Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தொற்றுநோய்’ Category

“நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி இது வந்தது என்று தெரியவில்லை” என்றார் ஐயா. அம்மாவும் ஒத்துப் பாடினா.

fast_ramadan_400

அவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு ஒரே நாளில் வயிற்றோட்டமும் வாந்தியும் வந்திருந்தது.

“உணவில் கிருமி தொற்றியதால்தான் வந்திருக்கு. கடையில் வாங்கிச் சாப்பிட்டீர்களா” என்று கேள்வி கேட்டதற்குத்தான் அந்த மறுமொழி வந்தது.

பொதுவாக வீட்டில் தயாரிக்கும்போது உணவில் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு.

காரணம் என்ன?

அம்மா, அக்கா சில தருணங்களில் அப்பா உணவு தயாரித்திருப்பார். தங்கள் வீட்டு விடயம் என்பதால் அக்கறையோடு மிகவும் சுத்தமாகத் தயாரித்திருப்பார்கள். ஆனால் கடைச் சாப்பாடு அப்படியல்ல. தயாரிப்பதே பலராக இருந்திருக்கும். அது சாப்பாட்டு மேசைக்கு வருவதற்கிடையில் பல கைகள் மாறியிருக்கும். பல கரண்டிகள் உணவினுள் தவண்டிருக்கும்.

அதே நேரம் வீட்டில் சமைத்தால் கிருமி தொற்றாது என்றும் சொல்ல முடியாது. வீட்டிலும் பல வழிகளில் கிருமிகள் உணவில் தொற்றலாம். சமைக்கும்போது, சமைத்ததைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும்போது, கரண்டியிலிருந்து, குளிர்சாதனப் வைப்பதற்கு முன்பு எனப் பல வழிகளில் கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு.

நீண்ட நேரம் பேசியும் இவர்களது உணவில் கிருமி தொற்றியத்தற்கான காரணம் பிடிபடவில்லை.

கடைசியில்தான் ஒரு பலகைதான் காரணம் என்பது புரிந்தது. அதுவும் ஒரே ஒரு பலகையாக இருந்ததுதான் காரணமாகும். இரண்டாக இருந்திருந்தால் சிலவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு.

சமையலறையில் சுத்தம்

சமையலறையும் பாத்திரங்களும் சுத்தமாக இருந்தால்தான் உணவு மாசடையாது இருக்கும். சமைப்பவர், பரிமாறுபவர்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Chopping_Board

சமையலறைத் தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board)  சுத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி நீக்கம் செய்து உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும். இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and Salmonella  போன்ற கிருமிகள் அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும்.

வெட்டும் பலகையைச் சுத்தம் செய்வது

அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டிய முறைகள் அவை எவற்றால் ஆனவை என்பதைப் பொறுத்தது.

கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றாலான வெட்டும் பலகைகளை சுத்தம் செய்வது இலகு. சோப் போட்டுக் கழுவலாம். அல்லது கிருமி நாசினி (detergent)  கலந்தவற்றால் சுத்தம் செய்யலாம். வசதி உள்ளவர்கள் பாத்திரங்கழவி (dishwasher)  மெசினில் இட்டுக் கழுவலாம்.

ஆனால் மரப்பலகையினாலான வெட்டும் பலகைகளை பாத்திரங்கழவி மெசினில் போட்டுக் கழுவுவது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் பலகையில் வெடிப்புகள் அல்லது பொருக்குகள் ஏற்படலாம்.

இதனால் வெட்டிய உணவின் துகள்கள் அவற்றினைடையே ஒழிந்து கிடந்து கிருமிகள் பெருகி வளரச் செய்யும். அதேபோல தண்ணீரில் ஊறவிட்டுக் கழுவினாலும் பலகை வீங்கி வெடித்து அதற்குள் கிருமிகள் பெருகி வளர இடம் அளிக்கும்.

குறைந்தது இரண்டு வெட்டும் பலகைகளைகளையாவது சமையலறையில் வைத்திருக்க வேண்டும்.

  • இறைச்சி மீன் போன்றவற்றை வெட்டுவதற்கு ஒன்று.
  • காய்கறி பழவகைகள் போன்றவற்றை வெட்டுவதற்கு மற்றொன்று.

ஒன்றிலுள்ள மாசு மற்றதற்கு பரவாது தடுப்பதை இதனால் தடுக்க முடியும். மாமிச உணவுகளில் கிருமி தொற்றுவதற்கும் பெருகுவதற்குமான சாத்;தியம் மிகமிக அதிகம். மாமிச உணவிற்குப் பயன்படுத்திய அதே வெட்டும் பலகையில் காய்கறி பழங்களை வைத்து வெட்டினால் அந்த விசக் கிருமிகள் இவற்றிற்குப் பரவிவிடும்.

பாண், கேக் அல்லது ஏனைய சமைத்த உணவுகளை வைத்து வெட்டுவதற்கு மற்றொரு பலகை வைத்திருப்பது மேலும் உசிதமானது.

எப்படியாயினும் ஒரு வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்தும் வெட்டும் பலகையை மற்ற வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்துவது நல்லதல்ல.

வெட்டும் வேலை முடிந்ததும் பலகையை காலம் தாழ்த்தாது உடனடியாகவே சுத்தம் செய்வது அவசியமாகும். சோப் போட்டுக் கழுவுவது நல்லது. சுடு தண்ணிரால் மீண்டும் கழுவது சிறந்ததாகும்.

கத்தி வெட்டு வடுக்கள், வெடிப்பு சிராய்ப்பு போன்ற காயம்பட்ட பழைய பலகைகளை வைத்திருக்க வேண்டாம். உடனடியாகவே கழித்து அகற்றிவிடுங்கள்.

நீரினால் கழுவுவதால் பலகையிலான வெட்டும் பலகையில் நீர் ஊறிப் பழுதடையச் செய்துவிடும். எனவே நீண்ட நேரம் நீரில் ஊறவிடாது கழுவ வேண்டும்.

நீருக்குப் பதிலாக வினிகர் (vinegar)  கொண்டு சுத்தம் செய்யலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் பலகையை வினிகரால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள ஈரலிப்புத்தன்மை காய்ந்த பின்னர் வினிகரை மேற்புறத்தில் ஸ்ப்ரே செய்யுங்கள். 10-30 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். வினிகரில் உள்ள அசெட்டிக் அமிலமானது E. coli, Salmonella, and Staphylococcus  போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.

மரத்திலான வெட்டும் பலகையில் துர்மணம் தோன்றாதிருக்க முதலில் சற்று பேக்கிங் பவுடரை தூவிய பின்னர் வினிகர் போட்டு 5 நிமிடங்களின் துடைத்து எடுக்கலாம். அதன் பின்னர் கழுவலாம்.

வினிகருக்குப் பதிலாக ஹைரஜன் பெரோஒட்சைடினாலும் (hydrogen peroxide) சுத்தம் செய்யலாம்.

வினிகரால் அல்லது ஹைரஜன் பெரோஒட்சைடினால் சுத்தம் செய்வதைவிட இரண்டையும் கொண்டு சுத்தம் செய்வது அதிக பயனுள்ளதாக இருக்கும் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டில் ஒன்றை முதலில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். பின்னர் மற்றதையும் அவ்வாறே ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்களில்; சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

வினிகர் மற்றும் ஹைரஜன் பெரோஒட்சைடைப் பயன்படுத்துவது ஓரளவு இயற்கை முறையாகும். பெரும்பான கிருமி அகற்றிகளில் உள்ள பாதகமான இராசயனங்கள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அவர்களது வீட்டில் மீன் கறி சமைத்திருந்தார்கள். உணவில் காய்றிகளும் சேர வேண்டும் என்பதால் சலட் செய்;தார்கள். மீன் வெட்டிய பலகையை சரியாகச் சுத்தம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதே வெட்டும் பலகையில் வைத்தே காய்கறிகளை வெட்டி சலட் தயாரித்ததால் வந்த வினை குடும்பமாகப் பாதித்திருந்தது.  உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்தியிருந்தது.

உணவு மாசடைதல்

உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்துவதை உணவு நஞ்சாதல் (Food poisoning)  எனச் சொல்வார்கள். இதனால் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

சாதாரண வயிற்று வலி முதல் கடுமையான வயிற்றோட்டம் அல்லது மலத்துடன் இரத்தம் சீதம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாந்தி, வயிற்றுப் பிரட்டு, வயிற்று வலி, வயிற்று முறுக்கு, காய்ச்சல், உடல் உளைவு போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

வாந்தி வயிற்றோட்டத்தால் கடுமையான நீரிழப்பு நிலை ஏற்பட்டு நோயாளியை மருத்துமனையில் அனுமதித்து நாளம் ஊடாக நீர் ஏற்றவும் நேரலாம்.

சுமார் 250 வகையான கிருமிகள் இவ்வாறு மாசடைந்த உணவுகள் மூலம் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனது ஹாய் நலமா புளக்கில் (14.11.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0

 

Read Full Post »

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் சென்ற 7ம் திகதி, ஒட்டோபர் 2013 முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன.

டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். சில காலங்களுக்கு முன் எழுதிய தற்போது பரவும் தொற்று நோய்கள் என்ற கட்டுரையில் டெங்கு பற்றி சுருக்கமாக சொல்லியிருந்தேன். இது சற்று விரிவான கட்டுரையாகும்.

dengue-page-upload (1)

டெங்குப் பரவல்

இவ்வருட தை மாசி மாதங்களில் பல உயிர்களைப் பலி கொண்ட டெங்கு அதன் பின் சற்றுத் தணிந்திருந்தது. ஆயினும் மறையவில்லை. கடும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெங்கு சற்றுக் குறையும். நுளம்புக் கூம்பிகள் ஓடும் நீரில் அள்ளுப்பட்டுச் சென்றுவிடும். மழை சற்றுக் குறைந்து வெயிலும் சேரும்போது தேங்கி நிற்றும் நீர்நிலைகளில் நுளம்பு பெருகும். அப்போதுதான் டெங்கு தன் கோர முகத்தைக் காட்டும்.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்ட 16526 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.

usual_breeding_grounds

தரவுகளை ஆயும்போது கொழும்பு மாவட்டத்தில்தான் மிக அதிகமான அளவில் (மொத்தத்தில் சுமார் 25 சதவிகிதம்) நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து குருநாகல் மாவட்டம், மூன்றாவது இடத்தை கம்பஹா மாவட்டம் பிடித்தது.

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 400 ற்று மேற்பட்டிருக்க, கிளிநொச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 32 மட்டும் இனங் காணப்பட்டனர். வவுனியா 47, மன்னார் 56, முல்லைத்தீவு 83, திருகோணமலை 149. கிளிநொச்சி டெங்கு நோயாளர் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு சன அடர்த்தி குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) நுளம்பினால் நீண்ட தூரம் பறக்க முடியாது. மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவிகிதம் மேல் மாகாணத்தில் இருப்பதற்கு சன நெருக்கடியே காரணமாகிறது.

757px-Aedes_aegypti_biting_human

டெங்கு அறிகுறிகள்

பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று கண்டவுடன் பெற்றோர்கள் பயந்தடித்துக் கொண்டு மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்களது பயம் அர்த்தம் அற்றது அல்ல. பத்திரிகைகளில் வரும் செய்திகளும் பாடசாலை மாணவர்களில் ஏற்படும் மரணங்களும் பீதியை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் பல வருடங்களாக டெங்குவுடன் வாழ்ந்த நாம் இது டெங்குவா இல்லையா என அனுமானிக்கப் பழக வேண்டும்.

dengue-fever

பெரும்பாலான ஏனைய காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். காய்சலும் 100 – 101 றைப் பெரும்பாலும் தாண்டாது. வேறு சில வாந்தி வயிற்றோட்டத்துடன் வரும். இன்னும் சில சிறுநீர் கழிக்கும்போது எரிவைக் கொடுக்கும். இத்தகைய அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டியதில்லை

ஆனாலும் டெங்கு காய்ச்;சலில் முற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் ஆரம்பத்திலேயே காய்ச்சல் மிகக் கடுமை 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும்.

babyBlanket

உங்கள் குழந்தை இவ்வாறு கடுமையான காய்ச்சலுடன் துடியாட்டம் இன்றிப் சோர்ந்து படுத்துவிட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரைக் காண்பது அவசியம்.

குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டில் ஒரு டிஜிட்டல் தேர்மாமீற்றர் வைத்திருப்பது நல்லது. மேர்கியூரி தேர்மோமீற்றர் போல இது விரைவில் உடையாது. மேர்கியூரியின் நச்சுத் தன்மையும் கிடையாது. எனவே விலை சற்று அதிகமானாலும் குழந்தைகள் உள்ளவர்கள் இதை வைத்திருப்பது உசிதமானது.

மருத்துவர் வேறு அறிகுறிகளும் இருக்கிறதா என பார்ப்பார். கண்கள் சிவந்திருக்கிறதா, தோல் செம்மை பூத்திருக்கிறதா, நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை அவதானிப்பார்.

டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் Full blood count, Dengue antigen ஆகிய பரிசோதனைகளையும் மருத்துவர் மேற் கொள்ளக் கூடும். இருந்தபோதும் Dengue antigen பரிசோதனை விலை கூடியதும் எல்லா இடங்களிலும் செய்வது இயலாததும் ஆகும்.

எவ்வாறாயினும் 3ம் நாள் Full blood count (FBC) பரிசோதனையை செய்வது அவசியம். இவை குருதியில் வெண் கலங்களின் எண்ணிக்கை அளவு, வெண்குருதி சிறுதுணிக்கை அளவு மற்றும் Pஊஏ போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக நோயின் நிலையைக் கணிக்க அவசியமாகும்.

டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சல் என்பது உறுதிதான். ஆனாலும் அது ஆபத்தாகுமா. நிச்சயம் சொல்ல முடியாது.

டெங்குவின் வகைகள்

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.
சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது.

மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். பரசிட்டமோல், கொத்தமல்லி, பப்பாசிச் சாறு போன்ற எதைக் கொடு;த்தாலும் மாறிவிடும். கொடுக்காவி;ட்டாலும் மாறும். ஏனெனில் அது மாறுவது மருந்தால் அல்ல. அந்த நோயின் இயல்பாக தன்மையால்தான்.

மிகவும் ஆபத்தானது போன்று பயமுறுத்தும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலானது அவர்களில் சுமார் 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே வரும். கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள்

மிக ஆபத்தானது டெங்கு அதிர்ச்சி நிலையாகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. மேலே கூறிய அறிகுறிகளை வைத்து இது டெங்குவாக இருக்குமோ எனச் சந்தேகித்தால் மட்டும் மருத்துவரைக் காணுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

Piaron_susp_eng(1)

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் Dengue antigen   பரிசோதனை செய்வது உதவக் கூடும். இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும்.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ஆபத்து ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

ஆபத்தும் தடுப்பும்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், கொழுப்பான உடல் வாகை உடையவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரில் இது ஆபத்தாக மாறும் சாத்தியம் அதிகம். அவர்களது காய்ச்சலானது டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் சற்றும் தாமதப்படுத்தாது தீவிர கவனிப்பிற்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும்.

dengue-kills

டெங்கு பரவாது இருக்க நுளம்பு பரவுவதைத் தடுக்க வேண்டும். அரசு செய்யும், மாநகரசபை செய்யும் என நாம் வாளாதிருக்க முடியாது. எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதில் எமது பங்கு பெரிது என்பதை மறக்க வேண்டாம்.

அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

எனது ஹாய்நலமா புளக்கில் இவ்வருட ஜீலை மாதம் வெளியான கட்டுரை டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

சென்ற 7ம் திகதி பெப்ருவரி 2011 ல் ஒரே நாளில் இரு சிறுவர்களை கடுமையான டெங்கு நோயென இனங்கண்டு விசேட சிகிச்சைகளுக்காக சிறுவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான மழையின் பின்னான வெயில் பல இடங்களில் டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது.

டெங்கு நோயின் அறிகுறிகள்

இப்பொழுது புதிய அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பதால் பலரையும் காப்பாற்ற முடிகிறது.

மேற் கூறிய இரு சிறுவர்களும் நலமாக வீட திரும்பிய செய்தியை இன்று (11.02.2011)பெற்றோர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

நோயை நேர காலத்துடன் நிர்ணயம் செய்வதும், அவசியம் ஏற்படுமிடத்து தாமதிக்காது அதற்கான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச் சாறு சிறந்த பலன் அளிக்கும் என்ற செய்தி அண்மைக் காலமாக பத்திரிகை ரீவீ ஆகியவற்றில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தவறான செய்திகளால் பயனற்ற மருத்து முறைகளில் காலத்தைக் கடத்தாது சரியான மருத்துவம் செய்வது அவசியம்.

வெண்குருதி சிறுதுணிக்கை (Platelet)

டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்களுக்கு வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platelet) குறைதலும் அதனால் ஏற்படும் குருதி பெருக்கமுமே காரணம் என இதுவரை நம்பப்பட்டது.

புதிய சிகிச்சை முறையின் அடிப்படை

இதன் காரணமாக அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மருத்துவ சிகிச்சையின் நோக்கமாக முன்னர் கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platlet) மாற்றீடு செய்யப்படுவது உயிர்காக்கும் மருத்துவம் என எண்ணப்பட்டது.

டெங்குவின் அறிகுறிகள் இருக்கும் போது வெண்குருதி சிறுதுணிக்கை (Platlet)அளவு 100,000 லுக்குக் கீழ் குறைந்தால்  உடனடியாக மருத்துவ கனையில் அனுமதிப்பது அவசியம்.

ஆயினும் நவீன சிகிச்சை முறையில் இதனை மாற்றீடு செய்யப்படுவதில்லை. உள்ளெடுக்கும் நீரின் அளவையும் வெளியேறும் நீரின் அளவையும் நுணுக்கமாகக் கணித்து அதற்கேற்ற அளவில் கொடுப்பதன் மூலம் ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதே இன்றைய சிகிச்சையின் அடிப்படையாகும்.

இலங்கையில் இறப்பு விகிதம் மிக அதிகம்

ஆயினும் இத்தகைய சிகிச்சையால் போதிய பலன் கிடைக்கவில்லை.

உதாரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு வீதம்

  • மலேசியாவில் 0.34 சதவிகிதமாகவும், 
  • தாய்லாந்தில் 0.1 சதவிகிதமாகவும் இருக்கும்போது, 
  • இலங்கையில் இது 1 சதவிகிதமாக மிக அதிகமாக இருக்கிறது. 

டெங்கு நோயைப் பொறுத்தவரையில் இலங்கையானது டெங்குவின் தாக்கம் அதிகமுள்ள A வகை நாடுகளில் ஒன்றாக பகுக்கப்பட்டது.
இது ஏன்? இதை நிவர்த்திப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு எமது மருத்துவ நிபுணர்கள் சிலர் தாய்லாந்து நாட்டிற்கு பயிற்ச்சிக்காக அனுபப்பட்டபோதே எமது சிகிச்சை முறையின் போதாமை உணரப்பட்டதாகத் தெரிகிறது.

இறப்புகளுக்கான காரணங்கள்

  • உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணம் வெளித் தெரியாமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குருதிப் பெருக்கைக் (Concealed bleeding) கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமும்,
  • உடற் திரவங்களின் (Body Fluids) அளவை சரியான முறையில் பராமரிக்காமையும் ஆகும்.

எமது நாட்டில் நோயாளியின் வெண்குருதி சிறுதுணிக்கை குறையும்போது அவசரப்பட்டு அதனை மாற்றீடு செய்ததால் உடல் திரவங்களின் நிலையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டு அதனாலும் மரணங்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

பப்பாசிச்சாறு நோயைக் குணமாக்கவில்லை

பப்பாசி இலைச் சாறு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் யாவும் அதனை சிகிச்சைக்காக கொடுத்ததன் பலனாக நோயாளியின் குருதியில் வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரித்ததாகக் கூறின.

இது பப்பாசிச் சாறினால் நோய் குணமானதற்கான அடையாளமல்ல.

எந்தவித சிகிச்சையும் கொடுக்காவிட்டால் கூட நோய் சுயமாகக் குணமாகும்போது அந்த எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் டெங்கு நோயின் மிக ஆபத்தான கட்டமான டெங்கு அதிர்ச்சி நிலையை பப்பாசிச் சாறு (Dengue Shock Syndrome) குணமாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அல்லாது நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சருமத்தில் செம்மை பூத்தது போல புள்ளி புள்ளியாக இரத்தக் கசிவு

டெங்குவின் வகைகள்

சாதாரண டெங்குக் காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சற்றுக் கடுமையானதான டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஆபத்தானது என்ற போதும் உயிரிழப்புகளுக்குக் காரணம் அதுவல்ல. ஆனால் அது மோசமாகி அதிர்ச்சி நிலைக்குப் போனால் மிக மிக ஆபத்தானது. 

டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

  • அது தொற்றிய பலருக்கும் வெளிப்படையான எந்த அறிகுறியும் இருக்காது. 
  • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து தானாகவே மாறிவிடும். 
  • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். 
  • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
டெங்கு  குருதிப் பெருக்குக் காய்ச்சலில் கண்ணில் குருதிக் கசிவு

குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட

  • 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள். 
  • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

 மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நீங்கள் செய்யக் கூடியது

காய்ச்சல் வந்த உடனேயே இது டெங்குவாக இருக்குமோ எனப் பயந்து மற்றவர்களையும் கலங்கியழ வைத்து உடனடியாக மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை.

முதல் மூன்று நாட்களுக்கு பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தாமதிக்காது நாடுங்கள்

  • கடுமையான தலையிடி
  • கடுமையான வயிற்று வலி
  • வயிற்றுப் புரட்டும் சத்தியும். இவை அதிகமாகி நீராகாரம் எதனையும் உட்கொள்ள முடியாதிருத்தல்
  • கடுமையான தாகம்
  • தோல் செந்நிறம் பூத்தது போல இருத்தல் அல்லது சிவத்தப் புள்ளிகள்
  • கடுமையான உடல் உழைவு, மூட்டு வலிகள்
  • உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல்
  • கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை
  • சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல். உதாரணமாக 6மணிநேரம் சிறுநீர் கழியாதிருத்தல்

இவற்றில் சில அறிகுறிகள் வேறு சாதாரண காய்சல்களின் போதும் ஏற்படக் கூடும். ஆயினும் டெங்கு பரவி வரும் காலங்களில் அவற்றை உசாதீனம் செய்யக் கூடாது.

அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள்

மேற் கூறிய அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆயினும் கீழ்க் கண்டவர்கள் டெங்குக் காச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் கூடிய கவனம் எடுப்பது அவசியம்

  • ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்
  • வயதானவர்கள் – 65 வயதிற்கு மேல்
  • கொழுப்பான உடல் வாகை உடையவர்கள்
  • கர்ப்பணிகள்

எனவே பப்பாசி இலை, வீட்டு மருத்துவம் போன்றவற்றில் காலத்தைக் கடத்தாது டெங்கு நோயெனச் சந்தேகத்துக்கு உரியவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உலகளாவிய ரீதியில் டெங்கு நோயும் அதனைப் பரப்பும் நுளம்பும் காணப்படும் பிரதேசங்கள்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அடைப்படை உண்மைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

 டெங்குநோயைப் பரப்பும் Aedes aegyptiநுளம்பின் வாழ்க்கை முறை அதனை அழிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பாருங்கள்.

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்

அழுக்கு, கழிப்பறை, குப்பை கூளங்கள் யாவும் நுளம்மைபைப் பெருக்கும் இடங்களாகும். ஆனால் பொதுக் கழிப்பறையில் நடந்த இந்த சம்பவம்சுவார்ஸமானது.

கலங்கவைக்கும் டெங்கு பற்றிய தொடரைப் படித்த உங்களை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு இது.

கழிப்பறையில் அழைப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.

என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.

இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.

16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.

பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.

சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
  
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

 மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart) 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>அவருக்கு மூக்கை அரித்தது போலும். தனது வலது கையால் மூக்கை அழுதித் தேய்த்தார். பின் அதை ரவுசரில் தேய்த்துத் துடைத்தார்.

கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,

“குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது” என்றார்.

சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..

எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.

  • தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி, 
  • தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம். 

பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.

ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான

  • எச்சில், 
  • சளி, 
  • மூக்கிலிருந்து சிந்தும் நீர், 
  • சிறுநீர், 
  • மலம்

போன்றவற்றில் மிக அதிகம்.

கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.

சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்

எவ்வாறு கழுவுதல் வேண்டும்?

குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.

முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.

ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.

ஓடும் தண்ணீரில் கழுவுங்கள்

கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.

ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.

அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.

எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?

எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.

  • உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
  • மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
  • நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
  •  மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
  • தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
  • வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
  • வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
  • வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
  • கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 15ம் திகதி உலக கை கழுவும் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

 

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் 24.09.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>இந்தப் படம் எனது இளம் நோயாளி ஒருவரது.

பள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.

தனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.

இதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.

நெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.
முத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும்.

ஒவ்வொரு தடிப்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.

உண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

ஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.

ஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.

ஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.

சிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற
சிகிச்சைகளையும் செய்வர்.

Podophyllotoxin,  மற்றும்  Trichloro Acetic acid போன்ற சில கிறீம் வகைகளும் உதவும்.

Read Full Post »

>

  • வயிற்றோட்டம், 
  • வாந்தி, 
  • வயிற்று வலி 

போன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.

பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள். இன்னும் சிலர் வேலை செய்பவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு சுற்றுலாச் செல்லும் பலர் இப் பிரச்சைனையில் அகட்டுப்படுக் கொள்வது மிக அதிகம்.
ஒரு சிலரே வீட்டுப் பெண்கள்.
இவர்களில் பலருக்கு காய்ச்சலும் இருப்பதுண்டு.

வயிற்றோட்டம், வயிற்றுளைவு, வயிற்றுக்கடுப்பு, வாந்திபேதி என ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு நஞ்சடைதல்தான்.

ஆங்கிலத்தில் Food Poisoning என்பதை நேரடியாகத் தமிழாக்கிய சொல் அது. உண்மையில் உணவில் நஞ்சு எதுவும் கலந்துவிடுவதில்லை.

நோயை ஏற்படுத்தும் கிருமிகளால் உணவு மாசடைவதாகக் கொள்ளலாம். உணவு என்று சொல்லும்போது அது கெட்டியான உணவாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீராகாரமாகவும் இருக்கலாம்.

மாசடைந்த உணவை உண்டபின் அதிலுள்ள கிருமிகள், உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டி, பின் அங்கு பல்கிப் பெருகுகின்றன.

இதற்கு ஒரு சில மணிநேரத்திலோ ஒரு சில நாட்களோ எடுக்கலாம்.

எவ்வளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்புகுந்தன என்பதைப் பொறுத்தது நோயின் தன்மை. வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அவை சாதாரணமாகவோ அன்றி கடுமையாக நீரிழப்பு நிலைஏற்படும் அளவிற்கு கடுமையாகவோ இருக்கலாம்.

இந்த நோய் திடீரென அதிகரித்தமைக்கு

  • சில காலத்திற்கு முன் பெய்த கடுமையான மழையும் அதன் காரணமாக அசுத்தமான நீரும் காரணமாக இருக்கலாம். 
  • ஆயினும் இப்பொழுது பலரும் வீட்டுச் சமையலைக் கைவிட்டு கடை உணவுகளை அதிகம் நாடுவது காரணம் என்பதை பல நோயாளிகள் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததில் புரிந்தது. 
ஹோட்டல் உணவு

சாதாரண வீதியோரக் கடைகள் முதல் நல்ல தரமானது என நாம் கருதும் உணவுச் சாலைகளில் சாப்பிட்டவர்கள் வரை எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

சோப் போட்டுச் சுத்தம் செய்யாத கரங்களினால் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதுமே முக்கிய காரணமாகும்.

அசுத்த நீரில் நீராடும் இலையான்களும் கரப்பத்தான் பூச்சிகளும் நிறைந்த சுகாதாரக் கேடான சமையலறை,
சிந்தும் மூக்கை சட்டையில் துடைத்துவிட்டு உணவு பரிமாறும் சிப்பந்திகள்.

இவைகளை நீங்களும் கண்டிருப்பீர்களே?

தயாரித்த உணவுகளை

  • ஈ மொய்க்குமாறு திறந்து வைப்பதும், 
  • அசுத்தமான கைகளினால் அளைவதும், 
  • பழைய உணவுகளை சற்று சூடுகாட்டிவிட்டு எமது தலையில் கட்டுவதும் பல உணவகங்களில் சர்வ சாதாரணம். 

நல்ல உணவகங்களும் இல்லாமல் இல்லை.

விருந்து நிகழ்வுகள்.

திருமணம், பிறந்தநாள், அந்தியட்டி போன்ற பல நிகழ்வு விருந்துகளில் உண்டவர்களும் இப்பிரச்சனைக்கு ஆளாவதுண்டு. கோவில் அன்னதானம், பிரசாதம் ஆகியவையும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது.

உணவு தயாரிப்பதில் ஏதாவது பிசகு நடந்திருக்கலாம். ஆனால் உணவு பரிமாறலில் பல கைகள் ஈடுபடுவதால் யாராவது ஒருவர் சுகாதார முறைகளில் கவலையீனமாக இருந்தாலும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.

வீட்டு உணவு

வீட்டு உணவும் சில வேளைகளில் ஆபத்தைக் கொண்டு வருகிறது. முக்கியமாக மண்ணிலும் மண்ணை ஒட்டி பகுதியிலிருந்து வரும் கிழங்கு, கரட்; கீரை, வல்லாரை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சலட் போன்று உண்டால் கிருமி தொற்றலாம்.

அவற்றை ஓடும் குழாய் நீரிலும் பின் உப்புத் தண்ணீரிலும் கழுவுவது அவசியம். வேகவைத்து உண்பது அதனிலும் சிறந்தது.

சமைத்த உணவைச் சேமித்தல்

சுகாதாரமாகச் சமைத்த போதும் வீட்டில் இந்நோய் ஏற்படுவதற்கு காரணம் பாதுகாப்பற்ற சேமிப்பு முறை எனலாம்.

சமைத்த உணவுகளைத் திறந்து வைப்பதும்,
அசுத்தமான கரண்டிகள் மற்றும் கோப்பைகளை உபயோகிப்பதும் காரணமாகும்.

ஒரு வேளைக்கு எனச் சமைத்த உணவை அடுத்த நேரத்திற்கும் உபயோகிக்க வேண்டுமாயின் சமைத்த உடனேயே அடுத்த நேரத்திற்கானதை வேறாக எடுத்து வைத்துவிடுங்கள்.

பாவித்த உணவின் மீதியை அடுத்த வேளைக்கும் உபயோகிக்க நேர்ந்தால் மீண்டும் சமைப்பது போல நன்கு கொதிக்க வைத்தே உண்ண வேண்டும். அவ்வாறு செய்யும் போது கிருமிகள் யாவும் அழிந்துவிடும்.

மாறாக வாய் இதத்திற்கு ஏற்ப சிறிதளவு சூடு காட்டினால் அதிலுள்ள கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தலாம்.

இவை பிரிஜ்சில் வைக்கும் உணவுக்கும் பொருந்தும். குளிருட்டும்போது உணவில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. அவ்வாறே உறைநிலையில் இருக்கும்.

வெளியே எடுத்ததும் அல்லது சிறிது சூடு காட்டியதும் அவை பெருகி நோயை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க முன்னர் கூறியது போல சமைத்த உடனேயே அடுத்த வேளைக்கான உணவை வேறாக எடுத்துச் சேமிக்க வெண்டும். இல்லையேல் மீண்டும் கொதிக்க வைத்த உபயோகிக்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 28.08.2010  நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>கை கால் வாய்ப்புண் நோய் (Hand Foot and Mouth Disease)

பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார் தாய். ஒரே நோய் எல்லோரையும் தாக்கியிருந்தது.
இவர்களை மட்டுமின்றி வேறு பல பாடசாலைப் பிள்ளைகளையும் அண்மையில் பாதித்திருந்து. சில பாடசாலைகளில் நிறைய பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.

வாய்க்குள் புண்கள். சாப்பிட முடியாது அவதிப்படுகிறார்கள்.போதாக்குறைக்கு கை கால்களில் கொப்பளங்கள்.

கொப்பளிப்பான் (Chicken pox) போல மெல்லிய நீர்க் கொப்பளங்கள் அல்ல. சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. ஆயினும் சீழ்ப் பிடித்த கொப்பளங்களும் அல்ல.

இது என்ன நோய்?

கை கால் வாய்ப்புண் நோய் எனலாமா?

Hand Foot and Mouth Disease (HFMD) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

தானாகவே மாறக் கூடிய ஒரு சாதாரண தொற்று நோய்தான். Coxsackievirus என்ற வைரசால் தொற்றுகிறது. இது போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவதில்லை. எனவே பயப்பட வேண்டியது இல்லை.

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பலவாறாக வெளிப்படலாம்.

உடம்பு அலுப்பு, தொண்டைநோய், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கும். பசியின்மையும் சேர்ந்து இருக்கலாம். வாயினுள் சிவப்பாக கொப்பளங்கள் போல ஆரம்பிக்கும். பின் உடைந்து ஏற்படும்

வாய்ப்புண்கள்தான் இந்நோயின் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண சூட்டு வாய்ப் புண்கள் (Apthous Ulcer) போலவே தோற்றமளிக்கும்.

அவற்றில் வலியும் இருக்கும். பொதுவாக காய்ச்சல் தோன்றி ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றும். காய்ச்சல் கடுமையாக அடிப்பதில்லை.

இதே போன்ற கொப்பளங்களும் புண்களும் பாதங்களிலும் உள்ளங் கைகளிலும் தோன்றும்.

குண்டிப் பக்கமாகவும் தோன்றுவதுண்டு.

இவை அரிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

பரவுவது எப்படி?

ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேகமாகத் தொற்றக் கூடியது.

மூக்கிலிருந்து சிந்தும் நீர், எச்சில் போன்றவற்றலிருந்து பரவும். நோயுள்ளவர் தும்மும் போதும் இருமும் போதும் தெறிக்கும் துளிகள் மூலமே முக்கியமாகப் பரவும்.

எனவே கை லேஞ்சியால் அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது அவசியம். இது எந்த நோய்க்கும் பொருந்தும்.

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இதனைப் பழக்க வேண்டும்.

கொப்பளங்களிலுள்ள நீரின் மூலமும் பரவலாம். பிள்ளைகள் அடிக்கடி வாயுக்குள் கைகளை வைப்பதால் கிருமியால் மாசடைந்த கைகளால் வேகமாகப் பரவுகிறது.

ஏச்சிலால் வாயுலிலுமுள்ள கிருமிகள் பரவுவதால் நோயுள்ள ஒருவர் உபயோகித்த பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யாமல் உபயோகிகக் கூடாது. வீட்டில் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் பரவும் என்றில்லை. பின்னரும் பரவலாம். சிலரில் நோய் வெளிப்படையாகத் தெரியாது. ஆயினும் அவர்கள் நோய் காவிகளாக இருந்து மற்றவர்களுக்குப் பரப்புவதும் உண்டு.

ஆபத்தான பின் விளைவுகள் எதனையும் இது ஏற்படுத்தாது. ஆயினும் வாய்ப் புண்கள் கடுமையாக இருந்தால் சில பிள்ளைகள் உணவுகளை உண்ணவும், போதிய நீராகாரம் எடுக்கவும் மறுப்பார்கள். அவ்வாறான நிலையில் நீரிழப்பு ஏற்பட்டால் நாளங்கள் ஊடாக ஏற்ற (IV Fluid) நேரிடலாம்.

உணவு

இதைத் தவிர்க்க பிள்ளைகள் உண்ண விரும்பும் நீராகாரங்களைத் தாராளமாகக் கொடுங்கள். ஐஸ் வோட்டர். ஐஸ் கிறீம் போன்ற குளிர்மையான நீராகாரங்கள் இந்நேரத்தில் வாய்க்கு இதமாக இருக்கும். குளிர்ந்த பாலும் நல்லது.

ஆயினும் வாய்ப் புண்களை உறுத்தக் கூடிய புளிப்புத்தன்மையுள்ள பழச்சாறுகளையும் ஏனைய நீராகாரங்களையும் தவிருங்கள்.

அதேபோல அதிக காரம் மற்றும் உப்பு சேர்ந்த உணவுகளும் புண்களை வேதனைப்படுத்தும்.

மென்மையான அதிகமாக மெல்லத் தேவையற்ற உணவுகளை குழந்தைகள் அந்நேரத்தில் விரும்பி உண்பர்.

உண்ட பின் நகச்சுட்டு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.

மருந்துகள்

மருந்துகள் எதுவும் தேவைப்படாது. காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றிற்கு பரசிட்டமோல் போதுமானது.

மருத்துவரின் ஆலோசனையுடன் வலியைத் தணிக்கும் இதந்தரும் ஓயின்மென்ட் பூசுவது வாய்ப்புண்களுக்கும் ஏனைய புண்களுக்கும் உதவும்.

அன்ரிபயடிக் எதுவும் தேவைப்படாது.

ஓரு வாரமளவில் தானாகவே குணமாவிடும்.

தடுப்பது எப்படி

சுத்தத்ததையும் சுகாதாரத்தையும் பேணுவதே அடிப்படை உத்தியாகும். முக்கியமாக மலம் கழித்தபின் சோப் போட்டுக் கைகளைச் சுத்தம் செய்வது அவசியம்.

என்னிடம் வந்த ஒரு தாயார் இந்நோயுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைகள் மலம் கழித்தால் கழுவுவது இவர்தான். ஆனால் அதன் பின் வெறுமனே கைகளை கழுவுவார்.
சோப் போட்டுக கழுவுவது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினேன்.

வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல்(டைபோயிட்), செங்கண்மாரி, பன்றிக் காய்ச்சல் H1N1   போன்ற பல நோய்களும் அவ்வாறுதான் பரவுகிறது என்பதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.

வாய்க்குள் கை வைப்பது, நகங் கடிப்பது போன்ற பழக்கங்களாலும் அத்தகைய நோய்கள் பரவும் என்பதைச் சொல்ல வேண்டுமா?

குழந்தைகளுக்கு இவை பற்றிய அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்களது பங்களிப்பு அவசியமானது.

பெற்றோரின் முன் உதாரணமும் அறிவுறுத்தல்களும் அதைவிட மிக முக்கியமாகும்.

நோயுற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இல்லையேல் பாடசாலைப் பிள்ளைகளிடையே இப்பொழுது பரவுவது போல வேகமாகப் பரவுவதைத் தடுக்க முடியாது.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய்நலமா? பத்தியில் (23.06.2010) நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நோயாளியை விட கூட வந்த தாய் அதிக பதற்றத்தில் இருந்தாள். வேகமாக வந்ததில் அவளுக்குத்தான் மூச்சு இளைத்தது.

“ஒரு கிழமையாக பஞ்சிப்பட்டுக் கொண்டிருந்தான். தலையிடி,         சாப்பிடுறான் இல்லை.                                                                                                      வயிறும் நோகுது என்றான்.                                                                                                  இப்ப பார்த்தால் காச்சல் 101 லை அடிக்கிது.                                             தொண்டையும் நோகுதாம்.                                                                                         திரும்பிக் காட்டடா தம்பி. கழுத்திலை கட்டி கட்டியா வீக்கம்.                 பாருங்கோ டொக்டர். என்ன வருத்தமோ தெரியவில்லை”

அவளைப் பொறுத்த வரையில் காச்சலும் கட்டிகளும் மிகுந்த அபாயமான அறிகுறிகள்தான். ஏதாவது புற்றுநோயாக இருக்குமோ எனப் பயம்.

பதினைந்தே ஆன சின்ன வயதில் இப்படி ஒரு நோயா மகனுக்கு என்ற தனது ஏக்கத்தை மகனுக்கு முன் வைத்துச் சொல்ல முடியாது வார்த்தைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.

நெறிக்கட்டிக் காச்சல்

ஆனால் அவனுக்கு வந்திருப்பது ஆபத்தான நோயல்ல. சாதாரண ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆங்கிலத்தில் Glandular Fever அல்லது

Infectious Mononucleosis என்பார்கள்.                              

நெறிக்கட்டிக் காச்சல் அல்லது நிணநீர்க்கட்டிக் காய்ச்சல் என நாம் சொல்லலாம்.

பெரும்பாலான பிள்ளைகளுக்கு மிகச் சிறுவயதிலேயே வந்து தானே மாறிவிடுவதுண்டு.                                                                                                                       

2-3 வயதிற்கு இடையில் அவ்வாறு வரும்போது வழமையான அறிகுறிகள் இருப்பதில்லை. 

வேறு சாதாரண காய்ச்சல் போல வந்து கரைச்சல் கொடுக்காது குணமாகிவிடும்.                                                                                                               அதனால் கவனத்தில் எடுக்கப்படாது போய்விடும்.                                                      

இந் நோய் இருப்பதை உறுதி செய்ய மொனோ ஸ்பொட்

(Mono spot) என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.

அறிகுறிகள்

குழந்தைப் பருவத்தில் வராதவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பதின்ம வயதில் வருவதுண்டு.

ஆரம்பத்தில் உடலுழைவு, தலையிடி, களைப்பு, பசியின்மை போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கும். சிலருக்கு வயிற்றுநோ இருக்கக் கூடும்.

சுமார் ஓரிரு வாரம் செல்ல தொண்டை நோவுடன் காச்சல் தோன்றும். 

ரொன்சில்கள் சிவந்து வீங்கியிருக்கும்.                                                                

அத்துடன் கழுத்துப் பகுதியில் நெறிகள் தோன்றும். அக்குள், அரைப் பகுதிகளிலும் நெறிகள் வருவதுண்டு.

மண்ணீரல், ஈரல் ஆகியவையும் இந்நேரத்தில் வீங்குவதுண்டு.                   அதுவே வயிற்றுநோவிற்குக் காரணமாகும்.                                                     அத்தோடு பசியின்மை, ஓங்காளம் போன்றவற்றிற்கும் இவையே காரணமாகும்.

தொண்டை நோவைக் கண்டவுடன் தமக்குத்தாமே சுயவைத்தியம் செய்யும் சிலர் அமொக்சிசிலின் என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தை வாங்கிப் போடுவதுண்டு. அப்படியானவர்களுக்கு தோல் சிவந்து அரிப்பு எடுப்பது போன்ற பக்கவிளைவு ஏற்படலாம்.

இது ஒரு வைரஸ் நோயாதலால் எந்த நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் உதவாது.                                                                                                              உபயோகிக்கவும் கூடாது.                                                                                                

காய்ச்சல் தானே விரைவில் குணமாகிவிடும். ஆயினும் களைப்புத்தன்மை சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும்.                                                                                                     
ஒரு முறை இக்காச்சல் வந்தால் உடலுக்கு பூரண எதிர்புச் சக்தி கிடைத்துவிடுவதால் மீண்டும் வருவதில்லை.

எப்படித் தொற்றும்

நோயுற்று இருப்பவரின் எச்சிலில் இந்நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள்

Epstein-Barr (EB) virus) நிறைய இருக்கும்.
 

இதனால் வாயினால் முத்தமிட்டால் உடனடியாகத் தொற்றும்.
 

நோயுற்றவர் உபயோகித்த கப், கிளாஸ் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிப்பதாலும் தொற்றும்.

நோய் முற்றாகக் குணமாகிய பின்னரும் பலரது உமிழ்நீரில் தொடர்ந்து இருக்கும். அவர்களிலிருந்து நோய் பின்னரும் தொற்றலாம்.                   

இவர்களை நோய் காவிகள் என்பர்.

அடிக்கடி கை கழுவுவது, மற்றவர்கள் கோப்பை, கிளாஸ், பிளேட் போன்றவற்றை உபயோகிக்காது இருத்தல் போன்ற அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் இந்நோயை மட்டுமல்ல மேலும் பல நோய்கள் தொற்றாமல் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

கிருமி தொற்றினாலும் அது நோயாக வெளிப்பட 4-6 வாரங்கள் செல்லலாம். நோயுற்றவரை வாயில் முத்தமிட்டாலும், முன்பு ஒருமுறை நோய் வந்தவருக்கு மீண்டும் வர வாய்ப்பில்லை.

எப்படியாயினும் வேகமாகப் பரவும் தொற்றுநோய் அல்ல. இக்காரணங்களால் நோயுற்றவரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. காய்ச்சல் மாறி உடம்பு திடமானால் பாடசாலைக்குச் செல்லலாம். தொழிலும் செய்யலாம். இதற்கு எதிரான தடுப்பு ஊசி கிடையாது.

மருத்துவம்

காய்ச்சல், உடல் அலுப்பு இருந்தால் பரசிட்டமோல் மருந்து உபயோகிக்கலாம். ஆயினும் ஏற்கனவெ குறிப்பட்டது போல நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது கூடாது.                                                                                            

காச்சலுக்கு அஸ்பிரின் டிஸ்பிரின் உபயோகிக்க வேண்டாம். வைரஸ் காச்சலுக்கு அவற்றை உபயொகித்தால் ரெயிஸ் சின்ரோம் என்ற ஆபத்தான விளைவு ஏற்படலாம்.

போதிய ஓய்வு எடுப்பதுதான் முக்கியமானது.                                                   அதற்காக படுக்கையில் கிடக்க வேண்டும் என்றில்லை.                          களைப்பைக் கொடுக்கும் கடுமையான வேலைகளையும், கடும் உடற் பயிற்சிகளையும் நோயுள்ள போது தவிர்க்க வேண்டும். 

தனது உடல் சொல்வதைக் கேட்டால் போதுமானது. அது போதும் என்று சொன்னால் அதற்கு மேலாக உடலை வருத்த வேண்டாம்.

விரும்பியதை உண்ணலாம். பத்தியம் எதுவும் கிடையாது. ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு காரணமாக உண்ண முடியவில்லை எனில் போசாக்குள்ள பானங்களாக அடிக்கடி அருந்த வேண்டும்.

உப்பு நீரால் அலசிக் கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.

‘பயந்தாங்கொள்ளி மனுசி. சின்னக் காய்சலுக்கு டொக்டரட்டை ஓடுது’ என்று ஆரம்பத்தில் குறிப்பட்ட பெண்ணை நக்கலடித்து அலட்சியப்படுத்தினால் தவறு செய்வது நீங்கள்தான்.

ஏனெனில் லிம்போமா, ஹொட்ச்கின்ஸ் போன்ற ஆபத்தான நோய்களின் முதல் அறிகுறிகளும் நிணநீர்க்கட்டி வீக்கம்தான். கசநோய்(TB) சிபிலிஸ் போன்ற தொற்று நோய்களிலும் ஏற்படும். எனவே எத்தகைய நிணநீர்க்கட்டி வீக்கம் (நெறிக்கட்டி) ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
 
எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »