Archive for the ‘நீரிழிவு’ Category
நீரிழிவு நோயாளர்களுக்கு sugar free பானங்கள் உணவுகள் ஆபத்தற்றவையா? எதிரொலி கேள்வி பதில்
Posted in sugar free பானங்கள், tagged மருத்துவம் on 03/09/2018| 3 Comments »
செயற்கை இனிப்புகள் ஆபத்தற்றவையா?,தயக்கமின்றி உபயோகிக்கலாமா?
Posted in அதீத எடை, செயற்கை இனிப்பு, மருத்துவம், tagged மருத்துவம் on 02/06/2016| 2 Comments »
அருகில் இருந்தவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொழில் சார் அமைப்பின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.
பெரும்பாலானவர்கள் சீனி போடமல் தேநீர் குடித்தார்கள். ஒரு சிலர் ஒரு கரண்டி மட்டும் போட்டார்கள். இவர் மட்டும் மூன்று கரண்டி சீனி போட்டு நாக்கைச் சப்புக்கொட்டினார்.
Sugar is an addiction என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இப்படிச் சீனி குடிப்பவருக்கு நீரிழிவு வந்தால் என்னவாகும். இனிப்பே சாப்பிடாமல் மாய்ந்து போவாரா?
செயற்கை இனிப்புகள்
வேண்டியதில்லை!
செயற்கை இனிப்புக்கள் கிடைக்கின்றனவே! அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா?
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையானது acesulfame potassium, aspartame, saccharin, sucralose, neotame, and advantame ஆகிய செயற்கை இனிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் பல இலங்கையிலும் கிடைக்;;கின்றன.
நீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும். அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.
இவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.
எனவே பல நோயாளர்கள் தாங்களாகவே அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் அத்தகைய செயற்கை இனிப்புகளை உணவு மற்றும் நீராகாரம் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா?
இந்த செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா என்பதுதான் பலரின் மனத்தை அரிக்கும் சந்தேகமாகும்.?
சில காலத்திற்கு முன் வந்த சில ஆய்வுகள் சிகப்பு சமிக்கை காட்டின.
கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு இது ஆபத்தாக முடியலாம் என்றது ஒரு ஆய்வு. காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் எனவும் அஞ்சப்பட்டது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது அதிகளவில் செயற்கை இனிப்புகளை உண்பதால் சுண்டெலிகளில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன் நீரிழிவு தோன்றுவதற்கான சாத்தியமும் அதிகம் என்றது.
ஆயினும் இந்த ஆய்வுகளை மனிதர்களில் இதுவரை செய்து நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சந்தேகங்களைத் தெளிவிப்பதற்காக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையானது (European Food Safety Authority) அத்தகைய இனிப்புகளின் பாதுகாப்புத்தன்மை பற்றிய ஒரு மீள் ஆய்வை ஆரம்பித்தது.
அதன் பலனாக சிகப்பு ஒளி மங்கத் தொடங்கியது.
இனிப்பான முடிவுகள்
மேற்படி மீள்ஆய்வு இன்னமும் தொடர்கிறது என்றபோதும் அஸ்பார்டேம் (aspartame) என்ற செயற்கை இனிப்புப் பற்றிய அறிக்கை 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 40 மிகி அளவைத் தாண்டாத அஸ்பார்டேம் இனிப்பை உட்கொள்வதால் ஆபத்துகள் ஏதும் இல்லை என அது முடிவு கூறியுள்ளது.
பிரான்சில் செய்யப்பட்ட மற்றொரு (Agency for Food, Environmental and Occupational Health & Safety) ஆய்வும் பச்சை விளக்குக் காட்டின.
செயற்கை இனிப்புகளை உட்கொள்வதால், இனிப்புச் சுவைக்கு பழக்கப்பட்டு அதனால் மேலும் மேலும் இனிப்பபுப் பண்டங்களை தேடி உண்ணும் பழக்கம் ஏற்படுவதும் இல்லை என்கிறது. அதாவது இனிப்பு சுவைக்கு அடிமையாவது (addiction) இல்லையாம். செயற்கை இனிப்புகளை குழந்தைப் பருவத்தில் உண்பவர்கள் வளரும்போதும் அதையே நாடுவார்;கள் என்ற பரவலான கருத்திற்கு ஆதாரம் இல்லை என்று மேலும் சொல்கிறது.
எடையைக் குறைப்பதற்கு கலோரி வலுக் குறைந்த இத்தகைய செயற்கை இனிப்புகள் உதவும் எனப் பலரும் நம்புகிறார்கள். அதே நேரம் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்கிறன சில ஆய்வுகள்.
எது உண்மையா?
பிரான்சில் செய்யப்பட்ட அந்த ஆய்வானது எடை அதிகரிப்பதற்கோ அல்லது எடை குறைப்பிற்கோ செயற்கை இனிப்புகள் காரணம் அல்ல என்கின்றது.
இந்தச் செயற்கை இனிப்புகள் குருதியில் குளுக்கோசின் அளவை அதிகரித்து அதன் காரணமாக உடலில் இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாக நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை செயற்கை இனிப்புகள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். ஆனால் அது தவறு என்கிறது பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வு. இந்தச் செயற்கை இனிப்புகள் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என்பது தெளிவாகிறது.
கர்ப்பணிகள் இவற்றை பாவிப்பதால் கருப்பையில் வளரும் சிசு குறை மாதத்தில் பிறப்பதற்கு அல்லது வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை.
செயற்கை இனிப்புகள் நிணநீர் தொகுதியில் lymphoma எனப்படும் ஒரு வகைப் புற்று நோயை ஏற்படுத்தலாம் என முன்னர் ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வானது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்கிறது.
இருந்தபோதும் இது பற்றி மேலும் ஆய்வு செய்வது நல்லது என்கிறது அதே பிரான்ஸ் அறிக்கை.
இறுதியாக
இறுதியாகச் சொல்லக் கூடியது என்ன?
செயற்கை இனிப்புகளை உட்கொள்ளவதால் குறிபிடக் கூடிய நன்மைகள் இல்லை என்பதும் அதே நேரம் அவற்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதே ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் அதிகார சபைகளின் பொதுவான சிபார்சாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்களைக் கூறலாம்.
- எவரும் தயக்கமின்றிப் பாவிக்கக் கூடியளவு ஆரோக்கியமான உணவு என்று செயற்கை இனிப்புகளைச் சிபார்சு செய்வது இன்றைய நிலையில் முடியாது. ஏனெனில் அவற்றினால் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை.
- இருந்தபோதும் அதிகளவு மென்பானங்களை அல்லது பழச் சாறுகளை அருந்துபவர்கள் அவற்றைக் கைவிட்டு, பதிலாக வெறும் நீரை மட்டும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்கு மாற்றீடாக செயற்கை இனிப்புகள் அமையும். முக்கியமாக நீரிழிவாளர்களுக்கு இது கூடியளவு பொருத்தமாக இருக்கும். அவர்கள் சீனி அதிகம் உள்ள பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இத்தகைய செயற்கை இனிப்புகளை தமது உணவிலும் நீராகாரங்களிலும் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.
சரி ஆரம்பத்தில் பேசியவரது விடயத்திற்கு வருவோம். இனிப்பிற்கு அடிமையான அவர் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பது அவசியமா.
நீரிழிவு நோயற்ற ஏனையவர்கள் இவற்றை உபயோகிப்பதில் எந்தவித நன்மையும் இருப்பதாக இது வரை அறியப்படவில்லை.
எனவே அவர் அதிகளவு சீனி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
அதேநேரம் செயற்கை இனிப்புகளை மாற்றீடு செய்வதில் எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (6 April 2015) கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0
நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்
Posted in கண் நோய், கண்களின் பாதுகாப்பு, நீரிழிவு, நீரிழிவுப் பார்வைக் குறைபாடு, மருத்துவம் on 02/01/2016| 4 Comments »
எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டொக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார்.
அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் வைத்திருக்கிறார். சீனியின் அளவைப் பார்த்து திருப்தியடைந்துவிடுவார்.
அவரது HbA1C அளவானது 8.5 ல் இருந்தது. HbA1C என்பது ஒருவரது சீனியின் அளவு சென்ற மூன்று மாதங்களாக எந்ந நிலையில் இருந்தது என்பதைக் கணிக்கும் முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். இது 6.5 என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.
நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநீரகம் பாதிப்புறவதை பலரும் அறிவார்கள். அதேபோல தங்கள் பார்வைத் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை.
நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம்.
நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு
கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஒளியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve) ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன.
உடவிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் பொருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவீர்கள்.அதுபோலவே விழித்திரைக் குருதிக் குழாய்களையும் பாதிக்கும்.
நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
அமெரிக்காவில் நீரிழிவு உள்ளவர்களில் 40 முதல் 45 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
எங்கள் நாட்டிலும் இதற்குக் குறையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தபோதும் இங்குள்ள பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் கண் மருத்துவரை அணுகுவதில் அக்கறை காட்டாது இருப்பதால் தாக்கத்தின் வீச்சு வெளிப்படையாகத் தெரியாது இருக்கிறது.
எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்
பாதிப்புற்ற விழித்திரை இரத்தக் குழாய்களிருந்து இரத்தம் கசியலாம்.. இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவற்றதாக்கும்.
இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியுலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கச் செய்யும்.
இதை macula edema என்பார்கள். கூரிய பார்வைக்கு அவசியமான மக்கியுலாவில் இவ்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும்.
நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைபடலாம். அடைபட்டவற்றை ஈடுசெய்வதற்காக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy என்பார்கள்.
அறிகுறிகள்
ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சற்று மங்கலாகலாகும்.
இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தானகவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும்.
எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம்.
இப்படி இருப்பது
நீரிழிவு விழித்திரை பாதிப்பு இருந்தால் இவ்வாறுதான் தெரியும்
சிகிச்சை
சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உப்புத் திரவத்தை மாற்றீடு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள்
நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள்
கற்றரக்ட்
கற்றரக்ட் என்பது கண்வில்லை வெண்மையடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் எவருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும்
குளுக்கோமா
குள்ககோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure) அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்புறுவதாகும். இதுவும் யாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்படத்தக்கது
இறுதியாக
இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை; மேலும் மோசமடைவதைத் தடு.ப்பதாகவே இருக்கும். எனவேதான் காலக்கிரமத்தில் கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
“எனக்கு கண் நல்லாத் தெரியுது” என்று கூறியவருக்கும் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரம்ப நிலை என்பதால் பாரிய சிகிச்சைகள் தேவைப்படவில்லை.
நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் குருதியின் சீனி அளவை கணிப்பதுடன் திருப்தியடைந்து விடக் கூடாது. கொஞ்சம்தானே அதிகமாக இருக்கு என அசட்டையாக இருக்கவும் கூடாது. ஏனெனில் நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு என்பது வெறும் குருதிச் சீனியின் அளவு அல்ல. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவானது சிறுநீரகம், நரம்புகள், இரத்தக் குழாய்கள், இருதயம், கண் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகனையும் சதாகாலமும் பாதித்துக் கொண்டே இருக்கிறது.
தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை நேரகாலத்துடன் கண்டறிந்தால் அவை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையில் நீரிழிவைக கண்டுபிடிப்பதும் அதனை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0
உணவு உண்ட பின்னர் பசியா? உணவின் பின்னான குருதிச் சீனி மட்டம் குறைதல்
Posted in சீனி மட்டம் குறைதல், நீரிழிவு, மருத்துவம், Reactive hypoglycemia, tagged மருத்துவம் on 18/02/2015| 5 Comments »
சாப்பிட்ட பின்னர் பசித்தல்
உணவின் பின்னான குருதிச் சீனி மட்டம் குறைதல்
“எனக்கு அடிக்கடி பசிக்கிறது” என்று யாராவது சொன்னால் ‘அடங்காப் பசியன்’, பீமன் பரம்பரையில் வந்தவன்’, ‘சாப்பாட்டுக் கிலி பிடிச்சவன்’ என்றெல்லாம் நக்கல் அடிக்கவே தோன்றும்.
மாடு இரை மீட்பது போல எந்த நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு மனசும் வயிறும் அடங்கும்.
“சாப்பிட்டு இரண்டு மூன்று மணித்தியாலயம் போனதும் எப்ப பார்த்தாலும் மீண்டும் பசி எடுக்கிறது” என்று யாராவது சொன்னால் அதை பொய்க் கதை என நினைக்காதீர்கள். அதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.
பொதுவாக நாம் காலை மதியம் இரவு என்று மூன்று நேர உணவு எடுக்கிறோம். சிலர் இடைநேரச் சிற்றுண்டிகள் எடுப்பதுண்டு. சாப்பிட்டால் வயிறு நிறையும். நீண்ட நேரம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் பசிக்கலாம்.
ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. சாப்பிட்ட பின்னர் ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் பசிக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? மனம்தான் என வெறுமனே சொல்லிவிட முடியாது. வேறு காரணங்களும் இருக்கக் கூடும்.
அத்தகையவர்களது இரத்தத் சீனி அளவை அத்தகைய பசி நேரத்தில் கணித்துப் பார்த்தால் அவர்களில் சிலரது இரத்தச் சீனியின் அளவு குறைந்திருக்கக் காணப்படலாம். பொதுவாக உணவு உண்ட பின் குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு உணவின் பின் குருதிச் சீனியின் அளவு குறைந்திருந்தது. ஆச்சரியமாக இருக்கிறதா?
குருதி சீனியின் அளவு குறைதல் (hypoglycemia)
பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் குருதிச் சீனியன் அளவு 80 லிருந்து 110 ற்குள் இருக்கும். சாப்பிட்ட பின்னர் இது 140 முதல் 180 வரை அதிகரிக்கலாம். அது 70 ற்குக் கீழ் குறைந்தால் குருதிச் சீனி குறைதல் (hypoglycemia) என்பார்கள். ஆனால் பொதுவாக குருதிச் சீனியின் அளவு தானாக வழமையை விடக் குறைவதில்லை. இதற்குக் காரணம் எமது உடலானது உடலின் கொழுப்புக் கலங்களிலும் ஈரலிலும் சேமித்து வைத்திருக்கும் கொழுப்புகளைக் கரைத்து குருதிச் சீனியின் அளவை சரியான அளவில் பேணும் வல்லமை கொண்டது என்பதாலாகும்.
ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு சாப்பிடடு 2 முதல் மணித்தியாலயத்தின் பின்னர் அது 70 முதல் 100 ஆகக் குறைந்திருக்கும். இதனை(Reactive hypoglycemia) என மருத்துவத்தில் அழைப்பார்கள். உணவிற்கு எதிர்வினையாக குருதிச் சீனி குறைகிறது. இது நீரிழிவு அற்றவர்களுக்கு ஆகும்.
இதைத் தவிர ஆகாரம் எடுக்காத நேரத்தில் காலையில் சிலரது சீனியின் அளவு மேற் கூறிய அளவுகளுக்குக் குறையக் கூடும். அதை மருத்துவத்தில் (Fasting hypoglycemia) என்பார்கள். பன்கிரியாஸ் சுரப்பியில் கட்டிகள், ஈரல் நோய்கள் போன்றவை அத்தகைய நிலையை ஏற்படுத்தக் கூடும். சில சத்திர சிகிச்சைகளின் பின்னரும் சில மருந்துகளாலும் கூட இவ்வாறு வெறும் வயிற்று சீனியின் அளவு குறைவதுண்டு.
நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சீனியின் அளவு குறைவது முற்றிலும் வேறு விடயமாகும். நீரிழிவற்கான மாத்திரைகளை அல்லது ஊசி போடும் போது உணவுகளை சரியான நேரத்தில் எடுக்காததாலும், விரதம் உபவாசம் இருப்பதாலும் குருதிச் சீனியின் அளவு குறைகிறது. அதைவிட மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை மாற்றுவதும், அவற்றின் அளவுளை மாற்றுவதும் அளவு மீறிப் போடுவதும் நீpரிழிவு நோயாளரின் குருதிச் சீனி அளவு குறையக் காரணமாகின்றன.
அறிகுறிகள் எவை?
குருதியில் சீனியின் அளவு குறையும் போது வெளிப்படும் அறிகுறிகள் எவை. வழமையாக சீனியின் அளவு குருதியில் குறையும் போது தோன்றும் அறிகுறிகளை ஒத்ததே இவையும். முக்கியமான அறிகுறி பசிதான். அதாவது இங்கு சாப்பிட்ட பின் ஏற்படும் பசியாகும். அத்துடன் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வர். உடற் பதற்றம், வியர்வை, தலைப்பாரம், தூக்கத் தியக்கம், தலைச்சுற்று, தலையிடி, மனப்பதற்றம், மனக் குழப்பம், எரிச்சலுறுதல், பார்வை மங்கல், உங்ளங் கை கால்கள் குளிர்தல், ஓங்காளம், சத்தி போன்ற அறிகுறிகளில் சில ஏற்படலாம்.
ஆனால் மேற் கூறிய அறிகுறிகள் குருதியில் சீனி குறைவதால் மட்டுமின்றி வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பது உண்மையே. மனச்சஞ்சலம் கவலை உணவு ஒவ்வாமை உணவு நேரங்களில் மாற்றம் போன்றவையும் காரணமாகலாம்.
எனவே அறிகுறிகளை வைத்துக் கொண்டு இது உணவு எதிர்வினையால் ஏற்படும் குருதிச்சீனி குறைவடைதல் என்ற சுய முடிவிற்கு வரக் கூடாது. மருத்துவரைக் காண வேண்டும்.
ஒருவரது அறிகுறிகளை மருத்துவர் நன்கு பகுத்து ஆராய்வார். பின்னர் அத்தகைய அறிகுறிகள் ஏற்படும் வேளையில் குருதியில் சீனியின் அளவைக் கணிப்பார்கள். அது குறைவாக இருப்பது நிச்சயமானால் மீண்டும் ஆகாரம் எடுத்தவுடன் அத்தகைய அறிகுறிகள் மறைந்து சீனியின் அளவு அதிகரிக்கிறதா என அவதானிப்பார்கள். இவற்றின் பின்னர்தான் அது Reactive hypoglycemia என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
மருத்துவமும் உணவு முறையும்
பெரும்பாலும் மருத்துவம் எதுவும் தேவைப்படாது.
உணவு முறைகளிலும் அவற்றை உட்கொள்ளும் நேரங்களிலும் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது மட்டும் போதுமானது.
வி ரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பு மற்றும் மாப்பண்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அத்தகைய உணவுகள் விரைவாக உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்படுவதால் திடீரென குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தததைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக இன்சுலின் சுரக்கும். இது திடீரென குருதிச் சீனியின் அளவைக் குறைத்து பசியையும் ஏனைய அறிகுறிகளையும் தோற்றுவிக்கும்.
கேக் புடிங், குக்கீஸ், ஐஸ்கிறீம், மென்பானங்கள், சினியும் சீனி சேர்த்த உணவுகளும், ஜெலி, ஜாம், இனிப்புட்டப்பட்ட பழச் சாறுகள், தேன், சொக்கிளட், சீனி சேர்த்த தேநீர், கோப்பி போன்றைவை அத்தகையவையாகும். இவற்றை உட்கொள்வதில் நாட்டமிருந்தால் நார்ப்பொருள் அதிகமுள்ள காய்கறிகள் பழவகைகளுடன் கலந்து குறைந்த அளவை மட்டும் உட்கொண்டால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
இனிப்புள்ள உணவுகளைக் குறைப்பது மட்டுமின்றி அவற்றை வெறு வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக சமபல வலுவுள்ள உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பற்ற இறைச்சிகளை தேர்ந்தெடுங்கள். பருப்பு பயறு கடலை சோயா போன்ற தாவரப் புரதங்களை அதிகளவு சேருங்கள். காய்கறி வகைகளையும் பழவகைகளையும் கூடியளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மதுபானமும் குருதியில் சீனியின் அளவை குறைப்பதுண்டு. முக்கியமான உணவின்றி வெறும் வயிற்றில் அருந்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
மாப் பொருள் அதிகமுள்ள உணவுகளான சோறு பாண், நூடில்ஸ், ரொட்டி அப்பம் போன்றவற்றை அதிகளவில் ஒரே நேரத்தில் உண்ணும் போதும் அவ்வாறு சீனி அளவுகளில் மாற்றம் ஏற்படும்.
எனவே இப் பிரச்சனை உள்ளவர்கள் நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவு உண்பதைத் தவிர்த்து, 4 அல்லது 5 மணி நேர இடைவெளிகளில் சிறிய சிறிய உணவுகளாக எடுப்பது நல்லது.
கொழுப்பு உணவுகளும் வேகமாக ஜீரணமடைவதில்லை. ஆனால் அதிக கொழுப்பு ஆகாது. விதைகள், கொட்டைகள் போன்றவற்றை அளவோடு சேர்ப்பது உணவு வேகமாக சமிபாடடைவதைத் தவிர்க்கும்.
மாப் பொருள் உணவுகள் விரைவில் சீரணமடைந்து குருதிச் சீனி அளவை அதிகரிப்பது போல புரத உணவுகள் அதிகரிப்பதில்லை. எனவே பிரதான உணவுகளுடன் மீன் முட்டை, கொழுப்பு குறைந்த இறைச்சி, பயற்றின உணவுகளையும் கலந்து சாப்பிட வேண்டும்.
உணவின் பின் குருதிச் சீனி மட்டம் குறைபவர்கள் இது போன்ற உணவு முறைகளைக் கைக் கொள்வது நல்லது.
ஆரோக்கியமான இந்த உணவு முறைகள் ஏனையவர்களுக்கும் நல்லதே.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
00.0.0.00
நீரிழிவு வராமல் தடுத்தல் – பசிய இலைவகைகளை தினமும் உண்ணுங்கள்.
Posted in இலைவகைகள், தடுப்பு முறை, நீரிழிவு, tagged மருத்துவம் on 11/11/2014| 3 Comments »
“சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே”. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.
“தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.” என்றார் மற்றொருவர்.
நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.
ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது. அப்படியானால் தடுப்பது எப்படி?
- போஸாக்குள்ள உணவாக உட்கொள்ளல். ஆனால் இது சீனியைத் தவிர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
- தினசரி உடற்பயிற்சி செய்தல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல்.
- உடல் எடையை சரியான அளவில் பேணுதல்.
எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.
போசாக்கு உணவு
போசாக்குள்ள உணவு என்பது என்ன? இனிப்பு, எண்ணெய், நொறுக்குத் தீனி போன்றவற்றை மிகக் குறைவாக உண்ணல். மாப்பொருள் உணவை அளவோடு உண்ணல், புரத உணவுகளை தேவையான அளவில் உண்ணல், காய்கறி மற்றும் பழவகைகளை அதிகம் உண்ணல் எனச் சொல்லலாம்.
தினமும் ஒவ்வொரு பங்கும் 80 கிராம் நிறையுள்ளதாக 5 பங்கு அளவில் காய்கறிகளையும் பழவகைகளையும் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தாகும்.
எத்தகைய காய்கறி உணவுகள் நீரிழிவு வராமல் தடுக்க உதவும் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.
மாப்பொருள் குறைந்த அளவுள்ள காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகளில் மாப்பொருள் உள்ளதாயினும் அவற்றில் நார்பொருளும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அளவோடு உண்பதில் தவறில்லை. ஏனைய காய்களிகளில் மாப்பொருள் குறைவாகவும், நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளதால் நல்லது.
இலைவகைகள் மேலும் சிறந்தவை என்கிறார்கள்.
நீரிழிவைத் தடுக்கும்
பச்சை நிறமான இலைவகைகள் அதிகளவு உட்கொள்ளும் உணவு முறையானது நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என University of Leicester யைச் சார்ந்த Patrice Carter தலைமையிலான ஒரு ஆய்வு கூறியது. ஆறு ஆய்வுகளின் முடிவுகளை மீள்பரிசோதனை செய்த போது இது தெரிய வந்ததாம்.
ஏனைய காய்கறிகள் உண்பவர்களை விட அதிகளவு பச்சை நிறமான இலைவகைகளை உண்பவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 14 சதவிகிதம் குறைவு அது கூறியது. இது 13 வருடங்களாக 223,000 பேரிடையே செய்த அவதானிப்பின் முடிவு.
ஆனால் ஏனைய வகை காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உண்பவர்களிடேயே இந்தச் நீரிழிவுக்கு எதிரான சாதகமான பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.
இதன் அர்த்தம் ஏனைய வகை காய்கறிகள் பழங்கள் பயனற்றவை என்பது அல்ல. ஏனைய பல ஆராச்சி முடிவுகள் எல்லாப் பழவகைகளும், காய்கறிகளும் நீரிழிவைத் தடுப்பதில் பங்களிப்பதுடன், இருதயநோய்களுக்கான சாத்தியத்தையும் குறைப்பதாகக் கூறுகின்றன. ஆயினும் இலைவகை உணவுகளின் பங்களிப்பு அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.
இலைவகை உணவுகளின் நற்பயனுக்குக் காரணம் என்ன?
ஒட்சிசனெதிரிகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விட்டமின் சீ போன்ற ஒட்சிசனெதிரிகள் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் தாராளமாக இருப்பதே காரணம் எனலாம்.
பசிய இலை வகை உணவுகளின் போசாக்கு
- இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கினறன.
- இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.
- விட்டமின் D வகைகளுடன், விட்டமின்கள் K, C, E ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விட்டமின்கள் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.
- பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin) போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients) இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.
- கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.
விற்றமின் கே யின் நன்மைகள்
பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம் என்றோம். அதன் பலாபலனகள்; என்ன?
- குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும். மருத்தவ ரீதியாக இதைத் தடுப்பதற்கே குறைந்த அளவு அஸ்பிரின் (75-100mg) மற்றும் குளபிடோகிரில் போன்ற மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொடுக்கிறார்கள். தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
- விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
- நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
- அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
- இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.
எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0
நீரிழிவு நோயாளரின் குருதிச் சீனியின் அளவு குறைதல் ஏன்? என்ன செய்யலாம்?
Posted in குருதிச் சீனியின் அளவு குறைதல், நீரிழிவு, மருத்துவம், Uncategorized, tagged சீனி மட்டம் குறைதல் on 03/10/2014| 3 Comments »
“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.
அவர் பேசியது லண்டனில் இருந்து.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டா.
பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.
பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோசைப் பார்த்தபோது அது 40 ல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும்.
மற்றொரு ஐயாவின் நிலை முற்றும் மாறானது.
அண்மையில்தான் நீரிழிவு எனக் கணடறிந்திருந்தோம். “நீங்கள் தந்த குளிசைப் போட்டால் எனக்கு களைக்குது. இரத்தத்திலை சீனி குறைஞ்சபடியால்தான் தலைச் சுத்து வரும் என்று நண்பர் சொன்னர். நான் தலைச்சுத்து வந்தவுடன் சீனியைப் வாயிலை போடுறன்.”
அவரது இரத்த சீனி அளவைப் பார்த்போது அது 300 யைத் தாண்டியிருந்தது. குருதியில் சீனியின் அளவு மிக அதிகமாக இருந்தமைக்கு காரணம் அவரது சீனியன் அளவு குறைவது பற்றிய தவறான கருத்துதான்.
களைப்பு என்றவுடன் சீனியை தேவையின்றி உபயோகித்திருந்தார்.
களைப்பு தலைச்சுத்து சோர்வு என்ற எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது சீனி குறைவதால்தான் என சீனி நோயாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இவை வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். தனக்கு நீரிழிவு என்று அறிந்தவுடன் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பாக தோன்றுவதுண்டு.
நீரிழிவும் மருந்துகளும்
நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது.
மாறாத புண்களுக்காக பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை.
“இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்” எனப் பலர் சொல்வார்கள் ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறு நீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுசு கிட்டுகிறது.
குருதியில் சீனியின் அளவு குறைதல்
இருந்தபோதும் ஒரு முக்கியமான ஆபத்து இருக்கவே செய்கிறது. முன்னரே குறிப்பட்ட குருதியில் சீனியன் அளவு குறைவதே அது ஆகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாக இங்கு காணப்படுவதில்லை. நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.
இருந்தபோதும் Yale School of Medicine and the University of Chicago வில் செய்யப்பட்ட ஆய்வானது குருதியில் இரத்தம் குறைவதானது எதிர்பாராமல் நடக்கக் கூடியது என்கிறது.
தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.
ஆனால் 10000 Type 2 நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். அதுமட்டுமின்றி சீனியின் அளவு கட்டுப்பாஎன்றி அதிகமாக இருந்தவர்களுக்கே அவ்வாறு சீனி மட்டம் எதிர்பாராது குறைந்ததாம். .
குறைந்த சீனி மட்டம் என்பது எது?
சாதாரண சீனி மட்டம் என்பது 60 mg/dl முதல் 118 mg/dl வரையாகும்எது? சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.
குறைந்த சீனி மட்டத்தின் அறிகுறிகள் எவை?
ஒருவரின் இரத்தத்தில் சீனிமட்டம் குறைந்திருப்பதை எப்படி அறிவது?
நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, மாறாட்டம், தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
சில தருணங்களில் நோயாளி; உணர்வதற்கு முன்னரே கூட இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்படைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.
இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம் 60 mg/dl (3.3 mmol/L) க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை(Hypoglycemia) என நிச்சயமாகச் சொல்லலாம்.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?
உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.
திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். ‘இண்டைக்கு சாப்பாடு கூடிப் போச்சு’ என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.
நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதி;லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் தேவையான அளவிலும் அதிகம் உட்கொண்டால் அந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சேடாவோ குடியுங்கள், அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் விரைவாக குருதியால் விரைவாக உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.
உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், ஆனால் அதே நேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.
முதலில் கூறிய பெண்ணுக்கு நாளம் ஊடாக குளுக்கோஸ் ஏற்றிய பின் மெதுவாக சகச நிலைக்கு வந்தாள். வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தது. இருந்தபோதும் தாதிப்பெண் அதை உபயோகித்து சீனியின் அளவை அளவிட்டுப் பார்த்திருக்கவில்லை. விடயம் விளங்கிய மகளும் ஊருக்குப் போயிருந்தாள். மருத்துவ மனையில் கொடுத்த மருந்துகளின் அளவை நீரிழிவின் நிலைக்கு மாற்றவில்லை. அதனால் எற்பட்ட வினை.
நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?
நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஓரு சிலர் குருதியி;ல் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை.
ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre Diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் iளெரடin சநளளைவயnஉந நிலையால் அவர்களது சீனி மட்டம் குறையலாம்.
மிக மிக அரிதாக இன்சுலினை உறபத்தி செய்யும் கட்டிகள் (insulinomas)தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.
மேற்கொண்டு செய்ய வேண்டியவை
குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.
- மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.
- சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும். உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவு ள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
- உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100 ற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியைச் செய்யலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல.
- மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.00.0.0
நீரிழிவு நோயுள்ளவர்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை?
Posted in உணவு முறை, நீரிழிவு, tagged மருத்துவம் on 15/07/2014| 9 Comments »
நீரிழிவு நோயுள்ளவர்கள் உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை எவை?
தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம்.
- தங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருதல்.
- தினமும் உடலுழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், அல்லது உடற் பயிற்சி செய்தல்,
- தங்களுக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்த மருந்துகளை ஒழுங்கான முறையில் உட்கொள்ளுதல் ஆகியவையே ஆகும்.
இக் கட்டுரையில் முக்கியமாக நீரிழிவாளர்களின் உணவு முறை பற்றியே பேச உள்ளோம்.
நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.
உணவின் கூறுகள்
எமது உணவில் பல கூறுகள் உள்ளன. மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், விற்றமின், தாதுப் பொருட்கள் ஆகியவையே அவை. பெரும்பாலான உணவுகளில் இக் கூறுகள் அனைத்துமே இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் சில கூறுகள் அதிகமாகவும் சில குறைவாகவும் இருக்கும்.
நாம் அதிகம் உண்பது மாப்பொருள் உணவுகளையே.அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற தானிய வகைகள் யாவுமே மாப்பொருள் உணவுகள்தான். உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற யாவற்றிலும் உள்ளது மாப் பொருள்தான்.
மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றிலும், பயறு பருப்பு, சோயா, கடலை, உழுந்து போன்ற அவரையின உணவுகளிலும் புரதம் அதிகம் உண்டு.
எல்லா வகை எண்ணெய்களும் கொழுப்பு சத்து மிகுந்தவை. பாலாடை, பட்டர், மார்ஜரீன், மிருக இறைச்சிகளிலுள்ள கொழுப்புப் பகுதிகள் போன்ற யாவும் அதிக கொழுப்புள்ள உணவுகளாகும்.
பழவகைகளிலும், காய்கறி வகைகளிலும் நார்ப்பொருள், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் செறிவாக உண்டு.
உணவு வகைகள்
இவ்வாறு உணவின் கூறுகள் பலவானாலும் வசதி கருதி நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவு வகைகளை மூன்று வகைகளாகத் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
1. விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
2. இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை
3. மிகக் குறைவாக உண்ண வேண்டியவை
விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.
ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை ஓரளவே உண்ண வேண்டும்.
இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை
பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.
சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது. ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.
தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு எடுக்க நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள் உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.
இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல. இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.
பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.
உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.
பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பேரீச்சம்பழத்தில் சீச்சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிகஅதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.
மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும். மாடடிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முடடையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை மட்டும் உண்ணலாம்.
மிகக் குறைவாக உண்ண வேண்டியவை
இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.
இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.
இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?
100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் ஸ்லப்பில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?
100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸகட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது
அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.
‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.
களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.
எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.
உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.
ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.00.0.00.0.00.0
உருளைக் கிழங்கு ஆரோக்கிய உணவா? நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதா?
Posted in உணவு முறை, உருளைக் கிழங்கு, நீரிழிவு, tagged மருத்துவம் on 26/05/2014| 4 Comments »
பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.
“கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்” வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய இரத்த சீனியின் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் பாராட்டினேன்.
உருளைக்கிழங்கு கொடுக்காத தன்னுடைய கெட்டித்தனத்தால்தான் அவ்வாறு நடந்தது என பெரிய கடகத்தில் புகழைத் தன் தலையில் சுமந்து கொண்டார்.
நொட்டைச் சாப்பாடுகளைத் தவிர்த்து காய்கறி பழவகைளை அதிகம் சாப்பிட்டும், வாசிகசாலைத் திண்ணையில் குந்தியிருந்து அரட்டை அடிப்பதைத் துறந்து கடற்கரை வரை நடைப் பயிற்சி செய்தும் அவர் செய்த சுய முயற்சிகள் யாவும் அவளது பெருவாயால் தூர்வாரி மூடப்பட்டன.
“நிலத்திற்கு கீழே விளையுறதுகளை கண்ணிலையும் காட்டக் கூடாது என்று டொக்டர் சொன்னதை நான் மறக்கிறதே இல்லை” என்றார் மற்றொருவர். கரட், உருளைக்கிழங்கு, வத்தாளை, கரணை, மரவெள்ளி, பனங்கிழங்கு, இவை யாவுமே நிலத்தின் கீழ் விளையும் கிழங்குகள்தான். ராபு, நோகோல், கரட், பீட்ரூட், இவையும் அவ்வாறுதான் மண்ணுள் விளைபவைதான்.
அந்த டொக்டர் மண்ணுக்கு கீழ் போய் எவ்வளவு காலமோ தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவைக் கொண்டு அவர் சொல்லியிருக்கக் கூடும் அல்லது இவர் தவறாக அர்த்ப்படுத்தியிருப்பார். ஆனால் இன்றும் அப்படியா?
உருளைக் கிழங்கு
உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் உணவு வகைகளில் உருளைக் கிழங்கு முன்னணியில் நிற்கிறது. பருவகால வேறுபாடுகளைக் கடந்து வருடம் பூராவும் உலகெங்கும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் எல்லாத் திசைகளிலும் இது விளைவிக்கப்படுவதே ஆகும்.
தாவர வர்க்கத்தில் இது தக்காளி, கத்தரி, மிளகு போன்றவற்றின் இனத்தைச் சேர்ந்தது. சரியான பருவத்தில் இதை கிண்டி அறுவடை செய்யாது விட்டால் அது வளர்ந்து பூத்துக் காய்த்து தக்காளி போன்ற ஒரு பழத்தைத் தரும்.
அவ்வாறு பூத்துக் காய்ப்பதற்கு தேவையான சக்தியை வழங்குவதற்காக தனது கிழங்கில் சேர்த்து வைக்கிறது. ஆனால் நாம் கிழங்கு நல்ல பருவத்தில் இருக்கும்போது கிண்டி எடுப்பதால் அதன் வாழ்க்கைச் சக்கரம் பூர்த்தியடைவதைத் தடுக்கிறோம்.
உருளைக் கிழங்கின் போசாக்கு
உருளைக் கிழங்கு முக்கியமான ஒரு மாப் பொருள் உணவாகும். அரிசி, கோதுமை போன்றவையும் மாப்பொருள் உணவுகள்தான். சமைக்காத அரியில் 80 சதவிகிதமும், உருளைக்கிழங்கில் 20, வத்தாளையில் 20 மரவெள்ளி 38 சதவிகிதம் என மாப்பொருள் இருந்தபோதும் சமைத்தபின் இவற்றில் பெரு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மாப்பொருள் உணவுகள் ஜீரணமடைந்து குளுக்கோசாக குருதியில் கலந்து எமது உடலின் செயற்பாடுகளுக்கான சக்தியை வழங்கும். சக்தி கலோரி அலகுகளில் குறிப்பிடப்படுவதை அறிவீர்கள்.
சமைக்காத உருளைக் கிழங்கு 100 கிராமில் 70 கலோரிகள் இருக்கிறது. புழங்கல் அரிசியில் 77 கலோரிகள் உள்ளது. எனவே ஏறத்தாள சமஅளவே அரிசிலும் உருளைக் கிழங்கிலும் உள்ளது.
அதே நேரம் அவித்த உருளைக் கிழங்கில் 80ம், சுட்டதில் 85ம், மசித்ததில் 108ம், பொரித்தில் 150 கலோரிகளும் உண்டு. அதே போல அரிசியை அவித்து சோறாக்கும் போது அதன் கலோரி வலு அதிகமாகவே செய்யும். ஆனால் பொரிக்கும் போது அல்லது பட்டர் போன்றவை சேர்ந்து மசியலாக்கும்போது உருளைக் கிழங்கின் கலோரி வலு அதீதமாகக் அதிகரிப்பதைக் மேலே கண்டிர்கள்
மாப் பொருளைப் பிரதானமாக இது வழங்குகின்ற போதும் இதில் விட்டமின் C மிக அதிகம் உண்டு. ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கானது எமது தினசரி விட்டமின் C தேவையின் கால்வாசியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைத் தவிர vitamin B6, copper, potassium, manganese ஆகியவையும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே நல்ல உணவுதான்.
மிக முக்கியமாகக் குறிப்பட வேண்டியது அதிலுள்ள நார்ப்பொருள் ஆகும். ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கில் சுமார் 2.93 கிராம் உள்ளது. அமெரிக்க விவசாய ஆய்வுத் திணைக்களமானது இதில் 60 ற்கு மேற்பட்ட phytochemicals மற்றும் விட்டமின்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒட்சிசன் எதிரிகளான (antioxidents) carotenoids, flavonoids போன்றவையும் அடங்குகின்றன.
இவற்றைத் தவிர பிரஷரைக் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமான kukoamines உருளைக்கிழங்கில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்காக உருளைக் கிழங்கைச் சாப்பிடுங்கள் என எந்த மருத்துவரும் சிபார்சு செய்ய மாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டால் எவ்வளவு குறையும் அதன் பலன் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை கிடையாது.
உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது நன்கு கழுவிய பின் தோல் நீக்காமல் சமைப்பது அவசியம். ஏனெனில் அதிலுள்ள நார்ப்பொருளில் பெரும்பகுதி அதிலேயே உள்ளது. விற்றமின்களும் தாதுப்பொருட்களும் அதில் அடங்கியுள்ளன.
உணவுகளில் மாப்பொருள் ஒப்பீடு
ஒரு முட்டையின் அளவுடைய அவித்த உருளைக்கிழங்கு, ஒரு மேசைக் கரண்டி சோறு, ஒரு மெல்லிய பாண் துண்டு ஒரு சிறிய நானில் (NAN) ¼ துண்டு, கோர்ன் பிளேக் இரு மேசைக் கரண்டி, ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒரேயளவு மாப்பொருள் உண்டு.
பழங்களைப் பொறுத்தரையில் அவற்றில் மாப் பொருள் குறைவு. ஒவ்வொரு அப்பிள், ஒரேன்ஜ், பியேர்ஸ், சிறிய வாழைப்பழம் ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட அதேயளவு மாப்பொருள் உண்டு. எனவேதான் நீரிழிவு உள்ளவர்களை மாப்பொருள் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து காய்கறி பழவகைகளை அதிகம் உண்ணும்படி சிபார்சு செய்யப்படுகிறது.
ஆனால் அதேநேரம் மாப்பொருள் உணவுகள் வேண்டாதவை அல்ல. எமது உடலுக்கு அவசியம் என்பதை மறக்கக் கூடாது. ஏனெனில் அவைதான் எமது இயக்கதிற்கு அவசியமான சக்தியைக் கொடுக்கின்றன. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
நீரிழிவும் உருளைக் கிழங்கும்
உண்மையில் உருளைக் கிழங்கு நீரிழிவாளர்களுக்கு ஆகாத உணவா?
நீரிழிவு உள்ளவர்கள் மாப்பொருள் உணவுகளான சோறு, பாண், இடியப்பம் பிட்டு போன்றவற்றை உண்பதைப் போலவே உருளைக் கிழங்கையும் உண்ணலாம். ஆனால் அவற்றின் அளவுகளில் கவனம் எடுக்க வேண்டும். உருளைக் கிழங்கு எமது பிரதான உணவு அல்ல. நாம் அவற்றை பொதுவாக பிரதான உணவுகளான சோறு இடியப்பம் பிட்டு பாண் போன்றவற்றுடன் கறியாக கலந்து உண்கிறோம்.
எனவே இரண்டையும் அளவு கணக்கின்றி உண்ணக் கூடாது. உருளைக் கிழங்கை அதிகம் எடுத்தால் அதற்கேற்ப பிரதான உணவின் அளவில் சற்றுக் குறைக்க வேண்டும்.
உருளைக் கிழங்கு சோறு இரண்டிலும் நார்ப்பொருள் உள்ள போதும் மேலும் அதிக நார்ப்பொருள் உள்ள காய்கறி;களை சேர்த்து உண்பது நல்லது. குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிப்பதை இது குறைக்கும். கீரை வகைகள், ஏனைய நார்த்தன்மையுள்ள காய்கறிகள் போன்றவை அவ்வாறு சேர்த்து உண்பதற்கு ஏற்றவையாகும் ஆனால் அதற்கு மேல் பயற்று இன வகை உணவுகளான பருப்பு பயறு கௌபீ சோயா கடலை போஞ்சி பயிற்றை போன்றவற்றை சேர்த்து உண்பது மேலாகும்.
இவற்றுடன் முட்டை, மீன், கொழுப்பற்ற இறைச்சி போன்றவற்றை தேவைக்கு ஏற்றளவு சேர்த்துக்கொள்ளலாம்.
சமைக்கும்போது எண்ணெய், நெய், பட்டர் போன்றவற்றில் உருளைக் கிழங்கை வதக்கிச் சமைத்தல் நல்லதல்ல. ஏனெனில் அதன் கலோரி வலு அதிகரிக்கும். அது நீரிழிவு கொலஸ்டரோல் அதீத எடை உள்ளவர்களுக்கு அவ்வாறே ஏற்றதல்;ல.
பொரித்த உருளைக் கிழங்கின் கலோரி வலுவானது அவித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே நீரிழிவாளர்கள் மட்டுமின்றி தமது ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள எவரும் அவற்றை தவிர்ப்பது நல்லது. அல்லது ஒரிரு துண்டுகள் என மட்டுப்படுத்திக் கொள்வது நல்லது
இன்றைய இளைய வயதினருக்கு ஏற்றவிதமாக பல உள்ளுர் வெளிநாட்டு உணவகங்கள் பொட்டேட்டோ சிப்சை பரிமாறுகிறார்கள். இது எமது உருளைக் கிழங்கு பொரியலைப் போன்றதே. மிக அதிக கலோரி வலு கொண்டதாகும்.
உருளைக் கிழங்கில் பெரு விருப்பம் கொண்டவர்கள் சலட்டாகத் தயாரித்து உண்ணலாம். அவித்த உருளைக் கிழங்கு துண்டுகளுடன் அவித்த போஞ்சி கோவா, சலட் இலை போன்றவை சேர்ந்த சலட் ஆரோக்கியமான உணவாகும்.
புதிய உருளைக் கிழங்கை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. வைத்தால் அதிலுள்ள சீனிச் சத்து அதிகமாவதுடன் அதன் சுவையும் மணமும் கெட்டுவிடும். வெளியே பாதுகாக்கும் போதும் வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. பேப்பர் பையில் சேமித்து வைப்பது நல்லது. சரியான முறையில் சேமித்தால் 2 மாதம் வரை கெடாது இருக்கும் என்கிறார்கள்
சமைத்த உருளைக் கிழங்கை நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்தாலும் கெடாது இருக்கும் என்கிறார்கள் இல்லதரசிகள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.00.0
நிரிழிவு நோயா? உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Posted in சிறுநீரகப் பாதிப்பு, தடுப்பு முறை, நீரிழிவு, tagged மருத்துவம் on 05/10/2013| 12 Comments »
அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.
இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.
- ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.
- அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.
- பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.
- மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
- இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.
நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
- இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
- இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும்.
நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.
சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.
- சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
- காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
- ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- இருதய நோயுள்ளவர்கள்
- தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.
1. இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.
2. சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.
ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.
நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.
- இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
- இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
- உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
- தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
- சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.
மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.
ஆயினும் அவளது சிறுநீரகம் இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?
எனது ஹாய் நலமா புளக்கில் இவ்வருடம் 2013 ஏப்பிரலில் பதிவிட்ட கட்டுரை நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
Posted in கால் புண்கள், குறுந்தகவல், நீரிழிவு, tagged மருத்துவம on 11/08/2013| 1 Comment »
காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.
நீரிழிவினால் காலுக்கான
- குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன.
- அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.
- மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
- உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை.
வெறும் காலுடன் கோயில் கும்பிடப் போய் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் தேடிக் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்.கால்களை இழந்தவர்களும் உண்டு.
கோயில்கள் உட்பட அனைத்து வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் காலணியுடன் செல்லக் கூடிய காலம் வர அருள வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
![]() |
Thanks:- http://drplusindia.com/images/Foot-Problems/Diabetic%20Foot.jpg |
காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.
- உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்
- புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்
- குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.
- உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள்
- காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்
- தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக அவதானியுங்கள். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
- நகம் வெட்டும்போது மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். நகத்தின் ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் அவதானம் வேண்டும்.