Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தவறான கருத்துக்கள்’ Category

நீரிழிவு தவறான எண்ணங்களும் மேற்கொண்டு செய்ய வேண்டியவையும்

19916

தவறான எண்ணங்கள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

  • எனக்குப் புண்கள் விரைவாக ஆறிவிடுகின்றது
  • எனக்குத் தண்ணீர் விடாய் இல்லை.
  • எனக்கு அடிக்கடி சிறுநீர் போவதில்லை.
  • எனக்குத் தலைச்சுற்றுக் கிடையாது
  • எனக்கு களைப்புக் கிடையாது

எனவே எனக்கு நீரிழிவு இருக்காது எனப் பலரும் தாமாகவே முடிவு கட்டுகின்றனர்.

இது தவறான கருத்தாகும். நீரிழிவின் ஆரம்ப நிலையில் பெரும்பாலனவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கிடையிலேயே இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்புகள், மூளை போன்றவற்றில் தாக்கங்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றினால்தான் பிற்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு, கால் விறைப்பு, சிறுநீரகம் பழுதடைதல், மாறாத கால் புண்கள், கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மறைந்திருக்கும் நோய்

இந் நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் மிகப் பெருந்தொகையான மக்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். சுமார் 50 சதவிகிதமானவர்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியால் இருக்கிறார்கள் எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. மிகத் தாமதமாக, அதுவும் தமக்கு அந் நோயின் பின் விளைவுகள் வந்த பின்னரே பெரும்பாலானவர்கள் தம்நோயைக் கண்டறிகின்றனர். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் பற்றிய மேற் கூறிய தவறான எண்ணங்களே.

Diagnosis-11
எனவே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை காத்திருப்பது மூடத்தனமானதாகும்.

  • இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பலவிதமான இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையுடன் தமக்கேற்றதைச் செய்து கொள்ளலாம்.
  • சிறுநீர்ப் பரிசோதனை செய்வது இந்நோயைக் கண்டறிவதற்கான நம்பிக்கையான முறையல்ல என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
மருத்துவர்கள் வேறு நோய்களுக்காக அவரிடம் செல்லும் போதும் பிரஸரை அளந்து பார்க்கிறார்கள். அதே போல தமக்கு சந்தேகம் உள்ள பலரையும் சீனிக்கான இரத்தப் பரிசோதனை செய்யும்படி வேண்டுகின்றனர். இவ்வாறு இரத்தத்தில் சீனிப் பரிசோதனை செய்வது பல காரணங்களுக்காக இருக்கக் கூடும்.

மருத்துவரிடம் செல்லாதபோதும், உங்கள் இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா, அதிகரித்திருகிறதா என அறியப் பரிசோதனை செய்ய வேண்டும் முக்கியமான கீழ்க் கண்டுள்ளவர்கள் குருதியில் தமது சீனியின் அளவைச் செய்தறிவது அவசியமாகும்.

  • பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
  • கொழுத்த உடல்வாகு உள்ளவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும். எடையானது உயரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை உடற் திணிவு அலகு குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Body Mass index (BMI) ஆகும். இது இலங்கை போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு 23ற்குள் இருக்க வேண்டும். 25 மேற்பட்டவர்கள் செய்து கொள்வது விரும்பத்தக்கது.
  • தொந்தியான வயிறுள்ளவர்களும் செய்ய வேண்டும்.
  • தமது குடும்பதில் நீரிழிவு உள்ளவர்கள். பெற்றோர், சகோதரர்கள் போன்றவரிடையே நீரிழிவு உள்ளவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே அவர்களுக்கும் அவசியமாகும்.
  • உடல் உழைப்பற்ற, வாழ்க்கை முறையுள்ளவர்கள்

உலகளாவிய ரீதியில் பாதிப்பு அதிகமுள்ள நோய்

இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது மாத்திரமின்றி வேகமாக அதிகரித்தும் வருகிறது. உலகளாவிய ரீதியில் 350 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கபட்டிருக்கின்றனர்.

இந்நோயின் பாதிப்பால் மரணத்துக்கு ஆளாபவர்கள் தொகை பயமுறுத்துவதாக இருக்கிறது. 2004 ம் ஆண்டு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இந்நோயின் தாக்கத்தால் மரணத்தைத் தழுவினர். 8 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று அது இரு மடங்காக அதிகரித்து இருக்கலாம்.

இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் பத்து சதவிகிதத்தினர் (10.3%)    இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புற மக்கள், கிராமப் புற மக்கள் என வேறுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகின்ற போதும் நகர்பபுறத்தில்

16.4% சதவிகிதமாக இருக்கின்ற அதே நேரம் கிராமப்புறங்களில்

8.7% சதவிகதமாக இருக்கிறது.  நகரப்புற மக்களில் சற்று அதிகமாக இருப்பற்குக் காரணம்; அவர்களது வாழ்க்கை முறைகள்தான்.

நீரிழிவு ஏன் அதிகமானவர்களைப் பாதிக்கிறது

9273_14928_5

  • போதிய உடலுழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பதும்
  • தவறான உணவு முறைகளும்
  • கடைகளில் விற்கும் திடீர் உணவுகளை (Fast Foods)அதிகளில் உண்பதும் முக்கிய காரணங்களாகும்.

எண்ணெயில் பொரித்ததும், அதிகளவு மாச்சத்து, இனிப்புச் சத்து, உப்பு ஆகியன கொண்ட அத்தகைய குப்பை உணவுகளாவன

  • நீரிழிவு நோயை மட்டுமின்றி கொலஸ்டரோல்,
  • பிரஷர்,
  • பக்கவாதம்,
  • மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்,
  • சிறுநீரக செயலிழப்பு,
  • புற்றுநோய்

போன்ற பலவற்றையும் கொண்டு வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று கிராமப் புற மக்களின் உணவு முறைகளிலும் இத்தகைய தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களிலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாவரும் கடைப்பிடிப்பது அவசியம்.

நீரிழிவாளரின் உணவு

நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

காலாவதியான கருத்து

‘நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நூடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்’ என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.

தற்போதைய கருத்து

இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?

  • கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்.
  • பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
  • ஆரோக்கியமான சமவலுவுள்ள (Balanced)உணவையே ஆகும்.
  • எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.

பொதுவான ஏனைய ஆலோசனைகள் என்ன?

  • உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும். மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low GI) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
  • கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
  • காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
  • உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
  • எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
  • ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
  • பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
  • பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
  • துரித உணவுகளைத் (Fast food) தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம்,  சொக்லற் கேக், வனிலா கேக் போன்ற பலவும் அடங்கும்.
  • இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
  • மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

“இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை” என்றாள் தாய்.
வளரும் குழந்தை. முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.

ஏற்கனவே நோஞ்சான். பாலும் குடிக்கக் கிடைக்காததால் காஞ்ச நோஞ்சானக மாறியிருந்தான்.

“நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?” எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.

பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை. ஆனால் அதே பாலிலிருந்து தயாரித்த மாப்பாலுக்கு சளி பிடிக்காதாம்.  என்னே அறிவு!!.

அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro Waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.

பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இருந்தபோதும் வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் 2-3 சதவிகிதமான பாலகர்களுக்கு பசுப்பாலுக்கு ஒவ்வாமை இருக்கிறது. முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் பசுப்பால் அலர்ஜி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். தோல் அரிப்பு, எக்ஸிமா, சளி போன்ற அறிகுறிகள் பாலுக்கு அலர்ஜி உ்ள்ள 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்பட்டதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது.

குழந்தை பிறந்து குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கு மேற் கூறிய அலர்ஜி ஒரு முக்கிய காரணமாகும்.

மேற் கூறிய ஆய்வு 5 வயது முதல் 15 வயதுள்ள குழந்தைகள் பற்றியதாகும்.

ஹாய் நலமா வலைப்பூவில் சில வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன் இப்பொழுது பதிவாகிறது.

Read Full Post »

>தலையை அழுத்திப் பொத்திக் கொண்டு வந்திருந்தாள். வெண்மையான அவளது முகம் சாம்பல் பூசினாற் போல சோர்ந்திருந்தது. கண்களின் கீழ் கருமை பூத்திருந்தது. சோர்வும் அயர்ச்சியும் உடலெல்லாம் வியாபித்துப் பிசுபிசுத்தது.

எங்கே எனக்கும் ஒட்டிவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு எனது கொன்ஸ்சல்டேசன் அறை முழவதும் நீக்கமறப் பரவியது.

“தாங்க முடியவில்லை. தலை சிதறுமாப் போலிருக்கு…” என்றவள்,

“வேலைக்குப் போக வேணும். சோட் லீவிலை வந்தனான். கெதியிலை மாத்திவிடுங்கோ” நேர்த்தியான ஆங்கிலத்தில் அவசரப்பட்டாள்.
அவசரப்படுத்தவும் செய்தது தொனி.

அவளிலிருந்து எத்திப் பறந்த எரிச்சலும் சலிப்பும் என் மூஞ்சியில் ஒட்டிக் கொண்டது.

வழித்து எறிந்து விட்டு புன்னகைக்கும் முகமூடியைப் போர்த்திக் கொண்டேன்.

அதற்கிடையில் அவளது செல்பேசி உருகி உருகி அழைத்தது. விருட்டென ஹான்ட் பாக்கைத் திறந்தாள்.

“உன்னை அழைத்தேன். காதில் விழவில்லையா” என சிங்களத்தில் சிருங்காரமாக அவளுக்கென ரகசியம் போலப் பாட ஆரம்பித்தது,

திடீரென ஊரெல்லாம் எதிரொலிக்குமாறு வீறு கொண்டது.

அந்த ஓலியின் வேகத்தில் கழன்று நழுவி விழ முயன்ற புன்னகை முகமூடியை அழுத்திப் பிடித்து மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டேன்.

“சரியான வருத்தம். டொக்ரட்டை மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறன். முடிஞ்சதும் நேரை ஒவீசுக்குத்தான் வருவன்” என்றாள் சலிப்புடன் செல்பேசியில்.

அவளுக்கு சில மாதங்களாகவே
பொறுக்க முடியாத தலைவலி.
தலையை அழுத்துவது போலவும்,
தலை சிதறுமாப் போலவும் இருக்குமாம்.
காலையில் தொடங்கிவிடும்.
வெயில் ஏற ஏற வேகம் கூடிக்கொண்டே போகுமாம்.

மாலையில் சற்றுத் தணிந்துவிடும்.

பகல் முழுவதும் சினமாகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறதாம்.

பலரிடம் மருந்து எடுத்துவிட்டாள்.

கண் டொக்டரிடம் காட்டியபோது அவர் கண் பார்வையில் பிரச்சனை ஏதும் இல்லை. கடும் வெளிச்சம் காரணமாக இருக்கக் கூடும் என ரின்டட் கண்ணாடி கொடுத்தார்.

காது மூக்கு தொண்டை நிபுணரிடமும் (ENT Surgeon) இவள் செல்லத் தவறவில்லை. அவர் சைனஸ் நோயாக இருக்கலாம் எனக் கூறி இரண்டு வாரங்களுக்கு அன்ரிபயடிக் மற்றும் வலி நிவாரணிகள் கொடுத்தார்.

குணமாகவிட்டால் இரண்டு வாரத்தில் வருமாறு கூறினாராம்.
இவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

மூளைக்குள் கட்டி, கண்டல் ஏதாவது இருக்குமா என்ற எண்ணத்தில் இறுதியாக மூளை நரம்பியல் நிபுணரிடம் சென்ற போது CT Scan உட்பட பல பரிசோதனைகள் செய்தார்களாம்.  எல்லாNk ஒழுங்காக இருக்கிறது என்று சொன்னாராம்.

என்ன செய்வது யாரிடம் போவது என்பது புரியாமல் என்னிடம் ஆலோசனைக்காக வந்திருந்தாள்.

இவள் வந்த கோலமே இவளுக்கு மன அழுத்தம் இருப்பதைப் புலப்படுத்தியது.

மருத்துவரிடம் வந்திருக்கும் சொற்ப இடைவெளிக்கு உள்ளாகவே பணி புரியும் இடத்திலிருந்து அழைப்பு வருகிறது எனில் அங்கு எத்தகைய கடுமையான வேலைப் பளு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் ஆறுதலாகவும், விபரமாகவும் கேட்டதில் கணக்காளராக இருப்பதாகவும், வேலை அதிகம் எனவும்,
இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையைத் தனியே செய்வதாகவும் கூறினாள்.

மன அழுத்தம், வேலைத் தள நெருக்கடி போன்றவை உடல் நோய்களாக வெளிப்படும் என்பதைப் விளக்கினேன். ஆனால் அவளுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

‘தலை வலிக்கிறது, உடல் சோர்கிறது’ இவற்றிற்கு மனம்தான் காரணம் என்பதை அவள் முழுமையாக நம்பத் தயாராக இல்லை.

இருந்த போதும் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான எனது ஆலோசனைகளை கேட்கத் தவறவில்லை. சில மருந்துகளையும் பரிந்துரை செய்தேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்தாள்.

படுக்கையில் ஏதோ பூச்சி கடித்ததனால் ஏற்பட்ட வீக்கத்திற்கு காட்டுவதற்காக. ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதும் இல்லாத சாதாரண பிரச்சனை என்பதால் விரைவில் வேலை முடிந்துவிட்டது.

அவளது தலையிடி பிரச்சனை எப்படி இருக்கிறது என விசாரித்தேன்.

சஹாரா பாலைவனத்தில் நீர் வரட்சியால் நாக்கு உலர்ந்தவள் நீர் விழ்ச்சியைக் கண்டது போல முகம் மலர்ந்தாள்.

“இப்ப மூன்று மாசமாக நல்ல சுகம். தலையிடியே கிடையாது” எனக் கூறினாள்.

நான் கூறியவற்றை ஒழுங்காகச் செய்திருக்கிறாள் என்பதால் வனாந்தரத்து நீர் வீழ்ச்சி என் பக்கம் திரும்பியது போலக் குளிர்சியாக இருந்தது.

“எப்படிக் குணமாகியது?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவளது விடையால் மேலும் மகிழ்வடைவதை எதிர்பார்த்து என் ஆழ்மனம் வேண்டியிருக்க வேண்டும்.

முகமூடி இன்றியே முகம் மலர்ந்தேன்.

“என்ரை பிரண்ட் ஈ மெயில் அனுப்பியிருந்தா.
வோட்டர் திரப்பி செய்யச் சொல்லி .
இப்ப தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணி குடிக்கிறன்.
இது தொடங்கிய பிறகு தலையிடியே வாறதில்லை’

சற்றுத் தயக்கத்தின்தான் பின் சொன்னாள்.

நான் ஏதாவது இடக்கு முடக்காச் சொல்லக் கூடும் என்பதால் எற்பட்ட தயக்கமாக இருக்கலாம்.

“வலு சந்தோசமாக இருக்கு. இவ்வளவு சிம்பிளான முறையில் உங்கள் தலையிடியைத் தீர்த்து வைத்த நண்பிக்கு நானும் நன்றி சொல் வேண்டும்”
என  முக மலர்ச்சி மாறாது சொல்லி வைத்தேன்.

ஆயினும் உள்மனத்தில் அவளது தலையிடி மாறியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் எனத் தோன்றியது.

“அப்ப… வேலை எப்படி?”

“நான் பழைய வேலையை விட்டுவிட்டன்.
இப்ப வேறை இடத்திலை வேலை செய்கிறன்.
வேலை கடுமை இல்லை.
நேரத்திற்கு போய் நேரத்திற்கு வீட்டுக்கு வாறன்.
பொஸ்சும் நல்லவர்.
கூட வேலை செய்யிறவையும் நல்ல பிரண்ட்ஸ்சாக பிழங்குகினம்’

என்றாள் மகிழ்ச்சியுடன்.

‘ஓகோ! வேலைப் பளுவும், மனஅழுத்தமும் புதிய வேலையில் தீர்ந்துவிட்டது. அதனால் தலையிடி தானாகவே மறைந்துவிட்டது’ என்பது புரிந்தது.

ஆயினும் அதனை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்.

‘நல்லதாகப் போச்சு.
மனதுக்கு நிறைவான அந்த வேலையை இறுகப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.’ என்று சொல்லி விடை கொடுத்தேன்.

காகம் இருக்கப் பழம் விழுந்தது.

தண்ணீர் குடிக்கத் தலைவலி தீர்ந்தது.

 நன்றி :- வீரகேசரி

0.0.0.0.0

Read Full Post »

“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!”

“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு

சொன்ன போதும்

அவருக்கு எனது நக்கல் புரிந்துவிட்டது.

புரிய வேண்டும் என்றுதானே சொன்னேன்.

‘சொரி டொக்டர். சும்மா பேச்சுக்கு சொன்னனான்’ என்றார்.

அவருக்கு வயது 60 இருக்கும்.

அவரின் அம்மா 80தைத் தாண்டியவர்.

எந்த நோயாளியும் மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.

தனிப்பட்ட வேறுபாடுகள் கிடையாது.

தன்னிடம் வந்தவரது நோயைத் தணிப்பதுதானே மருத்துவரின் கடமை.

நோயாளியின் தற்போதைய நோய் மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்ற மருந்தைக் கொடுப்பார்கள்.

ஒருவருக்கு நல்ல மருந்து மற்றவருக்கு கூடாத மருந்து எனக் கொடுப்பது தொழில் தர்மம் அல்ல.

தொழில் தர்மத்தை கணக்கில் எடுக்கா விட்டால் கூட, நோய்க்கு ஏற்ற மருந்து கொடுக்காவிட்டால் சிகிச்சைக்கு வந்தவரது நோய் குணமாகாது.

‘கைராசியில்லாத டொக்டர்’,

‘அக்கறையில்லாதவர்’,

‘நோய் பிடிபடாதவர்’

போன்ற பல வாய்மொழிப் பட்டங்கள் கிடைப்பதை எந்த மருத்துவர்தான் விரும்புவார்.

‘நல்ல கத்தரிக் காயாப் பொறுக்கிப் போடு மேனை’,

‘அரிசி முதல் தரமாத் தாங்கோ’,

‘பெஸ்ட் கிளாஸ் சீலையாக எடுத்துக் காட்டுங்கோ’

என்று கேட்பது போலத்தான்.

‘நல்ல மருந்தாத் தாங்கோ’ என்பதும்.

வெறும் பழக்க தோசம்.

எனவே நான் கணக்கில் எடுப்பது கிடையாது.

அம்மாவைப் பரிசோதித்து அவவிற்கான மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தேன். மகனின் திருவாய் மீண்டும் திறந்தருளியது.

‘அம்மாவின்றை இருமலுக்கு arrackகொடுக்கலாமோ’

இருமலுக்கு அரக்கா?

அதைக் கொடுத்தால் போதை உண்டாகும்.

மதுப் போதையில் இருமுவது புரிவதில்லையே ஒழிய நோய் தணியாது.

பழகிவிட்டால் விடவும் முடியாது.

‘கொடேன்’ என்ற மருந்து சற்றுப் போதை கொடுக்கக் கூடியது. இது கலந்த ஒரு இருமல் சிரப் இலங்கையில் நல்ல பிரபலம்.

பலர் தாங்களாகவே அதனை வாங்கி உபயோகித்து. ‘சுகம்’ கண்டனர்.

விற்பனை அமோகமாகியது.

பலர் ‘மருந்துப் போதையில்’ திளைத்தனர்.

மருத்துவத்துறையினர் விழித்துக் கொண்டனர்.

இதனால் மருத்துவரின் சிட்டை இன்றி அம் மருந்து விற்பதை அரசு தடைசெய்ய நேர்ந்தது.

எனது சிந்தனைகளை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அவரது அடுத்த கேள்வியும் எழுந்தது.

‘அம்மாக்கு பசியும் இல்லை. பிரண்டி கொடுக்கலாமோ’

அரக், பிரண்டி தவிர இவருக்கு வேறு மருந்துகளே தெரியாதா?

‘கொடுக்கலாம்’ என்றேன்.

எனது விடையைக் கேட்ட புழுகத்தில் மலர்ந்த அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன்.

கன்னம் அதைத்திருந்தது.

கண்களின் கீழ்மடலில் வீக்கம்.

முகம் பொருமியது போலிருந்தது.

கண்களில் அசட்டுத்தனமான ஒரு கிறங்கல்.

‘நல்ல தண்ணிச்சாமி போலை’ என மனம் கணித்தது.

அவருக்கு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுவது மது என்பது புரிந்தது.

அதனையே அம்மாவுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டால் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

அம்மாவிற்கு என வாங்குவதில் மகனுக்கும் பங்கு இருக்கத்தானே செய்யும். சொத்தில் பங்கு கிடைப்பது போல.

“கொடுக்கலாம்…”

“…..அம்மாவையும் குடிக்கு அடிமையாக்க வேணுமெண்டால்”

என்றேன் சற்று அழுத்தமாக.

மதுவால் சினந்திருந்த

முகம் மேலும்

செம்மை பூத்தது.

மதுப் பாவனையின் தீமைகள் பற்றி ஆழமாக அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »

>

இந்த மருந்தை ஏன் வீணாப் போடுறியள்?

“தம்பி இந்த மருந்தைச் சுருக்கா தாங்கோ. வலியிலை துடிச்சுக் கொண்டு கிடக்கிறாள். கெதியிலை கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்.” அம்மா துடித்தாள்.

வேறு வேலையாக நின்ற கடைக்காரப் பொடியன் சற்று இளகிய மனம் படைத்தவன். அருகே வந்து அம்மா கையிலிருந்த மருந்துச் சிட்டையை
வாங்கினான்.

மருந்துகள் வழமைபோல ஆங்கிலத்தில் கிறுக்கியிருந்தன.

பிக்காசோவின் ஓவியம் போலிருந்தாலும், கிறுக்கு வைத்தியர்களின் கிறுக்கல்களைப் ‘புரிந்து’ மருந்தைக் கொடுக்கும் ஆற்றலை அவனுக்கு அனுபவம் கற்றுத் தந்திருந்தது.

புரிந்தது சரியானால் நோய் தீரும்,

இல்லையேல் ஆள் தீரும். அவ்வளவுதான்!

இரண்டு மருந்துகள். தேவையானபோது மட்டும் பாவிக்கும்படி எழுதியிருந்தன.

காலை மாலையாக இரண்டு தடவைகள் மட்டும் உபயோகிக்கும்படியும் ஒவ்வொன்றிலும் நாலு மாத்திரைகள் மட்டுமே சிபார்சு செய்யப்பட்டிருந்தன.

“யாருக்கு மருந்துகள்.”

“மகளுக்குத்தான்”
“வயசு எத்தனை”

“பதினெட்டு”

தேர்ச்சி பெற்ற மருத்துவன் போல மிடுக்காக அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுத்தான்.

வழமையாக அம்மா மருந்து வாங்குகிற கடை.
மருந்து கொடுக்கும் பையனும் அறிமுகமானவன்.
எனவே அம்மாவும் கிலேசமின்றி விடையளித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த கேள்வி அம்மாவை சற்று சங்கடப்பட வைத்துவிட்டது.

கேள்வி சாதாரணமானதுதான். “என்ன வருத்தம்?”

ஆனால் நாலு பேருக்கு முன்னால் எப்படி மறுமொழி சொல்வது?
அம்மாவிற்கு வெட்கம்.

குரலைத் தாழ்த்தி சங்கடத்தோடு “ஒண்டுமில்லை…. வழமையா வாற மாதச் சுகயீனக் குத்து..”

“அப்ப எதுக்கு நித்திரைக் குளிசையைக் குடுத்திருக்கிறார் டொக்டர்” என்றான் மருந்துக்கடைப் பையன்.

தவறிழைக்கும் குற்றவாளியை கேள்விக்கு உள்ளாக்கும் நீதவான் போல அதிகாரம் தொனித்தது அவன் குரலில்.

“மறதியிலை எதையாவது மாறி எழுதிப்போட்டாரோ டொக்டர்” அம்மாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

“கண்டபடி நித்திரைக் குளிசைகளைப் போடக் கூடாது. பழகிப் போகும். வீண் கரைச்சல். அதைவிட்டிட்டு மற்ற மருந்தைத் தாறன்”.

‘ஞானத்தின் முதிர்ச்சியும்’ மற்றவர்பால் அக்கறையும் கொண்ட பையன்! என அம்மா நினைந்து உருகினாள்.

வீட்டிற்குச் சென்ற அம்மா மற்ற மருந்தை மட்டும் மகளுக்குக் கொடுத்தாள்.


வலி அடங்கவில்லை.
மகள் அழுதாள், சினத்தாள், துடித்தாள்.
அம்மாவிற்கு மனம் பொறுக்கவில்லை.

டொக்டரட்டைக் காட்டி மருந்தெடுத்தும் பிரயோசனமில்லையே மனம் வருந்தியது.
அவரில் கோபமும் பொங்கியது.

……………….

“என்ன டொக்டர். மகளைப் பாருங்கோ. வலியிலை துடிக்கிறாள். நீங்கள் தந்த மருந்து வேலை செய்யவில்லை. ஏதாவது செய்யுங்கோ”


குற்றம் சாட்டும் தொனி அம்மாவின் குரலில் ஓங்கி ஒலித்தது.

டொக்டர் தனது பதிவுகளை எடுத்துப் பார்த்தார்.
மகளுக்கு கொடுத்த மருந்துகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது ஒரு வகை மருந்து கொடுபடாதது தெரிந்தது.

காரணம் கேட்டபோது அம்மா நடந்ததைப் பிட்டு வைத்தாள்.

“மகள் பாவம் அழுகிறாள் ஏதாவது செய்து குத்தை நிப்பாட்டுங்கோ” என
அம்மா மீண்டும் கேட்டாள்.

டொக்டர் மகளுக்குத் தேறுதல் சொல்லி ஒரு மாத்திரையையும் உடனடியாக விழுங்கவும் கொடுத்தார்.

அரை மணி கழிந்தது.

“இப்ப சுகம் டொக்டர். தாங்ஸ்”.
வேதனை தீர்ந்த மகள் வெளியேற ஆயத்தமானாள்.

“என்ன மருந்து கொடுத்தனீங்கள். இதை முதலிலேயே நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கலாமே”
அம்மாக்கு சினம் பொங்கியது.

“நான் முதலிலேயே எழுதிக் கொடுத்த அதே மருந்துதான் அது.
யாரோ சொன்னதைக் கேட்டு நித்திரைக் குளிசை என நினைத்து நீங்கள் கொடுக்கவில்லை.
பதற்றத்தைத் தணிக்கும் மருந்து.
மாதவிடாய் நேரத்திலை உங்கடை பிள்ளை வலி வரக்கை கடுமையாக மனம் பதகளிச்சுப் போறவை தானே.
வலியோடை அதையும் நிறுத்தினால் தானே சுகம் வரும்” என்றார்.

பட்டப் படிப்பு,
பட்டப் பின் படிப்பு,
தொடர் கற்கை
இவற்றுடன் பல வருட அனுபவமும்
நிறைந்த மருத்துவர் எழுதிக் கொடுத்ததை நம்பாமல்,
கடைப் பையனின் அன்பில் நனைந்த
அம்மாவின் கண் திறந்ததா நான் அறியேன்.

அம்மாவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அந்தப் பையன் மிக விரைவில் முழு வைத்தியன் ஆகிவிடுவான்!

ஆயிரம் பேரைக் கொன்றவனைத்தானே அரை வைத்தியன் என்று சொல்கிறார்கள்.

.0.0.0.0.0

Read Full Post »

>அவள் ஒரு குட்டிப் பெண். வயது பத்திருக்கும். வெயிலில் காய்ந்த வற்றல் போல வாடி வதங்கிக் கிடந்தாள். மூக்கு நுனியில் வழிந்த சளி

துடைத்திருந்தபோதும் காய்ந்து, அலங்காரத்திற்காக பூசிய திருநீறு போல பட்டும் படாமலும் தோற்றம் காட்டியது.

நெற்றி அனல் பொலக் கொதித்தது. பாகைமானியை வைத்த போது 103 வந்ததும் பீப் பிப் சத்தம். அதற்கு மேல் எண்கள் நகராது கண்சிமிட்டின.

‘ரா முழுக்க சரியான காய்ச்சல். முனங்கிக் கொண்டு கிடந்தாள். எங்களுக்கும் நித்திரையில்லை. வயிற்றைப் பிரட்டுது என்று சாப்பிடறாளும் இல்லை.’ என்றாள் அம்மா.

‘ஓம் இப்படியான காய்ச்சல் கடுமையாகத்தான் அடிக்கும். ஆனால் டெங்கு போல பயமில்லை…’ என்று நான் சொல்லவும்,

‘இதுகள் சொல்லுக் கேக்குதுகிளே! கண்டதையும் தின்னுறதும், குடிக்கிறதும்தான் வேலை. அதாலை சுத்திக் சுத்திக் காய்ச்சல். பெரிய தொல்லை’

‘என்ன சாப்பிட்டுக் காய்ச்சல் வந்தது? ‘ என்று கேட்கும்போது நக்கல் அடிக்கும் தொனி வெளிப்படாது இருக்கும்படி கவனம் எடுத்தேன்.

‘வேறை என்ன ரம்புட்டான்தான். கொஞ்ச நஞ்சமே பத்து பதினைஞ்சு என்டு திண்டு தள்ளிறாள்.’

ஓ! ரம்புட்டான் காய்ச்சல்.

இவள் மாத்திரல்ல, இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய காய்ச்சலுக்காகக் கொண்டு வந்துள்ளனர்.

இது ஜீலை மாதம். ரம்புட்டான சீசன். ரோட் ஓரமெல்லாம் தற்காலிக கடைகள். கடைகளில் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போல குவிந்து கிடக்கும்.

பிள்ளைகள் என்ன பெரியவர்களே ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவர்களில் பலர் காய்ச்சலுடன் வருகிறார்கள்.

நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல் வருகிறது, எலிகளின் எச்சங்களால் பரவுகிறது எலிக்காய்ச்சல், நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல்.

இது போல ரம்புட்டான் காய்ச்சல் என்றொரு புதுக் காய்ச்சலா?

அது வருவது ரம்புட்டான் சாப்பிடுவதாலா? அது எவ்வாறு தொற்றுகிறது என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?

காய்ச்சல் நோய் என்பது பெரும்பாலும் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது. ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜீன், ஜீலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. அதனால் டெங்கு, எலி முதல் சாதாரண தடிமன் காய்ச்சல் வரையான பல வித காய்ச்சல்கள் பரவுகின்றன.

வைத்தியசாலைகளில் காய்ச்சல் நோயாளிகள் நுளம்புகள் போல மொய்க்க நேர்கிறது. ரம்புட்டான் சாப்பிட்ட நேரத்தில் காய்ச்சல் வருவது என்பது தற்செயலாகத்தான் நடக்கிறது.

மேலே குறிப்பிட்டதை விளக்கி ‘காய்ச்சல் வந்த உங்கள் பிள்ளைக்கு இன்றைக்கும் விருப்பமானால் ரம்புட்டான் சாப்பிடக் கொடுங்கள். எதுவும் நடக்காது’ என்றேன்.

காய்ச்சலில் வாடிக்கிடந்த குழந்தையின் முகம் இதனைக் கேட்டதும் பிரகாசமானது.

தாயார் முகம் தொய்ந்தது.

‘ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.

கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள்.’

இதற்குக் காரணம் பழத்தின் தோல் பல விதமான அழுக்குகளால் மாசடைந்திருக்க வாய்ப்புண்டு.

பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள். நிலத்தில் நாய் பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும்.

அதே போல பழங்களைக் கொண்டுவரப் பயன்படத்திய சாக்கினாலும், வீதியில் பரப்பி வைத்திருக்கும் போது சூழலாலும் மாசடைந்திருக்கும். எனவே சுத்தமாகக் கழுவுவது முக்கியமானதாகும்.


இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

ஒரு வேளை அந்தப் பிள்ளை அல்லது வேறெந்தப் பிள்ளையாயினும் ரம்புட்டான் பழங்களை கழுவாது வாயினால் கடித்துத் தோலை அகற்றி உண்டிருந்தால் தோலிலுள்ள அசுத்தங்களால் வயிற்றோட்டம், சத்தி, செங்கண்மாரி, குடற் பூச்சிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »