‘அம்மாவின் உலகம்’ இது கலாமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாகும். எட்டுச் சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
அம்மாவின் உலகம் எனப் பெயரிடப்பட்ட போதும் இது கலாமணியின் உலகமும் ஆக இருக்கிறது. இவற்றில் அவரது மூன்று வெவ்வேறு உலகங்களை இனங் காணக் கூடியதாக இருக்கிறது.
- ஓன்று அவரது அக உலகம்.
- இரண்டாவது இவரது குடும்ப உலகம்.
- மூன்றாவது அவரது சமூகம் சார்ந்த உலகம்.
படைப்பாளியான கலாமணியின்; அக உணர்வுகள் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் தெறித்து நிற்கிறது. பாடசாலை மாணவனாக இருந்த காலம் முதல் மணிவிழாக் காலம் வரையான பல தளங்களிலும் ஊடாடுகிறது.
‘நிழல்’ கதையில் எல்லா மணவர்களும் “மழையே மழையே வா வா” என அதை வரவேற்றுப் பாடுகிறார்கள். ஆசிரியரும் அதனையே ஆமோதிக்கிறார். ஆனால் இவன் பாடுவதில்லை. வாளாதிருப்பான். இதனை அவதானித்த ஆசிரியர் இவனையும் சேர்ந்து பாடும்படி உற்சாகப்படுத்துகிறார்.
ஆனால் இவன் “மழை போ வெயில் வா. மழை போ வெயில் வா” எனப் பாடி ஆசிரியரிடம் அடி வாங்கிக் கட்டுகிறான்.
‘எங்களின் வலி எங்களோடு. இவர்களுக்கு எங்கே அது புரியும்.’ ஆழமாகத் தைக்கும் சுருக்கமான வரியானது மாணவனின் உள்ளம் படும் பாட்டை வெளிப்படுத்துகிறது. குடை வாங்க வழியில்லாத ஏழை மாணவனின் உணர்வு அது.
ஒரு பெண்ணின் அருகாமை ஒருவனை உற்சாகப்படுத்துகிறது. மறுதலையான அவளது இல்லாமை ஓயவைக்கும். இவனுக்கு அருகில் நின்று வேலை செய்யும் கேரன் இரண்டு வாரங்களாக வரவில்லை. அதனால் தான் கவலையடையவில்லை என்றே நினைத்தான். அவள் வேலைக்கு வராததால் ஏற்பட்ட வெறுமை இவரது வேலையின் வினைத் திறனைப் பாதித்திருக்கிறது. நண்பர்கள் வேலையின் மந்தநிலையை கவனித்து, கேட்கவும் செய்தார்கள்.
“என் வேலை ஓடவில்லைத்தான்” என அவன் பதிவு செய்யும்போது நாலு பக்க ‘எங்கெங்கு காணினும்’ கதையில் பொதிந்துள்ள அவனது அகவணர்வு ஒரேயொரு வரியில் வெளிப்படுகிறது.
தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் ஒருவனுக்கு ஏற்படும் மனநிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும், மனைவி பிள்ளைகளுக்கு இவன் மீதான மதிப்பு மரியாதைகளில் ஏற்படும் தொய்வும் இவனது உணர்வுளைச் சோரச் செய்வதையும் ‘நிழல்’ சிறுகதையில் சிறப்பாக காணமுடிகிறது.
அகவுணர்வு வெளிப்படுவதுபோலவே இப்படைப்புகளில் குடும்ப உறவில் மகிழ்ச்சியும் தளர்ச்சியும் ஏமாற்றமுமான உணர்வுகள் பல படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தந்தையாக மகனாக சகோதரனாக கணவனாக பல பாத்திரங்களை காதாசிரியர் வகிக்கிறார்.
மிக அற்புதமாக வெளிப்படுவது மகனின் உணர்வுகள்தான். அம்மாவின் உலகம் மற்றும் நிழல் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பின் உச்ச வார்ப்புகளும் அவையாகவே இருக்கின்றன. இவன் அம்மாவில் கொண்டிருந்த பற்று அக்கதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமாக வெளிப்படுகிறது. இவனது கனவுகளிலும், வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் அவளது குடையிலும் கூட அது உயிர்த்தெழுகிறது.
குறைவாகவே பேசப்பட்போதும் தந்தை பற்றிய பெருமிதத்தை ‘அம்மாவின் உலகு’ல் கதையோடு கதையாக சொல்லாமல் விடவில்லை.
தனது பிள்ளைகளுக்காக வேலை வேலைக்கு மேல் வேலை, ஓவர்டைம் என ஓடி ஓடி உழைத்துக் கொடுத்தாலும் அவனது பிறந்த தினத்தில் கேக் வெட்டும் நேரத்தில் அருகில் இருக்க முடியாத ஏக்கத்தை ‘தந்தையரும் தனயரும் சிறுகதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
பஸ்சில் காணும் கறுப்பு இனப் பெண்ணிற்கும் வெள்ளையனுக்கும் பிறந்த குழந்தையின் தந்தை மீதான பாசத்தையும் அதே வேளை தந்தை பிள்ளையை கண்டுகொள்ளாத தன்மையையும் அவதானிக்கும் இவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஊற்றெடுக்கும் பாசத்தை வெளிப்படுத்த முடியாத சூழலில் இருக்கும் தந்தையின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் படைப்பு இது.
மனைவி பற்றிய உணர்வுகள் மிகையின்றி யதார்த்தமாக உள்ளன. படைப்புகளில் பல விதமாக வெளிப்படவும் செய்கின்றன.
- மகனின் பேர்த்டே அன்று தான் கூட இருக்க முடியாததால் மறுகும் உள்ளத்தை மனைவி தேற்றும்போது ஏற்படும் நெகிழ்வுணர்வு,
- தன்னையும் குழந்தைகளையும் விட அம்மாவிலும் அவளது குடையிலும் மூழ்கிக் கிடக்கும் இவனை ‘உது ஒரு சென்ரிமென்ரல் ரைப்படா’ என எள்ளலாக சுட்டிக் காட்டும்போது மறுகும் மனம்,
- பிள்ளைகளின் மீதான அவளது அதீத அக்கறையையும், பாசத்தை காணநோர்கையில் ‘அங்கு அம்மா இல்லை. குடையுடன் புவனம் தெரிந்தாள்’ எனத் தாயாகவே காணும் உணர்வு எனப் பல.
படைப்புகளில் அக உணர்வும், குடும்ப உறவுகளின் உன்னதங்களும் நெரிசல்களும் அற்புதமாக வெளிப்படுகின்ற போதும், இவரது ஆழமான சமூக உணர்வை ‘அக்கினிக் குஞ்சு’, ‘அவலம்’ சிறுகதைகளில் காண முடிகிறது.
‘எனது சிறுகதைகளில் அநேகமானவற்றில் நானும் ஒரு பாத்திரமாகவே உள்ளேன்’ என நூலாசிரியர் தனது உரையில் கூறுவதானது இது கலாமணியின் உலகம் என்ற எனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே உள்ளது.
‘இருந்தபோதும் அம்மாவின் உலகம் என்ற தலைப்பு மற்றொருவிதத்தில் மிகச் சரியானதாகவே படுகிறது. ஏனெனில் இத் தொகுப்பின் உன்னத கதைகள் அம்மா, தாய்மை, பெற்றோரியம், போன்ற உணர்வுகளையே பேசுகிறன்றன.
மிக முக்கியமான கதை அம்மாவின் உலகுதான். அது இடுப்பு எலும்பு உடைந்து படுக்கையில் வீழ்ந்துவிட்ட அம்மாவின் வாழ்க்கையையும் அவளைச் சுற்றிய உலகையும், பிள்ளைகள் மீதான பாச உணர்வையும் சொல்கிறது. அதிலும் தனது ஒரே மகன் மீதான அவளது பாசத்தையும், அவனது உணர்வுகளையும் மிக அழகாகப் பேசுகிறது.
மிகவும் நோய் வாய்ப்பட்டு நினைவு தழும்பிய நிலையிலும் தனது மகனது குரலை மட்டும் அவளால் உணர முடிகிறது. அந்தக் கடைசி இரவில் ‘நான் உங்களுடன் இரவு கூட நிற்கட்டுமா’ மகன் கேட்கிறான். ‘வேண்டாம் போ’ என்பதாக அவளது முகக் குறிப்பு காட்டுகிறது. மரணப் படுக்கைத் தரிசனத்தில் இதுவும் சேர்த்தியா என என் மனம் யோசித்தது.
மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது மன உணர்வுகளை நாம் கேட்டறிய முடியாது. சைகைகள் மற்றும் குறிப்புகளால்தான் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். இது பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகளும் விவாதங்களும் நடந்திருக்கின்றன.
மரண வாயிலில் தான் நிற்பதை உணர்ந்திருக்கிறாள். தன் இறுதி மூச்சைப் பார்க்கும் மனோதிடம் அவனுக்கு இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் இறுதிக் கணத்தில் அங்கு நிற்காதவாறு அவனை அவனது வீட்டிற்கு போகுமாறு சைகை காட்டியிருக்கிறாள் என எண்ணத் தோன்றுகிறது. ஆம் காலனின் பாசக் கயிற்றையும் விட உறுதியானது தாய்ப் பாசம் என்பதை இக் கதை உணர்த்துகிறது.
மருத்துவனான என்னை கவர்ந்த ஒரு விடயம் இதே கதையில் உண்டு.
- ‘ஒன்றுக்கும் யோசியாதை. படுக்கைப் புண் வராமல் பார்த்துக்கொள்’ என்பதான உறவினர் ஆலோசனை, தாய்க்கும் வந்திவிடுமா என்ற பயம்,
- பராமரிப்பவர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல்கள். அதைத் தடுக்க தங்களுக்குத் தெரிந்த வழி முறைகளைக் கையாள்வது.
இவை ‘அம்மாவின் உலகில்’ சிறுகதையில் சில சித்தரிப்புகள். நோயாளிக்கு அவர்களது செயற்பாடுகள் துன்பமாகவும் மாறுகிறது. கதை கால் முறிந்து பல வருடங்களாகப் படுக்கையில் கிடக்கும் அம்மாவும் இதைப் புரிந்து தானாகவே தன்னை நிமிர்ந்தி வளைத்து பயிற்சிகள் செய்ய முயல்கிறாள்.
ஆனாலும் புண் வந்துவிடுகிறது. ஏன் வருகிறது? ‘அம்மா படுக்கையிலிருந்து நிமிராமல் இருந்த ஒரு கிழமைக்குள் புண் வந்துவிடுமா?’ மகன் ஆச்சரியப்படுகிறான்.
படுக்கையில் கிடப்பதால் மட்டும் புண் வந்துவிடுவதில்லை. திரும்பவும் உட்காரவும் முடியாத நிலை வரும்போதுதான் படுக்கைப் புண் தேடி வரும். அந்த நேரத்தில்தான் சுற்றத்தவர்கள் நோயாளியின் பராமரிப்பில் மேலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். பூசும் மருந்துகளும், விசுறும் மருந்துகளும் பெரும் பலன் தராது. நிபுணத்துவத்துடன் கூடிய பராமரிப்பு வேண்டிய தருணம் அது. படிப்பினை ஊட்டும் கதை இது.
இக் கதைகளல் பெரும்பாலானவை எமது நாட்டின் கிராமத்து அனுபவங்களாக இருக்கின்றன. கரைந்து நீர்த்துப் போகும் வாழ்வின் இனிய கணங்களை மீளவும் துளிர்க்கச் செய்கின்றன. மற்றொரு புறம் செல்வம் கொழிக்கும் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த வாழ்வின் பதிவுகளாக மேலும் இரு கதைகள். இவை மாறுபட்ட அனுபங்களைத் தருகின்றன.
இவற்றை எல்லாம் கடந்து வேற்றுலகம் பற்றிய கற்பனைக் கதை ஒன்றும் உள்ளது. ‘எங்கெங்கும் காணினும்’ மிக வித்தியாசமான கற்பனை. அவர் சித்தரிக்கும் அந்த உலகில் எல்லாமே உள்ளன. அதுவும் விரல் சொடுக்கும் நேரத்திற்குள் கைக்கு எட்டிவிடும்.
ஆனால் ஒன்றே ஒன்று இல்லை. அவர்களைப் பார்த்து இவன் கேட்கும் வார்த்தைகளில் அது என்ன என்பது புரிகிறது. ‘உங்கள் உலக மக்களுக்கு ஆசாபாசங்கள் இல்லையா?’
‘நாங்கள் ஆசாபாசங்களில் திளைக்கும் மனிதர்கள்’ ஆம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அன்பும், ஆசையும், கோபமும், விரோதமும், காதலும் காமமும் என எல்லா உணர்வுகளிலும் ஊறித் திளைப்பதால்தானே நாம் மனிதர்களாக இருக்கிறோம். நாம் கணனிகளாகவோ இயந்தரங்களாகவோ இல்லை என்பதால் மகிழலாம்.
நாம் நிஜ உலகில் வாழ்கின்ற போதும் இன்றைய அவசர வாழ்வில் இயந்திரங்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு விஞ்ஞானக் கதையாக இருந்தாலும் கூட அதற்கு ஊடாக நவீன வாழ்வில் ஏற்படக் கூடிய அவலங்கள் பற்றிய சிந்தனைகளை எழுப்புகிறது.
அடிப்படையில் கலாமணி ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. பௌதீகவியல் ஆசிரியராக மாணவர்களால் மிகவும் வேண்டப்பட்டவர். இன்று அவர் ஒரு கல்வியில் விரிவுரையாளர். அத்துடன் கூத்துக் கலையின் நுணுக்கங்களை தனது தந்தையின் ஊடாகப் முதிசமாகப் பெற்ற அற்புத கலைஞன். வேறுபட்ட துறைகளில் பெற்ற இத்தகைய பட்டறிவு அனுபவங்களை அவரது படைப்புகளில் தரிசிக்க முடிகிறது.
அவற்றை நேர்த்தியான சிறுகதைப் படைப்புளாகத் தந்த கலாமணிக்கும், நூலாக வெளியிட்ட கலாமணி பரணீதரனுக்கும் எனது பாராட்டுக்கள்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0