Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நினைவஞ்சலி’ Category

சாந்தியின் மறு உருவம் பாலா சேர்

 

வாழ்வின் வசந்தங்கள் சட்டெனக் கருகி விழுந்தது போலாயிற்று. எமது நண்பர்கள் குழுவினரிடையேயான குதூகலங்களும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான சந்திப்புகளும், பகிடிகளோடு இணைந்த அனுபவப் பகிர்வுகளும் திடீரென முற்றுப்புள்ளியிடப்பட்டு முற்றாக முடக்கப்பட்டன. ஒரு இனிமையான சகாப்தத்தின் முடிவு மூர்க்கத்தனமாக எம் மீது திணிக்கப்பட்டது. எமது நட்பு வட்டத்தில் மட்டுமின்றி இன்னும் பல பல நட்பு மற்றும் உறவு வட்டங்களும் அக் கணத்தில் அவ்வாறே நிர்க்கதியான நிலையை அடைந்ததாக உணர்ந்தார்கள்.

அதற்குக் காரணமானவரோ இவை எவை பற்றியும் அலட்டிக்கொள்ளாது தனது வழமையான புன்னகை மறையாத சாந்த வதனத்துடன் அமைதியாகக் கிடந்தார். ஆம். பாலா மாஸ்டர்தான்.

ஆம் மறக்க முடியாத துயர் தினம். ஜனவரி 31ம் திகதி மாலை அந்த துயர் செய்தி எங்களை அடைந்தது.

அது அதீத அதிர்ச்சி அளித்த சம்பவம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் அவரை அவரது வீட்டில் சந்தித்து பலதும் பத்தும் கதைத்து நிறைந்த மனதுடன் வந்திருந்தேன். எந்தவித உடல்நலக் கேட்டுக்கான அறிகுறிகளையும் மருத்துவனான என்னால் அவரில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

‘நேற்று மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். சிரித்து தலையசைத்து சென்றார். அது இறுதித் தலையசைப்பு ஏன்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லையே’ எனச் சொல்லி குமுறி அழுதார் நண்பர் ஒருவர்.

‘அன்று கூட வங்கிக்கு வந்திருந்தாரே’ என ஆச்சரியப்பட்டார் வங்கி ஊழியர் ஒருவர்.

மற்றவர்கள் மட்டுமின்றி பாலா சேர் கூட எதிர்பார்த்திருக்காத மரணம் அது. படுக்கை பாயில் கிடக்காமல், நோய் நொடியில் துடிக்காமல், மற்றவர்களுக்கு பாரமாகக் கிடக்காமல் மரணவேவன் அவரை அமைதியாக ஆட்கொண்டான். கள்ளமில்லாத வெள்ளை மனம் கொண்ட அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஆனால் எங்களால்தான் அவரது பிரிவை ஜீரணிக்க முடியவில்லை.

பாலா சேர் நண்பர்களான எங்களுக்குத்தான் பிரியமானவர் என்றில்லை. மாணவர்களின் பேரன்பிற்கும், அபிமானத்திற்கும் மரியாதைக்கும் என்றுமே உரியவராக இருந்தார். பாலா சேரின் பாடம் எப்ப வரும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தமிழும் சமூகக் கல்வியும் அவரிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும். அவர் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் முறையில் அவர்கள் வாயில் இலையான் புகுவது கூட தெரியாதவாறு லயித்துக் கிடப்பார்கள்.

கடுமையான தமிழில் இருக்கும் இலக்கியப் பாடல்களை அவர் விளக்கும் முறை அலாதியானது. அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு சினிமாப் பாடலை உவமானம் வைத்து பாடலுக்கான கருத்தை விளக்கும் போது விளங்காதவை விளங்குவது மட்டுமின்றி வாழ்நாளில் மறக்க முடியாதவாறு ஊறிக் கிடக்கும்.

தான் படித்த, படிப்பித்த ஹாட்லிக் கல்லூரில் மிகுந்த பற்றுடையவர். இளைப்பாறிய பின்னரும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பற்றத் தவறுவதில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இது. நிகழ்வுகளுக்கு இடையில் உணவு வேளை. ஆனால் உணவு தயாராகவில்லை. ‘சேர் சாப்பாடு தயாராகும் வரை நீங்கள்தான் ஏதாவது பேசி கூட்டத்தை தாக்காட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை இவரிடம் முன்வைக்கப்பட்டது. ‘தாக்ககாட்ட வந்தவன்’ தான் என்பதையே சொல்லி நகைச்சுவையோடு கூட்டத்தை ஆரம்பித்து கலகலக்க வைத்து பசியை மறக்கடிக்க வைத்துவிட்டார்.

நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பேசுவதில் வல்லவர் அவர். கூட்டம் வயிறு வெடிக்கச் சிரித்து மகிழ்ந்து நிற்கும். யுத்த காலத்தின் போது நண்பர்கள் நாம் இணைந்து நடத்திய அறிவோர் கூடல் நிகழ்வுகள் அவரில்லாவிட்டால் அவ்வளவு கலகலப்பாக இருந்திருக்காது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவரே சாந்தியின் மறுஉருவம் அல்லவா?

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>தோழர் மு.கார்த்திகேசன்இலங்கையின் அரசியலைத் தெரிந்த, அதிலும் முக்கியமாக வட பகுதியின் இடதுசாரி அரசியலைத் தெரிந்த எவரும் கார்த்திகேசன் மாஸ்டரைத் தெரியாது இருக்க முடியாது.

தமிழ் மக்களிடையே இடதுசாரி சிந்தனைகள் உருவாவதற்கு அவரும் ஒரு முக்கிய நபராவார்.

இலங்கை இடதுசாரி இயக்கதின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்களது 32 வருட நினைவுப் பேருரையும், பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூல் வெளியீடும் சென்ற 27.09.2009 ஞாயிறு அன்று கொழும்பு 06ல் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடலில் நடைபெற்றது.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்பிரமணியம் தலைமையில் கூட்டம் சரியாக மாலை 4.30 ற்கு ஆரம்பமாகியது.

தலைமையுரை “வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த ஆரம்பகர்த்தாக்களில் கார்த்திகேசன் மாஸ்டர் முக்கியமானவர். அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட போதும் ஆசிரியராக இருந்த அவர் தனது ஆசிரியர் பணிக்கு தொய்வு ஏற்படாதவாறு கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

அவரிடம் கல்வி பெற்ற ஒரு சிலர் பின்னாட்களில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தனர். வார்த்தை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிலம்பாட்டங்கள் இன்றி நாசூக்கான சிந்தனைகள் ஊடாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார்.

எளிமையான சொற்களும், நகைச்சுவை நயமும் சேர்ந்திருப்பதால் அவரது கருத்துக்கள் சுலபமாக விளங்கப்பட்டன. இன்று தமிழ் அரசியலில் உள்ள பலரும் அவரூடாகவே வந்தவர்களாகும்.”

“சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்குமிடையே எந்த வித்தியாசமும் காட்டாதவர் அவர். போஸ்டர் ஒட்டுவதாயின் தொண்டர்களுடன் களம் இறங்கிவிடுவார். ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், M.C.சுப்பிரமணியம் ஆகியோரும் இணைந்து செல்வதுண்டு.

எனது வீட்டுப் படலையில்தான் முதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பாராம். ஒரு முறை அவ்வாறு நோட்டீஸ் ஒட்டும்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடயத்தை அறிந்தபோது இது சிறிய குற்றம் விட்டு விடுங்கள் என்றாராம். கார்த்திகேசு மாஸ்டர் கதிரையை விட்டு அசையவில்லை. நாங்கள் குற்றம் அற்றவர்கள். எங்கு பிடித்தீர்களோ அங்கு கொண்டு போய் விட்டு விடும்படி சொன்னார்” எனப் பழைய நிகழ்வுகளை சுவையாக எடுத்துரைத்தார்.

“தமிழ் ஈழம் பற்றி முதல் முதலில் பேச்சு வந்தபோது, ஈழம் ஈழம் என்று சொன்னால் சிங்களம் நீளம் நீளமாக வளரும்” என அன்றே தீர்க்கதரிசனமாகச் சொன்னதை நினைவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய சிவா சுப்பிரமணியம் அவரது ஆங்கிலப் புலமை பற்றியும் குறிப்படத் தவறவில்லை. பல துறைகளிலும் மாணவர்களை வளர்த்து எடுத்துள்ளார். உதாரணமாக SLAS பரீட்சைக்கு தோற்றும் பலருக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு பழக்கியிருக்கிறார்.

பல துறைகளிலும் கார்த்திகேசு மாஸ்டருக்கு திறமை இருந்த போதும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்தார் தனது கடைசி மூச்சு வரை அவ்வாறே உறுதியாக வாழ்ந்த பெருமைக்கு உரியவர்.

நூல் வெளியீடு


இதைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூலின் வெளியீட்டுரையை ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரான திரு.தி.ஸ்ரீவிசாகராசா ஆற்றினார்.

“ஏராளமான புள்ளிவிபரங்களைத் தேடி எடுத்து மிக ஆழமாக எழுதப்பட்ட நூல். மிக நல்ல முயற்சி என்றார். தமிழ் பெற்றோர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். தமது குழந்தைகளின் கல்வியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படும்.” என்றார்.

முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து இந்நூலின் ஏக விநியோகஸ்தர் ஆன பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் பெற்றுக் கொண்டார்.


சிறப்புப் பிரதியை பேராசிரியர் சபா ஜெயராசா நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நினைவுப் பேருரை ஆற்ற இருந்த பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன் விமானசேவை அன்று திடீரென தடைப்பட்டதால் வரமுடியாது போயிற்று.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் உரை
அதை ஈடுசெய்யும் முகமாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ‘அறிவுசார் பொருளாதாரமும் கல்வியறிவும்;’ என்ற பொருளில் மிகவும் பயனுள்ள ஒரு உரையை ஆற்றினார்.

“உலகளாவிய ரீதியில் இப்பொழுது இரண்டு சித்தாந்தங்கள் முன்னிலையில் இருக்கின்றன. 1990 களில்

‘கோளமயமாக்கல்’ முன்வைக்கப்பட்டது. இப்பொழுது ‘அறிவுசார் பொருளாதாரம்’ முக்கியமாகப் பேசப்படுகிறது.

உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகிய இரண்டும் இக்கருத்துக்களை முன் வைக்கின்றன. உலகவங்கியானது உலகளாவிய ரீதியில் நிதி சார்ந்த ஆதிக்கம் செய்வதுடன் கல்வி சார்ந்த சித்தாந்தத்தையும் முன்நிலைப்படுத்துகிறது. இதற்காக அதன் கொள்கை வகுப்போர் குழுவைச் சார்ந்த கல்வியாளர்கள் இங்கு வந்து கல்வி அமைச்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தங்களது கல்விச் சிந்தனைகள் இலங்கைப் பாடசாலைகளில் இடம் பெறுகிறதா என்பது பற்றிய தரவுகளைப் பெற்று அறிக்கையாக எழுதுகிறார்கள். அதனை உலக வங்கியின் ஆய்வு மையம் பகுந்தாய்ந்து முடிவுகளை எடுக்கிறது என்றார்.

அறிவியலோடு சேர்ந்த சில ஆங்கிலச் சொற்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள் மிகத் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருந்தது.

“அறிவின் அடிப்படை Data ஆகும். இதனைத் தரவு எனச் சொல்லலாம். தரவை வழங்குபவர் தரவாளர் ஆவார். தரவுகளைப் பெற்று ஆய்ந்து தரும் போது அது தகவல் (Information) ஆக மாறுகிறது.

அத்தகைய தகவல்கள் நிறைய உள்ளவரை அறிவுள்ளவர் அதாவது அறிஞர் எனலாம். அறிவின் உச்சநிலையை ஞானம் என்பர். ஞானத்தின் உறைவிடமாக விளங்குபவர் ஞானி” என விளக்கினார்.

“அறிவு முகாமைத்துவம் என்பது ஒரு மேலைத்தேசக் கோட்பாடு. ஆனால் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. மேலைத்தேச நாடுகளுக்கானது மட்டுமல்ல. ஏனைய நாடுகளும் அதற்கு மாற வேண்டும். இந்தியா, கொரியா போன்ற பல நாடுகளும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இலங்கையிலும் அறிவியல் பொருளாதாரம் வளர வேண்டும்”; என்றார்.

“பொருள் உற்பத்தி ஒன்றே பொருளாதார வளத்தின் முக்கிய அம்சம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு;ள்ளது. ஆனால் எல்லா உற்பத்திக்கும் அறிவியல் தேவை. விவசாயம் திறம்படச் செய்ய அறிவியல் தேவை. மீன் பிடித் தொழிலுக்கும் அதற்கான அறிவியல் தேவை. அவ்வாறே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதன் முன்னேற்றத்திற்கு அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் தேவை என்பது மறுக்க முடியாதது” என்றார் பேராசிரியர்.

இலங்கையைப் பொறுத்த வரையில் உலகளாவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை உள்வாங்க வேண்டும். அதற்கேற்ற கல்வி முறை தேவை. பழைய கால முறைகள் பயனற்றது. உதாரணம் Assesment of knowledge என்றார். அறிவு, ஞானம் போன்றவை யாவும் பல்கலைக்கழக சமூகம் மட்டும் பெற்றால் போதாது. ஏனையோருக்கும் பரப்ப வேண்டும் என்றார்.
இன்றைய பல்கலைக் கழகங்கள் உலகளாவிய ரீதியில் கிடைக்கும் அறிவை

1. உள்வாங்க வேண்டும்
2. சமூகத்தில் பரப்ப வேண்டும்
3. புதிய அறிவை உருவாக்க வேண்டும், அல்லது மேம்படுத்தவும் கூர்மையாக்கவும் வேண்டும்
4. அதை நடைமுறைப்படுத்தவும் பயன் பயன்பாடு உடையதாக மாற்ற வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவதற்காக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழமையான கல்விக் கூடங்களுக்கு மாற்றாக Thinking Schools உருவாக்கியுள்ளார்கள். மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதற்கான கல்வி அங்கு கிடைக்கிறது.

இலங்கையில் 40 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். 10 வருடங்களில் இவர்கள் கல்வியை முடித்து வெளியேறும்போது வேலை செய்ய வேண்டும். அப்பொழுது அரசதுறைகளில் 15 சதவிகிதத்தினரையே உள்வாங்க முடியும். 35 சதவிகிதத்தினர் தனியார் துறையில் இறங்குவர். மிகுதி 35 சதவிகிதம் சுயதொழில் புரிய வேண்டியிருக்கும்.

எனவே தனியார் துறையின் தேவை கருதி அதற்கேற்ற கல்வியைக் கொடுக்க வேண்டும்.

இன்று தனியார் துறையினர் எதிர்பார்ப்பது என்ன?

1. ஆங்கிலம் தெரிய வேண்டும்
2. தொடர்பாடல் திறன் (Communication Skill) வேண்டும்.

இன்று சராசரியாக இலங்கை மாணவர்களின் கல்வித் தகமை 9ம் வகுப்பு மட்டுமே. இது போதாது. உயர வேண்டும்.

ஒரு காலத்தில் இலங்கையில் சுயமொழிக் கல்வியும், இலவசக் கல்வியும் முக்கியமாகக் கருதப்பட்டன. பெயர் பெற்று இருந்தன. அது ஒரு நேரத்தில் முக்கியமாக இருந்தது. ஆனால் இன்று ஆங்கிலக் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தனியார் கல்வி முறை முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு இன்றைய கல்வி பற்றி ஒரு பயனுறு சொற்பொழிவை நடாத்தினார். திடீரென பேச அழைத்தபோதும் மிகவம் சரளமாகவும், தரவுகள் நிநை;ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

மறைந்த ஆசான் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் மறைந்து வருடங்கள் பல ஆயின போதும் அவர் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிக்கு நன்றி கூறும் வண்ணம் மண்டபம் நிறைய அறிஞர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் சபா.ஜெயராசா, விரிவுரையாளர்களான ரவீந்திரன், தனராஜ், சட்டத்தரணி சோ.தேவராசா, வீரகேசரி ஆசிரியர் வீ.தேவராஜ், போன்ற பலரும் கலந்து கொண்டனர். சிலர் தமக்கும் அவருக்கும் இடையேயான உறவை நினைவு கூர்ந்து கருத்துரைத்தனர். அவரது மகள், மருமகன், பேரக் குழந்தைகள் உட்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு பெறுமதி சேர்த்தது.

= எம்.கே.முருகானந்தன்
நன்றி பதிவுகள் pathivukal.com

Read Full Post »

>
வியாபாரிமூலையைச் சேரந்தவரும் தற்போது சென்னையில் வசித்து வந்தவரும் ஆன பாலா அசோகன் (பாலசுந்தரம் அசோகன்) நேற்று (06.10.2009) காலமானார்.

எமது ஊரின் முன்னேற்றம், வளரச்சி பற்றி ஆரம்பம் முதல் சிந்தித்த ஒருவர் அவர்.

தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது திடீரென ஏற்பட்ட நரம்பு நோய் காரணமாக அவரது கால்கள் இயங்காது விட்ட போதும் மனஉறுதி தளராது செயற்பட்டவர் அவர்.

கலைமணி சனசமூக நிலையத்தோடு சேர்ந்து செயற்பட்டவர். அதன் மாதாந்த கையெழுத்து சஞ்சிகையான கலைமணியின் ஆசிரியராகச் செயற்பட்டவர்.

எமது ஊரில் முதன் முதலாக பாடசாலையில் மூன்று நாள் கண்காட்சி நடப்பதற்கு காரணமாக இருந்தது அவர்தான். பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் (பொம்பிளைப் பள்ளிக் கூடம்) இது நடைபெற்றமை பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சுப்பிரமணிய வாத்தியார் உட்பட பல இளைப்பாறிய ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி ரியூசன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரையே சாரும்.

ஊரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஒரு மரத் தளபாட தொழிலகத்தை ஆரம்பித்து வைத்ததும் அவரே. அவர் செய்து தந்த புத்தக அலுமாரி எனது பருத்தித்துறை வீட்டில் என்றும் அவர் ஞாபகமாக இருக்கும்.

அருமை நண்பனே உன்னை இழந்த துயர் என்னையும் நண்பர்கள் வட்டத்தையும் மட்டுமின்றி எமது ஊர் முழுவதையும் கண்ணீர்க் கடலில் ஆழத்தியுள்ளதை உன்னால் காண முடிகிறதா.

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

பகவான் சத்தியசாயி பாபாவின் தீவிர பக்தர் அவர்.

ஓம் சாந்நி சாந்தி சாந்தி.

Read Full Post »

>“வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
‘திக்’ கென்ற மோதல் –
திடுக்கிட்டுப் போனோமே!”

என்ற முருகையனின் கவிதை வரிகளுடன் முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலிக் கூட்டத்தை ஆரம்பித்தார் தேவகெளரி. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கூட்டம் 58,தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. சென்ற ஞாயிறு ஆகஸ்ட் 2 ம் திகதி 4.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது.

திருமதி முருகையன், அவரது மகன், மகள், மருமக்கள் மற்றும் பேரக் குழந்தைகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டது மனத்தைத் தொடும் சம்பவமாக இருந்தது. அவர்களுடன் பேசவும், முருகையன் இழப்பினால் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் கிடைத்தது மனதிற்கு ஆறுதல் அளித்தது.


தலைமை வகித்துப் பேசிய தேவகெளரி அவரின் ஆடம்பரமற்ற மிக எளிமையான போக்கை சிலாகித்துக் கூறினார். யாழ் பல்கலைக் கழகத்தில் உயர்நிர்வாகப் பதவியை வகித்த காலத்தில் கூட தனது வழமையான குடையுடன் நடந்து செல்லும் தன்மையை நினைவு படுத்தினார்.

சமூகத்தை நையாண்டி செய்து இயல்பான பேச்சு மொழியில் அவரைப் போல கவிதை ஆக்கியவர்கள் வேறெவரும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் எமக்குத் தந்துள்ள சுமையை அவர் கவிதையில் கொண்டு வந்தது நல்ல உதாரணம்.

மரபுக் கவிதைகளையே ஆரம்பத்தில் எழுதிய முருகையன் பின்னர் புதுக் கவிதையிலும் தனது வீச்சை அற்புதமாக வெளிப்படுத்தினார். கவிதை, பாநாடகம் போன்ற படைப்புலகி்ற்கு அப்பால் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும் தேவகெளரி விதந்து பேசினார்.

அடுத்துப் பேசிய ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் மூத்த ஒருவரான நீர்வை பொன்னையன் முருகையனை பல்துறை ஆளுமை கொண்டவர் எனக் குறிப்பிட்டார். கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் முருகையன் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பேசும் போது மொழிபெயர்ப்பு நுட்பங்கள் என்றதொரு அருமையான நூல் எழுதியதையும் குறிப்பட்டார்.


முருகையன் படைப்புகளில் மனிதநேயம், மனித முன்னேற்றம், போர்க்குணம் ஆகியன எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர் தனிமனிதர் அல்ல கூட்டு இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர். அவ்வாறே முற்போக்கு அணியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தீவிரமாக இயங்கியதையும் குறிப்பட்டார். அவரது கவிதைகள் வாள்வெட்டுப் போல கூர்மையானவை என்றார். சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தீவிர குரல் அவரது கவிதைகளில் ஒலித்ததாகவும் சொன்னார்.

மும்மொழி ஆற்றல் பெற்றவராகவும் குறிப்பட்டார். விஞ்ஞானப்பட்டதாரியான அதே நேரம் கலைப்பட்டதாரியும் கூட என வியந்து பேற்றினார். அதனால் அவரது கவிதைகளில் விஞ்ஞானத்தின் கூர்மையும், கலையழகும் சேர்ந்திருந்தது என்றார்.

முன்னொரு தடவை முருகையனின் கவிதைகளை பேராசிரியர் நுஃமான் இதே மேடையில் ஆய்வு செய்ததும் பின்னர் அக்கட்டுரை ‘முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்’ என்ற நூலில் இடம் பெற்றதையும் குறிப்பிட்டார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொடர் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இது குமரன் புத்தக இல்லத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் முருகையன், சில்லையூர் செல்வராசன், பசுபதி, இக்பால், சுபத்திரன் மற்றும் நுஃமானின் கவிதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்குகின்றன.

முருகையனின் கவிதைகளை ஆய்வு செய்தது போதுமானது அல்ல. அவரது படைப்புகள் அனைத்ததையும் தொகுப்பதும், அவரது படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்வதும் எமக்கு முன் உள்ள பணி என்றார் நீர்வை பொன்னையன்.

விரிவுரையாளரும் முக்கிய விமர்சகர் மற்றும் ஆய்வறிஞரான த.இரவீந்திரன் நீண்டதொரு சிறந்த உரையை ஆற்றினார்.

நினைவஞ்சலிக் கூட்டமான இதில் தனது உரை முருகையனின் பங்களிப்பின் ஆளுமை பற்றியதே அன்றி படைப்புகள் பற்றிய ஆய்வு அல்ல என ஆரம்பித்தார். எழுபதுகளில் ‘கவிஞர்களின் கவிஞர்’என அறியப்பட்வர்.அக்கால மாணவனான தனக்கு கவிதை அறிமுகமாகிய போது பேசுவதுபோலும் கவிதை எழுத முடியும் என்பதை அவரது கவிதைகளில் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினேன் என்று குறிப்பிட்டார்.

முருகையன் பேச்சோசையை கவிதையில் பயன்படுத்திய போது இலக்கியத்தில் பயன்படு்தாத சொற்களை இப்பொழுது கவிதையில் பயன்படுத்துகிறார்களே என்ற சர்ச்சை எழுந்தது. அப்பொழுது ஒருவர் முருகையனிடம் சில பேச்சுவழக்குச் சொற்களைக் கூறி இவை “முன்பு இலக்கியத்தில் பயன்படுத்தாச் சொற்கள் இப்பொழுது பயன்படுத்துகிறார்களே?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார் முருகையன்

“யார் பயன்படுத்தியது” என அவர் கேட்டார்.

“நான்” எனப் பெருமையோடு கூறினார்.

இது தற்புகழ்ச்சி அல்ல.

எந்த ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பு பற்றிய உயர் மதிப்பு இருக்க வேண்டும்.

அது அவரிடம் இருந்தது. தனது படைப்பை தானே ரசிப்பது கூட ஒருவிதத்தில் ஆளுமைதான் என்றார் ரவீந்திரன்.

“முருகையன் தனது இறுதிக்காலத்தில் பல விடயங்களை மறந்திருந்தார், ஆயினும் தனது இலக்கியப் பங்களிப்பை மறக்கவில்லை. அவை பற்றிப் பேசும்போது அவர் முகம் மலர்ந்தது. பலவற்றை ஞாபகப்படுத்திச் சொன்னார். அத்துடன் சமத்துவ சமூகம், சமூக ஒற்றுமை, மேம்பாடு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை அவர் இறுதிவரை மறக்கவில்லை. சுயமதிப்பீட்டையும் இழக்கவில்லை” என்று கூறிய ரவீந்திரன் தான் அவர் நோயுற்ற காலத்தில் சென்று சந்தித்தபோது நடந்த சம்பவங்கள் கூடாக அவற்றைத் தெளிவுபபடுத்தினார்.

சுமார் 6 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.

ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு புது வீச்சும் புதுப் பார்வையும் கொடுத்த ஒரு அற்புதமான கவிஞனின் நினைவுகள் மனத்தை அழுத்த மண்டபத்திலிருந்து வெளியேறினோம்.

Read Full Post »

>
எனது ஒரு இனிய நண்பரான திரு கந்தையா கணபதிப்பள்ளையினது மறைவானது ஆழ்ந்த துயரமாக மனத்துள் சூழ்கொள்கிறது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியிருந்தது. பருத்தித்துறை கடற்கரை வீதியில் துறைமுகத்திற்கும் ரெஸ்ட் கவுசுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலலைகளின் கீதம் தழுவும் விசாலமான காணியில் அமைந்திருந்த மஜிஸ்ரேட் பங்களாவில் வசித்த காலம் முதல் கொழும்பு வெள்ளவததை வேலுவனராம வீதியில் வாழ்ந்து மறைந்த காலம் வரை தொடர்ந்த நட்பிற்கு சடுதியாக காலன் தடையாகிவிட்டான். 


சாயி பணியும், எமது பிள்ளைகள் சேர்ந்து கல்வி கற்றதும் எமது உறவை நெருக்கமாக்கியது.


பின்நோக்கிப் பார்க்கும்போது அவர் எத்தகைய அற்புதமான மனிதர் என்பதை மறக்க முடியாதிருக்கிறது. ஆழ்ந்த சட்டப் புலமை கொண்ட அவர் நீதிபதியாக விளங்குவதற்கான சகல குண இயல்புகளையும், தகமைகளையும் கொண்டிருந்தார். நெடிது உயர்ந்த கம்பீரமான தோற்றம், அமைதி காக்கும் முகம், எளிதில் உணர்ச்சி வசப்படாத பண்பு, தனது உள் உணர்வுகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தாது மற்றவர் சொல்வதைக் கருத்தூன்றிக் கேட்டல், ஒவ்வொரு வார்த்தையையும் மிக அவதானமாக நிதானித்து உரைக்கும் பண்பு, நடுநிலை தவறாமை, நெருக்குதல்களுக்கு பணிந்து போகாமை என தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றிற்கு மேலாக அன்பும், கருணையும், சேவை மனப்பான்மையும் அவரின் உயரிய பண்புகளாக இருந்தன. மனித விழுமியங்கள் நிறைந்திருந்தது. இதன் காரணமாக பணியாற்றிய இடங்கள் எங்கும் மக்களினதும், சக ஊழியர்களதும் பெருமதிப்பு கிட்டியது. இப்பண்புகள் அவரை இயல்பாகவே ஆன்மிகத்துறைக்குள் இட்டுச் சென்றது. பகவான் பாபாவின் பாதம்பற்றும் பாக்கியம் பெற்றார்.

சட்டக் கல்லூரியில் படித்து சட்டத்தரணியான இவர் பிரபல நொத்தாரிசாக ஏழு ஆண்டுகள் தொழில் புரிந்தபின் மூதூரில் கிராமக்கோட்டு நீதிவானாகவும், 1974லிருந்து குடாநாட்டில் மரணசாதன தத்துவ அதிகாரியாகவும், உயர்நீதி மன்றப் பதிவாளராகவும், ஆரம்ப நீதி மன்ற நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் 1996 வரை பணியாற்றினார். கொழும்பு மாவட்ட நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய பின் 1997ல் ஓய்வு பெற்றார்.

மாவட்ட நீதிபதியாக பணியபற்றிய காலையில் நீதித்துறைலிருந்து இளைப்பாறிய போதும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர், சட்டக் கல்லூரி விரிவுரையாளர், நீதிவிவகார அமைச்நு தமிழ் பிரிவு இணைத் தலைவராக ஆசிரியர் என அவரது பணி இறுதி வரை தொடர்ந்தது. பெருநோய்களுக்கு ஆளானபோதும் அவற்றை மறந்து மறைத்து மலர்ந்த முகத்தோடு தொடர்ந்து செயற்பட்டார். தனது இறுதி மூச்சை விடுவதற்கு சுமார் பத்து நாட்கள் இருக்கும் வரை சட்டக் கல்லூரியில் விரிவுரையாற்றும் பணிக்குச் செல்லாமல் இருக்கவில்லை. தனது கடமைகளை எதுவரினும் புறந்தள்ளாத கர்மயோகி அவர். அவரது இறுதி யாத்திரையின் போது அவரது மாணவர்கள் உதிர்த்த கண்ணீர் இதற்குச் சான்றாகும். பிறப்பு 09.04.1937. மறைவு 18.08.2008

“உங்கள் பொறுப்புக்களைத் தள்ளி விடாதீர்கள். அவற்றை எதிர் கொள்ளுங்கள்” என பகவான் சத்ய சாயிபாபா கூறியதை சிரத்தையோடு பின்பற்றினார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

“எல்லோரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்” என்ற பகவான் திருவாக்கை இறுதிவரை கடைப்பிடித்த அவர் பகவானுடன் முழுமையாக இணைந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அமைதி கொள்வோமாக.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>கனவுகளுடனும் கற்பனைகளுடனும்
காற்றோடு கரைந்த படைப்பாளி!

புலோலியூர் க. சதாசிவம்!

(பிறப்பு: 20.3.1942ல் மறைவு:14.09.2004)

14.09.2007 அவரது மூன்றாவது நினைவு தினமாகும். அவர் மறைந்த 31ம் நாள் நினைவு தினத்தன்று வெளியான கட்டுரை இப்பொழுது மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தவன் மனிதன். அதிலும் படைப்பாளியாகவும் இலக்கிய ஆர்வலனாகவும் இருப்பவர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வானம் கூட எல்லையிட முடியாது தளரும். அந்த கனவுகளும் கற்பனைகளும்தான் அவர்களின் ஆத்மார்த்த பலமும் கூட. புலோலியூர் க.சதாசிவமும் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு எழுத்தாளன்தான். தொழில் ரீதியாக அவர் ஒரு வைத்தியர் என்ற போதும் இலக்கியம், வைத்தியம் ஆகிய இரு துறைகளிலும் உறுதியாகவும் சமனாகவும் கால் ஊன்றி நின்றவர் ஆவார்.

அவரது இலட்சியம் சமூக மேம்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டது. சரியாகச் சொல்லப்போனால் இலங்கையின் வெவ்வேறு திசைகளில் வாழ்ந்த, பயணித்த இரு சமூகங்களின் மேம்பாடு அவரது இலட்சியமாக இருந்தது. தான் பிறந்து வளர்ந்து மணம் முடித்த வடமராட்சி மண் ஒரு கண் என்றால், தொழில் ரீதியாக இணைந்து அவரது வாழ்க்கைப் பயணத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டுவிட்ட மலையகம் மறு கண் எனலாம்.

‘நாணயம்’ என்ற அவரது நாவல் “ வடமராட்சிப் பிரதேசத்தின் நாடித் துடிப்பு, மனித உறவுகளைப் பிணைக்கும் பந்தமாகிய சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள், எண்ணக் கருத்துகளின் உயிர்த்துடிப்பான பேச்சு வழக்கு..” ஆகியவற்றை அற்புதமாகப் பதிவு செய்த படைப்பாகும். அதே போல சிறுகதைப் போட்டி ஒன்றில் முதற் பரிசைத் தட்டிக் கொண்ட அவரது முதற் சிறுகதையான ~புதுவாழ்வு 1961 களில் இருந்த யாழ் மண்ணின் வாழ்வை கண்முன் கொண்டு வருகிறது.

அதே நேரத்தில் ‘மூட்டத்தினுள்ளே’ என்ற நாவலும் ‘ஒரு நாட் பேர்’ என்ற சிறுகதைத் தொகுதியும் மலையக மக்களின் துன்பங்களும் வேதனைகளும் நிறைந்த வாழ்வை பரிவோடும் பாசத்தோடும் பார்த்தது மாத்திரமின்றி அவர்களது வாழ்வில் ஒளியூட்ட வேண்டும் என்ற வேட்கையோடும் படைக்கப் பட்டவையாகும். கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக மலையகத்தோடு ஒன்றியவர் அவர். அதிலும் முக்கியமாக டயபராத் தோட்டத்தின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய போது அந்த மக்களின் இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்காளியாக கலந்து வாழ்ந்தவர். அடிப்படை வசதிகள் கனவிலும் கூடக் கிடைக்காத அவர்களின் ஏழ்மையை நேரிடையாகக் கண்டு கண் கலங்கியவர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் முதுகில் சவாரி செய்ய முற்படும் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கபடத்தன்மைகளையும் புரிந்தவர். இதனால் அவர்களது வாழ்வின் உள்ளும் புறத்தையும் மாத்திரமின்றி, அச் சமூகத்தின் பலத்தையும் பலவீனத்தையும், பன்முக விஸ்தாரணத்தையும் தன் கலையுள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டவர்.

இதனால்தான் வடமராட்சியைச் சேர்ந்தவரான அவர் வீரகேசரி நடாத்திய நாவல் போட்டியில் மலையகப் பிரதேசத்திற்கான பரிசை ‘மூட்டத்தினுள்ளே’ என்ற நாவலுக்குச் சுலபமாகத் தட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் பிறந்தது 20.3.1942ல் மறைந்தது 14.09.2004 அன்று.

மறைந்த அன்று கூட புதிய திட்டங்களோடும், சிறகடிக்கும் கற்பனைகளோடும் பண்டாரவளையிலிருந்து கொழும்பு வரும் பஸ்ஸில் பயணிக்க ஏறியிருந்தார். கொழும்பில் நிற்கும்போது தான் இணையாசிரியராகக் கடமையாற்றும் ஞானம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஞானசேகரனைச் சந்தித்து ஞானத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி உரையாடுவதும், நான் உட்பட சில இலக்கிய நண்பர்களைச் சந்தித்து இலக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும், சில தனிப்பட்ட வேலைகளைக் கவனிப்பதும் அவரது திட்டமாயிருந்தது.

ஆனால் அவரது பயணத்தின் திசை மாறிவிட்டது. அவரதும், எவரதும் கற்பனைக்கும் எட்டாத பயணம் அது. கொழும்பு வரவேண்டியவர் விண்ணுலகுக்குப் பயணமானார். நோய் நொடி என்றும் துன்பப்படாத அவருக்கு, மற்றவர் பிணி தீர்ப்பதில் மனநிறைவு கண்ட அவருக்கு தன்கூட மாயக் கூற்றுவனான நோயொன்றும் பயணித்தது தெரிந்திருக்கவில்லை. திடீரெனத் தோன்றிய இரத்தக் கட்டியொன்று (Clot) சுவாசக் குழாய்க்கான இரத்த நாடியை அடைக்க, பண்டாரவளையில் இருந்து புறப்பட்ட பஸ் ஹப்புத்தளையை அடைய முன்னரே திடீரென மரணத்தைத் தழுவிக் கொண்டார். ஆம் மரணம் மகத்தானது. அதன் முன் மனிதர்களாகிய நாம் அற்பப் புழுக்கள்.

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர்; எனப் பன்முகப் படைப்பாற்றல் கைவரப் பெற்ற அவர் ஒரு பல மருத்துவக் கட்டுரைகளையும் தினக்குரலில் எழுதியுள்ளார். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் பேர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும், நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் நூல் உருவாகியுள்ளன. இவற்றில் அவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பரிமாணம் யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசை வென்று கொண்டது. சென்ற மாதம் யாழில் நடந்த பரிசளிப்பு விழாவில் இதற்கான பரிசைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. லண்டனில் உள்ள கொம்மாந்துறை இலக்கிய வட்டமும் தினக்குரலும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதற்கான பரிசை இன்னமும் நேரிடையாகப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அச் சிறுகதை தினக்குரலில் வெளியாவதை அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை என்பதும் மனத்தை அழுத்துகிறது.

ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதை நூல் கைப்பிரதிப் போட்டியை நடாத்துவதிலும் அதில் முதற் பரிசு பெற்ற சாரங்காவின் ‘ஏன் பெண்ணென்று’ என்ற பிரதியை புத்தகமாக வெளியிடுவதிலும் அவரே பெரு முயற்சி எடுத்ததை நான் அறிவேன். அது போன்ற முயற்சிகளை எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செய்யவும் எண்ணியிருந்தார். அதன் அறிமுகவிழா சென்ற மாதம் விபவி ஆதரவில் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் நடந்தபோது அவரே அறிமுகவுரை நடாத்தினார்.

அன்று கூட்டம் முடிந்தபின் அங்கிருந்து வெள்ளவத்தை பஸல்ஸ் ஒழுங்கை வரை அவருடன் கே.ஆர்.டேவிட் ம் நானும் இலக்கியம் பேசியபடியே நடந்து நேற்று நடந்தது போல் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அதன் பின் அவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்பது சுமையாக உள்ளத்தை அழுத்துகிறது. ஆயினும் தொலைபேசியில் இடையிடையே பேசுவோம். சுமார் 25 வருடங்கள் நெருங்கிய நண்பனாக இருந்த உற்ற நண்பனின் பிரிவுத்துயர் ஆற்றவொண்ணாதது. அதுவும் அன்று 15ம் திகதி நடுநிசி 1.30 அளவில் ஹப்புத்தளை மாவட்ட வைத்திய அதிகாரி அவரது டயறியைப் பார்த்து எனது டெலிபோன் நம்பரை கண்டுபிடித்து ‘உங்களுக்கு டாக்டர் சதாசிவத்தைத் தெரியுமா’ என்று கேட்டு அந்த அதிர்ச்சி மிக்க செய்தியைக் கூறினார். என்றென்றும் என்னால் அதிலிருந்து மீளவே முடியாது.

தென்புலோலியூர் கணபதிப்பிள்ளைக்குப் பின்னர் புலோலியூருக்கு இலக்கிய உலகில் தனிப் பெருமை சேர்த்தவர் புலோலியூர் க.சதாசிவம் ஆவர். அவர் முன்மொழிந்த வழியிலேயே புலோலியூர் தம்பையா, கந்தசாமி, இரத்தினவேலோன் போன்ற பலரும் பின்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது பூதவுடல் பொரளை கனத்தையிலுள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16ம் திகதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கம்பவாருதி இ.ஜெயராஜ், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், தினக்குரல் ஞாயிறு இதழ் பொறுப்பாசிரியர் தேவகொளரி, மு.பொ, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வதிரி இரவீந்திரன், நீர்வை பொன்னையன், வ.இராசையா, புலோலியூர் இரத்தினவேலோன் உட்பட பல எழுத்தாளர்களும், நண்பர்களும் உறவினர்களும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். டொமினிக் ஜீவா, தி.ஞானசேகரன், எம்.கே.முருகானந்தன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். மாலை 5.30 அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழ்ந்த அந்தப் படைப்பாளியான புலோலியூர் க. சதாசிவம் காற்றோடு கலக்கும் போதும் அவற்றையே தனது வழித் துணையாக்கிக் கொண்டார் என்பதில் மனம் ஆறுவோம்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- பதிவுகள்-pathivukal.com

Read Full Post »

>

குன்றில் ஏற்றிய தீபம் குடத்தில் இட்ட விளக்குப் போல வாழ்ந்த கதை.

கைதடி சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு அவரில் மிகுந்த பிரியம். காரணம் அவர்களுடன் அத்துணை பிரியமாக பிழங்குபவர். அவர்கள் தங்களுக்கு ஒரு ரிவி வாங்கித் தரும்படி அவரிடம் கேட்டார்கள். ரிவி பாவனைக்கு வந்த 80 களின் முற்பகுதி. அவர் அவர்களுக்கு ஒரு கலர் ரிவி வாங்கிக் கொடுத்தார். அப்பொழுது அவர் வீட்டில் இருந்ததோ ஒரு கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ தான். அவர் வீட்டிலும் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கும் கலர் ரிவியில் பார்பதற்கு விருப்பம்தான். ஆயினும் அவர் கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ யை தங்களுக்கு வைத்துக் கொண்டு கலர் ரிவி யை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. நண்பர்களுக்குக் கூடத் தெரியவில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் விளம்பரப் படுத்தாமல் கொடுத்தார். இதைத்தான் இடது கை அறியாமல் வலது கை கொடுப்பது என்பதா?
இதைச் செய்தவர் யார்?
குன்றில் ஏற்றிய தீபமாக ஒளிர்ந்த ஒருவர், குடத்தில் இட்ட விளக்குப் போல தன்னை மறைத்து வாழ விரும்பினார். தன்னை எத்தனை தூரம் மறைக்க முயன்ற போதும் அந்த ஒளிப் பிரவாகத்தின் பிரகாசத்தை, காருண்யத்தை அனைவரும் புரிந்து போற்றவே செய்தனர். ஆம் புகழுக்கும் பெயருக்கும் ஆலாயப் பறக்கும் இந்த உலகில் தனக்கு நியாயமாகவே கிடைக்க வேண்டிய புகழைக் கூட வெளிக் காட்டாது மறைத்து வாழும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கவே செய்வர். நான் அறிந்த அத்தகைய ஒரே ஒரு மனிதர் எங்கள் சோமா ஒருவர் தான்.
சோமா, சோமர், சோமா அங்கிள், எக்கவுண்டன் அய்யா, எக்கவுண்டன் சோமா, இப்படி எத்தனையோ விதமாக பாசத்தோடு அழைத்து நேசத்தோடு நெகிழ்ந்த அன்புள்ளங்களை தவிக்க விட்டுவிட்டு நிரந்தர விடை பெற்றுவிட்டார்.
பருத்தித்துறை சிவன் கோவிலடியில் பிறந்த அவர் தனது கல்விச் சிறப்பாலும், கடின உழைப்பாலும் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியராக, பட்டயக் கணக்காளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, மேர்சன்ட் பினான்ஸ் நிதி நிறுவன அதிபராக, பல்கலைக் கழக செனட் உறுப்பினராக தன் தொழிற் தகமையை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் அவரது பெருமைக்கும், புகழுக்கும், காரணம் அவரது கல்வித் தகமைகளோ உயர் பதவிகளோ அல்ல. மக்களை மதித்தவராக, துன்பப்பட்டவர்களின் துயர் தீர்க்க உதவிக்கரம் நீட்டியவராக, உயர் விழுமியங்களைக் கடைப் பிடித்தவராக வாழ்ந்த மனித நேயம் மிக்க இயல்புதான் காரணம்.
கடந்த 27 ஆண்டுகளாக அவரோடு ஓரளவு நெருங்கிப் பிழங்கிய காரணத்தால் தான் அவரை நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. நான் பருத்தித்துறையில் குடும்ப வைத்தியனாக தொழில் புரிய ஆரம்பித்த 1980 களிலேயே அவரது நட்பு கிடைத்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என் நண்பர் என்று சொல்வது வெறும் பேச்சுக்குத்தான். உண்மையில் அவரை எனது வழிகாட்டி எனலாம். அல்லது குரு என்று கூட மகுடம் சூட்டலாம். காரணம் நான் உண்டு எனது தொழில் உண்டு என்று வாழ்ந்த என் முன் ஒரு புதிய உலகைத் திறந்து வைத்தவர் அவர். மற்றவர்களுக்கு உதவுவதும், துன்பப்பட்டவர் துயர் தீர்ப்பதும் எமது கடமை. அதில் மனம் நிறைய வேண்டும் என்பதை தனது வாழ்வின் திறந்த அத்தியாயங்கள் ஊடாக எங்களுக்கு சொல்லாமல் சொல்லித் தந்தவர் அவர். தன்னை ஒறுத்தாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியதற்கு முன்பு கூறிய ரீ.வி சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.
அவரோடு இணைந்து செயற்பட்ட காலங்களை நினைவுத் தட்டுகளில் இருந்து இறக்கி வைத்து நினைந்து பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளும் பல நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அரிமா கழகத்தின் ஊடாக ஆரம்பத்தில் செயற்பட்ட போது டொக்டர் பாலகிருஸ்ணன், பேராசிரியர் கணேசலிங்கம், வெற்றினரி டொக்டர் கதிரவேற்பிள்ளை, நடனசபாபதி, ஞானசம்பந்தர் கலை மன்ற அங்கத்தவர்கள், சிவராஜசிங்கம், சிவயோகன், போன்ற பலரும் சேர்ந்து இயங்கினோம்.
மதுபானம் பாவிக்காத, ஆடம்பர உணவுகளில் செலவழிக்காத, கேளிக்கைகளில் ஈடுபடாத, சேவைப்பணிகளில் மட்டும் ஈடுபட்ட வித்தியாசமான கழமாக அன்றைய பருத்தித்துறை அரிமா கழகம் இயங்கியதை பலரும் இன்றும் நினைவு கூர்கிறார்கள். அகதிகளுக்கு உதவி, மருத்துவ முகாம்கள், பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கு வருடா வருடம் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதற்கு வழிகாட்டியாக, இயக்கு சக்தியாக விழங்கியது எமது சோமாதான் என்பதை கூறித்தான் தெரிய வேண்டுமா?
பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உணவு வழங்குவது ஒரு இனிய அனுபவம் ஆகும். குறிப்பிட நாளுக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னரே பொருட்களை வாங்கிச் சேர்ப்பது சோமாதான். அரிசி பருப்பு, மரக்கறி வகைகள், தேநீர் தயாரிப்பதற்கான பொருட்கள், சிற்றுண்டி வகைகள் மட்டுமின்றி, சமையலுக்குத் தேவையான உப்பு புளி விறகு என எதுவும் தப்பாது சேர்த்து விடுவார். காலையில் அவரது காரில் முதல் கோஸ்டி போய்விடும். மற்றவர்கள் ஏனைய சிலரின் கார்களில் போவோம். எல்லோரும் கூடி நாங்களே சமைத்து நாங்களே அவர்களுக்கு வயிறாற உணவு பரிமாறுவோம். இறுதியில் அவர்களில் சிலர் பரிமாற நாம் உண்போம். எத்துணை இன்பமான நாட்கள். மற்றவர் திருப்தியில் மகிழ்வுறக் காட்டி வைத்தார்.
ஆஸ்சிரம மாணவர்கள் திருமண வயதடையும் போது அப் பெண்களுக்கு தாலி கூறை போன்றவற்றை நண்பர்கள் உதவியுடன் வழங்குவதற்கு திட்டமிட்டு நிதி சேகரித்து அளிப்பார். அவரது பங்களிப்பு எப்பொழுதுமே கணிசமான அளவு இருக்கும். நாட்டு நிலமைகளால் பருத்தித்துறை அரிமா கழகம் செயலிழந்த போதும் எல்லாம் பணிகளுமே தொடர்ந்தன. சில நண்பர்கள் ஆதரவுடன் இவற்றை சோமா கொண்டு நடத்தினார்.
பருத்தித்துறை சாரதா ஆஸ்சிரம சுவாமி சித்ரூபானந்தாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அதனூடாக இலவச மருத்துவ முகாம்களை நடாத்தியதும் கூட அவரது முயற்சியால்தான். இலக்கியம், சமூகம், ஆன்மீகம் என பல தளங்களில் நான் கால் ஊன்றிய போது எனது வாழ்வின் அடித்தளமே குடும்ப வைத்தியன் என்ற எனது தொழில்தான் என்பதை நினைவூட்டி அதில்தான் முதற் கவனம் இருக்க வேண்டும் எனப் போதித்தவர். இன்று வரை அக் கூற்றை வேத வாக்காக ஏற்று நடக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
இலக்கியவாதிகளிடமும் அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. மல்லிகை ஜீவா அவரது அன்பிற்கு பாத்திரமானவர். ஜீவாவை அழைத்து ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் விழா எடுத்ததற்கு அவரது ஆர்வமும் ஒரு முக்கிய காரணமாகும். மல்லிகையின் வளர்ச்சிக்கு அவர் பல வழிகளில் உதவி செய்துள்ளார். மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்களில் ஒருவராகக் கணித்த ஜீவா அவரைப் பற்றி மல்லிகையில் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில் சடங்கு சம்பிரதாய பூசை புனஸ்காரங்களில் ஈடுபாடற்றவராக இருந்தபோதும் ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் அவர். எனது வாழ்விலும் கூட பகவான் சத்திய சாயி பாபாவின் ஒளிவெள்ளத்தில் திளைத்து நல்வாழ்வு வாழ வழி காட்டியதில் அவரே முதல் காரணியாவார்.
தாய் மண்ணை நேசித்தவர் அவர். வெறும் வாய்ப் பேச்சு வீரர் அல்ல . அதன் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபாடு காட்டியவர் அவர். கடல் வளத்தைப் பெருக்கி பொருளாதார அபிவிருத்தி காண்பது அவரது கனவுகளில் ஒன்று. இது தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும் சிபார்சுகளும் நூலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான ஒரு நிறுவனத்தையும்(கடல் வளம்) ஆரம்பித்த போதும் நாட்டு நிலைமைகளால் தொடர முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. தாய் மண் மீதான அவரது நேசம் வாய்ச் சொல்லால் பேச முடியாதது. சூழ்நிலைகளின் தாக்கத்தால் முழுக் குடும்பமுமே புலம் பெயர்ந்து சென்ற போதும் மண்ணை விட்டு வெளியேறாதவர் சோமா. அவரது ஆசைப்படி பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சையும் தனது மண்ணில், தனது வீட்டிலேயே விட்ட சோமா அங்கேயே தகனமாகி யாழ் மண் பூராவும் காற்றோடு கலந்து சங்கமமாகி விட்டார்.
அவரது வாழ்ந்து காட்டியதை நாம் கடைப்பிடிப்பதே நாம் அவருக்கு செய்யக் கூடிய கைமாறாகும். அவர் ஆன்மா சாந்தியடைய பரம்பொருளை வேண்டுகிறேன்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- மல்லிகை செப்டம்பர் 2007.

Read Full Post »

>

கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த அதிபர் மணியம் கணபதிப்பிள்ளை

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

இன்று (26.08.2007) 45 ஆம் நாள் திதி

தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபர் மணியம் கணபதிப்பிள்ளை சென்ற மாதம் 12.07.2007 அன்று அகால மரணம் அடைந்தார். கோவிலுக்குச் செல்லும் வழியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அது. மாஸ்டர் என எம் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ம. கணபதிப்பிள்ளையின் மறைவு அவரோடு தொடர்புள்ள பல்லாயிரக்கணக்கான உள்ளங்களை உலுக்கிய மிகத் துயரமான சம்பவமாகும். அவரது திடீர் மறைவானது உற்றார் உறவினர்களிடையே மாத்திரமின்றி நண்பர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ஊரவர்கள், கல்விச் சமூகத்தினர், நிர்வாக தரத்தினர் எனப் பல்வேறு மட்டங்களிலும் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது.

இவர் அமரர் மணியம் தையல்நாயகி தம்பதியின் அருந்தவப் புதல்வனாக 27.08.1951 ஆம் ஆண்டு வடமராட்சி தும்பளையின் நெல்லண்டைப் பகுதியில் பிறந்தார். சிறு வயதிலேயே துடியாட்டமும் செயலூக்கமும் கொண்டவராக விளங்கிய இவர் பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் தளதளப்பாகவும் நல்ல நிறத்துடனும் இருந்ததால் அய்யர் எனச் செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது தகப்பனார் மணியம் மாவத்தகமவில் பிரபல வர்த்தகராக விளங்கியவராவார். இவருடன் இரு சகோதரிகள் கூடப்பிறந்தனர்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்.தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பெற்ற பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் இணைந்து தனது இடைநிலை மற்றும் உயர் கல்வியை சிறப்புடன் கற்றுத் தேர்ந்தார்.
இதன் பின்னர் தும்பளை நெல்லண்டையைச் சேர்ந்தவரும் கண்டி செல்வம் ஸ்டோர்ஸ் பிரபல வர்த்தகருமான தட்சணாமூர்த்தி அன்னலட்சுமி தம்பதியின் சிரேஷ்ட புதல்வியான தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார். மனம் இணைந்த இவர்களது இனிய இல்லற வாழ்வின் பயனாக மதிவதனி, மதிவாணன் எனப் பெயர் சூட்டப்பட்ட மகளும் மகனும் பிறந்தனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர் இவரது மனைவியும் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டதன் மூலம் இருவரும் ஒருமித்துப் பணியாற்றித் தமது கல்விப் பணிக்கு மேலும் மெருகூட்டினர்.

தான் முழு விருப்போடு இறங்கிய ஆசிரியத் துறையில் மிக்க அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றியதால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் எந்நாளும் பெரு மதிப்புப் பெற்றார். முக்கியமாக 5 ஆம் ஆண்டுப் புலமைப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் இவரது திறமை பெரிதும் வெளிப்பட்டது. இவரது வழிகாட்டலின் கீழ் பெருந் தொகையானோர் வருடா வருடம் அப்பரீட்சையில் திறமையாகச் சித்தி எய்தினர். இவரது ஆசிரியப் பணிப் பிரவேசமானது 1972 ஆம் ஆண்டு அவரது 21 ஆவது வயதில் யாழ். மருதங்கேணி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஊடாக அமைந்தது. ஓராண்டு காலம் அங்கு பணியாற்றிய பின்னர் தனது பிறந்த ஊருக்கு சேவையாற்று முகமாக யாழ். தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று வந்தார்.

1974 முதல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்ற பின்னர் தை 1 ஆம் திகதி 1976 இல் இரத்தினபுரி டால் தமிழ் மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமை ஏற்றார். அங்கிருந்து அநுராதபுரம் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 1976 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடமாற்றம் பெற்று வந்தார். செய்யும் தொழிலே தெய்வம் என அர்ப்பணிப்போடும் கடமை உணர்வோடும் பணியாற்றிய இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஆசிரியராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. ஈற்றில் மாற்றம் பெற்று தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு வந்தது முதல் தனது இறுதிக் காலம் வரை அங்கேயே பணியாற்றி அதன் உச்ச வளர்ச்சிக்கு தனது முழுப் பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆசிரியராகவும், பின் 27.04.1991 இல் பிரதி அதிபராகவும், 16.01.1992 முதல் தனது இறுதி மூச்சுவரை அதிபராகவும் தன்னை அப்பாடசாலையோடு முற்று முழுதாக இணைத்துக்கொண்டார். தான் ஆரம்பக் கல்வி பெற்ற அதே பாடசாலையில் தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி அதன் அளப்பரிய துரித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமையால் அப்பிரதேச மக்கள் அனைவரும் இவரில் அன்பும் பெரு மதிப்பும் வைத்திருந்தனர்.

பாடசாலை வளர்ச்சி
இவர் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த காலத்தில் அது மகாவித்தியாலயமாக உயர்ச்சி பெற்றுக் கொண்டது. இவர் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் இவரது ஆளுமையும், தனிப்பட்ட செல்வாக்கும், எல்லோரையும் அணைத்துச் செல்லும் பண்பும் பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தன. இவரது தலைமையின் கீழ் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்கள், ஒத்தாசையுடன் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தது. பரீட்சைப் பெறுபேறுகள் மிகவும் உச்சத்தை எட்டின. பாடசாலை மாணவர்களினது எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், வகுப்புகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களினது எண்ணிக்கையும் அதிகரித்தன.

பாடசாலையின் பௌதிக வளங்களின் விருத்திக்கும் இவர் காரணமாயிருந்தார். பல மாடிக் கட்டிடங்கள் எழுந்தன. அண்மையில் நிகொட் நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட கட்டிடத்திற்கு பாடசாலை நிறுவுநர் அமரர் சிதம்பரப்பிள்ளையின் நாமத்தைச் சூட்டி பாடசாலையின் பாரம்பரியத்தை காலத்தால் மறக்கப்படாது நிலைநாட்டியமை முக்கிய நிகழ்வாகும். விளையாட்டு மைதானத்திற்கான நிலம் பெறப்பட்டது. கணினி நிலையம் உருவானது. தளபாடங்களும், பாடசாலைக்கான உபகரணங்களும் விளையாட்டு உபகரணங்களும் போதிய அளவில் பெறப்பட்டன. நூலகம் புதுப்பொலிவு பெற்றது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணபதிப்பிள்ளை மாஸ்டரின் காலம் பாடசாலையின் பொற்காலம் எனலாம்.
தும்பளையில் வாழும் பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து பழைய மாணவர் சங்கத்தை உதயமாக்கியதன் மூலம் தனது தன்னலமற்ற சேவைக்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு மேலும் உந்துசக்தியை பெற்றுக் கொண்டார்.

மாணவர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவர்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேவைகளையும் உணர்வுகளையும் இவரால் அறிய முடிந்தது. வசதி குறைந்த, படிப்பைத் தொடர வசதியில்லாத பிள்ளைகளுக்கு கொப்பி, பேனா, புத்தகங்கள் மற்றும் சீருடை போன்றவற்றை நலன் விரும்பிகள் ஆதரவுடன் பெற்றுக் கொடுத்ததன் மூலம் அவர்கள் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து வாழ்வை வளமாக்கியதை பலர் கண்ணீர் மல்க நன்றி உணர்வுடன் நினைவு கூர்கின்றனர்.

2004 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஆழிப்பேரலை அநர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மக்களுக்கு உதவுமுகமாக தான் பணியாற்றிய பாடசாலையில் முகாம் அமைத்து அவர்களின் துயர் துடைத்தமை போற்றற்குரியது. பாடசாலை வளர்ச்சியில் இவர் பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பாடசாலையையும் அதனுடைய சமுதாயமான தும்பளைக் கிராமத்தையும் ஒருங்கிணைத்தமையாகும். “இது எமது பாடசாலை. இதன் வளர்ச்சி எமது பிள்ளைகளின் வளர்ச்சியாகும். ஈற்றில் அது எமது சமுதாயத்தின், எமது கிராமத்தின் எழுச்சியைக் கொண்டுவரும்” என்ற உணர்வை ஏற்படுத்தியதாலே தான் பெருவளர்ச்சி சாத்தியமாயிற்று.

சமூக சேவை
சமூகப் பார்வையும், பொதுநல நோக்கும் பரந்த செயற்பாடும் இவரோடு இணைந்து பிறந்தவை. தனது தொழில் வாழ்வின் ஆரம்ப காலத்திலேயே தமிழர் ஆசிரியர் சங்க உபபொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.
தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையின் ஆரம்ப கால அங்கத்தவரான இவர் நெல்லண்டை சனசமூக தலைவராகவும், இடைக் காலத்தில் தும்பளை கணக்கியாவத்தை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளராகவும் தொண்டாற்றியுள்ளார்.

தனது பழைய மாணவர்களாகிய இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டார். சாதி, மத, சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கருதாமல் தனது புனிதமான சேவையை அப்பகுதி மக்களுக்கு ஆற்றி அவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானார். எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடர்களும் சமூகத்தில் ஏற்பட்டு மனித வாழ்வே நெருக்கடிக்கு உள்ளான போதும் தனது மண்ணையும், மாணவர் சமூகத்தையும் உற்றார், உறவினர்களையும் வாழவைக்க வேண்டும் என்ற உன்னத இலட்சியம் காரணமாக தான் பிறந்த மண்ணை விட்டு விலகாமல் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மண்ணிற்கே உரமான வாழ்வு எல்லோருக்கும் முன்னுதாரணமாகும்.

விளையாட்டுத் துறை
கல்வித் துறையிலும், சமூக சேவையிலும் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் உண்டு. வருடாவருடம் தும்பளை கிழக்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தனது முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி அதன் வெற்றியை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. சிறந்த கரப்பந்தாட்ட, துடுப்பாட்ட வீரனாகவும், திகழ்ந்த இவர் நெல்லண்டை இளைஞர் கழகத்தினால் 2001, 2002 ஆண்டுகளில் நடாத்தப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட நிகழ்வினை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் வீதியில் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தி வைத்தமை நினைவு கூரத்தக்கது. தும்பளை நாவலர் விளையாட்டுக் கழகத்தின் பிரதம ஆலோசகராக சேவையாற்றிய இவர் கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் துடிப்புடன் பங்குபற்றி அதன் வெற்றிக்குத் துணையானார்.

இத்தகைய, ஆளுமை கொண்ட கணபதிப்பிள்ளை மாஸ்டரின் இழப்பானது அப்பாடசாலைக்கு மாத்திரமின்றி வடமராட்சி மக்களுக்கும், கல்வியிலும் சமூக மேம்பாட்டிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.

நன்றி- தினக்குரல் 25.08.2007

Read Full Post »