Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தலைமையுரை’ Category

>

‘அக்குரோணி’
மன்னார் அமுதனின் கவிதை நூல்

மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது.  பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன்  இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார். அண்மையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ‘பண்டைய இலக்கியமும் ஈழத் தமிழரின் சமகால வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ்தேவி, தமிழ்மணம், திரட்டி, சிறந்த தமிழ் பூக்கள், இலங்கை வலைப் பதிவாளர் திரட்டி, தமிழ்க் கணிமை, இன்ட்லி, தமிழ்வெளி, மென்தமிழ் போன்ற பல இணையத் திரட்டிகளில் இவரது படைப்புகள் வெளியாகின்றன. இவ்வாறாக இன்றைய இலக்கிய உலகில் அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் வசீகரம் மிக்கவராகவும் திகழ்கிறார்.

இலக்கிய நிகழ்வுகளிலும் இவரது பெயர் அதிகமாக அடிபடுவதை பத்திரிகை, சஞ்சிகைகள் ஊடாகக் காண முடிகிறது. முக்கியமாக திருமறைக் கலாமன்ற பௌர்ணமி நிகழ்வுகளில் இவரது பங்களிப்பை அதிகம் காண்கிறோம். மன்னார் எழுத்தாளர் பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளதாக அறிகிறேன்.

மன்னார் அமுதன் எனது நண்பன். மேடைக்காகப் பேசிய அலங்கார வார்த்தைகள் அல்ல. இந்த முதியவருக்கும் இளைஞனுக்கும் இடையில் நட்பு இருக்க முடியாது என்பீர்கள். ஆனாலும் நாம் நண்பர்கள்தான். முகப்புத்தக (Facebook) நண்பர்கள். எண்ணெட்டுத் திசையில் இருப்பவர்களை இணைக்கும் பாலமாக இன்று முகப்புத்தகம் இருக்கிறது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்னிறி பலரும் அதன் ஊடாக நட்புப் பேண முடிகிறது. ஈடுபாடுகளில் ஒற்றுமை உள்ள பலரும் அதனூடாக தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிலும் இவருடன் கலந்துரையாடியிருக்கிறேன்.

கவிதை என்பது ஒரு இனிய அனுபவம். எல்லாப் படைப்பிலக்கியங்கள் போலவே கவிதையும் படைப்பாளியின் கருத்தை அல்லது உணர்வை கற்பனை கலந்து வாசகனுக்குத் தருகிறது. அவனது மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசைபோலத் தழுவச் செய்கிறது.

ஆனால் இவற்றிடையே வேறுபாடுகள் உண்டு. கவிதையில் சொல்லப்படுபவை வசன நடையில் அமையாது என்பது தெரிந்ததே. கவிதையில் கருத்துச் செறிவு இருக்கும். சுருக்கமாகவும் ஓசை அமைதியுடனும் இருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும்.

ஒரு படைப்பில் கவித்துவம் இருக்கிறதா என எப்படி அறிவது.  அது கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுள் சிக்காத, அதியுயர் அனுபவம் என்றே சொல்லலாம். பூவின் நறுமணம் போலக் கண்களால் காண முடியாதது. நுகர மட்டுமே முடிவது. பூவின் மணம் எவ்வாறு மனத்தைப் புளங்காகிதப் படுத்துகிறதோ அவ்வாறே கவிதை, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் அதியுயர் அக நிறைவைத் தருவதாகும்.

உணர்வாலும் அனுபவத்தாலும் கவிஞனையும் வாசகனையும் இணைப்பது கவிதையின் சொற்களாலான பாலமாகும். இருவரும் இணையும் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கவித்துவம் உச்சங்களை எட்டும். அவ்வாறு இணையச் செய்யும் ஆற்றல் படைப்பாளியின் சொற்களுக்கு வேண்டும்.

இதனால்தான் படைப்பனுக்கு மட்டுமல்ல படிப்பவனுக்கும் கூட அது மனநிறைவைத் தரும்.

சிறுகதை போல கவிதை தமிழுக்கு புதிதாக அறிமுகமான இலக்கிய வடிவம் அல்ல என்பதை நாம் அறிவோம். கவிதையே எமது பாரம்பரியம். ஐம்பெரும் காப்பியங்களைக் கொண்டது தமிழ். அதற்கு மேலாக கம்பனும் வள்ளுவனும் அண்மையில் பாரதியும் அதற்கு உரம் ஊட்டினார்கள்.

பாரதி தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றினான்.

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது   
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை.”

என இலகு தமிழில் எழுதினான். அதில் வசன கவிதையும் அடங்கும்.

அவனது வசன கவிதை பின் யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை எனப் பல பெயர்களைத் தாங்கி பரிணாமமடைந்து இன்றைய கவிதை ஆகிவிட்டது.

மஹாகவி, முருகையன், நீலாவண்ணன் போன்ற மூத்த ஆளுமைகளுக்குப் பிறகு, 80 களின் பின் ஈழத் தமிழ்க் கவிஞர்கள் வேறொரு பரிமாணத்தில் புதிய வீச்சைப் பாய்ச்சினார்கள். தமிழ் கூறு உலகெங்கும் எமது கவிதைகள் பேசப்பட்டன. போரும் அகதி வாழ்வும் எமது கவிதைகளின் பாடு பொருளாயிற்று.

இப்பொழுது போருக்குப் பின்னான வாழ்வு. வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு அமைதியாக ஓடுகிறது. நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல இளைஞர்கள் கவிதைத்துறையில் இறங்கியுள்ளார்கள். எமது வாழ்வின் இன்றைய கோலங்கள் பலவும் எமது கவிதையில் பேசப்படுகின்றன.

மன்னார் அமுதனின் கவிதைகளும் அவ்வாறே நிகழ் வாழ்வைப் பேசுகின்றன. வெறும் கற்பனை வழி வந்த படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்கிறார். உள்ளார்ந்த மனித நேயத்துடன் பார்க்கிறார். அவற்றினால் உணர்வூக்கம் பெறுகிறார். கவலையும், ஆனந்தமும், கோபமும், போன்ற பல்வேறு உணர்வுகள் அவரது மனதை அலைக்களிக்கக் கவிதை படைக்கிறார்.

இதனால்தான் இவரது படைப்புவெளி சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கிறது. அவரது கவிதைகள் எமது வாழ்வைப் பிரதிபலிக்கினறன. கடுமையா சொல் அலங்காரம் கிடையாது. இலகுவான தமிழில் எழுதுகிறார். புதிரான உவமைகளும், விளங்காத படிமங்களும் அவரிடம் இல்லை. இதனால் எனக்குப் புரிகிறது. சாதாரண மக்களுக்கும் புரிகிறது. எல்லோருக்குமே புரியும்படி எழுகிறார். புரியாமல் எழுதினால்தான் கவிதை என்ற சிறைக்குள் அவர் அகப்படாது இருப்பது மகிழ்வைத் தருகிறது.

புரியும்படி எழுதினால்தான் மக்களுக்குப் புரியும். சமூகஅக்கறையுள்ள படைப்பாளியால் அவ்வாறுதான் எழுத முடியும்.

உதாரணத்திற்குப் பாருங்கள். சாதீயத்திற்கு எதிரான குரல் கொடுக்கிறார்.

“..குளிப்பதற்கும் கும்பிடவும்
தனியிடங்களா? நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?..”

விழிம்பு நிலை மனிதர்களின் துயர் செறிந்த வாழ்வை ‘அவளும் அவர்களும் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். பிச்சைக்காரியைக் கூட விட்டுவிடாத கயவர்களின் கயமை வெளிப்படுகிறது.

“..குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுக்குள்
எதையோ தின்று கொண்டிருப்பான்…”

அவரது கவிதையில் அரசியலும் இருக்கிறது. அரசியல் என்பது கட்சி அரசியல் அல்ல. மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியல். ‘நாம் தமிழர், எமது மொழி நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். என நாம் எல்லோரும் நாடுவதையே அவரும் நாடுகிறார்.

அதிகாரத்துக்கு எதிரான அவரது கவிதைக் குரல் இவ்வாறு ஒலிக்கிறது.

“..ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது…”

புதுக் கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளையும் அவரது படைப்புகளில் காண முடிகிறது. பொதுவாக தமிழ் மொழியின் பெருமை, தமிழர் வாழ்வு, தமிழ்த் தேசியம் போன்ற கருவுடைய படைப்புகள் மரபு வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதை காண முடிகிறது.

‘வரம் தா தேவி’ என்பது நூலின் முகப்புக் கவிதையாக அமைத்திருப்பதிலிருந்தே அவரது தாய்மொழிப் பற்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றைத் தவிர ‘தமிழாய் தமிழுக்காய்’, தமிழே எம் உடலே’, எனப் பல கவிதைகள் தமிழின் புகழ் பாடுகின்றன.

தமிழின் மீதுள்ள பற்றுப் போலவே தனது தாய் மண்ணிலும் பற்றுக் கொண்டவர். தான் பிறந்த பிரதேசத்திலும் பெருமை கொள்பவர்.

அதனால்தான் மன்னாரை தனது பெயருடன் இணைத்துளாளர். தெளிவத்தை ஜோசப், திக்கவல்லை கமால், நீர்வை பொன்னையன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், நாச்சியாதீவு பர்வீன், வல்வை அனந்தராஜ், திருமலை நவம், மருதமூரான், நீர்கொழும்பு முத்துலிங்கம், எனப் பலர் முன்னுதாரங்களாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் பற்றி எழுத்தாணி ஏந்தும் இயேசுக்கள்’கவிதையில் சொல்லும் வரிகள் இவ்வாறு அவர்களின் வாழ்வுக்கும் சாவுக்குமான சத்தியப் போரின் இருண்ட பக்கங்களின் வரிகளாக…

“..யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்குமான
எழுதப்படாத ஒப்பந்தானே
காட்டிக் கொடுத்துவிடு..”
..
..மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடம்மென்னவோ
கல்வாரி தானே,,’

காதல், ஊடல், பிரிவு, பிரிவின் துயர், கழிவிரக்கம் போன்ற மென் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. இவை பெரும்பாலும் புதுக் கவிதைகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உணர்வுகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமான வகையில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மன்னார் அமுதனிடம் உண்டு. தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.

பிரிவு

“..உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன…”

மற்றொரு கவிதையில்

“..கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே…”

இன்னொன்று இவ்வாறு

“…நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்…”

எவ்வளவு யதார்த்தமான வரிகள். போலி மருத்துவ சேர்டிபிக்கட்டுகளைத் தேடும் போலி நோயாளிகள் இவர்கள். ஆனால் காதலில் ஆரோக்கியமானவர்கள்.

நூலைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம். ஆயினும் நேரமாகிவிட்டது. இன்றைய நூல் வெளியீட்டு அரங்கில் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி. பெருமளவு மருத்துவத் துறை சார்ந்த என்னை கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்த அவரது அன்பு நெகிழ வைக்கிறது.

இது மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதை நூல். இலக்கியப் பரப்பில் அவர் பயணப்பட இன்னும் நீண்ட வெளியும் காலமும் காத்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்னும் பல நூல்கள் வெளியிடுவதுடன், பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன். சொந்த வாழ்விலும் இலக்கிய உலகிலும் உச்சங்களை எட்டி சமூகத்திற்குத் தொண்டாற்ற மீண்டும் வாழ்த்தி அமர்கிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரையின் கட்டுரை வடிவம்.
0.0.0.0.0.0

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)
வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2010.
தலைமையுரை 2010

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட எமது பாடசாலைச் சமூகத்தைச் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்,
மாலை வணக்கங்களும்.

மீண்டும் ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 14.01.2007 ல் ஆரப்பிக்கபட்ட எமது ஒன்றியம் 3 வயதைக் கடந்து முழு வீச்சுடன் நடைபோடும் பருவத்தில் இருக்கிறது.

பழைய மாணவர் ஒன்றியம் என்ற இக் குழந்தை பிறந்த நாள் முதல் அதன் செயற்பாடுகளில் பங்கு பற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாம் கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. நாட்டு நிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் எமது ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர்கள் என்றாலே சந்தேகிகப்பட வேண்டிய பிராணிகள் என்று நினைக்கப்பட்ட நேரம் அது.

நாம் கூடுவதும், கலந்துரையாடுவதும், நிதி சேர்ப்பதும், வங்கிகள் ஊடாக பாடசாலைக் கணக்கிற்கு அனுப்புவதும் உயிரச்சம் விளைவிக்கக் கூடிய விடயங்களாக இருந்தன.

ஆயினும் அவற்றையும் தாண்டி எமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஒவ்வொருவரதும் பாடசாலை மீதான பற்றுதலும், தன்னலங்கருதாத செயற்பாடுகளும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு நிறையவே உதவியுள்ளன.

பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும், அதற்கு எமது ஒன்றியம் உங்கள் உதவிகள் ஊடாக எவ்வாறு கைகொடுத்தது என்பது பற்றியும் செயலாளர் தனது அறிக்கையில் விரிவாகக் கூறுவார்.

சென்ற ஆண்டின் முக்கிய பெறு ஆக எமது கண்டி விஜயமும் அங்கு ஒரு இணைப்புக் குழு அமைக்கப்பட்தையும் சொல்லலாம்.

இது பற்றிய விபரங்கள் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் மேலும் விபரிக்கவில்லை.

பல பணிகள் செய்து முடிக்கப்பட்ட போதும் இன்றைய பாடசாலை மாணவர்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் பல விடயங்களைச் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.

மனதுக்கு இனிய ரம்யமான சூழலும்,
கற்றைக்குத் தேவையான கட்டட, தளபாட, நூலக, விளையாட்டு மைதான வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
உள்ளவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆற்ற வேண்டிய பணிகள்

புதிய கட்டிடம்

பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் மிக அவசியத் தேவையாக இருக்கிறது. முன்பு ராஜ் சுப்பிரமணியம் கல்வித் திணக்களத்தில் இருந்து போது ஒதுக்கிய நிதியில் ஆரம்பிக்கபட்ட இரட்டை மாடிக் கட்டடம் நாட்டு நிலைகளால் பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த அத்திவாரத்தின் மீது இப்பொழுது புதிய கட்டடம் கட்ட முடியபா அளவிற்கு பழுதாகி உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது.

போர் முடிவுற்றதை அடுத்து வன்னிப்  பகுதியிலிருந்து பெருமளவு மாணவர்கள் வந்துள்ளார்கள். இதனால் 230 அளவில் இருந்த மாணவர் தொகை திடீரென 359ஆக அதிகரித்துவிட்டது. இடவசதி போதாது. விளையாட்டு மைதானத்தின் மேடையில் ஒரு வகுப்பை வைக்க வேண்டிய நிலை.

தளபாடங்கள்

மாணவர் தொகை அதிகரித்ததால் தளபாடங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடம் இல்லாமல் தளபாடங்களைப் போட இடமில்லை. எனவே புதிய இரட்டை மாடிக் கட்டடம் பெறுவதே முதல் தேவையாக உள்ளது. இது தனியார் செய்யக் கூடியது அல்ல. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள அணுகியுள்ளோம். ஆயினும் இன்னமும் எதுவும் கை கூடவில்லை.

நூல்கள்

நூலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. தளபாடங்கள் பரம்சோதி அருளானந்தம் மற்றும் சுந்தரலிங்கம் நிதியுதவியில் கிடைத்துள்ளது. நூலகத்திற்கு 30106 கதிரைகள், வாசிப்பு மேசை 1, ஒவிஸ் டேபிள் 1

நூலகத்திற்கு நூல்கள் சென்ற வருடம் சேர்த்து அனுப்பினோம். இன்னமும் தேவை. 5ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற புதிய நூல்களைச் சேகரிப்பதில் அங்கத்தவர்கள் ஒத்துழைப்புத் தேவை

சிறுவர்களுக்கான சுவர் சித்திரங்கள்

பாடசாலையின் சுற்றுமதில் சுவரின் உட்பக்கங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்பட வேண்டும். இது மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும், கற்றலுக்கு உதவும் விதமாகவும், பாடசாலையை அழுகுறுத்தவும் அவசியமானது.

ஒரு இடைவெளியை சிமெந்து பூசி சித்திரம் வரைய சுமார் பதினையாயிரம் (15,000) தேவைப்படும். பங்களித்தவர் விபரங்கள் அனுசரணை என்ற சிறுதலைப்பில் ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்படும். மறைந்தோர் ஞாபகமாகவும் செய்யலாம். 2-3 வருடங்களில் டச் அப் செய்ய வேண்டியிருக்கும்

சிறிய பாடசாலையின் முகரி முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியுள்ளது.
தளபாட பராமரிப்பும், வர்ணம் பூசுதலும்
பாடசாலை தளபாடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு பராமரிப்பு அவசியம். 2-3 வருடங்களுக்கு ஒரு முறை அவற்றைத் திருத்தி வர்ணம் பூச சுமார் ஐப்பதினாயிரம் தேவைப்படும்

சிறிய பாடசாலை சுற்று மதில்

சிறிய பாடசாலையின் முற்பகுதி அழகிற்காகவும் பாதுகாப்பிறகாகவும் இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஏனைய மூன்று பக்கங்களையும் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

நெற் வசதி

கம்பியூட்டர் அறை செய்யப்பட்டுள்ளது. மேசை, கதிரை, கண்ணாடி அலுமாரி, தளபாடங்கள் அரச உதவியில் கிடைத்துள்ளன. விரைவில் கம்பியூட்டர்கள் கிடைக்கும். தொடரந்து நெற் வசதி செய்யப்பட வேண்டும்.

நிறுவனர் சிலை

பெரும்பாலன பாடசாலைகளின் முன்னறலில் அதனை ஸ்தாபித்த நிறுவனரின் சிலை வைக்கப்பட்டு தினமும் அதற்கு பூ மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறது.

எமது பாடசாலை 1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. பின்னர் திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை பொறுப்பேற்றார். ஸ்தாபகர் சிலையை அவர்களது வழித்தோன்றலகள் செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

பழைய மாணவர் பற்றிய தகவல் திரட்டி

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன் (திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.

ஆயினும் கல்வியாலும், தொழிலாலும், சமூகப்பணிகளாலும் பெருமை பெற்ற எமது பழைய மாணவர்கள் பற்றிய விபரங்கள் எமது பாடசாலையில் இல்லை. அத்தகைய ஒரு தகவல் திரட்டியைத் தயாரித்துப் பேணுவது மிகவும் அவசியம். அதற்கான ஒரு மாதிரிப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

கடந்த மூன்று வருடங்களாக எமது பணிகள் தொடர்கின்றன. இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.

பொருளாளர் இரவீந்திரன் இன்று கலந்துகொள்ள முடியாத சூழலில் சென்ற வருட கணக்கறிக்கையைத் தயாரிப்பதுடன் அதனை இன்று சமர்பிக்கவும் இருக்கும் வள்ளி பிரபாகர் அவர்களுக்கு எனது விசேட நன்றிகள்.

திருவாளர்கள் சற்குணராசா, ரவீந்திரன், சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், போன்றவர்கள் செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதில் இராஜ் சுப்பிரமணியம், சற்குணராசா, சண்முகசுந்தரம் ஆகியோர் 100 சதவிகிதம் பிரச்ன்னமாயிருந்தனர்.

திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. அவர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அளப்பரிய பணியை செய்துவருகிறார். அவரின் தன்னலம் கருதாத, வேகமும் சமோசிதமும் கூடிய செயற்பாடுகள் காரணமாக எமது பாடசாலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னணி நிலைக்கு வந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தின் முன்னணி ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் பௌதீக வளத்திலும், அழகிய சுத்தமான சுற்றாலைப் பேணுவதிலும் அது முன்னணியில் இருக்க வைத்த பெருமை அவரையே சேரும்.

பழகுவதற்கு இனியவரான அவர், பட்ட மேற்படிப்புடன், யாழ் பல்கலைக்கழகத்தின் வருகைநிலை விரிவுரையாளராகவும் விளங்கும் கல்வித் தகமையும் உடையவராவார். எமது பாடசாலை அதிபராக பணியாற்றக் கிடைத்தது எமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். அதனை நாமும் ஓரளவு பயன்படுத்தி பாடசாலை வளரச்சிக்கு உதவ முடிந்தது என்பதில் எமது ஒன்றிமும் பெருமை கொள்ளலாம். இப்பொழுது அவருக்கு தரம் 2 அதிபர் நிலைப் பதவி உயர்வு கிட்டியுள்ளது. அவருக்கு எனது சார்பிலும் உங்கள் எல்லோர் சாரப்பிலும் வாழ்த்துக் கூறுகிறேன்.

எமது ஒன்றியத்தின் வரவு செலவு கணக்கு உங்களுக்கு சற்று நேரத்தில் கிடைக்கும். அதனை அவதானதாகப் பார்த்தால் உங்களுக்கு சில விடயங்கள் புரியக் கூடும். முதலாவது எமது அங்கத்தவர்கள் அளித்த பெரும்பாலான நிதி உதவிகள் எம்மால் நேரடியாகக் கையாளப்படவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதிக்கு, நிதி உதவி வழங்கியர்களால் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவை எமது கணக்கறிக்கையில் இடம்பெறவில்லை.

அடுத்த முக்கிய விடயம் சங்கத்தின் வழமையான நடைமுறைச் செயற்பாடுகளுக்கு சங்கத்தின் எந்த நிதியும் பெறப்படவில்லை.
கடித, டெலிபோன் செலவுகள், அறிக்கை அச்சடிப்பு செலவு, கண்டி விஜயத்திற்கான பிரயாணச் செலவுகள், ஆண்டு விழாச் சிற்றுண்டிச் செலவு எதுவுமே சங்க நிதியிலிருந்து பெறப்படவில்லை.

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு சதமும் பாடசாலை வளர்ச்சிக்கே சென்று அடைந்தது. அதற்கு ஒத்துழைத்த சங்க செயற்குழு அனைவருக்கும் எனது நன்றிகள்.

செயற்குழு என்று சொன்ன பொதும் பெரும்பாலான உதவிகள் திரு ராஜ் சுப்பிரமணியத்தின் உதவிகளே. அறிக்கைகளைப் போட்டோ பிரதி எடுத்து தபாலில் அனுப்புவதற்குமான செலவுகளையும், கண்டி பிரயாண வாகன வசதியும், இன்றைய சிற்றுண்டிகளுக்கான செலவுகளின் பெரும் பகுதியும் அவரது உதவிகளே.

கணக்கறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி போட்டோ பிரதிகள் எடுத்ததும் வள்ளி பிரபாகரின் உதவியாகும்.

எதிர்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் மிக முக்கியம்.

பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.

இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது.

வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

எனது (எம்.கே.முருகானந்தன்) தலைமையுரை


வணக்கம்
மாலை வந்தனம்

தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’.
இது ஒரு சிறுகதை நூல்.

ஈழத்துச் சிறுகதைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதன் வரலாற்றைப் பலவாறு வகுத்தனர்

ஆனால் இன்றைய நிலையில் நின்று நோக்கும்போது அதவது எமது சமகால சிறுகதை பரப்பை அவதானித்தால் அதை இன்னொரு வகையில் வகுகக்கலாம் போலத் தோன்றுகிறது

1. போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்
2. போர்க் காலச் சிறுகதைகள்
3. போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்

அமைதியான வாழ்க்கை, ஊர்புறங்களில் சாதிப் பிரச்சனை, படித்தவர் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனை, மொழிப்பிரச்சனை, சீதனப் பிரச்சனை

போர்க் காலச் சிறுகதைகள்

இனப் பிரச்சனையின் பாதிப்பு, இனப்பாகுபாடு, போர், இயக்கங்கள் பற்றிய துதிபாடல், புலிகளின் தீரம் இவை பற்றி மட்டுமே பேசப்பட்டது. போருக்கு எதிராகப் பேசியவர்கள் இனத் துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள்

போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

உண்மையில் இதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு.

போரைப் பற்றிய விமர்சனங்கள்,
போரினால் தமிழ் மக்ககளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்,
அல்லது அதனால் கிட்டிய நன்மைகள்,
இனி எமது இனம் செல்ல வேண்டிய பாதை,
இவற்றைத் தவிர ஏனைய மொழிகளில் வரும் படைப்புகள் போல மக்களின் நாளந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,
தனிமனிதப் பிரச்னைகள்
தனிமனிதர்களின் பிரச்சனைகள்,
சாதிப்பிரச்சனை,
குடும்பப் பிரச்சனை போன்றவற்றைப் பேசுவது போன்ற மக்களின் அன்றாட மற்றம் சமூகப் பிரச்சனைகள் பற்றிப் பேச வேண்டும்.

ஆனால் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை இன்னமும் பேசவில்லை.


முன்பிருந்த பயமும் தயக்கமும் இன்னும் தீரவில்லை. பலர் இன்னமும் நடந்த இழப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறாரகள். போருக்குப் பின்னான எமது மக்களின் வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையான, புதிய மகிழ்சியான வாழ்வை பெறுவதன் அவசியம் பற்றிப் பேசும் படைப்புகள் இன்னமும் வெளிவரத் தொடங்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ நூல் வெளிவந்திருக்கிறது.

இந்த நூல் இன்றைய சூழலில் எப்படிப் பொருந்துகிறது? எதைப் பேசுகிறது? அல்லது எதைப் பேசவில்லை?

மிக முக்கியமான விடயம் இது இனப் பிரச்சனை பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றிப் பேசவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைகள் பற்றிப் பேசவில்லை. அடக்கு முறையால் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசவில்லை.

ஆனால் தமிழ் மக்களது அதிலும் முக்கியமாக யாழ் பிரதேச மக்கள் தமது நாளாந்த வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

இவரது சிறுகதைகளில் போர் அல்லது இனப்பிரச்சனை சார்ந்த கரு இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

1. எமது இனப்பிரச்சனை தீவிரமடைந்த 1983 ற்கு முற்பட்ட காலத்துக் கதைகளே பெரும்பாலனவை. இந் நூலில் உள்ள 14 சிறுகதைகளில் இரண்டே இரண்டு கதைகள் 1983க்குப் பின்னர் எழுதப்பட்டுள்ளன. ‘மாற்றங்கள்’ என்ற கதை 1986ல் அமிர்தகங்கையில் வெளியாகியுள்ளது. அடுத்தது ‘நாங்கள் மனிதர்கள் என்ற சிறுகதை 1987ல் மல்லிகையில் வந்திருக்கிறது

2. அப்படியானால் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சனைகள் இருக்கவில்லையா? அடக்குமுறைகளால் துன்பப்படவில்லையா?

இருந்ததுதான்.

ஆயினும் அன்றைய சூழ்நிலையில் ஒரு அரசாங்க ஊழியரான தமிழ்பிரியாவினால் அவை பற்றி வெளிப்படையாக எழுத முடியாதது இருந்திருக்கலாம். அல்லது மணமாகாத இளம் பெண்ணாக இருந்த அவரைப் பாதித்தவை வேறு விடயங்களாக இருந்திருக்கலாம்.

காரணங்கள் எவையாக இருந்த போதும் தமிழ்பிரியாவின் சிறுகதைகள் எம்மை ஒரு புது உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.
நாம் மறந்துவிட்ட ஒரு உவப்பாக காலத்திற்குள் எம்மைப் பயணிக்க வைக்கின்றன.

அதாவது போருக்கு முந்திய காலச் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி எனலாம்.

உண்மையில் இந்த நூலின் சிறப்பே அதுதான்.

குருதியையும், போரையும் பற்றிப் பேசியதைக் கேட்டே அலுத்துவிட்ட, அல்லது மீண்டும் மீண்டும் பேசியதால் உணர்வுகள் மரத்துவிட்ட நிலையில் உள்ள எமது மக்களுக்கு இத் தொகுதி ஒரு மாற்று அனுபவத்தை தருகிறது.

வாழ்க்கை என்பது ஒரு மலர்த் தோட்டத்தைப் போன்றது.
அங்கு அழகிய மரங்கள் இருக்கும்.
வாசமுறு மலர்களைக் கொண்டவையும் இருக்கும்.
பாறைபோல உறுதியான மரங்களும் இருக்கும்.
காற்றின் திசைக்கு ஏற்ப வளைந்து கொடுப்பவையும் இருக்கும்.

அதேபோல கதம்பமாக இருக்கும் இலக்கியங்களைப் படிக்கும்போது எமக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க வேண்டும்.

போர்க்கால இலக்கியங்கள் எமது வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அந்த உணர்வைத் தொய்யவிடாது காப்பாற்ற வேண்டிய கடமை எமது இலக்கியகர்த்தாக்களுக்கு இருந்தது. அதனை எமது இலக்கியகர்த்தாக்கள் செவ்வனே செய்தார்கள்.

இன்று போர் ஓய்ந்துவிட்டது.
இடைக்காலத்தில் நாம் பட்ட பல இடைஞ்சல்களும், தொல்லைகளும் தீரந்துவிட்டன.

ஆனால் அடிப்படைப் பிரச்சனையான அரசியல் பிரச்சனை தீரவில்லை.
அதைப் பற்றிப் பேசுவார் எவரும் இல்லை.
அதற்கு மேலாக எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் ஏராளம். அவை பற்றியும் எமது இலக்கியங்கள் பேச வேண்டும். ஆனால் அவை காலப் போக்கில்தான் கிடைக்க முடியும்.

இப்பொழுது ஒரு இடைக்காலத் தீர்வாக இரத்தினவேலோன் இந்த நூலைத் தந்துள்ளார்.
போர்க்காலத்தைப் பற்றி ஒரு வசனம் கூட இல்லாத நூலாக இது வந்திருக்கிறது. கடைசிக் கதையில் மட்டும் பொடியள் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் கூட அரசியல் பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றியும் பேசவில்லை.
ஒரு கிராமத்தில் ஏற்படுகின்ற ஒரு சிறு பிரச்சனைக்கு அவர்கள் எவ்வாறு தீர்வு தருகிறார்கள் என்பதைப் பற்றிச் சொல்கிறது.

துப்பாக்கி, குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல் எதுவும் அற்ற ஒரு சமூகத்தின் நாளாந்த வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளை இந்த நூல் பேசுகிறது.

அதனாலேயே வித்தியாசமான இந் நூல் பலரையும் கவரும் என நம்பலாம்.

ஒரு பெண்ணின் பார்வையாகப் பேசுகிறது. அவளின் குரல் நூல் முழவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

அதுவும் கல்யாணம் ஆகாத வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் பார்வையாக இந்த கதைகள் அமைந்துள்ளன.
தனது சமூகத்தில், தனது சுற்றாடலில் நடக்கும் சம்பவங்களை உற்று நோக்குகிறாள்.
அங்கு நடக்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள் அவள் மனத்தைத் தாக்குகிறது. தனக்குள் தானே தவிக்கிறாள்

அவள் ஒரு துணிச்சல் மிக்க பெண் என்று சொல்ல முடியாது.
அவள் பொது இடத்தில் அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்க மாட்டாள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்ணும் அல்ல.
நேரடியாகச் சண்டைக்கும் போக மாட்டாள். வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சாதாரண பெண்.
மனதிற்குளாக துடிக்கத்தான் முடியும்.

ஆனால் அவற்றை கதையாக எழுதுவாள்.

பெரும்பாலன சிறுகதைகள் தானே பாத்திரமாக நின்று சொல்லும் கதைகளாக இருக்கின்றன.

மற்றைய கதைகளில் பிரதான பாத்திரம் வேறு பெயர் பெற்றிருந்தாலும், இன்னும் சில ஆண் பாத்திரமாக இருந்தாலும் அவை யாவற்றிற்குள்ளும் அவளின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஆம் புஸ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழ்ப்பிரியா என்ற புனைப் பெயரில் எழுதும்போது தமிழினி என்ற பாத்திரமாக பல இடங்களில் வருகிறார்.

சொந்த அனுபவங்களாக வருவதால் கதைகளின் நம்பகத்தன்மை உச்சமாக இருக்கிறது. கற்பனையில் எழுதுகிறார் என்ற சந்தேகம் இவரது கதைகளில் ஏற்படாது இருப்பதற்கு இது ஒரு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இவரது கதைகளில் நான் இரசித்த விடயங்கள் பல

1. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், மீண்டும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் தினமும் ரயிலில் பிரயாணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள். இங்குள்ள சில வயதானவர்கள் பிரயாணித்து இருப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் கொழும்பு கொடிகாமம் பிரயாணத்தில் கிளிநொச்சி இரயில் நிலையத்தை 80களின் முற்பகுதியில் கண்டிருக்கிறேன். இன்றைய பல இளைஞர்களுக்கு இத்தகைய பிரயாணம் ராஜா ராணி காலத்துக் கதைபோல இருக்கும்.

கிளிநொச்சி ஸ்டேசனை, அங்குள்ள லேடீஸ் ரூமை, அதன் பிளற்பாரத்தை, அங்கு தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுவதை வாசிக்கும்போது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. நாம் இழந்தவிட்ட வசந்த காலங்களை மீண்டும் சுவாசிக்கக் தமிழ்பிரியாவின் எழுத்துக்கள் உதவுகின்றன.

அதே போல சுமார் 25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாண பஸ் மற்றும் மினிபஸ் பிரயாண அனுபவங்களை மிகவம் யதார்த்மாகவும் விரிவாகவும் சொல்லியுள்ளதை இவரின் கதைகளில் சுவைத்து ரசிக்க முடிகிறது.

அந்த கொண்டக்கர்மாரின் அடாவடித்தனங்கள், அதில் பிரயாணம் செய்ய முனையும் வயோதிபர்களும் பிச்சைக்காரர்களும் படும்; அவமதிப்பு போன்றிவையும்

2. எதிர் மறையான கருத்துடன் சொல்லப்படுவது போல ஆரம்பித்து, எங்களை ஆர்வத்துடன் வாசிக்க வைப்பது. தகப்பனுக்கு கடுமை என்று தந்தி வந்த போதும், பதற்றமடையாது வீடு சென்ற போது அவர் இறந்து கிடப்பதைக் கண்டும் அலட்டிக் கொள்ளாது இருக்கும் பாத்திரத்துடன் ஆரம்பிக்கும் கதை ‘நெஞ்சில் நிலைக்காத உறவு’

அதேபோல மாற்றங்கள் என்ற கதையில் இவளை கணவனின் பெயர் சொல்லி மிஸஸ் பாலசிங்கம் என்று கூறியவுடன் நெஞ்சிற்குள் உதை வாங்கித் துடிப்பதும், அவருக்கு கடுமையான வருத்தம் என்று சொன்னவுடன் ‘அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என எடுத்தெறிந்தாற்போலப் பேசுவதும் எங்களை என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க வைக்கின்றன.

ஏனெனில் தகப்பன், மற்றும் கணவனை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் எமது சமூதாயப் பார்வைக்கு அடி போடுவது போல எதிர்மறையாக ஆரம்பிக்கின்றன கதைகள் அவை.

3. பெண்களின் உணர்வுகள் பற்றிய இவரது சிந்தனைகளும் வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் மனதில் நிற்குமாற் போலுவவும் பல இடங்களில் அமைந்துள்ளன.

‘கருவிகள்’ என்ற சிறுகதையில் இளவயதிலேயே கணவனை இழந்த பெண்ணை (பக்கம் 88)

“5 வருடம் என்றாலும் அவனுடன் சந்தோசமாக வாழ்ந்து 2 பிள்ளைகளுக்கு தாயானவள் இன்னொருவருடன் வாழச் சம்மதிப்பாளா? அவளுக்கு அப்படி ஒரு ஆசையே கிடையாது. ஆந்த நினைவுகளுடனேயே பிள்ளைகள வளர்த்துக் கொண்டு வருகிறாள் என்று அவளைப் பெருடைப்படுத்திப் மற்றவர்கள் கதைதத்தபோதுதான் அகல்யா வெந்து போனாள். குணவன் இறந்ததும் பெண் மனத்தின் ஆசாபாசங்கள் எல்லாம் அச்தமித்துப் போய்விடும் என்று என அவர்கள் எல்லாம் முடிவு செய்கிறார்கள்.”

பெண்பார்க்கும் படலம்- ‘பார்வைகள் கோணலாகும் போது’ தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
அதிசமாய் விழிகளில் ஒரு மலர்ச்சி.

அழகு இன்று ஒரு படி உயர்ந்து நிற்பது போன்ற பிரமை…. அவனுக்கு அவளைப் பிடிக்காமா போகும்.
அந்த முகம் தெரியாதா அவனைப் பற்றி மனதிற்கள்ளேயே எண்ணிப் பார்த்தாள். அவள் மனதிற்கள் வரைந்து லைத்திருக்கிற அதே முகம் மாதிரி…. பார்த்தவுடனேயே சம்மதித்துவிடக் கூடிய கம்பீரத் தோற்றத்தோடு, அவளின் அழகோடு போட்டி போடுகிறவனாக… விதம் விதமான கற்பனைகள்…

இவ்வாறு பல சிறப்பகளைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுதி இன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சி.
அதன் ஆசிரியரான தமிழ்பிரியாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
அவரது ஏனைய படைப்புகளையும் நூலாக்குவது அவசியம்.
நன்றி.

கூட்டத்திற்கு வந்திருந்த சிலர்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)

வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2009.

தலைமையுரை 2009

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும், மாலை வணக்கங்களும்.

2007ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட எமது ஒன்றியத்தின் 2வது வருடாந்தக் கூட்டம் இதுவாகும்.

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் என்ற எமது பாடசாலை மிகுந்த பாரம்பரியம் மிக்கது. இது நாவலர் பெருமானின் நல்லாசியுடன் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது. ‘திரு.மா.கணபதிப்பிள்ளையும் குமாரர்களும் தருமமாயுபகரித்த ‘கொள்வiளை’ என்னும் காணிப்பங்கில் எமது கிராமம் கல்வி, அறிவு, ஒழுக்கம்,சமயாசாரம் ஆதியவற்றில் சிறப்புற வேண்டும் என்ற நோக்கத்தோடு’, ‘வியாபாரிமுலை, வண்ணாந்துறை(திருநாவல் நகர்), சாளம்மை ஆகிய முன்று பகுதியனரது ஆதரவோடு ஆரம்பித்து நடத்தப்பட்டது’ என இப்பாடசாலையின் மனேச்சர் ஆன திரு.ஆ.சி.நாகலிங்கம் பிள்ளை 23.5.1954 ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறுகிறார்.

1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. 1892ல் அரச நன்கொடை பெறும் பாடசலை ஆகியது.

1893ல் Nலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை ஆரம்பிக்பட்டு 1905ல் அரச நன்கொடை பெறும் பாடசாலை ஆகியது.

1958 அரசாங்கம் பாடசாலைகளை கையேற்றபோது இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே அதிபரின் கீழ் இயங்கி வருகிறது.

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன்(திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.

ஆயினும் பின்பு அண்மையில் உள்ள பாடசாலைகளின் துரித அபிவிருத்தி காரணமாக இப் பாடசாலையின் வளர்ச்சி சற்றுத் தளர்ந்து கவனக் குவிப்பும் குறைந்திருந்தது. இருந்தபோதும்; அண்மையில் அதிபர் மு.கனகலிங்கம் அதிபராக வந்த பின்னர் பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று மீண்டும் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறார்.

இத்தருணத்தில்தான் நாமும் கொழும்பில் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு) ஆரம்பித்து, உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ முன் வந்துள்ளோம். பல பணிகளை ஏற்கனவே செய்து முடித்துள்ளோம்.

ஓன்றியத்தின் உதவியால் ஆற்றப்பட்ட பணிகள்



 வருடாவருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு ரூபா 2000 வரையான பணப்பரிசிலும் ‘இளஞானச் சுடர்’ விருதும் எமது நிதி உதவியில் கொடுக்கப்படுகிறது. 2006 ல் 14 மாணவர்களுக்கும், 2007ல் 12 மாணவர்களுக்கும், 2008ல் 6 மாணவர்களுக்கும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 இதேபோல வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு உதவுமுகமாக நினைவுப் பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 11 நினைவுப் பரிசில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக நிரந்தர வைப்புப் பணமாக ஒவ்வொருவரம் 15,000 முதல் 100,000 நிதியை அன்பர்கள் தந்து உதவியுள்ளார்கள். அவற்றின் வட்டிப் பணத்திலேயே வருடாவருடம் பரிசில் வழங்கப்படுகிறது. இது பற்றிய பூரண பட்டியலை பொருளாரின் அறிக்கையில் காணலாம்.

 நினைவுப் பரிசில் யாரது நினைவாக வழங்கப்படுகிறதோ அவரது பெயர், புகைப்படம், நினைவுப் பரிசில் நிதியின் அளவு, கொடுத்தவர் பெயர் விபரம் அடங்கிய விபரப் பலகை எமது ஒன்றியத்தால் பிளாஸ்டிக்கில் செய்து வழங்கப்பட்டது.

 பாடசாலைக்கான பெரிய இரண்டு கதவுள்ள வாசல் 2007ல் எமது ஒன்றிய அங்கத்தவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதற்கு மேல் அமைந்துள்ள பாடசாலையின் பெயர் வளவை திரு.க.மோகனதாஸ் 2008ல் அமைத்துக் கொடுத்துளாளர்.

 எமது முயற்சி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடாக தலா ஒவ்வொரு இலட்சம் நிதி பெறப்பட்டு வகுப்பறைத் தளபாடங்கள் செய்து கொடுக்கப்பட்டன.

பாடசாலையில் நடந்துள்ள ஏனைய பணிகள்

 UNCEF உதவியுடன் பிரதான மண்டபத்தை மூடி அடைக்கப்பட்டுள்ளது.

 ஊஞ்சல், சறுக்கீஸ் போன்ற விளையாட்டிற்கான வசதிகள் தனி ஒருவரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 பாடசாலை சுவர்கள், மதில்கள் யாவும் ஊரார் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

 லண்டன் பழைய மாணவர்கள் கணனித் தொகுதியை 2006 கொள்வனவு செய்து கொடுத்தனர்

 பிரதான மண்டபத்தின் மேடையின் திரைச் சீலைகள், இணைப்பு வேலைகள், ஆகியன முன்னாள் அதிபர்.சிவபாதசுந்தரம் நினைவாக அவரது குடும்பத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.

 முன்னாள் ஆசிரியை செல்வி.வேலுப்பிள்ளை பெரிய அலங்கார குத்து விளக்கை அன்பளித்துள்ளார்.

EMACE என்ற நிறுவனம் சிறுவர் நூல்நிலையக் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறாக பாடசாலை அபிவிருத்தியானது பலராலும் பல மட்டங்களிலும் ஆர்வமாக முன்னெடுக்கப் படுகிறது.

ஆற்ற வேண்டிய பணிகள்

 நூலகத்திற்கான தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல். இதற்கு கனடாவில் வதியும் பரம்சோதி குடும்பத்தினருடன் திரு.ராஜ் சுப்பிரமணியம் தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

 நூலகத்திற்கான நூல்களைப் பெறுவதற்கான முயற்சில் உறுப்பினர்களது ஆதரவை ஏற்கனவே கோரியுள்ளோம்.

 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு சைக்கிள் பார்க் அமைக்க வேண்டியுள்ளது.

 மாணவர்கள் பெறும் நீரின் சுத்தத்தை பேணுமுகமாக அவற்றை மூடி அடைக்க வேண்டியுள்ளது.

 சிறிய பாடசாலையைச் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

 மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்காக விசேட வகுப்புகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படும் எனத் தெரிகிறது. இதனைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

 சிறுநீர் கழிப்பகம் ஓன்றை பெரிய பாடசாலையில் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

 இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது.

இவற்றை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் பழைய மாணவர்கள் போன்றவர்களை அணுகியுள்ளோம். முயற்சி செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர். திருவாளர்கள் சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், பிரபாகரன், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், திருமதி வள்ளி போன்றவர்கள் தவறாது செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்னிறயத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. உண்மையில் அவர்களில் ஒருவரே இந்த ஒன்றியத்தின் அடுத்த வருடத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றவேண்டும் என விரும்புகிறேன். அதனை சபை கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.

பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.

இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது. வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.

நன்றி.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »