என்னையும் சினிமா தொடர் சுற்றில் இழுத்துவிட்ட வந்தியத் தேவனுக்கு நன்றி. முக்கியமாகப் பல பழைய நினைவுகளைக் கிளற வைத்ததற்காக. எவ்வளவைக் கடந்து வந்திருக்கிறோம் என நினைக்கப் பிரமிப்பாக இருக்கிறது.
எனது அனுபவங்களை வாசித்து நேரத்தை வீணடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நேரத்திற்குள் தனி ஒருவனாக பத்துப் பேரை நாயகன் அடிக்கும் காட்சியை, 50-60 ‘கன்னிகள்’ சுற்றி நின்று ஆட காதலனும் காதலியும் கூடும் காட்சியை, அல்லது நாயகியின் உடலில் எத்தனை சென்ரிமீட்டர் துணி இருக்கிறது எனக் கணித்து விசில் அடித்து மகிழ்ந்திருக்கலாம்.
நான் ஏ.எல் படித்த காலம் தான் சினிமா என் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்த காலம் எனலாம். பட்டப்படிப்பை முடிக்கும் வரை இன்னும் கொஞ்சம் தொடர்ந்தது. அனுபவிக்கவும், பின் நினைத்து மகிழவும் கூடியது இளமைக்காலம் அல்லவா?. கட்டற்ற சுதந்திரகாலம் அதுதானே! ‘கட்டிவிட்ட பின்’ சுதந்திரம் எல்லாம் மனைவியின் கைக்கு மாறிவிடுகிறதே. (ஆனால் என் மனைவி இதற்கு எதிர்மாறாக தன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக முணுமுணுக்கிறாள்.)
சுதந்திரம் பறிபோனதற்குக் காரணம் திருமணம் மட்டுமல்ல காரணம். மிக முக்கிய காரணம் எனது தொழில். பகல், இரவு, ஞாயிறு, போயா, விடுமுறை என்று சாட்டுச் சொல்ல முடியாத தொழில். அதுவும் அரச பணியை விட்டு தனியாகத் தொழில் பார்க்க ஆரம்பித்த பின்னர் எனக்கென்றோ குடும்பத்திற்கென்றோ தனியாக நேரம் ஒதுக்க முடியாது போனது. இரவு 8 மணி வரை பணி தொடர்கிறது. அந்தக் காலம்போல சினிமா பார்க்க முடிவதில்லை.
மிக அரிதாகவே திரைஅரங்கில் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் வீட்டில் டிவீடி யில்தான். அதுவும் சிலவே.
பட்டப் படிப்பின் பின்னர் பதுளையில் மருத்துவப் பயிற்சிக்கு சென்ற காலம் நினைவு வருகிறது. மாணவனாக இருந்தபோது பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள்தான். மிக அரிதாக ஆங்கில ஹிந்திப் படங்கள். ஆயினும் பதுளை சென்ற பிறகு சக டொக்டர்களான சுலைமான், ஜெயரட்ன போன்றோரின் நட்பில் பல ஆங்கில, சிங்கள சினிமாவும் பார்க்கும் வாய்புக் கிட்டியது. ‘துகுலு மலக்’ போன்றவை அப்பொழுது பார்த்தவைதான். ஆங்கில நாவல்களை விரும்பி வாசிக்க ஆரம்பித்ததும் அப்பொழுதுதான். வாய்ப்புக்கள் வரும்போது எமது ரசனைகளும் மாற்றமுறும் என்பதற்கு இவை உதாரணங்கள்.
பயிற்சி மருத்துவர்கள் என்பதால் பகல் மற்றும் இரவு முதல் காட்சிக்குச் செல்வது முடியாது. இரவு 2வது காட்சிக்குத்தான் செல்லக் கிடைக்கும். ஆயினும் நிம்மதியாகப் பார்க்க முடியாது. திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது இடையில் (Dr… wantedurgently at Hospital) என சிலைட் போடுவார்கள். உடனடியாக படத்தை இடையில் விட்டுவிட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியைப் பார்க்க ஓட வேண்டும்.
80 களில் பருத்தித்துறையில் தனியார் வைத்தியசாலை ஆரம்பித்த பின்னரும் இதே கதைதான். ஆனால் இங்கு சிலைட் போடமாட்டார்கள். மொபைலும் கிடையாத காலம். மனேஜரே இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி வந்து காதுக்குள் குசுகுசுப்பார். இடையில் விட்டுவிட்டு போக வேண்டியதுதான்.
நல்ல ஞாபகம், Shark பார்க்கப் போனது. சென்றல் தியேட்டர். மகனுக்கு 3-4 வயதிருக்கும். படம் பார்க்கப் போவதென்றால் அவனுக்கு ஒரே சந்தோஸம். குட்டித் தூக்கம் போட்டுவிட்டு 9 மணியளவில் எழுந்து காத்துக் கொண்டிருப்பான். ஆழ்கடலில் மீன்கள் சாகசம் செய்யும் படம். மனிதர்களை வேட்டையாடும். இடையில் விட்டுப் போவதென்றால் அவனுக்கு எப்படி இருக்கும். அழஅழத் தூக்கிச் செல்ல வேண்டியதாயிற்று.
பின்னர் யாழ்நிலை மோசமாகியது. இரவில் படம் பாரக்கச் செல்வது கனவாகவே இருந்துவிட்டது. ஓடைக்கரைத் தோசையும், ரஞ்சன் கபே ரீயும் ஞாபகம் வருகிறதா? திரை மறந்தது. வீடியோ கஸட், சீடி வந்தது. டிவிடியும் இணைந்தது. தியேட்டருக்கு போவதே தேவயற்றது போலாகிவட்டது. ஆனால் இருட்டில் பிரமாண்ட திரையில் ஸ்டிரியோ சவண்ட் நாலா பாக்கமும் சூழ்ந்து ரீங்காரிக்கப் பார்பதற்கு இவை எதுவுமே இணையாக மாட்டாது என்ற ஏக்கம் துளைத்துக் கொண்டே இருக்கிறது.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள். நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணரந்தீர்கள்.
வயது யாருக்கு ஞாபகம் இருக்கிறது?
நான் சிறுவனாக கொழும்பில் இருந்த காலம். நிச்சயம் 56க்கு முன்பு. முதல் அடியோடு மஹரகம வை விட்டு வெளியேறினோமே. அதற்கு முன்பு.
படம் கள்வனின் காதலி. சிவாஜி நடித்தது என்பது தெரியும். அதில் அவரது பாத்திரப் பெயர் முத்தையா என்பது மட்டுமே ஞாபகம்.
காரணம் நான் பிறப்பதற்கு முன்னரே மறைந்து போன எனது அப்பப்பாவின் பெயர் அது. “உனக்கு முத்தையா என்று பேரனது பெயரை வைக்க வேண்டும் எண்டு ஐயம்மா நாண்டு கொண்டு நிண்டவ. நான்தான் அது பழைய காலப் பெயர் வேண்டாம் எண்டு சொன்னனான்” என அடிக்கடி சொல்லக் கேட்டதால் மறக்கவே முடிவதில்லை.
‘மங்கையர் திலகம்’ இப்படி ஏதேதோ அப்பா அம்மாவுடன் பார்த்திருந்த போதும் ஏதும் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. சம்பூர்ண ராமாயணம், லவகுச, டென் கொமான்மண்ட்ஸ் போன்றவை எமது ஊர் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம், பின்பு ஹாட்லிக் கல்லூரயில் இருந்தபோது பாடசலையிலிருந்து சென்று பார்த்தவை.
கடைசியாக அரங்கில் இருந்து பார்த்த தமிழ் சினிமா?
ரொக்ஸி அரங்கில் நானும் மனைவியுமாகப் பார்த்த வெயில். வரண்ட மண்ணின் வாசனை தகிக்க அந்த மண்ணின் மணம் கமழ எடுக்கப்பட்ட படம். பிள்ளைப் பருவத்தில் பெற்றாரின் தவறான பார்வையால் வீட்டை விட்டுப் பிரிந்து தனது காலிலேயே நிற்க முனைந்து அதில் வெற்றியும் பெற்று, மனைவியை இழந்து மீண்டும் பெற்றோர் வீட்டில் இணையும் போது ஏற்படும் மனோவியல் சிக்கல்கள்.
நல்ல படம். ஆயினும் படத்தின் இறுதியில் வரும் வன்முறைகள் வேண்டும் என்றே இணைக்கப்பட்டது போல எரிச்சல் ஊட்டியது. இருந்த போதும் ஆட்டம், பாட்டம், சண்டை என எமது வாழ்வை பிரதிபலக்காத தமிழ் சினிமாவையே கண்டு சலித்த எங்களுக்கு வாழ்வோடு இணையும் படங்களும் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
கடைசியாக அரங்கிலன்றி பார்த்த பார்த்த தமிழ் சினிமா எது எங்கே என்ன உணர்ந்தீர்கள்?
உளியின் ஓசை. கலைஞரின் பூம்புகார் போன்ற சினிமாக்களை முன்பு பார்த்து ரசித்த எனக்கு மிகுந்த ஏமாற்றம். திரைக்கதையில் நல்லதோர் சஸ்பன்ஸ் இருந்தபோதும் மிக மோசமாக எடுக்கப்பட்டிருந்தது.
தஞ்சைக் கோயில், சிற்ப கூடம், சிலைகள், சிலை வடிக்கும் கற்கள் எவையுமே இயற்கையாக இல்லை. பொலிஸ் பண்ணிய சீமேந்துக் கலவைகளாக, அட்டைப் பெட்டிகளாக உயிரற்று காட்சியளித்தன. மோசமான செட்டுக்கள். படத்தின் கலர் கூட சரித்திரப் படங்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை.
சரத்பாபுவின் நடிப்பு பல இடங்களில் சிவாஜியை நினைவு படுத்தியமை ஏமாற்றத்தை அளித்தது. வினித்தின் நடன ஆற்றல் வெளிக் கொணரப்படவில்லை. மேக்கப்பும் சகிக்கவில்லை.
இப்பொழுது சரோஜா, ராமன் தேடிய சீதை வாங்கி வைத்திருக்கிறேன். எல்லோரும் விமர்சனம் எழுதிக் களைத்தவை. இனித்தான் பார்க்க வேண்டும்.
மிகவும் தாக்கிய படம்?
சேரனின் ‘எந்தையும் தாயும்’ என்னை மிகவும் பாதித்தது. ஒரு பிள்ளை என்ற முறையிலும் ஒரு தகப்பன் என்ற முறையிலும் என் உணர்வுகளோடு கலந்து அற்புத உணர்வைத் தந்தது.
அண்மையில் பார்த்தவற்றில் ‘வாட்டர்’, ‘ஐய்வர்யா ஒரு அழகி’. இரண்டும் பிற மொழிப்படங்கள். இரண்டுமே விதவைகள் பற்றியது. அவர்களது பிரச்சனைகளை மாத்திரமின்றி மனச் சலனங்களையும் புரிந்துணர்வோடு அணுகுவது. ஐய்வர்யா ஒரு அழகி என தமிழில் மோசமான பெயரில் டப் செய்யப்பட்டிருந்தாலும் மிக நல்ல படம். தாகூரின் கதை. வங்கப்படமாக இருக்கலாம்.
2006ல் மீண்டும் போர் ஆரம்பித்த நேரம் பருத்தித்துறையில் தனியாக மாட்டுப்பட்டிருந்த நேரம் அருகில் உள்ள வீடியோ கடையில் கிடைத்தது. மீண்டும் பார்க்க விரும்பியும் கொப்பி அகப்படவில்லை. வாட்டர் நீங்கள் எல்லோரும் ரசித்ததாகவே இருக்கும்.
‘சங்காரா’ சிங்களப் படம். இது பற்றி நான் எழுதிய கட்டுரை காலம் சஞ்சிகையில் வந்துள்ளது. Black ஹிந்திப் படம்.
தமிழ் சினிமா பற்றி வாசிப்துண்டா?
தமிழ் சினிமா பற்றி ஓரளவு வாசிப்பேன். விமர்சனங்கள், அலசல்கள், வரப் போகும் படங்கள் பற்றிய குறிப்புகள் எனப் பலவும். ஈழத்தில் சினிமா பற்றிய புரிதலை எங்களுக்கு ஏற்படுத்திய கே.எஸ்.சிவகுமாரன், யேசுராசா, சசி கிருஸ்ணமூர்த்தி முதல் இன்றைய யமுனா ராஜேந்திரன், சாரு நிவேதிகா, மாரி மகேந்திரன் வரை நேரம் கிடைக்கும்போது படிப்பதுண்டு. கிசு கிசுக்கள் பெரிசாகக் கவர்வதில்லை.
தமிழ் தவிர வேறு இந்திய உலக சினிமா பார்ப்பதுண்டர்?
தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கில, ஜப்பானிய, ஈரானிய சினிமா பார்ப்பதுண்டு
தமிழ் சினிமாவுடன் நேரடித் தொடர்பு உண்டா?
கிடையாது.
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திரைப்படத்துறையை கற்கை நெறியாகக் கற்ற பரம்பரையினரின் பங்களிப்பு மேலோங்கி வருவது நல்ல அறிகுறி. ஆயினும் இரண்டு எதிர்த் திசைகளில் அது பயணிப்பதாகவே தெரிகிறது. நட்சத்தர நடிகர், டான்ஸ், சண்டை, காதல் காட்சி. பாட்டு நகைச்சுவை ஆகியவற்றை எந்த விகிதத்தில் மிக்ஸ் பண்ணி வெற்றி பெறுவது என Formula வைவிட்டு விலகாத பக்கம் ஒன்று. இது வருவாயை மட்டும் கணக்கில் எடுக்கும் கோஷ்டி.
நல்ல திரைக்கதை, பொருத்தமான பிரேம்களினூடாக சினிமாவை நகர்த்தல் இன்னொரு பக்கம். உன்னாலே உன்னாலே, வல்லமை தாராயோ, மொழி, ஒன்பது ருபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சுப்பிரமணியபுரம், மிருகம், பருத்திவீரன் என நம்பிக்கை தரும் இன்னொரு திசை. இவற்றில் சிலவாவது வருவாயிலும் கைவிடாதது நம்பிக்கை தருகிறது.
அடுத்த ஓரு ஆண்டு தமிழில் சினிமா கிடையாது. மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என நினைக்கிறீர்கள்?
பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.
மிஞ்சியவர்கள் பயனுள்ள வழிகளில் ஓய்வு நேரத்தைக் கழிப்பார்கள்.
குண்டானவர்கள் மெலிவார்கள்.
உழைப்பு அதிகமாகும். நாடு முன்னேறும்.
இணையம் இன்றேல் நான் நோவேன்.
எம்.கே.முருகானந்தன்.