Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நேர்காணல்’ Category

ஜீவநதி சஞ்சிகையில் நேர்காணல்

1)    ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப் பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா?

DSC00484-001

ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவன் நான். அப்பா புகையிரத் திணைக்களத்தில் உதவி அட்சகராக இருந்தவர். அம்மா எல்லா அம்மாக்களையும் போலவே அன்பையும் பாசத்தையும் ஒழுக்கத்தையும் விதைத்தவர். பருத்தித்துறையில் உள்ள வியாபாரமூலை நான் பிறந்த கிராமம். அமைதியான கிராமம். சோலி சுரட்டுக்குப் போகாத ஊரவர்கள்;. அரசாங்க உத்தியோகங்களும் வியாபாரமும் எம்மவர்களது முக்கிய தொழில்களாகும். மனைவியும் அதே ஊர். எனது எல்லா முயற்சிகளிலும் உதவியும் ஒத்தாசையாகவும் இருப்பவர். வளர்ந்த இரு பிள்ளைகள்.

MSV view

ஆரம்பக் கல்வி அங்குள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில். பின்னர் பருத்தித்துறையில் உள்ள ஹாட்லிக் கல்லூரி.

DSC02792

பட்டப் படிப்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம். கொழும்பு மருத்துவ பட்டமேற்படிப்பு நிலையத்தில் குடும்ப மருத்துவத் துறையில் டிப்ளோமா பெற்றேன்.

Faculty - Copy copy

2)    உங்களுக்கு இலக்கியத்தில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள குடும்பப் பின்னணி. பாட்டியின் தகப்பானார் கண்ணாடி அப்பா என்போம். ஐம்பதுகளின் ஆரம்பமான அந்தக் காலத்திலேயே தினமும் வீரகேசரியும் கல்கியும் வாராவாரம் அவர் வீடு தேடி வரும். தொட்டுப் பார்த்து, அழகு பார்த்து, விரித்துப் பார்த்து, எழுத்துக் கூட்டிப் படித்தது எனப் படிமுறை வளர்ச்சியாக எனது வாசிப்புப் பழக்கம் வந்தது.

அப்பா கலைமகள் அமுதசுரபி கொண்டு வருவார். அம்மா தீவிர வாசகி. அப்பா ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பார். பக்கத்து வீடு பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை. சிறந்த வாசகரும் பேச்சாளரும் ஆவார். அவரது வீடு நிறையப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் நிறைந்து கிடக்கும். தமிழ் புத்தகங்களுடன் National Geography அறிமுகமானது.

அவருடன் தொத்திக் கொண்டு கூட்டங்களுக்குப் போவதில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா, நா.பா, எமது ஊர் யாழ்ப்பாணன் முதலான பல இலக்கியக்காரர்களை நேரில்; காணவும் பேசவும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்கவும் முடிந்தது.

ஹாட்லியில் அருமையான ஆசிரியர்கள். W.N.S சாமுவெல் Emergengy 1958, Psycholohist போன்ற கனதியான வாசிப்பிற்கான ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். வித்துவான் கார்த்திகேசு மரபு வழி வாசிப்பிற்கும், வித்துவான் வேலோன் நவீன இலங்கியங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தினர்.

கனக செந்திநாதனை முதன் முதலில் கேட்க முடிந்தது ஹாட்லியின் இலக்கிய நிகழ்வின்போதுதான். அக்காலத்திலே மல்லிகை, வசந்தம், கலைச்செல்வி போன்றவற்றின் அறிமுகம் ஈழத்து இலக்கியத்திலும் முற்போக்கு இலக்கியத்திலும் ஈடுபாட்டை ஏற்படுத்தின.

மருத்துவ பீடத்தில் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ்ச்சங்கம் இந்து மன்றம் போன்றவற்றில் நிறைய பங்குபெற முடிந்தது. சஞ்சிகை ஆசிரியராக, தலைவராக, பொருளாளராக எனப் பொறுப்புகளும், கவிதை அரங்கு, மேடைப்பேச்சு, நாடகத்தில் நடிப்பு, நாட்டாரியலில் ஆய்வுக்கட்டுரை, வானொலி சங்கநாதம் நிகழ்ச்சிகளில் பற்கேற்பு என கலை இலக்கியத்தில் பரவலான ஈடுபாடு வளர்ந்தது.

3)    நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்?

SDC13998-002

மேற் கூறிய அனைத்துமே அத்திவாரம்தான். 5 வயதில் தினகரன் மாணவர் பகுதியில் கட்டுரை, ஹாட்லிக் கல்லூரி Miscellenyயில் கட்டுரை, பல்கலைக்கழக கால சஞ்சிகைக் கட்டுரைகள் யாவும் மாணவப் பருவத்தின.

பருத்தித்துறையில் தனியார் மருந்துமனையை ஆரம்பித்து ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர்தான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.

DSC07727

மல்லிகை ஜீவா சிரித்திரன் சுந்தர் இருவரது நட்பும் என்னில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய போதும் சிரித்திரனில்தான் எனது முதல் தொடரான ஒரு டொக்டரின் டயறியிலிருந்து தொடங்கியது.

Sirithiran Sunthar

பிறகு மல்லிகையில் விமர்சனங்கள், சிறுகதை என வளர்ந்தது.

‘உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணி’ எனப் பெரிய வார்த்தைகளைப் போடுகிறீர்கள். ஆனால் எழுதப்புகும் எல்லா எழுத்தார்களையும் போலவே எனது சுயஅடையளத்தை நான் சார்ந்த சமூகத்தில் வைப்பதற்காகவே எனது ஆரம்ப எழுத்துகள் இருந்தன.

ஆனால் மருத்துவன் என்ற முறையில் சமூகம் சார்ந்த கடப்பாடு ஒன்று இருப்பதை படிப்படியாக உணர ஆரம்பித்தேன். மருத்துவர்கள் சொல்வதை நோயாளிகள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடன் செலவிடும் குறுகிய நேரத்திற்குள் தெளிவாகச் சொல்லப்படாதவற்றை தெளிவாகவும் பரவலாக சென்றடையும் வண்ணம் தெரிவிப்பது முக்கிய தேவையாக இருந்தது.

இதற்காக முற்றிலும் வித்தியாசமான இரண்டு வகையான எழுத்து வடிவங்களை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. மருத்துவக் கட்டுரைகள் ஒரு புறமாகவும், அனுபவப் பகிர்வுகள், சிறுகதைகள், புகைப்படங்கள், ஒரு சில கவிதைகள் என்பன மறுவிதமாகவும் அமைந்தன. மருத்துவம் சார்ந்த படைப்புகளை நான் தொடர்ந்து எழுத ஆரம்பகாலத்தில் தூண்டியவர்களில் முக்கியமானவர் டொக்டர் சுகுமார் ஆகும். அதேபோல முரசொலி ஆசிரியரான எஸ்.திருச்செல்வத்தையும் குறிப்பிட வேண்டும்.

4)    அறிவியல்- மருத்துவத்துறை சார்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் யாருடைய படைப்புகள் உங்களை வெகுவாகப் பாதித்துள்ளன?

இதில் இரண்டு தேர்வுகள் கிடையாது. ஒரே ஒருவர் மட்டும்தான். நந்தி எனப் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களே. அவர் மிகப் பெரிய ஆளுமை. நான் அவரது மாணாக்கனாக இல்லாதது போனது எனது துரதிஸ்டம். அவரது நலவியல் நூலான அன்புள்ள தங்கைக்கு, மற்றும் அவரது நாவலான மலைக்கொழுந்து ஆகியவை என்னை ஆரம்பகாலத்தில் ஆழமாகப் பாதித்தன. என்னுடைய வழிகாட்டியாகவும் மற்றொரு புறத்தில் குடும்ப நண்பராகவும் இருந்தவர்.

5)    உயர் தொழில் (Profession) பார்க்கும் ஒருவர், இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு காட்டுவது, அவரின் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

அவ்வாறு பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதில்லை. ஆனால் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னுடைய மருத்துப் பணிநேரத்தில் எனது முன் உரிமை எனது நோயாளிகளுக்கே. முன்னுரிமை என்று சொல்லக் கூடாது முழுமையான உரிமை அவர்களுக்கே. எனது பணிநேரத்தில் நான் எந்த முக்கியமான இலக்கியக் கூட்டம் விழா நிகழ்வு எதுவானாலும் விட்டுக் கொடுப்புகள் இல்லை.

எனது ஓய்வு நாட்களான ஞாயிறு மாலை மற்றும் வர்த்தக விடுமுறைதினங்களின் மாலை நேரத்தில் மட்டுமே அவற்றில் கலந்து கொள்கிறேன். வருடத்தில் 365 நாட்களும் வேலை செய்கிறேன். மிக அத்தியாவசமான தேவைகளுக்காக மட்டுமே வருடத்தில் 3-4 நாட்களுக்கு லீவு எடுத்திருப்பேன்.

6)    சமுதாய மருத்துவம் (communitymedicine) என்ற துறையின் பிரதான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?

சமுதாய மருத்துவம் என்பது ஒரு கிராமத்தின் பிரதேசத்தின் அல்லது தேசத்தின் நலத்தை ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுப்பதாகும். ஒரு குறிப்பட்ட சமுதாயத்தில் தோன்றும் நோய்கள் எவை, அவை தோன்றுவதற்கான காரணங்கள் எவை. அவற்றைத் தடுப்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும். தனி நபரை மட்டும் பார்க்காமல் அந்த நபர் சார்ந்த சமூகத்தின் பின்னணியில் பார்ப்பதாகும். பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அத்துறை சார்ந்தவர். அத்துறைக்கான கல்வியில் பேராசிரியராகப் பணியாற்றி எண்ணற்ற மருத்துவர்களிடம் சமூக நோக்கை விதைத்தவர் எனச் சொல்லாம்.

எனது துறை குடும்ப மருத்துவமாகும் (Family medicine). . நாங்கள் சமூகத்தின் மத்தியில் இருப்போம். அது கிராமமாகவோ நகரமாகவோ இருக்கலாம். நாங்கள் தனி மனிதர்களை அவர்கள் சார்ந்த குடும்பப் பின்னணியில் அணுகுவோம். நான் குடும்ப மருத்துவனாக நீண்டகாலம் பணியாற்றிய பருத்தித்துறையில் டொக்டர்களான தம்பித்துரை, பத்மநாதன், கணபதிப்பிள்ளை, பாலகிருஷ்ணன், கதிர்காமத்தம்பி போன்றோர் எனது முன்னோடிகளாக அரும்பணி ஆற்றியுள்ளனர்.

அம்மம்மா, அம்மா, மகள், பேத்தி எனப் பலதலைமுறையினருக்கு மருத்துவம் செய்தவர்கள் அவர்கள். இதனால் அவர்களுக்கு தனது நோயாளிகளின் பரம்பரை நோய்கள், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் என யாவுமே அத்துபடியாகத் தெரிந்திருந்தது. இது தங்கள் நோயாளிகளின் பிரச்சனைகளை அவசியமற்ற ஆய்வுகூடப் பரிசோதனைகள் இன்றி பார்த்த மாத்திரத்திலேயே கண்டறிய முடிந்திருக்கிறது. வாழும் சூழலுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஆராக்கியமாக வாழ நெறிப்படுத்த முடிந்திருக்கிறது.

இத்துறை மிக அற்புதமாக செயற்படும் நாடாக இங்கிலாந்தைக் கூறலாம். இங்கு இலங்கையில் அரச ஆதரவில்லாத காரணத்தால் இத்துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது. அரச மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் வசதிகள் தரப்படுவதால் இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறது.

7)    ஒரு மருத்துவரின் அநுபவங்களைப் படைப்புகளாகத் தரும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறிப்பிடுங்கள்?

மருத்துவர் தனது அனுபவங்களை படைப்புகளாகத் தரும்போது அது அவரது நோயாளிகளின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பெயர், ஊர், உருவ அடையாளங்கள் போன்ற நோயாளியின் தனித்துவமான குறிப்புகள் எதுவும் படைப்பில் இருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்நோயாளியின் மன உணர்வுகளை மட்டுமின்றி சமூக ரீதியான தாக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தலாம்.

ஆனால் இது மருத்துவரின் படைப்புகளுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருத்தமானது. எந்த ஒரு படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணும் விதத்தில் தனது பாத்திரங்களை அமைக்கக் கூடாது. அவ்வாறு எழுதுவது அவர்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே இருக்கும். இருந்தபோதும் பல பிரபல எழுத்தாளர்கள் கூட தமது படைப்புகளில் சில தனிநபர்களை குறிவைத்து அடிப்பதாக எழுவதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.

எந்தவொரு நோயாளியையும் இனங்காணும் வகையான குறிப்புகள் எதுவும் எனது படைப்புகளில் இருக்காது. மருத்துவக் கட்டுரையாயினும் சரி அனுபவப் பகிர்வாயினும் சரி சிறுகதை கவிதை போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி அவற்றில் யாரையும் குறிப்பாக எழுதக் கூடாது என்பதில் நான் மிக அவதானமாக இருக்கிறேன். அது எனது தொழில் தார்மீகமும் கூட. பல நோயாளிகளில் பெற்ற அனுபவங்களை ஒன்று சேர்த்து அவற்றை நம்பத்தக்க விதமான உயிரோட்டமுள்ள புதிய பாத்திரங்களாகப் புனைந்து எழுதுகிறேன். அதனால் அவை எந்த ஒருவரையும் குறிப்பிட்டுச் சுட்டுவதாக இருக்காது

பொதுவான சில பிரச்சனைகள் பற்றி எழுதும் போது அது எனக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது என ஒருவர் அல்ல, பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ‘பரவலான பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன் அது அவர்களைச் சென்றடைந்திருக்கிறது அவர்களுக்கு மருந்தாக அமைந்தது’ என திருப்தி கொள்ளுவேன்.

8)    மருத்துவக் கருத்துக்களை இலக்கியப் படைப்புகளில் கருப்பொருளாகக் கொள்ளும்போது, அப்படைப்புகளினூடாகச் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்லலாம் எனக் கருதுகிறீர்களா?

நிச்சமாக இல்லை. குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிய அருட்டுணர்வை பரந்த வட்டத்தில் ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும். தெளிவான மருத்துவக் கருத்துக்களை சொல்வதற்கு நலவியல் கட்டுரைகளே ஏற்றவை. இலக்கியப் படைப்புகள் இலகு வாசிப்பானவை. எந்த ஒரு நோய் பற்றியாவது தெளிவாக அறிய விரும்புவர்கள் அது பற்றிய மருத்துவக் கட்டுரையை வாசிக்க வேண்டும்.

ஆனால் மருத்துவக் கட்டுரைகளை இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகைளில் எழுதலாம் என்றாகிவிட்டது. யார் எழுதுகிறார் எழுதுபவரது மருத்துவக் கல்வித் தகமை என்ன போன்றவற்றை கவனத்தில் கொண்டே அவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டியது வாசகர் பொறுப்பாகிவிடுகிறது.

எழுதுபவர் பெயர் இல்லாமல் கூட நலவியல் கட்டுரைகளை வெளியிடுமளவிற்கு பல பத்திரைககள் தமது பத்திரிகா தார்மீகத்தை கைநழுவிவிட்டுள்ளன.

9)    இணையத்தள வலைஅமைப்புகளினூடாக இன்று வெளியிடப்படும் படைப்புகள் வெகுசன மட்டத்தில் சென்றடையக்கூடிய வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்தலாம்?

இணையதள வாசிப்பு பெருகி வருகிறது. இருந்தபோதும் அச்சு ஊடகம் அளவிற்க்கு வெகுசன மட்டத்தை அவை சென்றடைவதில்லை என்பது உண்மையே. இருந்தபோதும் பத்திரிகைகள் கூட வெகுசனமட்டத்தை அடைவதாகத் தெரியவில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் கூட அவற்றின் தினசரி விற்பனை முப்பதாயிரத்தை தாண்டுவதில்லை என அண்மையில் ஒரு தினசரி ஆசிரியர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.

ஒரு படைப்பிற்கான எதிர்வினை அதை வெளியிட்ட அடுத்த கணமே கிடைக்கும் என்ற சுயதிருப்திக்காகவே பல எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவதை விரும்புகிறார்கள். ருவிட்டர், பேஸ்புக், லிங்டென், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத் தளங்கள் ஊடாக பரலாக கிடைக்கச் செய்ய நானும் முயல்கிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றை வெறும் திண்ணைப் பேச்சாகவே கொண்டு செல்கின்றனர்.

10)    உங்களின் நலவியல் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்?

இதுவரை 11 நலவியல் நூல்கள் வெளியாகியுள்ளன.

  1. சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்,
  2. பாலியல் நோய்கள்,
  3. போதையைத் தவிருங்கள்,
  4. தாயாகப் போகும் உங்களுக்கு- இலங்கையில் 1 பதிப்பு, NCBH சென்னை 3 பதிப்புகள்,
  5. எயிட்ஸ்- இலங்கையில் 3 பதிப்புகள், NCBHசென்னை 3 பதிப்புகள்,
  6. வைத்திய கலசம்,
  7. சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு,
  8. நீங்கள் நலமாக- இலங்கையில் 5 பதிப்புகள்,
  9. நீரிழிவுடன் நலமே வாழுங்கள் – 3 பதிப்புகள் ,
  10. கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி? 2 பதிப்புகள் ,
  11. உயர் இரத்தநோயைப் புரிந்கொள்ளல்.

இவற்றைத் தவிர பத்திரிகைகள் சஞ்சிகைளில் 2007 ஆண்டிற்கு பின்னர் எழுதி வெளியான 400 ற்கு மேற்பட்ட நலவியல் கட்டுரைகள் நூலாக்கப்படாமல் கைவசம் இருக்கின்றன.


11) உங்களது இலக்கியப் படைப்புகளை நூலாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

‘மறந்து போகாத சில’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை மீரா பதிப்பகம் ஊடாக பல வருடங்களுக்கு முன் வெளியிட்டேன். நூல் விமர்சனம், சினிமா விமர்சனம், புகைப்படம், சிற்பம் ஓவியம் போன்;ற பல்துறை கலை இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.

ஒரு டொக்டரின் டயறியில் இருந்து மல்லிகைப் பதிப்பக வெளியீடாக வந்தது. இது எனது மருத்துவப் பணியூடாக சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் சமூகவிமர்சன அனுபவப் பதிவு நூலாக வந்தது. ஆரம்பத்தில் சிரித்திரனிலும் பின்னர் மல்லிகையிலும் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இவை.

இன்னமும் நிறையக் கட்டுரைகள் உள்ளன. சினிமா விமர்சனங்கள் பல உள்ளன. ஒரு நூலாகப் போடலாம். நிறைய இலக்கியக் கட்டுரைகள் உள்ளன. அண்மைக்காலமாக புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வம் பிறந்திருக்கிறது. பல கவிதைகளும் எழுதியுள்ளேன். புகைப்படங்களும் கவிதையும் சேர்ந்ததாக ஒரு நூல் போடவேண்டும் என்ற விருப்பும் உண்டு.

Stethஇன் குரல் என்ற தலைப்பில் புதிதாக பல எனது அனுபவப் பகிர்வுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இப்பொழுது அறிவியல் களரி என்ற தொடரில் இலகுவாக தமிழில் அறிவியல் கட்டுரைகளை சமகாலம் சஞ்சிகையில் எழுதிவருகிறேன். மிகுந்த தேடலுடன் எழுதும் கட்டுரைகள் இவை. இவற்றைத் தொகுத்தால் சாதாரண மக்களும் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சில கோணங்களை புரிந்து கொள்ளக் கூடிய வித்தியாசமான நூலாக அமையும்.

ஆனால் இவை எவற்றையும் நூலாக்கும் முயற்சியில் நான் இறங்கத் தயங்குகிறேன்.

காரணம், இலங்கையில் ஒரு நூலைப் போட்டால் அதன் விற்பனையையும் எழுத்தாளனே பொறுப்பேற்க வேண்டிய இடரான சூழலே இருக்கிறது. அதற்கான நேரமும், விற்பனை இரகசியங்களும் என்னிடம் கிடையாது. அதனால் யாவற்றையும் இணையத்தில் போட்டு பலதரப்பட்ட வாசகர்களையும் அடைய முயற்சிக்கிறேன். அதில் ஓரளவு நிறைவு காண முடிகிறது.

12)    உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி..

  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘நீங்கள் நலமாக’ ஆகிய இரண்டும் இலங்கை தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றன.
  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ இலங்கை இலக்கியப் பேரவை விருதையும் பெற்றது.
  • இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஊடகத்துறை பங்களிப்பிற்கான விருது.
  • கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்தின் சிறந்த வலைப் பதிவாளர் விருது 2011

13) நீங்கள் ஒரு சிறந்த வாசகர் என்பதை நீங்கள் அவ்வப்போது எழுதும் கட்டுரைகள் வெளிபடுத்துகின்றன. உங்களுடைய தொழில் ரீதியான கடமைகளுக்கும் அப்பால், வாசிப்புக்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?

எழுத்து வாசிப்பு யாவும் எனது ஓய்வு நேரத்தில்தான். கிடைக்கும் நேரம் முழுவதையும் இத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் செலவழிக்க வழிசமைத்துத் தருவது எனது துணைவியார்தான். எனது எழுத்து முயற்சிகளின் முதல் வாசகர், விமர்சகர் படிதிருத்தம் செய்வது யாவும் அவரே.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஜீவநதி சஞ்சிகையில் வெளியான நேர்காணல்

 0.0.0.0.0

Read Full Post »

தினக்குரல்  வழமையாக தனது பத்திரிகையில் இணைக்கும் அனுபந்தங்களுடன் இன்று புதிதாக ‘டிஜிட்டல் யுகம்’ என்பதை வெளியிட்டுள்ளது.

இதில் எனது வலைப்பதிவு அனுபவங்கள் பற்றிய சுருக்கமான நேர்காணலை இணைத்துள்ளார்கள்.

‘கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

1.    கடந்த வருடத்தின் சிறந்த தமிழ் வலைப்பதிவாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். அத்துடன் 5 வலைப்பதிவுகளையும் நீங்கள் மேற்கொண்டுவருகின்றீர்கள். ஒரு மருத்துவராகவும், எழுத்தாளராகவும் உள்ள நீங்கள் வலைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

தினக்குரல் டிஜிட்டல் யுகம்

கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.

தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.

இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.

2 வலைப்பதிவை மேற்கொள்ளும் ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ளம் முக்கியமான பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பப் பிரச்சினை. குறிப்பாக வலைத்தளத்தை அமைத்துக்கொள்வது பதிவேற்றம் செய்வது, தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவது என்பவையே அவை. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு வெற்றிகொண்டீர்கள்?

கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது'

மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது. படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது.

நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன்.

இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன்.

இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கி;ன்றன. அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.

3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வெவ்வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?

வலைதளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.

4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?

வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.

கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட  சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை  பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.

எனது படைப்புகளை பலர் வெவ்வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.

5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?

தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.

மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>இன்றைய (21.11.2010) வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையில் என்னுடனான நேர்காணல் வெளியாகியுள்ளது. நேர்கண்டவர் திரு.வி.எஸ்.நவமணி ஆகும்.

“தமிழ்ப் பேசும் மக்களுக்கு முழு உரிமை இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இருக்கவில்லை” என்ற தலையங்கத்தில் வெளியாகியுள்ளது.

நேர்கண்ட திரு.வி.எஸ்.நவமணிஅவர்களுக்கும், அதன் பிரதம ஆசிரியர் வ.தேவராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையின் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

இன்று 7ம் பக்கத்தில் இது வெளியாகியுள்ளது.

ஒரு இலக்கியவாதியான எனது கருத்துக்கள் இங்கு வெளியாகியுள்ளது.

நண்பர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

Read Full Post »