Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நெஞ்செரிப்பு’ Category

>”கனநாளா இருமல். அடிக்கடி வந்து வந்து போகும். கன பேரட்டை மருந்து எடுத்தனான். மாறுற பாடாக் காணயில்லை.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைத் தடவினார் அந்த தொந்தி பருத்த மனிதர்.

“நெஞ்சிலை என்ன?” எனக் கேட்டேன். “ஒனறுமில்லை. நெஞ்சரிப்பு. அடிக்கடி வாறாது. இண்டைக்கு கொஞ்சம் கூடச் சாப்பிட்டிட்டன். அது தான் …” என இழுத்தார். எனக்கு மின்லடித்தது போல அவரது இருமலுக்கான காரணம் வெளித்தது.

நெஞ்சரிப்பு என்பது ஒரு இடைஞ்சல் தரும் உணர்வு. எரிவு போலவோ, வலிப்பது போலவோ, சூடு போன்றது போலவோ ஆனதொரு உணர்வு. பொதுவாக மேல் வயிற்றில் ஆரம்பித்து நடு நெஞ்சுக்கு வருவது போல இருக்கும். தொண்டை வரை பரவுவதும் உண்டு. சில வேளைகளில் வாய்க்குள் புளித்துக் கொண்டு வருவது போலவும் செய்யும். செமியாத்தன்மை, சாப்பாடு மேலெழும்புவது, புளித்துக் கொண்டு வருதல், என்றெல்லாம் நாம் சொல்லுவதை ஆங்கிலத்தில் Heart Burn என்பார்கள்.

எப்படி அழைத்தாலும் இப் பிரச்சனைக்கும் இருதயம், மாரடைப்பு போன்ற பயமுறுத்தும் நோய்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆயினும் மிக அரிதாக மாரடைப்பானது நெஞ்சில் எரிவது போல வெளிப்படுவதுண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெரும்பாலும் நெஞ்செரிப்பானது உணவிற்குப் பின் வருவதை நீங்களும் அனுபவித்திருக்கலாம். உணவின் பின் இரண்டு மணி நேரம்வரை கூட நீடிக்கலாம். குனிவதாலும் படுப்பதாலும் இது திடீரென ஏற்படவும் வாய்ப்புண்டு. அவ்வாறான தருணங்களில் எழுந்திருந்தால், அல்லது எழுந்து நின்றால் அதிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட முடியும். அடிக்கடி நெஞ்செரிப்பு வருபவர்கள் சாப்பிட்ட உடன் படுக்கைக்குப் போகக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணிநேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குப் போக வேண்டும்.

இரைப்பைக்குள் வழமையாக இருக்கும் அமிலம் அல்லது அத்துடன சேர்ந்து குடலில் உள்ள உணவுகளும் மேலெழுந்து நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயின் இன்னொரு பகுதியான களத்திற்குள் (Oesophagus) ஊடுருவுவதாலேயே நெஞ்சரிப்பு ஏற்படுகிறது. இரைப்பைக்குள் இருப்பவை மேலெழுந்து நெஞ்சுப் பகுதிக்கு வருவதைத் தடுக்கும் ‘வால்வ்’ (Lower oesophageal spincter) சரியாகச் செயற்படாததாலேயே இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதனால்தான் கருப்பையில் உள்ள குழந்தையானது இரைப்பையை அழுத்துவதால் கர்ப்பமாயிருக்கும் காலங்களில் தாய்க்கு அடிக்கடி நெஞ்செரிப்பு வருவதைக் காண்கிறோம்.

பொரித்த ஊணவுகள், கொழுப்புப் பண்டங்கள், சொக்கிளேட், பெப்பர்மின்ட், கோப்பி, மென் பானங்கள், மது போன்றவை நெஞ்செரிவைத் தூண்டும். நெஞ்செரிவு உள்ளவர்களுக்கு புளிக்கும் தன்மை உள்ள தோடம்பழம், தேசி, அன்னாசி போன்ற பழவகைகளும் கூடாது. உள்ளி, வெங்காயம், தக்காளி, மற்றும் காரமான உணவு வகைகளும் நோயைத் தீவிரமாக்கலாம்.

புகைத்தலும், புகையிலையும், அத்துடன் கூடவே வலிநிவாரணி மாத்திரைகள், இரும்புச் சத்து மாத்திரைகள், அலர்ஜிகளுக்கு எதிரான Antihistamine மருந்துகளும் நெஞ்செரிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். அதேபோல அதீத எடையுள்ளவர்களின் வயிற்றின் கொழுப்பும், இறுக்கமான ஆடைகளும் இரைப்பையை அழுத்துவதால் அமிலத்தை மேலெழச் செய்து நெஞ்செரிப்பபை ஏற்படுத்தலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் மலத்தை வெளியேற்றுவதற்காக முக்குவதால் மூலநோய் மாத்திரமின்றி நெஞ்செரிவும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றறையில் இருக்கும் இரைப்பையின் பகுதியாவது அங்கிருந்து இடைமென்தட்டு (Diaphragm) வழியாக நெஞ்சறைக்குள் செல்லக் கூடும். ‘ஹையற்றஸ் ஹேர்னியா’ எனும் இது வெளிப்படையாக பார்க்க முடியாத ஒரு நோயாகும். இதுவும் நெஞ்செரிப்பை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு மனஅழுத்தமும் இருந்தால் கூட நெஞ்செரிப்பு ஏற்படுத்துகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? மனஅழுத்தம் இரைப்பையில் அமிலம் சுரப்பதை அதிகரிக்கிறது. அத்துடன் இரைப்பையின் செயற்பாட்டை ஆறுதல் (Slow)படுத்துகிறது. இவை இரண்டுமே நெஞ்செரிப்பை ஏற்படுத்துகினறன.

நெஞ்செரிவு பொதுவாக ஆபத்தற்ற அறிகுறியாகும். ஆயினும் கடுமையான சத்தி, உடல் மெலிதல், பசிக்குறைவு, வாந்தியோடு இரத்தம் போதல், மலம் தார்போல கருமையாகப் போதல் போன்ற அறிகுறிகளும் கூட இருந்தால் அலட்சியம் பண்ண வேண்டாம். ஏனெனில் அவை குடற்புண், புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

வியர்வை, கடுமையான களைப்பு, மூச்சிளைப்பு ஆகியவற்றுடன் நெஞ்செரிவு வந்து அந்த வலியானது கழுத்து, தாடை, அல்லது கைகளுக்குப் பரவினால் அது மாரடைப்பாக இருக்கலாம் என்பதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய செய்தியாகும்.

உங்களுக்கு நெஞ்செரிவு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அ. அதிக உடையுள்ளவராயின் உணவு முறை மாற்றங்களாலும், உடற்பயிற்சியாலும் உங்கள் எடையைக் கட்டுப்பாற்றிற்குள் கொண்டுவர முயலுங்கள்.
ஆ. வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிய வேண்டாம்.
இ. சாப்பிட்டு சில மணிநேரங்கள் செல்லும் வரை குனிந்து வேலை செய்ய வேண்டாம். சாப்பிட்டு இரண்டு மணி நேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஈ. நெஞ்செரிப்பை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைத் தவிருங்கள்.
உ. மது, புகையிலை போடுதல், புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள்.
ஊ. மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

நீண்டநாள் இருமல் இருந்தவருக்கும் நெஞ்செரிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நெஞ்செரிப்பின் போது இரப்பையிலிருந்து மேலெழும் அமிலமானது சுவாசத் தொகுதியினுள் சிந்திப் பாதிப்பதுண்டு. இது அங்கு அரிப்பை உண்டாக்கி ஆஸ்த்மா, இருமல் போன்றவையை ஏற்படுத்தலாம். அத்தகையவர்களுக்கு சளிக்கான மருந்துடன், அமிலம் சுரப்பதையும், அது மேலெழுவதையும் தடுப்பதற்கான மருந்துகளையம் சேர்த்துக் கொடுத்தால்தான் இருமல் குணமடையும். அதைத்தான் செய்தோம்.அவரது எடை அதிகமாததால் அதையும் குறைக்கும் படியும் ஆலோசனை கூறப்பட்து.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்திய நிபுணர்

Read Full Post »