‘எச்சிலே விழுங்க முடியவில்லை வலி தாங்க முடியவில்லை’ என்று தனது தொண்டையின் இடது புறத்தைப் பிடித்துக் கொண்டு வந்தவள் ஒரு இளம் பெண்.
சாப்பிடும்போது ஏதோ சிக்கிவிட்டதாம்.
‘வாயைத் திறவுங்கள்’ என்றேன். வெளிச்சத்தில் பார்த்தபோது எச்சில்தான் நிறைந்திருந்தது, வேறு எதையும் காண முடியவில்லை.
எச்சிலை விழுங்கு என்ற போது விழுங்க முடியாது சிரமப்பட்டாள். கொஞ்ச எச்சிலையே விழுங்கினாள் மீதி தொண்டையை மறைத்து நின்றது.
பல முறை முயற்சிக்குப் பின்னர் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது.
இடது புற டொன்சிலின் மீது ஆடை படர்ந்த மாதிரி ஏதோ சற்று ஆடுவது போலத் தெரிந்தது.
தெளிவாகத் தெரியும் மற்றொரு கணத்திற்காகக் காத்திருந்தேன்.
வளைந்த நீண்ட forceps தேவைப்பட்டது .. Nasal forceps பயன்படுத்தினேன்.
துரிதமாக தொண்டைப் பகுதிக்குள் forcrps நுழைத்து எடுத்தபோது ஏதோ வந்தது
மீன் முள்ளுப் போல.
ஆனால் மீன் முள் அல்ல.
சிக்கன் சாப்பிடும்போது ஒரு சிறிய எலும்புத் துண்டு மாட்டியிருந்தது.
ஒரு கணத்தில் அவளது வலி மறைந்தது
எச்சிலை முழுங்க முடிந்தது.
முகம் மலர்ந்தாள்.
தாயின் முக மலர்ச்சியும் இணைந்து கொண்டது.
இத்தகைய தருணங்கள்தான் மருத்துவப் பணியில் மிகவும் திருப்தியான மனநிறைவைத் தரும் கணங்கள்.
உடனடியாக நோயாளியின் துயர் தீர்ப்பதைவிட வேறு என்ன வெகுமதி மருத்துவனுக்கு கிடைக்கக் கூடும்.
தொண்டையில் அந்நியப் பொருள் சிக்குவது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். ஏனெனில் அது வழுவி சுவாசக் குழாயினுள் விழுந்துவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து உண்டு.
பொதுவாக குழந்தைகள் பிளாஸடிக் துண்டுகள், சட்டைப் பின்கள், ஸ்டப்ளர் பின், விதைகள், போன்றவற்றை விழுங்கி அவஸ்தைப்படுவார்கள்
பெரியவர்களில் மீன் முள்ளு, எலும்புத் துண்டுகள் சிக்குவதுண்டு.
எதுவானாலும் இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கச் செல்ல வேண்டும்.
0.0.0
சில நாட்களுக்குப் பின்னர் வேறெருவர் வந்திருந்தார்.
இவருக்கும் ஏதோ தொண்டையில் சிக்கிவிட்டது. மாத்திரை சாப்பிடும்போது கவலையீனமாக இருந்ததில் மாத்திரை அடைத்து வந்திருந்து foil packல் சிறு துண்டு சிக்கிவிட்டதாம்
எவ்வளவோ தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சாதாரண வெளிநோயார் பிரிவில் வைத்து பார்க்க முடியாது.ENT நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது.. சத்திரசிகிச்சை அறையில் வைத்து எடுக்க வேண்டியதாயிற்று
அவதானம் நண்பர்களே.
எதையும் விழுங்கும்போது கவனமான இருங்கள். குத்தக் கூடியவை, ஒட்டக் கூடியவை தொண்டையில் சிக்கினால் சிரமம்தான்.
0.00.0