சாப்பிட்ட பின்னர் பசித்தல்
உணவின் பின்னான குருதிச் சீனி மட்டம் குறைதல்
“எனக்கு அடிக்கடி பசிக்கிறது” என்று யாராவது சொன்னால் ‘அடங்காப் பசியன்’, பீமன் பரம்பரையில் வந்தவன்’, ‘சாப்பாட்டுக் கிலி பிடிச்சவன்’ என்றெல்லாம் நக்கல் அடிக்கவே தோன்றும்.
மாடு இரை மீட்பது போல எந்த நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு மனசும் வயிறும் அடங்கும்.
“சாப்பிட்டு இரண்டு மூன்று மணித்தியாலயம் போனதும் எப்ப பார்த்தாலும் மீண்டும் பசி எடுக்கிறது” என்று யாராவது சொன்னால் அதை பொய்க் கதை என நினைக்காதீர்கள். அதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.
பொதுவாக நாம் காலை மதியம் இரவு என்று மூன்று நேர உணவு எடுக்கிறோம். சிலர் இடைநேரச் சிற்றுண்டிகள் எடுப்பதுண்டு. சாப்பிட்டால் வயிறு நிறையும். நீண்ட நேரம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் பசிக்கலாம்.
ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. சாப்பிட்ட பின்னர் ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் பசிக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? மனம்தான் என வெறுமனே சொல்லிவிட முடியாது. வேறு காரணங்களும் இருக்கக் கூடும்.
அத்தகையவர்களது இரத்தத் சீனி அளவை அத்தகைய பசி நேரத்தில் கணித்துப் பார்த்தால் அவர்களில் சிலரது இரத்தச் சீனியின் அளவு குறைந்திருக்கக் காணப்படலாம். பொதுவாக உணவு உண்ட பின் குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு உணவின் பின் குருதிச் சீனியின் அளவு குறைந்திருந்தது. ஆச்சரியமாக இருக்கிறதா?
குருதி சீனியின் அளவு குறைதல் (hypoglycemia)
பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் குருதிச் சீனியன் அளவு 80 லிருந்து 110 ற்குள் இருக்கும். சாப்பிட்ட பின்னர் இது 140 முதல் 180 வரை அதிகரிக்கலாம். அது 70 ற்குக் கீழ் குறைந்தால் குருதிச் சீனி குறைதல் (hypoglycemia) என்பார்கள். ஆனால் பொதுவாக குருதிச் சீனியின் அளவு தானாக வழமையை விடக் குறைவதில்லை. இதற்குக் காரணம் எமது உடலானது உடலின் கொழுப்புக் கலங்களிலும் ஈரலிலும் சேமித்து வைத்திருக்கும் கொழுப்புகளைக் கரைத்து குருதிச் சீனியின் அளவை சரியான அளவில் பேணும் வல்லமை கொண்டது என்பதாலாகும்.
ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு சாப்பிடடு 2 முதல் மணித்தியாலயத்தின் பின்னர் அது 70 முதல் 100 ஆகக் குறைந்திருக்கும். இதனை(Reactive hypoglycemia) என மருத்துவத்தில் அழைப்பார்கள். உணவிற்கு எதிர்வினையாக குருதிச் சீனி குறைகிறது. இது நீரிழிவு அற்றவர்களுக்கு ஆகும்.
இதைத் தவிர ஆகாரம் எடுக்காத நேரத்தில் காலையில் சிலரது சீனியின் அளவு மேற் கூறிய அளவுகளுக்குக் குறையக் கூடும். அதை மருத்துவத்தில் (Fasting hypoglycemia) என்பார்கள். பன்கிரியாஸ் சுரப்பியில் கட்டிகள், ஈரல் நோய்கள் போன்றவை அத்தகைய நிலையை ஏற்படுத்தக் கூடும். சில சத்திர சிகிச்சைகளின் பின்னரும் சில மருந்துகளாலும் கூட இவ்வாறு வெறும் வயிற்று சீனியின் அளவு குறைவதுண்டு.
நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சீனியின் அளவு குறைவது முற்றிலும் வேறு விடயமாகும். நீரிழிவற்கான மாத்திரைகளை அல்லது ஊசி போடும் போது உணவுகளை சரியான நேரத்தில் எடுக்காததாலும், விரதம் உபவாசம் இருப்பதாலும் குருதிச் சீனியின் அளவு குறைகிறது. அதைவிட மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை மாற்றுவதும், அவற்றின் அளவுளை மாற்றுவதும் அளவு மீறிப் போடுவதும் நீpரிழிவு நோயாளரின் குருதிச் சீனி அளவு குறையக் காரணமாகின்றன.
அறிகுறிகள் எவை?
குருதியில் சீனியின் அளவு குறையும் போது வெளிப்படும் அறிகுறிகள் எவை. வழமையாக சீனியின் அளவு குருதியில் குறையும் போது தோன்றும் அறிகுறிகளை ஒத்ததே இவையும். முக்கியமான அறிகுறி பசிதான். அதாவது இங்கு சாப்பிட்ட பின் ஏற்படும் பசியாகும். அத்துடன் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வர். உடற் பதற்றம், வியர்வை, தலைப்பாரம், தூக்கத் தியக்கம், தலைச்சுற்று, தலையிடி, மனப்பதற்றம், மனக் குழப்பம், எரிச்சலுறுதல், பார்வை மங்கல், உங்ளங் கை கால்கள் குளிர்தல், ஓங்காளம், சத்தி போன்ற அறிகுறிகளில் சில ஏற்படலாம்.
ஆனால் மேற் கூறிய அறிகுறிகள் குருதியில் சீனி குறைவதால் மட்டுமின்றி வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பது உண்மையே. மனச்சஞ்சலம் கவலை உணவு ஒவ்வாமை உணவு நேரங்களில் மாற்றம் போன்றவையும் காரணமாகலாம்.
எனவே அறிகுறிகளை வைத்துக் கொண்டு இது உணவு எதிர்வினையால் ஏற்படும் குருதிச்சீனி குறைவடைதல் என்ற சுய முடிவிற்கு வரக் கூடாது. மருத்துவரைக் காண வேண்டும்.
ஒருவரது அறிகுறிகளை மருத்துவர் நன்கு பகுத்து ஆராய்வார். பின்னர் அத்தகைய அறிகுறிகள் ஏற்படும் வேளையில் குருதியில் சீனியின் அளவைக் கணிப்பார்கள். அது குறைவாக இருப்பது நிச்சயமானால் மீண்டும் ஆகாரம் எடுத்தவுடன் அத்தகைய அறிகுறிகள் மறைந்து சீனியின் அளவு அதிகரிக்கிறதா என அவதானிப்பார்கள். இவற்றின் பின்னர்தான் அது Reactive hypoglycemia என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
மருத்துவமும் உணவு முறையும்
பெரும்பாலும் மருத்துவம் எதுவும் தேவைப்படாது.
உணவு முறைகளிலும் அவற்றை உட்கொள்ளும் நேரங்களிலும் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது மட்டும் போதுமானது.
வி ரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பு மற்றும் மாப்பண்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அத்தகைய உணவுகள் விரைவாக உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்படுவதால் திடீரென குருதிச் சீனியின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தததைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக இன்சுலின் சுரக்கும். இது திடீரென குருதிச் சீனியின் அளவைக் குறைத்து பசியையும் ஏனைய அறிகுறிகளையும் தோற்றுவிக்கும்.
கேக் புடிங், குக்கீஸ், ஐஸ்கிறீம், மென்பானங்கள், சினியும் சீனி சேர்த்த உணவுகளும், ஜெலி, ஜாம், இனிப்புட்டப்பட்ட பழச் சாறுகள், தேன், சொக்கிளட், சீனி சேர்த்த தேநீர், கோப்பி போன்றைவை அத்தகையவையாகும். இவற்றை உட்கொள்வதில் நாட்டமிருந்தால் நார்ப்பொருள் அதிகமுள்ள காய்கறிகள் பழவகைகளுடன் கலந்து குறைந்த அளவை மட்டும் உட்கொண்டால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
இனிப்புள்ள உணவுகளைக் குறைப்பது மட்டுமின்றி அவற்றை வெறு வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக சமபல வலுவுள்ள உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பற்ற இறைச்சிகளை தேர்ந்தெடுங்கள். பருப்பு பயறு கடலை சோயா போன்ற தாவரப் புரதங்களை அதிகளவு சேருங்கள். காய்கறி வகைகளையும் பழவகைகளையும் கூடியளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மதுபானமும் குருதியில் சீனியின் அளவை குறைப்பதுண்டு. முக்கியமான உணவின்றி வெறும் வயிற்றில் அருந்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
மாப் பொருள் அதிகமுள்ள உணவுகளான சோறு பாண், நூடில்ஸ், ரொட்டி அப்பம் போன்றவற்றை அதிகளவில் ஒரே நேரத்தில் உண்ணும் போதும் அவ்வாறு சீனி அளவுகளில் மாற்றம் ஏற்படும்.
எனவே இப் பிரச்சனை உள்ளவர்கள் நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவு உண்பதைத் தவிர்த்து, 4 அல்லது 5 மணி நேர இடைவெளிகளில் சிறிய சிறிய உணவுகளாக எடுப்பது நல்லது.
கொழுப்பு உணவுகளும் வேகமாக ஜீரணமடைவதில்லை. ஆனால் அதிக கொழுப்பு ஆகாது. விதைகள், கொட்டைகள் போன்றவற்றை அளவோடு சேர்ப்பது உணவு வேகமாக சமிபாடடைவதைத் தவிர்க்கும்.
மாப் பொருள் உணவுகள் விரைவில் சீரணமடைந்து குருதிச் சீனி அளவை அதிகரிப்பது போல புரத உணவுகள் அதிகரிப்பதில்லை. எனவே பிரதான உணவுகளுடன் மீன் முட்டை, கொழுப்பு குறைந்த இறைச்சி, பயற்றின உணவுகளையும் கலந்து சாப்பிட வேண்டும்.
உணவின் பின் குருதிச் சீனி மட்டம் குறைபவர்கள் இது போன்ற உணவு முறைகளைக் கைக் கொள்வது நல்லது.
ஆரோக்கியமான இந்த உணவு முறைகள் ஏனையவர்களுக்கும் நல்லதே.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
00.0.0.00