Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நார்ப்பொருள்’ Category

>’நான் வெள்ளை அரிசிச் சோறுதான் சாப்பிடறனான். தவிட்டரிசிச் சோறு பிடிக்காது. செமிக்காது. வயிறு பொருமிக் கொண்டிருக்கும்.’ என ஒதுக்கி வைத்த பலரும் இன்று அது பற்றி மீள யோசிக்க வேண்டியிருக்கிறது.

தீட்டிய அரிசியில் தவிட்டுப் பொருள் இருக்காது

ஏனெனில் நீரிழிவு, கொலஸ்டரோல், கொழுத்த உடம்பு என நோய்களின் எண்ணிக்கையை அவர்களில் பலர் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கிய உணவைக் கைவிட்டதின் பலன் அது.

பெரும்பாலான இள வயதினர் சோறே வேண்டாம் எனச் சொல்லி நூடில்ஸ், பிட்ஷா, மக்ரோனி, கொத்து எனச் சொகுசு உணவுகளுக்கு மாறிக் கொண்டிருப்பது மேலும் கவலைக்குரியது.

அதனால்தான் பெற்றோர்களை முந்திக்கொண்டு பிள்ளைகள் இயற்கைக் காரணங்களால் மரணமடையும் காலம் முதல் தடவையாக உலகில் வந்திருக்கிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது நீரிழிவு உள்ள பெண்களைப் பற்றியது.
7822 பெண்களின் மருத்துவக் கோவைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன.
210,000 பெண் தாதியர்கள் பற்றி
1976 ல் ஆரம்பிக்கப்பட்ட ((Nurses Health Study)
பாரிய ஆய்வின் ஒரு அங்கம்தான் இது.

அதன் பிரகாரம் தமது உணவில் அதிகளவு தவிடு (Bran) சேர்த்துக் கொண்ட நீரிழிவு நோயாளர்கள்

 • இருதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்பு ஏனையவர்களைவிட 35 சதவிகிதத்தால் குறைகிறதாம். 
 • அத்துடன் வேறு எந்த மருத்துவக் காரணங்களால் மரணமடையும் சாத்தியமும் 28 சதவிகிதத்தால் குறைகிறது என்கிறார்கள். 

மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏனையவர்களை விட மும்மடங்கு அதிகம் என்பதால் இது முக்கியமான செய்தியாகும்.

மாப்பொருள் உணவு எமது உணவில் முக்கிய பகுதியாகிறது. அதில்தான் இந்தத் தவிட்டுப் பொருள் இருக்கிறது. இது பற்றி மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள் மாப்பொருள், Carbohydrates

தவிடு சார்ந்த உணவு எமது பாரம்பரிய முறையாகும். தவிடு அரிசியில் இருப்பதை நாம் அறிவோம். அது அரிசியில் மாத்திரமல்ல கோதுமை, குரக்கன், சாமை போன்ற அனைத்துத் தானியங்களிலும் தவிடு உள்ளது.

தவிட்டில் விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை அதிகளவில் செறிந்துள்ளன. இவை எமது உடலாரோக்கியத்திற்கு மிகுந்த பலன் அளிப்பவை.

தீட்டாத தானியங்களில்தான் (Whole Grains) இவை அதிகம் உண்டு. அரிசியைப் பொறுத்தவரையிலும் அவ்வாறுதான். அதிலும் தீட்டாத நாட்டரிசி(புளுங்கல் அரிசி) யில் அதன் செறிவு அதிகம்.

ஆனால் இன்று அரிசி மில்காரர்கள் அரிசியை நன்கு தீட்டி வெள்ளை அரிசி போலவே எமக்குத் தருகின்றனர்.

தவிட்டை மாட்டுத் தீவனமாகி இரட்டை வருமானம் பெறுகின்றனர்.
மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம்தான்.
ஆனால் மனிதர்களின் நலக்கேட்டின் வழியல்ல.

இந்தத் தவிட்டுப் பொருளானது எமது இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் உள்ள கலங்களில் அழற்சி ஏற்படுவதைத் தடுத்து செயற்திறனை இழக்காது பாதுகாக்கிறது என முன்னொரு ஆய்வு கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் அறிய கீழுள்ள வழியை கிளிக் பண்ணுங்கள்.
Dietary prevention of atherosclerosis: go with whole grains

அதாவது அவை எமது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதில் இரத்தம் உறைந்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த ஆய்வு பெண்கள் பற்றியதுதான். ஆயினும் அது தானியங்களைத் தீட்டாமல் முழுமையான நிலையில் தவிட்டுடன் உண்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்கிறது.

முக்கியமாக நீரிழிவாளரின் வாழ்நாளின் நீடிப்பைப் பேசுகிறது. ஆனால் அது எவருக்குமே பொருந்தக் கூடியதுதான். அதை நாங்களும் பின்பற்றினால் எமது வாழ்வும் நோயின்றி பல்லாண்டு காலம் வாழ வகிக்கும்.

எமது மூதாதையர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் தெரியாது. ஆனால் இயற்கையின் ஓட்டத்தில் அதற்கு முரண்படாது வாழ்ந்தார்கள்.

 • ஆரோக்கியமான உணவுகளை உண்டார்கள். 
 • அளவோடு உண்டார்கள்.

அதனால்தான் அவர்களை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை நெருங்கியது குறைவு.

ஆதாரம்:- Circulation:- Journal of American the American Heart Association May 2010.

 தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 16.06.2010 வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>காலையில் பாண், இரவில் கடையில் வாங்கிய கொத்து அல்லது நூடில்ஸ். பல வீடுகளில் தினமும் இவ்வாறு கடை உணவுதான்.

சமைப்பதற்கும் நேரம் இல்லை.

மதியம் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு, அதுவும் சமைப்பதற்கு இலகுவான அதிக காஸ் செலவாகாத நன்கு ‘பொலிஸ்’ பண்ணிய சம்பா அரிசி. அல்லது அதிலும் சுலபமான நூடில்ஸ்.

இவ்வாறுதான் காலம் கழிகிறது

இன்றைய வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவிட்டது. நீண்ட வேலை நேரங்கள், கணவனும் மனைவியும் உழைக்கப் போக வேண்டிய நிர்ப்பந்தம், பிள்ளைகளின் படிப்பு ரியூசன் என நேரத்துடன் போராட வேண்டிய வாழ்க்கை. மிகுதியுள்ள சொற்ப நேரம் தொலைக்காட்சியில் முடங்கிவிடுகிறது. எனவே சமையலிலும் சாப்பாட்டிலும்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

இதனால் எமது பாரம்பரிய உணவுகளான குத்தரிச் சோறு, தவிட்டுமா இடியப்பம், அரசிக் கஞ்சி, ஒடியல் பிட்டு, குரக்கன் ரொட்டி, களி போன்ற பலவும் சிலருக்கு மறந்தே போய்விட்டன.
இடியாப்பம் நன்றி :-www.roshani.co.uk/…/recipes-vegetables/

குடும்பமாகக் கூடியியிருந்து சாப்பிடும் வழக்கம் அருகிக் கொண்டே போகிறது. உணவு வேளையின் கலந்துரையாடலும், பகிர்ந்து உண்ணும் ஆனந்தமும் நழுவி ஓடிவிட்டன.

உடல் உழைப்பு என்றால் என்னவென்று கேட்கும் காலமாயிற்று. உடற் பயிற்சிக்கும் நேரம் கிடையாது.

பாரம்பரிய உணவுகளின் நன்மை என்ன?

அவற்றின் முழுமைத் தன்மையிலிருந்து கிட்டுகிறது.
அதாவது அவை அதிகம் சுத்திகரிக்கப்படாதவை.
அவற்றில் மாப்பொருள், விட்டமின், புரதம், கொழுப்பு, கனிமம் யாவும் உள்ளன. எதுவுமே அதிகமல்லாமல் தேவையான அளவில் மட்டும் உண்டு.
நார்ப்பொருள் மட்டுமே அதிகம் உண்டு.
உணவில் நார்ப்பொருள் என்பது முருங்கைக்காய், வாழைக்காய் தோல் போன்றவற்றிலிருக்கும், நாம் வெட்டி நீக்கும் நார் அல்ல.
மாறாக சப்பித் துப்பும் நாருமல்ல.
உணவோடு உணவாகச் சேர்ந்திருப்பவை.

அரிசியின் தவிடு நல்ல உதாரணம்.

இது குத்தரிசியில் மாத்திரமல்ல, சம்பா அரிசியிலும் இருக்கவே செய்கிறது. ஆயினும் நன்றாகத் தீட்டப்பட்டால் அவை மாட்டுத் தீவனமான தவிடாக அகன்று விடும்.
நன்றாகத் தீட்டப்படாத சம்பா அரியிலும் சற்று மஞ்சளடித்து போல இருப்பதும் தவிடு தான்.
மாறாக நன்கு தீட்டப்பட்ட குத்தரிசியில் குறைவாகவே இருக்கும். அரிசியில்

மாத்திரமின்றி பழங்களிலும், காய்கறிகளிலும் கூட நார்ப்பொருள் உண்டு.

நார்ப் பொருள் என்பது என்ன?

நார்ப் பொருள் என்பதை எமது உணவில் உள்ள சக்கை எனலாம். அதாவது எமது உடலால் ஜீரணிக்க முடியாதவையும், உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட முடியாதவையும் ஆகும். உணவில் உள்ள மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியன உணவுக் கால்வாயில் சமிபாடடைந்து உறிஞ்சப்பட்டு உடல் வளர்ச்சிக்கும், செயற்பாட்டிற்குமான போஷணைப் பொருட்களைக் கொடுக்கின்றன.

ஆனால் நார்ப் பொருள் சக்கையாக மலத்துடன் வெளியேறுகிறது.

அப்படியாயின் அது ஏன் எமக்குத் தேவை?

உணவில் உள்ள நார்ப்பொருள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

 1. கரையும் நார்ப்பொருள் (soluble fiber).
 1. கரையாத நார்ப்பொருள் (insoluble fiber).

 • கரையாத நார்ப்பொருளானது, உணவு உணவுக்கால்வாய் ஊடாக இலகுவாகப் பயணம் செய்வதற்கும் மலம் நன்றாக வெளியேறுவதற்கும் உதவுகின்றது.
 • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், மலம் ஒழுங்காகக் கழியாதவர்களுக்கும் இது உதவும்.
 • அத்துடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும்.

தீட்டாத அரிசி, கோதுமை, வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் உண்டு.

கரையும் நார்ப்பொருளானது நீரில் கரைந்து ஜெல் போன்ற ஒரு பொருளாக மாறுகிறது. இது குருதியில் கொலஸ்டரோல், சீனி ஆகியன அதிகரிப்பதைத் தடுக்கவல்லது. அவரை இன உணவுகள், கரட், புளிப்புத்தன்மை உள்ள பழங்கள். ஆப்பிள், ஓட்ஸ், பார்லி, psyllium போன்றவற்றில் தாராளமாகக் கிடைக்கும்.

நார்ப் பொருட்கள் மலச்சிக்கலை நீக்குகிறது என்றோம்.
இதனை அது இரண்டு வழிகளில் செய்கிறது.

 1. நார்ப்பொருள் செமிபாடடையாதது என்பதால் மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
 2. இரண்டாவதாக மலம் இறுகாமல், மெதுமையாக இருப்பதற்கு உதவுகிறது. இதனால் முக்கி வேதனைப்பட வேண்டிய தேவை இன்றி மலம் தானாகவே சுலபமாக நழுவி வெளியேறும்.

‘இது செமிபாடடையாது என்றும், சளிக்கு கூடாது’ என்று வயதானவர்களும், ஆஸ்த்மா போன்ற சளி நோயுள்ளவர்களும் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அத்துடன் பத்தியம் பார்த்து பல்வேறு மரக்கறிகளையும் சாப்பிடாது ஒதுக்குகிறார்கள்.

வேறு சிலர் சோயா, கடலை, பயறு, உழுந்து, பயிற்றை, போஞ்சி, அவரை போன்ற சத்துணவுகள் பலவற்றையும் ‘வாய்வுச் சாப்பாடு, சமிப்பதில்லை’ என ஒதுக்கிவிடுகிறார்கள்.

இவை தவறான கருத்துக்கள். இவற்றைக் குளிர் என்றும், செமிபாடடையாது எனவும் ஒதுக்குவது பிழையானது. பழங்கள், காய்கறிகள் போன்றவை சளியைத் தூண்டாது.

அத்துடன் செமிபாடு அடையாது என அவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள் உண்மையில் மெதுவாகச் செமிபாடு அடைவதால் நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற தீவிர நோய்கள் அதிகரிக்காமல் பாதுகாக்கின்றன.

அதிகமாகச் சப்பிச் சாப்பிட வேண்டியவை நார்ப்பொருளுள்ள உணவுகள்.

 • அதனால் உண்பதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும்.
 • அவசரப்படாது ஆறுதலாக நன்கு மென்று உண்பது உடலுக்கு நல்லது.
 • நேரம் எடுப்பதால் தேவையற்ற வீண் பசியை தணிந்துவிடும்.
 • தேவைக்கு அதிகமாக உண்ண வேண்டியிருக்காது.
 • அத்தகைய உணவுகள் வயிறை நிரப்புவதால் நீண்ட நேரத்திற்கு மீண்டும் பசியெடுக்காது.
 • நார்ப் பெர்ருள் உணவுகளில் கலோரிச் சக்தியும் குறைவு.
 • எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது எனலாம்.

மாறாக இன்று நாம் உண்பவை என்ன?

பாண், பேஹர் பணிஸ், பிஷா, நூடில்ஸ், கொத்து என சுலப உணவுகள்.

போதாக்குறைக்கு இடையே கொறிக்க ரோல்ஸ், கட்லற், பற்றிஸ் மிக்சர், பகோடா, வடை, ஐஸ்கிறீம் போன்றவை.

இவற்றில் மாப் பொருளும் எண்ணெய் மாஜரீன், அஜினமோட்டோ போன்றவையும் தானே உள்ளன.

வெற்றுக் கலோரிக் குண்டுகள்!

நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை.

உதாரணத்திற்கு நூடில்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஏறத்தாள 70சதவிகிதம் மாப்பொருளும், 17 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. அதிலுள்ள உப்பு 1500 மிகி முதல் 3000 மிகி வரையாகும்.

இது அமெரிக்க அரசு அங்கீகரித்த அளவை விட 60 சதவிகிதம் அதிகமாகும்.
உப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள இறுக்கமான காதலை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

இத்தகைய வெற்று கலோரிக் குண்டுகள் என்ன செய்யும்?

உடலை ஊதச் செய்யும். நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்றவற்றை வா வாவென அழைக்கும்.

மூளையிலும், இருதயத்திலும் இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து
மரணத்தை முற் கூட்டியே வரவேற்கும்.

உங்கள் தேர்வு எது?

பாரம்பரிய உணவா? நவ நாகரீக உணவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப வைத்தியர்

Read Full Post »