Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நீர்வெறுப்பு நோய்’ Category

எந்த நாய் கடித்தாலும் அவதானம் தேவை.

சிறுநீரகத் தானம் பெற்றவர் ஒரு வருடத்தின பின் நீர்வெறுப்பு நோயால் காலமானார். காரணம் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்தவருக்கு முன்பு விசர் நாய் கடித்திருக்கிறது.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முடிந்த ஒரு வருடத்தின் பின்தான் தானம் பெற்றவருக்கு நோய் வெளியே தெரிந்தது.

பொதுவாக விசர் நாய் கடித்தால் 1 முதல் 3 மாத காலத்தில் நீர்வெறுப்பு நோய் வெளிப்படுவதுண்டு. அதுவே அந் நோய்கான நோயரும்பு காலம்  (incubation period) ஆகும்.

நீர்வெறுப்பு நோயை பொதுவாக Hydrophobia என்பார்கள். மருத்துவத்தில் Rabies எனப்படும். இந்நோய்க்கு எதிரான மருந்துகள் கிடையாது என்பதால் நோயாளி பரிதாபமாக இறக்க நேரிடும்.

இந்த நபர் இறந்ததை அடுத்து, பரிசோதனைகளை செய்த போது, அதே நபரிடமிருந்து வேறு உறுப்புகளைத் தானமாகப பெற்ற வேறு மூவர்களுக்கும் கிருமி தொற்றியிருந்ததைக் கண்டறிந்தார்கள். அவர்களுக்கு உடனடியாக விசர்நாய் தடுப்பூசி போடப்படுகிறதாம்.

நாய் கடித்தால் அவதானமாக இருங்கள். எத்தகைய நாயாலும் மருத்துவதுரை தாமதிக்காது அணுகுங்கள்.

தெருநாய், தடுப்பூசி போடப்பட்டதற்கான தகவல்கள் இல்லாத நாயாயின் உடனடியாகவே Anti Rabies Vaccine போடுவார்கள்.

எல்லாத் தடுப்பூசிகளும் போடப்பட்ட நாயானாலும் அதைப் பத்து நாட்களுக்கு அவதானமாகக் கவனிக்க வேண்டும். நோய்கான  அறிகுறிகள் நாயில் தென்பட்டால் நாய் கடிபட்டவருக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

இப்பொழுது பொக்குளைச் சுற்றிப் 14 ஊசிகள் போடுவது கிடையாது. பொதுவாக 5 ஊசிகள் 0, 3, 7,14, 30 நாட்களில் போடப்படும். சில வேறு முறைகளும் உண்டு. வேறு நடைமுறைகளும் உண்டு.

அத்துடன் காயம் சீழ்பிடிக்காது மருத்துவம் செய்வதுடன் ஏற்புத் தடை ஊசியும் (Tetanus Toxoid) போடப்படும்.

தானமாக உறுப்புகள் பெறப்படும்போது அவருக்கு ஹெப்படைடிஸ், HIV, Syphilis போன்ற நோயத் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படுவார. ஆனால் rabies பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஏனெனில் குறுகிய கால அவகாசத்தில் அவ்வாறு செய்வது முடியாது என்பதுடன் rabies மிக பரவலான நோயும் அல்ல.

வருடாந்தம் உலகளாவிய ரீதியில்  55,000  பேர் இந்நோயால் மரணத்தைத் தழுவுகிறார்கள். இவர்களில் 95% சதவிகிதமானோர் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்களாகும். இலங்கையில் 50 முதல் 60 பேர் வருடாந்தம் இந் நோயால் இறப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீர்வெறுப்பு நோய் பொதுவாக நாய்கடிப்பதாலேயே இலங்கையில் ஏற்படுகிறது. ஆயினும் cats, mongoose, jackals and bandicoot போன்றவவை கடிப்பதாலும் தொற்றலாம்.

வளர்ப்பு நாய்களுக்கு ஒழுங்கான காலக்கிரமத்தில் விசர்நாய்த் தடுப்பூசி போடுவதன் மூலம் உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் உங்களையும் வெளியாரையும் இந்நோய் தொற்றாமல் தடுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான பதிவு இது சிறுநீரக மாற்றீடு சிகிச்சை செய்யப்பட்டவர் நீர்வெறுப்பு நோயால் மரணம்

தகவலுக்கு நன்றி Physician’s First watch.

Read Full Post »