Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘துப்பல்’ Category

>வெள்ளவத்தைக்குப் புதிதாக வந்த நாட்கள்.

ஒருநாள் மாலை காலி வீதியால் வந்து முடக்கில் திரும்புகிறேன்.

பேவ் மென்டால் இறங்கி வீதியில் வைத்த கால் தன்னையறியாமல் தயங்கிப் பின்வாங்குகிறது.


திட்டு திட்டாக இரத்தம்.

ஒரு கணம் பயந்து திடுக்கிட்டு விட்டேன்.

ஒரு கணம்தான்.

சாதாரண மனிதனின் பயம் அடங்க, வைத்திய மூளையும் கைகளும் துருதுருக்கின்றன.

இரத்தத்திற்குக் காரணமானவர் யார்?

எப்படிச் சிந்தியது?
முதலுதவி தேவைப்படுமா?
போன்ற கேள்விகள் சிந்தனையில் எழக் கண்கள் அலைபாய்கின்றன.

திடீரென இன்னும் சில இரத்தத் துளிகள் பீச்சியடித்துக் கொண்டு சற்றுத் தள்ளி விழுகின்றன.

ஆச்சரியம் அடங்குவதற்கிடையில் ஓரமாக நின்ற ஓட்டோவின் சாரதி வெளியே தலையை நீட்டி

“மாத்தயா டாக்ஸி ஓனத?” என்கிறார்.

சொதப்பிக் கொண்டிருந்த அவரின் கடைவாயிலிருந்து ‘இரத்தம்’ வழிகிறது. வாயெல்லாம் கூட ‘இரத்தம்’.

இலங்காபுரியின் இன ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து, வெளிப் படுத்துகிற ஒரே சாதனமாக இன்னும் திகழ்வது வெற்றிலை போடுதல்தான்.

சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என எல்லோரையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.

இன ஒற்றுமைக்காகக் கலப்புத் திருமணங்களை ஒரு காலத்தில் வற்புறுத்தியவர்களின் காதில் இது விழுந்துவிட்டால் நாடு முழுவதும் ‘இரத்தக்கறை’ தான் சிந்தப் போகிறது.

துப்புவதில்தான் எத்தனை வகைகள்.

அதிலும் வீதியில் துப்புவது என்பது அதி விசேடமான கலையாகும்.

அதனைத்தான் எத்தனைவகை களாக நாங்கள் பயிற்சிக்கின்றோம்.

கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதை காறியெடுத்து நுனி நாக்கிற்குக் கொண்டுவந்து ஆரவாரமாகத் துப்புவது ஒரு வகை.

துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொரு வகை.

அசிங்கத்தைப் பார்த்தும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டும் முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேட ரகம்.

ரஜனியின் சிகரட் ஸ்டைல் போல ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக்குள்ளால் நசுக் கிடாமல் துப்புவது மன்மத ரகம்.

பட்டப்படிப்பிற்கான ஒரு அலகாக எமது பல்கலைக்கழகத்தில் வைக்க ஏற்றது துப்பல்கலை என்று துணிந்து சொல்லலாம்.

பட்ட மேற்படிப்பிற்கான ஆய்விற்காக
‘தமிழர் வாழ்வில் துப்பல் சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஆய்வின் முதற் படி’
எனப் பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டலில்
இளம் பட்டதாரி பதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

நான் வழமையாகப் பிரயாணம் செய்யும் ஓட்டோவின் சாரதி துப்பும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.

வாகனம் நேர் பாதையில் ஓடும்போது
முதுகை வளைத்து
வாகனத்தின் இடது பக்கமாகத்
தலையை வெளியே நீட்டி,
வாயைக் குவித்து,
தான் துப்புவது காற்றில் சிதறி
பின்னே இருப்பவருக்குத் தெறித்துவிடாமல்
துப்பும் அழகே அழகு.

குனிந்து துப்பினாலும் வாகனம் கயிறு கட்டியது போல் நேர் பாதையில் சென்றுகொண்டே இருக்கும்.

இந்த அழகைக் கண்டுதான் அவரது மனைவி அவரைக் காதலித்தது, கலியாணம் செய்தது, பிள்ளை பெத்தது எல்லாம்.

எமது தேசம் புண்ணிய தேசம்.

அதனால் இந்தப் புண்ணிய பூமியில் நாங்கள் அகலக்கால் வைத்து அலட்சியமாக நடக்க முடியாது.

அச்சம், மடம், நாணம் நிறைந்த பெண்கள் போல நிலம் பார்த்துத்தான் நடக்க வேண்டியுள்ளது.

இன்று பெண்கள் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக நடக்க என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் குனிந்த தலையும் நிலம் பார்த்த பார்வையும் தலைவிதியாகிவிட்டது.

‘டொக்டருக்குக் கழுத்து உழுக்கிப் போட்டுது போல’.

‘நிமிர்ந்து பார்த்தால் வீதியில் வைத்தே இலவச கொன்சல்டேசன் கேட்டுவிடுவார்களோ என்ற கஞ்சத்தனம்’

‘அவருக்கு முகங்களிலை நாட்டம் இல்லை எதிரே வருகிற பெட்டைகளின் தொடைகளில்தான் நோட்டம்’

‘வயது போட்டுதில்லெ அக்கம் பக்கத்திலை நடக்கிற ஒன்றும் அந்தாளின்ரை மூளையிலை விழுகிறதில்லை’

இப்படி எத்தனை கொடுக்குக் கேள்விகளும் விமர்சனங்களும் என்ரை காதில் பட்டும் படாமலும் வீசப்படுகின்றன.

ஆனால் என்ரை கவலை எனக்கு! வீதிகளெங்கும் துப்பல்கள் விதைத்திருக்க நிலம் பார்க்காமல் கால் வைக்க முடியுதே?

ஏன் சப்பாத்துப் போடுறதில்லையோ என நீங்கள் அடிக்கிற நக்கலும் காதில் விழுகிறது.

சப்பாத்தைக் கழுவிப்போட்டே வீட்டுக்குள்ளையும் டிஸ்பென்சரிக்குள்ளையும் கால் வைக்க முடியும்.

ஊரிலை உள்ளவன்ரை எச்சில் எல்லாம்,
துவண்டு திரிகிற பிள்ளைகளின்ரை கையிலை பட்டும்,
மற்றவர்களை முட்டியும்
கண்ட கண்ட நோயெல்லாம் தொற்றி விடுமே என்ற
மருத்துவனின் ஆதங்கம் எனக்கு.

ஒருநாள் வைத்தியசாலைக்குப் பொடிநடையில் போய்க் கொண்டிருக்கிறேன். உயர்ந்து நிற்கும் ஹோட்டலுக்கு முன்னே கட்டெறும்பு போல நகர்ந்து கொண்டிருக்கும் எனது தலைiயில் ‘டொச்’ என எதுவோ விழுகிறது.

மழைத்துளியாக இருக்குமா என நிமிர்ந்து பார்த்தேன்.

மொட்டைமாடியில் நின்ற தலையொன்று பக்கென உள்ளிழுத்தது.
வீதியில் உமிழும் அவருக்கு அன்று
எனது தலை கிடைத்த சந்தோஷத்தை அடக்க முடிய வில்லை.
என்ன செய்வது?

நல்லவேளை மொட்டைத்தலை என்பதால் தப்பித்தேன்.

பிரச்சனையின்றி தலையை
ஈரத் துணியால் ‘மொப்’ பண்ணிவிட்டு
வேலையைத் தொடரலாம்.

தலை நிறைய முடியெனில் வீடு திரும்பி முழுகிவிட்டல்லவா வேலைக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

‘வீதியெங்கும் துப்பல் செய்யும்’ எம் பாரம்பரியம் வாழ்க!

எம்.கே.முருகானந்தன்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான ‘டொக்டரின் டயறியிலிருந்து’ நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »