>எமது பாடசாலையின் அதிபராக சென்ற 5 வருடங்களாக பணியாற்றிய திரு.மு.கனகலிங்கம் அவர்கள் சென்ற 20.06.2011 முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்ட செய்தியை அறிவிக்கிறேன்.
புதிய அதிபராக திரு.பொன்னையா பொன்னம்பலம் பதவி ஏற்றுள்ளார். புதிய அதிபர் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்.
நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த காலத்தில் எமது பாடசாலையில் 15.03.2006 பொறுப்பேற்றார் அதிபர். நாட்டின் நிலையைக் கருத்திற் கொள்ளாது பாடசாலையின் வளர்ச்சி ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்.
உடனடியாக பாடசாலை சூழலில் வாழும் மக்களை அழைத்து நல்லுறவை ஏற்படுத்தியமை ஞாபகத்திற்கு வருகிறது. பழைய மாணவர் சங்கக் கூட்டம் அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஆகியவற்றைக் கூட்டியபோது பருத்தித்துறையில் இருந்த என்னையும் கலந்து கொள்ள அழைத்தது நேற்று நடந்தது போலிருக்கிறது.
திரும்பவும் நான் கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும் அவரது வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பழைய மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்ததும் அதன் பின்னர் உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு பாடசாலை வளரச்சிப் பணியை தொடர முடிந்ததும் இனிய நினைவாகும்.
பாடசாலைக்கு பெரிய இரட்டைக் கதவும், அதற்கான வளைவும் அமைத்தல், வருடாந்த ஞாபகார்த்தப் பரிசுகள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு பரிசுகள் வழங்கல், பரிசளிப்பு விழாவிற்கான பரிசில் நூல்கள் அளித்தல், தொலைபேசி இணைப்பு, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்,கணனிகொள்பனவு, கோவைகளை கணனி மயப்படுத்தல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், பாலர் வளாகத்திற்கான புதிய இரும்பு வேலி, கிணறுகளுக்கு சுகாதாரமான மூடிஅமைத்தல், நூலகம் அமைத்தல், அதற்கான தளபாடங்கள் பெறுதல், சைக்கிள் தரிப்பிடம் அமைத்தல் என எழுதி முடிக்க முடியாத அளவிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 |
சென்ற வருடம் நான் பாடசாலை சென்றபோது |
இவ்வளவு பணிகளைச் செய்த மனநிறைவுடன் அதிபர் இடமாற்றம் பெற்று மணற்காடு பாடசாலைக்குச் சென்றுள்ளார். உயர்தராதரம் பெற்ற அவரை, எமது சுயநலம் கருதி ஆரம்பப் பாடசாலை என்ற சிறையில் அடைத்து வைக்க முடியாது. அவரது பதவி உயர்வுகளுக்கு தடங்கல் ஏற்படாது அவரது தொழில் மேம்பாட்டிற்காக வழிவிட்டு நிற்போம்.
உன்னதமான இலக்குகள், உறுதியான செயற்பாடு, நிலைதளராமை ஆகியன அவரது இயல்புகளாகும். ஆசிரியர்கள், பெற்றோர் பழைய மாணவர் நலன்விரும்பிகளுடன் சுமுகமான தொடர்பாடல், கல்வித் திணைக்களத்துடனான ஒத்துழைப்பு போன்ற செயற்பாடுகள் அவர் வளர்துக்கொண்ட பண்புகள்.
இவற்றின் ஊடாக அவர் எமது பாடசாலைக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இத்தகைய செயல்பாடானது பாடசாலையை உயர்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது . இதையிட்டு பெற்றோரும் நலன்விரும்பிகளும் மிக்க மகிழ்சியடைகின்றோம்.
அவருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தினதும், பாடசாலை சமூகத்தினதும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புதிதாக பொறுப்பேற்ற இடத்திலும் அவரது தன்னலமற்ற பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவர் எமக்கு அனுப்பிய நன்றிக் கடிதத்தின் பிரதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இடமாற்றம் பெற்ற அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களது கடிதம்
அன்புடையீர்,
நன்றி நவிலல்
தாங்கள் இளவயதில் கல்வி கற்ற மேற்படி பாடசாலையின் மேம்பாடு கருதி பலவழிகளிலும் உதவியுள்ளீர்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக நிதியுதவி வழங்கியும், வேண்டும்போது விரைந்து வந்து ஏனைய உதவிகளையும் செய்துள்ளீர்கள்.
‘………………………………………- நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்’
என்ற ஒளவையாரின் மூதுரைக்கு ஏற்றாற்போல் இளம் வயதிலே எண்ணும் எழுத்தும் அறிய வைத்த பள்ளித்தாய்க்கு பிரதியுபகாரமாக தாங்கள் வளர்ந்த பின்பு இயன்றவரை மனமுவந்து உதவியுள்ளீர்கள்.
தங்களின் பாடசாலை இன்றைய நிலையிலே திருப்தியான அடைவுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. அரைகுறையிலே நிற்கும் கட்டிடமும் கட்டுவதற்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியும் கல்வித் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் கட்டிட வேலைகளும் நிறைவடையலாம் என எதிர்பார்க்கின்றேன்.
இப்பாடசாலையில் 15.03.2006 இல் அதிபராகப் பொறுப்பெடுத்த நாள் முதல் இன்று வரை பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் உதவிபுரிந்து ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். 20.06.2011 ஆந் திகதி தொடக்கம் புதிய பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் இன்று வரை உதவி புரிந்த தங்கள் எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, புதிய அதிபருக்கும் வேண்டிய ஒத்துழைப்பை நல்கி பாடசாலையின் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பேணுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி
TP No – 0213217205
Read Full Post »