Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘sugar free  பானங்கள்’ Category

நீரிழிவு நோயாளர்கள்  sugar free  பானங்களை, உணவுகளை  உபயோகிக்கலா
அவை ஆபத்தற்றவையா?
பி.கண்ணன், ஹட்டன்
பதில்:-  sugar free  பானங்கள் என எதை குறிப்பிடுகிறீர்கள். போத்தலில் அடைத்து வரும் பானங்களைத்தானே.
மாம்பழம், விளாம்பழம், பப்பாசி, தோடம்பழம் எனப் பலவிதமான பழங்கள் பழச்சாற்று பானங்களாக போத்தலில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன. இவற்றில் பல சீனி சேர்ந்தவை. ஆனால் பல சீனி சேர்க்காதவை.
அவ்வாறான சீனி சேர்க்காத பழச்சாற்று பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் அதற்கு விரிவாக பதில் சொல்ல வேண்டும்.
சீனி என்பது சுக்ரோஸ்  (Sucrose)  என்ற வகை இனிப்பாகும். இது உடலில் சேர்ந்தவுடன் குளுக்கோசாக மாறி நீரிழிவு நோயாளிகளின் குருதி சீனி அளவை அதிகரிக்கும். ஆனால் பழங்களிலும் பழச்சாற்றிலும் உள்ளது புரக்டோஸ் (Fructose)  என்ற இனிப்பாகும். இது உடனடியாக குருதி சீனியின் அளவை அதிகரிக்காது. ஆனால் அதில் இனிப்பு சத்து இருக்கிற காரணத்தால் அது ஈரலில் சேமிக்கப்பட்டு கொழுப்பாக மாறும்.
அந்த கொழுப்பு இரண்டு வகைகளில் உடலுக்கு பாதிப்பை கொண்டு வரலாம். முக்கியமானது எடை அதிகரிப்பாகும். அளவுக்கு மீறிய எடையானது நீரிழிவை அதிகரிப்பது பிரசரை அதிகரிப்பது முழங்கால் போன்ற மூட்டுகளில்; தேய்வுகளை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு பாதிப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.
இரண்டாவது பாதிப்பு குருதி கொலஸ்டரோலின் அளவை அதிகரிக்கும். முக்கியமாக ரைகிளிசரைட் என்ற வகை கொலஸ்டரோலை அதிகரிக்கும். கொலஸ்ரோல் அதிகரித்தால் இரத்த நாடிகள் அடைபடுவதால் மாரடைப்பு பக்கவாதம் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
பொதுவாக ஓரளவு பழங்களையும் அதிக செறிவில்லாத பழச்சாற்று பானங்களையும் நீரிழிவாளர்கள் உட்கொள்ளலாம். புழங்களில் பல விதமன விற்றமின்களும் கனியங்களும் நார்ப்பொருளும் இருப்பதால் அவற்றை உட்கொள்வது நல்லது. ஆனால் அளவோடு .
ஆனால் போத்தலில் அடைத்து வரும் பெரும்பாலான பழச்சாற்று பானங்களில் உள்ள நார்ச்சத்து அகற்றப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது விரைவில் செரிமானமடைந்து விரைவில் அகத்துறிஞ்சப்படும. அத்துடன் அவற்றில் பழச்சத்து சாற்றின் செறிவு அதிகமாகும். அதாவது நீங்கள் ஒரு முறை அருந்துவது ஒரு பழத்தின் சாறாக இருக்காது. இரண்டு மூன்று பழங்களின் செறிவு அதில் இருக்கும். அவ்வாறு இருந்தால் அதில் சீனி இல்லாவிட்டால் கூட அதிக புரக்டோஸ் காரணமாக எடை அதிகரிப்புடன் கூடிய  பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பழச்செறிவு அதிகமான பானமானால் போதியளவு நீர் சேர்த்து செறிவைக் குறைத்துக் குடிக்க வேண்டும்.
சீனி, புரக்டோஸ் போன்ற இயற்கை இனிப்புக்களை சேர்க்காமல் செயற்கை இனிப்புகளை சேர்த்து தயாரிக்கப்படும் பானங்களும் உணவுகளும்  உள்ளன.
saccharin, acesulfame, aspartame, neotame, and sucralose  போன்றவற்றை போன்ற செயற்கை இனிப்புகள் மனித பாவனைக்கு உகந்தன என அமெரிக்காவின் FDA அங்கீகரித்துள்ளது. ஆயினும் அவற்றிற்கு சில பக்கவிளைவுகள் இருப்பதாக ஆரம்ப ஆய்வுகள் சுட்டிக் காட்டின. இருந்தபோதும் அவை பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை. எனவே அவை சேர்ந்துள்ள உணவு களைபானங்களை அருந்துவதால் பெரிய பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாது.
இயற்கையாக தாவரத்திலிருந்து பெறப்படும்  stevia     என்று மற்றொரு இனிப்பு இருக்கிறது. இனிப்புக்காக இதை பானத்தில் சேர்ந்திருந்தால் பாதிப்பு ஏதும் இல்லை.
சோடா என நாம் பொதுவாகச் சொல்லும் மென்பானங்களில் சீனியின் அளவு அதிகம். இப்பொழுது எந்தளவு இனிப்பு என்பதை லேபளில் சொல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மென்பானங்களிலும் Sugar Free இப்பொழுது இலங்கையிலும் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் stevia   என்ற இனிப்பையை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு பல விடயங்கள் இருப்பதால்  sugar free உணவுகளை, பானங்களை வாங்கும்போது அதன் லேபிளை கவனமாகப் படியுங்கள். அதில் என்ன இனிப்பு எந்தளவு கலந்திருக்கிறார்கள் என்பதை அவதானித்து வாங்குங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0

Read Full Post »