Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நலவியல்’ Category

>

“கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.” என்ற கருத்துப்பட மதிப்பிக்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

“இதற்கு மருத்துவ ஆய்வு ஏன்? அனுபவ ரீதியாக நாங்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.” என நீங்கள் சொன்னால் அதனோடு ஒத்துப் போகவும் நான் தயாராகவே உள்ளேன்.

மேற் கூறிய கருத்தரங்கிற்குப் பின்னர் தடிமன், உடல் அலுப்பாக இருந்தபோது பரசிட்டமோல் போடுவதற்குப் பதிலாக மல்லிக் குடிநீர் குடித்துப் பார்த்தேன். பல மணிநேரங்களுக்குச் சுகமாக இருந்ததை அனுபவத்தில் காண முடிந்தது. சிறு வயதில் அம்மா அவித்துத் தந்த குடிநீரை பல தடவைகள் குடித்திருந்தபோதும் அதன் பலன்கள் பற்றி இப்பொழுது தெளிவாகச் சொல்வதற்கு முடியவில்லை.

இருந்போதும் இன்றும் தடிமன் காய்ச்சலுக்காக மருந்துவரிடம் செல்லும் பலர் அதற்கு முன்னர் மல்லி சேர்ந்த குடிநீர் உபயோகித்ததாகச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் என்ன? பலருக்கும் முதல் உதவியாக, கை மருந்தாக அது உதவுகிறது என்பதே. அதற்கு குணமடையாவிட்டால் நவீன மருத்துத் துறை சார்ந்தவர்களை நாடுகிறார்கள்.

இணையத்தில் தேடியபோது தடிமன் காய்ச்சல், மூட்டு வலிகள், உணவு செமிபாடின்மை, பசியின்மை, ஒவ்வாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க கொத்தமல்லி உதவும் எனப் பலரும் எழுதியிருந்தார்கள். இவை பெரும்பாலும் அனுபவக் குறிப்புகள். சில வீட்டு வைத்திய முறைகள். ஆயினும் இவை எதுவுமே விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது.வாசனைத் ஊட்டிகள் (Spices) பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தால் கொத்தமல்லி பற்றிய பதிவு மிகவும் தொன்மையானது எனத் தெரியவரும். பைபிளில் இது பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. நாம் அவற்றின் விதைகளையும், தளிர்களையும் சமையலில் பயன்படுத்துகிறோம்.

முன்னைய காலங்களில் பல்லி மிட்டாய்களின் உள்ளே சீரகம், மல்லி ஆகியவற்றை வைத்திருந்தமை சிலருக்கு ஞாபகத்தில் வரலாம். ஆயினும் கொத்தமல்லி என்பது விதை அல்ல. உண்மையில் அது காய்ந்த பழம் என்பதையும் குறிப்பட வேண்டும். தாய்லாந்தில் அதன் தளிரும், வேரும் சேரந்த பேஸ்ட் (Paste) உணவுத் தயாரிப்பில் முக்கியமானதாம்.

கொத்தமல்லி மிகவும் பாதுகாப்பான உணவு என்று நம்பப்பட்ட போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவ ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. 50 and 56 kDa, 11 kDa ஆகிய ஒவ்வாமையை ஏற்படுத்தும் (Allergns ) பொருட்கள் அதிலுள்ளனவாம். கொத்தமல்லி மாத்திரமின்றி அதைப்போன்ற அபியேசியே (Apiaceae) இனத்தைச் சார்ந்த வேறு பல கறிச்சரக்கு மூலிகைகளுக்கும் (Coriander, Caraway, Fennel and Celery) இவ்வாறு ஒவ்வாமை ஏற்படலாம் என அறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியதும் கொத்தமல்லி அலர்ஜிப் பண்டம் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். உணவு அலர்ஜி என்பது குறைவாகவே மக்களைப் பீடிக்கிறது. அவ்வாறான உணவு அலர்ஜிகளிலும் கறிச்சரக்கானது வெறும் 20சதவிகிதம் மட்டுமே. கறிச்சரக்கில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்களில் மல்லியும் ஒன்றுதான். எனவே மல்லியை அலர்ஜி என ஒதுக்க வேண்டியதில்லை.

ஆயினும் உணவு அலர்ஜி உள்ளவர்கள் தமது ஒவ்வாமைக்கான காரணங்களாக நண்டு, இறால், கணவாய், அன்னாசி, தக்காளி எனப் பட்டியல் இடும்போது கறிச்சரக்குக்காக இருக்குமா என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

மேலும் வாசிக்க:-

சின்னு ரேஸ்டி:- http://sinnutasty.blogspot.com/2008_09_01_archive.html

விக்கிபீடியா:- http://en.wikipedia.org/wiki/Coriander

Answers.com :- http://www.answers.com/topic/coriander

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல் 02.10.2008

Read Full Post »

>

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா? மாதவிலக்கு உங்கள் பணிக்குத் தொல்லையாக இருக்கிறதா?

அத்தோடு இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நற் சேதி.

உங்களைப் போலவே வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் என்பது ஒரு இடைஞ்சல். மாதவிடாய் சம்பந்தப்பட்ட உடல் உள உழைச்சல்களுடன் புன்னகை போர்த்திக் கொண்டு தொழில் செய்வது பெரும் துன்பம். அத்தோடு குழந்தைகள் பெறுவதையும் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இல்லையேல் தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதிருக்கிறது.

இத்தகையோருக்கு உதவுவதற்காக புதிய வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் அறிமுகமாயுள்ளன.


தொழில் புரிபவர்களுக்காக மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காக தமது மாதவிலக்கு குறைவாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இது உதவும்.

வேறு மருத்துவ காரணங்களுக்காக மாதவிடாயின் குருதிப்பெருக்கை குறைக்கவும், மாதவிடாய்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் உதவும்.

இந்த புதிய வகை மாத்திரைகளின் விஷேசம் என்ன? இவை மூன்று வகையானவை.

முதலாவது, வழமையான மாத்திரைகள் போல ஒரு மாதத்திற்கானது. இதனால் மாதாமாதம் மாதவிலக்கு வரும். ஆனால் குருதிப்போக்கு இருக்கும் நாட்களின் எண்ணிக்கை குறையும். அதனால் இரத்த இழப்பும் குறையும். இதை எப்படிச் செய்கிறாரகள்? வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை அட்டைகளில் 21 ஹோர்மோன் மாத்திரைகளும், 7 சத்து மாத்திரைகளும் இருக்கும். ஆனால் இதில் ஹோர்மோன் மாத்திரைகள் 24ஆக அதிகரிக்கப்பட்டு, இரும்புச் சத்து மாத்திரைகள் 4 ஆகக் குறைந்திருக்கும்.

இரண்டாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மாதவிலக்கு வரும். அதாவது வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே வரும். இதற்குக் காரணம் அதிலுள்ள ஹோர்மோன் மாத்திரைகள் 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்து மாத்திரைகளும் 7 ஆக இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்போது குருதிப் போக்கு 7 நாட்கள் வரை இருக்கலாம்.

மூன்றாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு மாதவிலக்கே வராது. ஏனெனில் அதில் வழமையான ஹோர்மோன் மாத்திரைகள் மட்டுமே இருக்கும்.

இம் மூன்று புதிய வகை மாத்திரைகளும் கரு தங்குவதைத் தடுப்பதைப் பொறுத்தவரையில் வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் போலவே நல்ல பலனளிப்பவை.

பக்கவிளைவுகள் இருக்காதா?

பாரிய பக்கவிளைவுகள் கிடையாது. வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கு உள்ளது போன்றே சில்லறை பக்கவிளைவுகளே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு மேல் இவற்றை உபயோகிக்கக் கொடுத்து பரிசோதித்தபோது இது தெரியவந்தது. ஆயினும் ஒரு சிலருக்கு கண்ணில் படுவதுபோல சிறிதளவு இரத்தப்போக்கு (Spotting) இருந்தது. மேலும் நீ;ண்ட காலம் பாவிக்கும்போதுதான் புதிய தகவல்கள் தெரியவரும்.

எங்கே கிடைக்கும் என்கிறீர்களா?

இப்பொழுது அமெரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மிக விரைவில் இங்கும் கிடைக்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 28.09.2008

Read Full Post »

>மூளை களைப்படைந்து சோர்வுற்றுவிட்டது. ஆயினும் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. ஒரு சிகரட் அடித்தால் சுறுசுறுப்பாகிவிடுவோம் என நினைக்கிறீர்கள். சுறுசுறுப்பு ஏற்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பாரதூரமானவை.

சுவாசப்பை, குரள்வளை, தொண்டைக்குழி, உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, மற்றும் கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமானது புகைப்பதினால் மிகவும் அதிகரிக்கிறது.

ஆனால் மிகவும் சாதாரணமான, விலை மலிவுள்ள வல்லரை “மூளையானது களைப்படைந்து திறமையாகக் கவனிக் குவிப்புச் செய்ய முடியாது போகும் வேளைகளில் அதனைத் தளர்த்தி சுமுகமாக்கக் கூடியது” எனக் கூறுகிறார் டொக்டர் வசந்தி தேவராஜா சிறீஸ்கந்தராஜா.

இன்னும் பல மூலிகைகள் பற்றியும் மிக விபரமாகக் கூறியுள்ளார் ‘ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற தனது புதிய நூலில். நாம் வழமையாக உணவில் உபயோகிக்கும் மஞ்சள், திராட்சை, கோவா, உள்ளி, வெண்காயம், அதிமதுரம், இஞ்சி, உள்ளி, வெண்காயம் போன்ற பல மூலிகைகள் பற்றியும், மருந்தாக மட்டும் அல்லது மருத்துவத்தில் பயன்படுத்தும் பட்டிப்பூ, பருத்தி, கற்றாளை, குங்கிலியம், போன்ற பல மூலிகைகள் பற்றியும் இங் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நூற்பரப்பில் அதுவும் முக்கியமாக மருத்துவம் மற்றும் நலவியல் சார்ந்த துறைகளைப் பொறுத்த வரையில் இந் நூலின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இந் நூலானது மருத்துவத்தின் ஒரு புதிய அலகை இலங்கையின் தழிழ் மருத்துவ நூல் வெளியீட்டுத் துறையில் அறிமுகப்படுத்துகிறது. இதனால் மருத்துவத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் (மருத்துவ, தாதிய, சுகாதார சேவைப் போதனாசிரியர்கள், ஆய்வு கூட பணியாளர்கள்), அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஊசாத் துணை நூலாகும்.

ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.

இரண்டாவது வகை பொதுமக்களை பயனாளர்களாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன் அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன். எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இன்னும் பல பெயர்கள் எழுதும் அவசரத்தில் விடுபட்டிருக்கும் என்பது உண்மையே. திரு.கா.வைத்தீஸ்வரன், கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சுகாதார ஆலோசகர்களும் நலவியல் இலக்கியத்திற்கு நிறையப் பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் அறிவியல் துறை சார்ந்த நூல்களின் வெளியிடப்படுவது மிகவும் குறைவாக இருந்த சூழலில் நலவியல் துறை மட்டும் விதிவிலக்கு எனலாம். ஆயினும் அத்துறையில் நூல் எழுதுவதும், வெளியிடப்படுவதும் போதுமானதாக இல்லை என்பதும் உண்மையே.

திருமதி திலகவதி தர்மராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக அன்னாரின் பெறாமகள் டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீகாந்தராஜாவினால் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற நூல் இன்று (11.08.2007) கொழும்பில் வெளியாகிறது. அந்த நூல் பற்றிய ஆய்வே இது.

இத்தகைய சூழலில் டாக்டர் வசந்தியின் நூல்கள் சற்று வித்தியாசமானவை. இவை மருத்துவத்தின் விசேட துறைகள் சார்ந்த ஆழமான நூல்களாகும். முன்னைய வெளியீடான முதுமை பற்றிய “முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்” என்பது முதுமை பற்றிய ஒரு பூரணமான நூலாகும்.

இப்பொழுது வெளியாகும் “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு” என்பது புற்றுநோய் பற்றியது. அதிலும் விசேடமாக ஒட்சிசனெதிரிகள் (Antioxidents) மூலமாக புற்றுநோயை எதிர் கொள்வது பற்றியது.
இது ஆய்வு நூல் அல்ல. ஆனால் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட பல ஆய்வுகளின் விஞ்ஞான பூர்வமான தகவல்களை ஒன்று திரட்டி, அவற்றை வகைப்படுத்தி இயலுமானவரை இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதியுள்ளார்.

புற்று நோயானது மனிதர்களின் உடலையும் உள்ளத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு நோயாகும். நோயாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி முழுச் சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுகிறது. எனவே நோய் வந்த பின் அதன் சிகிச்சைக்காக அலைவதை விட அது வராமல் தடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். அதனைப் பற்றியே இந் நூல் பேசுகிறது என்பதால் எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய நூல்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவர்கள் , தாதியர்கள், சுகாதாரப் போதனையாளர்கள் ஆகியோருக்கு மிகவும் உபயோகமானவை. அவர்கள் துறை சார்ந்த நவீன தகவல்களுடன் தங்களை இற்றைப்படுத்த இவை உதவுகின்றன.

அதே நேரத்தில் ஓரளவு விஞ்ஞானக் கல்வியறிவுள்ள எந்தப் பொதுமகனும் வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள எவரும் படித்துப் பயன்படக் கூடிய நூலாகும்.

இந்நூல் ஆறு முக்கிய அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.
(1) புற்றுநோயின் நிகழ்வு விகிதம்
(2) கலம் ஒன்றின் அடிப்படைக் கட்டமைப்பு
(3) புற்றுநோய்
(4) தாராள மூலவேர்களும் ஒட்சினெதிரிகளும்
(5) பொதுவான வகைப்பற்று நோய்கள்
(6) புற்றுநோய்க்கு எதிரான மற்றும் ஒட்சினெதிரிக் கீரைவகைகள்.

முதல் அத்தியாயத்தில் புற்றுநோயானது சமூகத்தில் எந்தளவு காணப்படுகின்றது? அவை எப்படியான புற்றுநோய்கள், பால் ரீதியாக எப்படிப் பாதிக்கிறது, அவற்றிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்களை, மஹரகம,கண்டி, காலி ஆகிய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களின் பதிவுகளின் அடிப்படையில் தருகிறது.

அத்துடன் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் புற்றுநோயின் பரம்பல் எவ்வாறு உள்ளது என்பதையும் சொல்கிறது.

இரண்டாவது அத்தியாயம் ஒரு கலத்தின் அடிப்படைக் கட்டமைப்புப் பற்றியது. எந்த ஒரு உயிரினதும் அடிப்படைக் கூறான கலம் என்பது என்ன? அதன் கூறுகள் யாவை? அவை எப்படிப் பிரிகை அடைகின்றன போன்ற அடிப்படைத் தகவல்களை விவரிக்கிறது. தொடர்ந்து டி.என்.ஏ யிலுள்ள தனியொரு மரபணுவில் (Gene) ஏற்படுகின்ற குறைபாடே புற்றுநோய் வருவதற்கான முதற்படி என விளக்குகிறார்.
ஆயினும் இம்மாற்றங்கள் புற்றுநோயாக உருவெடுக்க 1 முதல் 30 வருடங்கள் எடுக்கலாம். இதன் நீட்சியாக வயது ஏறும்போது புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் புற்றுநோய் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அவற்றின் ஆரம்ப அறிகுறிகளும், எச்சரிக்கை அடையாளங்களும் எவை? சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பேசுகின்றது.
அத்துடன், பிழையான உணவு முறைகளும், உடற்பயிற்சியின்மை, மித மிஞ்சிய மதுபாவனை, பரம்பரை அம்சங்கள் போன்றவை எவ்வாறு புற்றுநோய்க்கு காரணமாகின்றன போன்ற முக்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன.

நான்காவது அத்தியாயம், தாராள மூலவேர்களும் (Free Radicals)ஒட்சினெதிரிகளும் (Antioxidents) என பொதுமக்களுக்கு பரிச்சயமில்லாத விஞ்ஞானச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது நாளாந்த உணவு முறைக்கு உதவக் கூடிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தாவர உணவுகளில் உள்ள புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒட்சிசனெதிரிகள் பற்றி விவரமாகக் கூறுகிறது.

ஐந்தாவது அத்தியாயம், பொதுவாக எமது சமூகம் எதிர் நோக்கும் பல்வேறு புற்றுநோய்களைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு புற்றுநோயும் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் எவை? நோயை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம்தான் இந்நூலின் தலைப்புச் சுட்டும் கருத்தின் விரிவாகும். கார்சினோஜின் எனப்படும் புற்றுநோய்களைத் தூண்டும் பொருட்களுக்கு எதிராக மூலிகை மற்றும் உணவு வகைகள் பற்றிப் பேசுகிறது.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கீரைவகைகள், இலைகள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் உள்ள மருத்துவ குணாம்சங்கள் பற்றியும் அவை புற்றுநோய்த் தடுப்பிலும், சிகிச்சை முறைகளிலும் எவ்வாறு உதவுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக தேநீரில் உள்ள பொலிபெனோலிக் சேர்வை புற்றுநோயைத் தடுக்கும்.
இதேபோல வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, அதிமதுரம், கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, உள்ளி, திராட்சை, பூக்கோவா போன்ற இன்னும் பல மூலிகைகளின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.

திருமதி திலகவதி தர்மராசா நினைவாக வெளியிடப்படும். இந்நூலை வெளியிடுவதற்கு, நூலாசிரியரின் சிறிய தந்தையாராகிய க.மு. தர்மராசா உற்சாகமும் ஊக்கமும் அளித்துள்ளார். மறைந்த ஒருவரின் நினைவாக இத்தகைய ஒரு பயனுள்ள நூலை மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டு அதன் வருவாயை கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் சமூக அக்கறை கொண்ட செயலாகும் என்பதில் ஐயமில்லை.

இதேபோல தர்மராசா தனது மனைவியின் நினைவாக சென்ற வருடம் வெளியிட்ட “மூத்தோரைப் பராமரித்தல்’ பற்றிய நூலின் வெளியீட்டு விழா நிகழ்வுகள், நினைவுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் யாவற்றையும் வண்ணப்படங்களுடனும் தனி நூலாக வெளியீட்டு பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

‘முதியோரைப் பராமரித்தல்’ என்ற முன்னைய நூலும், இந்நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை செம்மையான தமிழாக்கம் ஆகும். அரிய கலைச் சொற்களைத் தேடி எடுத்து தமிழாக்கம் செய்த பணி பாராட்டத்தக்கது.

ஆங்கிலத்தில் நூலாக்கம் செய்யப்பட்ட போது எடுத்த அதே கவனிப்பும், ஆழமும் கருத்தூன்றிய செயற்பாடும் தமிழாக்கத்திலும் பேணப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். இந்நூலை மொழிபெயர்த்தவரான எட்வேட் பீரிஸின் திறமையும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

மூப்பியல் சான்றிதழ் பெற்ற வைத்திய கலாநிதி வசந்தி, இத்தகைய ஆழமும் விரிவும் கொண்ட நூலைத் தமிழில் தந்துள்ளமை தமிழ் நலவியல் எழுத்துத் துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் புதிய வீச்சையும், வேகத்தையும் கொடுத்துள்ளன. அவரது பணி தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு கிட்டவேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன்.

நூலின் பெயர்:- ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு

நூலாசிரியர்:- டொக்டர். வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜா (மூப்பியல் சான்றிதழ்)

நூலின் ஆய்வுரை:
டொக்டர் எம்.கே. முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல், வீரகேசரி, சுடரொளிஉங்கள்

Read Full Post »