>’ஒரு செக்கண்ட், ஒரு செக்கண்ட்தான், எனக்கு நேற்று திடீரென ஒரு பக்க கையையும் காலையும் இழுத்தது போலிருந்தது. மகனைக் கூப்பிடுவதற்கிடையில் எல்லாம் மாறிவிட்டது’ என உங்கள் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்கிறார். கலவரமின்றிப் பேச்சோடு பேச்சாகச் சொல்கிறார்.
அவரைப் பார்க்கிறீர்கள், மிக நன்றாகப் பேசுகிறார், நடக்கிறார், கை கால்கள் வழமைபோல இயங்குகின்றன. ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்! ஏதோ பயந்திட்டார் போல என நினைக்கிறீர்கள். ‘அப்பாவின்ரை அண்ணா இரண்டு மாதத்துக்கு முந்தித்தான் ஸ்ரோக் வந்து இறந்தவர். அதை நினைச்சிட்டார் போல’ என மகன் அலட்சியமாகச் சொல்கிறார்.
அலட்சியப்படுத்தக்கூடிய விடயமாகத் தெரியவில்லை. இவரைப்போன்ற 21000 பேரின் மருத்துவ ஏடுகளை ஆராய்ந்து பார்த்து, அவர்களை மேலும் விசாரித்த ஒரு கள ஆய்வின் பிரகாரம் அவர்களில் பலருக்கு உடல் ரீதியாகவும் நரம்பு மண்டல ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தான் முணுமுணுக்கும் பக்கவாதம் என்கிறார்கள்.
இது ஏதோ புதிதான வியாதியோ அல்லது எப்போதாவது ஒரு சிலரை மட்டும் தாக்கும் முக்கியமற்ற பிரச்சினை என எண்ணி விடாதீர்கள். 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இவ் ஆய்வைச் செய்த டாக்டர் ஜோர்ஜ் ஹோவர்ட் கூறுகிறார். இவர் அலபாமா பல்கலைக்கழககத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவராக இருக்கிறார்.
அதென்ன ‘முணுமுணுக்கும் பக்கவாதம்’ என்கிறீர்களா? பக்கவாதம் பற்றி நிச்சயம் அறிநிதிருப்பீர்கள். சிறிய அளவிலான பக்கவாதம் (Minor Stroke) பற்றியும் கேள்விப்பட்டிருக்கக் கூடும், அது பற்றிய எனது கட்டுரையை வாசித்திருக்கவும் கூடும். இப்பொழுது முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றிப் பேசலாம்.
இவர்களுக்கு பக்கவாதத்தை ஒத்த சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆயினும் அவை மிக அற்பமாக இருப்பதால் பாதிக்கப்பட்டவரை கலவரப்படுத்துவதில்லை, வைத்தியர்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்ப்பதில்லை. இது வெளிக்காட்டாத பக்க வாதத்திலிருந்து (Silent Stroke) வேறுபட்டது. வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளுமற்ற போதும் CT Scan செய்து பார்க்கும் போது மூளையில் பாதிப்புகள் ஏற்பட்டது தெரிய வருவதையே ‘வெளிக்காட்டாத பக்க வாதம்’ என்கிறோம்.
‘நிச்சமற்ற அறிகுறிகளாக இருப்பதாலும், வெளிப்படையான பாதிப்புகள் அதிகம் இல்லாததாலும் முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, வீண் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டியதும் இல்லை’ எனச் சில மருத்துவரகள் கருதுகிறார்கள். ஆயினும் ‘பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, அறிவார்ந்த செயற்பாடுகள் பாதிப்புறுகின்றன, மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே இது வெளிக்காட்டாத பக்க வாதத்தை ஒத்ததாக இருக்கலாம்’ என கருதுகிறார் டொக்டர் ஜோர்ஜ் ஹொவேட்.
அதாவது CT Scan போன்ற மேலதிக பரிசோதனைகளைச் செய்தால் தான் தெரியவரும்.அத்துடன் இது சிறிய அளவிலான பக்கவாதமாக இருக்கக் கூடம் என்பதும், அவ்வாறாயின் அத்தகையவர்களுக்கு பெரியளவிலான பக்கவாம் வருவதற்கான சாத்தியங்களும் அதிகம் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
முணுமுணுக்கும் பக்கவாதம், வெளிக்காட்டாத பக்க வாதம், சிறிய அளவிலான பக்கவாதம் போன்றவை வந்தவர்கள் தங்களது அறிகுறிகளை அலட்சியம் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. அவர்கள் தங்களது இரத்த அழுத்தம், இரத்த சீனி அளவு, இரத்த கொலஸ்டரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்து, அவை கூடுதலாக இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதன் மூலமும் எதிர்கால ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
பக்கவாதத்தினது அறிகுறிகள் அல்லது பக்கவாதம் வருகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?
திடீரென முகம், கை, கால் ஆகியவற்றில் தோன்றும் விறைப்புத்தன்மை அல்லது செயலிழப்பு மிக முக்கியமான அறிகுறியாகும். பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இது தோன்றுவதுண்டு.
திடீரென ஏற்படும் மாறாட்டம் மற்றும் பேசமுடியாதிருப்பது, மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிரமப்படுவது, சடுதியாக ஏற்படும் பார்வைக்கோளாறு அல்லது முற்றாக பார்வைத் திறனை இழத்தல் இன்னுமொரு முக்கிய அறிகுறியாகும். ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் இது தோன்றலாம்.
சடுதியாக ஏற்படும் வேறு அறிகுறிகளான நடப்பதில் சிரமம், உடற் சமநிலை தளம்புதல், ஈடாட்டம், தலைச்சுற்று, உடல் உறுப்புகளின் செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் சிரமம் ஆகியவற்றிற்கும் முணுமுணுக்கும் பக்கவாதமே காரணமாகலாம்.
காரணம் சொல்ல முடியாத மிகக் கடுமையான தலைவலி மற்றுமொரு முக்கிய அறிகுறியாகும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடித்தாலும் இலேசாக எடுத்து, கவனத்தில் கொள்ளாமல் விடவேண்டாம். உடனடியாக பாதிப்புற்றவர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
Source; American Health Association
– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-