Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நாடகம்’ Category

>இவடம் எவடம்
புங்கடி புளியடி
இவடம் எவடம் …

சிறுவயதில் நீங்கள் கண்களைப் பொத்தி விளையாடிய பருவகாலத்து நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வருகின்றனவா? எவ்வளவு இனிமையான நாட்கள்! காற்றைப் போல சுதந்திரமாக ஆடிப் பாடி விளையாடித் திரிந்த நாட்கள் அவை. ஆனால் இன்று?

இவடம் எவடம்
வீட்டின் படிப்பறை
இவடம் எவடம்
சிட்டுக்குருவியின் சிறை முகாமடி
சிட்டுக்குருவியின் வதை முகாமடி

என்றுதான் ஏக்கத்தோடு பாட முடிகிறது.

இது பா.இரகுவரன் எழுதிய சிட்டுக் குருவிகள் நாடகத்தின் ஆரம்பக் காட்சியில், விருத்த மொட்டில் பாடகர் பாடும் வரிகளாகும். ஆம்! இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கையானது பள்ளிக்கூடம், வீட்டின் படிப்பறை ஆகியவற்றுள் சுருங்கிவிட்டது. அதுவே சிறையும் ஆகிவிட்டது. ஏனைய பிள்ளைகளுடன் கூடிக் கூத்தும் கும்மாளமும் அடிப்பது எல்லாம் பழங்கனவாகி, கானலாகிக் கலைந்தும் விட்டன. அவர்களின் வாழ்க்கையானது இயந்திர மயமாகி விட்டதுடன் பிள்ளைப் பருவத்தின் கனவுகளையும் கற்பனைகளையும் கூட இல்லாதொழித்து விட்டன.

பா.இரகுவரன் ஒரு ஆசிரியர். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அடிப்படையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரான அவர் கலையுணர்வும் மென்னுணர்வுகளும் கொண்டவராதலால் நாடக அரங்கியலை சிறப்புப் பாடமாக படித்துப் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றுவதுடன் நாடக ஆசிரியராகவும், நெறியாளராகவும் கலைப் பங்களிப்பைச் செய்து வருகிறார். பாரம்பரிய நாடக மரபுகள் பற்றியும், பிரதேச வாழ்வியல் மரபுகள் பற்றியும் கள ஆய்வுகள் செய்து ஆவணப்படுத்தவும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50 க்கு மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இவற்றுள் குழந்தை சண்முகலிங்கம், மௌனகுரு, நிலாந்தன் ஆகியோரின் நாடகப் பிரதிகளும் அடங்கும். அண்மைக் காலமாக தானே நாடகங்களைப் புனைந்து மேடையேற்றுகிறார். இத்தகைய இவரது நாடகப் பிரதிகள் மட்டும் 15க்கு மேல் வரும்.‘கல்லூரி நாடகங்கள்’ என்பது இவர் தயாரித்தளித்த ஆறு நாடகப் பிரதிகளை உள்ளடக்கிய புதிய நூலாகும்.

ஆழ்ந்த சமூக நோக்கும், விரிந்த பார்வையும் கொண்டவர் அவர். ‘நாடகம் முதலான எந்தவொரு கலை வடிவமும் சொல்ல வந்த விடயத்தை, அனுபவத்தை உன்னத அழகியலுடன் படைக்கப்பட வேண்டும். பேரானந்த நிலையை மட்டுமின்றி, அடுக்கடுக்கான பல தளங்களில் சிந்தனையைத் தூண்டி நிற்பதாக அக் கலை வடிவம் அமைய வேண்டும். தன்னைப் பற்றியும், சக மனிதன் பற்றியும், சமூகம் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான புரிதலுக்கு கலைவடிவம் வெளிச்சமூட்ட வேண்டும். இதயத்தில் நெகிழ்வையும், அக ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்த விளையாத எந்தக் கலையும் பயனற்றது’ என தனது முன்னுரையில் கூறுவதிலிருந்து அவரது படைப்புகள் எத்திசை நோக்கி ஆக்கப்பட்டிருக்கும் என்பதை முன் கூட்டியே ஊகிக்க முடிகிறது.

முதல் நாடகமான ‘சிட்டுக் குருவிகள’; சிறு பராயத்து மாணவர்களை படி படி ஓயாமல் நச்சரித்து, கற்றல் நடவடிக்கைகளைத் திணித்து, பரவலான உலக அனுபவங்களை உணர விடாது தடுத்து, அவர்கள் ஆளுமைகளைச் சிதறடிப்பதை ஆணித்தரமாக, அதே நேரம் நகைச்சுவை அனுபவங்களோடு கலந்து கொடுக்கிறது. ‘குரு பீடம்’ நாடகமும் கல்வியோடு சம்பந்தப்பட்டதாயினும், உயர் வகுப்பு மாணவர்களின் ஆர்வங்கள் சற்றுத் திசை திரும்புவதையும், அதை மாற்றி கல்வி கற்றலில் ஈடுபட வைப்பதை நோக்கமாகக் கொண்டது. கடமை உணர்வு கொண்ட ஆசிரியரின் வாழ்வியல் கோலங்களும் இதில் காட்சியாகின்றன.

‘முற்றத்து வேம்பு’ சூழல் பாதுகாப்பில் தாவரங்களின் பங்களிப்புப் பற்றியது. தனிமனிதன் ஒருவனுக்கும் வேப்ப மரத்திற்கும் இடையேயான உறவின் பின்னணியில் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்லதம்பி மாஸ்டர் மேடையில் பார்வையாளர்களை ஈர்க்கும் பாத்திரமாக இருந்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. ‘அழிதல் காணும் பூவுலகம்’ மனிதன் சூழலைப் பேணாவிடடால் உலகத்தின் இயக்கமே முடங்கிவிடும் என்ற நிலையிருக்கையில் அதற்குக் பெருமளவு காரணமான அமெரிக்காவோ அதனைத் தட்டிக் கழித்து சனத்தொகை மிகுந்த ஏழை நாடுகளின் மேல் சுமையை ஏற்றுவதைத் தட்டிக் கேட்டும் தன்னார்வக் குழவினர் பற்றியது. இவ் இரு நாடகங்களுமே விஞ்ஞானக் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட நாடகங்களாகும்.

‘கணிதவியலாளன்’ நாடகமானது, ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதையை கருவாகக் கொண்டது. வாழ்வோடு இசைந்து போகாத வெற்று விஞ்ஞான அறிவு கொண்ட அறிவு ஜீவிகளின் அறிவோ அனுபவமோ நல்வாழ்விற்கு பயனற்றது என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. இன்னொரு நாடகமான ‘மெல்லத் தமிழ் இனி’ புலோலியூர் கந்தசாமி எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொலை தொடர்பு நிலையத்தில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் ஊடாக உறவினர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பதால் தழிழ்ச் சமூகத்தில் தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் நையாண்டியாகச் சித்தரிக்கிறது. சிந்திக்க வைப்பதும் கூட.

இந் நாடகங்கள் எழுத்துப் பிரதி என்ற வகையில் வாசிப்புத் திருப்தியைத் தருகின்றன. ஓவ்வொரு நாடகத்திற்குமான அரங்க அமைப்பு வரை படமாகத் தரப்பட்டுள்ளது. இவற்றோடு எமது கற்பனைக் குதிரையையும் சற்றுத் தட்டிவிடும் போது மேலான அனுபவம் கிட்டுகிறது. ஆயினும் நாடகங்கள் காட்சிப் புலனுக்கானவையே அன்றி வாசிப்புக்கானவை அல்ல என்பதை நான் முன்பு மேடையில் பார்த்த இரகுவரனின் நாடகங்களை நினைந்தபோது தெளிவாகியது. ஊமமும் வேசமும், ஆட்டமும் பாட்டமுமாக எங்கள் உணர்வுகளுக்குள் ஊறித் பொசிந்தவை அவை. இரகுவரன் என்ற நாடக ஆசிரியர், நெறியாளராகவும் கைகோர்க்கும் போதுதான் அற்புதமாக வெளிப்படுகிறார் என்பது பின்நோக்கிப் பார்க்கும் போது புரிகிறது.

இந் நூலில் அடங்கிய அனைத்தும் கல்லூரி நாடகங்கள். இவற்றிற்கும் ஏனைய நாடகங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வகுப்றைப் போதனைகளுக்கு வெளியேயான கற்றலாக, பரந்துபட்ட அனுபவங்களுக்கான களமாக, ஆளுமை வளர்ச்சியாக, அக உணர்வுகளின் வெளிப்பாடாக, கலை உணர்வுகளைத் தூண்டுவதாக அமைய வேண்டும். இவற்றை மனத்தில் கொண்ட, சமூக அக்கறை கொண்ட ஒருவரால் இந் நாடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

இந்த வகையில் பார்க்கும் போது ‘பாடசாலை அரங்கப் பொறுத்த வரையில்… இத்தனை பேருக்கு உட்பட்டதாக நாடகம் அமைய வேண்டும் என்பதை விட, இத்தனை பேருக்கு மேம்பட்டதாக நாடகம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையே பொருத்தமானது’ என நூலாசிரியர் குறிப்பிடுவதாவது தனது நாடகத்தின் வெற்றியை விட, அதிக மாணவர்களை அரங்கில் ஏற்றி அவர்களை ஆளுமையை விருத்தி செய்வதில் அக்கறை கொண்ட ஒருவராலேயே மொழியக் கூடியது.

‘அரங்கு அமைவிடத்திற்கான மொழி நடையும், பாத்திரங்களின் பெயர்களும் அமைவது சபையைக் கவரக் கூடியதாக அமைந்துள்ளது’ எனவும், ‘விஞ்ஞானக் கருத்துக்கள் நாடகங்களில் இழையோடி நிற்பது சமகாலத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது’ எனவும் ஹாட்லிக் கல்லூரியின் பிரதி அதிபர் திரு.மா.இராஜஸ்காந்தன் தனது அணிந்துரையில் எழுதியுள்ளதையும் இங்கு ஞாபகப் படுத்தலாம்.

‘அகவை அறுபதாகி இவ்வாண்டில் மணிவிழாக் காணும் இனிய நண்பர் ‘இலக்கியச் சோலை’ திரு.து.குலசிங்கம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம’, என குறிப்பிடப்ட்டிருப்பது மனதை நெகிழ வைக்கிறது. வடமராட்சி மண்ணில் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் தன் நிழலில் ஒதுங்க இடம் அளித்துப் போசித்து வளர்த்து விட்டு, பேசாமல் ஒதுங்கி நின்று பார்த்து மகிழ்ந்து, இலக்கிய ரசனையில் மட்டுமே சுகம் காணும் ஒருவருக்கு நூலைச் சமர்ப்பித்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

இது இரகுவரனின் மூன்றாவது நூலாகும். முதலாவது நூலான ‘ஊரும் வாழ்வும்’ என்பது தும்பளைக் கிராமம் பற்றிய சமூகவியல் ஆவணமாகும். ‘பண்டைத் தமிழ் நாடகங்கள்’ என்ற இவரது இரண்டாவது நூல் நாடகத் துறை மாணவர்களை இலக்காக் கொண்ட முயற்சி.

பல்வேறு இடறுகளிடையே சிக்கித் திணறும், நவீன அச்சக வசதிகள் அற்ற, யாழ் மண்ணிலேயே வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட ‘கல்லூரி நாடகங்கள்’ என்ற இந் நூலின் வரவு காலத்தின் தேவையாகும். மல்லிகையை பள்ளிக் கொப்பியில் அச்சடித்து வெளியிட்ட ஜீவாதான் ஞாபகத்துக்கு வருகிறார். உயிரச்சம் நிலவும் சூழலிலும் கலையார்வம் துளிர்த்து நிற்பது வெளியே நிற்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். ஆனால் இதுதான் எமது மக்களின் நிஜமான வாழ்வு.

இந் நூலின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 8ம் திகதி தும்பளை ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் ஹாட்லிக் கல்லூரி அதி;பர் திரு தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரபல எழுத்தாளர் தெணியான் கலந்து கொள்ள யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பாரம்பரிய நாடகக் கலையில வழித் தோன்றலும் நடிகருமான கலாமணி வெளியீட்டுரையை நிகழ்த்தினார். மெதடிஸட் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி செல்வமலர் சுந்தரேசன், வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் திரு ஜெகநாதன், பருத்தித்துறை இலங்கை வங்கி முகாமையாளர் ஆனந்தநடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்புகளுக்கு:-
பா.இரகுவரன்,
பிராமண ஒழுங்கை,
தும்பளை,
பருத்தித்துறை.
இலங்கை.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி-: மல்லிகை

Read Full Post »