>
அமுதூட்டும் நாள் முதலா
ஆனந்தி ஆனந்தியென
அன்பு உறைக்க விழித்ததும்,
ஆண்டுகள் பலவாக
ஆதரித்த குடிமனையின்
சுவாசக் காற்றானதும்,
தேனில் விழுந்த எறும்பாக
விட்டகலா நேசமும்
மறக்கவொண்ணாது.
அன்பில் தோய்த்து
பட்ச(ண)த்தில் திணறடித்த
உங்கள் நினைவுகள்
உடற்கிளையெங்கும் துளிராகும்.
வாடா மலராய் மலர்ந்திருக்கும்.
காலமெல்லாம் மணம் பரப்பும்
தாளம் பூவாய்
என்றிருந்தேன்.
காலநதியின் ஓட்டத்தில்
நினைவழிவு உங்களுக்குமானதோ
மாதமொரு முறை
தீனொதுக்கும் பௌர்ணமியில்
இரண்டாம் பிறையானீர்.
இனி
நதியுலரும் காலமதில்
வருடமொரு முறை
பூனூலிட்டு சம்மணம் கட்டி
தேவமொழியின்
வேதப் போதை அருட்டுணர்வில்
திதி, பெயர், பாட்டி பீட்டி பெயர்களுடன்
நின் முகமும் தோன்றி மறைவதுடன்
என்கடமை அழிந்திடுமோ?
அன்றிப் பூனூல் சடங்கும்
புறமுதுகிட்டு ஓடிடுமோ?
உற்றார், உறவு, சுற்றம்
நட்பு, தொழில்,
முகம் முன் போற்றும்
புகழ் தேடும் வாழ்வென
நிதம் தொடரும் நெருக்கீட்டில்
நின்னை நினைக்க நேரமெது!
கேட்காமலே மன்னிப்பாய்
அம்மா.
—— அழகு சந்தோஷ் ——