>’நாளைக்குப் பொங்கல்
யாழ்ப்பாணத்தில் என்றால்
புக்கை சமைப்போம்’
போன வரியம்
சொன்னஅந்த மூதாட்டி
“இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாள்
இன்று காலை
அங்கிருந்து.
காலம்தான்
எவ்வாறு மாறிவிட்டது
எங்கெல்லாம் ஓடிவிட்டது
ஒருவருட இடைவெளியில்
யாரெல்லாம்
எங்கெங்கோ.
“என்ரை மண்ணை
என்ரை வீட்டை
எனது சீவிய காலத்தில்
காணக் கிடைக்குமோ”
என்று ஏங்கிய பலர்
இன்று தங்கள் வீட்டில்
மகிழ்ந்திருக்க,
வீடிருந்தபோதும்
வீட்டில் குடியிருக்க ஆளில்லாது
குடும்பமாய்
மறைந்தும் மடிந்தும் போனவர்
இன்னும் ஏராளம்.
“யாழ்ப்பாணத்தில் நல்ல மழை
வயல் எல்லாம் நல்லா விளைச்சிருக்கு
மரக்கறிகள் நல்ல மலிவு
சாமான்கள் எல்லாம்
கொழும்பு விலையை விடக்
குறைஞ்ச விலையிலை
தாராளமாகக் கிடைக்கிது”
என்பர் பலபேர்.
“எல்லாம் இருந்தென்ன
வாங்குவதற்கு
காசு இங்கே கொட்டியா கிடக்கு.
வெளிநாட்டுக் காசு
கிடைக்காத எங்கள் பாடு
என்றைக்கும்
போராட்டம்தான்.”
கூலிவேலை செய்பவர்களும்
கடைகளில் பணி புரிபவர்களும்
சின்னஞ்சிறு தொழில்
முயற்சிகளில்
இருப்பவர்களும்
எழுப்பும் குரல்கள்
யாருக்கும் கேட்பதில்லை.
“மீன் நல்லாப் பிடிபடுகுது
விலையும் மலிவு
தெற்குக்கு தினமும்
லொறி லொறியா ஏற்றி
அனுப்புகிறோம்”
பவுண் சங்கில் பளபளக்க
வாயெல்லாம் பல்லாக
மொழிகிறார் சம்மட்டியார்.
“மீன் நல்லாப் பிடிபட்டாலும்
கூலியை உயர்த்தியா
தருகிறார்கள்.
சொந்தமாய் போட்
வாங்க வழியுமில்லை.
வாயும் வயிற்றுக்குமான
எங்கள் போராட்டத்திற்கு
என்றாவது விடிவு கிடைக்குமா”
மீன்பிடித் தொழிலாளியின்
ஏக்கம்
கடலலையோடு
கரைந்து மறைகிறது.
நாம் மகிழ்ந்து
மற்றவர்களும்
மகிழ்திருக்கும் காலம்
தானே கனிவதில்லை.
எல்லோர்க்கும்
எல்லாமும்
எப்போதும்
கிடைக்கின்ற
காலம் கனியட்டும்.
அதற்காக
பதிவிடுவோம்.
குரல் எழுப்புவோம்.
ஓயாது உழைப்போம்.
கிட்டும் வரை போராடுவோம்.
தைத்திருநாளின்
பொங்கலும் அன்றைக்குத்தான்
இனிக்கும்.
எங்களுக்கும் எல்லோருக்கும்.