Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘படத்தில் நோய்’ Category

>
அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.

வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

கொழுப்புக் கட்டிகள் – லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும்.
 
பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும்.

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை.

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 
சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.

புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.

என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.

இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.

16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.

பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.

சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
  
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

 மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart) 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>இந்த நோயாளியன் கால்களில் கரி அப்பியதுபோல கறுத்தத் திட்டுத் திட்டுகளாக கால்கள் இரண்டிலும் இருக்கிறது. அவற்றில் கடுமையான அரிப்பும் இருக்கிறது. நீண்ட நாட்களாக மாறாது இருக்கிறது என்றார்.

இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.

வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.

லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.

காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்.

பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்.

வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.

இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.

பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.

ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.

இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.

அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.

இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.

இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி வாரவெளியீடு 05.12.2010 ல் வெளியான எனது கட்டுரை
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.

எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.

இவற்றை Inter Phalangeal Joints என்பர். 

இதில் கடைசியாக உள்ள Distal Phalangeal Joints(DIP) மூட்டு எனப்படும். 
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.

ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.

பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.

ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்  வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.

அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.

  • மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும். 
  • அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல, 
  • அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.

எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.

நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.

முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.

ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.

மருத்துவம்

  • நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும். 
  • கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது. 
  • வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் எழுதி வார வீரகேசரியில் 17.10.2010 வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம். 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

இந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.

மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.

மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.

கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.

நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது.

முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.

பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.

வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.

ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.

முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது.

ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது.

தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.

Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.

சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.

 வீரகேசரி வாரவெளியீடு 17.10.2010 ல் வெளியான எனது மருத்துவக் கட்டுரையின் மீள் பதிவு
 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

>இந்தப் படம் எனது இளம் நோயாளி ஒருவரது.

பள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.

தனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.

இதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.

நெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.
முத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும்.

ஒவ்வொரு தடிப்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.

உண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

ஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.

ஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.

ஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.

சிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற
சிகிச்சைகளையும் செய்வர்.

Podophyllotoxin,  மற்றும்  Trichloro Acetic acid போன்ற சில கிறீம் வகைகளும் உதவும்.

Read Full Post »

« Newer Posts