Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தவறான கருத்து’ Category

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி.
காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது.

தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது,

“தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.

“என்ன நடந்தது” என விசாரித்தேன்.

“வழமையாக காது கடிக்கிறதுதான். இண்டைக்கு திடீரென இப்படியாயிற்று”

“காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” வினவினேன்.

“நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான்.

நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் காதைத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது.

காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும்.

அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை.

காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.

இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

தவாறான அணுகுமுறைகள்

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.

காதுக்கடி, அரிப்பு எனில் காதைக் கழுவுவதால் பிரயோசனமில்லை. அதற்கான மருத்துவத்தைச் செய்ய வேண்டும்.

காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல.

காதுக்குடுமி பயனுள்ளது

காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது.

  • அது காதின் சுவர்களை உலரவிடாமல் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகிறது. போதிய காதுக்குடுமி சுரக்காமல் வரட்சியாக இருப்பவர்களுக்கே பெரும்பாலும் காது அரிப்பு காதுக்கடி போன்றவை ஏற்படுகின்றன.
  • பக்றீரியா, பங்கஸ் போன்ற கிருமிகள் காதின் சுவுர்களைத் தாக்காமல் பாதுகாக்கின்றன.
  • பூச்சி, வண்டுகள் போன்றவை காதிற்குள் புகாமல் தடுக்கின்றன

காதிற்குப் பாதுகாப்பை அளிப்பதால் அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.

காதைக் கழுவும் முறை

ஆயினும் வேறு காரணங்களுக்காக காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். குளிக்கும்போது சுலபமாகச் செய்யலாம்.


பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.

காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுத்து நிறுத்தி விடும்.

ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. முன்பு அவ்வாறு வடிந்தவர்களும் மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே அவ்வாறு சுத்தப்படுத்தலாம்

இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

உலர்ந்த காதுக் குடுமி

சிலருக்கு காதுக் குடுமி உலர்ந்து காதை அடைப்பதும் உண்டு. இது அதிகமானால் காது கேட்பதில் குறைபாடு ஏற்படவும் கூடும்.

இதனை காது பட்ஸ், கெயர்பின், குடுமி நீக்கும் கிண்டிகள், போன்றவை கொண்டு அகற்ற முற்படுவது ஆபத்தானது. அது மேலும் உட்புறமாகத் தள்ளுப்பட்டு நிலைமையை மோசமாக்கும்

அடைத்த காதினுள் ஒலிவ் ஓயில் விட்டு அதனை இளகச் செய்யலாம்.  அல்லது அதற்கான பிரத்தியேக மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை காதினுள் விட்டு குடுமியை மெதுமையாக்கலாம். ஒரு நாளில் மென்மையாகாவிட்டால் மேலும் ஓரிரு நாட்களுக்கு அவ்வாறு செய்யலாம்.

மெதுமையான பின் முற் கூறியதுபோல நீர் விட்டுச் சுத்தப்படுத்தலாம்.

ஹாய் நலமா புளக்கில் முன்பு எழுதிய கட்டுரை சில விரிவாக்கங்களுடன் இங்கு பிரசுரமாகிறது.

Read Full Post »

>

உணவு வேண்டாமெனும் நோய்- Anorexia Nervosa

அம்மாவுக்குத்தான் சரியான கவலை. பார்க்கும் எல்லோருமே “உன்ரை மகளுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறாள்.” என அக்கறையோடு விசாரிக்கிறார்கள்.

மருத்துவனான எனக்கும் இது அக்கறை எடுக்க வேண்டிய விடயம் எனப் புரிகிறது.

ஆனால் மகள் அதை சட்டை பண்ணுவதாகத் தெரியவில்லை.

வேறோன்றும் இல்லை. அவள் சாப்பிடுகிறாள் இல்லையாம். எல்லா அம்மாக்களும் தனது மகள்மாரைப் பற்றிச் சொல்வது போன்ற வெற்றுப் பேச்சல்ல இது. தாய் சொல்வது உண்மை என்பதற்கு ஒல்லிக்குச்சான அவளது உடல் மறுக்க முடியாத சாட்சியாக நிற்கிறது.

வெளிறிய முகம், குச்சியான உடம்பு, வளர்ச்சி குன்றிய தசைகள், மென்மையான நோஞ்சி முடி, வரண்டு மஞ்சள் பூசியது போன்ற சருமத்துடன் சோர்ந்திருந்தாள். வயதிற்கேற்ற துடியாட்டம் இல்லை. எப்பொழுதும் குளிராக இருப்பதாகவும், சாதாரண குளிரைக் கூடத் தாங்க முடியாதிருப்பதாகவும், மலச்சிக்கல் தொல்லை கொடுப்பதாகவும் சொன்னாள். ஓரளவு இரத்தசோகையையும் அவதானிக்க முடிந்தது.

இவை அவளில் மட்டுமல்ல, Anorexia Nervosa எனப்படும் உணவு உட்கொள்ளல் குளறுபடியில் உள்ள பலருக்கும் ஏற்படுகிறது. குளறுபடி என நான் பொதுப்படையாகச் சொன்னாலும் மருத்துவம் செய்ய வேண்டிய ஒரு நோய்தான் இது.

இதற்கு அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம்.

தனது உடல் பற்றிய தவறான கருதுகோள் – தான் கொழுத்துவிட்டதான மனப் பிராந்தி

‘மெல்லிய உடலாக இருப்பதுதான் ஆரோக்கியமானது, அதுதான் அழகையும் கொடுக்கும். தான் கொழுக்கக் கூடாது. தனது உடை அதிகரிப்பது கூடாது. அதற்காகக் குறைவாக உண்ண வேண்டும். கண்ட சாப்பாடுகளையும் சாப்பிடக்கூடாது.’ என எண்ணுவதே அடிப்படைப் பிரச்சனையாகும்.

சிலர் உணவுக் கட்டுப்பாடுடன் எடையைப் பேணுவதாக எண்ணி கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்வர். உண்ட உணவை வெளியேற்ற தாமாக முனைந்து வாந்தி எடுப்பதும், மலங்கழிய மாத்திரைகள் உண்பதும், சிறுநீர் அதிகமாக அடிக்க மருந்துகள் சாப்பிடுவதும் என பல காரியங்களைச் செய்யவும் கூடும்.

தம்மை அடிக்கடி நிறுத்துப் பார்ப்பதும், தான் உண்ணும் உணவுகளின் நிறையை அளந்து பார்ப்பதும், எடையை அதிகரிக்காது எனத் தாம் கருதும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டுமே உண்பதும் மற்றவர்களுக்கு நகைப்பை ஊட்டினாலும் அவர்கள் கடமையுணர்வோடு செய்வர்.

இது நகைப்பிற்கு உரிய நோய் அல்ல. அலட்சியப்படுத்தக் கூடியதும் அல்ல. ஏனெனில் இவர்கள் இறப்பதற்கான சாத்தியம் சாதாரணமானவர்களைவிட 10 மடங்கு அதிகமாகும். இருதயம் திடீரென நிற்றல், உடலிலுள்ள நீர் மற்றும் கனிய உப்புகளின் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் காரணமாகின்றன. சிலர் தற்கொலை செய்து இறப்பதும் உண்டு.

மனச்சோர்வு, மனப்பதகளிப்பு நோய், மாற்ற இயலா எண்ணங்கள் போன்ற உளநோய்கள் இவர்களிடையே இருப்பது அதிகம். பெண்களிடையே மாதவிடாய் கோளாறுகளும் அதிகமாக காணப்படும். சிலர் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் இருக்கக் கூடும். நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் சோதித்துப் பார்ப்பர்.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அது மூன்று படிகளைக் கொண்டதாகும்

  1. நோயாளின் எடையை சாதாரண அளவிற்கு கொண்டுவருதல் முக்கியமானது.
  2. நோயாளியின் உணவு உண்ணல் குளறுபடி நிலைக்கு அடிப்படையான உளவியல் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளித்தல்
  3. தவறான உணவுமுறைகளுக்கான பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மாற்றுதலும், மீள வராமல் தடுத்தலுமாகும்.

மருந்துகள் மட்டும் இவற்றிற்கு உதவப் போவதில்லை. தனிப்பட்ட ரீதியிலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடுவது, உளவளத் துணை ஆகியன நல்ல பலனைக் கொடுக்கும்.

உணவு உண்ணல் சம்பந்தமான வேறு நோய்கள்

உணவு உட்கொள்ளல் முறையோடு சம்பந்தமான வேறு இரு நோய்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

அதீதமாக உண்ண வேண்டும் என்ற அடக்க முடியாத அவா, இதனால் எடை அதிகரிப்பது, அது பற்றி குற்ற உணர்வுக்கு ஆளாவது. குற்ற உணர்விலிருந்து மீள மேலும் உண்பது என்பது (Binge eating) நோயாகும்


கட்டுப்படுத்த முடியாது அதீதமாக உண்பதும் பின் அதன் பாதிப்பை நீக்க தானாக வாந்தியெடுத்தல், பேதிபோக வைத்தல் (Bulimina nervosa) மற்றொரு நோயாகும்.

இவை யாவும் மருத்துவ ஆலோசனையுடன் குணப்படுத்தக் கூடியவையே.

உடையைக் குறைக்கும் அற்புத வழிகளுக்கு கீழே சொடுக்குங்கள்

வயதிற்கும் எடைக்கும் இடையிலான தொடர்பு பற்றி சிரித்துக்கொண்டு அறிய கீழே சொடுக்குங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.0

Read Full Post »

>வேப்பமரத்து நிழல் குளிர்மையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து 80-90 வயதுகள் வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மூதாதையர்களை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது.

இயற்கையோடு இசைந்த 
வாழ்வின் சுகங்களை எண்ணும்போது,
தொலைத்த எமது வாழ்வின் வசந்தங்களை
ஏக்கப் பெரு மூச்சுகளாக
வெளியேற்றவே முடிகிறது.

வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.

வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,

வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,
வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,
வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென
நினைந்து ஏங்கவே முடிகிறது.

வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.

‘குடித்துப் பார்க்கவில்லையா?’ என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் ‘குடிக்கிறது கஷ்டம்’ என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.

இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.

ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)

“இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்”
என்றும் சொல்கிறது.

தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.

ஆனால் இது பழம் கதையல்ல.
இன்றும் தொடர்கிறது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாத Ceylon Medical Journal சஞ்சிகையில்
இது பற்றிய புதிய விபரம் வெளியாகி இருக்கிறது.

பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு
வேப்பெண்ணெயைக் கொடுத்த போது
மூளை மண்டலம் பாதிப்புற்று
வாந்தி,
மயக்கம்,
முழுமையான வலிப்பு (Generalized Seizures)

ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ஈரல் வீக்கம்,
ஈரல் பாதிப்பு,
Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.

வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.

இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.

வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol)  மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.

மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.

வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும்
பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.

ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய
ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும்
எண்ணெயானது
எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி
எங்கும் கட்டுப்பாடின்றி
விற்பனையாகிறது.

‘வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது’
என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.

தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.

எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.

அது அவசியமும் கூட.

ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.

வேப்பெண்ணெய் கசத்தாலும்
அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>
An apple a day keeps the doctor away என மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.

ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

உடல் நலத்திற்காக அல்ல!


அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.

வைனின் நல்ல பயன்கள்

உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது
புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.
இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,
வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,
நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது
என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?

அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?

அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப் பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.

வைனில் உள்ள மதுவல்ல காரணம்

ரெஸவெடரோல்

(Resveratrol) என்ற இரசாயனப் பொருளே முக்கிய காரணமாம்.

அது குருதியில் நல்ல கொலஸ்டரோல் HDL அளவை அதிகரித்து இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது.
அத்தோடு குருதி உறைதலைக் குறைத்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன.
அழற்சிக்கு எதிரான தன்மையும் ரெஸவெடரோலுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Resveratrol பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

அல்ஸிமர் நோய், பார்க்கின்சன் நோய் போன்றவை மூளை நரம்புகளை படிப்படியாகச் சேதமடையச் செய்து மூளையை மந்தமாக்கும்.
வைன் அருந்துவது இந் நோய்கள் தீவிரமாகும் வேகத்தை குறைக்கின்றன எனத் தெரிகிறது.


அவ்வாறெனில் தினமும் வைன் குடிப்பது நல்லதா?

வைன் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு.

வைனின் மறுபக்கம்

உதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன

triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.


உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.

கபாலக் குத்து எனப்படும்


(Migraine) நோயாளர்கள் பலருக்கும் வைன் தூண்டியாக இருப்பது தெரிகிறது. முக்கியமாக செவ் வைன்

(Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.

வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

வைன் என்பது உண்மையில் ஒரு மது.
மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.
அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.
ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.

இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.

எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.

எவ்வாறு அருந்துவது

இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.

அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள் முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.

ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.

அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.

இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.

காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும்.


ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.

வைன் குடிப்பது அவசியமா?

மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?

நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.

ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.

ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும்.

வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.

வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.

வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.

என்ன சொல்லப் போகிறீர்கள்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி

இருக்கிறம் 01.11.2009

Read Full Post »

>“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!”

“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு
சொன்ன போதும் ……….
மேலும் படிக்க கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »