>சத்திரசிகிச்சை நிபுணர்கள் சிலர் கலந்துரையாடல் அது.
எத்தகைய நோயாளிகள் சத்திரசிகிச்சை செய்வதற்கு இலகுவானவர்கள் என்பது பற்றி தம்மிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
“எனக்கு எக்கவுண்டன்ட் நோயாளிகளை சத்திரசிகிச்சை செய்யப் பிடிக்கும். சத்திரசிகிச்சை மேசையில் அவர்களை வெட்டித் திறக்கும் போது அவர்களது உள்ளுறுப்புகள் யாவும் எண்ணிக்கை இடப்பட்டு ஒழுங்காக இருக்கும்” என்றார் முதல் நிபுணர்.
“ஆனால் நீங்கள் எலக்ரீசியனை சத்திரசிகிச்சை செய்யவில்லைப் போலிருக்கிறது. நம்பர் ஏன்? அவர்களது உறுப்புகள் யாவும் வெவ்வேறு நிறங்களால் இலகுவாகப் பிரித்தறியும் வகையில் இருக்கும்” என்றார் இரண்டாமவர்.
மூன்றாவது சத்திரசிகிச்சை நிபுணருக்கு பொறுக்க முடியவில்லை.
“நீங்கள் என்ன மடைத்தனமாகக் கதைகிறீர்கள். நூலகர்களுக்கு இணை கிடைக்கவே கிடையாது. ஒவ்வொரு உறுப்பும் எழுத்து ஒழுங்கில் (Alphabetical Order) தெளிவாக இருக்கும்.”
‘கட்டடப் பணியாளர்கள்தான் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் புரிந்தணர்வு மிக்கவர்கள். சத்திரசிகிச்சை முடியும்போது சில உறுப்புகள் மிஞ்சிக் கிடந்தால் அதை தவறாக எடுக்க மாட்டார்கள். புரிந்து கொள்வார்கள். முன்னர் சொன்னதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டாலும் விளங்கிக் கொள்வார்கள்.’ என்றார் மற்றவர்.
ஐந்தாமவர் தனது கருத்தை வெளிப்படுத்தியவுடன் மற்றவர்கள் எல்லாம் வாயடங்க வேண்டியதாயிற்று.
“அரசியல்வாதிகளைப் போல சத்திரசிகிச்சைக்கு இலகுவானவர்கள் ஒருவருமே இருக்க முடியாது…
… சத்திரசிகிச்சை கட்டிலில் கிடத்தி அவர்களைத் திறந்தால்
அங்கு உணவுக் குழாய் இருக்காது.
விதைகள் கிடையாது.
இருதயம் இருக்கவே இருக்காது.
முள்ளந்தண்டின் சுவடே காணப்படாது.
மண்டை ஓட்டைத் திறந்தால் அங்கு மூளை இருந்த அறிகுறியே இருக்காது.
இரண்டே இரண்டு உறுப்புகள் மட்டும் ஓயாது இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஒன்று வாய்.
மற்றது குதம்.
சத்திரசிகிச்சையின் போது ஏதாவது தவறிழைத்தாலும் பயமில்லை.
ஏனெனில் அவர்களது வாயும் குதமும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடு செய்யக் கூடியவையாகும்.”
இது சத்திரசிகிச்சை நிபுணர்களின் தேர்வு.
தேர்தல் விரைந்து வருகிறது.
தேர்தல் இருக்கவே இருக்கிறது.
ஆனால் தேர்தலில் தேர்ந்தெடுக்க உங்களுக்குத் தேர்வு இல்லை.
எல்லா வேட்பாளர்களுமே ஒரே ரகம்தான்.
கடைசி சத்திரசிகிச்சை நிபுணருக்கு கிடைத்த மாதிரி.
(இணையத்தில் படித்ததற்கு சற்று கைச்சரக்கு சேர்த்தது)
நன்றி:- ஞானம் ஏப்ரல் 2010- 119