>சிங்கராஜவனத்துள் நாம் சிறுபான்மை
எனினும், எமது வளைகள் எமக்கானவை …
இல்லை என்றது ராஜாங்கம்.
இது பிரசாந்தனின் புதிய நூலான ‘அந்தரத்து உலவுகின்ற சேதி’ யின் தலைப்புக் கவிதையின் ஆரம்ப வரிகள். இந்த வரிகள் எங்கள் எல்லோரது உள்ளத்திற்குள் சுடர்விட்டெரிந்து கொண்டிருக்கும் பொது உணர்வின் கலாபூர்வ வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அக் கவிதையானது
‘சிங்கத்தை புணர்க்க
சிங்கத்தைப் பெற,
அன்றேல் நாமே சிங்கமாக மாற
நிர்ப்பந்திக்கப்பட்டோம்
மாட்டோம் ..’
எனத் தொடர்ந்து பேசும்போது நெஞ்சை நிமிர்த்தி பெருமையில் மிதந்து உட்கார்ந்தோம். ஆனால் அதன் இறுதி வரிகள் ஒரு சிறுகதைக்கு உரிய திடீர் வேகத் திருப்பத்தில் நுழையும்போது வாசகர்களான எம் மனம் ஒரு கணம் அதிர்கிறது. இலங்கை வாழ் தமிழர்களின் தன்மான உணர்வை, அவர்தம் இலட்சிய வேட்கையை மறுகேள்விக்கு உள்ளாக்கிச் சிந்திக்க வைக்கும் வரிகள் அவை. நூலைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
இருந்தபோதும்,
‘ஒரு தோட்டாவில் இறந்தவன் கவிஞன்
கவிதையோ
ஒவ்வொரு தோட்டாவிலும் உயிர்த்தது’
போன்ற வரிகள் அடக்குமுறைக்குள் அமிழ்ந்து அழிந்துவிடாது எதிர்த்து நிற்கும் போராட்டக் குணாம்சத்தின் வெளிப்பாடு எனலாம்.
‘சுத்தியலை எடுத்தார்கள்
அதுகண்டு பயந்து
சுண்டங்காய் அளவான ஆதாரசுருதிச்
சத்தை நசித்தார்கள
சந்ததியை மறித்த
சந்தோசம்தனை நின்ற யாவருமே புசித்தார். ..’
என்று பாடும்போது இனவிருத்தியை கொடூரமாக நசித்தழித்து எமது இனத்தையே பூண்டோடு அழிக்கும் ஆவேசமும் இனவிரோதப் போக்கும் அவர்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருப்பதை நசித்தல், சந்தோசத்தினை புசித்தல் போன்ற சொற்களை தேர்ந்தெடுத்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தும் சொல்லாட்சியையும், கவிநயத்தையும் ரசிக்கும்போது ஏக்கப் பெருமூச்சும் சேர்ந்தே வருகிறது.
இன்னொரு கவிதை
‘ மகளை..
சின்ன மகளை
எம் செல்ல மகளை
அலற அலற இழுத்துப் போயினர் சிலர்’
என்று சொல்லும் போது அடாத்துப் பிரித்தலின் துயரிலும்,
மற்றொரு கவிதையில்
‘மூத்தவள் தோசை சுடுவதாயும்
ஏனைய பிஞ்சுகள்
வெறும் தட்டுக்களை ஏந்திக் காத்திருப்பதாயும் ..’
என்ற வரிகளைப் படிக்கும்போது போரில் நசுங்கிய பொருளாதாரத்தால் வயிற்றுப் பசியோடு ஏதிலிகளாக அலையும் சிறார்களின் துயர் தொற்றவும் எம் மனமும் ஆற்றாமையில் ஆழ்ந்து நெகிழ்கிறது.
‘தீராத விளையாட்டு’ என்ற கவிதை காற்பந்துப் போட்டியை முன்னிறுத்தியது. எழுதிய வரிகளிடையே எழுதாத எண்ணங்களாக ஊர்ந்து செல்லும் செய்திகளை உய்த்துணரும்போது ‘நாமும் அப்பாவி ரசிகர்’ களாக ஏய்கப்படும் கையறு நிலையினர் என்பது புரிகிறது. இவ்வாறு இன்னும் பல கவிதைகளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆயினும் அனைத்துமே போரின் அவலத்தையும், நாம் படும் துயரையும் பாடும் அவலக் குரல்கள் அல்ல.
கணிகையில் மூழ்கி, காத்திருக்கும் மனைவியை புறக்கணிக்கும் ‘வேலைப் போதை’க் கணவர்கள் மீதான கவிஞனின் கோபம் இரண்டு கவிதைகளில் பொத்துக் கொண்டு வருகிறது.
‘நேற்றிரவு சாமம் விட்ட இடத்திலிருந்து
இன்றதிகாலை எழுந்து
மீண்டும் ஸ்பரித்தாய்
கணினிக் கணிகையை…’,
என்ற வரிகளிலும்
‘ஆயினும், ஒருநாள் வருவாய்,
கைபிடித்த கம்பிபியூட்டர் மவுசின்
காதல் சலித்த பின்னர் …’
என மற்றொரு கவிதையின் வரிகளிலும் எரிச்சலுடன் சீறுகிறது.
அலட்சியப்படுத்தல் மட்டுமின்றி குடும்ப வாழ்வில் அடக்கப்பட்டு வாய்மூடி நெஞ்சுக்கள் குமுறும் பெண்கள் மீதும் கவிஞனின் கரிசனை படிகிறது. மேற்கூறிய கவிதைகளிலும் இன்னும் சில கவிதைகளிலும் இப்பண்பைத் தரிசிக்கிறோம்.
‘எனக்காக
தன் குருதியை, சுக்கிலத்தை, வியர்வையைச் செலவு
செய்த
என் அப்பனிடம் கறந்த
அந்தச் சீதனப் பணத்தைப் புணர்நது நீ சீவிக்க முடியாதோ?’
என்பது பெண்வாயிலான கவிஞனின் சுடுதணல் வரிகள்.
முப்பத்து மூன்று சிர்மிகு கவிதைகளைக் கொண்ட கடுகு போன்ற சுவை செறிந்த குறுநூல் இது. ஆயினும் ஒற்றைச் சுவை அல்ல, கதம்பமான பலசுவை கொண்டவை.
‘நுரைப் பூக்கள் சூட்டி
நெய்தற் பெண்ணின் ஊடல் தணிவிக்க முயல்கிற
கடலோ
என்னைக் கவனியாது.
தலைக் கறுப்பைக் கண்டு ஒழுங்கையுள் மறையும்
நண்பன்’
எனப் பாடும்போது, இலக்கணமும் பழந்தமிழ் இலக்கியமும் அறக்கற்று, இற்றைத் தமிழில் மோகங் கொண்டு கவிபாடும் இந்த நவயுக இளைஞன் தெளிக்கும் வார்த்தைக் கோலங்களை ஆழ்ந்து இரசிக்க முடிகிறது.
உண்மையில் இக்கவிதைகளின் அடி நாதம் எது?
“பிரசாந்தனின் கவிதைகளும் எங்கள் பலரது கவிதைகளைப் போலவே சமகால மனித வாழ்வையும், வீரத்தையும், விட்டு விடுதலையாகும் நாயகிகளையும், காதலையும், மக்கள் எழுச்சியையும், அவர்தம் கனவுகளையும் பற்றிப் படர்ந்து நிமிர்கின்றன” என்று கூறுகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். மேலும், அவரது அணிந்துரையானது “அவரை ஒரு முக்கிய கவிஞராக இனங்காட்டும் பகுதிகளை …” தொட்டுச் செல்வதுடன் நின்று விடாது, விஞ்ஞானப் பாடங்களில் உச்ச புள்ளிகளைப் பெற்ற மாணவன் அதைத் துறந்து தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்து தமிழ்க் கல்வியாளனாக, கவிஞனாக, கம்ம இராமாயணத்தை கைக்குள் வளைத்தவனாக வளர்ந்த கதையையும் சுவார்ஸமாகத் தொட்டுச் செல்கிறது. “மனசின் மொழி கவிதையின் ஊற்றுக்கண்ணைத் திறக்கும்” என்ற அவதானத்தையும் தூவிவிட்டே ஜெயபாலன் அப்பால் நகர்கிறார்.
‘விளிம்பு’ வின் செய்நேர்தியுடன் கூடிய சிறப்பான வெளியீடு. பூபாலசிங்கம் புத்தகசாலையில் கிடைக்கும். நேற்று 13ம் திகதி அதன் வெளியீட்டு விழா நடைபெற்றது. கூடவே ‘மஹாகவியியல்’ என்ற நுர்லும் கூட வெளியிடப்பட்டது.
‘மஹாகவியியல்’ என்பது ஒரு தொகுப்பு நூல். எமது தேசத்தின் கவிதையின் மரபிற்கும், அதன் செழிப்பான வளர்ச்சிக்கும் உறுதியான அத்திபாரம் இட்ட ‘பிதாமகர்’ என்று போற்றத்தக்க மஹாகவி உருத்திரமூர்த்தி பற்றிய விமர்சனங்களின் தொகுப்பு நூல். ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ என்ற அரிய நூலைத் தொகுத்துத் தந்த அதே பிரசாந்தன் இந்த நூலையும் தொகுத்துத் தருகிறார்.
மஹாகவி ஒரு அறிமுகம் என்ற எம்.ஏ.நுஃமானின் கட்டுரையைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நா.சுப்பிரமணியன், இ.முருகையன், எஸ்.பொன்னுத்துரை, சாலை இளந்திரையன், மு.பொன்னம்பலம், மயிலங்கூடலூர் பி;.நடராஜன், சிறி.பிரசாந்தன் ஆகியோரது கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.
தமிழ்க் கவிதைப் பரப்பிலும் உலகக் கவிதைப் பரப்பிலும் மஹாகவிக்கான இடம், குறும்பா, சாதாரண மனிதனின் சரித்திரம் போன்ற நீள்கவிதைகள் பற்றிய பார்வைகள் உள்ளடங்குகின்றன. அத்துடன் ‘கம்பரும் மஹாகவியும்’, ‘மஹாகவி, நீலாவண்ணன், முருகையன்’, ‘கம்பரும் மஹாகவியும்’ போன்ற ஒப்பீட்டு விமர்சனங்களும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது. ஏனையவை முன் வெளிவந்த ஆக்கங்களாக இருக்க ‘ஈழத்து நவீன கவிஞர் மூவர்- மஹாகவி, நீலாவண்ணன், முருகையன் கவிதைகள் குறித்த ஆய்வு’ பிரசாந்தனின் புத்தாக்கமாக அமைகிறது.
பின் அட்டையில் முதறிஞர் சிற்பி சிவசரவணபவன் அவர்களது சிறுகுறிப்பு இடம்பெறுகிறது. அதில் ‘ நம்நாட்டுக் கவிஞனின் பெருமையை நாமே நமக்குள் பேசிக் கொண்டிருப்பதுடன் அமையாமல், அவனுடைய திறமான புலமையை வெளிநாட்டார் வணக்கம் செய்வதற்கு வாய்ப்பாக ‘மஹாகவியியல்’ நூலைத் தொகுத்துக் காலத்தின் தேவை ஒன்றை நிறைவேற்றியுள்ளார்’ எனப் போற்றுகிறார்.
இந்த நூலின் வரவு இரு வழிகளில் மிக முக்கியதானது. முதலாவதாக “பின்தொடரத்தக்க கவிதைப் புதுமைகள் படைத்துக் காட்டிய ஒரு கவிஞனது வாழ்வு நிறைவடைந்து கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் கழிந்துள்ள” போதும் இன்றுவரை அக்கவிஞன் குறித்து ஒரு ஆய்வு நூலோ, கட்டுரைத் தொகுப்போ வெளிவராத நிலையில் இத் தொகுப்பானது காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது எனலாம்.
இரண்டாவதாக இத்தொகுப்பு ஈழத்து விமர்சன மரபில் ஒரு புதிய அத்தியாயத்தையும் திறந்து வைக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதாவது ஒரு படைப்பாளியின் இலக்கியப் பங்களிப்பு முழுவதையும் ஆராய்ந்து அவரது படைப்பாளுமையை வெளிக் கொணரும் விமர்சன முறை ஈழத்தில் காலூண்டாத நிலையில் இந்நூற் தொகுப்பு வரவேற்கத்தக்க முன்முயற்சியாகிறது. இந் நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பெறுமதிமிக்க வெளியீடுகளில் ஒன்று.
பிரசாந்தன் அறிமுகம் தேவையற்ற இளம் இலக்கியவாதி. கம்பன் புகழ் பாடி கலைப் பணியாற்றியதால் இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமின்றி தமிழகத்தின் பட்டி தொட்டியிலும், உலகெங்கும் பிரபலமானவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், ஜெயவர்தனபுரப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியதால் அறிவுலகிலும் ஜொலிப்பவர். அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளரான இவர் இப்பொழுது ஜெயவர்தனபுரப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
மீண்டும் ஒரு முறை கவிதை நூலோடும் தொகுப்பு நூலோடும் வரவு சொல்லி நிற்கிறார்.
எமது இலக்கியப் பராம்பரியத்துள் நாம் கடந்து வந்த சுவடுகளைத் தேடும் தொகுப்பு நூலும், புதிய சுவடுகளைப் பதித்து முன்நகரும் கவிதை நூலும் ஆகிய இவை இரண்டும் நிச்சயம் படித்துச் சுவைக்கவும் பயன் பெறவும் வேண்டியவை.
எம்.கே.முருகானந்தன்.