு உதவும்.
 • ஓய்ந்து சோம்பிப் படுத்துக் கிடக்காது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எலும்புகள் தேய்வுற்று ஒஸ்டியோபொரோசிஸ் ஏற்பாது தடுக்க உதவும்.

எனவே முதியவர்களே நீங்கள் எதிர்காலத்தில் அடங்கி முடங்கிப் படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் இயங்குங்கள், இயங்குங்கள், இயங்கிக் கொண்டேயிருங்கள்.

விட்டிலுள்ள ஏனையவர்களே உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அவர்கள் படுக்கையில் வீழ்ந்துவிடாதிருக்க வேண்டுமாயின் உங்கள் ஒத்தாசையும் ஊக்குவிப்பும் அவசியம்.அவர்களை விட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள். நடக்கவும் பயிற்சிகள் செய்யவும் உதவுங்கள். இல்லையேல் படுக்கையில் வைத்துப் பராமரித்து அல்லாடப் போவது நீங்கள்தான்.

மற்றொரு வயோதிபரின் பரிதாபமான பாடுகள் வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ….

A young hand touches and holds an old wrinkled hand

அதுமட்டுமல்ல நீங்களும் ஒருநாள் முதுமையிடைவீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்களுக்கு உதவுவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் நீங்கள் துன்புறாதிருக்க உற்சாகமாக இருங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள். பயிற்சிகளை இப்பொழுதிருந்தே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். 

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

0.0.0.0.0.0.0

Read Full Post »

தைப் பனி இன்னமும் முழுமையாகக் குறைந்தபாடில்லை. ஆஸ்த்மாவின் தொல்லை இன்னமும் பலரைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.

inflammed-airways-complex

 • எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன்
 • நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும்.
 • தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது.
 • அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

அறிகுறிகள்

The-Asthma-Symptom

 • இருமல்
 • இழுப்பு
 • மூச்சு எடுப்பதில் சிரமம்
 • நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்

போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

அடியோடு அறுத்தல்

நோய் அறிகுறிகள் இருப்பவருக்கு, ‘உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கு’ என மருத்துவர் சொன்னவுடன் நோயாளியின் உடனடிப் பிரதிபலிப்பு ‘இதை அடியோடு அறுக்க என்ன செய்யலாம்?’ என்பதுதான்.

ஆனால் அடியோடு அறுக்க முடியாது என்பது கசப்பாக செய்தியான போதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.

 • இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது.
 • அவற்றைக் கொண்டு நோயை நன்கு கட்டுப்படுத்தலாம்.
 • ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.
 • ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும். அன்றி மருந்துவத்தின் செயற்பாட்டால் அல்ல.

‘ஆங்கில மருத்துவம் செய்து வேலையில்லை’ என்று எண்ணி சித்த, ஆயர்வேத, யுனானி, அக்யூபங்கசர் என நாடுபவர்கள் இருக்கிறார்கள்.

 • அவை எவற்றினாலும் நோயை முற்றாக அறுக்க முடியாது.
 • அது மட்டுமல்ல, கடுமையான பத்தியங்கள் இருந்தாலும் அவற்றால் கிட்டும் பயன் மிகக் குறைவே.
 • அவற்றால் பெருமளவு பலனில்லை என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையும் (FDA) கூறுதிப்படுத்துகிறது.

மாற்று மருத்துவ முறைகளும் ஆஸ்த்மாவும்

அக்யூபங்கசர்

Treatment by acupuncture. The doctor uses needles for treatment of the patient.

அக்யூபங்கசர் ஆஸ்தாவுக்கு ஏற்ற சிகிச்சை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்கிறது அந்த ஸ்தாபனம்.

 • அக்யூபங்கசரால் ஒரு சிலரில் மருந்துகளின் அளவை குறைக்க முடிந்திருக்கிறது,
 • அறிகுறிகள் குறைந்திருந்தன, சுகமாக இருப்பதாக உணர்ந்தனர் என ஓரிரு ஆய்வுகள் கூறிய போதும்,
 • பெரும்பாலான ஆய்வுகள் அக்யூபங்கசரால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கின்றன.

சுவாசப் பயிற்சிகள்

asthma-breathing-exercises-yoga-meditation

பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. எமது பாரம்பரிய யோகசனம் முதலாக சீன, மேலைநாட்டு முறைகள் (Papworth Method and Buteyko Breathing Technique) எனப் பல.

 • இவை நோயின் தீவிரத்தை குறைப்பதாகத் தெரிகின்றபோதும்,
 • நல்ல பலன் அளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஆயினும் இது உடலுக்கு எந்தப் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதால் வழமையான மருந்துகளுடன் இணைத்துச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

மூலிகைகள் சார்ந்த மருந்துகள்

சுதேச மருத்துவ முறைகளான சித்த, ஆயள்வேத, யுனானி, சீன மருத்து முறைகளில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள சில வேதியல் பொருட்கள் ஆஸ்மாவின் அறிகுறிகளைக் குறைக்கக் கூடும்.

Asthma and Complementary Health Practices: What the Science Says

உதாரணமாக Ma huang என்ற சீன மூலிகையில் ephedrine என்ற வேதியல் பொருள் இருக்கிறது. இது ஒரு காலத்தில் ஆஸ்த்மாவிற்கு சிகிச்சையாக மாத்திரைகளாக உபயோகிக்கப்பட்டபோதும் அதன் இருதயம் சார்ந்த பக்கவிளைவுகள் காரணமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேயிலையில் தியோபிலின் (theophylline) எனும் வேதியில் பொருள் சிறிதளவு உண்டு. இது இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து ஆகும். மருந்து இதில் இருக்கிறது என எண்ணி தேநீரை அண்டாக் கணக்கில் குடித்தால் என்னவாகும்? சுகம் கிடைக்காது! வேறு நோய்கள்தான் தேடி வரும்.

இதேபோல வேறு பல மூலிகைகளில் ஸ்டிரொயிட் (Steroid) வகை மருந்துகள் உள்ளன. எதில் எந்த மருந்து எந்தளவு இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எனவே மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது வழமையான மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தும்போது ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர boswellia, tylophora indica, magnesium supplements, omega-3 fatty acids, Radix glycyrrhizae, vitamin C, and butterbur போன்ற மூலிகைகள், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் பலன் கொடுக்கும் எனப் பலர் நம்புகிறபோதும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

Complementary remedies for asthma

எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுக்காக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கைவிட்டு, மூலிகைகளையும் ஏனைய முறைகளையும் உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

உங்களுக்கான மருத்துவம்

இன்றைய நிலையில் ஆஸ்த்மாவுக்கான சிறந்த மருத்துவம் உள்ளுறுஞ்சும் (Inhaler) மருந்துகள்தான். இவற்றில் பல வகைகள் உள்ளன. எது ஒருவருக்குப் பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் சிபார்சு செய்ய முடியும்.

asthma_2312065b

ஒழுங்காக மருந்துகளை உபயோகித்தபோதும் சில வேளைகளில் ஆஸ்த்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். இதைத் தடுக்க தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்பபது அவசியம். அதன் மூலமே நலமாக வாழலாம்.

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவருக்கு தூண்டியாக இருப்பது மற்றவருக்கும் தூண்டியாக அமையும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமது அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும்.

 • ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
 • தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்
 • சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
 • விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
 • கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
 • சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
 • நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
 • கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
 • கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
 • கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.

இவை ஒருவருக்குத் தூண்டியாக அமைந்து நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். ஆனால் மற்றவருக்கு தூண்டியாக இருப்பது உங்களுக்கும் இருக்க வேண்டும் என்றல்ல.

எனவே மற்றவர்கள் சொல்லதைக் கேட்டு தேவையற்ற பலவற்றையும் தவிர்த்து உங்கள் வாழ்வைச் சப்பென்று ஆக்கிவிடாதீர்கள். உங்களுக்கானதைத் அனுபவத்தில் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உங்களால் உங்களால் மட்டுமே உங்கள் ஆஸ்த்மாவைக் கட்டுப்பாடினுள் வைத்திருக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

மழை பெய்தது. இப்பொழுது பனி மூடுகிறது. யாரைப் பார்த்தாலும் மூக்கைச் சிந்திக் கொண்டும் தும்மிக் கொண்டும் திரிகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

bigstock_Common_Cold_4109390

‘சும்மா தடிமனும் மேல் உழைவும்தானே. போர்த்திக் கட்டிக் கொண்டு படு. இரண்டு நாளிலை சுகமாகிவிடும்’ என்பார்கள் அந்தக் காலத்தில் எமது அப்பா அம்மாக்கள்.

சுகமானது.

‘மகனுக்கு தடிமன். காய்ச்சலும் வாற மாதிரிக் கிடக்கு. வாறகிழமை ரெஸ்;ட் வருகுது. நல்ல மருந்தாக் குடுங்கோ.’ இன்றைய அம்மாவின் கோரிக்கை.

மருத்துக்கும் குணமாகியது.

இரண்டிற்கும் குணமாகியது எனில், மருந்தா?, ஆறுதல் எடுப்பதா? எது பொருத்தமான சிகிச்சை என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இரண்டுமே தேவையற்றவை. சாதாரண தடிமனும் அதனோடு வரக்கூடிய சாதாரண காய்ச்சதுமானது வைரஸ் கிருமி தொற்றுவதால் ஏற்படுகிறது. இதனைக் குணமாக்கக் கூடிய அன்ரி வைரஸ் மருந்துகள் எதுவுமே கிடையாது. பலரும் தான்தோன்றித்தனமாக உபயோகிக்கும் அன்ரி பயோரிக் மருந்துகள் இந்த வைரஸ் கிருமிகளை ஒழிக்காது.

Common-cold-remedy_2003-03-26 Mystery disease cousin of common cold .5

இருந்தபோதும் இத்தகைய வைரஸ் தொற்றுக்கள் எத்தகைய மருந்துகளும் இன்றி தாமாகவே குணமாகக் கூடிய சாதாரண நோயாகும்.

தாமாகவே குணமாவதற்குக் காரணம் எமது உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்திதான். அந்த நோயெதிர்புச் சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால் உடல் உழைப்பில் ஈடுபடுவது அவசியம். எனவே போர்த்துக் கட்டிக் கொண்டு முடங்கிக் கிடப்பதும் அவசியமல்ல. அதே நேரம் நோயுற்ற போதும் இயன்றளவில் இயங்க வேண்டும். தேவையற்ற மருந்துகள் கூடாது.

மருத்துவ ஆராய்வுகள்

மனதை அடக்கி அமைதிப்படுத்தும் தியானம் போன்ற மன அடக்கப் பயிற்சிகள் உதவும். நடுத்தர அளவிலான உடற் பயிற்சிகளை தொடர்ச்சியாகச் செய்துவருவதும் உடலுக்கு நல்லதைச் செய்கின்றன.

Meditation-Exercise-Help-Fight-Flu-Common-Cold-SS

 • சாதராண காய்ச்சல் நோய்கள் உடலைக் கடுமையாகத் தாக்காது இவையிரண்டும் பாதுகாக்கின்றன.
 • நீண்ட நாள் தொடர்ந்து தொல்லை கொடுக்காது தடுக்கின்றன.
 • வேலைக்குப் போகாது லீவு எடுக்க வேண்டிய நாட்களைக் குறைக்கின்றன

என்று மருத்துவ ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன.

அதன் அர்த்தம் என்ன உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருந்தால் நோய்கள் அடிக்கடி தாக்காது என்பதுடன், நோய்களின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்பதுதானே?

இது எப்படி நடக்கிறது?

உடல் பயிற்சியும் மன அமைதியும் எமது உடலிலுள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் பாதுகாக்கும் கலங்களின் (T Cells) எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. 50 முதல் 300 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றனவாம். அதனால் நோய் தடுக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது.

master.w.m.us.ExerciseToOutDistancejpg

American Journal of Medicine  ல் வெளிவந்த ஒரு ஆய்வின் பிரகாரம் தினமும் அரைமணி நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களுக்கு, எதுவித பயிற்சிகளும் அற்றுச் சோம்பிக் கிடந்த பெண்களiவிட 50சதவிகிதம் குறைவாகவே தடிமன் நோய்த் தொற்றுக்கு ஆளானார்களாம்.

மற்றொரு ஆச்சரியமான முடிவும் இந்த ஆய்வில் காத்திருந்தது. பொதுவாக வயதாகும்போது நோயெதிர்புச் சக்தி குறைவடையும். ஆனால் தொடர்ச்சியாக உடற் பயிற்சியில் ஈடுபட்ட 65 வயதுப் பெண்களில் உள்ள பாதுகாக்கும் கலங்களின் (T-cells) எண்ணிக்கையானது 30வயதுப் பெண்களினது அளவு இருந்ததாம். உடற் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்த இது போதுமானது என நினைக்கிறேன்.

நோயுடன் உடற் பயிற்சி செய்யலாமா?

 • உடற் பயிற்சியானது நோயெதிர்ப்பச் சக்தியை வலுவாக்குதால் சாதாரண தடிமல் காய்ச்சல் போன்ற நோயுள்ளபோதும் அதைத் தொடர்வது நல்லதென்றே சொல்லலாம்.
 • ஆயினும் கடுமையான உடற் பயிச்சிகளை நோயுற்றிருக்கும்போது செய்வதால் உடல் சோர்வடையக் கூடும். எனவே உடல் என்ன சொல்கிறதோ அதற்குச் செவியாயுங்கள். வலுக் கட்டாயமாக உடல் பயிற்சியில் இறக்காதீர்கள். முடிந்தளவிற்கு செய்யுங்கள். அது போதுமானது.
 • ஆஸ்த்மா நோயுள்ளவர்களுக்கு தடிமன் வரும்போது இருமல், மூச்செடுப்பதில் சிரமம் அல்லது இழுப்பு ஏற்படக் கூடும். அல்லது ஏற்கனவே இருந்தது சற்றுத் தீவிரமடையக் கூடும். அத்தகைய தருணங்களில் நீங்கள் உபயோகிக்கும் உள்ளுறுஞ்சும் மருந்துகளின் (Inhaler) அளவை அதிகரிக்க வேண்டி நேரலாம். அவ்வாறான நிலைமைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
 •   மாறாக தடிமனுடன் காய்ச்சலும் சேர்ந்திருந்தால் அதனுடன் உடற் பயிற்சி பொருத்தமாக இருக்காது. ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வழமையான உடற் பயிற்சிக்கு திரும்புங்கள்.
 • சாதாரண வேலை செய்பவராயின் என்றால் அதைத் தொடர்வதில் தவறு ஏதும் இல்லை. மாறாக கடுமையான உடல் உழைப்புடன் கூடிய வேலை எனில் ஒருரிநாள் ஓய்வு எடுப்பது நல்லது.

விற்றமின் சீ தடுக்குமா?

விற்றமின் சீ மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பதால் தடிமன் சளி நோயை தடுக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடமும் வலுவாக இருக்கிறது. ஆயினும் 2007ம் ஆண்டு பிரித்தானியாவில் குடும்ப மருத்துவ கழகத்திற்காக Dr Hasmukh Joshiதலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் தினசரி இது உறுதிப்படுத்தவில்லை.

vitamin_d_immune

இருந்தபோதும் நோயிருக்கும்போது எடுத்தால் அதன் கடுமையை ஓரளவு தணிப்பதுடன் அது நீண்டநாள் தொடர்வதையும் தடுக்கும்.

மழையில் நனைவதும் குளிரில் அலைவதும்

மழையில் நனைவதாலும் குளிரில் அலைவதாலும் தடிமன் பிடிக்கும் எனப் பலர் சொல்வார்கள். இது உண்மையா?

The Rain Room Is Unveiled At The Curve Inside The Barbican Centre

தடிமன் என்பது ஒரு தொற்று நோய். வைரஸ் கிருமியால் வருகிறது என ஏற்கனவே பார்த்தோம். எனவே மழை குளிரால் வருமென்பது தவறான கருத்தாகவே இருக்கும். ஆனால் பலருக்கு அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன?

பலரது நாசித் துவாரத்தில் அக் கிருமி இயல்பாகவே இருக்கக் கூடும். குளிரான சூழலில் நாசியில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைகிறது. அதனால் ஏற்கனவே இருந்த கிருமிகள் பெருகி நோயை உண்டாக்குகிறது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »

பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே என யானை முகத்தானைப் பக்தர்கள் துதித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் பானை வயிறுள்ளவர்கள் மற்றவர்களைக் காப்பது முடியாது என்பது மட்டுமல்ல தம்மையும் காப்பது கடினம் என நவீன மருத்துவம் கூறுகிறது.

பானை வயிறு என்றால் என்ன?

எமது உடலில் கொழுப்பு உள்ளது. உடலின் எடை அதிகரிப்பிற்கு இந்தக் கொழுப்பு மிக முக்கிய காரணமாகிறது. எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமான கொழுப்பானது எமது சருமத்தின் கீழ் இருக்கிறது.

அதே போல எமது வயிற்றறையிலும் இருக்கிறது. வயிற்றறையில் இருக்கும் கொழுப்பு, தசைகளுக்கும் கிழே உள்ளுறுப்புகளுடன் சேர்ந்திருக்கும்;போதே வயிறு அதிகம் பருமனாகிறது. தொந்தி விழுகிறது. ஆபத்து மிக அதிகமாகிறது.

அதீத எடை ஆபத்தானது
அதீத எடையின் ஆபத்துக்கள் பலவாகும்.

அதீத எடையானது பல ஆபத்தான நோய்களுக்குக் காரணமாகிறது என்பதை அறிவீர்கள்.

அதீத எடை என்பது உடற் திணிவுக் குறியீடு (BMI-30) 30ற்கு மேல் என மதிப்பிடுகிறார்கள்.

பணச் செழிப்பும் உணவு அதிகம் நிறைந்ததுமான அமெரிக்காவில் மட்டும் 72 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறான அதீத எடை கொண்டவர்களாகும்.

 • நீரிழிவு
 • குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு
 • உயர் இரத்த அழுத்தம்
 • ஆஸ்த்மா
 • முழங்கால் தேய்வு உட்பட்ட மூட்டு நோய்கள்
 • தூக்கத்தில் மூச்சுத் திணறல்

போன்ற பல நோய்களுக்குக் அடிப்படைக் காரணமாகிறது. எனவே தான் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 ஒரே ஒரு நன்மையா?

பாதிப்புகள் பல இருந்தபோதும் ஒரே ஒரு நன்மை அவதானிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களில் மட்டும். அதிக எடையுள்ள பெண்கள் மெலிந்த பெண்களைவிட குறைந்தளவே எலும்புத் தேய்வுக்கு ஆளாவதாக அறியப்படுள்ளது.

இருந்த போதும் இது பற்றி இப்பொழுது மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதீத எடை கொண்ட பெண்களில் கொழுப்பானது வயிற்றறையில் இருந்தால் அவர்களது எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருப்பதுடன் எலும்பிலும் கொழுப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இது காலகதியில் இடுப்பு எலும்பு முறிவு, முள்ளதண்டு எலும்புகளில் உடைவு ஆகியவற்றைக் கொண்டு வரும்.

அதாவது கொழுப்பு சருமத்தின் கீழ் இருப்பதை விட வயிற்றறையில் இருந்தால் பாதிப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒஸ்டியொபொரோசிஸ்

அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் மக்கள் எலும்பு அடர்த்தி குறைந்த ஒஸ்டியொபொரோசிஸ் (Osteoporosis) நோயினால் துன்பப்படுகிறார்கள். மேலும் 10 மில்லியன் மக்களின் எலும்புகள் நலிவுற்று அந்நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள்.

எமது நாட்டிலும்  இந் நோயினால் பலர் இடுப்பு எலும்பு முறிந்து சிரமப்படுகிறார்கள்.

இதற்கான சத்திர சிகிச்சைகள் இருந்தபோதும் அது செலவானதும் சிரமமானதும் ஆகும். முள்ளத்தண்டு எலும்பு உடைவு மற்றும் சிதைவு காரணமாக முதுகுவலி, கால்வலி, குனிந்து வேலை செய்ய முடியாமை எனப் பல தொல்லைகளுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பற்றிய தரவுகள் இங்கு கிடையாது. ஆனால் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றறைக் கொழுப்பின் ஏனைய பாதிப்புகள்

வயிற்றறைக் கொழுப்பு அதாவது தொந்தி வண்டியானது எலும்புப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இருதய நோய்கள், நீரிழிவு ஆகியன ஏற்படுவதற்கும் மிக முக்கிய காரணங்களாகும்.

அதனால்தான் பல மருத்துவர்கள் பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, எடை ஆகியவற்றை அளவிடுவதுடன் வயிற்றின் சுற்றளைவையும் அளந்து பார்க்கிறார்கள்.

அளந்து பாருங்கள்

உங்கள் வயிற்றில் கொழுப்பு அதிகமிருப்பதை அறிவது எப்படி? வயிற்றின் சுற்றளவை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி.

கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். நாங்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகளாவன

ஆண்களுக்கு 90 செமி அல்லது 35.4 அங்குலங்கள் குறைவாக
பெண்களுக்கு 80 செமி அல்லது 31.5 அங்குலங்கள் குறைவாக

இதற்கு  மேல் அதிகரிக்க விடாதீர்கள்.


வயிற்றறைக் கொழுப்புக்குக் காரணங்கள்

வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணங்கள் என்ன? பொதுவான எடை அதிகரிப்பிற்குக் காரணமான அதே தவறான உணவுமுறைகளும், போதிய உடற் பயிற்ச்சி இல்லாததுமே ஆகும். ஆனால் அத்துடன் பரம்பரைக் காரணங்களும் உள்ளன. இயற்கையாகவே மேலை நாட்டவர்களை விட ஆசிய நாட்டவர்களுக்கு வயிறு வைப்பது அதிகம்.

முயற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உணவுமுறைகளுடன் தினசரி உடல் உழைப்பு அல்லது பயிற்ச்சி மூலம் உங்கள் எடையையும் முக்கியமாக வயிற்றில் கொழுப்பையும் குறைத்து உடல் நலத்தை அக்கறையுடன் பேணவேண்டும்.

இரத்தத்தில் கொழுப்பு

இரத்தத்தில் கொழுப்பு என்பது முற்றிலும் வேறு விடயம். அது கொலஸ்டரோல் பற்றியது. அதீத எடையுள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாயினும் மெலிந்த எடை உடையவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.

Source: Radiological Society of North America, December 2010

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

ஒரு தொடர் மாடி வீட்டிற்குச் சென்ற போது பல ஆண்கள் தும்புத்தடி, பிரஸ், பூச்சி மருந்து ஸ்பிரேகள் சகிதம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசயம்?” என விசாரித்தேன்.

“சிரமதானம் செய்கிறோம். கரப்பத்தான் பூச்சிகளை ஒழிப்பதற்கு” என்றனர்.

சமூக அக்கறையுள்ள செயற்பாடு. கேட்பதற்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

எங்கும் உள்ளவர் எல்லாம் வல்லவர்.

எங்குமுள்ள எல்லாம் வல்ல ஆண்டவனோ என்று சொல்லுமளவிற்கு உலகெங்கும் பரந்துள்ளனர். அத்துடன் பலவிதமான நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிக்க எடுக்கும் எந்த முயற்சியும் பாராட்டத்தக்கதே. உலகை ஆட்சி புரிந்து வருவது இவர்களது இனம்தான்.

சாதாரணமாக நாங்கள் கரப்பொத்தான் பூச்சி என்று சொன்னாலும் இவர்களுக்குள் 5000ற்கு மேற்பட்ட உப இனங்கள் உள்ளனவாம்.

இவைகளுள் மிகப் பெரியவரைக் கண்டால் குழந்தைகள் மட்டுமல்ல நீங்களும் பயந்துவிடுவீர்கள். 6 அங்குல நீளமும் சிறகு விரித்தால் ஒரு அடி வரையான அகலமும் உள்ள வகையானவர் தென் அமெரிக்காவில் வசிக்கிறார்களாம்.

கரப்பொத்தான் பூச்சியைக் கண்டாலே பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும்.

அவற்றின் அசிங்கமான தோற்றமும், அதன் எச்சங்கள் விட்டுச் செல்லும் துர்நாற்றமும் எல்லோரையும் அருவருப்படையச் செய்துவிடும்.

கழிவறையில் களிநடனம் புரியும் அவர் கால் கை கழுவாமலே சமையலறையிலும், சாப்பாட்டு மேசையிலும் வாய்ப்புக் கிடைத்தால் உணவுகளின் மீதும் ஊர்ந்து செல்வதைக் கண்டால் யாருக்குத்தான் வாந்தி வராது.

திடீரென சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தால் எப்படித் தப்புவது எனப் புரியாது பதுங்கவே மனம் நாடும்.

பரப்பும் நோய்கள்

இவர்களிலிருந்து வரும் மருத்துவப் பிரச்சனைகளில் முக்கியமாக அலர்ஜியையும் ஆஸ்த்மாவையும் சொல்லலாம். இவற்றின் மலம், எச்சில், முட்டை, தோல் போன்ற யாவுமே ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

உங்களுக்கு அல்லது வேறு எவரை எடுத்துக் கொண்டாலும், முன் எப்போதும் ஒவ்வாமை இல்லாதவர்கள் கூட கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஒவ்வாமை தோன்றிவிட வாய்ப்பு அதிகமிருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

அதே நேரம் ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தை கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் கடுமையான ஆஸ்த்மா வருவதற்கும், அதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைகளும் அதிகமாக எற்படுமாம்.

இவற்றின் எச்சங்கள் தோலில் அழற்ச்சி, அரிப்பு, எக்ஸிமா போன்ற நோய்களையும் ஏற்படத்துகின்றன.

அழுக்குகளில் உழலும் இவரது உடலிலும், உணவுக் கால்வாயிலும், மலத்திலும் கலந்திருக்கும் சல்மனலா Salmonella கிருமிகளால் உணவு நஞ்சடைதல் ஏற்படலாம். அதேபோல அவற்றிலிருந்து Staphylococcus, Streptococcus போன்ற கிருமிகளும் தொற்றுகிறது.
 

வதிவிடம்

வடதுருவக் குளிரிலும் வாழக் கூடிய வலு உள்ள இவர் எங்கும் இருக்கலாம். இவர்களது வாழ்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டியவையாவன.

 • ஈரலிப்பு
 • சற்று வெப்பமான சூழல்
 • உணவு
 • ஒளிந்து உறைய சிறு வெடிப்புகள் துவாரங்கள் போன்ற இடங்கள்

உணவு

அவர் சொகுசு உணவுகளைத் தேடி அலைபவர் அல்ல. உங்கள் சமையறையில் சிந்திக் கிடக்கும் உணவுத் துகள்கள் போதுமானது. புத்தகம் கட்டும்போது இடப்பட்ட பசை, சுவரில் ஒட்டப்பட்ட படங்களுக்கு பின் இருக்கும் பசை கூட அவருக்கு உணவாகலாம். இதனால்தான் நீங்கள் எவ்வளவு சுத்தமாக உங்கள் இருப்பிடத்தை வைத்திருந்தாலும் அவருக்கான உணவு கிடைத்துவிடுகிறது.

இனப்பெருக்கம் பரம்பல்

அத்துடன் இனப் பெருக்கத்தில் மிக வேகம் கொண்டவர். நீங்கள் உங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் மளிகைக் கடையில் வாங்கி வந்த பொருட்களுடன் வந்துவிடுவார்.

அல்லது பக்கத்து வீட்டிலிருந்து கதவின் கீழாகவோ அல்லது கழிவுப் பைப்புகள் ஊடாகவோ ஒரு கரந்துறைப் படைவீரன் போலச் சிமிக்கிடாமல் உள் நுழைந்துவிடுவார். ஒரே ஒரு கர்ப்பணிக் கரப்பொத்தான் பூச்சி நுழைந்துவிடுகிறார் என வைத்துக் கொள்வோம். கவனியாது விட்டால் அவரது பரம்பரையினராக 100,000 பேர் உங்கள் வீட்டில் வாசம் செய்யக் கூடும்.

பெருகுவதைத் தடுப்பதும் நீங்கள் தப்புவதும்.

சுத்தம் மிக முக்கியம். அவருக்கு உண்ண எதுவும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தங்கள்.

 • அரிசி, உழுந்து போன்ற தானியங்களையும் விதைகளையும் காற்றுப் புகாத போத்தல்கள் ஜாடிகள் பொன்றவற்றில் சேமித்து வையுங்கள்.
 • உணவு உண்ட கோப்பைகள், பானம் அருந்திய கிளாஸ் போன்ற எதனையும் இரவில் சுத்தம் செய்யாது வெளியே வைக்க வேண்டாம். 
 • உணவு உண்ட மேசை, வோஷ் பேசின், போன்ற யாவற்றையும் சுத்தம் செய்த பின்னரே படுக்கைக்குச் செல்லுங்கள். 
 • குப்பை வாளிகளை மூடி வையுங்கள். 
 • வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவு வைத்தால் இரவில் அது காலியாக சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

 • சிந்தும் ஒழுகும் குழாய்களை உடனடியாகத் திருத்துங்கள். 
 • சுவரில் உள்ள வெடிப்புகள், குழாய் செல்லும் பாதைகள், வயரிங் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சிறு இடுக்குகள் வழியாக நுழைந்து விடுவார்கள். எனவே அவற்றை அடைத்து அவரது பாதைகளை மூடுங்கள்.

மிகச் சிறிய குஞ்சு 5 மிமி இடைவெளிக்கு ஊடாக புகுந்து வந்துவிடுவார். ஆண்களுக்கு 1.6 மிமி, வயிறு பருத்த கரப்பணிகளுக்கு 4.5 மிமி போதுமாம். சென்ரி மீற்றர் அல்ல மில்லி மீற்றர்.

குளியலறை, சமையலறை ஆகியன அவர்களுக்கான உணவும் ஈரலிப்பும் கிடைக்கக் கூடிய இடங்கள் ஆதலால் அதிக கவனம் எடுக்க வேண்டிய இடங்களாகும். அத்துடன் குழாய்கள் வரும் பாதைகள் அவர்கள் உள் நுழைய மிக வசதியான வழிகளாகும்.

தேவையற்ற பொருட்களை அகற்றி விடுங்கள். பழைய துணிகள் கால்மிதிகள், ஸ்பொன்ஞ் போன்ற எதையும் அகற்றாது விட வேண்டாம்.

சிலிக்கா ஜெல், போரிக் அசிட் பவுடர் ஆகியன அவரை விரட்டக் கூடிய ஆபத்தற்ற பொருட்களாகும். கிருமி கொல்லி மருந்துகள் நஞ்சாதலால் மிகுந்த அவதானத்துடன் உபயோகிக்க வேண்டியவையாகும்.

தொடர் மாடிவீடுகள் அவர்களுக்கு மிக வசதியானவை. இடமாற்றம் பெற்று புது வீட்டிற்கு மாறிவிடுவார்கள்.

எனவே ஒரு வீட்டிலிருந்தோ அல்லது கீழே உள்ள கழிவு நீர்ப் பாதைகள் பொது வழிகள் ஆகியவற்றை ஒழித்துவிடுவது மட்டும் போதுமானதல்ல.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும். அதுவும் ஒரே நேரத்தில்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை.
0.0.0.0.0.0.0

Read Full Post »

« Newer Posts - Older Posts »