இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்
ஞானசேகரனின் ‘எரிமலை’
‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ஏறி உள்ளே குதித்தான். வெளியே நின்ற இளைஞன் தன் தோளின்மேல் சாய்திருந்தவனைத் தூக்கி மதிலின் மேலால் அவன் உள்ளே இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு தானும் உள்ளே குதித்தான்.
டொக்டர் மகேசன் பதற்றத்துடன் ‘ஆர் நீங்கள் என …’
டொக்டர் மகேசனில் என்னை நான் இனங் இனங்கண்டு நாவலில் மூழ்கிப் போனேன்.
எத்தனை கெடுபிடியான நாட்கள். பதற்றமும் சஞ்சலமும் பயத்துடன் கூடவே ஆட்கொள்ள கையறு நிலையில் இயங்கிய பொழுதுகள். இயக்கங்கள் பல பன்றிபோல குட்டிபோட்டு தான் தோன்றித்தனமாக நடந்த காலம், துரோகி, காட்டிக்கொடுப்பவன் போன்ற முத்திரைகளுடன் தெருநாய் போல சுடப்பட்ட அப்பாவிகளின் குருதி வீதிகளில் செங்கம்பளம் போர்த்திய காலம். டிரக்குகளில் செல்லும் அரச ராணுவத்தினர் வீதியால் செல்லும் பொதுமக்களை அடித்து குருதி கக்கவைத்த பொழுதுகள். சுற்றிவளைப்புகள் கைதுகள் போன்ற அடாவடித்தனங்கள் மலிந்து கிடந்தன.
வங்கிக் கொள்ளையுடன் தான் கதை ஆரம்பிக்கிறது. எனது மருத்துவமனைக்கு அரை மைல் தூரத்தில் இருந்த புலோலி ப.நோ.கூ.ச வங்கியில் நடந்த கொள்ளை நினைவில் வந்தது. திகில் நிறைந்த பொழுதுகள்.
ஆம். மருத்துவர்கள் அதுவும் தனியார் வைத்தியர்கள் மத்தளம் போல இரு பக்க இடிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமாக இருந்தது.
80 களின் நடுப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய பதற்றமான அரசியல், பாதுகாப்புச் சூழலை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல்தான் ஞானசேகரின் எரிமலை. டொக்டர் மகேசன் போராளி ஒருவனின் காயத்திற்கு, இராணுவத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அது தொடர்பான சம்பவங்களுமே நாவலின் முக்கிய கதைப் பொருளாகும்.
ஆனால் அதற்கு அப்பால் இனப்பிரச்சனையின் அடிமுடி தொடும் விரிந்த நாவல். ‘எரிமலை’ அனல் வீச ஆரம்பித்த வேளை. கதைச் சம்பவங்கள் குடாநாட்டிற்குள் நடப்பவையாயினும் நாடளாவிய அரசியல் பரிமாணம் கொண்ட படைப்பு.
இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, எமது பிரச்சனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
ஆயினும் இளைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டியது. ஏனெனில் இளைஞர்கள் பலருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்கும் இடையேயான போர் பற்றிய செய்திகளும் அனுபவமும் மட்டுமே உண்டொழிய பிரச்சனையின் ஆணிவேரை கண்டுணரும் வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை. இந்த நாவல் அவற்றை வெறும் தகவலாக அன்றி உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக, நாவலின் பேரங்கமாக, வரலாற்று ஆவணமெனத் தருகிறது. அதே நேரம் விறுவிறுப்பாக நகரவும் செய்கிறது. ஆரவாரமற்ற தெளிவான நடையுடன் சுவையாக வாசிக்கத் தூண்டுகிறது
உண்மையில் அவற்றை வெளிபடுத்தும் வண்ணம் சிருஸ்டிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்கு சான்றாக அமைகிறது. முக்கியமாக செல்லையா மாஸ்டர், மற்றும் சமூகவியல் பேராசிரியையான திருமதி விமல்சிறி, தொழில் முகாமைத்துவ ஆலோசகர் திரு விமல்சிறி ஆகியேருக்கு இடையேயான உரையாடல் முக்கியமானது. செல்லையா மாஸ்டர் தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடும், சரித்திர ரீதியான அறிவும், அகிம்சை ரீதியான அணுகுமுறையும் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அபிமானி. திருமதி விமல்சிறி பேராசிரியர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட.
இந்த உரையாடல்கள் ஊடாக இனப்பிரச்சனையின் சரித்திரம் மட்டும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒரு பக்க பார்வையாகச் சொல்லப்படவில்லை என்பது நாவலின் பலமாக உள்ளது.. தமிழ் மக்களின் விடுதலை ஆர்வமும் அரசியல் சுதந்திர வேட்கையும் வெளிப்படுத்தப்படும் அதே நேரம் சிங்கள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
48ல் சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்குள் கிழக்கு மகாணத்தில் பட்டிப்பளையை கல்லோயா வாக்கி சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பித்த தமிழர் மீதான நில ஆக்கிமிப்பு முதல் தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என தொடர்ந்தமை எவ்வாறு தமிழர் மீதான ஒடுக்குமுறையாக விஸ்வருபம் எடுத்தது என்பதை நூலாசிரியர் மாஸ்டர் ஊடாக வரலாற்றுப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு புறம், தீவிரவாத சிந்தனைகளை கொண்ட செல்லையா மாஸ்டரின் மகன் ஊடாக விடுதலைப் போராளிகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
வெற்றிலை குதப்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியவள்- கிழவி பாத்திரம்- மனதோடு ஒட்டிக் கொள்கிறாள். இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிரான அவளது கோபமும், போராளியை மறைப்பதற்கு அவள் காட்டிய சமோசித புத்தியும் மவைக்க வைக்கிறது. அன்றிருந்த சாதாரண மக்களின் மனஉணர்வுகளுக்கு அவளை ஒரு முன்மாதிரியாகவும் சொல்லலாம் போலிருக்கிறது.
யதார்த்தத்தை மீறி உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் இனமுரண்பாடு விரிவடையுமே அன்றி மக்களுக்கு நன்மை தராது. எனவே கூடிய வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்ற நடுநிலைச் சிந்தனை டொக்டர் மகேசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரன் ஊடாக வெளிப்படுகிறது.
இன்னொரு விதத்தில் பார்க்கும்போது நாவலின் நாயகனாக சந்திரனை அல்லது டொக்டர் மகேசனையே கொள்ள வேண்டும் என்ற போதும் இனப்பிரச்சனையே நாவலின் பாடுபொருளாக அமைந்துவிடுகிறது.
வாக்கு வேட்டை அரசியல்வாதிகளின் காலத்திற்கு முன்னர் தமிழ் சிங்கள் மக்களிடையே நெருக்கமான உறவு இருந்தது, அந்நிய ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இனத்துவேசம் இருந்தத்தில்லை. எல்லாளன் துட்டகமுனு போரனது ஆட்சி அதிகாரத்திற்கு ஆனதே ஒழிய இனரீதியானது அல்ல. அதனால்தான் எல்லாளனுக்கு சமாதி அமைத்து மக்களை வணக்கம் செலுத்தச் செய்தான் போன்ற விடயங்களையும் நாவல் உரையாடல் ஊடாக தொட்டுச் செல்கிறது.
தமிழ் சிங்கள் உறவானது திருமண ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததை பற்றி மிக நுணுக்கமாக நூலாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார். இரசித்து வாசித்தேன். இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கன் ஒரு தமிழன் என்பது முதல் பல சிங்கள அரசர்களின் பட்டத்து ராணிகளாக தென்னிந்திய தமிழ் ராசகுமார்களே இருந்திருப்பதை நாங்கள் அறிவோம்.
அரச மட்டத்தில் மட்டுமல் சாதாரண மக்களிடையே கூட அத்தகைய மண உறவுகள் இருந்திருக்கின்றன.
‘எனது பாட்டியின் படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதில் அவர் தமிழ் பெண்களைப் போலத்தான் சேலை அணிதிருந்தார். சில நகைகள் கூட தமிழ்ப்பெண்கள் அணியும் நகையை ஒத்திருக்கின்றன…..’
‘ஒரு வேளை உங்கள் பாட்டி ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்…’
ஆசிரியர் தன் கருத்தை வாசகர்களிடம் திணிக்காமல் பாத்திரங்களின் உரையாடல் ஊடாக நாசூக்காக சொல்லியிருப்பதை கருத்தூன்றி வாசித்தால் நீங்களும் இரசிப்பீர்கள்.
அதே போல கதை நடக்கும் காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட, சிங்கள் தமிழ் கலப்புத் திருமண உறவுகள் எவ்வளவு பிரச்சனை மிக்கதாக இருக்கிறது என்பதை வேறொரு இடத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். சந்திரன் அனுலாவை வெளிப்படையாக வைபவரீதியாக திருமணமாகச் செய்யாமல் ரெஜிஸ்டர் ஆபீசில் செய்ய இருப்பதை சொல்வதன் மூலம் அவ்வாறு உணர வைக்கிறார்.
அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு பக்க பார்வையே கொடுப்பதால் பல சிங்கள் மக்களுக்கு இராணுவத்தினரின் கொடிய முகம் தெரிவதில்லை. கதாநாயர்கள் என்று அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அனுபவித்தால்தான் அவர்களின் கொடுர முகத்தை திருமதி விமல்சிறி போல உணர்வார்கள்.
‘அவன் (இராணுவ வீரன்) சூட்கேசை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கூடையை கிளறத் தொடங்கினான். அப்போது சுடுதண்ணிப் போத்தல் கூடையிலிருந்து வெளியே நழுவி ரோட்டில் விழுந்து நொருங்கியது. அதனைக் கவனித்த திருமதி விமல்சிறிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
‘இவர்களுக்கு கண் கூடத் தெரியாது போலிருக்கிறது. காட்டுமிண்டித்தனமாக நடக்கிறார்கள்.’ பட்டால்தான் புரிகிறது என்பதை நிகழ்வுகளுடாக சுட்டிக் காட்டுகிறார். நேரடியாகச் தன் கருத்தை வலிந்து புகுத்தவில்லை.
நோயாளிகளில் அக்கறை கொண்ட அவர்களது பிரச்சனைகளை புரிந்து நடக்கும் பாத்திரமாக டொக்டர் மகேசனை படைத்திருக்கும் அதே நேரம் அன்று நிலவிய மருத்துவ முறைகள், அன்று உபயோகிக்கப்பட்ட மருந்துகள் என பதிவு செய்யப்படிருப்பதை பார்க்கும் போது அது அந்த காலகட்டத்து நினைவுகளில் என்னை நீந்தித் திளைக்க வைத்தது.
ஞானசேகரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை அவரது ஆரம்ப நாவலான குருதிமலையிலிருந்து அறிந்திருக்கிறோம். இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக உருவாவதற்கு அவரது எழுத்தாளுமையுடன், மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் உதவியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றிகும் மேலாக அவரது நிகழ்கால அரசியல் அறிவும் வரலாற்று ஈடுபாடும் இந்த நாவல் காலத்தைக் கடந்து நின்று நிலைக்க வைக்கின்றது.
இந்த நாவல் சிங்கள மொழிபெயர்ப்பில் வர இருப்பதாக அறிகிறேன். பக்கம் சாராமல் நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதால், இப் பிரச்சனையில் அவர்களுக்கு அன்னியமான பல்வேறு முகங்களையும் அறிந்த கொள்ளவும் அவர்கள் பார்வையை விரிவடையவும் செய்யும் என்பதால் வரவேற்கத்தக்கது. துறைசார்ந்தவர்களை மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படைப்பு.
நீங்களும் கட்டாயம் படியுங்கள். சுவையும் பயனும் இணைந்து கிடைக்கும் இத்தகைய படைப்புகள் அத்திபூத்தாற் போலத்தான் படைக்கப்படுகின்றன.
நாவலைப் படைத்த ஞானசேனரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எம்.கே.முருகானந்தன்
0.00.0