>எம்.கே.முருகானந்தன் தலைமையுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம்
இன்று ஒரு நூல் வெளியீட்டிற்காக கூடியுள்ளோம்.
இது ரிம்ஸா முகம்மத் அவர்களுடைய முதல் நூல். இது ஒரு கவிதைத் தொகுப்பு.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை பல இலக்கியச் செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியக் கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள், நூல் விமர்சன அரங்கங்கள், நூல் வெளியீடுகள் போன்ற பலவும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
சிறுகதைத் தொகுப்புகள் 4 வெளிவந்தள்ளன, முற்போக்கு கவிதை மற்றும் சிறுகதை பற்றிய ஆய்வுகள் நூலாகப்பட்டுள்ளன. ‘பின்னவீனத்தை விளங்கிக் கொள்ளல்’ என்ற பேரா.சபா ஜெயராசாவின் இலக்கிய செல்நெறி சார்ந்த கட்டுரை நூலானதும் முக்கியமானது
எமது கல்வி முறைமைகள் தொடர்பாக, பேரா.சபா ஜெயராசாவின் ‘கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்’, தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்’ மற்றும் பேரா.சந்திரசேகரனின் ‘இலங்கையில் உயர்கல்வி’, தை.தனராஸ் ‘ஒடுக்கப்பட்டோர் கல்வி- மலையக் கல்வி பற்றிய ஆய்வு’ ஆகியவை பெறுமதி வாய்ந்த நூல்களாகும்.
இதேபோல சூழலியல் பற்றி பேரா. ஆன்ரனி நோபேட் எழுதிய ‘சேது சமுத்திரம் கப்பற் கால்வாய்- அமைவிடம் பற்றும் பௌதீகச் சூழல் பற்றிய ஆய்வு’ காலத்தின் தேவை கருதிய முக்கிய வெளியீடுகளாகும்.
தொடர்ந்து ‘பண்பாட்டு உலகமயமாதலும் தாக்கங்களும் புத்துயிர்ப்பும்’, ‘மார்க்சிய உளவியலும் அழகியலும்’, ‘காலவெள்ளம்’, ‘பூகோளம் வெப்பமடைதல்’ ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளது.
இன்று வெளியாகும் ரிம்ஸா முகம்மத் அவர்களது ‘தென்றலின் வேகம்’ ஒரு கவிதைத் தொகுப்பாகும். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். இளம் எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களது நூல்களை வெளியிடும் முயற்சியின் முதற் பெறுபேறும் இதுவாகும்.
தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை சிறப்பான நூல்களையும் கருத்தரங்குகளையும் முன்னெடுக்கும் என நம்புகிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
நூலாசிரியர் பற்றி
‘தென்றலின் வேகம்’ ரிம்ஸா முகம்மத் அவர்களின் முதலாவது இலக்கிய நூலாகும். ஏற்கனவே கணக்கியல் பற்றி மூன்று நூல்களை மாணவ சமுதாயத்தை முன்நிறுத்தி வெளியிட்டிருக்கிறார்.
இது ரிம்ஸா முகம்மத் முதல் கவிதை நூல் ஆன போதும் இவர் இலக்கிய உலகிற்குப் புதியவர் அல்ல. 1996, 97களிலிருந்தே கவிதைகள் படைத்து வருகிறார். ஆயினும் 2004ம் ஆண்டை ஒரு திருப்புமுனையாகக் கொள்கிறார்.
இவரது வேகமான இலக்கியப் பயணம் அதன் பின்னர்தான் ஆரம்பித்தது. தினகரன் வீரகேசரி போன்ற இலங்கைப் பத்திரிகைகள் முதல் தமிழகச் சஞ்சிகையான ‘இனிய நந்தவனம்’ ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இணையத்தையும் இவர் தனது இலக்கியத் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தத் தவறவில்லை. ஊடறு, வார்ப்பு ஆகிய இணைய இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கு மேலாக தனக்கு என ஒரு இணையத் தளத்தையும் வைத்திருக்கிறார். ‘ரிம்ஸா முகம்மத் கவிதைகள்’ என்ற இணையத் தளம். அதற்கு இவர் கொடுத்திருக்கும் முகப்பு வாசகம் ‘முட்களுக்கு மத்தியில்தான் ரோஜாக்களின் ராஜாங்கம் நடப்பது’ என்பதாகும்.
ஆம் மனதுக்கிய இனிய எந்த நல்ல விடயம் நடப்பதாயினும் அது பல சவால்களையும் தடைகளையும் தாண்டியாக வேண்டும் என்பது பொது நியதியாகிவிட்ட காலம் இது. தனது சொந்த வாழ்க்கையிலும் இலக்கியப் பயணத்திலும் பல பிரச்சனைகளை நூலாசிரியர் எதிர்கொண்டுள்ளார்.
‘அழுகுண்ணிச் சிந்தனைகளையும்
அடுத்துக் கெடுக்கும்
அடாவடித்தனங்களையும்
அங்கிக்குள் மறைத்து..’
என்று தனது கவிதையில் குமுறுவதிலிருந்து இதை உணர முடிகிறது.
திக்குவல்லை அருகில் உள்ள வெலிகம என்ற கிராமத்தைப் பிற்பிடமாகக் கொண்ட ரிம்ஸா முகம்மத் இப்பொழுது கல்கிசவில் வாழ்வது தனது வாழ்வைக் கொண்டு நகர்த்துவதற்கான தொழில் தேவைகளுக்காக.
‘சொந்த மண்ணின் பேறான
சுக வளத்தை இழந்து
வெந்த உள்ளத்தோடும்
வேக்காட்டுப் பெருமூச்சோடும்
வாழும் இவர்கள்’
என்று ஒரு கவிதையில் பாடுவது வெறும் கற்பனைச் சொற்களல்ல. வாழ்க்கை அனுபவங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இன்றைய நூல் கவிதை பற்றியது. எனவே கவிதை பற்றி மேலும் ஆழமாகச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.
இலங்கையில் தமிழ்க்கவிதை
இலங்கைக் கவிதைத் துறைக்கு நீண்ட வரலாறு உண்டு. அதில் இப்பொழுது தென்றலின் வேகம் கவிதை நூலும் இணைந்து கொள்கிறது. இந்த நூல் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கும் கவிதைத் தொகுதி. அதிலும் முக்கியமாக ஒரு இஸ்லாமியப் பெண்ணின் பாடுகளைச் சொல்லும் தொகுதியாகவும் உள்ளது.
இலங்கை இலக்கியப் பரப்பில் பெண்களின் கவிதைகள் நூலாக வரத்தொடங்கியது ‘சொல்லாத சேதிகளுடன்’ என நினைக்கிறேன். இது 1986 ல் வெளிவந்தது. சுமார் இரண்டரை தசாப்பதமாக பெண்களின் குரல் எமது இலக்கியப் பரப்பில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிவரமணி, ஒளவை, ஆழியாள், சுல்பிகா, மைதிலி, பெண்ணியா, நளாயினி, லுணகல ஹஸீனா புஹாரி, பாலரஞ்சனி சர்மா, கோசல்யா, அனார் என நீளும் பட்டியலில் இப்பொழுது வெலிகம ரிம்ஸா முகம்மதின் நூலும் இணைகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்
கவிதை எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே ஒலித்து வந்திருக்கிறது.
இதனால் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான 80 களில் கவிதையானது எமது முக்கிய இலக்கிய வடிவமாக மாறத் தொடங்கியது. வெளிப்படையாகப் பேச முடியாத குரல்கள் கவிதைகளாக வெளிப்பட ஆரம்பித்தன. எமது கவிதை தீர்க்கமாகவும் தீவிரமாகவும் ஒலித்து, தமிழக இலக்கிய உலகின் கவனத்தையும் ஈரத்தது அதன் பின்னர்தான்.
வீட்டுச் சூழலில் மாத்திரமின்றி சமூக, தேசிய ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் கவிதையில் எப்பொழும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒளவை, ஆண்டாள் என முற்காலத்தில் ஒலித்த குரல்கள் இப்பொழுது வேகமாகவும் வீரியமாகவும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
ஒரு கவிஞனாக, பெண்ணாக, இஸ்லாமியப் பெண்ணாக அவர் எவ்வாறு தனது உலகைப் பார்க்கிறார் என்பதை நூலை ஆராய இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் நான் சில பொதுவான விடயங்களை மட்டும் சொல்லிச் செல்ல நினைக்கிறேன்.
கவிதை என்றால் என்ன?
சிறந்த சொற்களை சிறப்பான ஒழுங்கமைவில் தருவது கவிதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது மாத்திரம் கவிதையாகிவிடாது. தான் அனுபவித்த, மனதுக்கு நெருக்கமான விடயத்தை உள்ளத்தைத் தொடும் சொற்களில் சொல்லி அது படிப்பவனின் உள்ளத்தையும் கிளற வேண்டும். தனக்கும் நெருக்கமானதாக அதனை வாசகன் உணர வேண்டும். அதுவே நல்ல கவிதையாகும்.
சொல்லப்படுவது பெரிய விடயமாக இருக்க வேண்டும், ஆழமான கருத்துக்களை உள்ளடக்க வேண்டும் என்றில்லை. பெரிய படிமங்களும் கூடத் தேவையென்றில்லை. எளிமையான சொற்களில் தனது கவிதைகளைத் தந்த பாரதியின் சொற்களோடு ஒப்பிடுகையில் இன்றைய பல கவிஞர்களின் படைப்புகள் வெறுமையான வார்த்தை அலங்காரங்களாக இருக்கின்றன.
வெலிகம ரிம்ஸா முகம்மத் ஆழமான விடயங்களைத் தேடி ஓடவில்லை. அவரது கவிதைகள் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை. முற்போக்குக் கருத்துகளை அள்ளி வீசவில்லை. இனப் பிரச்சனை பற்றிக் கோடிகாட்டவும் இல்லை. தனது சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைளை உரத்துச் சாடவும் இல்லை. ஆனால் தனது உணர்வுகளை மட்டுமே பேசுகிறார். அதை உண்மையாகப் பேசுகிறார். ஆயினும் படைப்புகளுக்கு சமூக உணர்வு இருப்பது அவசியம். எதிர்காலத்தில் இதில் கூடிய அக்கறை செலுத்துவார் என நம்பலாம்.
தாய் பற்றிய உணர்வுகள்
அவரது கவிதைகள் ஊடாகப் பயணிக்கையில் தாய் பற்றிய உணர்வுகள் அற்புதமாக விழுந்திருப்பதை உணரமுடிகிறது. இவரது நூலின் தலைக் கவிதையான ‘ஆராதனை’ தாய் பற்றியதே
‘உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலமபும் எனக்கு..
ஓத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு’ என்று ஏங்குகிறார்.
‘ஓர் ஆத்மா அழுகிறது’ என்பதும் தாய் பற்றிய ஒரு நல்ல கவிதையாக எனக்குப்பட்டது.
‘தலையணை’ என்ற கவிதைத் துளியில்
‘சோகத்தில் சுகமளித்து
சயணிக்கச் செய்யும்
சிறந்த தாய்மடி’ என்கிறார்.
சுமார் 5 வருடங்களுக்கு முன் தாயை இழந்த துயர்
‘தாயின் பிரிவு
எனை வெளியேற்றியது
வீட்டை விட்டு!’
‘காத்திருக்கும் காற்று’ என்ற கவிதையில் வெளிப்படுகிறது.
தாய் பற்றிய இவரது உணர்வுகள் இவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குமே நெருக்கமான உணர்வுதான் தாய்ப்பாசம் என்பது. இதனால் அவரது அனுபவங்கள் எங்களது அனுபவங்களாகவும் மாறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எமது உள்ளத்தை ஊடுருவின்றன. வாசகனது மனத்தில் உள்ளுறைந்து மறைந்து போன உணர்வுகளைத் தொட்டுப் பேசாத எதுவுமே நல்ல கவிதை ஆகமுடியாது.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் வெலிகம ரிம்ஸா முகம்மத் கவிதைகள் ‘உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ளவை’ என கவிஞர் இக்பால் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் என எண்ணுகிறேன்.
இந்நூலில் உள்ள பெரும்பாலன கவிதைகள் நட்பு, பாசம், காதல், தாய்ப்பாசம் போன்ற உணர்வுகளைப் பேசுகின்றன. நாம் வாழ்வில் நிதம் நிதம் சந்திக்க நேரும் உணர்வுகளை அவர் அழகான கவிதைகளாக வடித்திருக்கிறார்.
இத்தகைய உணர்வுகளை வாசகனிடம் எழுப்ப அவருக்கு கடுமையான சொற்கள் தேவைப்படவில்லை. சாதாரண சொற்களே போதுமாயிருந்தன என்பதை நீங்களும் உணர்வீர்கள். கவிஞர் முருகையன் பேச்சு வழக்கிலேயே பல அற்புதமான கவிதைகளைத் தந்ததை நாம் மறக்க முடியாது.
உண்மையான கவிதைகளுக்கு ஓசை நயம், சந்தம், உருவகம், உவமானம், யாப்பு, வடிவம், படிமம் எதுவுமே தேவையில்லை. உணர்வுகளை வார்த்தைகளில் வசப்படுத்தவும், அதனை வாசகனுக்கு எளிதாகக் கடத்தவும் முடிந்தால் அது கவிஞனின் வெற்றி எனலாம்.
நம்பிக்கை ஊட்ட வேண்டும்
கவிதை மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய வடிவமாக இருந்தாலும் அது நம்பிக்கை வரட்சியாக இருப்பது நல்லதல்ல. படைப்பாளிக்கு சமூக நோக்கு இருக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டி வாசகனை எதிர்காலத்தின் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்ய வேண்டும். அவையே நல்ல படைப்புகள். மனித சமுதாயத்தின் வளர்சியிலும் வெற்றியிலும் அக்கறை கொள்ளாத படைப்புகளுக்கு எத்தகைய சமூகப் பெறுமாமும் கிடையாது.
‘வசந்த வாழ்க்கை – என்
வாழ்வு தேடி
நிச்சயம் வரும் ஒரு நாள்..’ என நம்பிக்கை கொள்கிறார்.
அதனூடாக வாசகனுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.
‘புயலாடும் பெண்மை’ என்ற கவிதையில் பெண்ணியத்தின் கீற்றுக்களைக் காண்கிறோம்.
கவிதை, கவிதை மொழி என்றெல்லாம் இன்று பலரும் பேசுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன என்று சொல்வது இலகுவானதல்ல. ஆனால் நல்ல படைப்பான ஒரு கவிதையின் அர்த்த தளங்கள் குறுகிய பார்வையுடையனவாக இருக்கக் கூடாது. அது வாசகனின் அனுபவத்துடன் இணைந்து பரந்து விரிந்தும், எல்லை கடந்தும் பயணிக்க வேண்டும்.
முடியும் வேளையில் பேசத் தொடங்குதல்
எந்தவொரு நல்ல படைப்பினதும் மற்றொரு அடையாளம் அதன் முடிவில் தானிருக்கிறது. படைப்பு முடியும் வேளையில் அது வாசகனுடன் பேசத் தொடங்கினால் அதைவிட நல்ல படைப்பு இருக்க முடியாது. படைப்பாளி தனது முடிவை வாசகனிடம் திணிக்காது அவனது மனத்தைப் பேச வைக்க வேண்டும். அவனது தூக்கத்தைக் கெடுத்து அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும். கனவிலும் விடாது தொடர்ந்து பேசவைப்பதாக இருக்க வேண்டும்.
வெலிகம ரிம்ஸா முகம்மதின் படைப்புகளில் ‘கவிதை முடியும் இடத்தில் தான் தொடங்கும் பண்பு’ உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புகிறேன்.
இறுதியாக ஒரு வார்த்தை. நான் கவிஞனல்ல. கவிதை எனக்கு பிரதான நாட்டமுள்ள இலக்கிய வடிவமுமல்ல. மாணவப் பருவத்திலும் அண்மையிலுமாக சில மட்டுமே எழுத முயன்றுள்ளேன். அத்தகைய என்னை இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்க அழைத்த இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை அன்புக்கு நன்றி.
இந்நிலையில் இவ்வளவு நேரமும் பேசிய என்னைப் பாரத்து நூலாசிரியர்,
‘எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்.
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என
என்னைக் கேட்காமலேனும் இரு. ‘
என்று பசுவய்யா தனது கவிதையில் பாடியது போலக் கேட்காமல் இருந்தால் சரி.
நன்றி.
எம்.கே.முருகானந்தன்
14.02.2010.
நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=
நூல் விநியோக உரிமை:-
பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.
புகைப்படங்கள் நன்றி மன்னார் அழுதன் : –
http://www.facebook.com/amujo?v=photos#!/album.php?aid=146731&id=555502667
Read Full Post »