Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தாய்மை’ Category

இன்று உலகம் சுருங்கிவிட்டது. மக்களின் பயணத் தேவைகளும் அதிகரித்து விட்டன. உள்நாட்டுப் பயணங்கள் மாத்திரமின்றி வெளிநாட்டுப் பயணங்கள் கூட அதிகரித்துவிட்டன. சாதாரண மனிதர்கள் மாத்திரமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களும் தேவைகளும் எழுகின்றன.

‘நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இந்த நிலையில் நான் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது. விமானப் பயணம் செய்யலாமா?’ என்ற கேள்வியுடன பல பெண்கள் வருகிறார்கள்.

Pregnancy-and-Air-Travel

 • விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா?
 • தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா?
 • இரத்தப் பெருக்கு ஏற்படுமா?
 • கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா?

போன்ற பயங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

உண்மையைச் சொல்லப் போனால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாணத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு.

hpiPregTravel_default

ஆயினும் சில நோயுள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே.  உதாரணமாக

 • கடுமையான இரத்தசோகை உள்ளவர்கள்.
 • சூல்வித்தகம் ஊடாக கருவிற்கு போஷணைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் பாதிப்பு உள்ளவர்கள் (Placental insuficency).
 • குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள்.
 • சிக்கிள் செல் (Sickle cell anaemia) நோயுள்ளவர்கள்

இவர்கள் வைத்திய ஆலோசனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும்.

கர்ப்பமாயிருக்கும் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பயணிக்கலாம்.

உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில்நுட்பத் தகவல்கள் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக் கூடும்.

காற்றமுக்கம்

விமானம் பயணம் செய்யும்போது விமானத்திற்குள் இருக்கும் காற்று அழுத்தமானது விமானம் உயர்ந்து செல்வதற்கு ஏற்பக் குறைக்கப்படுகிறது. உண்மையில் அதன் காற்றமுக்கம் வானவெளியில் 5,000 அடிக்கும் 8,000 அடிக்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் வானவெளியின் காற்றமுக்க அளவிற்குக் குறைகிறது.

காற்றமுக்கம் குறைவதால் உங்களினதும், உங்கள் குழந்தையினதும் இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவும் குறையவே செய்யும். ஆனால் இதையிட்டு நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்களதும் கருவினதும் உடல்கள் குறைந்தளவு ஒட்சிசனின் அளவுக்கு ஏற்ப தம்மை இலகுவாக இசைவடையச் செய்துவிடும் ஆற்றல் கொண்டவை.

கதிர் வீச்சு

இன்னுமொரு உங்கள் சந்தேகம் கதிர் வீச்சுகள் பற்றியதாக இருக்காலாம். இவை கருவைப் பல விதத்திலும் பாதிக்கலாம் என்பது உண்மையே. கதிர் வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ்ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.

விமானத்தில் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என நீங்கள் ஜயுறக் கூடும். உண்மைதான் தரையிலிருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும் அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியளவு செறிவு கூடியதல்ல. எனவே தயக்கமின்றிப் பயணம் செய்யலாம்.

Ack-Ook-flickr0

விமான நிலையத்தில் செய்யப்படும் ஸ்கான் பரிசோதனையானது எக்ஸ் கதிர் கொண்டவை அல்ல. அவற்றால் ஆபத்து இல்லை.

மிகவும் பாதுகாப்பான காலம்

சரி கர்ப்பமுற்றிருக்கும் காலத்திலும் பயணம் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது. ஆயினும் கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம். அதாவது 18 முதல் 24 வாரம் வரையான காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாகவே இக் காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

ஆனால் இந்தக் காலத்தில் மட்டும்தான் விமானப் பயணம் செய்யுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல.

அடுத்ததாக மிக ஆபத்தான காலம் என்று எதனைச் சொல்லாம் என்று நீங்கள் கேட்கக் கூடும்.. பயணத்தின்போது திடீர் மகப்பேறு ஏற்படாதிருக்கக் கூடிய காலம்தான். எனவே கர்ப்பத்தின் இறுதியை அண்மிக்கின்ற, அதாவது 36 வாரத்திற்குப் பிந்திய காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு உசிதமானதல்ல என்றே பெரும்பாலான வைத்தியர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

அதிலும் காலத்திற்கு முந்திய பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் முக்கியமாக இக்காலகட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்கள் 34 வாரங்களுக்குப் பின்னர் அவதானமாக இருப்பது நல்லது.

தடுப்பு ஊசிகள்

சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் சில மேலதிக தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என எதிர் பார்க்கின்றன. பல மேலை நாட்டிலுள்ளவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணப்படும்போது மலேரியத் தடுப்பு மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும் என்கின்றன. இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே மருத்துவரிடம் தெளிவான ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

waterDrink_large
விமானப் பிரயாணத்தின் போது

 • விமானப் பயணத்தின் போது போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியமாகும். ஏனெனில் விமானத்திற்குள் இருக்கும் வளியின் ஈரலிப்புத்தன்மை குறைவாகும். இதனால் உங்கள் உடலின் நீர்த்தன்மையும் குறைய நேரும். இதனைத் தவிர்ப்பதற்காகவே விமானப் பயணத்தின் போது போதிய நீராகாரம் அருந்துவது முக்கியமானதாகிறது.
 • விமானத்தில் பறக்கும்போது பல சந்தர்ப்பங்களில் இருக்கைப் பட்டி (Seat belt) அணிய நேரிடும். முக்கியமாக விமானம் மேல் எழும்போதும், இறங்கும்போதும் இருக்கைப் பட்டி அணியுங்கள் என விமானப் பணியாளர்கள் எல்லோரையும் வேண்டுவார்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் இருக்கைப் பட்டியை வயிற்றிக்குக் குறுக்காக இறுக்கமாக அணியாதீர்கள். மாறாக அடி வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதாவது உங்கள் தொடைகளும் வயிறும் இணையும் பகுதியைச் சுற்றியே இருக்கைப் பட்டியை அணியவேண்டும்.
 • விமானப் பயணம் பலமணிநேரம் நீடிக்கலாம்.  நீண்ட நேரம் கால்களுக்கு அதிக வேலை கொடுக்காது உட்கார்ந்திருந்தால் கால்களிலுள்ள நாளங்களில் குருதி உறையக் (Deep vein thrombosis)கூடிய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக விமானப் பிரயாணத்தின் போது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை உங்கள் இருக்கையை விட்டு எழுந்து சற்று நடவுங்கள். இடையிடையே பாதங்களை மடக்கி நீட்டிப் பயிற்சி கொடுப்பதும் நாளங்களில் குருதி உறையாமல் தடுக்க உதவும்.
 • விமானப் பயணத்தின் போது உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுப்பதும் நல்லதாகும். அவ்வாறான இருக்கையை ஒதுக்குமாறு கோருங்கள். விமானத்தின் இறைக்கைகளுக்கு அண்மையான இருக்கைகள் அதிக குலுக்கமின்றிப் பயணிக்க உதவும். விமானத்தின் தலைப் பகுதியிலும் பக்கவாட்டிலும் உள்ள இருக்கைகள் பொதுவாக விசாலமானவை. சௌகர்யமான பயணத்திற்கு ஏற்றவை. எனவே விமானப் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறான சாதாரண விடயங்களைக் கவனத்தில் எடுத்தால் உங்கள் விமானப் பயணம் பாதுகாப்பாகவும், பயமின்றியும், சௌகர்யமாகவும் அமையும்.
கவலையை விடுங்கள், மகிழ்வோடு சிறகுகளை விரியுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது.

கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா?
Dr.M.K.முருகானந்தன்

M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)

குடும்ப வைத்திய நிபுணர்

00.00.00

Read Full Post »

>எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

சமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.

வயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை

புகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.

பெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில்

 • ஆஸ்த்மா, 
 • சுவாசநோய்கள், 
 • செவியில் கிருமித்தொற்று 

போன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
அண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.

அத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.

முக்கியமாக

 • மனச்சோர்வு (Depression) 
 • கவனக்குறைவு, 
 • அதீத துடியாட்டம் 

போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.

மனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.

அந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.

இதன் அர்த்தம் என்ன? கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா?

இல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.

கர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.

எனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.

அத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.

தன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.

தன்செயலின்றிப் புகைத்தல்

ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

Sourse:- Presented at the Pediatric Academic Societies (PAS) annual meeting, Vancouver, British Columbia, Canada. May4, 2010.

தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.

போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை விட்டமின் ஆகும்.

எத்தகைய பாதிப்பு

இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.

இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.

இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.

அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.

ஏன் குறைபாடு ஏற்படகிறது

எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.

அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.

குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.

இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.

ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?

கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே  ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது.  குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால்  இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.

எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.

எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.

காணொளியில் காணுங்கள்

கீழே ஒரு வீடியோ. போலக் அமிலம் பற்றியும், கரப்பகாலத்தில் அதை உட்கொள்வதன் மூலம் தனது நலத்தையும் வளரும் கருவின் நலத்தையும் பேணுவது பற்றியது.

நன்றி:- March of dimes இன் Healthy Pregnancy, Healthy Baby: Folic Acid for Women

மேலதிக தகவல்களுக்கு

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் ‘போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?’ என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

Read Full Post »

>பாலுட்டும் தாய்மார் என்ன சாப்பிட வேண்டும்.

தாம் உண்ண வேண்டியது என்ன என பாலுட்டும் தாய்மார் கேட்கும்போது இரண்டு விடயங்களை மனதில் வைத்தே கேட்கிறார்கள்.

 • குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிக்குமாக தாய் என்ன விசேட உணவுகளை உண்ண வேண்டும்
 • தனது உடல் நலத்தைப் பேணுவதற்காகத் பாலுட்டும்போது தாய் விசேடமாக உண்ண வேண்டியவை எவை?.

இவ் இரண்டு கேள்விகளுக்குமான விடை சுலபமானது.

 1. முதலாவதாக, குழந்தையின் நலத்தைப் பேணுவதற்காக நீங்கள் எதையுமே மேலதிகமாகவோ விசேடமாகவோ உண்ண வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணினால் போதுமானதாகும். உங்கள் உடலானது உங்கள் குழந்தைக்கு வேண்டியதைத் தானாகவே சுரந்துவிடும். 
 2. இரண்டாவதாக, நீங்கள் இப்பொழுது ஒரு குழந்தைக்குத் தாய். அதற்குப் பாலாட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கு மேலாக உங்கள் குழந்தையைப் பராமரிக்கிற பணியும் மேலதிகமாக வந்திருக்கிறது. அது மகிழ்ச்சியான பணியான போதும் சற்றுக் கடினமானதும் கூட. 

அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம்
உங்கள் உடலை,
அதன் ஆரோக்கியத்தை,
அதன் போசாக்கைக் கவனிப்பது அவசியமாகும்.

சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நல்ல உணவாக உண்பதுதான்.
நல்ல உணவு என்பது விலையுயர்ந்த உணவுகள் அல்ல.
போசாக்குள்ள உணவு.
இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு.

அதாவது உங்கள் உணவில்

 • மாப்பொருள், 
 • புரதம், 
 • கொழுப்பு, 
 • விட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள், 
 • கல்சியம் இரும்புச் சத்து போன்ற தாதுப்பொருட்கள் யாவும் தேவையான அளவில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

உண்ண வேண்டியவை

 • சோறு இடியப்பம், புட்டு, நூடில்ஸ், அப்பம், உருளைக்கிழங்கு போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் மாப்பொருள் கொண்டவையே. இவையே எமது உணவின் பிரதான கூறு ஆகும். அளவோடு அவசியம் சாப்பிட வேண்டிய உணவு வகையாகும்.
 • காய்கறிகள் பழவகைகள். அனைத்துக் காய்கறிகளும் நல்லவையே. வெண்டிக்காய் குளிர், தக்காளி கிரந்தி, பயிற்றங்காய் வாய்வு என்றெல்லாம் பத்தியம் பார்க்காது அனைத்தையும் மாறி மாறி உண்ணுங்கள். கறியாக சமைத்தும் சாப்பிடலாம். சலட் ஆகவும் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாசிபழம் ஆகாது என்று சிலர் கருதுவது தவறானது.

 • குழந்தை பிறந்திருக்கும் காலத்தில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. மலத்துடன் இரத்தம் போவது, மலம் வெளியேறும்போது வலிப்பது போன்ற சிக்கல்கள் இதனால் தொடரும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்க நார்ப்பொருள் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். தவிட்டு அரிசி, கீரை, மற்றும் பயறு, சோயா, போஞ்சி பயிற்றங்காய் போன்ற அவரையின காய்கறிகளையும் அவசியம் சேர்க்க வேண்டும்.
 • புரதச் செறிவுள்ள முட்டை, மீன், கோழியிறைச்சி, பால் போன்றவற்றைத் தவறாது சேர்க்க வேண்டும். பாலூட்டும் காலத்தில் மீன் சாப்பிட்டால் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன. மேலே குறிப்பிட்ட அவரையின உணவுகளிலும் புரதம் அதிம் உண்டு என்பது நீங்கள் அறிந்ததே.
 • பால், தயிர், யோகொட் போன்றவற்றில் புரதம் மட்டுமின்றி கல்சியம் சத்து இருப்பதால் சேர்ப்பது அவசியம்.
 • போதிய நீர் அருந்துங்கள். பழச்சாறுகள், மோர், இளநீர் போன்றவற்றை அருந்தலாம். வயிறு பெருக்கும், வயிற்றுப் புண் காயாது என்று சொல்லி மகப் பேற்றுன் காலத்தில் நீர் அருந்துவதைக் குறைப்பது தவறான செயலாகும். போதிய பால் சுரப்பதற்கும், சிறுநீர்த் தொற்று நோய்கள் ஏற்படாதிருக்கவும் போதிய நீராகாரம் அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளனவா?

மீன் சாப்பிட வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு ஏஜென்சியான (US Enviromental Agency) பாதரசம் அதிகமுள்ளதால் சில வகை மீன்களை கர்ப்பமாயிருக்கும் போதும், பாலூட்டும் காலத்திலும் அளவோடு உண்ண வேண்டும் என்கிறது.

Sword fish, King Mackerel, or Tile Fish  ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறது.

அதே நேரம் ஒரளவு பாதரசம் மட்டுமுள்ள Shrimp, Canned Light Tuna, Salmon, Pollock, and Cat Fish போன்வற்றை வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் அளவோடு உண்ணும்படி சிபார்சு செய்கிறது.

கபேன் அதிகமுள்ள பானங்களை அதிகம் குடிக்க வேண்டாம்.
தேநீர், காப்பி, கொக்கோ போன்றவற்றில் அதிகம் உண்டு. பல மென்பானங்களிலும் உண்டு.
அதேபோல சொக்கிளற்றிலும் அதிகம் உண்டு.

தாய்பால் ஊடாக குழந்தைக்கு கபேன் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக குழந்தையை தூங்கவிடாது அதிக நேரம் விழித்திருக்க வைக்கும். எனவே வழமையாக அருந்துவதைத் தவிருங்கள். எப்போதாவது அருந்தினால் தவறில்லை.

மது அருந்துவது கூடாது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஆயினும் கர்ப்பமாயிருக்கும்போது மது அருந்துவது கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. தாயிலிருந்து குழந்தைக்கு தாய்ப்பால் ஊடாக மது செல்வது குறைந்த அளவில்தான்.

கச்சான் (Peanut) ஒவ்வாமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆயினும் பால் ஊட்டுவதால் குழந்தைக்கு பிற்காலத்தில் பீநட் ஒவ்வாமை ஏற்படும் என்பதற்கு திடமான ஆதாரங்கள் கிடையாது. எனவே குழந்தைக்கு கிரந்தி என்று சொல்லித் தவிர்க்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் நலத்திற்காக உட்கொள்ள வேண்டாம்.

0.0.0.0.0.0

Read Full Post »