Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நீரிழிவு’ Category

பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. 

“கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்” வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய இரத்த சீனியின் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். 

image001

உருளைக்கிழங்கு கொடுக்காத தன்னுடைய கெட்டித்தனத்தால்தான் அவ்வாறு நடந்தது என பெரிய கடகத்தில் புகழைத் தன் தலையில் சுமந்து கொண்டார்.

நொட்டைச் சாப்பாடுகளைத் தவிர்த்து காய்கறி பழவகைளை அதிகம் சாப்பிட்டும், வாசிகசாலைத் திண்ணையில் குந்தியிருந்து அரட்டை அடிப்பதைத் துறந்து கடற்கரை வரை நடைப் பயிற்சி செய்தும் அவர் செய்த சுய முயற்சிகள் யாவும் அவளது பெருவாயால் தூர்வாரி மூடப்பட்டன.

index12

“நிலத்திற்கு கீழே விளையுறதுகளை கண்ணிலையும் காட்டக் கூடாது என்று டொக்டர் சொன்னதை நான் மறக்கிறதே இல்லை” என்றார் மற்றொருவர். கரட், உருளைக்கிழங்கு, வத்தாளை, கரணை, மரவெள்ளி, பனங்கிழங்கு, இவை யாவுமே நிலத்தின் கீழ் விளையும் கிழங்குகள்தான். ராபு, நோகோல், கரட், பீட்ரூட், இவையும் அவ்வாறுதான் மண்ணுள் விளைபவைதான்.

அந்த டொக்டர் மண்ணுக்கு கீழ் போய் எவ்வளவு காலமோ தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவைக் கொண்டு அவர் சொல்லியிருக்கக் கூடும் அல்லது இவர் தவறாக அர்த்ப்படுத்தியிருப்பார். ஆனால் இன்றும் அப்படியா?

உருளைக் கிழங்கு

உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் உணவு வகைகளில் உருளைக் கிழங்கு முன்னணியில் நிற்கிறது. பருவகால வேறுபாடுகளைக் கடந்து வருடம் பூராவும் உலகெங்கும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் எல்லாத் திசைகளிலும் இது விளைவிக்கப்படுவதே ஆகும்.

???????????????????????????????????????????????????????????????????????

தாவர வர்க்கத்தில் இது தக்காளி, கத்தரி, மிளகு போன்றவற்றின் இனத்தைச் சேர்ந்தது. சரியான பருவத்தில் இதை கிண்டி அறுவடை செய்யாது விட்டால் அது வளர்ந்து பூத்துக் காய்த்து தக்காளி போன்ற ஒரு பழத்தைத் தரும்.

அவ்வாறு பூத்துக் காய்ப்பதற்கு தேவையான சக்தியை வழங்குவதற்காக தனது கிழங்கில் சேர்த்து வைக்கிறது. ஆனால் நாம் கிழங்கு நல்ல பருவத்தில் இருக்கும்போது கிண்டி எடுப்பதால் அதன் வாழ்க்கைச் சக்கரம் பூர்த்தியடைவதைத் தடுக்கிறோம்.

உருளைக் கிழங்கின் போசாக்கு

உருளைக் கிழங்கு முக்கியமான ஒரு மாப் பொருள் உணவாகும். அரிசி, கோதுமை போன்றவையும் மாப்பொருள் உணவுகள்தான். சமைக்காத அரியில் 80 சதவிகிதமும், உருளைக்கிழங்கில் 20, வத்தாளையில் 20 மரவெள்ளி 38 சதவிகிதம் என மாப்பொருள் இருந்தபோதும் சமைத்தபின் இவற்றில் பெரு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாப்பொருள் உணவுகள் ஜீரணமடைந்து குளுக்கோசாக குருதியில் கலந்து எமது உடலின் செயற்பாடுகளுக்கான சக்தியை வழங்கும். சக்தி கலோரி அலகுகளில் குறிப்பிடப்படுவதை அறிவீர்கள்.

nutr3

சமைக்காத உருளைக் கிழங்கு 100 கிராமில் 70 கலோரிகள் இருக்கிறது. புழங்கல் அரிசியில் 77 கலோரிகள் உள்ளது. எனவே ஏறத்தாள சமஅளவே அரிசிலும் உருளைக் கிழங்கிலும் உள்ளது.

அதே நேரம் அவித்த உருளைக் கிழங்கில் 80ம், சுட்டதில் 85ம், மசித்ததில் 108ம்,  பொரித்தில் 150 கலோரிகளும் உண்டு. அதே போல அரிசியை அவித்து சோறாக்கும் போது அதன் கலோரி வலு அதிகமாகவே செய்யும். ஆனால் பொரிக்கும் போது அல்லது பட்டர் போன்றவை சேர்ந்து மசியலாக்கும்போது உருளைக் கிழங்கின் கலோரி வலு அதீதமாகக் அதிகரிப்பதைக் மேலே கண்டிர்கள்

IMG_2271

மாப் பொருளைப் பிரதானமாக இது வழங்குகின்ற போதும் இதில் விட்டமின் C மிக அதிகம் உண்டு. ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கானது எமது தினசரி விட்டமின் C தேவையின் கால்வாசியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைத் தவிர vitamin B6, copper, potassium, manganese ஆகியவையும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே நல்ல உணவுதான்.

மிக முக்கியமாகக் குறிப்பட வேண்டியது அதிலுள்ள நார்ப்பொருள் ஆகும். ஒரு கப் அவித்த உருளைக் கிழங்கில் சுமார் 2.93 கிராம் உள்ளது. அமெரிக்க விவசாய ஆய்வுத் திணைக்களமானது இதில் 60 ற்கு மேற்பட்ட phytochemicals மற்றும் விட்டமின்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒட்சிசன் எதிரிகளான (antioxidents) carotenoids, flavonoids போன்றவையும் அடங்குகின்றன.

இவற்றைத் தவிர பிரஷரைக் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமான  kukoamines   உருளைக்கிழங்கில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்காக உருளைக் கிழங்கைச் சாப்பிடுங்கள் என எந்த மருத்துவரும் சிபார்சு செய்ய மாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டால் எவ்வளவு குறையும் அதன் பலன் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை கிடையாது.

உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது நன்கு கழுவிய பின் தோல் நீக்காமல் சமைப்பது அவசியம். ஏனெனில் அதிலுள்ள நார்ப்பொருளில் பெரும்பகுதி அதிலேயே உள்ளது. விற்றமின்களும் தாதுப்பொருட்களும் அதில் அடங்கியுள்ளன.

உணவுகளில் மாப்பொருள் ஒப்பீடு

ஒரு முட்டையின் அளவுடைய அவித்த உருளைக்கிழங்கு, ஒரு மேசைக் கரண்டி சோறு, ஒரு மெல்லிய பாண் துண்டு ஒரு சிறிய நானில் (NAN) ¼ துண்டு, கோர்ன் பிளேக் இரு மேசைக் கரண்டி, ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒரேயளவு மாப்பொருள் உண்டு.

பழங்களைப் பொறுத்தரையில் அவற்றில் மாப் பொருள் குறைவு. ஒவ்வொரு அப்பிள், ஒரேன்ஜ், பியேர்ஸ், சிறிய வாழைப்பழம் ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட அதேயளவு மாப்பொருள் உண்டு. எனவேதான் நீரிழிவு உள்ளவர்களை மாப்பொருள் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து காய்கறி பழவகைகளை அதிகம் உண்ணும்படி சிபார்சு செய்யப்படுகிறது.

ஆனால் அதேநேரம் மாப்பொருள் உணவுகள் வேண்டாதவை அல்ல. எமது உடலுக்கு அவசியம் என்பதை மறக்கக் கூடாது. ஏனெனில் அவைதான் எமது இயக்கதிற்கு அவசியமான சக்தியைக் கொடுக்கின்றன. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

நீரிழிவும் உருளைக் கிழங்கும்

உண்மையில் உருளைக் கிழங்கு நீரிழிவாளர்களுக்கு ஆகாத உணவா?

நீரிழிவு உள்ளவர்கள் மாப்பொருள் உணவுகளான சோறு, பாண், இடியப்பம் பிட்டு போன்றவற்றை உண்பதைப் போலவே உருளைக் கிழங்கையும் உண்ணலாம். ஆனால் அவற்றின் அளவுகளில் கவனம் எடுக்க வேண்டும். உருளைக் கிழங்கு எமது பிரதான உணவு அல்ல. நாம் அவற்றை பொதுவாக பிரதான உணவுகளான சோறு இடியப்பம் பிட்டு பாண் போன்றவற்றுடன் கறியாக கலந்து உண்கிறோம்.

எனவே இரண்டையும் அளவு கணக்கின்றி உண்ணக் கூடாது. உருளைக் கிழங்கை அதிகம் எடுத்தால் அதற்கேற்ப பிரதான உணவின் அளவில் சற்றுக் குறைக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு சோறு இரண்டிலும் நார்ப்பொருள் உள்ள போதும் மேலும் அதிக நார்ப்பொருள் உள்ள காய்கறி;களை சேர்த்து உண்பது நல்லது. குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிப்பதை இது குறைக்கும். கீரை வகைகள், ஏனைய நார்த்தன்மையுள்ள காய்கறிகள் போன்றவை அவ்வாறு சேர்த்து உண்பதற்கு ஏற்றவையாகும் ஆனால் அதற்கு மேல் பயற்று இன வகை உணவுகளான பருப்பு பயறு கௌபீ சோயா கடலை போஞ்சி பயிற்றை போன்றவற்றை சேர்த்து உண்பது மேலாகும்.

இவற்றுடன் முட்டை, மீன், கொழுப்பற்ற இறைச்சி போன்றவற்றை தேவைக்கு ஏற்றளவு சேர்த்துக்கொள்ளலாம்.

சமைக்கும்போது எண்ணெய், நெய், பட்டர் போன்றவற்றில் உருளைக் கிழங்கை வதக்கிச் சமைத்தல் நல்லதல்ல. ஏனெனில் அதன் கலோரி வலு அதிகரிக்கும். அது நீரிழிவு கொலஸ்டரோல் அதீத எடை உள்ளவர்களுக்கு அவ்வாறே ஏற்றதல்;ல.

பொரித்த உருளைக் கிழங்கின் கலோரி வலுவானது அவித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே நீரிழிவாளர்கள் மட்டுமின்றி தமது ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள எவரும் அவற்றை தவிர்ப்பது நல்லது. அல்லது ஒரிரு துண்டுகள் என மட்டுப்படுத்திக் கொள்வது நல்லது

இன்றைய இளைய வயதினருக்கு ஏற்றவிதமாக பல உள்ளுர் வெளிநாட்டு உணவகங்கள் பொட்டேட்டோ சிப்சை பரிமாறுகிறார்கள். இது எமது உருளைக் கிழங்கு பொரியலைப் போன்றதே. மிக அதிக கலோரி வலு கொண்டதாகும்.

உருளைக் கிழங்கில் பெரு விருப்பம் கொண்டவர்கள் சலட்டாகத் தயாரித்து உண்ணலாம். அவித்த உருளைக் கிழங்கு துண்டுகளுடன் அவித்த போஞ்சி கோவா, சலட் இலை போன்றவை சேர்ந்த சலட் ஆரோக்கியமான உணவாகும். 

Salad3

புதிய உருளைக் கிழங்கை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. வைத்தால் அதிலுள்ள சீனிச் சத்து அதிகமாவதுடன் அதன் சுவையும் மணமும் கெட்டுவிடும். வெளியே பாதுகாக்கும் போதும் வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. பேப்பர் பையில் சேமித்து வைப்பது நல்லது. சரியான முறையில் சேமித்தால் 2 மாதம் வரை கெடாது இருக்கும் என்கிறார்கள்

சமைத்த உருளைக் கிழங்கை நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்தாலும் கெடாது இருக்கும் என்கிறார்கள் இல்லதரசிகள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.

இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

 • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.
 • அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.
 • பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.
 • மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
 • இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 • இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
 • இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
 • இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும்.

நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.

அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.

 •  சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
 • காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
 • ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

 • இருதய நோயுள்ளவர்கள்
 • தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.
எத்தகைய பரிசோதனைகள்


1.    இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2.    சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.

ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.

 • இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
 • இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
 • உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
 • தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
 • சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.

ஆயினும் அவளது சிறுநீரகம்  இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?

எனது ஹாய் நலமா புளக்கில் இவ்வருடம் 2013 ஏப்பிரலில் பதிவிட்ட கட்டுரை நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.

நீரிழிவினால் காலுக்கான

 • குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன.
 • அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.
 • மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
 • உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை.

வெறும் காலுடன் கோயில் கும்பிடப் போய் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் தேடிக் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்.கால்களை இழந்தவர்களும் உண்டு.

கோயில்கள் உட்பட அனைத்து வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் காலணியுடன் செல்லக் கூடிய காலம் வர அருள வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.

Thanks:- http://drplusindia.com/images/Foot-Problems/Diabetic%20Foot.jpg

காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.

 • உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்
 • புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்
 • குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.
 • உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள்
 • காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்
 • தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக அவதானியுங்கள். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
 • நகம் வெட்டும்போது மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். நகத்தின் ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் அவதானம் வேண்டும்.
0.0.0.0.0.0

Read Full Post »

நீரிழிவு தவறான எண்ணங்களும் மேற்கொண்டு செய்ய வேண்டியவையும்

19916

தவறான எண்ணங்கள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

 • எனக்குப் புண்கள் விரைவாக ஆறிவிடுகின்றது
 • எனக்குத் தண்ணீர் விடாய் இல்லை.
 • எனக்கு அடிக்கடி சிறுநீர் போவதில்லை.
 • எனக்குத் தலைச்சுற்றுக் கிடையாது
 • எனக்கு களைப்புக் கிடையாது

எனவே எனக்கு நீரிழிவு இருக்காது எனப் பலரும் தாமாகவே முடிவு கட்டுகின்றனர்.

இது தவறான கருத்தாகும். நீரிழிவின் ஆரம்ப நிலையில் பெரும்பாலனவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கிடையிலேயே இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்புகள், மூளை போன்றவற்றில் தாக்கங்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றினால்தான் பிற்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு, கால் விறைப்பு, சிறுநீரகம் பழுதடைதல், மாறாத கால் புண்கள், கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மறைந்திருக்கும் நோய்

இந் நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் மிகப் பெருந்தொகையான மக்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். சுமார் 50 சதவிகிதமானவர்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியால் இருக்கிறார்கள் எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. மிகத் தாமதமாக, அதுவும் தமக்கு அந் நோயின் பின் விளைவுகள் வந்த பின்னரே பெரும்பாலானவர்கள் தம்நோயைக் கண்டறிகின்றனர். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் பற்றிய மேற் கூறிய தவறான எண்ணங்களே.

Diagnosis-11
எனவே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை காத்திருப்பது மூடத்தனமானதாகும்.

 • இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பலவிதமான இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையுடன் தமக்கேற்றதைச் செய்து கொள்ளலாம்.
 • சிறுநீர்ப் பரிசோதனை செய்வது இந்நோயைக் கண்டறிவதற்கான நம்பிக்கையான முறையல்ல என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
மருத்துவர்கள் வேறு நோய்களுக்காக அவரிடம் செல்லும் போதும் பிரஸரை அளந்து பார்க்கிறார்கள். அதே போல தமக்கு சந்தேகம் உள்ள பலரையும் சீனிக்கான இரத்தப் பரிசோதனை செய்யும்படி வேண்டுகின்றனர். இவ்வாறு இரத்தத்தில் சீனிப் பரிசோதனை செய்வது பல காரணங்களுக்காக இருக்கக் கூடும்.

மருத்துவரிடம் செல்லாதபோதும், உங்கள் இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா, அதிகரித்திருகிறதா என அறியப் பரிசோதனை செய்ய வேண்டும் முக்கியமான கீழ்க் கண்டுள்ளவர்கள் குருதியில் தமது சீனியின் அளவைச் செய்தறிவது அவசியமாகும்.

 • பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
 • கொழுத்த உடல்வாகு உள்ளவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும். எடையானது உயரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை உடற் திணிவு அலகு குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Body Mass index (BMI) ஆகும். இது இலங்கை போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு 23ற்குள் இருக்க வேண்டும். 25 மேற்பட்டவர்கள் செய்து கொள்வது விரும்பத்தக்கது.
 • தொந்தியான வயிறுள்ளவர்களும் செய்ய வேண்டும்.
 • தமது குடும்பதில் நீரிழிவு உள்ளவர்கள். பெற்றோர், சகோதரர்கள் போன்றவரிடையே நீரிழிவு உள்ளவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே அவர்களுக்கும் அவசியமாகும்.
 • உடல் உழைப்பற்ற, வாழ்க்கை முறையுள்ளவர்கள்

உலகளாவிய ரீதியில் பாதிப்பு அதிகமுள்ள நோய்

இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது மாத்திரமின்றி வேகமாக அதிகரித்தும் வருகிறது. உலகளாவிய ரீதியில் 350 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கபட்டிருக்கின்றனர்.

இந்நோயின் பாதிப்பால் மரணத்துக்கு ஆளாபவர்கள் தொகை பயமுறுத்துவதாக இருக்கிறது. 2004 ம் ஆண்டு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இந்நோயின் தாக்கத்தால் மரணத்தைத் தழுவினர். 8 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று அது இரு மடங்காக அதிகரித்து இருக்கலாம்.

இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் பத்து சதவிகிதத்தினர் (10.3%)    இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புற மக்கள், கிராமப் புற மக்கள் என வேறுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகின்ற போதும் நகர்பபுறத்தில்

16.4% சதவிகிதமாக இருக்கின்ற அதே நேரம் கிராமப்புறங்களில்

8.7% சதவிகதமாக இருக்கிறது.  நகரப்புற மக்களில் சற்று அதிகமாக இருப்பற்குக் காரணம்; அவர்களது வாழ்க்கை முறைகள்தான்.

நீரிழிவு ஏன் அதிகமானவர்களைப் பாதிக்கிறது

9273_14928_5

 • போதிய உடலுழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பதும்
 • தவறான உணவு முறைகளும்
 • கடைகளில் விற்கும் திடீர் உணவுகளை (Fast Foods)அதிகளில் உண்பதும் முக்கிய காரணங்களாகும்.

எண்ணெயில் பொரித்ததும், அதிகளவு மாச்சத்து, இனிப்புச் சத்து, உப்பு ஆகியன கொண்ட அத்தகைய குப்பை உணவுகளாவன

 • நீரிழிவு நோயை மட்டுமின்றி கொலஸ்டரோல்,
 • பிரஷர்,
 • பக்கவாதம்,
 • மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்,
 • சிறுநீரக செயலிழப்பு,
 • புற்றுநோய்

போன்ற பலவற்றையும் கொண்டு வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று கிராமப் புற மக்களின் உணவு முறைகளிலும் இத்தகைய தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களிலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாவரும் கடைப்பிடிப்பது அவசியம்.

நீரிழிவாளரின் உணவு

நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

காலாவதியான கருத்து

‘நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நூடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்’ என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.

தற்போதைய கருத்து

இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?

 • கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்.
 • பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
 • ஆரோக்கியமான சமவலுவுள்ள (Balanced)உணவையே ஆகும்.
 • எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.

பொதுவான ஏனைய ஆலோசனைகள் என்ன?

 • உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும். மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low GI) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
 • கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
 • காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
 • உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
 • எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
 • ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
 • பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
 • பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
 • துரித உணவுகளைத் (Fast food) தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம்,  சொக்லற் கேக், வனிலா கேக் போன்ற பலவும் அடங்கும்.
 • இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
 • மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

விடுபடாத மர்மம் நீரிழிவு நோயாளிகளை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டே இருக்கிறது.

 • ஒவ்வொருவரும் ஒவ்வொன்று நல்லதென்பார்கள்.
 • சிலது ஆகாது என்பார்கள்.
 • எத்தகைய உணவுகள் அவை என்பதே அந்த விடுபடாத மர்மம் ஆகும்.

ஆயினும் அவற்றைத் தெளிவாக்க புதிய ஆய்வு முடிவுகள் உதவுகின்றன.

இக்கட்டுரை மாப்பொருள் உணவுகள் எந்தளவிற்கு அதிகரிக்கின்றன என்பதையிட்டது.

கணிக்க முடியும்.

சில உணவுகள் குருதியில் சீனியின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். இவை நல்லதல்ல. வேறு சில உணவுகள் படிப்படியாகவே அதிகரிக்கச் செய்யும் அவை நல்லன. இவற்றை விஞ்ஞான ரீதியாக கண்டறியக் கூடிய முறை இருக்கிறதா?

குருதிச் சீனியேற்றக் குறியீடு

ஆம் அதுதான் குருதிச் சீனியேற்றக் குறியீடு (Glycaemic Index).

மாப்பொருள் உணவை உண்ணும்போது அது எந்தளவிற்கு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கும் என்பதைக் குறியீடாகக் காட்டுவதே இந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பதாகும்.

ஒரு குறிப்பிட்ட உணவில் 50கிராம் உணடபின் குருதியில் அதிகரிக்கும் சீனியின் அளவை அதேயளவு குளுக்கோஸ் உண்டபின் அதிகரிப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்தக் குறியீடாகும். குளுக்கோசுக்குப் பதிலாக அதே அளவு பாண் (Bread) கொடுத்துச் செய்யப்படுவதுண்டு.

பெறப்படும் குறியீடானது 55ற்கு குறைவாக இருந்தால் குறைந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பார்கள். 56லிருந்து 69 வரை இருந்தால் அது நடுத்தர குருதிச் சீனியேற்றக் குறியீடு ஆகும். 70ற்கு மேலிருந்தால் அது அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு எனலாம்.
இவ்வாறு பார்க்கும்போது சோறு, பாண், ரொட்டி, இடியப்பம், அப்பம் போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.

ஆனால் இது முற்று முழுதாக தெளிவான தரவுகளைக் கொடுப்பதில்லை என இப்பொழுது உணரப்படுகிறது.

குருதிச்சீனிக் கனதி

எவரும் சோறு 50 கிராம், 25 கிராம் வாழைப்பழம் என அளந்து சாப்பிடுவதில்லை.

சோறு என்றால் அதிகம் உண்ண நேரிடும். பழவகைகள் ஓரளவு உண்ணவும், சீனி என்றால் குறைவாகவே உட்கொள்ள நேரும். எனவே சாதாரணமாக ஒரு உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கிறது என்பதை குருதிச்சீனிக் கனதி (glycaemic load) என மற்றொரு வகையில் கணிக்கிறார்கள்.

சாதாரணமாக நாம் ஒரு மாப்பொருள் உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு தூரம் சீனியை அதிகரிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

மேலே உள்ள தரவுகளைப் பார்க்கும்போது கோதுமையை 50கிறாம் மட்டும் உண்ணும்போது குருதிச் சீனியேற்றக் குறியீடு நடுத்தரமாக இருக்கிறது. அதே நேரம் உணவாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி எனக் காணப்படுகிறது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் எதையும் அளவோடு உண்ண வேண்டும். நீரிழிவுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிற உணவுகளையும் அளவோடு உண்ண வேண்டுமே ஒழிய அதீதமாக உண்ணக் கூடாது என்பதே.
எதை உண்கிறோம் என்பது மட்டுமல்ல எதனோடு சேர்த்து உண்கிறோம் என்பது முக்கியம் என்பதாகும்.

அரிசியை பாற்சோறாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி அதிகமாக இருக்கிறது. ஆனால் சோற்றை பருப்பு. வல்லாரை சம்பல், சொதி முட்டை ஆகியவற்றோடு உண்ணும் போது குருதிச் சினிக் கனதி நடுத்தரமாகக் குறைந்துவிட்டதைத் பட்டியலில் இருந்து கண்டோம்.

சொதிக்குப் பதிலாக மற்றொரு காய்கறியை உணவில் சேர்த்திருந்தால் மேலும் குறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பழங்கள் மிகக் குறைவாகவே குருதிக் சீனி அளவை அதிகரிக்கின்றன.

வாழைப்பழத்தைப் பொறுத்தவரையில் கப்பல், கதலி, சீனி வாழைப்பழம் எனப் பாகுபாடு காட்டித் தேர்ந்தெடுப்பது அவசியமற்றது. எல்லாமே மிகக் குறைவான சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.

மேற் கூறிய குருதிச் சீனியேற்றக் குறியீடு, குருதிச்சீனிக் கனதி ஆகியவை University of Sri Jayewardenepura tpd; Department of BioChemistry – Faculty of Medical Sciences செய்த ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.

வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0.0

Read Full Post »

கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.Acanthosis Nigricans

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.

‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள்.

அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம். வருத்தம், நோய் என்று கூடச் சொல்ல முடியாது. தோலில் ஏற்படும் மாற்றம் என்ற சொல்லாம்.  கறுப்பாத் தடிப்பாக பள்ளங்களும் திட்டிகளுமாக வெல்வெட் போன்ற தோற்றத்தை பாதிப்புள்ள சருமத்தின் பகுதிக்குக் கொடுக்கும்.

பெரும்பாலும் கழுத்து அக்குள், முழங்கால், இடுப்புப் பகுதியில் வருவதுண்டு.

அக்குளில் அக்கன்தோசிஸ் நிஹிரிகான்

நோயாளியைப் பொறுத்த வரையில் அதன் அசிங்கமான தோற்றம்தான் அக்கறையை ஏற்படுத்தும். ஆனால் மருத்துவர்களைப் பொறுத்த வரையில் இது தோன்றுவதற்கான அடிப்படைப் காரணம் என்ன என்பதையே ஆராயத் தோன்றும்.

காரணங்கள் என்ன?

எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவர்களில் இது ஏற்படக் கூடுமாயினும் வேறு சில நோய்களுடன் இதற்குத் தொடர்பு இருக்கக் கூடும்.

 • சிலருக்கு இது பிறப்பிலேயே தோன்றுகிறது.
 • வெள்ளைத் தோல் உள்ளவர்களைவிட கருமையான சருமம் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
 • நீரிழிவு நோயாளர்கள் மற்றும் அதீத எடையுள்ளவர்களின் குருதியில் இன்சுலின் அதிக அளவிலிருப்பதுதான் அவர்களிடையே அதிகம் தோன்றுவதற்குக் காரணமாகும்.
 • ரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்பவர்கள் (Hypothyroidism)
 • குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும் சிலரிடையே தோன்றலாம்.
 • அட்ரீனல் சுரப்பி (Adrenal gland ), பிட்டியுடரி சுரப்பி (pituitary gland) ஆகியவற்றின் செயற்பாடுகளில் குறைபாடு இருந்தாலும் தோன்றலாம்.
 • கொலஸ்டரேலைக் கட்டுப்படுத்த உபயோகிக்கும் நிக்கடனிக் அமிலம் (Nicotinic acid ) போன்ற மருந்துகளாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
 • பெண்களில் மாதவிடாய் குழப்பம், கொழுத்த உடல், ஆண்களைப் போன்ற உரோம வளர்த்தி இவற்றுடன் பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம்.

நீரிழிவும் அக்கன்தோசிஸ் நிஹிரிகானும்

முழங்காலின் பிற்புறத்தே கருப்பான பட்டையாக

இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் அண்மைக் காலங்களில் இது நீரிழிவு வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கிறது என்பதே முக்கிய செய்தியாக இருக்கிறது.

கொழுத்த உடம்பு வாகையுடைய பல இளம் பிள்ளைகளிலும், இளைஞர்களிடையேயும் இது அதிகமாக காணப்படுகிறது. இதைக் கண்டவுடன் எனக்கு நீரிழிவு வரப்போகிறதே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நீரிழிவு வருவதற்கு முன்னர் இதைக் கண்டுகொண்டது அதிஸ்டம் என எண்ண வேண்டும்.

உடனடியாகவே உணவு முறைகளை மாற்றுவது, அதிகளவு உடல் உழைப்பில் ஈடுபடுவது, எடையைக் குறைப்பது போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அக்கன்தோசிஸ் நிஹிரிகானஸ்சின் அடர்த்தி குறையும். இது குருதியில் இன்சுலின் அளவினைக் குறைக்கும். இது எதிர்காலத்தில் நீரிழிவு ஏற்படாமல் தடுக்க உதவும்.

மருத்துவம் 

இந்தத் தோல் மாற்றத்தை குணமாக்குவதற்கென விசேடமான சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்குவதிலேயே சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது.

 • அதீத எடையுள்ளவராயின் மேலதிக எடையைக் குறைப்பதையே முதல் இலக்காகக் கொள்ள வேண்டும்.
 • அதற்கு உடற் பயிற்சி அவசியம்.
 • அத்துடன் இனிப்பு, மாப்பொருள், எண்ணெய் போன்றவற்றைக் குறைத்து
 • பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேணடும்.

அவ்விடத்து சருமத்தின் தடிப்பைக் குறைத்து மெருகூட்டுவதற்கு கிறீம். மற்றும் லோசன்கள் உதவலாம். ரேடின் ஏ (Retin-A ) கலந்தவை சற்று அதிகம் உதவலாம். சுலிசிலிக் அமில கிறீம், யூறியா கிறீம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா மீன் எண்எணய்க் மாத்திரைகளும் உதவக் கூடும்.

விரல் மொளிகளில்

அவ்விடத்தில் சற்று துர்நாற்றம் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் கிறீம் சில் காலத்திற்குப் பூச நேரும்.

நோய்க்குக் காரணம் ஒருவர் உபயோகிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை அல்லது வேறு மருந்துகளாக இருந்தால், அல்லது முற் கூறிய நோய்களில் ஒன்று எனில் அதற்கான சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவர் விளக்குவார்.

எனது ஹாய் நலமா புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரை நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை (Fan) நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை.  எனது Steth இன் குரல் வலைப்பக்கத்திலும்  வெளியானது
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

« Newer Posts - Older Posts »