Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பன்றிக் காய்ச்சல்’ Category

பன்றிக் காய்ச்சல் இப்பொழுது தமிழகத்தில் பரவியிருந்தது. அந்நோய் பற்றி நான் எழுதிய கட்டுரை சினேகிதி இதழில் பிரசுரமாகியுள்ளது.

சிநேகிதி இதழில் பன்றிக் காய்ச்சல் பற்றிய கட்டுரையினை மேலே பகிர்ந்துள்ளேன்.

எனது ஹாய்நலமா புளக்கில் முன்பு வெளியான இந்தக் கட்டுரைக்கான இணைப்பு

பன்றிக் காய்ச்சல் சில தகவல்கள்

பன்றிக் காய்ச்சல் பற்றிய எனது மற்றொரு கட்டுரை

பன்றிக் காய்ச்சல் தடுக்கும் வழி என்ன?

0.0.0.0.0.0.

Read Full Post »

>டெங்குக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் கலங்கிக் கொண்டிருந்த ஒருவருக்கு இப்பொழுது தனக்கு வந்தது பன்றிக் காச்சலாக (Swine Fever) இருக்குமா என்ற அச்சம் ஏற்படவே மருத்துவரிடம் ஓடிச் சென்றார்.

‘இதுவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆனால் பன்றிக் காய்ச்சலாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு’ என்றார் மருத்துவர்.

ஆயினும் இந்தியா உட்பட 70 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கையிலும் பரவக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

கடந்த நூற்றாண்டுகளில் உலகை ஆட்டிப்படைத்த பிளேக், பெரியம்மை போன்று உலகளாவப் பரவக் கூடிய ஆபத்துள்ளதாகப் பயம் எழுந்துள்ளது. இதற்கான தடுப்பு ஊசிகள் எதுவும் தற்போது கிடையாது. தடுப்பு ஊசி தயாரிப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பொழுது பரவும் பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகின்றன. வைரஸ் காய்ச்சல்களில் பலவகை உண்டு.

ஆயினும் அவை பெரும்பாலும் இரண்டு வகைப்படும்.

தடிமன், மூக்கால் வடிவது, தும்மல், இருமல் சுவாசத் தொகுதி நோயாக வெளிப்படுவது ஒரு வகை. சாதாரண தடிமன் காய்ச்சல், இன்புளுவன்சா போன்றவை இந்த வகையானவை. இதனை இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI) எனப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

டெங்கு, சிக்கன் குனியா போன்றவை இரண்டாவது வகை. இதில் சுவாசத் தொகுதி சார்ந்த அறிகுறிகள் பெருமளவு இருக்காது. உடலுழைவு, மூட்டு வலிகள் போன்றவையே மேலோங்கி இருக்கும்.

பன்றிக் காச்சலின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சலுடன், தடிமன், மூக்கு அரிப்பு, மூக்கால் ஓடுதல், தலைப்பாரம், தொண்டை வலி, இவற்றுடன் இருமலும் பின் தொடரும். உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

இவை எல்லாம் எனக்கும் இருக்கு என்கிறீர்களா?

இத்தகைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சல்தான் இப்பொழுது பெருமளவு நோயாளரைப் பீடித்து வருகிறது. இதனால் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்ற பயமும் ஏற்படுகிறது. ஆனால் எல்லா இன்புளுவன்சா வகைக் காய்ச்சலுக்கும் இவை போன்றுதான் அறிகுறிகள் இருக்கும்.

‘ஏனைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சலிருந்து இதனை வேறுபடுத்தி அறிவது கடினம்’ என அமெரிக்க தொற்று நோய் மைய முகாமையாளரான ரிச்சாட் பெஸர் (Richard Besser) கூறியதை நினைவு கூறலாம்.

அப்படியானால் இரத்தப் பரிசோதனை செய்து கண்டறியலாமா என்று கேட்டால் அதுவும் உடனடியாக முடியாது.

உறுதியான முடிவு கிடைப்பதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். அதற்கான குறிப்பான (Specific) பரிசோதனைகளை பரவலாகச் செய்ய முடியாது. தற்பொழுது இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (MRI) மட்டுமே செய்ய முடியும்.

அப்படியானானால் இது பன்றிக் காய்ச்சல்தான் என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவே முடியாதா?

உறுதியாகக் கண்டு பிடிக்க முடியாது. சந்தேகப்படத்தான் முடியும்.

எவ்வாறு சந்தேகப்படுவது?

1-7 நாட்களுக்குள் பன்றிக் காய்ச்சல் இருந்த ஒருவருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தால் கட்டாயம் சந்தேகப்பட வேண்டும். ஏனெனில் இந் நோய்க்கான நோயரும்பு காலம் (Incubation Period) 1-7 நாட்கள் ஆகும்.

இலங்கையில் இதுவரை ஒருவருக்கும் அந்நோய் வந்ததற்கான ஆதாரம் கிடையாது. ஒருசிலருக்கு இந்நோயாக இருக்குமா எனப் பிரித்து வைத்து பரிசோதித்த போதும் அவர்கள் எவருக்குமே இந்நோய் இருப்பது நிருபணமாகவில்லை. எனவே இங்கு தொற்றுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகும்.

மேற் கூறிய அறிகுறிகள் உள்ள ஒருவர் சென்ற ஒரு வார காலத்திற்குள் இந்நோயுள்ள நாடுகளுக்கு (உதா:- மெக்சிகோ, அமெரிக்கா, கனடா) பிரயாணம் செய்து வந்திருந்தாலும் பன்றிக் காய்ச்சலா எனச் சந்தேகப்பட வேண்டும்.

உதாரணமாக அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய தாய், 3 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இதுவரை நூறு பேர் வரையளவே மட்டுமே இந்நோயால் மரணித்துள்ளார்கள். டெங்கு நோயால் மட்டுமே இந்தக் குட்டி நாடான இலங்கையில் கடந்த 6 மாதங்களுக்குள் 150க்கு மேற்பட்டவர்கள் மரணித்துள்ளார்கள்.

எனவே இந்நோய் பற்றி ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

காரணம் இருக்கிறது!
இது ஒரு புது வைரஸ். இதனை Influenza A (H1N1) எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதை ஒத்த ஒரு வைரஸ் காய்ச்சல் 1957க்கு முன்பு தான் உலகில் இருந்தது. எனவே இந்நோய்க்கு எதிரான நோயெதிர்புச் சக்தி வயதான ஒருசிலரைத் தவிர ஏனைய ஒருவருக்கும் உலகில் இப்போது கிடையாது. அதற்கான தடுப்பூசியும் கிடையாது. எனவேதான் இது பரவினால் மிக ஆபத்து என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நோய் அதிகரித்த நிலையில் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம், தலைச் சுற்று, மயக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றும். அவை மரணத்திற்கும் இட்டுச் செல்லும். எனவேதான்; இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கொள்ளை நோயாகப் பரவிக் கோடிக்கணக்கான மக்களை கொன்றுவிடக் கூடிய சாத்தியம் உண்டு.

எனவேதான் அரசுகளும் மருத்துவத் துறை சாரந்தோரும் இது பற்றி மிக விழிப்புடன் இருக்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே தயார் நிலையில் உள்ளது.

இதனைத் தடுக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?

மற்றவர்களுக்கு வந்த தடிமன் காய்ச்சல் போன்ற நோய்கள் உங்களுக்கு தொற்றாது பாதுகாக்க வேண்டும்.

அதேபோல உங்களுக்கு வந்தால் மற்றவர்களுக்கு பரவ விடக் கூடாது.

இவை முக்கியமாக இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் மூலமே மற்றவர்களுக்கு பரவும். எனவே தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள்.

ரிசூ மிகவும் நல்லது ஏனெனில் அதனை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்ற முடியும்.

அத்துடன் உங்கள் கைகளையும் உடனடியாக சோப் போட்டுக் கழுவுங்கள்.

இல்லையேல் உங்கள் கையில் இருக்கும் கிருமி மேசை, கதிரை, கதவுக்குமிழ், போன்ற பலவற்றிலும் பட்டு பலருக்கும் பரவலாம். அத்துடன் தடிமன் காய்ச்சல் போன்ற நோயுள்ள போது கைலாகு கொடுப்பதையும் முகத்தில் முற்றம் கொடுப்பதையும் தவிருங்கள்.

zanamivir and oseltamir ஆகிய Antivirus மருந்துகள் இந்நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல் ஹாய் நலமா? 16.06.2009

Reblog this post [with Zemanta]

Read Full Post »