Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நிர்மலா சிவராஜா’ Category

முகநூலில் பெற்ற நண்பரும் தமிழ் ஆசிரியருமான நிர்மலா சிவராஜா அவர்களது பூக்கள் என்ற நூலுக்கு நான் வழங்கிய வாழ்த்துரை

பூக்கள் என்றும் நறுவி என்றும் அழைக்கப்படும் மலர்கள் இயற்கையின் வசீகர அற்புதங்களில் ஒன்றாகும். பெண்களுக்கு அழகைக் கொடுக்கும் வதனம் போல மரம் செடி கொடிகளை வாஞ்சையோடு நாட வைப்பவை மலர்கள்தான்.

அவற்றின் கண்கவரும் வண்ணங்கள், நாசியைத் துளைக்கும் நறுமணங்கள், உள்ளுறைதிருக்கும் தேன் போன்றவை வண்டுகளையும் பூச்சிகளையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவையாகும்.

1962593_415142988631948_818164069_n

“தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு” அவற்றில் அமர்ந்து அளைவதானது மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து அச் செடி வர்க்கத்தின் பரம்பலையும் நீட்சிiயும் ஊக்குவிப்பதற்காக இயற்கை அளித்த விந்தையாகும்.

மனிதனும் அவற்றின் அழகில் கிறங்கி ஆசையோடு வீடுகளில் வளர்க்கிறான். அலங்கரிக்கிறான். இறைவனுக்கு அர்ச்சிக்கிறான். காதலைத் தெரிவிக்க பரிசளிக்கவும் செய்கின்றான்.

மனித உணர்வுகளின் வேட்கையைத் தணிவிப்பது மட்டுமின்றி அவற்றை மூலிகை மருந்துகளாகவும் பயன்படுத்த கற்றுக் கொண்டான்.

மலர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கிய சுருக்கமான, செறிவான கட்டுரைகளை இலகு தமிழில் பேஸ்புக்கில் சகோதரி  நிர்மாலா சிவராஜா தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றை ஆவலோடு வாசித்தவர்களில் நானும் ஒருவன். நாம் அதிகம் காணத அரிய பூக்களைப் பற்றி மாத்திரம் இன்றி நாம் நாளாந்தம் காணும் மலர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அவர் தந்து வியப்பில் ஆழ்த்தி தப்பாமல் தொடர்ந்து படிக்கச் செய்தார்.

இது தகவல் யுகம். அவசரம் மிகுந்தது. காலம் பொன்னானது. அல்ல! பொன்னை விடப் பெறுமதியான rhodium காலம் எனலாம். இக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் மிகச் சுருக்கமாக ஆனால் அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை எழுதிய அவரது ஆற்றல் வியக்க வைத்தது.

யாழ் பல்கலைக்கழக B.A பட்டதாரியான அவர் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் ஆசிரியையாகக் கடமையாற்றிய போது பெற்ற அனுபவங்கள் கைகொடுத்திருக்கும் என்பது உண்மையே.

இருந்தபோதும் அதற்கு அப்பால் அவரிடம் இயல்பாக அமைந்திருக்கும் அழகியல் உணர்வும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், தேடல் உணர்வும் ஒவ்வொரு கட்டுரையிலும் பளிச்சிடுகின்றன. இலகுவான வார்த்தைகள், சுருக்கமான வசனங்கள், சிறிய பந்திகள், தெளிவான கருத்துக்கள், நீரோட்டம் போன்ற நடை ஆகியன அவரது எழுத்தின சிறப்பு எனலாம்.

தனது படைப்புகளுக்கு வலுச் செய்யும் வண்ணம் அவர் தேர்ந்தெடுத்திருந்த புகைப்படங்கள் மிக அற்புதமானவை. ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாததை ஒவ்வொரு புகைப்படம் ஊடாகவும் அள்ளித் தந்திருக்கிறார்.

உலகத் தமிழ் பண்பாட்டு கழகம் மூலம் தமிழ் மணிப் மணிப் புலவர் பட்டம் பெற்ற இவர் தற்போது அதே உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் ஐரோப்பிய கல்விப் பொறுப்பளாராக இருப்பது அவரது பணி ஆர்வத்தையும், செயலூகத்தையும் புலப்படுத்துகின்றன.

இது அவரது முதல் நூல் என எண்ணுகிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் போலவே அவரது எழுத்துப் பயணமும் சிறப்பும் சுபிட்சங்களும் நிறைந்ததாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

09.09.2013

Read Full Post »