Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மூவுலகு’ Category

தெணியானின் ‘மூவுலகு’ – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல

மூவுலகு என்ற பெயரைப் பார்த்தவுடனேயே இது சமயம் சார்ந்த நம்பிக்கையுடையவர்கள் கருதும் மூவுலகு அல்ல. அவர்களது நம்பிக்கையான மேலுலகம், பூவுலுகம், நரகலோகம் என்பது பற்றியதாக இருக்கவே இருக்காது என என் மனம் அடித்துச் சொல்லியது.

வேறு விடயத்தைப் பேசும் என்பது என் மனத்துள் உறுதியாகியது. காரணம் அந்தப் பெயரைச் சூட்டியவர் தெணியான். ஒரு முற்போக்கு எழுத்தாளர். இடதுசாரி அரசியல் வழி வந்தவர். நூலைத் தட்டிப் பார்த்தேன்.

‘மூவுலகு என்பது சாதாரண மக்கள் பேசும் மேலுலகு, பூவுலகு, பாதளவுலகு ஆகிய மூன்றுமல்ல. பூவுலுகிலுள்ள மூன்று வர்க்கங்கள் பற்றியதென்பதை படித்து முடிந்ததும் உணர்வீர்கள்.’ என்று தெணியான் எழுதியிருந்தார்.

நான் நினைத்தது சரிதான். ஆனால் படிக்க முன்னரே உணர்ந்து விட்டேன். என எனக்குள் நானே பெருமைப்பட்டுக்கொண்டேன்.

மற்றொரு விடயத்தையும் குறிப்படவேண்டும். ‘… பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) காதல் நாவல் ஒன்று எழுதுமாறு ஒரு சமயம் என்னிடம் கூறினார் ….’ . ‘பூவுலகில் உள்ள மூன்று வர்க்கங்களின் கதை’ என்ற தலைப்பில் சொல்லப்பட்ட தனது முன்னுரையில் தெணியான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கோரிக்கை விடயத்தில், நந்தி மட்டுமல்ல நானும் சற்று ஏமாந்துவிட்டேன் தெணியானிடம் இந்த நாவலில்.

மூன்று இளம் சோடிகளின் கதைகளைப் பேசும் நாவல் இது.

அவற்றில் இரண்டு காதல் கதைகள். முதலாவதும் பிரதான கதையுமானது மாணவப் பருவத்தில் கிளர்ந்தெழுந்து பல்கலைக்கழகம் தாண்டி, இடர்களுக்கு முகம் கொடுத்து மருத்துவர்களான பின்னரும் தொடரும் காதல். அந்தக் காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.

மற்றது இரு பாடசாலை ஆசிரியர்களிடையே எழும் காதல் பற்றியது.

காதலே இல்லாமல் காலத்தின் கோலத்தால் இளம் பாராயத் திருமணத்திற்கு தள்ளப்பட்ட சமூகத்தின் அடித்தள மகளின் கதை மூன்றாவது.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காதல் நாவல்; பற்றிய நந்தியின் கோரிக்கையில் நந்தியும் நானும் ஏமாந்த விடயம் என்னவெனில் இது காதல் பற்றிய நாவலாகவே இருக்கிறதே ஒழிய காதல் நாவல் அல்ல என்பதுதான்.

காரணம் அவர் ஒரு ஆசிரியர். பாடசாலையில் மட்டுமல்ல ஆரம்ப காலங்களில் ரியுசன் வகுப்புகளிலும் கோலோச்சியவர். அதுவும் குமரப்பருவ மாணவ மாணவிகளுக்கு போதித்தவர். எனவே அவருக்கு ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. அந்த மாணவர்களை தான் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற கடமை உணர்வு ஆழ ஊன்றியிருந்ததை அறிவேன்.

நாவலின் முதல் பக்கத்தில் வரும் வரி ஒன்றே போதும் அவரது நிலையை தெளிவு படுத்துவதற்கு.

‘குமரப்பருவ மனங்களில் தோன்றும் யௌவனக் கனவுகள், கற்பனைகள், உணர்வுகள் அத்தனையும் அந்தப் பருவத்திற்கு இயல்பானவை. ஆனால் அந்தப் பருவப் புயலில் மனம் அடிபட்டுப் போகாத வண்ணம் மாணவர்கள் தங்களை நெறிப்படுத்தி விழிப்புடன் கல்வியில் அக்கறை காட்ட வேண்டிய காலம்’ என்கிறார்.

ஆம் ஏமாந்து விட்டோம். மாணவப் பருவத்து நினைவுகளிலும் அரச மருத்துமனைகளில் பணியாற்றிய காலங்களில் சக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், தாதியர்களிடையே இடையேயான ஒளிவு மறைவான கிளுகிளுக்கும் காதல் நிகழ்வுகளைக்; கண்டு அனுபவித்த எங்களுக்கு அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்களிடையேயான காதல் உணர்வுகளையும் செயற்பாடுகளையும குறும்புகளையும்; படித்து ரசிக்கலாம் என எண்ணத்தில் தெணியான் மண் தூவிவிட்டார்.

விழிகளால் பேசுதல், மறைவிடங்களில் சந்திப்பு, நினைவுகளில் நீந்தல், ஸ்பரிச சுகம் போன்ற யவ்வன லீலைகள் எதுவுமே இந்த நாவலில் இல்லை. அவற்றை தெணியானிடம் எதிர்பார்த்தது எங்கள் தவறே அன்றே தெணியானின் தவறு அல்ல என்பது உண்மையே.

இரண்டு விதமான காதல்கள் இந்த நாவலில் அடிநாதமாக இருக்கிறன.

குமரன் வாணி ஆகியோரின் காதல் ஆழமான காதல். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவர் ஆற்றலை மற்றவர் கண்டு வியந்து, ஒத்த மனம் கொண்டோரிடையே பிறந்த காதல் அது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல ரியூசன் வகுப்பில் ஆரம்பித்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களாக பணியேற்ற பின்னரும் தொடரும் காதல். வெளிக் கவர்ச்சிகளால் பிறந்தது அல்ல. ஆழமான அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான காதல். தடைகளை மௌனமாக எதிர்கொண்டு மேவிச் செல்லும் காதல். ஆயினும் சமூகச் சூழல் பெரும் திரையாக விலக்கி வைக்க முனைகிறது.

இரண்டாவது காதல் இரு ஆசிரியர்களுக்கிடையே ஆனது. தனிமையின் வெற்றிடத்தை நிரப்பவும், பாலியில் உணர்வுகளால் உந்தப்பட்டும் எழுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக் காதல். இங்கு ஆத்மார்த்த ஈடுபாடு சந்தேகத்திற்கு உரியது.

மூன்றாவது சோடியின் கதையில் காதலே இல்லாத அவசர கோலத் திருமணம். கடுமையான யுத்த காலப் பகுதியில் வலுக் கட்டாயமாக போராளியாக இழுத்துச் செல்லப்படுவதிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும நிர்ப்பந்தத் திருமணம்;.

இந்த மூன்று கதைகளையும் இணைத்து மூவுலகு நாவலை சுவார்ஸமாக புனைந்ததில் தெணியானின் அனுபவப்பட்ட எழுத்தாளுமை கைகொடுக்கிறது.

தெணியான் படைப்பு என்றாலே சாதிப் பிரச்சனை பற்றித்தானே இருக்கும் என்று கிண்டலடிக்கும் மேலாதிக்க சிந்தனையுள்ள விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்க்கு அவல் போடுவது போல இந்த நாவலிலுள்ள மூன்று சோடிகளின் கதைகளிலும் அடிநாதப் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருப்பது சாதிப் பிரச்சனைதான்.

ஆனால் பொற்சிறையில் வாழும் புனிதர்கள் நாவலை எழுதியதும் தெணியான்தான் என்பதை மறந்து விடுகிறார்கள். சாதியில் உச்ச இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தால் போலி மரியாதையுடன் அடக்கி ஒடுக்கப்பட்ட பிரமணர்கள் பற்றி எழுதியது அவர்தான்.

இந்த நாவலில் சாதிப் பிரச்சனை வருகிறது. ஆனால் கல்வியும் பொருளாதரமும் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்தில் அதன் சாதீயத்தின் முகம் எவ்வாறு ஒப்பனை போட்டு அலங்கார முகத்துடன் மறைமுகமாக வெளிப்படுகிறது என்பதை காண்பிக்கிறார்.

அதைவிட முக்கிய விடயம் என்னவெனில் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக இப் பிரச்சனையில் ஏற்பட்டு வருகின்ற சில நம்பிக்கையூட்டும் மாற்றங்களையும் இந்த நாவலூடாக வெளிப்படுத்துகிறார்.

சாதி வேறுபாட்டைத் தாண்டிய காதல் மலர்வதைக் காண்கிறோம். சாதிப் பிரச்சனையின் சமூக ரீதியான பாதிப்பை உணராத பதின்மங்களில் மட்டுமல்ல படித்து பட்டம் பெற்று ஆசிரியர் தொழில் பார்க்கும் வயதுகளிலும் அத்தகைய காதல் ஏற்படுவதை தெணியான் தனது நாவலில் சித்தரிக்கிறார்.

அடுத்த வீட்டுக்காரன் யார் அவன் என்ன சாதி என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாத கொழும்பு போன்ற பெருநகரங்களில் ஏற்படும் காதல் அல்ல இங்கு பேசப்படுபவை. சாதாரண கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் இத்தகைய காதல் பிறந்திருக்கிறது. ஊர் மட்டத்தில் அதன் பின்விளைவுகள் அடிதடி, கொலை, முதல் குடும்பப் பகிஸ்கரிப்பு வரை நீளும் என்பதை அனுபவரீதியாக உணரக் கூடிய கிராமப் பகுதியிலும் பிறக்கிறது என்பது சற்றே ஆச்சரியம் அளிக்கிறது.

அதற்கும் மேலே ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் தெணியான் தனது கதையாடல் ஊடாக சொல்கிறார். மருத்துவர்களான குமரனுக்கும் வாணிக்கும் திருமணம் நடக்கிறது. அதுவும் அவர்கள் ஊரிலேயே நடக்கிறது. அவர்களின் சாதி வேறுபாட்டையும் தாண்டி நடக்கிறது. இரகசிய திருமணம் அல்ல. கோலாகலத் திருமணம். திருமணத்திற்கு அவர்களது தொழில் சார் மருத்துவ நண்பர்கள் மட்டுமின்றி ஊர் நண்பர்களும் சில உறவினர்களும் கூட சமூகம் அளித்துள்ளனர். நிச்சயம் வரவேற்றகத்தக்க மாற்றம்.

சற்றுப் பொறுங்கள். எமது சமூகம் சாதி பாராட்டாத சமூகமாக மாறிவிட்டது எனப் புளங்காகிதம் கொள்ளாதீர்கள்.

‘பிள்ளை பிடிவாதக்காரி. நினைச்சதை செய்து முடிக்கிறவள். இப்பவே விலகித்தான் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகும் விலகி இருப்பம். கீழே உள்ளதுகளுக்கு நாங்கள் சம்பந்தம் செய்ய வேணுமல்லே! எங்களுக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எண்டு கேக்கிறவையளுக்கு சொல்லிப் போட்டு விடுவம்.’
இது அவளது தந்தையின் கூற்று.

ஆம் தெணியான் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

சாதி வேறுபாடு இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுவதில்லை என்று வெளிப் பார்வைக்கு தோன்றினாலும் தீ அணையாமல் உள்ளுரப் புகைந்து கொண்டே இருக்கிறது. சொந்த வாழ்வில் தாண்ட வேண்டிய தேவை தவிரக்க முடியாததாக இருந்தாலும் சமூக்கதிற்கு பயப்பட்டு அடங்க வேண்டி இருக்கிறது என்பதை அழகாகப் சொல்லியுள்ளார்.

ஆசிரியர்களான சுமதி, ஆனந்தராஜனின் காதலும் நிறைவேறாத திருமணமும் இதற்கு மற்றொரு சான்றாக இருக்கிறது.

முற்போக்கு எழுத்தாளரான தெணியான் சாதி முரண்பாட்டுடன் வர்க்க முரண்பாடு பற்றியும் இந்த நாவலில் பேசுவது ஆச்சரியமானதல்ல. சிவமதியை பணபலம் கொண்ட உயர்சாதி ஆண்மகன் சட்டபூர்வமாக திருமணம் செய்த போதும் அவளைத் தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. அவள் வீட்டிற்குச் சென்று தங்குவதுமில்லை. இருளின் மறைவில் சுகம் கண்டு பகலில் நழுவிடுகிறான் கணவன். வைப்பாட்டி போலானாள் மனைவி. சாதிச் சிக்கலுடன் ஏழ்மையும் சேர்ந்தவுடன் இருபக்கமும் அடிவாங்கும் துர்ப்பாக்கிய நிலையாவதை சித்தரிக்கிறார்.

சாதி ஏற்றத் தாழ்வு எவ்வாறு தனிமனிதர்களைப் பாதிக்கிறதோ அதே போல வர்க்க முரண்பாடும் பாதிப்பதை தெணியான் இந்த நாவல் ஊடாக பதிவு செய்கிறார். சற்று ஆழமாக யோசித்தால் சாதிப் பிரச்சனையை விட வர்க்க முரண்பாட்டின் தாக்கம் அதிகமாக இருப்பதையே இந்த நாவல் சுட்டிக் காட்டுவதாகவே எனக்குபு; படுகிறது.

சுனேத்ரா மறக்க முடியாத பாத்திரம். இன ஐக்கியம் அவளுடாகப் பேசாமல் பேசப்படுகிறது
அழகான தமிழ், சுவார்ஸமான கதையோட்டம், ரசிக்க வைக்கும் நடை. தெணியானின் கைப்பக்குவத்தின் சுவையால் எடுத்த நூலைக் கீழே வைக்காமல் படித்து முடித்தேன்.

எமது மத்தியில் நிலவும் சாதி, சமூக முரண்பாடுகளையும் அவற்றில் ஏற்படுகின்ற வெளிப்படையான மாற்றங்களையும், மாறியது போன்ற சில மாயத் தோற்றங்களையும், மாறாமல் அழுங்குப் பிடியுடன் இருக்கும் சாதீயம் சார்ந்த சில நடைமுறைப் பிரச்சனைகளையும் பேசுவதால் இலக்கியப் பிரியர்கள் மட்டுமின்றி சமூக ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நூல் ஆகிறது மூவுலகு.

கொடகே வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவல் சுமார் 215 பக்கங்கள் வரை நீள்கிறது. விலை 650 ரூபாக்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »