Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தமிழ் திரைப்படம்’ Category

>

பிரபல எழுத்தாளரான நீல.பத்மநாதனின் சிறந்த நாவலான ‘தலைமுறைகள்’ திரைப்படமாக வெளிவந்துள்ளது. வ.கெளதமனின் நெறியாள்கையில் ‘மகிழ்ச்சி’ என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது. இலங்கையில் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இத் திரைப்படத்தை எதிர்வரும் ஞாயிறு 15.05.2011 அன்று இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் காட்சிப்படுத்த இருக்கிறது.

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு மையம்
                கேட்போர் கூடம்
                58, தர்மாராம வீதி
                கொழும்பு 06.

நேரம்:- மாலை 4.30 மணி (ஞாயிறு 15.05.2011)

நல்ல திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்கள் தப்பவிடக் கூடாத சிறந்த திரைப்படம்.

நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படிக்காத நல்ல வாசகன் இருக்க முடியாது. கைவிரல்களுக்குள் அடக்க கூடிய மிகச் சிறந்த தமிழ் நாவல்கள் எனப் பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயம் இது கட்டாயம் இருக்கும்.

கேரளத்தை அண்டிய தமிழ் பரப்பான குமரி மாவட்டத்தின் இரணியல் கிராமத்து செட்டிமார் சமுதாயதினரின் வாழ்வை இயல்பு கெட்டாமல் யதார்தமாகச் சித்தரிக்கும் படைப்பு எனலாம்.

வட்டார வழக்கு, சாதீயத்திற்கு எதிரான குரல், பெண்ணியம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் இந்நாவல் பிரச்சாரத்தனமான வரண்ட படைப்பு அல்ல.

ஒரு கிராமியச் சூழலில் சுமார் 50-60 வருடங்களுக்கு முன் நடந்ததாக வருகிறது. அக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத மறுமணம், அதுவும் கணவன் உயிரோடு இருக்கும்போது, அதே கிராமத்தில் நடப்பது முடியாத காரியம். இவற்றை துணிந்து கூறும் மிகச் சிறந்த இலக்கியம் எனலாம்.

அந்தக் கதையைத்தான் இப்பொழுது மகிழ்ச்சி என்ற திரைப்படமாகத் தருகிறார் இயக்குனர் கௌதமன்.

Read Full Post »

புகைப்படக் கண்காட்சி போன்றதொரு திரைப்படம்

அண்மையில் வந்து அதிகம் பேசப்படாமலே போன ஒரு படம். போர்க்களம். அற்புதமான படம் அல்லாவிட்டாலும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் பல உண்டு. சில காரணங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியதும் கூட.

இரண்டு விடயங்களை முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முக்கியமாக அதன் மிக வித்தியாசமான காட்சிப்படுத்தல் எனலாம். எந்தத் திரைப்படத்திலும் மிக முக்கியமான அம்சம் இதுவேயான போதும் மிகப் பெரும்பாலானவை வழமையாக போர்முலா வடிவை மீறுவதே இல்லை. இது மீறியிருக்கிறது.

இரண்டாவது கண்பார்வையற்றவன் பற்றிய மறுபக்கப் பார்வை எனலாம்.

போர்க்களம் இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் அற்புதமான படப்பிடிப்புத்தான். ஒவ்வொரு பிரேமும் மிகவும் அக்கறையோடு கலையம்சத்தோடு எடுக்கப்பட்டுள்ளன. ஒளிச் சேர்க்கை, வண்ணக்கோலம், வித்தியாசமான கமராக் கோணம் என அசத்தலாக இருக்கின்றன. புகைப்படப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய படமாகும். புகைப்படக் கண்காட்சிகளில் மட்டுமே காணக் கூடிய கமாராக் கோணங்கள் திரைப்படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இது தமிழ் திரைப்பட இரசிகர்களுக்கு முதல் அனுபவமாகவே இருக்கும்.

இரண்டாவது முக்கிய அம்சம் கண் தெரியாத ஒருவன் எவ்வாறு தனக்குள்ள புலக் குறைபாட்டை மேவுவதற்கு செவிப் புலனை எவ்வாறு அதிகபட்சம் பயன்படுத்துகிறான் என்பதாகும். உயிர் பிழைப்பதற்காக தாறுமாறாக ஓடுகிற ஒருவனை துப்பாக்கியால் சுடுமளவிற்கு அவன் தனது செவிப்புலனைத் தீட்டி வைத்திருக்கிறான்.

அந்தப் படத்தின் பிரதான பாத்திரம் கர்ணன். ஆனால் அவன் பார்வையிழந்தவன் என்பது படம் நீண்ட நேரம் பயணித்த பிறகே தெரிகிறது. அதுவரை அவனது பாத்திரம் சற்றுப் புதிராக இருந்தமை எதிர்பார்க்கக் கூடியதே. அவன் பிறவிக் குருடன் அல்ல. பள்ளி செல்லும் காலத்தில் ஒரு விபத்தில் அவனது கண்பார்வை பறிபோய்விடுகிறது. ஆனால் தனக்குள்ள குறையால் சோர்ந்து மனவிரக்திக்கு ஆளாகவில்லை. சவாலாக ஏற்றுக்கொள்கிறான். கேட்கும் திறனை முழுமையாகப் பயனப் படுத்திக் கொள்கிறான். ஓலியை கருவியாக்கி சூழலை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான்.

கண்பார்வை அற்ற ஒருவனால் எப்படி இவ்வளவு வல்லமையோடு இருக்க முடிகிறது என்பதும், தனி ஒருவனாகப் பலரை வெட்டி வீழ்த்த முடிகிறது என்பதும் பலருக்கு மிகைப்படுத்தபட்ட காட்சிகளாகத் தோன்றாம். ஆனால் தமிழ்ப்படத்தின் சூப்பர் ஸ்டார் கதாநாயகர்கள் வழமையாக பலருடன் ஒரே நேரத்தில் மோதி வெல்வதை எமது ரசிகர்கள் எவ்வித ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அது அதிமானுடச் செய்கையாகத் தெரியவில்லை. பலருக்கு அதுவே உவப்பானதாகவும் இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பார்வையற்ற இவனின் சண்டைக் காட்சிகள் ஆச்சரியமானதாக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய விதண்டா வாதத்திற்கு மேலாக, பார்வையற்ற ஒருவன் தன் முழுச் செவிப் புலனையும் செம்மையாகச் செதுக்கிப் பயன்படுத்தி; பார்வையுள்ளவர்கள் செய்யும் பல செயற்பாடுகளையும் அதே பூரணத்துவத்துடன் செய்ய முடியும் என்பது உண்மை.

மனிதர்கள் தங்கள் கண் பார்வையை, கேட்கும் ஆற்றலைவிட மிக முக்கியமானது என எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் ஒலிகளையே முதலில் உணர்கிறது. அத்திசையில் தலையைத் திருப்புகிறது. பார்வையால் சூழலை உணர நீண்ட காலம் அதற்குப் பிடிக்கிறது.

குழந்தையை விடுங்கள் உங்களை எண்ணிப் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்து பாருங்கள். உண்மை புரியும். எவ்வளவு ஓசைகளை உங்களால் கேட்க முடிகிறது. காற்றின் சலசலப்பு, எங்கோ கூவும் குருவியின் குரல், காலடி ஓசைகள். எத்தனை எத்தனையோ.

இவை யாவும் நீங்கள் கண் திறந்திருக்கும் போதும் நிகழ்திருக்கவே செய்யும். ஆயினும் உங்கள் புலன் பார்வையிலேயே பெருமளவு தங்கி இருப்பதால் இவற்றைக் கேட்க ரசிக்க முடியவில்லை.

ஒரு ஓசை என்ன ஓசை என்பது மட்டுமின்றி அது எத் திசையிலிருந்து வருகிறது. அது நகரும் ஓசையா அல்லது ஒரே இடத்தில் நிலையான நிற்கும்  பொருளிலிருந்து பிறக்கிறதா என்பதையும் எம்மால் அனுமானிக்க முடிகிறது.

மேலே கூறிய காலடி ஓசையை அல்லது ஒரு ஓடும் வாகனத்தின் ஓசையை எண்ணிப் பாருங்கள். அது எந்தத் திசையிலிருந்து எழுகிறது. அது எம்மை நோக்கி வருகிறதா அல்லது எம்மை விட்டு அகல்கிறதா என்பதை எம்மால் கண் மூடியிருக்கும் போது ஒலியை மாத்திரம் கொண்டு அனுமானிக்க முடியும். நகரும் ஒலி எவ்வளவு வேகத்தில் எம்மை நோக்கி வருகிறது அல்லது பிரிந்து செல்கிறது என்பதையும் எம்மால் துல்லியமாகக் கூற முடியும்.

இதற்குக் காரணம் எமக்கு இரண்டு காதுகள் இருப்பதும், அவை சுமார்  அரை அடி தூர வித்தியாசத்தில் இருப்பதும், இரண்டும் வௌ;வேறு திசைகளை நோக்கி இருப்பதும்தான். இதனால் ஒரே ஒலி எமது வலது காதையும் இடது காதையும் வந்தடையும் நேரத்தில் சில செகனட் வித்தியாசம் இருக்கிறது. இந்த நேர வித்தியாசத்தை எமது மூளையானது கம்பியூட்டர் போல அனலைஸ் பண்ணுகிறது. இதனால் ஒலிகளின் திசையை, வேகத்தை, தீவிரத்தை எம்மால் உணர முடிகிறது.

கண் மூடியதும், காது மேலும் கூர்மையாகிவிடுகிறது. இக் கதாநாயகன் கர்ணன் இவ்வாற்றலை தனது முயற்சியால் மேலும் வளர்த்துக் கொண்டான்.

கதையில் எந்தப் புதுமையும் இல்லை. கிஷோர்(கர்ணன்) சத்யன் உதவியுடன் தனியாக வாழ்கிறான். கார் ஓட்டுவதிலிருந்து உணவு தேநீர், வீடு பாராமரிப்பு எல்லாம் சத்யன் எனும் ஒரே உதவியாளன் மட்டுமே. ஆந்திரா லங்காவின் தனிக்காட்டு ராஜாவான தாதா சம்பத் ஸ்மிதாவை கரம் பிடிக்க ஆசைப்படுகிறான்.

அவனிடமிருந்து தப்பித்து ஓடிவரும் அவள் கிஷோரிடம் தஞ்சம் அடைகிறாள். துரத்தி வரும் ஆந்திர தாதாக்களை துவசம் பண்ணிக் கலைக்கிறான். அரை மனத்தோடு தனது இடத்தில் தஞ்சம் கொடுக்கும் அவனில் அவளுக்கு காதல் வந்துவிடுகிறது. கண் பார்வை இல்லாததால் இதனை ஏற்க விரும்பாத கிஷோர் அவளை போலீசில் கொடுத்து வீட்டாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறான். அவர்களோ சம்பத்திடமே கையளித்து விடுகிறார்கள்.

மீதி படம் முழுவதும் ஆந்திரா தாதாக்களுக்கும் இவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். இறுதியில் போர்க்களத்தில் அவர்களைத் தனியே சந்திக்கிறான். கண் தெரியாத இவன் எப்படி தனது உடல் பலத்தையும், செவிப் புலனையும், பகுத்தறிவையும் பாவித்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான் என்பதே கதை.

தாதாக்கள், ரோட்டு ரவுடிகள், சந்தர்ப வசமாக கொலையாளிகளாக மாறும் நல்லவர்கள் என தமிழ் திரையுலகு நிறையவே தந்தவிட்டது. ஆயினும் சுப்ரமணியபுரம் நாடோடிகள், ரேனிகுண்டா, வெண்ணிலா கபடிக்குழு என பல நல்ல படங்கள் அதனுள் கிடைத்திருக்கினறன.

அந்த வரிசையில் சேர்க்கத் தக்கது இது. தேவையற்ற காட்சிகள் கிடையாது. எந்த ஒரு பாத்திரமும் அவசியம் இன்றி படத்தில் இல்லை. படத்தின் ஓட்டம் சற்று மெதுவாக இருக்கிறது. வசனங்கள் மிகக் குறைவு. காட்சிகளால் நகர்கிறது. அதுவே அதன் பலம். சில தருணங்களில் பலவீனமும் கூட. ஏனெனில் கதையின் நகர்வை சில இடங்களில் தெளிவாகப் புரிந்த கொள்ள முடியாதிருக்கிறது.

காட்சி அமைப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. பளீரென கண்ணைக் குத்துவது போலன்றி சற்றுக் கருமை படர்ந்த ஒளிஅமைப்பு. படப்பிடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து அல்பத்தில் சேர்க்கலாம் போலிருக்கிறது. வண்ணங்கள் இயற்கையானவை அல்ல. இரண்டு கலர் டோன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பல எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கிறது. மனதைச் சூழும் திகிலைத் தீவிரமாக்கத் பின்னணி இசையும் துணையாக இருக்கிறது.

விழிப்புலன் அற்றவர்களை நையாண்டி செய்யாது  உயரத்தில் நிறுத்தி வைத்த பெருமை மேஜர் சுந்தரராஜனுக்கு உண்டு. அக்காலத்தில் இரசித்த படம் அது – மேஜர் சந்திரகாந்.

இப்பொழுது விழிப்புலனற்றவனை மற்றொரு பரிமாணத்திற்கு உயர்த்தி வைத்த பெருமை  போர்க்களம் படத்திற்கு உண்டு.

வெண்ணிலா கபடி குழு சினிமாவில் கபடி கோச் ஆக வந்து மனதில் நின்ற கிஷோர் இத் திரைப்படம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமா உலகில் பெற்றிருக்கிறார். பொல்லாதவன், ஜெயம்கொண்டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்ததாக அறிகிறேன். ஆனால் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

குளொஸ் அப் சொட்கள் இல்லை. இதனால் முகத் தசைகள் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆயினும் கிஷோரின் உடல் மொழி அற்புதமாகக் இருக்கிறது.

ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் பிரகாசிப்பார் எனத் தோன்றுகிறது. பாத்திரத்திற்கு ஏற்ப அவரது குரலின் அடர்த்தியும் உதவுகிறது.
தன்னைச் சுற்றித் திரியும் காற்றின் மொழியை, அதன் ஒவ்வொரு அசைவையும் மிக நுட்பமாகக் கிரகித்து சூழலை தனது கணனி போன்ற மூளையில் பிரித்தறிந்து எதிர்வினை புரிவது அட்டகாசமாக உள்ளது.

எதிரியைத் தாக்கும்போது அவனது அசைவை நிதானமாக காது கொடுத்துக் கிரகித்து அவன் தன் கைக்கு அகப்படும் எல்லைக்குள் வந்ததும், எதிரி எதிர்பாராப் பிரகாரம் மரண அடி கெடுப்பதும் அசத்தலாக இருக்கின்றன.

ஆயினும் தனிமனிதன் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆராச்சிகளுக்குள் நாம் புகக் கூடாது.
இவை எமக்கு பரிச்சியமான ஒவ்வொரு தமிழ் ஹீரோக்களின் அதிமானுட நாயகர்களின் அடையாளங்களும்தான்.
அதையே புதுமை செய்யப் புகுந்த இயக்குனரும் பின்பற்றுவது ஏமாற்றம் தரவே செய்கிறது.

சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு மரண அடி கொடுத்த பின் ஒரிரு கணங்கள் அசையாமல் நிற்பது அவனது ஸ்டைலான போஸாக இருக்குமோ என எண்ணினேன்.

ஆனால் மருத்துவனாக நின்று யோசிக்கும்போது கண் பார்வையின்றி ஒலியின் சலசலப்பில் மட்டுமே சூழலை அளக்கும் ஒருவனால் அப்படித்தான் இயங்க முடியும் எனப் புரிகிறது.
திடீரெனப் கொடுத்த அடியினால் பிறந்த ஓசையும், அடி வாங்கியவனது வேதனை ஒலியும் மேலோங்கி நின்று அவனது கவனத்தைத் திருப்பியிருக்கும்.
சற்று நிதானித்தே மீண்டும் சூழலுக்குள் அவனால் வரமுடியும். அதனால்தான் அப்படிச் சித்திரித்துள்ளார்கள்.

இவற்றை நடிகன் மாத்திரம் செய்ய முடியாது. இயக்குபவனின் பங்கு மிக அதிகம். பாண்டி சரோஜ்குமார் தனது முதல்படத்திலேயே பல புதுமைகளைச் செய்துள்ளார். பாங்காக் திரைப்படக் கல்லூரியில் இயக்குனராகப் பயின்றவர். மிக வித்தியாசமான இயக்குனர். திரைக் கதையில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தி, படத்தின் வேகத்தையும் – முக்கியமாக பிற்பாதியில் சற்று அதிகப்படுத்தி இருந்தால் அற்புதமான படமாக இருந்திருக்கும்.

சத்யன்தான் கிஷோரின் உதவியாளன். அப்பாவித்தன நடிப்பினால் சிரிக்க வைக்கிறார். சற்று நேரம் மட்டுமே தோன்றினாலும் பிஜு மேனன் தனது நடிப்பாலும் துப்பாக்கி சாகசங்களாலும் மனதில் நிற்கிறார். ஸ்மிதா நாயகி பெரிதாக வேலையில்லை.

ஆனந்தனின் கலை இயக்கம் படத்தின் சிறப்பிற்கு மிகவும் உதவியிருக்கிறது.

பாடல்கள் சாதாரணம். ஆயினும் பின்னணி இசை பல இடங்களில் அருமையாக இருக்கிறது.
சில நேரங்களில் திகிலூட்டவும் செய்கிறது. இந்தி இசை அமைப்பாளரான ரோஹித் குல்கர்னிதான் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்கள். நா. முத்துகுமாரின் ஆக்கங்கள். மனதில் நிற்கிற மாதிரி இல்லை.

ஆயினும் படத்தின் சிறப்பாக மனதில் கடைசிவரை ஒட்டிக் கொண்டிருப்பது ஒளிப்பதிவுதான்.
ஒளியும் இருளும் காட்சிக்குக் அற்புதமான விகிதாசாரத்தில் கலந்து மந்திரஜாலமாக அசத்துகிறது. ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒற்றக் கூடியன.

முற்றிலும் எதிர்பார்க்காத, வித்தியாசமான கோணங்களில் அவரது கலையுணர்வை மோகிக்கும் வண்ணம்; பதிந்த மகேந்திரன் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆயினும் தேவராஜ், மற்றும் தேவா ஆகியோரும் பங்களித்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்து, காட்சியமைப்பு, இயக்கம் பண்டி சரோஜ்குமார் என்றே போடப்படுகிறது. எனவே இவற்றில் இயக்குனரின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

கோடரியும் வாளும் இணைந்தது போன்ற வித்தியாசமான ஆயுதங்கள்,
இறந்த மாட்டின் முள்ளந்தண்டு எலும்பு,
மண்டை ஓடு போன்ற பின்னணிகள் பயங்கரமாக இருந்தாலும் பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை.

இறுதியாகச் சொல்வதாயின்
மிகச் சாதாரணமான ஒரு கதையை சொல்லபட்ட விதத்திலும்,
வழமைக்கு மாறான காட்சி அமைப்புகளாலும்,
கமராக் கோணங்களினாலும் பேச வைத்திருக்கிறார்கள்.

வழமையான போர்முலா படம் அல்ல.
மிகுந்த ஆர்வத்தோடு செய்திருக்கிறார்கள்.
கதை ஓட்டம் பிற்பாதியில் தொய்ந்தாலும் கடைசிச் சண்டைக் காட்சி அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது.

இறுதி வழமையான சுபம்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »

சென்ற வருடம் எழுதி மல்லிகை சஞசிகையில் வெளிவந்த இக்கட்டுரை எங்கோ கிடப்பில் கிடந்தது. அதை வலைப் பதிவு செய்வது என் திருப்திக்காக.

வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’

காமம், காமம், காமம் இதனைத் தவிர வேறு எதிலும் அக்கறையற்ற ஒருவன்.

ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படியாக வாழ்ந்தவன் அவன். அத்தகைய ஒருவனின் கதையை அண்மையில் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்தது. கண்ணில் காணும் பெண்களையெல்லாம் அந்த இடத்திலேயே கிடத்தி ருசித்துவிட்டு வீசி எறிந்து போகும் குரூர குணம் படைத்தவன்.

விபசாரிகள் முதல், இளம் பெண்கள், மற்றவன் பெண்டாட்டி, பிச்சைக்காரி வரை எங்கு கவர்ச்சி கண்டாலும் குறி வைப்பான். அத்தோடு கோபமும் முரட்டுத்தனமும் கைகோத்துவர நியாய அநியாயங்களை மதிக்காதவன். சொந்தப் பெண்டாட்டியோடும் வெறியோடு கூடிய காமந்தான். காதலோடு கூடிய கூடல் அவன் அறியாதது.

காமமும், வெறியும் இணைந்த பாலியல்; பற்றிய திரைப்படம் பற்றி ஏன் எழுத வருகிறேன் என எண்ணத் தோன்றுகிறதா? அதிலும் அதிகம் விமர்சகர்கள் கண்ணில் படாத திரைப்படம் பற்றி ஏன் எழுதுகிறேன்.

காரணத்தோடுதான். கிளுகிளுப்புகளையும் ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டி பணப்பையை நிரப்பும் நோக்கோடு எடுக்கப்பட்ட அர்த்தமற்ற படம் இல்லை. மாறாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வருகிறது. அதிலும் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அக்கறை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்பதுதான் காரணம்.

காதல் புனிதமானது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல்கள் காமத்திற்கான ஆசாரப் பூச்சுக்கள் மட்டுமே. ஆனால் காமம் புனிதமானது என்றோ, எதிர்மாறாக கேவலமானது என்றோ சொல்ல முடியாது.

எல்லா உயிரினங்களுக்குமே இயற்றையான உணர்வு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மற்றட்ட காமம், எல்லை மீறிய காமம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவை அவர் இருவர் உணர்வு சார்ந்தவை இல்லையா? காமம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் நின்றாலும் சரி அந்த எல்லையை மீறியாலும் சரி அது இயற்கையான உணர்வு, விஞ்ஞான பூர்வமான செயல்.

இருந்தபோதும் முறை தவறிய காமம் எமது சமூக, நாகரீக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்ககும்போது பாதுகாப்பற்ற காமம் மட்டுமே தப்பானது. அதனால் பல ஆபத்துக்கள் காத்திருக்கும். இதைத்தான் இப்படம் சொல்ல முனைகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி கிடையர்து. காமம் அதிலும் சமூகக் கட்டுகளை மீறிய காமம் மட்டுமின்றி வன்புணர்ச்சி, பாதுகாப்பற்ற புணர்ச்சி இவை எல்லாவற்றையும் தனது வாடிக்கையாகக் கொண்டவன். அதனையே தனது ஆண்மைக்கு அழகு என்று கொள்பவன்.

பொலிகாளையை பசுவிற்கு விடும் தொழில் அய்யனாருக்கு. பொலிகாளை போலவே தானும் பெண்களின் வேட்கையைத் தணிவிப்பவன் என்ற திமிர் வேறு. இதனால் விலைமாதோடு கூடினால் கூட அவளுக்கு பணம் கொடுக்க மறுத்து, தான் கொடுத்த சுகத்திற்காக அவள்தான் தனக்கு கூலி தரவேண்டும் என அடாவடித்தனம் பண்ணுகிறான். வெளி உறவுக்கு முன்னர் ஆணுறை (கொண்டோம்) அணிய மறுக்கிறான். தன் வைரம் பாய்ந்த உடம்பை நோய், நொடி அணுகாது என வீரம் பேசுகிறான்.

கிராமத்துச் சண்டியனான இவனுக்கு அழகும் துடுக்குத்தனமும் நிறைந்த அழகம்மா மீது ஆசை வருகிறது. பணிய மறுக்கும் அவளைத் திருமணம் செய்து வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்.,

புகைப்படம் நன்றி:- http://www.thiraipadam.com/images/movies/2007/Mirugam1.jpeg

முதலிரவில் அவள் மறுக, மனைவியையே வன்புணர்ச்சி செய்கிறான். அழகுவாக பத்மப்ரியா வருகிறார். அனாசயமாக பனை மரத்தில் விறுக்கென ஏறும் போதும், நுங்கு சீவும்போதும், சீண்டுபவனை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் போதும், தோழிகளோடு ஆட்டம் போடும்போதும் பாத்திரமாகவே மாறுகிறார். அதுபோலவே பின்னர் புருஷனுக்காகக் கண்ணீர் வடிக்கும் போதும், கோட்டுவரை சென்று போராடும் போதும், பிணத்தை தான் ஒருத்தியாக தோளில் சுமக்கும் போதும் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார். தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிந்து கொல்ல முயலும் கணவனான அய்யனாரை, ஆவேசம் கொப்பளிக்க ஓங்கி உதைக்கும் காட்சியில் சுடருகிறார்.

அய்யனாராக வரும் ஆதி ஒரு புதுமுகம். கருங்கல் போல திடமான மேனி, பனைபோல திடமான நீட்டி நிமிர்ந்த நெடும் தோற்றம். நிமிர்ந்த நடை. ஆவேசமும், வன்மமும், குரூரமும் தெறிக்கும் கண்கள். கதைக்கேற்ற தேர்வு.

பிற்பாதியில் நோயால் துவண்டு வாடும்போதும், தன் செய்கைகளுக்காக வருந்தும் போதும் நன்கு தேறுகிறார்.

உபகதையான தண்ணீர் பிரச்சனை படத்தோடு நன்கு பொருந்துகிறது. ஊருக்கு குடிப்பதற்கு உகந்த தண்ணீர் இல்லாதபோது கிணறு வெட்ட ஊர் முடிவெடுக்கிறது. இவனது நிலத்தில்தான் நல்ல தண்ணீர் இருக்கிறது என அறிந்து கிணறு கிண்ட அனுமதி கேட்கும்போது அலட்சியமாக விட்டெறிந்து பேசி மறுக்கிறான்.

ஆனால் பின் நோயுற்று மனம் திருந்திய நிலையில் தண்ணீர் பஞ்சத்தை போக்கத் தன் நிலத்தில் இடம் தருகிறான். ஆயினும் நோயுற்றவன் நிலத்துத் தண்ணீரை குடித்தால் தங்களுக்கும் நோய் வருமோ என ஊர் மக்கள் தயங்குகிறார்கள். அந்த தண்ணீரை ஊரார் குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க மகனைக் கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்துக் கலங்க வைக்கிறார்.

உணவு போட்டுக் கொடுக்கும் போது கூட மகனிடம் அடியும் உதையும் வாங்கும் அம்மாவாக வருபவர், பேர் தெரியாத போதும் மனத்தில் நிற்கிறார்.

அய்யனார் ஒரு பிரச்சனையில் அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தபோதும் திருந்தவில்லை. மாறாக கஞ்சா, ஓரினப் பாலுறவு ஆகியனவும் பழக்கமாகின்றன. ஊசியால் போதை மருந்து ஏற்றுவதும் தொடர்கிறது. இறுதியில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி உடல் மெலிந்து, காய்ந்து கருகிச் சருகாகி சிறிது சிறிதாக உதிர்கிறான்.

இப் பகுதி மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர், ஒப்பனையாளர், படப்பிடிப்பாளர் அனைவரும் அர்ப்பணிப்போடு செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் படத்தின் பிரதான அம்சமே இதுதான்.

அந்த மிருகத்தின் அழிவு முழுப்படத்தின் மூன்றில் ஒரு பகுதிவரையே ஓடுகிறது என்ற போதும் செய்திப் படம் போல சலிக்க வைக்கவில்லை. கதையோடும் காட்சிகளோடும் எம்மைப் பிணைத்து வைப்பதில் இயக்குனர் சாமி வெற்றி பெறுகிறார். பாராட்டுக்குரியவர்.

புகைப்படம் நன்றி http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Mirugam01.jpg

இவரது முதல் திரைப்படம் உயிர் என்பதையும் சொல்லி வைக்கலாம்.

இதற்கு மாறாக முன் பகுதி முழுவதும் குரூரமும், வன்மமுமே நிறைந்திருந்தன. மிருகமாக வாழ்ந்த ஒரு பாத்திரத்தின் அழிவைச் சொல்வதற்கு அதன் பின்புலமான அடாவடித்தனங்களை பதிவு செய்வது அவசியமானதுதான். அதன் மூலமே அப்பாத்திரத்தின் குணாம்சத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். ஆயினும் பலதருணங்களில் நிறையவே முகம் சுளிக்கச் செய்கிறது. பல காட்சிகள் குடும்பத்தோடு இருந்து பார்க்க அசூசையளிக்கக் கூடியவை. ஆயினும் அந்தக் குரூரமான மிருகத்தின் செய்கைகளும், அதன் விளைவான அழிவும் மனத்தில் பதிந்து விடுவதை மறுக்க முடியாதுள்ளது.

இது விடயமாக இயக்குனர் சாமி ஒரு நேர்காணலில் கூறிய கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என நினைக்கிறேன். ‘நான் எடுத்துக் கொண்ட கதைக்கு – சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான அளவில்தான் காட்சிகளை வைத்திருக்கிறேன். நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காட்சிகளையே வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சினிமாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு கதையைக் கையாண்டு இருக்கிறேன்.’ என்கிறார். மேலும் ‘இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படம்.’ எனவும் தெளிவுபடுத்துகிறார்.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீருக்கு பின்னர் பிரதான பாத்திரத்தின் அழிவை மிகச் சிறப்பாகச் சித்தரித்த திரைப்படம் இது என மதன் தன் பார்வையில் சொல்லியது உண்மையாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ரத்தக்கண்ணீர்; நான் சிறுவயதில் பார்க்காத படம். பின்னர் பார்த்த சில காட்சிகள் அதை ஏற்க வைக்கின்றன. இதைப் படத்தின் சிறப்பு என்று கொள்ளலாம்.

மறுபுறத்தில் இப்படத்தின் கதையின் சில பகுதிகளும், வார்ப்பும் பல தருணங்களில் அண்மையில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை அப்பட்டமாக ஞாபகப்படுத்துவது முக்கிய குறையாகப் படுகிறது. ‘குத்த வெச்ச குமரிப் பொண்ணு …’ பாடல் அச்சொட்டாக பருத்திவீரன் காட்சி போலவே இருக்கிறது

பம்புசெட் பம்புசெட் எனப் பட்டப் பெயர் சூட்டப்படும் அழகுவிற்கு அந்தப் பட்டம் ஏன் வந்ததென்பதை இறுதிவரை ஆவலைத் தூண்டிச் செல்கிறார் நெறியாளர். இறுதியில் அதை அறியும் போது இவ்வளவுதானா என எண்ண வைத்தாலும் மென்சிரிப்போடு ரசிக்கவும் முடிகிறது.

இன்று உலகளாவிய ரீதியிலும், முக்கியமாக இந்திய உபகண்டப் பகுதியிலும் ஆபத்தான மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்து சமூகரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் எயிட்ஸ். இது பற்றிய திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். நோய் பற்றிய பல செய்திகளைத் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தாலும் அதையும் ஓரளவு கலாபூர்வமாக, சலிக்க வைக்காமல் பார்க்க வைத்ததற்கு சபாஸ் கொடுத்தே ஆக வேண்டும். நோய் தொற்றுவது எப்படி, அது தொற்றாமல் இருக்க ஆணுறை அணிதல் போன்ற பல விடயங்கள் செய்தியாக உறுத்தாமல் கதையோடு நகர்கினறன.

மிக முக்கிய விடயமாகச் சொல்லப்படும் செய்தி எயிட்ஸ் நோயாளியை எப்படி சமூகமும் வீடும் எதிர் கொள்ள வேண்டியது என்பது பற்றியதாகும்.

இதையே இத்திரைப்படம் தெளிவாகச் சொல்ல முனைகிறது என்பேன். ஒருவருடன் நெருங்கிப் பழகுவதாலோ,
தொட்டுப் பேசுவதாலோ அது தொற்றுவதில்லை.
உடலுறவால் மட்டுமே தொற்றும் நோய் இது.

நோயாளியை ஒதுக்கி வைக்கக் கூடாது.
வீட்டில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்பதை நோயாளியின் டொக்டர், அவனது மனைவி போன்ற பாத்திரங்கள் ஊடாகக் காட்சிப்படுத்துகிறது.

கிராம மக்கள் அவனை ஒதுக்கி வைப்பதையும் அவனது வீட்டை நெருப்பு வைத்து அழிப்பதையும் தவறு என்று சுட்டுகிறது,
அவனது வீட்டு குழாயில் நீர் எடுப்பதால் நோய் தொற்றாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இறந்து மடியும் அவனது உடலைத் தூக்கிச் செல்லக் கூட ஊர் மக்கள் தயங்குவதை அவளது ஆவேச வார்த்தைகள் ஊடாக கண்டிக்கிறது. இறுதியில் அவள் ஒருத்தியாகவே அவனது உடலைச் சுமந்து செல்வதும் பதிவாகிறது. மொத்தத்தில் நோய் பற்றிய வீண் பீதிகளை நீக்க முயல்கிறது.

இவை எல்லாம் எயிட்ஸ் பற்றிய தெரிந்த தகவல்கள் தானே எனச் சலிக்கிறீர்களா.

உண்மைதான் படித்த உங்களுக்கும் எனக்கும் தெரிந்த பழைய தகவல்கள்தான்.

ஆனால் இவை கூடத் தெரியாத மெத்தப் படித்த மனிதர்களை இன்றும் கூட காணக் கிடைக்கிறது என்பது நேரிடையாக அறிந்த உண்மை. இந்நிலையில் காட்சிப் புலனூடாக விழிப்புணர்பு ஏற்பட முயற்சித்தது கூடிய பலனளிக்கும் என நம்பலாம். முக்கியமாக பாமர மக்களுக்கும் எட்டும் ஊடகம் அல்லவா திரைப்படம்.

ஒளிப்பதிவு ராம்நாத் ஷெட்டி. அவரது கமராவின் கண்கள் எமது கண்களை நயக்க வைக்கின்றது. ஆயினும் நோயாளியின் உடலில் நோய் பரவுகிறது என்பதைப் காட்சிப்படுததும்; கம்பியூட்டர் தொழில் நுட்பம் சோபிக்கவில்லை. சற்றே அபத்தம் போலவும் தோன்றியது. கலைநயத்துடன மெருகூட்டியிருக்கலாம்.

இசை சபேஷ்-முரளி. பாடல்கள் மனத்துள்ளும் இசைந்து மகிழ்விக்கின்றன. பின்னணி இசையும் நன்றாக உள்ளன. பாடல் வரிகள் நா. முத்துக்குமார். அவை வெற்று வரிகள் அல்ல. கருவோடு இணைந்தவை.

இந்தப் படம் பற்றிய எனது அக்கறைக்கு இன்னுமொரு காரணம், இது தமிழ் நாட்டின் முதல் எயிட்ஸ் நோயாளி பற்றிய படமாகும். திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த உண்மைப் பாத்திரம் அது என்பது போலவே,

இன்னொரு வகையில் தமிழ் கூறும் உலகில் மற்றொரு எயிட்ஸ் தொடர்பில் முதல் நபர் நானாவேன்.
அதாவது தமிழில் முதலாவது எயிட்ஸ் பற்றிய நூலை எழுதியவன் என்றவகையில். இலங்கையில் இரண்டு பதிப்புகளைக் கண்ட எனது ‘எயிட்ஸ்’ நூல் தமிழகத்தில் என்.சீ.பீ.எச். வெளியீடாக மூன்று பதிப்புகளாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி மல்லிகை

Read Full Post »

>ஒரு நெசவுத் தொழிலாளியின் அவல வாழ்க்கை

காஞ்சிவரம்

அந்தப் படத்தின் டிவீடி பிரதியைப் பெறுவதற்கு நான் பட்ட கஸ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு வீதிக்கு வீதி தமிழ்த் திரைப்பட வீடியோக்கள் விற்பனைக்கு கிடைக்கும். வீடியோ கடைகளில் மட்டுமல்ல, வீதியோரமாக பேவ்மென்ட்டிலும் பரப்பி வைத்து விற்பார்கள். பல இடங்களில் விசாரித்தும் இல்லை என்று விட்டார்கள். சிலர் அப்படி ஒரு படம் வந்ததா என ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சாதாரண விற்பனைச் சிப்பந்தி ‘இல்லை’ என்ற போது முதலாளி குறிக்கிட்டு ‘கொப்பி முடிந்துவிட்டது. வீட்டில் கம்பியூட்டரில் இருக்கிறது கொப்பி பண்ணித் தாறன். நாளைக்கு வாங்கோ’ என்றார். மறுநாள் அல்ல நாலு நாட்கள் அலைச்சலின் பின் கொப்பி கிடைத்தது. நல்லவேளையாக அது நல்ல பிரதி. கமராப் பிரதி அல்ல. அந்தக் கடைக்காரருக்கு எனது மனமார்ந்த நன்றி.

கில்லி, பில்லா, சுள்ளி படங்கள் என்றால் என்றும் எப்பொழுதும் கிடைக்கும். இது போன்ற காவியப் படங்கள் என்றால் தேடினாலும் கிடைக்காது.

வாழ்க எமது சினிமா ரசனை!

காஞ்சிவரம் அண்மையில் பார்த்த அற்புதப் படம் இது எனலாம். அறுபது வருடங்களுக்கு முன்னான ஒரு நெசவாளியின் வாழ்க்கைத் தரிசனம் அலங்காரப் பூச்சுகளின்றி ஆனால் கலை மெருகோடு கிடைக்கிறது. காந்தி இறந்த மூன்றாம் நாள் பஸ்சில் அழைத்துச் செல்லப்படும் ஒரு கைதியின் நினைவுகளாக படம் மேலும் பின்னோக்கி நகர்கிறது.

வேங்கடம் என்ற ஒரு பட்டுத் துணி நெசவாளியாக பிரகாஸ்ராஜ். மிகவும் திறமை வாய்ந்த நெசவாளி. வெள்ளைக்காரத்துரை முதல், அவருக்கு தொழில் கொடுக்கும் அதிகாரி வரை அனைவராலும் மிகத் திறமையான நெசவாளி எனப் பாராட்டப் பெற்றவர்.

அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. குழந்தைக்கு பெயர் சூட்டு வைபவத்தின் போது பிறந்த குழந்தையின் காதில் தகப்பன்; பேசி ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். மனைவி, உற்றார் உறவினர் ஊரவர் முன்னிலையில் அவர் தெளிவாக ஒரு வாக்குறுதி கொடுக்கிறார்.

அவர் கொடுக்கும் வாக்குறுதி அனைவரையும் அசர வைத்துவிடுகிறது. இது ஒரு பட்டு நெசவாளியால் நிறைவேற்றக் கூடியதா? இது தகுதிக்கு மீறியதல்லவா? எப்படி நிறைவேற்றப் போகிறான் என்ற ஆச்சரியம் எல்லோருக்கும்.

மனைவியோ முடியாததற்கு வாக்குக் கொடுத்து மரியாதை கெடப் போகிறாரே எனக் கவலையில் மூழ்குகிறாள்.

அப்படி என்ன பெரிய வாக்கை அவன் கொடுத்துவிட்டான்? வேறொன்றுமில்லை! தனது மகள் வளர்ந்து கல்யாணமாகும் போது அவளுக்கு பட்டுச்சேலை கொடுப்பேன் என்கிறான். மகளுக்கு ஒரு பட்டுச்சேலை திருமணத்தின் போது கொடுப்பது அப்படி என்ன முடியாத காரியமா என யோசிக்கிறீர்களா. அதுவும் பட்டுப் புடவை நெய்யும் தொழிலாளிக்கு.

ஆம். அந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் அத்தனை மோசமாக இருந்தது. அன்றும் அப்படி இருந்தது இன்றும் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். நாள் முழுக்க பட்டு நூலோடும் தறியோடும் உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

வாழ்நாள் முழுவதும் பட்டுத் துணியோடு வேலை செய்தாலும் உடுக்கக் கிடைப்பதோ சாதாரண துணிதான். வீட்டில் வைத்து பட்டுத் துணியை நெய்யக் கொடுத்தால் அதில் திருட்டுச் செய்து விடுவார்கள் என்பதால் கோவிலில் வைத்துத்தான் தொழில் செய்ய வேண்டும். வேலையால் வீடு திரும்பும்போது பட்டு நூலைக் களவாக எடுத்துச் செல்கிறார்களா என்று சோதித்துத்தான் வெளியே விடுவார்கள். பற்றாக்குறை, ஏழ்மை, அவமதிப்பு, இவைதான் அவர்கள் அறிந்தது.

இந்தச் சூழ்நிலையில் பிரகாஸ்ராஜ் தனது மகளுக்கு பட்டுச் சேலை கொடுப்பதற்காகப் பட்ட வேதனைகளைத்தான் திரைப்படம் பேசுகிறது. அவனால் தனது வாக்குறதியை நிறைவேற்ற முடிந்ததா?

இந்த நேரத்தில் அவர்களது கிராமத்திற்கு ஒரு எழுத்தாளர் வருகிறார். அவர் மூலம் அவர்களுக்கு பல புதிய விடயங்கள் தெரியவருகின்றன.

தொழிலாளர்களது உரிமை என்றால் என்ன? அதைப் பெறுவதற்கு போராட்டம், பணிப் புறக்கணிப்பு போன்ற வழிமுறைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் அந்த எழுத்தாளர் ஒரு கம்யூனிஸட் கட்சிக்காரர். தலைமறைவாக இருக்கிறார் என்பது பின்னால் தெரிகிறது.

ஆயினும் இது இடதுசாரி அரசியல் சார்ந்த படமோ அல்லது வெற்று இலட்சியங்களைப் போதிக்கும் படமோ அல்ல. காந்தி இறந்த மூன்றாம் நாள் இந்தக் கதை முடிவுறுவதால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் கதை என்பது வெளிப்படை.

அக்காலத்தில் கம்யூனிசக் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. அரசின் இடுங்குப் பிடி அவர்களை துரத்துகிறது. கோரமாக ஒடுக்குகிறது. அதனால் அவர்கள் தலைமறைவாகவே இயங்குகிறார்கள். உலகப் போரில் ரஷ்யாவும் நேசநாடு என்பதால் தடை நீக்கப்படவே வெளிப்படையாக இயங்க முடிகிறது. இப்பொழுது அவர்களின் கொடியை வெளிப்படையாகப் பறக்க விட முடியும். படம் நகர்கையில் இந்த வரலாற்றை கதையோடு கதையாக உணர்கிறோம்.

அதேபோல மற்றொரு சரித்திரக் காட்சி! முதல் முதலாக மாடு இல்லாமல் ஓடி வரும் வண்டியைக் காண ஊர்ச்சனங்கள் வீதியோரம் கூடியிருப்பதும் அந்த வண்டி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர்கள் பேசி கொள்வதும் சுவார்ஸமான காட்சியாகும். ஆனால் மோட்டார் வண்டியைப் பார்க்க ஓடும் கூட்டத்தில் அவரது மனைவி விழுந்து மிதியுண்டு நோயுறுவது அவலத்தின் ஆரம்பம்.

படத்தின் பிரதான பாத்திரம் பிரகாஸ்ராஜ். ஆனால் வழமையான கதாநாயகன் அல்ல. ஓடிவிளையாடும் காதல் பாட்டோ, பலரை அடித்து விழுத்தும் ஸ்டன்ட் காட்சிகளோ அவருக்குக் கிடையாது. அதிகாரியிடமும், ஏனையவர்களிடமும் அடி வாங்குகிறார். அவமானப் படுகிறார். பொய் சொல்லுகிறார். திருடுகிறார். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டுகிறார். அரிவாளும், சுட்டியலும் கொண்ட செங்கொடி தூக்குகிறார், நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கிறார்.

தொழிலாளர்கள் உறுதியாக நின்ற போதும் தனது மகளுக்கு எப்படியாவது பட்டுச்சேலை நெய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக பொய்காரணம் காட்டி வேலைக்குப் போகிறார். சகதொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். அங்கு மகளுக்கு சேலை நெய்வதற்காக பட்டு நூல் திருடி வாய்க்குள் அமுக்கிக்கொண்டு வெளியே கொண்டு வருகிறார். அகப்படுகிறார். ஏனைய தொழிலாளிகளின் முன்னும் ஊரவர்கள் முன்னும் அவமானப்படுகிறார். கைதாகிறார். சிறைப்படுகிறார்.

ஆம் வறுமையின் காரணமாகவும், சுயநலத்திற்காகவும் புனிதமான கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். வேங்கடம் முதலான அந்த மக்கள் இலட்சிய புருசர்கள் அல்லர். நிஜமான மனிதர்கள். நிதமும் வாயையும் வயிற்றையும் நிரப்ப அல்லாடுகிறார்கள்.

அழிவைவிட வாழ்வு உன்னதமானது. அதனால்தான் தமது வாழ்வின் இக்கட்டுகளிலிருந்து மீள திருடவும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். அதேநேரம் அவர்கள் கெட்ட மனிதர்களும் அல்ல. அவற்றைச் செய்தும் வறுமையும், இயலாமையும், கையறு நிலையும் அவர்களைத் துரத்துகிறது.

மனைவியை இழக்கிறார். சிறைக்குப் போன தருணத்தில் மகள் கிணற்றில் விழுந்து உயிருள்ள பிணம் போலாகிறாள். அவளைப் பாரக்க வேங்கடம் சிறையிலிருந்து லீவில் வருவதிலேயே படம் ஆரம்பித்தது. எழ முடியாது நினைவின்றிக் கிடக்கும் மகளைப் பாரமரிக்க எவருமில்லை. அவளைப் பெண்ணெடுக்க இருந்த தங்கை குடும்பமும் கைவிரித்து விடுகிறது. தானும் மீளச் சிறை சென்றுவிடும்போது அவளுக்கு ஏற்படம் போகும் அவலத்தை நினைத்து தானே தன் மகளுக்கு உணவோடு நஞ்சைக் கலந்து ஊட்டிக் கொல்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் ஒடுக்கப்பட்ட வறுமையில் வாடும் அந்த மக்களின் துன்ப துயரங்களையே பேசுகிறது. சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் கிடையாது. காதல் பாட்டும் இல்லை. வேகமான கதைத் திரும்பம் ஆடம்பரக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது. ஆயினும் எந்த ஒரு இடத்திலும்; சலிப்பு ஏற்படாத விதத்தில் கதையையும், காட்சி அமைப்புகளையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஸன். இவர் இங்கு அதிகம் அறியப்படாதவர். மலையாளத் திரைப்படத் துறை சார்ந்தவர்.

துயரம் ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்து வழிகிறது. அதற்குள் எம்மையும் நனைத்து ஊறித் தெக்க வைத்துவிடுகிறார். ஆழ்துயரத்தை வெளிப்படுத்துவது போல காட்சிகள் மிக மங்கலான வர்ணப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. கண்களைப் படபடக்க வைக்கும் கலர்கலரான காட்சிகளுக்குப் பதில் கருமையும் மண்ணின் நிறமும் கலந்தது போன்ற பின்னணிக் கலர் திரைப்படம் முழுக்க விரவி நிற்கிறது. படம் சொல்ல விரும்பும் செய்திக்கு ஏற்றதாக பார்வையாளர் மனத்தைச் சோகத்துடன் ஒன்றிவிட உதவியாக உள்ளது. மிக நேர்தியான ஒளிப்பதிவு செய்த திரு திரைப்படத்தின் காட்சிபடுத்தலை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறார்.

ஆயினும் இறுதிக் காட்சியில் பிணமாகக் கிடக்கும் மகளை பட்டுத் துணியால் மூட முயலும்போது, பின்னணிக் காட்சிகள் கருமை சார்ந்திருக்கும்போது அந்தப் பட்டுப் புடவை மட்டும் வர்ணக் கலரில் பளிச்சிடுவது எரிச்சல் ஊட்டுகிறது. மையக் கருவை முனைப்புடன் காட்டுவதற்கான மிகைப்படு;தலாக உறுத்தியது.

நடிப்பைப் பொறுத்தவரையில் பிரகாஸ்ராஜ் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இத்தகைய ஒரு பாத்திரத்தில் அதுவும் மிக வித்தியாசமான படத்தில் நடிக்க அவர் எடுத்துக் கொண்ட ரிஸ்க் மிகப் பெரியது. அண்மையில் வெளி வந்த அபியும் நானும் போன்ற பல படங்கள் அவரது ஆதரவில் வந்ததைப் பார்க்கும்போது நல்ல திரைப்படத்தில் அவருக்கு உள்ள ஆர்வம் புலப்படுகிறது.

ஆயினும் சில காட்சிகளில், மகள் இறந்து கிடக்கும் போது பாதி மட்டுமே நெய்த பட்டுத் துணியால் அவள் உடலைப் போர்த்தி மூட முயலும்போதும், தன் சுயநலதிற்கான வேலை நிறுத்தத்தை இடை நிறுத்தி வேலைக்கு போவோம் என சக தொழிலாளர்களை கூட்டம் போட்டு மழுப்பலாகப் பேசும் போதும் சற்று மிகை நடிப்பாகத் தெரிகிறது.

மனைவியாக நடித்த ஸ்ரெயா ரெட்டி நன்றாகவே செய்துள்ளார். அவரைத் தமிழ் திரையுலகம் இதுவரை நன்கு பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் வேங்கடத்தின் மகளாக வரும் புது நடிகையின் பேசும் கண்களும், இயல்பான நடிப்பும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதைப் புலப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக எம்மை அந்தக் காலத்தில் சூழலுக்குள் ஆழ்த்துவதற்கான முழு முயற்சியை எடுத்திருப்பதைச் சொல்லலாம். அக்காலத்திற்கு ஏற்ற உடைவகைள், பஸ், விளக்கு, பொலிஸ்காரர் என கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

இவரை கூட்டி வரும் பொலீஸ்காரனின் தொப்பியில் உள்ள அரச இலட்சனை கழன்று விடுவதும், அது தொப்பியில் இலட்சனை இல்லாமல் நீதிபதி முன் ஆஜராகப் பயந்து அதனைத் தொப்பியில் தைப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், அது பயனளிக்காமல் ஒட்டிக் கொண்டு சென்று, உசாரகக் சலூட் அடிக்கும்போது இலட்சனை கழன்று விழுவதும் மட்டுமே படம் பார்க்கும்போது எமது முகத்தசைகளை சற்று ரிலக்ஸ் பண்ண வைத்து புன்னகைக்க வைக்கும் காட்சியாகும்.

அந்தக் கால ‘தேவதாஸ்’ போல இன்றைக்கு முற்று முழுதாக சோகத்தை விதைத்து, விருட்சமாக மலைக்க வைக்கும் வண்ணம் எழுந்து நிற்கிறது. கலையார்வமுள்ள திரைப்பிரியர்கள் தப்ப விடக் கூடாத திரைப்படம் இது.

நன்றி:- வீரகேசரி 19.04.2009
எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

ஓளி மங்கி அரங்கம் இருளாகிறது. ‘எல்லாரும் ஒரு நிமிசம் கண்ணை மூடுங்க.. அப்படியே உங்க பள்ளிக் காலத்துக்கு போங்க.. ‘என்ற அறிமுக வசனம் காதில் கணீரென ஒலிக்கிறது.

ஆயினும் என் துடுக்குத்தனம் கண்களை மூடவிடவில்லை. இருந்தபோதும் அவ் வார்த்தைகளால் என் மனத்திலும் சில அதிர்வுகள் ஏற்படவே செய்தன. தங்கர் பச்சான் எங்களை வழமையான தமிழ் திரைப்படங்களில் இருந்து காப்பாற்றி ஒரு புது அனுபவத்திற்கு அழைத்துப்போவார் என்ற நப்பாசை கூடியது. அத்துடன் பள்ளிக்கூட அனுபவங்களைக் கொண்ட படம் என ஏற்கனவே வாசித்திருந்ததால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது.

திரைப்படங்கள் பற்றி உங்களைப் போலவே எனக்கும் சில கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கவே செய்கின்றன. எமது ஆழ் மனத் தட்டுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் சில நெஞ்சுக்கு நெருக்கமான சுய அனுபவங்களை உயிர்த்தெழச் செய்யும் கலைகளும் இலக்கியங்களும் தான் நல்ல படைப்புகள் எனலாம். ஏனெனில் அவைதான் எமது உள்ளத்தோடு பேச வல்லவை. ஆனால் சினிமா என்று வரும்போது இவற்றிற்கு மேலாக அவை திரை மொழியைப் பேசுவனவாகவும் அமைய வேண்டும். எமது செவிப் புலனுடனும், கட்புலனுடனும் ஒரே நேரத்தில் பேசும் கலை வடிவம் என்பதால் காட்சிகளின் சட்டம், ஒளிச் சேர்க்கை, பின்னணி இசை, அவை யாவும் ஒருங்கிணைந்து எம்மை ஒரு புள்ளியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும்.

ஆனால் பிரமிக்க வைப்பதுடன் வேகமாக நகரும் காட்சிகளும் ஒரு நேரத்தில் தனி ஒருவனாக 50 பேரை அடித்துத் துவைக்கும் ‘வீரமும்’ தான் இன்றைய பெரும்பாலான சினிமா இரசிகர்களின் கனவுலகமாக இருக்கிறது என்பது வேறு கதை.

இந் நிலையில் எமது மனத்தில் சில அருட்டல்களைக் ஏற்படுத்தும் படைப்புக்களாக வெளிவந்த ஆட்டோகிராவ், அழகி, அழியாத கோலங்கள் போன்றவை நாம் எல்லோரும் ஒரு காலத்தில் அனுபவித்த பள்ளிக் கால நிகழ்வுகளை கலை அழகோடு அள்ளிக் கொண்டு வந்தன. இப்பொழுது தங்கர் பச்சான் அத்தகைய பள்ளிப்பருவ நிகழ்வுகளின் களனான பள்ளிக் கூடத்தையே கதாநாயகனாக்கி ஒரு கலைப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்.

சிறப்பான பாராட்டத்தக்க முயற்சி. ஓவ்வொருவரும் தத்தமது பள்ளி நினைவுகளை அசை போட வைக்கிறது. அத்துடன் பள்ளியின் வளர்ச்சிக்கு நாமும் கைகொடுக்க வேண்டும் என்ற சிந்தனையையும் தெளித்து நகர்கிறது. ஆயினும் தனது படைப்பாக்க முயற்சியில் அவர் வெற்றி அடைந்திருக்கறாரா என்பது விவாதத்திற்கு உரியது.

பாராமரிப்பில்லாமல் இடிந்து விழும் நிலையில் இருக்கும் தங்களுடைய பள்ளியை இழுத்து மூடாமல் தடுப்பதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்காகவும் ஒரு விழா எடுப்பதற்கு ஊரார் முடிவெடுக்கிறார்கள். இதற்கான உதவிகளைப் பெறுவதற்காக தன்னுடைய பள்ளித் தோழனான நரேனைச் சந்திக்க பட்டணம் போகிறார் தங்கர் பச்சான். தங்கர் இல்லாமையிலும், உள்ளத்தில் கறையற்ற அப்பாவியாக, கிராமத்து விவசாயியாக வருகிறார். பட்டணத்தில் தங்களது இன்னொரு பள்ளிக்கூட நண்பனான திரைப்பட இயக்குனர் சீமானை தற்செயலாக இவர்கள் சந்திக்கிறார்கள். அதே பள்ளிக்கூடத்தில் ரீச்சராக இருப்பவர் சினேகா.

தங்கர், நரேன், சீமான், சினேகா ஆகியோரின் பழைய நினைவுகளாக பள்ளிக்காலச் சம்பவங்களும், இன்றைய நிகழ்கால நடப்புகளாகவும் காட்சிகள் மாறிமாறி அழகாக நகர்கிறன. கிராம நர்ஸாக ஸ்ரேயா ரெட்டி. இவர்களை ஓய்வு நேரங்களில் அழைத்து பாடம் சொல்லித் தருகிறார். மாணவர்களான இவர்களுக்கும் ஸ்ரேயாக்கும் இடையேயான அன்னியோன்ய உறவு சுவார்ஸமானது. திரைக்கதை பள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது. தங்கர் நரேனுக்கு கல்யாணமாகிவிட்டது என சிநேகாவிற்கு சொல்லியதால் கடைசியில் சிறு இழுவல் சஸ்பனஸ். ‘சுபம்’ ஆனாலும் திருமணத்தில் முடிக்காமல் ஒரு சற்று வித்தியாசமாகப் படத்தை முடித்திருக்கிறார் தங்கர்.

75 வயதென மூப்படைந்த பள்ளிக் கூடம் அது. வயது ஏற ஏற மனிதன் போன்ற உயிரினங்களதான் மூப்படைந்து தளர்ச்சியுறுகின்றன. நல்ல நிறுவனங்கள் காலத்தால் வலிமையுறுகின்றன. ஆனால் இந்தப் பள்ளிக் கூடத்திலோ மழை பெய்தால் வகுப்பறைகளுக்கு உள்ளேயே வெள்ளம் பாய்கின்றது. மாலையானால் மாடுகள் ஆசுவாசமாகப் படுத்து அசை போடுகின்றன. காலையில் அவற்றை விரட்டி சுத்தப்படுத்தித்தான் வகுப்புகளை ஆரம்பிக்க முடியும். இவ்வாறு நலிந்த நிலை. உடைந்து காரை பெயர்ந்த சுவர்கள், சிதைந்த ஓடுகள், எனக் கட்டிடமோ சிதிலமடைந்து கிடக்கிறது.

மழை பெய்யும் போது கூரை நீர் உள்ளே சிந்தி ஆவணங்களைச் சிதைப்பதைத் தடுக்கும் முயற்சியில் வாங்கு மேல் கதிரை போட்டு ஏறிநின்று ஓட்டையை அடைக்கும் முயற்சியில் ஆசிரியரும் மாணவர்களும் ஈடுபடும் காட்சியோடுதான் திரைப்படம் தொடங்குகிறது. பாடசாலையை இழுத்து மூட நினைப்பதற்குக் காரணம் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்தாலும் பள்ளியை நடாத்துகிற ஊர்ப் பெரியவருக்கு அதை பாராமரிப்பதில் உள்ள பொருளாதாரச் சுமையும் அசமந்தமும்தான்.

நல்ல கதை. ஆயினும்; குற்றம் சொல்ல முடியாதது அல்ல. எமது வாழ்வின் அத்திபாரமான கல்வியையும், அதை வழங்கும் பள்ளிக் கூடத்தையும் காட்ட முயலும் இப்படத்தின் பள்ளிக் காதலும் சுவார்ஸமானதுதான். ஆயினும் படத்தின் வேகம் குறைவு. பல இடங்களில் காட்சிப்படுத்தலில் கவனம் எடுக்காது வசனங்களில் தஞ்சம் புகுந்திருப்பதைப் பார்க்கும்போது தமிழ்ப்படங்கள் உன்னதத்தை எட்ட இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது புரிகிறது.

பல நெகிழ்வான காட்சிகள் உள்ளத்தை நெருங்கி வந்து அருட்டுகின்றன. டைரக்டர் சீமான் பாவித்துக் கழித்துவிட்ட உடைகளை தனக்கு என எடுத்து மடித்து வைக்கும் காட்சி நெகிழ வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கிறது. மனிதர்களிடேயே ஏற்றத் தாழ்வுகள். ஆடம்பர உடைகளையே ஓரிரு தடவைகள் உபயோகித்து விட்டு கழித்துவிடும் மனிதர்கள் உள்ள உலகில் ஒரு கந்தல் துணிக்குக் கூட வக்கற்ற எத்தனை மனிதர்கள். ஒரு முறை சிறுநீர் கழித்துவிட்டு கழிவுப் கோப்பையைச் சுத்தம் செய்ய பல லீட்டர் சுத்தமான நீரை விரயம் செய்யும்போது, மலம் கழித்த பின் கழுவுதற்கு நீர் இல்லாமல் இலைச் சருகால் துடைத்துச் சுத்தம் செய்வதுடன் திருப்திப்பட வேண்டிய மனிதர்களும் வாழ்கிறார்கள்.

கலக்டர் அலுவலகத்திற்கு நரேனைச் சந்திக்க தங்கர் செல்லும் போது ஊர்ப் பணியாரங்களை மூட்டையாகக் கட்டிச் செல்வதும், அங்கு இளநிலை ஊழியர்களால் அவமானப்படுவதும், தகவல் அறிந்து நரேன் துடித்து ஓடிவருவதும் ரசிக்கத்தக்க காட்சிகள். காதலால் பட்ட அவமானத்தாலதான் ஊருக்கே போகாமல் இருக்கிறான் நரேன்.

நடிப்பைப் பொறுத்தவரையில் சிநேகா அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். நரேனுக்கும் இவருக்குமான பள்ளிக் காதல் சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக உறவினர்களால் நிஸ்டுரமாக நசுக்கப்படுகிறது. சிதைந்த காதலை மனத்தில் அடக்கிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணாக, பள்ளிக்கூடத்தின் நன்மைக்காக உறவினர்களுடனேயே போராடும் சமுதாய நோக்குள்ள பிரஜையாக, கிராமத்துப் பள்ளி ஆசிரியையாக அழுத்தமான நடிப்புடன் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறாhர். மேக்கப் இல்லாத நடிப்பு, அதிகம் பேசாத பாத்திரம்.

டைரக்டர் தங்கரை நடிகர் தங்கர் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார். அப்பாவிக் கிராமத்து விவசாசியான ஐயோடி குமாரசாமி அவருக்கென்றே அளவெடுத்த சட்டைபோன்ற பாத்திரம். நன்கு பொருந்திவிடுகிறது. கிராமத்து மருத்துவமாதாக ஸ்ரேயா ரெட்டி குறையின்றிச் செய்திருக்கிறார். நரேன் இன்னும் நிறைய முயற்சி செய்ய வேண்டும்.

‘மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம் . . .’ பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனிமையான இசையும், திரைப்படத்துடன் இணைந்து போகும் கருத்தாளமும் கொண்டதால் நிச்சயம் நீண்ட நாள் நினைவில் நிலைத்திருக்கும் என நம்பலாம். இசை பரத்வாஜ். ரசிக்க முடிகிறது. ஆயினும் காதலுடன் நின்றுவிடாமல் காமம் வரை செல்லும் மற்றொரு பாடல் காட்சி இப் படத்தில் இடம் பெறுகிறது. இப்படி ஒரு பாடல் காட்சி இத்தகைய படத்திற்கு அவசியம்தானா?

நாம் எல்லோரும் எமது பள்ளிகூடத்தையும் அங்கு படிப்பித்த ஆசிரியர்களையும், எல்லாவற்றிக்கும் மேலாக எமது பள்ளித் தோழர்களையும் உயிருள்ளவரை மறக்க மாட்டோம். அங்கு பெற்ற அனுபவங்கள் ஊனோடு கலந்து, உள்ளத்தில் ஊறித் திளைத்தவை. அவற்றை மீள நினைத்து இரைமீட்க வைத்த தங்கருக்கு எனது நன்றிகள். குறைகள் பல இருந்தபோதும் தங்கர் எங்களை முழுமையாக ஏமாற்றி விடவில்லை.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி- ஞானம்

Read Full Post »