Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நகச்சுற்று’ Category

>

இவரின் நகக் கண் வீங்கி மஞ்சளாகிச் சினத்து வீங்கியிருப்பதை படத்தில் காண்கிறீர்கள். அவ்விடத்தில் சீழ் பற்றியிருக்கிறது. நகச்சுற்று எனத் தமிழில் சொல்வோம். ஆங்கிலத்தில் Paronychia என்பர். திடீரென ஏற்பட்டதால் Acute Paraonychia எனப்படும்.
 

நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.

இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான். 

பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.

பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.

எவ்வாறு ஏற்படுகிறது?

 • நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
 • கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
 •  நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.
 • சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.
 • சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris) போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.

நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.

பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்

வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.

மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.

ஏற்படாமல் தடுத்தல்

நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

 • நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.
 • நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.
 • நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.
 • குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.
 • நல்ல கூரான கத்தரிக்கை அல்லது நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.
 • கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது நேராகவும் இருக்குமாறு வெட்டவும். 
 • நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.

 வீரகேசரி வெளியீடுவில் 23.03.2011 வெளிவந்த எனது மருத்துவக் கட்டுரை இது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>‘உன் கை நகம் கவிதையா……’ என சுந்தர ராமசாமி ‘பசுவய்யா’ என்ற புனை பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

உங்கள் கை நகங்கள் கவிதையா இல்லை கதறி ஓட வைக்கும் அலங்கோலமா?

சற்றுப் படித்துப்பாருங்கள். நகங்களின் அழகு எல்லோருக்கும் அவசியம். எனினும் பெண்களுக்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

‘இரா இராவாக இவளுக்கு நித்திரையில்லை. விரல் நுனி வீங்கிக் கொதிக்குது’ என்றாள் அம்மா. வேதனையில் முகம் சுளித்துக் கொண்டிருந்த மகள் ஒரு பள்ளி மாணவி. பெருவிரலின் நகத்திற்குப் பக்கமாக தோல் சிவந்து வீங்கியிருந்தது. விசாரித்துப் பார்த்ததில் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவள் எனத் தெரிந்தது.

இதற்கு மாறாக பல தாய்மார்களின் விரல் நகங்களும் தடித்து சொர சொரப்பாகி அசிங்கமாகத் தோன்றுவதுண்டு. அத்துடன் அவற்றில் இடையிடையே சீழ் பிடித்து வலிக்கவும் செய்வதுண்டு.

இவை இரண்டுமே நகச்சுற்றுகள்தான். ஆயினும் பல வேறுபாடுகள் உண்டு. பள்ளி மாணவியில் தோன்றியது திடீரென ஏற்பட்ட நோய். அதனை Acute paronychia என்பார்கள். இது விரைவில் மாறிவிடும். மீண்டும் வராது நீங்கள் காப்பாற்றினால் நகத்தின் அழகைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மாறாக அம்மாவில் ஏற்பட்டது நாட்பட்ட நகச்சுற்று (Chronic paronychia) எனப்படும். குணப்படுத்துவதற்கு சற்றுக் கடினமானது.

திடீரெனத் தோன்றும் நகச்சுற்றுநகத்தைச் சுற்றியுள்ள மென்மையான தோலில் கிருமி தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. திடீரென அவ்விடத்தில் உள்ள தோல் சிவத்து வீங்கி வலியை ஏற்படுத்தும். சிலவேளைகளில் மஞ்சளாக சீழ் அதற்குள் தோன்றலாம்.

கடிப்பதால் மட்டும் நகச்சுற்று வருவதில்லை. நகம் கத்தரிக்கும் போது ஆழமாக வெட்டுவது, மாறாக நகத்தை நீளமாக வளரக்கும் போது காயம் ஏற்படுவது, கை சூப்புவது, சமையல் வேலை, தோட்ட வேலை போன்ற வேலைகளின் போது நகக் கண்ணில் காயம் ஏற்படுவதால் ஏற்படுகிறது. காயம் பட்ட இடத்தில் பக்டிரியா, பங்கசு கிருமிகள் தொற்றுவதாலேயே சீழ் பிடித்து வலியை ஏற்படுத்துகிறது.

நகச்சுற்று ஏற்பட்டால் நீங்கள் செய்யக் கூடியது என்ன? கொதியுள்ள நகத்தை சுடுநீரில் தினமும் 2 -3 தடவைகள் ஆழத்தி சில நிமிடங்கள் வைத்திருக்க வலி தணியும். ஆயினும் வலி தணியவில்லை எனில் மருத்துவரைக் காண வேண்டும்.

அவர் அதற்குரிய நுண்ணுயிர் கொல்லி மருந்து தருவார்.மிக அதிகமாக இருந்தால் அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி மருந்து போட்டு. சீழை அகற்றவும் கூடும்.நாட்பட்ட நகச்சுற்று
(Chronic paronychia)

இது சிறிது சிறிதாக தோன்றி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையாகும். ஒரு விரலின் நகத்தைச் சுற்றி மட்டுமின்றிப் பல நகங்களுக்கும் பரவக் கூடும். ஆயினும் திடீரேன ஏற்படும் நகச்சுற்று போல கடுமையான வேதனையை ஏற்படுத்துவதில்லை என்பதால் பலரும் அலட்சியம் செய்துவிடுவதுண்டு.

இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும்.

அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால் நகமானது கீழுள்ள நகப்படுக்கையில் பிரிந்து விடுவதும் உண்டு. அத்துடன் நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள் தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான அழகிய தோற்றத்தை இழந்துவிடும்.நகத்தின் நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல் பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் நகம் மீண்டும் வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தை மீண்டும் பெற ஒரு வருடம் கூட ஆகலாம்.

பொதுவாக அடிக்கடி கையை நனைக்க வேண்டிய தேவையுள்ள பண்ணைத் தொழிலாளர்கள், மீனவர்கள், சமையல் வேலை செய்பவர்களில் இத்தகைய நாட்பட்ட நகச்சுற்று அதிகம் ஏற்படுகிறது.

எக்ஸிமா, சொறியாசிச் போன்ற நோய் உள்ளவர்களிலும் இவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.அதேபோல நீரிழிவு நோயுள்ளவர்களிலும் தோன்றுவதற்கு வாய்ப்பு அதிகம்.

இதற்கான சிகிச்சை இலகுவானதல்ல. நோயுள்ளவர்கள் தங்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருள்களில் கைகள் தொடர்புறாது காப்பது அவசியம். நீண்ட நேரம் கைகள் நீரில் ஊறுவதைத் தவிர்க்க வேண்டும். நகம் வெட்டும்போது அருகில் உள்ள சருமத்திற்கு சற்றும் காயம் ஏற்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். விரல் சூப்புவதைத் தவிர்க்க வேண்டும். பொருத்தமான கையுறைகளை உபயோகிக்க வேண்டும்.

அவதானிக்க வேண்டியவை

அடிக்கடி நகச்சுற்று வருபவர்கள் அவதானிக்க வேண்டியவை

1. நகத்தையும் நகத்தைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாகப் பேண வேண்டும்.

2. நகம் மற்றும் விரல் நுனிகளில் காயங்கள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் நகம் மிக ஆறுதலாக வளருகிறது. காயம் ஏற்பட்டால் குணமடைய மாதக் கணக்கில் நேரம் எடுக்கும்.

3. நகம் கடிப்பது அறவே கூடாது. நகக்கண்களையும் சுத்தமாக வைத்திருப்து அவசியம்

4. கைகளை இயலுமானவரை ஈரப்பிடிப்பின்றி வெதுவெதுப்பாக வைத்திருங்கள்.

5. மண், சாணி, போன்ற எந்த அழுக்கான வேலை செய்தாலும், வேலை முடிந்ததும் சோப்பிட்டுக் கழுவுங்கள். கழுவும்போது நகக்கண்களுக்குள் சோப் தன்மை நீங்கும் வண்ணம் செம்மையாகக் கழுவ வேண்டும். பின் மென்மையான துவாயால் ஈரலிப்பை அகற்றுங்கள்.

6. உங்கள் சருமம் இயற்கையாகவே வரட்சியானது எனில் அவற்றில் நுண் வெடிப்புகள் ஏற்பட்டு கிருமி தொற்றக் கூடும். அத்தகையவர்கள் அவற்றை வரட்சியின்றி வைத்திருக்க மொயிஸ்டரைசிங் கிறீம்
(Moisturising Cream) உபயோகிப்பது அவசியம். அல்லது லோசன் (Lotion) உபயோகிக்க வேண்டும்.

7. ஸ்பிரிட், டெட்டோல் போன்றவற்றை உபயோகித்து சுத்தப்படுத்துவது கூடாது.

இவற்றிக்கு குணம் அடையாவிட்டால் மருத்துவ ஆலேசனை பெறுவது அவசியம் எனச் சொல்ல வேண்டுமா?

சிங்கார நகம் வேண்டுமா, சீழ் பித்த நகம் வேண்டுமா? உங்கள் அக்கறையிலும், பராமரிப்பிலும்தான் பெருமளவு தங்கியுள்ளது.டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »