நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் கவிதைகள்
மணற்கும்பி
அட்டைப்படத்தில் உள்ள மணல் மேட்டையும் மணற்கும்பி என்ற நூலின் தலைப்பையும் பார்த்த உடனேயே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை. ஆயினும் நூலாசிரியர் ரஜிதா இராசரத்தினம் நூலைத் தந்த போது நோயாளி அருகில் காத்திருந்ததால் அட்டைப்படத்தை ஆசையோடு மிருதுவாகத் தடவுவது மட்டுமே சாத்தியமானது.
நானும் வடமராட்சி மண்ணைச் சார்ந்தவன். வல்லிபுர தீர்த்தக் கடற்கரையிலும், மணற்காட்டிலும் நாகர்கோவிலிலும் பரந்து கிடந்த மணல் மேடுகளில் மாணவப் பருவம் முதல் இளைக்க இளைக்க ஓடி ஏறிய அனுபவங்கள் நிறையவே உண்டு. ‘நாசியேறக் கனிந்திருக்கும் நாவற்பழங்களின் சுவையையும்..’ அனுபவித்தவன் நான். ஆனால் அண்மைக் காலங்களில் சென்ற போது 70 வயதிலிலும் மூச்சிளைக்காது அங்கு நடக்க முடிந்தது. மூச்சளைக்காததற்கு காரணம் எனது நல்ல ஆரோக்கியம் அல்ல.
‘அம்மா சொன்ன அந்த
பனையளவு உயர மணல்கும்பி
இப்போது தேடியும்
கிடைக்கவில்லை…’
ஆம் தொலைத்துவிட்டோம் இயற்கை வளங்களை. மிஞ்சி இருப்பவற்றையும் தொடர்ந்தும் சூறையாடி அழித்துக் கொண்டே இருக்கிறோம்.
மணற்கும்பிகளை மட்டுமல்ல.
‘…ஆசையாய் ஊஞ்சல்
கட்டி ஆடிய – அந்த
வயதான வேப்பமரங்களும்
விறக்குக்காய் வெட்டுண்டு
போனதுவே…’
இயற்கையே நேசிப்பதும், ரசிப்பதும், அதில் ஊறித் திளைப்பதும் கவிஞனுக்கு கிடைத்த வரம். அதை அழிப்பது கண்டு கலங்கும் மனமும் அங்கிருக்கும். ரஜிதா இராசரத்தினம் அவர்களிடம் இத்தகைய பண்புகள் நிறையவே இருப்பதை மேற் கூறிய உதாரணங்களில் மட்டுமின்றி இன்னும் பல கவிதைகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது. தான் ரசித்ததை இனிய வரிகளில் சொல்லி அந்த ரசனையை எங்களுக்கும் தொட்டவைக்கவும் முடிகிறது அவரால்.
இன்னொரு கவிதையில் பொலித்தீன் பாவனை பற்றி இவ்வாறு
‘மிச்ச எலும்போடு
இப்பகூட உக்கியிருக்காத
அந்த லஞ்ச்சீட் பையும்…’
ரசனையோடு நின்றுவிடாது பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு வரும் மூடப் பழக்கவழகங்களை கண்டித்துத் திருத்தும் அறிவியல் பார்வையையும் இவரது கவிதைகளில் காண முடிந்தது.
‘வடக்காலயோ
கிழக்காலயோ
இல்ல தெற்காலயோ…’
‘அட கோதாரி விழுவாரே
பல்லி தன்ர பசியிலை கத்திது
அதின்ர வாய்
நீங்கள் பாக்காம – உங்கட
சோலிய பாருங்கோ …’
பொதுவாக கவிதை என்பது உணர்வு நிலை சார்ந்தது. சொல் ஆளுமை, கலைத்துவ வெளிப்பாடு ஆகியன கருத்து வெளிப்பாட்டை மேவிநிற்கும். ரஜிதாவின் படைப்புகளில் இரண்டிற்கும் இடையேயான ஒரு சமநிலையை பேணப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆம் அவரது கவிதைகளில் வலுவான செய்தி இருக்கிறது. அதே நேரம் அவற்றை கலைநயத்தோடு வெளிப்படுத்த முனையும் கவிதா மொழியையும் காண்கிறோம்.
இந்தத் தேசம் இந்து சமுத்திரத்தில் மிதக்கும் தீவு அல்ல. குருதிக் கடலில் ருசி தேடும் யம தேசம். 79, 83, முள்ளிவாய்க்கால் பேரழிப்பு, ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்கள் என முடிவில்லாமல் இரத்ததாகம் கொண்ட நாடு.
ரஜிதாவின் குரலில் இவ்வாறு
‘தீச்சுடர் புசித்த தேசமடி
இரத்தவாடையுடனாய்
மூச்சையற்றோம்…
….. மலங்களோடு மாமிசமானோம்
பிண்டமறுந்த நர ஊன்களு10டாய்
ஏதோவென்றைப் பற்றி
குருதிக் கடலில்
எங்கோ வந்தும் சேர்ந்தோம்,…’
குருதிக்கடல் மட்டுமல்ல தொலைத்த உறவுகளும் ஏராளம். அவர்கள் விடும் கண்ணீர் பதவியில் இருப்போர் கண்களில் படுவதில்லை. தற்செயலாக அவர்கள் காதில் விழுந்தாலும் நிறைவேற்றப்பட்டாத பொய் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்.
காணமல் ஆக்கப்பட்ட தந்தையைப் பற்றிய ஒரு பிள்ளையின் நினைவுகள் இவ்வாறு .
‘மூன்று வயதில் பார்த்தது
முகங் கூட நினைவில் இல்லை..
தேடி கண்டு பிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த நிழற்படங்கள் ஏராளம்’
ரஜிதாவின் கவிதை மொழி இயல்பானது. வாசகனை கைகோர்த்து கூடவே அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. மருள வைக்கும் வெற்றலங்கார சொற் சோடனைகள் கிடையாது. திகைத்து ஒதுங்க வைக்கும் மொழியாடல் கிடையாது. வட்டார வழக்குகள் இயல்பாக கலந்து வருகின்றன.
வடமராட்சி கிழக்கு மண்ணின் பேச்சு வழக்கு கவிதைகளில் கலந்து வருவது யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பதுடன் சுகமான அனுபவமாகவும் இருக்கிறது. அளாப்பி, அப்பேக்க, எழுதேக்க, கோதாரி விழுவாரே, எணை, உண்ணான, பிசகாம,… எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். பக்கம் பக்கமாக நீளும்.
வாழ்க்கை என்பது ஒரு முடிவிலா போராட்டம். சவால்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரும். துன்பங்களும் இனிய நிகழ்வுகளும் சங்கிலித் தொடராய் முடிவின்றி நீளும். சலிக்காது வாழ்வது மட்டும் போதாது. அதை ரசிக்கவும் வேண்டும்.
ரஜிதா ஒரு இளம் பெண், இது அவரது கன்னி முயற்சி. ஆயினும் அவர் வாழ்வை ரசிக்கிறார். கடந்தவற்றில் திளைக்கிறார். நிகழ்வாழ்வை ரசனையோடு அனுபவிக்கிறார். எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார். அவரது படைப்பாளுமையின் கூறுகள் கூடாக நாமும் வாழ்வை ரசிக்க முடிகிறது. மனித வாழ்வின் மறைந்திருந்த கோலங்கள் பற்றிய பரந்த பார்வையை நாவற்பழம் என இனிக்கும் மொழில் நாமும் பெறுகிறோம்.
இது அவரது முதல் நூல். புதிய வீச்சுக்களுடன் இன்னும் பல படைப்புகளை அவர் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கான கீற்றுகளை இப்பொழுதே காண முடிகிறது.
ஜீவநதி ஜீலை 2019 இதழில் வெளியான கட்டுரை
எம்.கே.முருகானந்தன்
0.00.0