Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நினைவுமலர்’ Category

>மிக வித்தியாசமான நினைவு மலர் ஒன்று இன்று எனது கையில் கிட்டியது.

தனது தாயான நல்லம்மாள் (அத்தனாஸ் செபஸ்தியானா) (05.10.1921- 24.11.2009)

நினைவாக அ.யேசுராசா தொகுத்தளித்த நூல்தான் அது. இலக்கிய நயமும், கலைநேர்த்தியும் கொண்ட அற்புதமான மலர் இது.

அன்னையின் சாந்தம் தவழும் முதுமுகத்தை அழகாக வரைந்திருக்கிறார் யோகி முன் அட்டைப் படமாக.

பின் அட்டைப்படத்தில் மைக்கல் ஆங்சலோ வின் பியற்றா சிற்பத்தின் புகைப்படம்.

முகப்புக் கட்டுரை மகாகவி தாகூர் அவர்களின் கீதாஞ்சலி.

“அன்னையே! சோகமான என் கண்ணீர்த் துளிகளால், உனது கழுத்துக்கு ஒரு முத்தாரம் தொடுக்கிறேன்.” என ஆரம்பி்க்கும் பொருத்தமான படைப்பு.

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, உருவகம், மருத்துவ அறிவுறுத்தல்கள், மாணவர்களுக்கு உதவும் குறிப்புகள் எனப் பலவும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதலில் கவிதைகள்
நல்லம்மாவின் நெருப்புச் சட்டி – அ.யேசுராசா1969
அறியப்படாதவர்கள் நினைவாக – அ.யேசுராசா1973

மூன்று கவிதைகள் – அ.யேசுராசா 1973

நிலை மயக்கம் – ஜோசப் ஃப்ரொட்ஸ்கி (ரஷ்யா)- மொழிபெயர்ப்பு – அ.யேசுராசா1989
ஒரு ஞாயிற்றுக்கிழமை… – சண்முகம் சிவலிங்கம் 1969
வாடைக்காற்றே – மு.புஷ்பராஜன் 1978
அஞ்சலி – நவாலியூர் நடேசன்

முதற் கவிதையான நல்லம்மாவின் நெருப்புச் சட்டி 1969ல் எழுதப்பட்டிருக்கிறது. ..

“பற்றியெரி,
ஆறு வயிறுகளின்
நெருப்பணைக்கக் காணாது
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது..

… வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி…”

குடும்பத்தின் சுமை தாங்க, அப்பச் சட்டி ஏந்திய நல்லம்மா அதிகாலை அலாரம் மணி ஓசையில் திகைச் செழுந்து தன் நலம் எரித்துப் பணி செய்யும் கதை, கவிதையாக மலர்த்திருக்கிறது. தாயின் அயராத கடும் உழைப்பை கவிஞர் இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.

உருவகம்
சிலுவை – நாக பத்மநாதன் 1977

சிறுகதை

முருகைக் கற்பூக்கள் – த.ஆனந்தமயில்
மிக அற்புதமான படைப்பாளியான ஆனந்தமயிலின் சிறுகதைத் தொகுதி பற்றிய எனது கருத்துக்களுக்கு எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்.

புனை மொழியின் செழுமையுடனான ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’

கடலரசின் பாதாள அந்தப்புரத்தில் ரகசியமாகப் புதைந்து கிடக்கும் வனப்பை கலையழகோடு பதிவு செய்யும் தனித்துவமான படைப்பாகும். தேர்ந்தெடுத்த மிக அற்புதமான பதிவு.

நேர்காணல்
திரைப்படம் – அ.யேசுராசா2002

நலவியல் (வைத்திய கலசம் நூலிலிருந்து)
மாரடைப்பு, மார்புவலி நோய்களை அறிவது எப்படி – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்
புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியுங்கள் – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்
நீரிழிவு நோய் பற்றி சகலரும் அறிய வேண்டியவை – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்

நீங்கள் புகைப்பவரா – நவீன் குமார்

மாணவருக்கு
வேகமாக வாசித்தல் – அ.அல்போன்ஸ்

உதைபந்தாட்டம் ஆட்டக்காரருக்கு அறிவுரை – சி.மே.மாட்டீன்

நினைவு மலர் வெளியிடும் வழக்கம் எம்மிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. மறைந்தவர்கள் நினைவாக அவர்களது நினைவு தினத்தில் இது வெளியிடப்படுவதுண்டு.

யாழ் இந்துக்கள் மரபில் இதனைக் கல்வெட்டு என்று சொல்வார்கள். மன்னர் காலத்தில் கல்லில் பதித்த செய்திகளை ஒத்ததாக இருப்பதால் கல்வெட்டு ஆனடீதா?

இறந்தவரது 31 தினத்தன்று ஏனைய சமய நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இது இருக்கும். அதில் பொதுவாக இறந்தவர் பற்றிய குறிபுகளும், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் எனப் பலவும் இருக்கும். கல்வெட்டுப் படிப்பதும், அதனை உறவினர்கள் இருந்து கேட்பதும் வழக்கம்.

இத்தகைய கல்வெட்டுகள் பேணிப் பாதுகாக்கும் அளவிற்குப் பயன்பாடு அற்றவை எனக் கருதுவார் பலர்.  இதன் காரணமாக அவற்றில் தொடர்ந்து பயன்படக் கூடிய விடயங்களை சேர்க்க முனைந்தனர். இதில் இலக்கியக்காரர்கள் முதற் பாய்ச்சல் செய்தார்கள்..

ஈழத்துக் கவிமலர்கள் என்ற பெயரில் தனது மகளான பாராசக்தியின் நினைவாக ரசிகமணி.கனக.செந்திநாதன் ஒரு கவிதை நூலைத் தொகுத்து அளித்தார். நான் அறிந்த வரையில் 1962ல் வெளிவந்த இது ஒரு முன்னோடி நினைவு மலர் என நினைக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து பல இலக்கிய நண்பர்கள் அவ்வாறான நூல்களை வெளியிட்டு வைத்தனர். எஸ்.பொ, குப்பிளான் சண்முகன் என உடனடியாகச் சிலர் நினைவில் வருகிறார்கள்.

நூற்றுக்கண்கான நினைவுமலர்கள் நூலகம் இணையத் தளத்தில் இருப்பதையும் அதற்கான இணைப்பையும் நண்பர் கோபி கோபிநாத் தந்துள்ளார். அவருக்கு நன்றி.

நூலகம் தளத்தில் நினைவு மலர்கள் அதற்கான இணைப்பு கீழே 
 நூலகம் இணையத் தளத்தில் நினைவுமலர்கள்

இந்த நினைவு மலரை அ.யேசுராசா தொகுத்திருக்கிறார்.
சிறப்பான அச்சுப் பதிவு செய்திருப்பது ஜெயந்த் சென்ரர்.

அன்னை நல்லம்மா நினைவுகளோடு எம் வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாக்க வேண்டிய சிறப்பான நினைவு மலர்.

நண்பர் யேசுராசா அனுப்பிய நூலைக் கொண்டு வந்து தந்தவர் நண்பர் தேவராசா முகுந்தன்.
இருவருக்கும் எனது நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »