>
காய்ச்சல் சளி என வந்தவரைச் சோதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவரது மார்பிலும், முன்னங்கைகளிலுமுள்ள தோலில் தென்பட்ட தேமல் போன்ற நிற மாற்றங்கள் எனது கவனத்தை ஈர்த்தன.
‘இவை எவ்வளவு நாளாக இருக்கு’ எனக் கேட்டேன்.
‘கன நாளாக் கிடக்கு. அவ்வளவு பெருக்கவும் இல்லை. சொறிவு வலி எண்டு ஒரு பிரச்சனையும் இல்லை. சும்மா கிடந்திட்டுப் போகட்டும் எண்டு விட்டிட்டன்’ என்றார்.
உண்மையில் அவர் நினைப்பது போல அது அசட்டை பண்ணக் கூடியதல்ல!
சொறிவு, வலி எதுவும் இல்லாதிருப்பதுதான் பிரச்சனை. அவ்வாறான தொந்தரவுகள் இல்லாதிருப்பதால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதும் உண்மையே. ஆனால் பரிசோதனையில் அவ்விடத்தில் தோலின் உணர்திறன் சற்றுக் குறைந்திருந்தது.
முக்கியமாக தொடுகை, வெப்பம், வலி போன்றவற்றை உணரும் திறன் குறைந்திருந்தது. தேமல் போன்ற அந்தத் தோற்பகுதி வழமையான தோல் நோய்களைப் போல வெள்ளையாகவோ, கருப்பாகவோ, செந்நிறமாகவோ இருக்கவில்லை. சற்று வெளிர்மையான தாமிர வண்ணத்தில் இருந்தமை கூர்ந்த அவதானிப்பில் தெரிந்தது.
இது தொழுநோயின் அறிகுறி.
திடீரெனத் தோன்றுவதும் வேகமாகப் பரவுவதும், படையாகத் தோல் உரிவதும், விரைவாக மறைவதுமான தோல்நோய்கள் தொழுநோயாக இருக்க முடியாது. ஒரு சிலருக்கு தோல் நோய் போலன்றி, கை கால்களில் நீண்ட காலம் விறைப்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதும் தொழுநோயாக இருக்கக் கூடும்.
தொழுநோய் என்பதை மருத்துவத்தில் Leprosy என்பார்கள். தொழுநோய் என்றதும் ரத்தக்கண்ணீரில் எம்.ஆர் ராதாவும், கப்பலோட்டிய தமிழன் சுப்பிரமணிய சிவாவும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். விரல்கள் அழுகி விழுவது போன்ற ஒரு அருவருப்பான நோயாகத்தான் பலருக்கும் இது அறிமுகமாயிருக்கிறது.
ஆனால் இது மிகவும் தவறான கருத்தாகும். பலரும் நம்புவது போல தொழுநோய் காரணமாக அவ்வாறு கை, கால் விரல்கள் அழுகி விழுந்துவிடுவதில்லை. அத்தோடு நோயாளின் தோலிலுள்ள தேமல் போன்ற தோலின் பகுதியிலிருந்து ஒருவரிலிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதில்லை.
மாறாக நோயுள்ளவர் தும்மும்போதும் இருமும் போதும் பறக்கும் நுண்சளித் துகள்கள் மூலமே பரவூகின்றன. கெட்ட சகவாசத்தாலோ, விபசாரிகள் தொடர்பினாலோ வருவதில்லை. எனவே வெட்கப்பட வேண்டிய அவமானகரமான நோயுமல்ல.
தொழுநோய் என்பது வேகமாகத் தொற்றும் நோயல்ல. காரணம் 90சதவிகிதத்திற்கு மேலான மக்களுக்கு இதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே இருக்கிறது. தொற்றினாலும் மிக மெதுவாகவே வெளிப்படும். நோய் தொற்றி வெளித்தெரிவதற்கு மூன்று வருடங்கள் வரை கூடச் செல்லலாம். ஆண் பெண் குழந்தை முதியவர் என வயது வேறுபாடோ, பால் வேறுபாடோ இன்றி எவரையும் பாதிக்கக் கூடியது இது. நோயாளியின் சருமத்தையும் நரம்புகளையும்தான் இந்நோய் பிரதானமாகப் பாதிக்கும்.
இன்று தொழுநோய் என்பது மாற்ற முடியாத அணுஅணுவாகச் சாகடிக்கும் நோயுமல்ல. இப்பொழுது இந் நோயைக் குணமாக்கக் கூடிய நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. Multi Drug Treatment (MDT) எனப்படும் இம்மருந்துகள் இலவசமாக அரச மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இவற்றை அங்கு தரப்படும் சரியான ஒழுங்கு முறையில் ஆறு மாதங்கள் தொடர்ந்து உபயோகிக்க பூரண சுகம் கிடைக்கும்.
இந்த மருந்துகள் ஆபத்தற்றவை. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பாலூட்டும் காலத்திலும் கூட உட்கொள்ளக் கூடிய அளவிற்குப் பாதுகாப்பானவை.
ஒருவரது தொழுநோய் ஆரம்பத்தில் தொற்றும் தன்மையானதாக இருந்தாலும் கூட இம்மருந்தை உபயோகிக்க ஆரம்பித்தவுடன் தொற்றும் வீரியத்தை இழந்துவிடும். எனவேதான் இன்று அந்நோயுள்ளவர்களைத் தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை செய்வதில்லை. சொந்த வீட்டிலேயே மற்றவர்களுடன் கூட இருந்தே சிகிச்சை தொடரப்படுகிறது.
பிள்ளைகள் பாடசாலை செல்லலாம். பெரியவர்கள் தங்கள் தொழிலைத் தொடரலாம். திருமணம் செய்யவும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவும் முடியும். மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழலாம். சமூகத்திற்கோ, குடும்ப அங்கத்தவர்களுக்கோ அவர்களால் எந்தவித ஆபத்தோ பாதிப்போ கிடையாது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும், தொடர்ந்து செய்து முடிப்பதும்தான் முக்கியமானதாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.