Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘திறனாய்வு’ Category

>

நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நாடறிந்த இலக்கியவாதி. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் தொடர்ந்து எழுதுபவர். படைப்பிலக்கியங்களை மாத்திரமின்றி திரைப்படத்துறை விமர்சனத்துறையிலும் மிக முக்கியமானவர். தினக்குரலில் ‘நமக்கிடையே’ என்ற தலைப்பில் நல்ல பல கட்டுரைகளை எழுதுகிறார்.

திறனாய்வு பற்றி இன்றைய தினக்குரலில் அவர் எழுதிய கட்டுரையை இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். திறனாய்வில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இது.

அந்நாட்களில் இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு “நயங்காணல்’ என்ற ஓர் அப்பியாசத்தை ஆசிரியர்கள் கொடுப்பது வழக்கம். அதனை ஆங்கிலத்தில் LITERARY APPRECIATION என்றார்கள்.

அவ்வாறான பயிற்சி கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுவாகத்தான் இருந்தது:

குற்றம் குறை காணுமுன்னர், சரி பிழை பார்க்கு முன்னர், ஒரு படைப்பை முதலிலே “சுவை’க்கப் பழக வேண்டும்.

ஒரு படைப்பாளி என்ன நோக்கத்திற்காக ஒரு படைப்பைப் படைத்திருக்கிறானோ, அந்த நோக்கில் நின்று நாம் அந்தப் படைப்பை முதலில் அணுக வேண்டும் என்பது ஆசிரியர்களின் நோக்கமாக இருந்தது.

அதற்காகவே முதலில் நயங்கண்டு பின்னர் அப்படைப்பாளியின் திறனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது சொல்லாமற் சொல்லும் கோட்பாடு. ஆசிரியர்கள் இலக்கிய மாணவர்களை அவ்வாறே வழிப்படுத்தினர்.

இலக்கிய அணுகுமுறையின் அடுத்த படியிலேயே திறனாய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பர். அதாவது, இலக்கியம் கற்றலுடன் திறனாய்வுப் பண்பும், பணியும் இணைந்துள்ளன.

ஒரு நல்ல இலக்கியத்தையோ,”இலக்கியம்’ எனக் கூறிக்கொள்ளப்படும் ஓர் ஆக்கத்தையோ நாம் ஆராயும்போது அந்த இலக்கியத்தை நாம் ஒன்றில் மேலும் சுவைக்கிறோம்; அல்லது அதன் சிறப்பின்மையை அறிந்து கொள்கிறோம். இது இலக்கியம் கற்றலுக்குப் பெரிதும் உதவுகிறது.

***

மேலை நாடுகளில் திறனாய்வு என்ற பெயரில் பற்பல வாதங்கள் கருத்தியல்கள் (‘ISMS’) காலத்துக்குக் காலம் வெளிவந்து ஓய்ந்தும் போயுள்ளன. அது காரணமாகவே, அத்தகைய முறைகளில் திறனாய்வு செய்வதை நான் கூடியவரை தவிர்த்து வந்துள்ளேன்.

என்னைப் பொறுத்தமட்டில் ORGANIC CRITICISM எனப்படும் முறைமை பொருத்தமானதாகவும், வசதியானதாகவும் இருக்கிறது.

ஆயினும், இந்த முறைமை (அலசிப் பார்க்கும் முயற்சி) மாத்திரமே முழுமையானதென்றோ, சரியான தென்றோ நான் கூறவரவில்லை.

மேலை நாடுகளில், பல்கலைக்கழக மட்டங்களில் திறனாய்வு எத்தகைய நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனைப் பார்ப்போம்.

STRUCTURALISM (கட்டமைப்பியல் வாதம்), DECONSTRUCTION அல்லது POST-STRUCTURALISM (கட்டமைப்பு அவிழ்ப்பு வாதம் அல்லது கட்டமைப்பு முறைக்குப் பிற்பட்ட வாதம்) FEMINIST CRITICISM (பெண்ணியத்திறனாய்வு) NEW HISTORICISM (புதிய வரலாற்றியைவு வாதம்) போன்றவை அண்மைக்காலத் திறனாய்வுப் போக்குகளாக இருந்து வந்தன.

காலந்தாழ்த்தி தமிழ்நாட்டுச் சிற்றேடுகளுக்கு அறிமுகமான இந்த “இஸம்’கள், ஈழத்திலும் ஓரிருவரினால் இன்னும் பின்பற்றப்படுகின்றன. இவற்றைவிட MARXIST CRITICISM (மார்க்சிய நோக்குத் திறனாய்வு) பெருமளவு அர்த்தம் நிரம்பியதாக இருக்கிறது எனலாம். இது ஏனெனில் நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு மார்க்சியப் பார்வை கொண்ட படைப்புகளாகவே இலங்கையில் இதுகாலவரையும் இருந்து வந்துள்ளன. எனவே, மார்க்சியத் திறனாய்வு இந்நாட்டில் அதிக கவனம் பெற்று வந்துள்ளது.

சமூகப் பார்வை கொண்ட எந்தவொரு திறனாய்வாளனும், மனிதாபிமானத்திற்கு நெருங்கிய மார்க்சிய அணுகுமுறையைத் தன்னையறியாமல் உள்வாங்கிக் கொள்கிறான். ஆயினும், மார்க்சியப் பார்வை மாத்திரமே முழுமையானது என்பதற்கில்லை. இது ஏனெனில்,”மார்க்சியம்’ என்பது கூட இயற்கையின் நியதி என்பதுபோல காலத்துக்குக் காலம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு மாறிவருவது கண்கூடு.

இதனாலேயே அமரர் கனகசபாபதி கைலாசபதி வலியுறுத்திய MULTI-DISCIPLINARY CRITICISM (பல்நெறிசார்ந்த திறனாய்வு அணுகுமுறை) என்னைப் பெரிதும் கவர்ந்து வந்துள்ளது. ஒரு படைப்பின் உள்ளடக்கம் (CONTENT) உருவ அமைப்பு (STRUCTURE) இரண்டையும் அலசிப்பார்க்கும் ORGANIC CRITICISM ன்பதற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளேன்.

“அமைப்பியல் ஆய்வு’ என்பதற்கு விளக்கம் தரும் ஆய்வாளர் திருமதி கலாநிதி செல்வி திருச்சந்திரன் இவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்.

“ஒரு இலக்கியத்தின் அமைப்பினை அல்லது பூரண உருவத்தை ஆய்வு செய்தலையும், / அதன் கூறுகளையும், அதன் பரிமாணங்களையும்/ ஆய்வு செய்வதைக் குறிக்கும்’. இதனைத்தான்”அமைப்பில் ஆய்வு’ என்பதற்குப் பதிலாக “ORGANIC CRITICISM ன்று நான் கூறுகிறேன்.

***

கட்டமைப்பியல் வாதம் (STRUCTURALISM) கோட்பாட்டின்படி, படைப்பாளியின் பங்களிப்பு முக்கியமானதல்ல. படைப்பாளி ஒரு பொருட்டுக்குரியவன் அல்ல.

அதேவேளையில், TEXT எனப்படும் வாசகம் ஒன்றில் இடம்பெறக்கூடிய இலக்கியத்தன்மையில்லாத எழுத்திலும் ஒருவித இலக்கியத் தன்மையை இனங்காண முடியும் எனக் கூறுபவர்களில் நானும் ஒருவன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால், கட்டமைப்புவாதிகளின் கண்ணோட்டத்தில் இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல; இலக்கியம் என்பது MIME எனப்படும் . “பாவனை’யுமல்ல. புற உலகின் “யதார்த்தம்’, முக்கியமல்ல.

இவ்வாறு கூறும் கட்டமைப்புவாதிகள் CODE னப்படும் “சங்கேத’த்தில் அடுத்தடுத்து உட்படும் பண்புகளுடன் கொண்ட உறவு அல்லது குறித்துணர்த்தும் முறைமை உறவு மிக முக்கியம் என்கிறார்கள். அதாவது;

மொழியே இலக்கியத்தைப் படைத்து இலக்கியத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது கட்டமைப்புவாதிகளின் (STRUCTURALISTS) விளக்கம்.

***

இவர்களைத் தொடர்ந்து வந்த POST-STRUCTURALISTS மொழியின் இலக்கியப் பயன்பாடு அல்லது ஏனைய பயன்பாடுகள் சொற்களையே மையமாகக் கொண்டுள்ளன என்றார்கள்.

இலக்கியத்தின் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கும் பங்கு வாசகனுடையது என்று இந்த கட்டமைப்பு அவிழ்ப்புவாதிகள் (DECONSTRUCTIONISTS) கூறுகின்றனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், இலக்கிய ரீதியான மொழியின் “ஆக்க கர்த்தா’ இந்த வாசகனே என்கிறார்கள்.

இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர்கள் கூறுவதை இவ்வாறும் நாம் பொருள் கொள்ளலாம்.

வாசகன் நவில் தொறும் புதுப்புது அர்த்தங்களை இலக்கியத்தில் இனங்காணப்படுவதனாலும், ஒவ்வொரு வாசகனின் பார்வையும் ஆளுக்கு ஆள் வேறுபடுவதனாலும், இலக்கியம் இறுதி ஆய்வில் என்ன கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ளல் பின் போடப்பட்டே வரவேண்டும். இது கட்டவிழ்ப்புவாதிகளின் தீர்ப்பு.

***

பெண்ணியம் நோக்கிலமைந்த திறனாய்வு என்ன கூறுகிறது என்றால், இலக்கிய மொழிப் பிரயோகத்தில் கூட ஆணாதிக்கம் மேலோங்குகிறது என்ற அவதானிப்பாகும். பெண்ணின் நிலை நின்று அணுகும் முறை வரவேற்கப்படுவதாயில்லை எனப் பெண்ணியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணியவாதம், மார்க்சிய வாதம் இரண்டினையும் இணைப்பதை NEO-HISTORISM (நவ வரலாற்றியைவு வாதம்) என்கிறார்கள் எனது ONGANIC CRITICISM ணுகுமுறையில், நவ வரலாற்றியைவு வாதக் கோட்பாடுகளையும் சிலவேளைகளில் இணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

***

இக்கட்டுரையாளரின்”திறனாய்வு நோக்கு’ (விமர்சனம் அல்ல) எவ்வாறு அமைகிறது என்பதை நமது வாசகர்கள், குறிப்பாக இலக்கிய மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின், “ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை’ என்ற நூலின் 189272 பக்கங்களைப் படித்துப் பார்க்கும்படி தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.

***

இலக்கியம் என்பது படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியை மாத்திரம் தருவதல்ல, வாழ்க்கையின் பல்வேறு கோலங்களையும் நாம் தரிசிக்க வைக்கிறது. பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்துகிறது.

களிப்பூட்டச் செய்யும் இலக்கியம் (ENTERTAINING) படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியைத் தருகிறது. படிப்பவர் குறிப்பிட்ட படைப்பைத் தொடர்ந்து வாசிக்கிறார். அவ்விதம் செய்யும் பொழுது அவர் மனதும், மெய்ப்பாடுகளும் விரிவடைகின்றன. அவர் புளகாங்கிதம் அடைகிறார். அவருக்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறார். எனவே, அவர் புத்தறிவையும், புத்தனுபவங்களையும் பெற்றுக்கொள்கிறார். அந்தக் கணமே அவர் வியப்பிலாழ்கிறார். சிந்திக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வாசகரின் கற்பனை விரிகிறது. கற்பனை, விரிவடைய விரிவடைய புதிய இலக்கிய உத்திகளையும், புதிய பரிசோதனைகளையும் அவர் கற்றுக்கொள்வதுடன், அவற்றைத் தமது எழுத்தில் பிரயோகிக்கவும் முற்படுகிறார்.

அவை மாத்திரமல்ல, விழுமியங்கள், உன்னத எண்ணங்கள் போன்றவை எவை என்று அறிந்து தனது அனுபவத்தையும், அறிவையும் நெறிப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு பல்வேறு பயன்தரும் பாதிப்புகளைப் படிப்பவர் பெற்றுக்கொள்கிறார்.

இலக்கியம் என்பது படிப்பதற்குக் களிப்பூட்டும் அதேவேளையில், பயன்பாடுகளையும் வழங்கி வாசகனின் மனோநிலையைச் செழுமைப்படுத்துகிறது. நல்ல இலக்கியம் என்று சொல்லப்படும் ஒன்றைப் படிப்பதனால் பயனடையும் ஒருவன் அந்த இலக்கியம் ஏன் இலக்கியத் தன்மை கொண்டதாக அமைகிறது என்பதனைத் தானே அறிந்துகொள்கிறான்.

***

உலகப் பொதுமை (UNIVERSALISM), நிலை பேறுடைமை (PERMANENT VALUES), இலக்கிய நயங்கள் (LITERARY TASTE), கற்பனை வீச்சு (IMAGINATIVE RANGE), கனதியான விஷயங்களையும் சுருதி கெடாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் (PRECISION), மனுக்குல மேம்பாட்டுக்கு மேலும் ஒருபடி உதவுதல் (UPLIFTING HUMAN CONDITION) போன்ற பண்புகள் ஓர் இலக்கியப் படைப்பு தரமான அல்லது உயர்தரப் படைப்பு என மதிப்பிடக்கூடியது என்பேன்.

கே.எஸ்.சிவகுமாரன்

நன்றி:- தினக்குரல் – 09.04.2009

Read Full Post »